Wednesday, July 14, 2010

வரலாற்றுப் பாதையில் தவற விட்ட ஆட்டுக்குட்டி - 1

அண்மையில் கையில் கிட்டிய 'உயிர்நிழல்' சஞ்சிகையில் வாசிக்கக் கிடைத்த சிங்களத்திலிருந்து ரிஷான் ஷெரீப் பாலும் பஹீமா ஜெஹானாலும் தமிழாக்கம் செய்யப் பட்ட இரண்டு கவிதைகள் சிங்கள மக்களின் - குறைந்த பட்சம் இளகிய மனம் கொண்ட - மனித நியாயங்களை இன உணர்வுக்கப்பால் இருந்து சந்திக்கும் கவிஞனை தமிழ் உலகுக்கு அடையாளம் காட்டின.

அது நொந்து போயிருக்கும் தமிழ் மனங்களுக்கு சிறிது ஆசுவாசத்தையும் கூட அளிக்க வல்லதாக இருந்தது.அந்தக் கவிதைகளோடு சேர்த்து இனி வரும் சில வாரங்களுக்கு மேலும் சில கலைப் படைப்புகளையும் உங்களோடு பகிர்ந்து கொள்வது என் விருப்பம்.

அதற்கு முதல் தமிழும் சிங்களமும் தெரிந்த அன்பர்கள் இவ்வாறான முயற்சிகளில் ஈடுபடுதல்
தமிழ் இலக்கியத்துக்கும் சிங்கள இலக்கியத்துக்கும் வளம் சேர்க்கும் என்பதற்கும் அப்பால் மொழியால் பகை கொண்ட இரு இனங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வைக்க ஒரு பாலமாகவும் அது இருக்கும்.

இன்று உங்களோடு பகிர இருக்கின்ற கவிதை சிங்கள மொழியில் மஹேஷ்.முனசிங்ஹ என்ற கவிஞர் எழுதியது. அதனைத் தமிழாக்கம் செய்திருக்கிறார் பஹீமா ஜஹான்.இதனைப் பிரசுரம் செய்திருகிறது உயிர்நிழல் இதழ் 32.

இக் கவிதையின் களம் வன்னியில் 'மனிதாபிமான' நடவெடிக்கையின் போது கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட கற்பிணித் தாயொருவரின் புகைப்படத்தைப் பார்த்த ஒரு சிங்களக் கவிஞன் ஒருவரின் உணர்வுகள்.

இதில் கவனிக்க வேண்டிய அம்சமும் ஒன்று உண்டு. நாம் (தமிழர்) 'இன அழிப்பு' என்று வரையறுப்பதை அவர்கள் (சிங்களவர்) 'மனிதாபிமான' என்ற சொற் தொடரால் வரையறை செய்கின்றனர்.முரண்பாடு என்பது இந்த இடத்திலிருந்தே ஆரம்பமாகி விடுகிறது போல் தோன்றுகிறது.ஆனாலும் எனது பேசு பொருள் அரசியலல்ல; மாறாக இலக்கியமே!அத்துடன்,இது பற்றிப் பேசுவதற்கு என்னிடம் வல்லமையும் போதிய அறிவும் பரீட்சயமும் இல்லாமையால் அதனைத் தவிர்த்து கவிதைக்குள் நுழைகிறேன்.

பிறக்காத கவிதை



கண்களைக்கூடத் திறக்காத
குருவிக் குஞ்சொன்று
தாயின் கற்பத்துக்குள்ளேயே
சதை வேடர்களுக்கு
இரையானது
வெடித்துத்
துண்டுகள் வேறாகிய
தொப்புள் கொடியின் மேலாக
எச்சில் படுத்தப் படாத இறகொன்று
இரத்தம் தோய்ந்து வெளிப்பட்டது.

பச்சிளம் உதடுகளில்
கறப்பதற்குத் தழும்பிப் பார்த்திருந்த
முலைக்காம்புகள் ஊடாக
கண்ணீரை ஒத்த பாற்துளிகள் வழிந்தன
குருதியோடு குருதி கலந்து
தாய்ப்பாலின் நிறமடைந்து
பேசாத பெருநிலமும்
பெருமூச்செறிந்து
விம்மியழுதது கேட்டது

பிள்ளை கனவுகள் கண்டிருக்கும்
பாற்சிரிப்பு முகத்தில் பூத்திருக்கும்
தாய் கனவுகள் வளர்த்திருப்பாள்
வெள்ளைச் சிரிப்பை மெல்லக் கேட்டிருப்பாள்
வெறி பிடித்தவர்கள் வந்து
கனவுகளை வெடிக்கச் செய்திருக்கலாம்
தசைத் துண்டுகள் மீது
ஊறிக் கலைந்து சென்றிருக்கலாம்

உன்னைப் பலி கொண்ட காட்டுமிருகங்கள்
கொள்ளையடிக்கிறார்கள்
பிறந்த பூமியை
மோப்பம் பிடிக்கிறார்கள்
நித்தமும் இரத்த சுவை வேட்டைகளை
பிறந்திருந்தாலும்
வாழ்வொன்று எங்கே இருக்கும்
பறக்கின்ற வானத்தையும்
அவர்கள் எடுத்திருக்க

அழாமலே இருக்கிறேன்
வன்னி அதிக தூரமெனக்கு.பொறுத்திருக்கிறேன்
அசையாத
பச்சிளம் இறகை நோக்கி
கனவொன்றில்
எனது கையினைக் கொண்டு சென்று
விரலை (அது)பற்றுமோ என
பார்த்திருக்கிறேன்.



