Wednesday, September 21, 2016

தாகூர்......ரவீந்திரநாத் தாகூர்....

ஒரு கலை வடிவம் - அது இலக்கியம், ஓவியம், நடனம், சிற்பம் என விரிகிறதே 64 ஆக! அவைகளில் எதுவாக இருந்தாலும் சரி அது அந் நாட்டுப் பண்பாட்டின் ஆத்மாவை; வேரை; ஆழ அகலத்தை அதன் பாரம்பரிய வழி வந்த உள்ளடக்கத்தை பிரதி பலிக்க வேண்டும்.

ஒரு மூன்றாம் கண்களுக்கு அதாவது அன்னியப் பண்பாட்டில் இருந்து வந்த ஒருவருக்கு முன்னால் படைக்கப் படுகின்ற ஒரு கலைப்படைப்பு அமானுஷமாக அப் படைப்பின் பண்பாடு தாங்கி வரும் விழுமியத்தை - அல்லது பண்பாட்டின் ஏதேனும் ஓரம்சத்தை - பண்பாட்டின் ஏதேனும் ஒரு  மூலக்கூறை அந்த மூன்றாம் கண்களின் ஆத்மானுபவத்திற்குக் கொண்டு சென்றிருக்க  வேண்டும்.

ஆஹா என்று அதைக் காண்கின்ற ஆத்மா உணர்ந்து வியக்க வேண்டும். அல்லது ஓ... என ஏங்க வேண்டும். அக் கலை அம்சம்  உலகில் பிறந்த எந்த ஒரு ஆத்மாவையும் பற்றி இழுத்து வந்து ‘இது தாம் நாம்’ என்று சொல்லும் ஓர்மத்தை; ( அது நன்றோ தீதோ - எந்த ஒரு அம்சம் பாடுபொருளாய் இருந்தாலும்);  வெளிப்படுத்தி நிற்கவேண்டும். தம் மண், பண்பாடு சார்ந்த சத்து இதுவென அது சொல்ல வேண்டும். அதுவே கலைப்படைப்பு என்பது என் அபிப்பிராயம்.

ஒரு கராட்டிக் கலை; குங்ஃபு கலை; அது - சண்டைக் கலையாய் இருந்த போதும் அதைப் பார்க்கிற கண்களுக்கு அந் நாட்டுப் பண்பாட்டின் விழுமியம் புரிந்து விடுகிறதே அது மாதிரி!

நேற்றய தினம் எனக்கு அப்படி ஒரு வங்காள மொழியின்  விழுமிய விஸ்தாரத்தை அறியும் வாய்ப்பு கிட்டியது. அது ரவீந்திரநாத் தாகூரின் கதைப்பாடல்கள் வடிவில் அமைந்த அவரின் பாடல்களின் தமிழ் மொழிபெயர்ப்பு. அதனை து.கிருஷ்ண மூர்த்தி அவர்கள் தமிழ் படுத்தி இருக்கிறார்.(கவிதையில் கதைகள்; வங்காளியில் இருந்து தமிழாக்கம்;சு.கிருஷ்ண மூர்த்தி,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிட்,ஏப்பிரல் 2014; பக் 80 -83) (புத்தகம் கிட்டிய இடம் Black town library)

தாகூர் என்ற பெயரை அறிந்திருந்த போதும் முதல் முதல் இப்போது தான் ‘அவரைப்’ படிக்கிறேன். அவரை மொழிபெயர்ப்பினூடாக உள்வாங்குகின்ற போது கவிதையின் ஆத்மா சேதமடையவில்லை என்பதைக் குறிப்பிட வேண்டும். கவிதைகளை நுகரும் போது  தாகூரின் மொழிவீச்சு எத்தகைய பண்பைக் கொண்டிருந்திருக்கும் என்பதை உணர முடிகிறதெனினும்; தமிழ் மொழிக்கு  அப்படியே அதனை அதன் அத்தனை அழகும் கெடாமல் சொல்லக் கூடிய ஆற்றல் இருந்த போதும் ;அதை பெயர்த்தவருக்கு இன்னும் தமிழ் வசப்பட்டிருக்கவில்லை என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.




தாகூரின் மொழி நடை வள்ளலாரினதைப் போல; தேசியவிநாயகம் பிள்ளையினதைப் போல, மறைமலை அடிகளினதைப் போலானதாக இருந்திருக்க வேண்டும். ஆனால் மொழிபெயர்த்தவர் அத்தகைய மொழி அழகை பெயர்த்து வரவில்லை. அது எனக்கு பெரிய குறையாகவும்; கோபத்தைத் தருவதாகவும் இருந்தது. ஒரு மாபெரும் கவிஞனை; நோபல் பரிசு பெற்ற விற்பன்னனை; தன் மொழிக்கு அழைத்து வரும் போது அதற்கான தகுதியும் திறமையும் கொண்டு வருபவருக்கு இருக்க வேண்டும். சும்மா ஏனோ தானோ என்று அதைச் செய்யக் கூடாது. இரு மொழிகளிலும் ஆளுமையும், இலக்கிய அறிவும், மொழிப்புலமையும், தார்மீகப் பொறுப்பும், ஈடுபாடும் இருக்க வேண்டியதோடு அதில் திளைத்துத் திளைத்து தான் பெற்ற இன்பத்தை; அனுபவத்தை அதன் ஆத்ம சங்கீதத்திற்கு பழுது வரா வண்னம் தமிழைக் குழைத்து குழைத்து திருத்தி திருத்தி தமிழால் எழிலாக்கி அதைத் தரவேண்டும். அதற்கு அதைச் செய்பவருக்கு மேற்கூறியவற்றோடு ரசனை உணர்வு கொண்ட மனத் தகுதியும் வாய்க்க வேண்டும். இவைகள் மொழிபெயர்ப்பாளனுக்கு இருக்க வேண்டிய அடிப்படைத் தகுதிகள். வியாபாரம் ஆகி விட்டது சூழலும் வாழ்வும். நம் பாரதியை வேறொரு மொழி இப்படி சந்திக்கிழுத்துக் கொண்டு போனால் எமக்கு என்னமாய் கோபம் வரும்!வண்ணாத்துப் பூச்சியை கயிறுகட்டி யாரும் இழுத்து வருவதுண்டோ?

ஒரு இறகின் வருடலைப் போல; கழுவி விட்டுப் போன கடற்கரை மணலில் மெல்ல வந்து கால் நனைத்துப் போகும் கரையோர நீர் போல; அந்தக் கவிதைகளுக்கு இயல்புண்டு. சட்டென வந்து கரங்களில் குந்தி விட்டுப் போகும் வண்ணாத்துப் பூச்சியின் பாஷை அது! ஆனால் அது இயற்கையின் செல்லச் சீண்டல் அல்ல; மாறாக சிந்தனைக்குத் தரும் ஒரு தேன் துளி!அவைகள் கவிதைகள் அல்ல; பாடல்கள்! சங்கீதம்!!. மனதுக்கு இதம் தரும் ; சிந்தனையில் மெத்தெனப் படியும் ; ஆத்மாவை வருடும் பாடல்கள் அவை!

