Thursday, December 26, 2019

ஸ்ரீ காந்த லக்ஷ்மி - 25.12.2019


ஸ்ரீ காந்த லக்ஷ்மி

இவரை நான் சந்திக்க முடிந்தது இரு வருடங்களுக்கு முன்னர் தான். அதுவும் மிகவும் தற்செயலான ஒரு நிகழ்ச்சி. 

என் தம்பி முறையான ஒருவன் - கோபி - என்னைப் பல்கலைக் கழகத்துக்கு அழைத்துப் போயிருந்தான். 1995 இற்குப் பின்னர் நான் கண்ட பல்கலைக் கழகம் அது! 

அப்போதெல்லாம் வெளிச்சமும் வெளியுமாக இருந்த இடமெல்லாம் இப்போது இருளையும் நிழலையும் கொண்டிருந்தது.

அந்தக் காலங்களில் எனக்கு மிகவும் பிடித்தமாய் போயிருந்ததும் அதிக நேரத்தைச் செலவளித்ததுமான நூலகத்தை பார்க்காமல் வர முடியுமா? அங்கே போன போது தான் ஸ்ரீ அக்கா அங்கு நூலகராக இருப்பதை அறிய முடிந்தது. 

படித்த காலத்தில் அவரை நான் கண்டதுண்டு. - அப்போது அவர் உதவி நூலகராகக் கடமையாற்றி இருந்தார். அவரோடு நேரடியாக எனக்குப் பழக்கமோ தொடர்போ இல்லாது போயினும்; போகும் போதும் வரும் போதும் முன்னால் அமைந்திருந்த சிறு சிறு பெட்டிக்குள் அப்படி என்ன தான் தேடுகிறார் என்ற கேள்வி எனக்கு எப்போதும் இருக்கும்.

கூடவே, அவர் கம்பீரமாக அணிந்து வரும் பருத்திச் சேலைகளிலும் கொஞ்சம் கவனம் சென்று திரும்பும்! அத்தனை நேர்த்தியோடும் தனித்துவத்தோடும் அதை அவர் அணிந்திருப்பார். நகைகள் அதிகம் இல்லாத; கடும் நிறங்கள் எதையும் கொண்டிராத; அந்தப் பருத்திச் சேலைகள், அவருக்கு மிகுந்த கம்பீரத்தைக் கொடுப்பதாகவும்; தனித்துவம் மிளிர்வதாகவும் அப்போதெல்லாம் தோன்றும். அதுவே அவரை தனியாக நினைவில் வைத்திருக்கவும் இப்போது உதவியது.

பல்கலைக்கழக நூலகம் நிறைய மாற்றங்களைக் கொண்டிருந்தது. நாம் அங்கிருந்த போது ஒரு தளத்தில் மட்டுமாக இருந்த நூலகம் இப்போது பெருத்திருந்தது. உள்ளக அமைப்புகளிலும் நிறைய மாற்றங்கள். பாதுகாப்புகள்...தெரிந்த முகங்கள் என்று எதுவும் இல்லை. 

சரி வந்தது தான் வந்தேன். நூலகரையும் பார்த்துப் போகலாமே என அவரது அறைக்குச் சென்றேன். கம்பீர லக்ஷ்மியாக அவர் அதே தோற்றத்தோடு அமர்ந்திருந்தார். அவரது தோற்றத்தை விட அந்த அறை இன்னும் வசீகரமாக இருந்தது. அவருக்கு முன்னால் இருந்த நீண்ட மேசைக்கு முன்னால் ஒரு சுவர் நிறைந்த கண்ணாடி அலுமாரி. அதற்குள்ளே பாரம்பரியமானதும் இப்போது வழக்கொழிந்து போய் விட்டதுமான பொருட்கள் நெருக்கடி இல்லாமல் வசதியாக உட்கார்த்தி வைக்கப் பட்டிருந்தன. அவருக்கருகே வலது புறமாக ஒரு கருங்காலி மேசை. நிறைந்த கலை வேலைப்பாடுகளுடன் அமைந்திருந்த அது, சேர். பொன் இராமநாதன் பாவித்ததாம். என் கண் போன போக்கை பார்த்து விட்டு, அவர் உடனே அதைச் சொன்னார். 

பெற்றோலில் நெருப்பு பத்தி விடுவதைப் போல நாங்கள் பத்திக் கொண்டோம்.