சில குறிப்புகள்:-


1. இக் கவிதையில் வரும் 'வன்னி அதிக தூரமெனக்கு' என்ற வரி சொல்லி நிற்கும் அர்த்தங்கள் ஏராளம்.ஒரு இனத்தால், மொழியால், இடத்தால்,மனதால், பகை உணர்வால் மிகவும் பிளவுபட்டு போரில் நேருக்கு நேர் மோதிக் கொண்டிருக்கும் போது மனிதம், நியாயம்,உண்மை - இவற்றுக்கு அங்கு இடமேது?

தமிழ் மக்களின் மனதுக்குத் தூரமாக என்ற அர்த்தத்திலும் இதனைக் கொள்ளலாம்.

கையாலாகத தன் நிலை எனவும் கொள்ளலாம் இதை.

2. மிக அழகாகத் தமிழில் இதனைக் கொணர்ந்த சகோதரி பஹீமா வுக்கு என் ஆத்மார்த்தமான நன்றிகளும் வாழ்த்துக்களும்.

3......
மூலப் பிரதியில் 'நித்தமும் இரத்த சுவை வேட்டைகளை' என்று ஒரு வரி அமைக்கப் பட்டிருந்தது.அதனை 'நித்தமும் இரத்த வாடைகளை'என்று அமைத்திருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்குமோ என்று தோன்றியது.

4.'வாழ்வொன்று எங்கே இருக்கும்'என்பதன் பின்னால் வினாக்குறியும்(?)'அவர்கள் எடுத்திருக்க' என்பதன் பின்னால் வியப்புக் குறியும்(!) போடப்பட்டிருந்தால் கவிதை சொல்ல வரும் உணர்வுகளை அக்குறியீடுகள் இன்னும் சற்று அழுத்திச் சொல்ல வல்லதாக இருந்திருக்குமோ என்றும் தோன்றியது.


அவரிடம் எனக்கு சில ஆர்வத்தைத் தூண்டும் கேள்விகள், விண்ணப்பங்களும் உண்டு.

1.சிங்கள பாஷையில் வந்திருக்கும் இவ்வாறான அல்லது பிரபலமான கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து ஒரு காலத்தின் பணியை நீங்கள் ஆற்றுதல் வேண்டும்.இருபாஷைகளையும் அறிந்து வைத்திருக்கின்ற அதே நேரம் சிறந்த கவிஞையாகவும் பிரகாசிக்கிற உங்களால் அதன் சிறப்பும் மென்மையும் நளினமும் மாறாமல் அதனை எடுத்துவர முடியும். இழைக்கப்பட்ட மன வலிகளுக்கப்பால் பெருந்தன்மையும் புரிதலும் கொண்ட பெண்ணிடம் கேட்கும் ஒரு விண்ணப்பம் இது.

11.அது போலவே தமிழில் வெளி வந்திருக்கிற கவிதைகளையோ கலைப்படைப்புகளையோ கூட பெரும்பாண்மையான இனத்தவர் மத்தியில் எடுத்துச் செல்வதால் ஒரு பரஸ்பர புரிந்துணர்வுக்கு வழி சமைக்கலாமில்லையா சகோதரி?

111. அவ்வாறு ஏற்கனவே நீங்கள் செய்திருக்கிறீர்கள் என்றால் அதற்கான எதிர்வு கூறல்கள் எவ்வாறு இருந்தன என்று அறிய ஆவலுடையேன்.



அடுத்தவாரம் ரிஷான் ஷெரீப் மொழி பெயர்த்த ஒரு கவிதைப் பகிர்வு இடம் பெற இருக்கிறது.

Thursday, July 8, 2010

அனைத்துலக தமிழ் எழுத்தாளர் விழா - 2011

சில தினங்களுக்கு முன் மின் தபாலில் திரு ஜீவகுமாரன் அவர்களிடம் இருந்து வந்த செய்தியை ஒரு தகவல் கருதி உங்களோடு அப்படியே பகிர்ந்து கொள்கிறேன்.