சரி அது நிற்க, மொழிபெயர்க்கப் பட்ட பாடலில் உள்ள ஆத்மாவை - கருவை எடுத்துக் கொண்டு எவ்வாறு இப்பெருங் கவிஞன் தாகூர் அதைத் தந்திருக்கக் கூடும் என்ற உணர்ந்து சில சொல் மாற்றங்கள் செய்து அதன் ஒரு கவிதையை பகிர ஆவல். (”கவிதையில் கதைகள்” என்று சொன்ன தலைப்பை ”கதைப் பாடல்கள்” என்று சொல்லலாம் என்பது போல) ஆனால் அதற்கு முன் திரு கிருஷ்ணமூர்த்தி கொணர்ந்த கவிதைப் பாடலை அப்படியே தருகிறேன்..

பழைய வேலைக்காரன்

பூதம் மாதிரி அவனுருவம், புத்தியிலும் மிக மட்டம்.
பொருளேதும் தொலைந்தால் வீட்டுக்காரி சொல்வாள்,
‘திருடன் கேஷ்டாவின் வேலை தான்.’
நானெப்போதும் திட்டிக் கொண்டிருப்பேன்
எதுவும் அவன் காதில் விழாது.
பணத்தை விட அதிகம் பிரம்படி பெறுவான்
அப்படியும் அவனுக்குப் புத்தி வராது
தேவைக்காக மீண்டும் அழைப்பேன்
கேஷ்டா, கேஷ்டா என்று கூவுவேன்
என் தொண்டை காய்ந்தாலும் வர மாட்டான்
ஊர் பூராவும் தேடுவேன் அவனை
மூன்று கொடுத்தால் ஒன்று தான் இருக்கும்
மீதி இரண்டும் எங்கே என்றறியான்
ஒன்றைக் கொடுத்தால் கண நேரத்தில்
மூன்றாய் உடைத்துக் கொண்டு வருவான்
எங்கே ஆனாலும் எவ் வேளையிலும்
உறக்கம் அவனுக்கு வரப் பிரசாதம்
கழுதை, முட்டாள், உதவாக்கரை
என்று நான் அவனை உரக்கத் திட்டினால்
கதவருகே நின்று கொண்டு சிரிப்பான்
அவனைப் பார்க்க எனக்கு எரிச்சல் மூளும்
எனினும் அவனை துறக்க மனமில்லை
மிகவும் பழைய சேவகன் கேஷ்டா.

வீட்டுக்காரி காளியாகிக் கத்துவாள்
இனிப்பொறுக்க முடியாது என்னால்
வீட்டில் நீங்களே இருந்து கொள்ளுங்கள்
கேஷ்டாவைக் கூட வைத்துக் கொண்டு
அவன் யாருக்கும் அடங்குவதில்லை
துணிமணி பாத்திரம் உணவுப் பொருள்கள்
போகுமிடம் தெரியவில்லை
பணம் மட்டும் போகிறது தண்ணீராய்
கடைக்கு அனுப்பினால்
நாள் முழுதும் ஆளைக் காணோம்
கேஷ்டாவைத் தவிர வேறொரு சேவகன்
கிடைக்க மாட்டானா முயற்சி செய்தால்?
கடுஞ்சினம் கொண்டு நானும் சென்று
அவன் குடுமியைப் பிடித்து இழுத்து வந்து
‘தடியா, உனக்கினி வேலை இல்லை
தொலைந்து போ உடனே’ என்பேன்
தயங்கித் தயங்கியவாறு போவான்
‘சனியன் ஒழிந்தது என்றே நினைப்பேன்.
மறுநாள் நான் கண் விழிக்கும் போது
கையில் ஹூக்காவுடன் முன்னே நிற்பான்
அவனது முகம் மலர்ந்தே இருக்கும்
வருத்தத்தின் நிழல் கூட இராது
விரட்டினாலும் போக மாட்டான்
என் பழைய வேலைக்காரன்

அந்த ஆண்டு சிறிது உபரிப்பணம் கிடைத்தது
நான் செய்து வந்த தரகுத் தொழிலில்
முடிவு செய்தேன் அப்பணத்தில்
பிருந்தாவனத்திற்கு யாத்திரை செய்ய
மனைவியும் கூட வர ஆசைப்பட்டாள்
நான் அவளுக்கு விளக்கிச் சொன்னேன்
அவள் வந்தால் அதிக செலவு
என் புண்ணியத்தில் பாதி அவளுக்கு
பயணத்திற்கான பொருள்கள் சேர்த்து
மூட்டை முடிச்சுகள் கட்டி வைத்து
கைவளையல்கள் ஒலிக்க
மனைவி சொன்னாள் அழுது கொண்டு
‘வெளியூரில் கேஷ்டாவோடு
நீங்கள் கஷ்டப்படுவீர்கள் மிகவும்’
ஐயோ கேஷ்டா வேண்டாம்
நிவாரண் வரட்டும் என்றேன்
ரயில் வண்டி விரைந்து சென்றது
வர்த்தமான் நிலையத்தில் பார்க்கிறேன்
கேஷ்டா அமைதியே உருவாக
ஹூக்கா எடுத்து வருகிறான் எனக்கு
அவனை எவ்வளவு கடிந்து கொண்டாலும்
பழைய சேவகனைக்கண்டு மகிழ்ச்சி தான் எனக்கு
பிருந்தாவனம் போய் இறங்கினேன்
வலமும் இடமும் முன்னும் பின்னும்
பண்டாக்கள் வந்து சூழ்ந்து கொண்டார்
தாங்க முடியாமல் தொந்தரவு செய்தார்
ஆறு ஏழு பேர் ஒன்றாய் சேர்ந்து
ஒரு வீடு அமர்த்திக் கொண்டோம்
இனி சுகமாய் கழியும் போது
கவலை இல்லை என்று நினைத்தேன்

ஆனால், கோபிகை எங்கே, வனமாலை எங்கே?
வன மாலை அணிந்த கண்ணன் எங்கே?
எங்கே முடிவுற்ற வசந்த காலம்?
எனக்கு வைசூரி கண்டது
என் கூட்டாளிகள் எல்லோரும்
வீட்டில் இருந்து மறைந்தார் கனவு போல்
நான் தனியனாகி விட்டேன்
என் உடம்பெல்லாம் ரணமாயிற்று
மெலிந்த குரலில் இரவும் பகலும்
கேஷ்டாவை அருகழைத்து உரைத்தேன்
‘இவ்வளவு காலங்கழித்து
வெளியூர் வந்து சாகப் போகிறேன்’
அவனைப் பார்த்து என் நெஞ்சு நிறைந்தது
அவன் எனக்கொரு செல்வம் போல
இரவும் பகலும் என்னுடன் இருந்தான்
கேஷ்டா, என் பழைய சேவகன்

குடிக்க நீர் கொடுப்பான் குசலம் கேட்பான்
என் கையை எடுத்து தன் தலை மேல் வைப்பான்
அமைதியாய் நிற்பான் உறக்கமின்றி
உணவை முற்றும் ஒதுக்கி விட்டான்
அடிக்கடி சொல்வான், ’ஐயா
நீங்கள் சிறிதும் அஞ்ச வேண்டாம்
திரும்புவீர் நீங்கள் பத்திரமாக
எசமானி அம்மாளைப் பார்ப்பீர் திண்ணம்’

நான் நோய் தீர்ந்து எழுந்தேன்
காச்சல் அவனைப் பிடித்துக் கொண்டது
என்னை வருத்திய நோய் தன்னை
தானே ஏற்றுக் கொண்டான் போலும்!
இரண்டு நாள் நினைவின்றிக் கிடந்தான்
நாடி இறங்கத் தொடங்கி விட்டது
இது காறும் அவனை விரட்டி வந்தேன்
இப்போது அவனே விலகிக் கொண்டான்
பல நாள் பிறகு திரும்பினேன் வீடு
புனிதப் பயணத்தை முடித்துக் கொண்டு
ஆனால் என்கூட இல்லை இன்று
என் நெடுநாள் தோழன், பழைய சேவகன்!
(புரதன் ப்ருத்ய)

பாரதியாரும் சேவகனைப் பாடியிருக்கிறார்.  எங்கிருந்தோ வந்தான். இடைச்சாதி நான் என்றான் இங்கிவனை நான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் ..... என்ற பாடல் நினைவுக்கு வருகிறதா?