வரலாற்றில் ஆர்வம் கொண்டிருந்த எனக்கு அவரிடம் இருந்த வழக்கொழிந்து போன பாரம்பரிய பொருட்கள் மீது அவர் கொண்டிருந்த அக்கறை என்னைச் சிலிர்க்கச் செய்தது. தன்னுடய திட்டங்கள் ; தன்னுடய ஆசைகள்; தன்னுடய எதிர்கால இலட்சியங்கள்; - அவற்றுக்கு போதாமையோடு இருக்கும் ஆர்வமற்றோர் அல்லது அது குறித்த விழிப்புணர்வோ தேடலோ இல்லாதோர் - தன்னிடம் இருக்கிற சேகரிப்புகள் - அவற்றுக்கு செய்யப்பட வேண்டி இருக்கும் பெரும் பணி - இவைகளைப் பற்றி எல்லாம் பேசப்பேச என் ஆதர்ச கனவு அவர் வாய் மூலம் வெளிவருவதாகவே எனக்குத் தோன்றியது.

இத்தனையும் பேசிய பிறகு பின் புறம் திரும்பி தான் வெளியிட்ட ஒரு புத்தகத்தையும் தந்து என்னை வழியனுப்பி வைத்தார்.

அன்று இரவு விருந்தினர் போக்கு வரவுகள் எல்லாம் இருந்த போதும் இந்தப் புத்தகத்தைப் படிக்கும் ஆசை எப்போது தனிமை கிட்டும் என்று எண்ண வைத்தது. ஒருபடியாக எல்லோரும் போன பிறகு, நடு இரவில் இருந்து பார்க்க ஆரம்பித்து  ஓரளவு மேலால் வாசித்துப் முடித்து, காலை 7.30 மணிக்கு என் மற்றய தம்பி மகிரன் வேலைக்குப் புறப்படும் போது ( அவர் பல்கலைக் கழக நூலகத்தில் தான் வேலை செய்கிறார்.) என்னை ஒரு தடவை பல்கலைக்கழக நூலகத்தில் இறக்கி விடக் கேட்டேன். 

இந்தப் பெண்மணியை நேரே மீண்டும் கண்டு, இந்த இலட்சியக் கனவுகள் குறித்து பேச கொண்டிருந்த ஆசை அது! ஒரு காதலன் காதலியைக் காணக் கொண்டிருக்கும் ஆவலுக்கு சற்றும் குறைந்ததல்ல அந்த ஆசை!

’ஓமக்கா வாங்கோ’ என்றவன், காங்கேசந்துறை வீதியைத் தாண்டி இணுவில் பக்கமாக விரைந்தான். ’எங்கேயடா போகிறாய்’ என்றேன். ‘உங்களுக்கு இன்னொரு இடம் காட்டுகிறேன்; பிறகு உங்களை நூலகம் அழைத்துச் செல்கிறேன்’ என்றான்.

அவன் என்னை இறக்கிய இடம் ஸ்ரீ அக்காவின் மாடி வீடு. இறங்கிய நேரம் அவர் வேலைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். இப்போது இதை எழுதினால் உங்களுக்கு நம்பமுடியுமோ என்னவோ! வீடு முழுக்க கால்வைக்க இடமில்லாமல் அவர் சமூகத்துக்குத் சேர்த்து வைத்த சொத்துக்கள்!! ஓரமாக ஒரு அறையும் குசினியும் மட்டும் தமக்கென!

நான் அப்படி ஒரு ஆச்சரியத்தை அதற்கு முன் - ஓரளவு வாழ்க்கையைப் புரிந்துகொண்டதன் பின்பான - என் வாழ்நாளில் அடைந்ததில்லை; பூரிப்பும் பூரண மகிழ்ச்சியும் மனநிறைவும் கொண்ட அந்த தருணம் கொண்ட அந்நாள் 
( 16.10.2017) என் வாழ்நாளில் மறக்கவொண்ணாதது!