சிறுகதைத் தொகுப்பு
ஆயிரம் புத்தக இலவசத் திட்டம்
அனைத்துலக தமிழ் எழுத்தாளர் விழா - 2011



அனைத்துத் தமிழ் எழுத்தாளர்களுக்கும்,


தை2011ல் இலங்கையில் நடைபெற இருக்கும் எழுத்தாளர் விழாவில் 'வாசித்தலை பரம்பலடையச் செய்தல்'என்ற விடயத்தை முன்னிட்டும் அதனைத் தொடர்ந்தும் இலங்கையில் 10,11ம் வகுப்பில் தமிழ் கற்பிக்கும் பாடசாலைகளுக்கும், தமிழ் புத்தகங்களை வாசிக்கும் - இரவல் கொடுக்கும் பகுதியாகக் கொண்ட நூலகங்களுக்கும் 1000 நூல்களை இலவசமாகக் கொடுக்கும் திட்டம் பற்றி புலம் பெயர்ந்த எழுத்தாளர்களுடன் தீவிரமாக ஆலோசனைகள் செய்து அதற்கான வேலைத் திட்டத்தில் இறங்கியுள்ளேன்.

இது முழுக்க முழுக்க புலம் பெயர்ந்த எழுத்தாளர்களின் பொருளாதாரப் பங்களிப்புகளுடனும், இலங்கையில் உள்ள மற்றைய எழுத்தாளர்கள்,இலக்கிய ஆர்வலர்கள்,புத்தக விற்பனை நிலையங்களின் ஆதரவுடனும் அனுசரனையுடனும் மேற்கொள்ளப் பட இருக்கும் முயற்சியாகும்.

இதன் முழுமையான விபரங்கள் எழுத்தாளர் விழாவில் அறியத் தரப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் விழாக்குழு சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதே விழாவில் குறைந்தது 5 எழுத்தாளரின் 5000 புத்தகங்கள் இலவசமாக வழங்கப் பட உள்ளன.



மேலும் இந்த விழாவினை ஒட்டி ஒரு சிறுகதைத் தொகுப்பையும் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்.

இந்தச் சிறுகதைத் தொகுப்பை சாதாரண தொகுப்பாக இல்லாது "புலம்பெயர் வாழ்வு" என்பதைக் கருப்பொருளாகக் கொண்டு அதனடிப்படையில் இலங்கை,மலேசியா, சிங்கப்பூர் மற்றும் புலம்பெயர்ந்த எழுத்தாளரிடம் இருந்து சிறுகதைகளை எதிர்பார்க்கிறோம்.

80 களில் இந்திய பாகிஸ்தான் எல்லைகளின் ஊடாக நடந்தும் பஸ்களிலும் புகையிரதங்களிலும் ஆரம்பமான இந்த ஓட்டம் பின்பு விமான மார்க்கமாகவும் கடல் மார்க்கமாயும் இன்று வரை நடைபெற்றுக் கொண்டிருப்பது மட்டுமன்றி நடுக்கடலில் வைத்து அரசுகள் பேரம் பேசும் அவல வாழ்வாயும் பெருமளவில் பணம் புரளும் வியாபாரமாயும் மாறி விட்டது.

உயிர் பாதுகாப்பு,பொருள் தேடல் என்ற இரண்டு முகங்கள் இந்தப் புலம்பெயர் வாழ்வில் உள்ளது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.ஆயினும் இந்தப் புலம்பெயர்வாழ்வில் பெற்றதை விட இழந்தவைகளே அதிகம் என்பதை ஒரு கலாச்சார ஆராய்ச்சியாளன் என்றும் மறக்க மாட்டான்.

இந்தப் புலம்பெயர் மக்களை புலத்தில் உள்ள மக்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் புலத்தை விட்டுச் சென்ற பின்பு அவர்கள் உறவுகள் எவ்வாறு உள்ளது என்பதை இலங்கையில் உள்ள எழுத்தாளர்களும்...

புலம் பெயர்ந்த நாட்டில் உள்ள மக்களுடன் அவர்களின் அந்த நாட்டு வாழ்க்கை,சூழ்நிலைகளைப் பிரதிபலிக்கக் கூடிய வண்ணம் புலம் பெயர்ந்த எழுத்தாளர்களும்....

மலேசிய, சிங்கப்பூர், இந்திய எழுத்தாளர்கள் இந்த இருசாராரையும் எப்படிப் பார்க்கிறீர்கள் எனவும் எழுதி அனுப்புமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.



விதிமுறைகள் மிக இலகுவானவை;

1.இச் சிறுகதைகள் ஏற்கனவே பிரசுரமாகியிருக்கக் கூடாது.

2.தட்டச்சில் அல்லது கொம்பியூட்டரில் 5 - 6 பக்கங்களுக்கு இருக்க வேண்டும்.

3.ஆக்கங்கள் word இல் (Bamini Font பாவித்து )அல்லது கையெழுத்துப் பிரதியாயின் அதை Scan செய்து pdf வடிவில் அனுப்ப வேண்டும்.