அப்பாடலையும் இங்கு தரவே விருப்பம். ஆனால் அது மிக நீண்ட பாடல். பல வரிகளை நறுக்கி விட்டு சினிமாவில் அது வேறு விதமாய் ஒலிக்கும். அவசரப்படுபவர்கள் யூரியூப்பில் கேழுங்கள். முடிந்தவர்கள் பாரதி பாடல்களில் முழு வரிகளையும் முகருங்கள். வாசத்தில் திளையுங்கள்.

அவற்றை அனுபவம் செய்வீர்களாக!

அனுபவம் செய்தல் என்பது காணும் அனுபவத்தில் இருந்து வேறு பட்டது. உடல் சார்ந்த புலன்களின் இருந்து உயர்ந்து ஆத்மா அதை உணர்வது. அது கண் என்ற பாதையூடாக ஆத்மாவுக்குக் அவ் உணர்வை பணிவோடு ஏந்தி வந்து கொடுக்கும்.  இனி அது எங்கேயும் போகாது அங்கேயே ஒன்றாகி விடும். நிலையாக! உங்களோடு கூடவே வரும். எப்போதும்! அது பின்னர் உங்கள் அன்றாட வாழ்வில் பிரதி பலிக்க ஆரம்பிக்கும். தோற்றத்தைக் கூட சில வேளைகளில் மாற்றி அமைத்து விடும். கூடவே ஆத்மாவோடு பயணம் செய்யும் அது பிறவிகள் தோறும் பிறவிகள் தோறும் கூட ; கூட வரும்.....

இப்போது இரண்டு சேவகர்களினதும் ‘அழகு’ தெரிகிறதா? இரு  இனத்தினுடய துமான பண்பாட்டின் சாயல் இக்கவிதைகளில் புலப்படுகிறதா?

அறிய ஆவல்..... 

Sunday, September 11, 2016

பார்வைகள்....






பார்வைகள்....

ஒவ்வொன்றையும் ஒவ்வொருவரும் பார்க்கிற விதங்களில் தான் எத்தனை எத்தனை வேறுபாடுகள். கண்களில் தான் எத்தனை விதமான பார்வைகள்....

அண்மையில் ஒரு பொழுது போக்கு வணிக சஞ்சிகை ஒன்றில் (16.5.15 குங்குமம்) ஆல்தோட்ட பூபதியின் குட்டிச் சுவர் சிந்தனை இப்படிப் போயிருந்தது. ‘ கருணை அருளும் கடவுள்தான் என்றாலும் கையில் வேல் வைத்திருப்பது போல,வீட்டின் பாதுகாப்புக்குத் தான் கதவு என்றாலும் அதில் பூட்டுத் தொங்குவது போல, இடுப்பில் இறுக்கமாய் ஜீன்ஸ் இருந்தும் அதில் பெல்ட் இருப்பது போல, பள்ளிக் கூடப் பேருந்துகளில் கம்பி இருந்தும் அதற்கு வெளியே கம்பி வலை இருப்பதைப் போல, காவல் நிலையம் என்றாலும் கண்காணிப்புக் கமரா இருப்பதைப் போல, பிணக்கிடங்குக்கு முன் காவல் காக்கும் வாட்ச்மன் போல, சாவி போட்டுத் தான் ஸ்ராட் செய்ய முடியும் என்றாலும் சென்றல் லொக்கிங் இருப்பதைப் போல, கடவுள் படங்களுக்குக் கண்ணாடிச் சட்டம் இருப்பதைப் போல, புத்தி சாலி என்றாலும் படித்துப் பெற்ற பட்டம் போல, மருத்துவ மனைக்கு முன்னால் இருக்கும் பிள்ளையார் சிலை போல,அன்பு மட்டுமே மொழி என்றாலும் அவ்வப்போது வரும் அம்மாவின் அதட்டல் போல......

எப்பிடி எல்லாம் பாக்கிறாங்கப்பா.....

கடந்த வார நடுப்பகுதியில் என் வேலைத்தலத்து கம்போடிய நாட்டுச் சினேகிதி ஒருத்தி மிக ஆர்வமாக ஓடி வந்து தன் முகப்புத்தகத்தில் தான் ஒரு இந்தியரை இணைத்திருப்பதாகவும் அவர் போடும் இந்து சமயச் சுவாமிப்படங்கள் மிக அருமையாக இருக்கிறதென்றும் இந்தச் சுவாமிகளை எல்லாம் உனக்குத் தெரியுமா? இப் பெண் சுவாமிகள் எத்தனை அழகாய் இருக்கின்றன பார்த்தாயா என மிக ஆர்வமாகக் காட்டினாள்.

மிக அழகாய் தான் இருந்தன.

கூடவே அவள் காட்டிக் கொண்டு போன போது சிவலிங்க படங்களும் வந்தன. தம் அங்கோர்வாட் கோயிலில் இத்தகைய சிற்பங்கள்  இருப்பதாகவும் அவற்றை தாம் லிங்கா, யோனி என அழைப்பதாகவும் சொன்ன போது நாமும் அவ்வாறு அழைப்பதுண்டு என்றேன்.

உரையாடல் பின்னர் சொற்கள் பற்றியும் அது கூறும் கருத்துக்கள் பற்றியதுமாகத் திரும்பியது. அச் சிவலிங்க ‘புருஷ பிராகிருதி’ தத்துவம் பற்றி சொன்ன போது மிக ஆர்வமாகக் கேட்டு அதையே தான்  அங்கோர்வாட் கோயிலுக்குப் போன போது கைட்டும் சொன்னதாக மிக ஆச்சரியப் பட்டாள்.

பின்னர் அவ் உரையாடல் ஒரு புன்னகையோடு முடிவுக்கு வந்தது.

மறு நாள் என்னைக் கண்ட போது  கண்களில் ஆர்வம் கொப்பளிக்க ஓடோடி வந்து, இந்து சமயத்தின் சிவலிங்க வணக்க முறையையும் படத்தையும் அதன் தத்துவார்த்த விளக்கத்தையும் தன் அவுஸ்திரேலியக் காதலனுக்கு விளக்கிக் கூறியதாகவும் அவர் மிக ஆச்சரியப் பட்டுப் போனதாகவும்கூறி, ‘இது நல்ல மொடேர்னான சமயமாய் இருக்கும் போலிருக்கு’ என்று சொன்னதாகவும் சொல்லி போனாள். சிற்றின்பமே வாழ்வின் உன்னத இலட்சியமாய் இருப்போருக்கு அது மேலான சமயமாய் இருப்பதில் வியப்பேது?

பார்க்கிற பார்வைகள்......