அவர் வீட்டில் பார்த்த பொருட்கள் மீதான அதீத ஆசையினாலும்; அவர் சொன்ன இவ்வாறான பொருட்களை இப்போதெல்லாம் உருக்கு பட்டறைகளில் உருக்குவதற்கு முன் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும்; தென்பகுதி வியாபாரிகள் அறா விலைக்கு இவைகளை வாங்கிக் கொண்டு போகிறார்கள் என்றும்; எங்கு இவைகளைத் தேடி வாங்கலாம் என்று விபரங்களும் சொல்ல, நானும் அடுத்து வந்த ஓரு நாளில் ஆர்வக் கோளாறினால் அந்த உருக்கு பட்டறைகளுக்குச் சென்று, பழய பொருட்கள் எல்லாம் கிண்டிக் கிளறி, சில பொருட்களை - என் அதீத அவா தெரிந்தே அறாவிலை சொல்லியும் கேளாமல் - அவைகளை கொள்வனவு செய்ததோடு மட்டுமல்லாமல், அவைகளை பொலிஷ் செய்யும் இடத்தில் கொடுத்து அதனை புதிது போலாக்கி ( இங்கு குடிவரவதிகாரிகள் விடவேண்டுமே) அந்த மகிழ்ச்சியை அவரோடு மிக்க குதூகலத்தோடும் ஒரு வித பெருமை கலந்த மகிழ்ச்சியோடும்  சொல்ல, அவர் சொன்ன ஒரு வசனம் எனக்கு இப்போதும் நன்றாக நினைவிருக்கிறது. 

‘யசோ, பழைய பொருட்கள் பழசா இருக்கேக்க தான் அதுக்கு மதிப்பு; புதுசாக்கிறதில இல்ல:’

எத்தனை பெரிய உண்மை அது! அவர் அதனால் அதன் பழசு ஆகிய மெருகு கெடாமல் அதன் அத்தனை தார்ப்பரியங்களோடும் அவைகளைப் பாதுகாத்தார்! அதில் தெரிந்தது அவரின் மரபு குறித்ததான உண்மையான கரிசனம்!

அந்தப் பொருட்கள் மாத்திரமல்ல அந்த பெண்மணியும் சமூகத்தின் சொத்து தான்! அவர் தன் வாழ்நாள் முழுவதும் தமிழ் சமூகத்துக்கான எதிர்காலச் சொத்தினைச் சேர்ப்பதில் தன் முழு வாழ்நாளையும் தன் முழுப்பணத்தையும் செலவு செய்திருந்தார்.

சமூகம் அதனைக் கண்டு கொள்ளவில்லை.

என் தம்பிக்கு என் பைத்தியமும் அவவின் பைத்தியமும் பற்றி நன்கு தெரிந்திருந்த படியால் அவன், ’இனி அவவும் வேலைக்கு வர மாட்டா; நீங்களும் இனி நூலகத்துக்கு வர மாட்டீங்கள்; இரண்டு பேருமா இருந்து கதையுங்கோ; வரேக்க வந்து கூட்டிப் போகிறேன் எனக்கு நேரமாயிட்டுது வேலைக்கு’ என்று சொல்லி விட்டு, அவன் போய் விட்டான்.

இருந்து கதைத்தோம்; எங்கள் கனவுகள்; எதிர்பார்ப்புகள்; போதாமைகள்; சிக்கல்கள்; செய்யவேண்டியன; செய்யக் கூடியன ...எல்லாம் பேசினோம்; நிறைய திட்டங்கள் தீட்டினோம்.

இருவருக்குமே நிறையக் கனவுகளும் அவற்றை வென்றெடுப்பதற்கான சாத்தியங்களும் இருந்தன.

இன்று அவர் மாரடைப்பால் காலமானார்!

விடைபெற்றுச் சென்ற போது அவருக்கு வயது 58. போகிற வயதா இது?

தன் சமூகத்தை; அதன் எதிர்காலத்தை  கனவு கண்ட அந்த முகத்தைக் 
கடசி முறையாகவேனும் காணவேணும்!

அது என்னுடய கனவுக்குமான இறுதி ஊர்வலம் ஸ்ரீ அக்கா!

Monday, December 16, 2019

'உயர்திணை'யின் அவுஸ்திரேலியக் கவிஞர்களுக்கான அழைப்பு



அன்புடையீர்,

அவுஸ்திரேலியாவில் பல காத்திரமான கவிஞர்கள் இருக்கிறார்கள். சிலர் ஆசு கவிகள்! நினைத்தவுடனே கவி படைக்க வல்லோர். மேலும் சிலர் மரபுக் கவிஞர். வரம்புக்குள் நின்று வசீகரமாகக் கவிதர வல்லோர்! மேலும் சிலர் வீச்சு வாள் போலும் வார்த்தைகளை சுழல விட்டு சொற்போர் செய்ய வல்லார்! இவைகள் எல்லாம் கைக்கொள்ள வல்லாரும் நம்முள்ளே உளர்.
எனினும் அவர்களை ஒருங்கிணைத்து கவி இன்பம் பெற வாய்ப்புகள் நமக்குள்ளே அதிகம் இல்லை. வாழ்க்கையும் வேலையும் போட்டி போடும் உலகில் சுந்தரத்தமிழில் சிந்துக் கவி இயற்றவும் அதனை இயக்கவும் ஓர் உந்து சக்தி தேவையாகவே இருக்கிறது. ஏனைய கலைவெளிகளுக்கு வேண்டப்படுவது போலவே!