4. ஆக்கங்கள் 30.09.2010 க்கு முன்பாக அனுப்பப் பட வேண்டும்.

5. அனுப்ப வேண்டிய முகவரி jeevakumaran5@gmail.com

Wednesday, June 30, 2010

சர்க்கஸ் கோமாளிகளும் சனங்களும்

நேற்றய தினம் வேலை முடித்து களைத்து வீடு திரும்பி தபால் பெட்டி துளாவிய போது கைக்குக் கிட்டிய புத்தகம் காசோ பேச்சுவார்த்தையோ எதுவுமில்லாமல் லக்ஷ்மி அனுப்பியிருந்த 'உயிர்நிழல்'

இன்றுகாலை அதிலிருந்து ஒரு 'பதச்சோறு'



முகப்பூச்சு வேட உடை ஒப்பனையுடன்
கோமாளிகள் கூத்துத் தொடங்கி விட்டார்கள்

கூடாரமடித்து
மேளம் கொட்டி
சனத்தைக் கூட்டி
கோமாளிகள் கூத்துத் தொடங்கி விட்டார்கள்

கோமாளிகள் கூத்தைப் பார்ப்பதற்கு
யாருக்குத் தான் ஆசை இல்லை?
கண்கள் விரித்து ஆச்சரியப் படுகிறார்கள்
கைகொட்டிச் சிரித்து ஆரவாரிக்கிறார்கள்

கயிற்றில் தொங்கும் கோமாளியின்
காற்சட்டையைத் துளாவுகிறான் ஒரு கோமாளி
கொட்டாவி விட்டவனின் வாயில்
கையோட்டுகிறான் இன்னொரு கோமாளி
பீப்பாவில் வைத்து உருட்டித் தள்ளுகிறான்
மற்றொரு கோமாளி
எல்லாக் கோமாளிகளும்
குரங்குகள் போல் குத்துக் கரணமும் அடிக்கிறார்கள்.

கோமாளிகள் கூத்தைப் பார்த்து
சனங்கள் சிரிக்கிறார்கள்
கோமாளிகள் கூத்தைப் பார்த்து
சனங்கள் கை கொட்டுகிறார்கள்
கோமாளிகள் கூத்தைப் பார்த்து
சனங்கள் காசு கொடுக்கிறார்கள்

கூத்து முடிய
கோமாளிகள்
வேட உடை களற்றுவர்
வெளியே வருவர்
இன்னும் கூத்துத் தொடரும் என்பர்

கண்கள் விரிய
கைகொட்டிச் சத்தமிட்டு
காசு கொடுப்பதற்கு
இன்னும் இன்னும்
இந்த ஏமாளிச் சனங்கள்
காத்திருக்கிறார்கள்.



நன்றி: துவாரகன்.

உயிர்நிழல் இதழ் 32 பக்;26.

Tuesday, June 22, 2010

ஒரு புதினம்;மேலும் ஒரு பதிவு


நேற்றய தினம் சற்றே வெய்யில் எறித்த குளிர் காலை நேரம்.எனக்கு விடுமுறை நாள்.கொஞ்ச நாளாய் சேலைகளிலும் மப்ளர்களிலும் ஏற்பட்டிருக்கிற தீவிர ஆர்வத்தின்(!)பயனாக பேரங்காடிகளில் இருக்கும் Tree of life என்ற இந்தியக் கலைப் பொருட்கள் மற்றும் இந்தியப் பாரம்பரியப் பொருட்கள் விற்கும் கடைக்குப் போவதாகத் தீர்மானித்திருந்தேன்.அங்கு சற்று விலைகள் அதிகமே எனினும் அக்கடை அலங்கரிக்கப் பட்டிருக்கும் விதமும் அங்கிருந்து வரும் இந்திய ஊதுபத்தியின் நறுமணமும் அவுஸ்திரேலியப் பெண்கள் உடுத்தியிருக்கும் இந்திய ஆடைகள், பொட்டுகள் அவர்களுக்குக் கொடுக்கின்ற அபூர்வமான அழகும் அவர்களது இந்திய உபசரிப்பும் இந்திய தத்துவ ஞானத்தையே அள்ளி வீசுவதைப் போல இருக்கும்.பேரங்காடிகளின் சலசலப்புகளுக்கு மத்தியில் அது மட்டும் தனக்குரிய அழகோடு தனித்து நிற்கும்.அது அக்கடைக்கென ஒரு தனிக் களையையே கொடுக்கும்.கடை அலங்கரிக்கப் பட்டிருக்கும் விதம் கூடத் தனிச் சோபையுடன் விளங்கும்.

விரும்பிய மனதுக்குப் பிடித்த மிக அழகான $20 டொலர்களுக்கு விற்கும் மப்ளர்கள் அன்று $6.95 டொலர்களுக்கு விற்பனையானது அதிசயத்திலும் அதிசயம்.எனக்கும் அக்காவுக்கும் அம்மாவுக்கும் தோழிமாருக்கும் என வாங்கியது மனதுக்கு நிறைவைத் தந்தது.அது பெண்களுக்கே உரித்தான மகிழ்ச்சி.அது தனி!