இந்தச் சம்பாசனையை என் இலக்கிய நண்பர் ஒருவரிடம் பகிர்ந்து கொண்ட போது அவர் தனக்கேற்பட்ட அனுபவத்தை இப்படிச் சொன்னார். அவர் தான் குடும்பத்தோடு நல்லூர் முருகன் கோயிலுக்குச் சென்ற போது அங்கு வந்திருந்த இஸ்லாமியக் குடும்பத்தவர் முருகன் வள்ளி தெய்வயானை சமேதராய் இருக்கும் தலத்தின் முற்றலில் அதன் காரண விபரணங்களை அக்கறையோடு கேட்டு விட்டு ‘இவரும் நம்மளப் போல நம்ம சமயம் சொல்லுறதத் தான் செய்யிறாரு’ என்றாராம்.

பார்க்கிற பார்வைகள்......

கூடவே பல வருடங்களுக்கு முன்னர் ஒரு சமயங்கள் சம்பந்தமான உரையாடலின் போது என்னை ‘உலகத்தின் மிகப் பழைமையான சமயம் (இந்து சமயம்) எனதென்றும்; இவர்கள் குரங்கு, (ஆஞ்சநேயர்) மாடு, யானை இவைகளை எல்லாம் இன்றும் வழிபடுகிறார்கள் என்று அறிமுகப் படுத்தியமையும் நினைவுக்கு வந்தது.

பார்க்கிற பார்வைகள்.....

Saturday, August 13, 2016

Food for the day



படம்; நன்றி 
http://sayuriito.deviantart.com/art/Paint-Me-371254451


அண்மையில் பார்த்தவற்றுக்குள்ளும் படித்தவற்றுக்குள்ளும் மிகவும் பிடித்துக் கொண்டதாக இருந்தது ஜேகேயின் ச்சீ போ என்ற கவிதை.
( http://www.padalay.com/2016/08/blog-post.html )

இன்றய சமூக வலைத்தளங்களும் ஊடகங்களும் மனித மனங்களில் ஏற்படுத்தும் விசித்திரங்களை இக்கவிதை மிகச் சிறப்பாக வெளியே கொண்டு வருகிறது.


 ச்சீ போ - ஜேகே.
http://www.padalay.com/2016/08/blog-post.html

ஏன் என் அடிவயிற்றை
எப்போதுமே பிறாண்டிக்கொண்டிருக்கிறீர்கள்?
தூக்கு விறகின் அடியிலே நாய் பள்ளம் தோண்டுவதுபோல
ஏன் எப்போதும்  என்னையே கிளறிக்கொண்டிருக்கிறீர்கள்?
நான், என் மனம், என் விசித்திரங்கள் என்று
என்னோடு நான் பேசும் பொழுதுகளில் மட்டும்
எதற்காக ஒலிபெருக்கிகள் பூட்டிக் கடவுளைத் தேடுகிறீர்கள்?
நான் கூரையைப்பிரித்துவைத்து
வானில் நட்சத்திரங்களை எண்ணுகையில்
எதற்காக உள்ளே எட்டிப் பூராயம் பார்க்கிறீர்கள்?
தண்ணீர்த் தொட்டியை ஏன்  உங்களது ஆவுரஞ்சிக்கல் ஆக்குகிறீர்கள்?
கிளியோபற்றாவின் ஊசிகளோடு எதற்காக என்னையே சுற்றிச் சுற்றி நீங்கள் அலையவேண்டும்?
ஈக்களைத் துரத்தக்கூட எதற்காக வாளைச் சுழற்றவேண்டும்?
எப்பொழுதுமே யாரையேனும் நிராகரித்துக்கொண்டேஇருக்கிறீர்களே, ஏன்?
நான் என்று நினைத்து எதற்காக யாரோ ஒருவரைத் திட்டுகிறீர்கள்?
நிற்க.
எனக்கெங்கே மதி போனது?
நான் ஏன் இங்கேயே இன்னமும் சுற்றிக்கொண்டிருக்கிறேன்?
உலகம் முழுதும் எனக்காகத் திறந்து கிடக்கையில்
ஒரு கண்ணாடிக்குவளைக்குள் நான் ஏன் முடங்கிக்கிடக்கவேண்டும்?
உங்களுக்கும் எனக்கும் அப்படி என்னதான் உறவு?
என் மரண வீட்டுக்குக்கூட நீங்கள் வரப்போவதில்லை.
சொட்டுக்கண்ணீர் விடப்போவதில்லை.
கல்வெட்டைக்கூடத் திறக்கப்போவதில்லை.
என் மகிழ்ச்சி, என் துக்கம், என் உறவு, என் பகை
எதுவுமே உங்களை உறுத்தப்போவதில்லை.
நான் ஏன் உங்களையே நினைத்து அழுங்க வேண்டும்?
உங்களோடே சுற்றி அலையவேண்டும்?
யார் நீங்கள் எனக்கு?
உங்களைவிட்டு ஓடித்தப்பி
ஒலிபெருக்கிகளின் வீச்செல்லைக்கு அப்பால்
கிளியோப்பற்றாவின் பொறாமைக்கு வெளியே
நாய்கள் தாண்டாத ஆற்றுக்கு அப்பால்
பாரிய நீர்நிலைக்கு அருகில் ஒரு தண்ணீர்த்தொட்டியாய்
நான் மாறிவிட மாட்டேனா?
யாருமே எட்டமுடியாத
கூரையே முற்றுமில்லாத
அடர்ந்த காட்டுக்குள்
ஒளிந்துகொள்ளக்கூடாதா?
மழை காட்டில் பெய்தாற் போதாதா?
இங்கு கிடந்து மாரடிக்க என்ன வினை எனக்கு?
உங்களோடு எதற்கு முட்டிமோதிக்கொண்டிருக்கிறேன்?
காதலியின் கடைக்கண் பார்வைக்காய் ஏங்கும் நிலை எதற்கு?
உங்களைப்பார்த்து எதற்காகப் பொறாமை கொள்கிறேன்?
ஒரு கவிதை, ஒரு கதை, ஒரு நிலைத்தகவல்,
ஒரு புகைப்படம், ஒரு காணொலி
ஒரு திருமணம், ஒரு மரணம், ஒரு பிறந்தநாள்,
கிடைத்த விருப்பு, கிடைக்காத விருப்பு
கிடைத்த கருத்து, கிடைக்காத கருத்து
கிடைத்த வாழ்த்து, கிடைக்காத வாழ்த்து
ஒரு நட்பு விண்ணப்பம், ஒரு நட்புத் தடை
மற்றவரின் நட்பு, மற்றவரின் விருப்பு
அறியாதவரின் நட்பு, அறியாதவரின் விருப்பு
எல்லாமே
எதற்காக எனக்குப் பதட்டத்தைக் கொடுக்கவேண்டும்?
எனக்குப்பிடிக்காதவர்களுக்கு கிடைக்கும் இகழ்ச்சி
எதற்காக என்னை மகிழ்விக்கவேண்டும்?
என்னோடு இருப்பவரின் உயர்வு
எப்படி என்னை அசூயைப்படுத்துகிறது?
அத்தனைபேரும் இழுக்கும் வடத்தை
எப்போது என் கையும் பற்றிக்கொண்டது?
எல்லாக் கண்களும் என்னையே பார்க்கின்றன
என்று எப்போது எண்ண ஆரம்பித்தேன்?
எல்லாக் கண்களும் என்னையே பார்க்கவேண்டும்
என்று எப்போது எண்ண ஆரம்பித்தேன்?
என்னை அழகனாக்க எத்தனைபேரை
அரியண்டப்படுத்தவேண்டியிருக்கிறது?
என்னை அறிஞன் ஆக்க எத்தனை பேரை
முட்டாளாக்கவேண்டியிருக்கிறது?
என்னை இலக்கியவாதியாக்க எத்தனைபேரை
நிராகரிக்கவேண்டியிருக்கிறது?
நான் மட்டும் தனித்திருக்க எத்தனைபேரை
கொலைசெய்யவேண்டியிருக்கிறது?
என்னுள் உறைந்திருந்த அரக்கனுக்கு
எப்படி நீங்கள் உயிர் கொடுத்தீர்கள்?
ஒரு சாகசக்காரனுக்குரிய இச்சையை
என்னுள் ஏன் தூண்டிவிட்டீர்கள்?
இத்தனைக்குப் பிறகும்
இவ்வளவு அகோரத்துக்குப் பின்னரும்
இமயமளவு விசனத்துக்குப் பிறகும்
ஏன் என் வால் என் சொல் கேளாமல்
சுழன்றுகொண்டே கிடக்கிறது?
ச்சி போ.

சர்ச்சை சேறும் தகவல் குப்பைகளும் அதற்குள் புரண்டெழும் மனங்களுமாக கும்பலோடு கோவிந்தாவாக எதையோ நோக்கி இலக்கில்லாமல் ஓடும் தகவல் தொழில் நுட்பக் கடலுக்குள் நாம் எல்லோரும் அள்ளுண்டு செல்வதை சிறப்பாகச் சொல்லும் இக்கவிதை உங்களுக்குள்ளும் சில கேள்விகளை எழுப்பிச் செல்லலாம்.

ஒரு கிண்ணம் நிறைய இருக்கின்ற பதமாக வறுத்த முந்திரிப் பருப்புக்குள் நமக்குத் தேவையான ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டு நிறுத்தி விட உங்களால் முடியுமென்றால் தகவல் தொழில் நுட்பத்துக்குள் நீந்த நமக்கு தகுதி வந்து விட்டது எனக் கொள்ளலாம்.

நாம் திரும்பவேண்டும்.

உலகைப் பற்றி அறிந்து கொள்ளுதல் என்பதில் இருந்து திரும்பி என்னை; என் உணர்வுகளை அறிந்து கொள்ளுதல் என்பது பற்றிய பாதைக்கு வர வேண்டும்.

என் உணர்வுகளைப் பற்றி உணர்ந்து கொள்ளுதல் / பின்னர் அந்த உணர்வுகளைக் கையாளும் அறிவு ....

இன்றைக்குப் பெரிதும் வேண்டப்படுவது இது தான். இப்போதைக்கு இது போதும்.

அது வரை எதையும் தேவைப்படும் போது மாத்திரம் தெரிந்து கொண்டால் போதும். எதற்கு எல்லாவற்றையும் நாம் தெரிந்திருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்?

மெய் ஞானமாகி எப்போது  மெய் சுடர் மிளிரப் போகிறது?

Tuesday, August 2, 2016

பண்பாட்டில் அரும்பும் புதிய துளிர்கள்...




அண்மையில் பாரதியாரின் பாடலை வாகனத்தில் கேட்டுக் கொண்டு போனேன்.
“ .......
வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி சிவ சக்தி
நிலச் சுமை என வாழ்ந்திடப் புரிகுவையோ?
விசையுறு பந்தினைப் போல் உள்ளம்
வேண்டிய படி செல்லும் உடல் கேட்டேன்
நசையறு மனம் கேட்டேன்
நித்தம் நவமென சுடர் தரும் உயிர் கேட்டேன்
தசையினைத் தீ சுடினும்
சிவ சக்தியைப் பாடும் நல் அகம் கேட்டேன்
அசைவறு மதி கேட்டேன்
இதை அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ?
இதை அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ?

என்ன ஒரு கவிஞ கம்பீரம் பாருங்கள்! இதத் தாறதில உனக்கென்ன பிரச்சினை இருக்கு என சிவசத்தியையே கேள்வி கேட்கும் கம்பீரம்!!

அது போல மாணிக்க வாசகரின் திருவெம்பாவையில் ஒரு வரி வரும். கம்பீரமாய் நிமிர்ந்து நிற்கும் வரியில் அதுவும் ஒன்று. உடனே நினைவுக்கு வந்த அப்பாடல் வரி இது. எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள் என்று தொடங்கும் அது.

‘......
எங்கள் பெருமான் உனக்கொன்றுரைப்போம் கேள்!
என் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க!
என் கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க!
கங்குல் பகல்  என் கண் மற்றொன்று காணற்க!

என வரும்.

கடவுளிடம் கேள்வியும் கடவுளுக்கே சூழுரைத்தலும் நடக்கிற விதமானதாக ஒரு வித ‘பிரபஞ்சத்தை’ கூட்டிக் கொண்ட வாழ்வியலாக கீழைத்தேசத்தின் வாழ்வியல் இருந்திருக்கிறது.

மேலைத் தேயம் எதையும் ஏன் எதற்கு எப்படி என்று கேள்வி கேள் என்று கற்பித்துக் கொண்டிருந்த போது  நாம் இப்படித்தான் 'பிரபஞ்சத்தோடு’ தொடர்புகளைப் பேணிக்கொண்டிருந்தோம். வாழ்க்கையைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

மேலைத்தேய சிந்தனைகள் இவ்வுலக வாழ்வை மையப்படுத்தி ‘வாழ்க்கை வாழ்வதற்கே’ என்ற முடிவுக்கு வந்த போது  கீழைத்தேய சிந்தனை மரபோ ஆண்மீக வாழ்வை மையப்படுத்தி இறப்புக்குப் பின்னும் நீழும் வாழ்வு பற்றிய குறிப்புகளை இலக்கியங்களிலும் இதிகாசக் கதைகளிலும் வாழ வைத்துக்கொண்டிருந்தது.

இந்த வாழ்க்கை பற்றிய நோக்கு வாழ்க்கையை வாழுகின்ற முறைமையில் பிரதான தாக்கத்தை கொண்டிருக்கிறது.

இன்று வரை.

பெண்ணுக்கும் ஆணுக்குமான ‘இட நெருக்கடி’க்கு கவிஞர் வைரமுத்து அவர்களின் வரி இப்படி ஒரு தீர்வு காட்டும்.

’...... ஆண்களில் ராமன் கிடையாது
புரட்சிகள் ஏதும் செய்யாமல்
பெண்ணுக்கு நன்மை விளையாது,
கண்ணகி சிலைதான் இங்குண்டு;
சீதைக்கு தனியாய் சிலை ஏது?’

ஆனால் இன்று விரும்பியோ விரும்பாமலோ உலகம் சுருங்கி கையடக்கத் தொலைபேசிக்குள் வந்த பிற்பாடு ,

ஈழத்தமிழ் பிரச்சினை தமிழர்களை உலகெங்கும் சிதறச் செய்த பிற்பாடு -

இந்தியத் தமிழர்களின் இணையத் தொழில் நுட்ப அறிவு சிறப்பும் அதன் குறைந்த விலையிலான நுகர்வுத் திறனும் அவர்களை உலகெங்கும் கொண்டு செல்ல தொடங்கிய பிற்பாடு -

உலகில் சகல மூலையிலும் ஒரு தமிழன் தமிழ் சிந்தனையோடு மேலைத்தேயக் கலாசார சூழலில் ‘பரிசோதனை’ வாழ்வை வாழ ஆரம்பித்து விட்டான்.

இந்த புதிய வெள்ளம் பாய ஆரம்பித்து இப்போது 30 வருடங்களுக்கு மேலாகி விட்டன.