வருகின்ற வழியில் மயூரி என்ற இந்திய உடுப்புக் கடை புதிதாகத் தென்பட்டது. சரி அங்கு என்ன தான் இருக்கிறது பார்ப்போம் என்று போனால் 25 வருடங்களுக்கு முன்னால் வந்து போன இந்திய சேலைகளின் மீள் வருகை!என்னே அதிசயம்! எனக்குப் பிடித்தமான வடிவங்கள்! வண்ணங்கள்!!சேலைகளின் தெரிவில் நான் மொடேர்ன் பெண்ணல்ல. கடைசி யாக வந்த வடிவங்கள் என்பதால் நான் சேலை வாங்குவதில்லை.பிடித்திருந்த நிறம் மற்றும் துணியின் தரம்,வடிவங்கள் என்றால் மட்டும் தான் வாங்குவதுண்டு.

1995 யாழ்ப்பாணப் புலப் பெயர்வின் போது 2 விடயங்களை விட்டு விட்டு வந்ததில் இப்போதும் வருத்தம் எனக்கு.ஒன்று சனிக்கிழமை தோறும் வெளிவந்து கொண்டிருந்த திசைகள் என்றொரு பத்திரிகையில் வெளிவந்து கொண்டிருந்த மிக அருமையான கட்டுரைகள் பலவற்றை வெட்டி ஒட்டிச் சேகரித்து வைத்திருந்தேன்.அதனை விட்டு விட்டு வந்ததும்;இந்தக் குறிப்பிட்ட ஒரு சேலையை விட்டு விட்டு வந்ததும்.இன்று அதனை விடத் தரமானதும் அழகானதுமான சேலையைக் கண்டதும் என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

எல்லாம் வாங்கியாயிற்று.மனம் நிறைந்த மகிழ்ச்சியோடும் கைகள் நிறைந்த பொருட்களோடும் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன்.நான் வசிக்கின்ற தொடர்மாடிக் குடியிருப்பை நெருங்கிக் கொண்டிருந்த போது வீதிப் பொலிஸார் வீதிப் போக்குவரத்தைத் துண்டித்து இருந்தார்கள்.சற்றே பதட்டம் ஏற்பட்டது.என் காரும் நிறுத்தப்பட்டது.கண்ணாடி இறக்கி என்னவென்று கேட்டபோது தென்பட்ட இலங்கை அவுஸ்திரேலியனின் பொலிஸ்முகம் மிக வசீகரமாய் இருந்தது.இள நீல சேட்டும் கடும் நீல நிற கீழாடையும் கொண்ட சீருடை பொது நிறம் கொண்ட அம்மனிதருக்கு கச்சிதமாக இருந்தது.புன்னகையோடு பின்வாங்கச் சொன்னான்.அவன் முகம் நெஞ்சில் பதியப் பின் வாங்கினேன்.

தூரத்தில் கார் நிறுத்தி அருகிலிருந்த பூங்காவுக்குச் சென்ற போது நம் குடியிருப்பாளர்களோடு நம் வீட்டுக்காரரும் அங்கு நின்றிருந்தனர்.விடயம் என்னவென்று கேட்டால் சமயலுக்குப் பயன்படுத்தும் உயிரியல் வாயு எங்கோ பாரதூரமாக வெளியேறுவதாகவும் அதனால் எல்லோரும் வெளியேற்றப் பட்டிருப்பதாகவும் தகவல் கிட்டியது.

பூங்காவில் குழந்தைகள் ஓடி விளையாட ஆரம்பித்தனர். தாய்மார் துரத்திப் பிடிக்கத் தொடங்கினர். இளம் பெண்கள் தம் கணவர்மாருடன் தொலைபேசினர்.வயதானவர்கள் இருக்கைகளில் கவலை தோய அமர்ந்திருந்தனர். எல்லோரும் அவரவர் வீட்டு ஆடைகளுடன் வந்திருந்தனர்.ஓர் இளம் சிங்களப் பெண் அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்து மெல்ல ஆடியபடி இருந்தாள்.நம் வீட்டார் அவளைக் காட்டி அவள் தான் எல்லோரையும் அவரவர் வீடுகளுக்குரிய பொத்தான்களை அமத்தி எல்லோரையும் வீட்டை விட்டு வெளியேறும் படி பதட்டத்தோடு கத்தியதாகத் தெரிவித்தார்கள்.

அவளோ ஒன்றும் நடக்காதது போல உல்லாசமாக மெல்ல மெல்ல ஊஞ்சலாடி அதன் சுகத்தில் லயித்திருந்தாள். சும்மாவே உம்மணா மூஞ்சியவள். சந்திக்கின்ற பொழுதுகளிலும் சிரிக்காதவள்.இலங்கையின் கண்டி மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவளாக அவள் இருக்க வேண்டும்.அழகான சிவந்த சிங்கள முகம்.செல்வத்தினதும் மகிழ்ச்சியினதும் சாயை அவளில் எப்போதும் விகசித்திருக்கும்.சந்திக்க நேர்கின்ற சந்தர்ப்பங்களில் அவள் சிரித்தால் இன்னும் அழகாயிருப்பாள் என்று தோன்றுமெனக்கு.நான் தமிழ் என்பதால் அந்தப் பாராமுகமோ என்றும் சில வேளைகளில் தோன்றுமெனக்கு. அவளது 17ம் இலக்க தபால் பெட்டிக்குள் Thank you card வாங்கிப் போட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

சில நிமிடங்களில் நீலக் கண்களைக் கொண்ட பெண் பொலிஸ் எம்மை நோக்கி வந்தார்.வாயுக் கசிவு நிறுத்தப் பட்டிருப்பதாகவும்; இன்னும் 20 நிமிடங்களில் பரவி இருக்கின்ற வாயுவின் மணம் அகன்று விடுமெனவும்; யாரோடும் தொலை பேசவேண்டுமெனில் தன்னிடம் இருக்கின்ற தொலைபேசியைப் பாவிக்கமுடியுமெனவும்; வீட்டுக்குப் போனபின் கதவு ஜன்னல்களைத் திறந்து விடுமாறும்; உங்கள் கட்டிடப் பொறுப்பாளர்களுக்கு தொலைபேசியில் நிலைமையைத் தெரிவிக்கும் படியும் கூறிப் போனாள்.

ஆயிற்று. வீடு வந்து செய்யவேண்டிய எல்லாம் செய்தாயிற்று.எழுதி வைத்திருந்த பதிவையும் பிரசுரம் செய்தாயிற்று.இன்றைய நாளைப் பதிவதா வேண்டாமா என்ற போராட்டத்தின் பின் வேண்டாம் என்று அதனைப் புறக்கணித்தேன்.மனதில் இன்னும் சொல்ல ஏதோ மிஞ்சி இருந்தது.சமையல் செய்ய முடியாது.சுடுநீர் 24 மணி நேரத்துக்கு இல்லை.

அந்த இலங்கை அவுஸ்திரேலியப் பொலிஸின் வசீகரம் காரணம் ஏதுமின்றி நெஞ்சில் நிழலாடிற்று.சினேகமான முகமது.காயங்களுக்கு மருந்திடும் கண்கள்.'எப்பிறப்பில் காண்போம் இனி'என்று தோன்றும் நினைபை அசட்டை செய்த போதும் அந்த மனிதன் இலங்கையராகவே இருக்கவேண்டும் என்று மனம் அடித்துச் சொல்லிற்று.கிட்டத் தட்ட ஒருமணி நேரம் கழிந்தது. அழைப்புமணி அடித்தது. என்னவென்று கேட்டபோது பொலிஸார் கீழே வருமாறு அழைப்பது கேட்டது.அவசரமாய் கீழே இறங்கிக் கதவைத் திறந்தபோது அதே இலங்கைப் பொலிஸ்.

பக்கத்தில் நின்ற பொலிஸைப் புறக்கணித்து இருவருக்கும் இயல்பாய் விரிந்தது புன்னகை.
பக்கத்தில் நின்ற பொலிஸ் விபரங்கள் கேட்டது.பெயர்;சொன்னேன். பிறந்த திகதி; சொன்னேன். தொலைபேசி இலக்கம்; சொன்னேன்.நீண்ட எனது பெயரைச் எழுத்து எழுத்தாகச் சொன்னபோது சரியாக அதனை மீண்டும் சொல்லி சக பொலிஸாருக்கு உதவினான்.என் பெயரை அழகாய் யஷோதா என உச்சரித்தான்.

பின் புன்னகைத்து விடைபெற்றான்.

மனம் குதூகலிக்கிறது.அன்றைய திகதி 22.06.2010.
இன்று மறுநாள் காலை.

இது பெண்மொழி;கடல் அலை ஒன்றின் மொழிபெயர்ப்பு.

பழ விழா

கொண்டாட்டங்கள் தான் எத்தனை விதம்!எத்தனை ரகம்!!

விளையாட்டுக்கள்;ஆரவாரங்கள் என்று மகிழ்ந்திருக்கும் ஒரு கூட்டம்.

இசையில்,கலையில்,பயிலலில் லயித்திருக்கும் ஒரு கூட்டம்.

நவீன ஆடைகள்,அணிகலன்கள், விருந்துகள்,தொழில்நுட்பம்,என்று திளைத்து நிற்கும் இன்னொரு கூட்டம்.