காரணம் எதுவாய் இருப்பினும் ஒருவாறு தம்மைத்  மேலைத் தேயங்களில் தக்கவைத்து தம் வேர்களை பதிக்க ஆரம்பித்தவர்களின் புதிய சந்ததி அங்கேயே பிறந்து அந் நாட்டு மொழியைத் தம் தாய் மொழியாகக் கொண்டு அந் நாட்டுச் சிந்தனைகளோடு  தம் ’சொந்த’வேர்களைப் பார்க்க ஆரம்பித்திருக்கின்றன.

அவர்களுடய பார்வைகள் கேள்விகள் தாய் மரத்தில் புதிய துளிர்களைத் தோற்றுவிக்கின்றன.

2011 இல் ‘OZ தமிழ் 2011 - சில அவதானிப்புகள் என்ற தலைப்பில் சிங்கையில் நடந்த புலம்பெயர்ந்தோர் மாநாட்டில் வழங்கப்பட்ட கட்டுரை அந்த புதிய அரும்பும் துளிர்கள் பற்றிப் பேசியது.

சிறுகுழந்தைகளிடம் இயல்பாய் எழும் கேள்விகள் நம்மை சுளீர் என தாக்குகிறன. எப்படி நாம் அவ்வாறு சிந்திக்காமல் போனோம் என்று கேட்கத் தூண்டுகின்றனவாக அவர்களின் வினாக்கள் நம்மை நோக்கி வீசப் படுகின்றன. கீழே வருவன நடை முறையில் நடந்த உதாரணங்கள்,

1. தந்தையோடு கோவலன் கண்ணகி நாடக ஒத்திகைக்கு சென்றிருந்த 5 வயது மகள் தேநீர் இடை வேளையின் போது தந்தையிடம் கேட்கிறாள், ‘ஏனப்பா கண்ணகி அழுது கொண்டிருக்கிறா? தந்தை விடை சொன்னார் ‘கோவலன் மாதவி என்றொரு பெண்ணிடம் போய் விட்டார், அதனால் கண்னகி துக்கித்து அழுகிறாள்’ மகள் சொன்னாள்,’ஏனப்பா கண்ணகியும் அவவுக்கு பிடிச்ச ஒராளப் பார்த்து கல்யாணம் செய்து கொள்ளலாம் தானே? அவ ஏன் அழ வேணும்?

 - இங்கு நாம் இன்னும் கண்ணகி கோவலன் கதையை நாடகமாக்கிக் கொண்டிருக்கும் அதே நேரம் அடுத்த சந்ததி அதன் உள்ளடக்கத்தை வெகு இயல்பாக கேள்வி கேட்கக் காணலாம்.

2. அது போல இன்னொரு கதை. இது ஞான சம்பந்தர் பால் குடித்த கதை. தந்தை உமை பால் கொடுத்ததையும் தந்தை வந்து ‘யார் உனக்குப் பால் தந்தது என்று வினவுவதையும் சம்பந்தர் தோடுடைய செவியன் எனப் பாடுவதையும் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அந்தக் குழந்தை உடனடியாக எந்தத் தயக்கமும் இல்லாமல் கேட்டது, உமாதேவியார் தானே பால் கொடுத்தார்! ஏன் சம்பந்தர் சிவபெருமானைப் பாடினார்?

இவ்வாறு நாளாந்தம் நாம் கவனியாமலே கடந்து செல்லும் கேள்விகள் ஏராளம். அவை நம்மை நோக்கி வீசப்படுவன அல்ல; அவை பண்பாட்டை நோக்கிக் வீசப்படுகிற வினாக்கள்.

கடந்த சில வாரங்களின் முன்னர்  ஒரு பரிசுக்கதையை வாசிக்கக் கிட்டியது. அது 2014ல் தமிழ் தாய் சிறுகதைப் போட்டியில் 3ம் இடத்தைத் பெற்ற கதை அது.  அந்தக் கதை நம் சகோதர தளமான உயர்திணை இணையப் பக்கத்தில் பிரசுரமாகி இருக்கிறது. தயவு கூர்ந்து அங்கு சென்று அந்த கதையை வாசித்துப் பாருங்கள். ஏழுமலை ஏழு கடல் என்பது கதையின் தலைப்பு. இந்தக் கதையை ஸிட்னி இரா. சத்யநாதன் என்பார் எழுதி இருக்கிறார்.

uyarthinai.wordpress.com

இவை எவ்வாறு எதிர்காலத்தில் விரியும் என இப்போது சொல்ல முடியாவிட்டாலும், நம் பண்பாட்டில் அரும்பும் புதிய துளிர்கள் பற்றிய ஒரு பிம்பம் உங்கள் மனதிலும் தெரியலாம்.....

பண்பாட்டில் அரும்பும் புதிய துளிர்கள்......

Wednesday, July 6, 2016

எண்ணிம சகாப்தத்தில் வரும் சிந்தனைக் குழப்பங்கள்....


இந்தப் பகிர்வு சொல்ல வருவதெல்லாம் ஒன்றே ஒன்று தான்.
அது ஒரு ஆபத்தும் சில கருத்துக்களும்.

இது ஒரு பகிர்வு மாத்திரமல்ல; உங்களிடம் இருந்து நான் அறிய விரும்புகின்ற எனக்குத் தெரியாத அல்லது நான் பார்க்காத - சில வேளைகளில் பார்க்க விரும்பாத பக்கங்களை உங்களிடம் இருந்து அறியும் பொருட்டும் தான்.

1. நம் நம்பிக்கைகள் ( பண்பாடு, சமயம், வாழ்க்கைமுறை, பாரம்பரியம், மரபு, பண்பாடு, சூழல் பரம்பரை அலகுகள்..எல்லாம் சேர்ந்ததான ’நான்’ என அறியப்படும் ’நான்’)

2. நம் மன ஓட்டங்கள் ( தனிப்பட்ட மனித மன இயல்பு; ஆளாளுக்கு அது வேறுபட்டு இயங்கும் அதன் தனித்துவம்)

3. உலகத்தில் இடம் பெறும் மாற்றங்கள் வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்கள்.( எண்ணிம யுகத்துக்குள் நாம் பிரவேசித்திருக்கிற இத் தருணத்தில் கணணி வலைப்பின்னல்கள் மற்றும் தொழில்நுட்பப் புரட்சிகள் கொண்டு வந்து சேர்த்திருக்கும் புதிய பாதகளும் அதன் சாதக பாதக நிலைகளும்)

இவற்றினூடே நாம் நம்மை நிலை நிறுத்திக் கொள்ளவேண்டிய இடம் எது எங்கு எப்படி?

இவை சார்ந்தவை தான் இப்பகிர்வு!
(தொடர்ந்து வாசிக்க நேரமில்லாதவர்கள் இங்கிருந்து நேரடியாக கருத்துச் சொல்லச் செல்வீர்களாக! தொடர்ந்து வாசிக்க விரும்புகிறவர்கள் வாசித்து உங்கள் கருத்தைப் பகிர்ந்து செல்வீர்களாக.)
................

நாம் இந்த உலகத்தைப் பார்ப்பது கண்களால் அல்ல. மனங்களால்! அந்த மனம் பண்பாட்டினால்; மதங்களினால்; சமூக வலைப்பின்னல்களால் கட்டுண்டு கிடக்கின்றன.

இந்தச் சமூக வலைப்பின்னல்கள் நம்மைச் சுற்றியுள்ள சமூகமாக முன்னர் இருந்தது. அது மாற்றங்களின் சுழற்சியினால் இன்று கணணிகளுக்குள் கட்டுண்டு கிடக்கின்றன. சமூகம் இப்போது உலகமாகச் சுருங்கி விட்டது. சமூக வலைத்தளங்கள் அந்த இடங்களைக் கைப்பற்ற நாகரிகங்கள் ஒன்றுகலந்து விட்டன.  24 மணித்தியாலமும் அது இயங்கிக் கொண்டிருக்கிறது.  உலக நட்பு வட்டம்  தன் வசப்படுத்திக் கொண்டிருக்கின்ற வலை அமைப்புகள் ஊடாக பல பாதைகளை உருவாக்குகின்றன. சுயாதீனமான சுதந்திர கருத்துக்களும் அவற்றுக்கான வாய்ப்புகளும் அழைப்பிதழ்களும் அங்கு எண்ணிக்கையற்றுப் பரந்து விரிந்து போயுள்ளன. மேலைத்தேயச் சிந்தனைப் போக்கும் கீழைத்தேயச் சிந்தனைப் போக்கும் ஒன்றுகலந்து போயுள்ளன.

இந்தக் கலப்பில் குழம்பி இருக்கிற பிரதான விடயம் சிந்தனைப்போக்கு. இந்தச் சிந்தனைப்போக்குகளை ; வாழ்வின் அடைப்படை நாகரிகத்தை; பழக்கவழக்கத்தை; எதிர்காலப் பார்வையை கட்டமைத்தவையாக கல்வி, குடும்பம், குடும்பச் சூழல், நண்பர்கள், சார்ந்திருக்கிற சமயம், உறவுகள், வாழ்க்கை முறைகள் போன்ற பலவிடயங்கள் நிர்ணயிக்கின்ற போதும். கீழைத்தேயப் பண்பாட்டைப் பொறுத்தவரை அரசியல், சமூக அடுக்குகள், சாதி அமைப்பு முறைகள், ஆண்பெண் சுதந்திரம், பொருளாதாரம் போன்றனவும் வாழ்க்கை முறையில் செல்வாக்கைச் செலுத்துகின்றன.

உலகில் பிரதானமாக பின்பற்றப்படும் சமயங்களான இஸ்லாமிய, கிறீஸ்தவ, இந்து சமய அடிப்படைத் தத்துவங்களை எடுத்துப் பார்த்தால் அதன் அடிப்படை சித்தாந்தங்கள் எவ்வளவு வித்தியாசமான பார்வைகளை வாழ்க்கை சம்பந்தமாகக் கொண்டிருக்கின்றன என்பதைக் காணலாம். இஸ்லாமிய சமூக வாழ்வின் கட்டுக்கோப்புகள் மிக வேறானவை. மிகப்பலமான எல்லைகளை அவை வரையறை செய்து கொண்டுள்ளன. கிறீஸ்தவ சமூக வாழ்வு வாழும் இந்த வாழ்வை வழங்கப்பட்டிருக்கிற உடலை மையமாகக் கொண்டு வரையறை செய்து கொண்டுள்ளன. இந்து சமயம் உடலுக்கப்பால் இருக்கின்ற ஆண்மாவை நிரந்தரமானதாகக் கொண்டு இந்த உடல் கொண்டிருக்கிற வாழ்வை தற்காலிகமானதாக வரையறை செய்து கொண்டுள்ளன.
இத்தகைய அடைப்படைச் சிந்தனைப்போக்குகள் நடைமுறை வாழ்வில் வாழ்க்கை முறையில் பெரும் இடத்தை வகிக்கிற அதே நேரம் அவை எல்லாம் ஒன்றுகலக்கும் இடமாகவும் இணைய பரப்பு விளங்குகின்றது.

அதே நேரம், பெரும்பாலாக விளங்குகின்ற சாதாரண ஒரு மனித மனம் 20% தனக்கான பொறுப்புகளாலும், 20 % வருமானத்தை ஈட்ட வேண்டிய தொழிலிலும் மிகுதி 60% தேவையற்ற நினைவுகளாலும் நிரப்பப் பட்டிருப்பதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது. ’நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகி விடுகிறாய்’ ( You are what you think ) என்பது உளவியல் சித்தாந்தம். அவ்வாறு இருக்கையில் தேவையற்ற நினைவுகளால் நிரப்பப் பட்டிருக்கிற மனம் உலாவித்திரிய சிறந்த இடமாக இணையப்பரப்பு விரல் நுனியில் கிடைக்கிறது. திறந்து விடப்பட்டிருக்கின்ற உலகக் கிராமத்து வாய்ப்புகள்  மடை திறந்த வெள்ளமாக பெருக்கெடுத்தோடுவது வெறுமனே தேவையற்ற சிந்தனைக்கான மனதுக்கு அல்லது சுவாரிஷம் தேடி ஓடும் மனதுக்கு பெரு வாய்ப்பாய் அமைந்து விடுகிறது.

இந்த ஒன்றுகலத்தல்கள் ஏற்படுத்தி இருக்கிற குழப்பநிலை பல தனிப்பட்ட மனங்களை மேலும் அலைக்கழிக்கின்றன, குடும்ப அலகுகளை உறவுநிலைகளை வாழ்க்கை விழுமியங்களை விமர்சன நிலைக்கு இட்டுச் செல்கின்றன. பெருவாரியான வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கும் இடமாக இணைய வெளி செயல்படுவதாலும் சொல்லுக்கும் செயலுக்கும் நடைமுறை வாழ்க்கைக்கும் இடையே இருக்கக் கூடிய  இடைவெளி புலப்படாமல் இருக்கின்ற அதன் இணையத் தன்மையினாலும் காயப்பட்ட மனம் ஒன்று மிகச் சுலபமாக வழிதவறிச் செல்லக்கூடிய வாய்ப்பினை அது கொடுத்து விடுகிறது. தேங்கி நிற்கிற தண்ணீர் அதிகமாகிற போது பலவீனமான பக்கம் ஒன்றால் அணை உடைத்துச் செல்லுதல் இயற்கையின் இயல்பு தானே?

பல மாதங்களின் முன்னர் கேரள பின்னணியைக் கொண்ட கணனிப் பொறியியல் துறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அழகிய இளம் தாய் என் மனைக்கருகில் இருக்கும் பிரதான ரயில் நிலய ரயிலின் முன் தன் 3 வயதுக் குழந்தையுடன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாள். (சிட்னியில்) அவள் தன் முகப் புத்தகத்தில் முதல் வாரம் தன் திருமணநிறைவு நாள் கொண்டாட்டப் புகைப்படங்களை தன் நண்பர்களோடு பகிர்ந்து கொண்டாள் என்றும்; மிக மகிழ்வும் திருப்தியும் சந்தோஷமும் கொண்ட பெண்ணாகவே அவர் தன்னை தன் முகப்புத்தகத்தில்  இனம் காட்டிக் கொண்டதாகவும் அவரின் நண்பர்கள் தொலைக்காட்சிச் செய்தியில் தெரிவித்தார்கள். தற்கொலைக்கான காரணம் யாருக்கும் தெரியவில்லை என்பது தான் ஒரு பெரும் சோகம்.

கடந்த வாரம் இடம் பெற்ற சுவாதியின் கொலைக்கு சமூக வலைப்பின்னலில் ஒன்றான முகப்புத்தகம் ஒரு பிரதான காரணம் என அண்மையச் செய்தி ஒன்று தெரிவிக்கிறது. கொலை செய்ததாக நம்பப் படும் நபர் சுவாதியில் பேஸ்புக் நண்பர் எனவும் அதன் மூலமாகவே சுவாதியின் நட்பு தனக்குக் கிட்டியதாகவும் அதனூடாகவே அவரைத் தான் காதலிக்க ஆரம்பித்ததாகவும் தெரிவித்ததாக அந்தச் செய்தி மேலும் தெரிவித்தது.