பதவிகள்,விருதுகள்,விழாக்கள்,மக்கள்,ஆரவாரம் என ஓடித்திரியும் இன்னொரு கூட்டம்.

எழுத்து,சமூகமாற்றம்,மானுட முன்னேற்றம், என்று மகிழ்ந்திருக்கும் வேறொரு கூட்டம்.

அரசியல், உரிமை, சமத்துவம்,மக்கள் என்று தீவிரமாய் ஓடித்திரியும் இன்னொரு உலகம்.

இயற்கையில்,திறமையில்,சேவையில் கொண்டாட்டம் காணும் இன்னொரு மனிதக் குழு.

எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்கி இவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் இன்னொரு கூட்டம்.


அரசாங்கமோ எனில் தன் இராணுவ வல்லமையைக் உலகுக்குக் காட்டிப் பயமுறுத்திக் 'கொண்டாடிக்' கொண்டிருக்கிறது.

இடைக்கிடை இயற்கையும் நானும் இருக்கிறேன் என்று தன் பங்குக்கு 'கொண்டாட்டக்' குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறது.

இவர்களை எல்லாம் பேசிக்கொண்டு உலகம் அழிவை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது ஏதாவது செய்தாகவேண்டும் என்று கத்திக் கொண்டிருக்கிற கூட்டத்தை யாரும் கண்டு கொள்வதாக இல்லை.

அவரவர் உலகில் அவரவர்.


இந்த வாரம் பதிவு போட என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது வந்த மின் தபால் ஒன்று சில படங்களைக் கொண்டு வந்து சேர்த்திருந்தது.

அது நெதர்லாண்ட் நாட்டுப் தோடம்பழ விழா!

தக்காளிப்பழங்களால் சேறு உண்டாக்கி அதனுள் மூழ்கி எழுந்து மகிழ்ச்சியைக் கொண்டாடுகிறது ஸ்பெயின்.தோடம்பழங்களால் தன்னை அலங்கரிக்கிறது நெதர்லாண்ட் நாடு.தீபங்களால் வீட்டை அலங்கரித்து அதனைப் புனிதமாய் கொண்டாடுகிறது பாரத நாடு.இலங்கையோவெனில் ஒளிப்பந்தல்களால் நாட்டையே அலங்கரித்து மகிழ்கிறது.வசந்தகாலத்து முழு நிலா நாள் ஒன்றில் குழந்தைகளின் கைகளில் வண்ண காகிதங்களால் செய்யப் பட்ட விளக்குகளை கொடுத்து மின்சாரமில்லா அவ்விரவில் நிலா கேக் உண்டு மகிழ்கிறது வியட்னாம் நாடு.அலி மக்களின் அலங்காரப் பவனி சிட்னியில் பிரசித்தம்.

நத்தார் புதுவருட நாட்களில் உலகமே ஒளியிலும் பரிசுகளிலும் மகிழ்ந்திருக்கும்.

இது நெதர்லாண்ட் நாட்டுப் தோடம்பழ விழா!!


















அழகாய் தான் இருக்கிறது.ஆனால் சொல்ல மறந்து போன விஷயம்!
வறுமையிலும் பசியிலும் இல்லாமையிலும் இறந்து கொண்டிருக்கிறதாம் ஒரு கூட்டம்.

Wednesday, June 16, 2010

பிரபல புகைப்படங்கள்


அடித்துக் கொலை செய்யப்பட்ட கொழும்பு பம்பலப்பிட்டியைச் சேர்ந்த மன நிலை பாதிக்கப்பட்ட சிவகுமார் என்ற இஞைஞனின் இப்புகைப்படம் சிங்கள இனத்தவரின் கொலை வெறியை மீண்டும் ஒருமுறை உலகுக்கு எடுத்துக் காட்டியது.அவன் செய்த ஒரே ஒரு தவறு ரயிலுக்குக் கல்லெறிந்ததே!



உலகுக்கு அமெரிக்காவின் முகத்திரையைத் தோலுரித்துக் காட்டியது இப்புகைப்படம்.சிறைப் பிடிக்கப்பட்ட ஈராக்கிய இளைஞர்கள் சிறைச்சாலைகளில் நடத்தப்படும் விதம் குறித்த இதனோடு சார்ந்த புகைப்படங்களும் வீடியோக் காட்சிகளும் உலகுக்கு அமெரிக்காவின் மனிதாபிமானத்தை அம்பலப் படுத்தியது.



நிக் உட் என்பவர் எடுத்த இப் புகைப்படம் அமெரிக்க போர் வெறியை நிறுத்திய வலிமை வாய்ந்தது.போரின் போது சாலையில் நிர்வானமாக ஓடி வரும் வியற்னாமியச் சிறுமியின் பெயர் கிம் புக்.

இதற்கே திரண்டு நின்றிருந்தது அன்று அமெரிக்கா.