அடிப்படை எண்ணங்களில் இருக்கிற தீவிர நம்பிக்கைகள், தன்னைப் பற்றி ஒருவர் அறிந்திருக்கும் பிம்பத்திற்கும் உண்மையில் அவரைப் பற்றிச்  சமூகம் கொண்டிருக்கும் பார்வைக்கும்  இடையில் இருக்கிற இடைவெளி, அதனை அறிவதிலும் ஏற்றுக் கொள்வதிலும் இருக்கிற மன முரண்பாடுகள், வாழ்க்கை ஏற்படுத்தி விடுகிற தடுமாற்றங்கள், எதிர் கொள்ளும் சவால்கள் - இவற்றுக்கு பெரும் தீர்வாக அல்லது ஒரு போக்கிடமாக அமைந்து விடுகிற எண்ணிமப் பெருவெளி அது தரும் வாய்ப்புகள் சாதாரண மனிதர்களுக்கு இலகுவான விடுதலையைக் கொடுத்து விடுகிறது. ஒரு மதுக்கோப்பையில் தப்பி விடும் சூட்சுமம் தேங்கி இருப்பதை ஒத்தது அது. தப்பி ஓட இலகுவாகக் கிட்டும் ஒரு தற்காலிக தீர்வாக அவ்வெளி தன்னை வெளிப்படுத்துகிறது.

தற்காலிகங்களும் மலிவு விலைப் பிரதிகளும் அங்கு தங்கத்தை விடப் பிரகாசிக்கின்றன. தாள் காசுகள் அமைதியாக இருக்க சில்லைறைக்காசுகள் போடும் சத்தம் அதிகரித்து விட்டது. அது வசீகரமாகிப் போய் விட்டது. தீச்சுடரை மலரென நம்பி விழுந்திறக்கும் ஈசல்களை  நாளாந்தம் காண முடிகிறது. கவர்ச்சி பலவீனத்தை ஈர்த்துக் கொள்ளுகிறது. ( நண்பர்களே! இதன் நன்மைகள் பற்றி யாரேனும் பேசுங்களேன். எனக்கு அது குறித்துச் சொல்ல ஏதும் தெரியவில்லை.)

இந்த இடத்தில் தான் நம்முடய “இடத்தை” நாம் தீர்மானிக்க நிர்ப்பந்திக்கப் படுகிறோம்.

இந்த இடம் என்பது மிக முக்கியமானது. எங்கு எப்படி எவ்வாறு நாம் இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம்;  எங்கு எவ்வாறு எப்படி நாம் இருக்கிறோம் என்பதற்கிடையில் இருக்கிற இடைவெளியை நீக்குவதன் மூலம் இந்த சாத்தியத்தை நாம் எட்டலாம்.

உலகில் இரண்டு விதமான மனிதர்கள் தான் இருக்கிறார்கள். ஒரு சாரார் சந்தர்ப்பங்களின் கைதிகள்; மறு சாரார் மனச் சாட்சியின் கைதிகள். நீங்கள் எந்த வகை?

’நான்’ என்பது பலவிதமான சரி பிழைகளாலும் நன்மை தீமைகளாலும் பலம் பலவீனங்களாலும் உருவாக்கப் பட்ட ஒன்று தான். எனக்கு வரும் எந்த ஒரு நன்மை தீமைக்கும் நானே தான் காரணம் என்ற பொறுப்பை ஏற்றுக் கொண்டு மறத்தலும் மன்னித்தலும் மன்னிப்புக் கோரலும் அடுத்தவரைக் கண்ணியத்தோடு நடத்தலும் அடுத்தவரது உணர்வுகளை எந்த வகையிலும் தாக்கி விடாமல் நடந்து கொள்ளுதலும் நவீன நாகரிக உலகில் பெரிதும் வேண்டப்படும் ஒன்று. வாழ்வின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் நாம் அதனைக் கடைப்பிடித்து ஒழுகுவதன் மூலமாகவும் நம்முடய ‘இடம்’ எதுவென அறிந்து அங்கு நிலைத்திருப்பதன் மூலமாகவும் அது சாத்தியப் படலாம்.

எண்ணிம சகாப்தம் தருகிற வாய்ப்புகள் எல்லாவற்றுக்கும் நாம் அவாப்பட்டு அவற்றில் எல்லாம் உள்நுழைத்து தேவையற்ற மன உளைச்சல்களை நாம் உழைத்துக் கொள்ளாமல் நமக்கு இது தேவையா? நமக்கு இது பொருத்தமா? அதனால் விளையக்கூடிய சாதக பாதக நிலைகள் என்ன? நம்மையும் நம்மைச் சார்ந்திருப்போரையும் அது எவ்விதமாகப் பாதிக்கக் கூடும்? என்பதை முன்கூட்டியே யோசித்து இறங்க வேண்டியது அவசியம்.

அது பெரும்பாலும் நம் சிந்தனை மரபு, நம்பிக்கைகள், வாழ்க்கை முறைகள், குடும்பப் பின்னணி, உறவுகள்,பெற்றோரின் மரபணு போன்ற பல காரணங்களால் நிர்ணயிக்கப் படுகிறது. ( பெற்றோர் ஒரு பிரச்சினைக்கு எப்படித் தீர்வு கண்டார்களோ அப்படியே பிள்ளைகளும் தீர்வு கான முயற்சிப்பார்கள் என ஒரு மேலைத் தேய ஆராய்ச்சி சொல்கிறது. )அதனால் முதலில் நம் சிந்தனைப் போக்கை மீள ஒரு முறை சரி பார்த்து அது சரியான பாதையில் செல்கிறதா என்பதை  இன்னொருமுறை சரி பார்த்துக் கொள்ளுதல் அவசியம்.

அதன் தீர்மானத்திற்கேற்ப நிற்பது தான் அது எல்லாவற்றிலும் மிக அவசியம். “கற்க கசடற கற்பவை கற்ற பின் நிற்க அதற்குத் தக - அல்லவா?

அது நம் எல்லோரையும் அமைதியான திருப்தியாக நின்மதியான எல்லாவற்றுக்கும் மேலாக ஆபத்தற்ற வாழ்வின் பால் நம்மை நகர்த்திச் செல்லும் என்பது என் நம்பிக்கை.

நம் ஆழமான வேர்கள் நாம் அகலச் சிறகு விரிக்க சிறந்த வீரியத்தைத் தருவதாக!
அநியாயமாய் காவு கொள்ளப்பட்ட சுவாதிக்கு முன்னால் ஒரு பெரு சுபீட்ச வாழ்வும் மகிழ்ச்சி ஆனந்தம் பெருமிதம்.. என இவ்விதமான பல சந்தோஷப் எதிர்காலம்  இருக்கத் தக்கதாக முன் பின் தெரியாத ஒருவரை நண்பராக்கிய அவளின் சிறியதொரு காரணத்தால் வாழ்வையே தொலைத்துப் போனாளே இந்த அப்பாவிப் பெண்ணுக்கு இப்  பார்வைப்  பகிர்வு சமர்ப்பணம்.

உலகம் இன்னும் அத்தனை சுத்தமாக ஆகவில்லைக் கண்ணே!