மைக் என்பவரால் உகண்டாவின் வறுமையைப் பதிவு செய்த புகைப்படம் இது.1980ம் ஆண்டுக்கான வேர்ல்ட் பிரஸ் புகைப்பட விருதினை அதற்கு விண்ணப்பித்திருக்காத போதும் விருதினைப் பெற்றுக் கொண்ட புகைப்படம் இது.ஆனால் பசியினால் இறந்து கொண்டிருக்கும் ஒரு இனத்தையும் வெள்ளை விரல்களின் செழுமையையும் புகைப்படம் எடுத்தது விருது பெறுவதற்கல்ல என்று விருதினை நிராகரித்தார் மைக்.


பச்சைக் கண்களைக் கொண்ட இப்பெண்ணின் புகைப்படம் முதன் முதல் நஷனல் ஜியோகிரபி என்ற சஞ்சிகையில் புகைப்படமாக வந்தது.அசாத்திய உணர்வுகளைக் கொண்டிருக்கும் இப் பெண்ணின் கண்கள் ஆப்கானிஸ்தான் நாட்டுக்குரியது.இப்படம் எடுக்கப் பட்ட போது அவளுக்கு வயது 12.பொதுவாக ஆப்கானிஸ்தான் பெண்கள் எப்போதும் பர்தா அணிந்து காணப்படுவார்கள்.அதனால் அவர்களது முகங்கள் எப்போதும் மூடப்பட்டே காணப்படும்.இந்தப் பெண் பர்த்தாவை விலக்கிய ஒரு கணத்தில் எடுக்கப்பட்டது இப்புகைப்படம்.இப்பெண்ணின் பெயர் ஷர்பத் குலா.1992ல் இப்பெண் அகதி முகாமில் படித்துக் கொண்டிருந்த போது இப்படம் எடுக்கப் பட்டது.

இப்போது அவள் மூன்று குழந்தைகளின் தாய்.கண்களில் தொனிக்கும் ஏதோ ஒரு வீரியத்துக்காக இப்புகைப்படம் பிரபலமனது.


இது அமெரிக்க தங்குமிடமொன்றில் அமைக்கப் பட்டிருந்த குடி நீர் வசதி.வெள்ளையர்கள் குடிக்கவென்று தனியான இடமும் கறுப்பர்கள் குடிக்கவென தனியான இடமும் அமைக்கப் பட்டிருப்பது மாத்திரமல்ல வெள்ளையர்கள் குடிக்கப் பயன் படுத்திய பின் கழிந்தோடும் தண்ணீர் குளாய் வழியாக வந்து கறுப்பினத்தவர்களுக்குச் செல்கிறது.

இந்தப் புகைப்படமும் பல உண்மைகளை வெளியுலகுக்கு அம்பலப் படுத்தியது.


இப் புகைப்படம் ஆபிரிக்கக்கண்டத்தின் வறுமையை உலகுக்குப் படம் பிடித்துக் காட்டியது.எழுந்து நிற்க வலுவின்றி ஈரமெல்லாம் வற்றி மயங்கிய நிலையில் இருந்து இறக்கும் நிலைக்குப் போய்க் கொண்டிருக்கும் சூடான் நாட்டுக் குழந்தை ஒன்றை தின்பதற்குக் காத்திருக்கிறது பருந்து ஒன்று.

இதனைப் படம் பிடித்தவர் கெவின் காட்டர் என்பவர்.இந்தப் புகைப்படத்துக்கு புலிட்சர் விருது கிடைத்தது.ஆனாலும்,இன்னொரு பருந்தினைப்போல் காத்திருந்து படம் எடுத்தார் என்ற விமர்சனம் அவர் மீது பலத்த எதிர்ப்புணர்வோடு வைக்கப் பட்டதால் இளகிய மனம் கொண்ட கெவின் காட்டர் அதன் பின் தற்கொலை செய்து கொண்டார்.

Tuesday, June 8, 2010

YouTube - Airtel Super Singer Junior2, 03 11 2009 Alka Ajith

கடந்த சில வாரங்களாகப் பார்த்து வரும் 'சுப்பர் சிங்கர் யூனியர் 2' என்ற நிகழ்ச்சியப் பார்க்க ஆரம்பித்த பின் அச் சிறுவர்களின் திறமையில் அதிசயித்து நெற்றில் தேடி முதல் முயற்சியாக இதனை இங்கு தருகிறேன்.

YouTube - Airtel Super Singer Junior2, 03 11 2009 Alka Ajith


(மேலுள்ள ஆங்கில வரி வடிவத்தை அழுத்திப்(டபிள் கிளிக்) பாடலைக் கேட்கலாம்.இது முதல் முயற்சி என்பதால் கேட்க முடிவதில் சிரமமிருந்தால் அறியத் தரவும்.)


ஒரு மான் குட்டியின்
பூங் குயிலின்
வனக் கிளியின்
ஒரு மரகத வீணையின்
குரலிசை இது.