தவிரவும், அவுஸ்திரேலியச் சமூகம் நோக்கியதான கவிஞர்களின் சிந்தனைகளும் அவர்களின் கவிதா விசாலங்களும் கூட பெருமளவு ஆவணப்படுத்தப்படவில்லை என்றே தோன்றுகிறது.

அதன் காரணமாக, வருகிற 2020 புதுவருடத்திலிருந்து உயர்திணையின் செயல்பாடுகளின் ஒரு முன்னோட்டமாக அவுஸ்திரேலியத் தமிழ் கவிஞர்களை ஒன்றிணைத்து மாதம் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் கவிதைகளைக் கோருவதெனவும்; அவைகள் யாவும் வந்து சேர்ந்த காலக் கிரமத்தின் படி அடுத்த மாத ஆரம்பத்தில் திகதிவாரியாக உயர்திணை வலைப்பக்கத்தில் பிரசுரிப்பதெனவும் உயர்திணை நிர்வாகம் முடிவெடுத்திருக்கிறது.

அதன் ஒரு முன்னூட்டமாகக் கடந்த மாதத்திற்கான தலைப்பாக, அவுஸ்திரேலியாவில் கடந்த வாரம் முழுக்க பெரும் தாக்கத்தைச் செலுத்திய; செலுத்திக்கொண்டிருக்கும் ”காட்டுத் தீ” என்ற தலைப்பு தெரிவு செய்யப் பட்டிருந்தது.

இம்மாதம் “அகதிப்படகு” என் ற தலைப்பு கவிதைக்குரிய கருப்பொருளாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறது. அவுஸ்திரேலியாவில் மாத்திரமன்றி உலகம் முழுவதிலும் பேசப்படும் ஒரு பிரச்சினைப் பொருளாக இவ் விடயம் ஆகியிருக்கிற பின்னணியில் கவிஞர்களாகிய உங்கள் எண்ணங்களும் சிந்தனைகளும் கவிதா பதிவுகளும் எவ்வாறு இருக்கிறதென்பதை அறிய ஆவலோடிருக்கிறோம்.

அவுஸ்திரேலியக் கவிஞர்களுக்கு மாத்திரமான இத்தலைப்புக்குரிய கவிதைகள் யாவும் இம்மாத இறுதி 31.12.19 இக்கிடையில் uyarthinai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் கவிதைகளை எழுதி அனுப்புமாறு கோருகிறோம்.

அனுப்பப்படும் சகல கவிதைகளும் அடுத்த மாத முதல் வாரத்திற்குள் வந்துசேர்ந்த திகதிவாரியாக https://uyarthinai.wordpress.com/ என்ற இணையப்பக்கத்தில் பிரசுரமாகும்.

எதிர்காலத்தில் சிறப்பானதாகவும், சமூகம் சார்ந்த விடயங்களைக் கொண்டதாகவும் விளங்கும் கவிதைகள் தக்க நடுவர்களால் தெரிவுசெய்யப்பட்டு, அக்கவிதைகளுக்கான கவிஞர்களின் அனுமதியோடும் அவர்களது பெயர்களோடும் உயர்திணை வெளியீடாக புத்தகமாக வெளிக்கொணரும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

Sunday, December 15, 2019

பரிபாடலில் வைகை வெள்ளம்...

இந்த வைகை ஆறு குறித்து எழுதுவது மிகவும் தற்செயலானது. பிள்ளையார் பிடிக்க குரங்கான கதைபோலானதும்...

அண்மைக்காலமாக இந்த தமிழருடய அறம் குறித்த சிந்தனைகள் மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன. அவை குறித்த தேடலின் போது பரிபாடல் அகப்பட்டது. அதனைப் படித்துக் கொண்டு போகையில் அதில் விபரிக்கப்பட்டிருந்த இருந்த பெண்கள் மனதைக் கவர்ந்தபடியாக இருந்தார்கள். அவர்கள் குறித்துத் தனியாக முடிந்த போது பார்க்கவும் எழுதவும் வேண்டும்.

அது அவ்வாறு இருக்க,

இது வைகை ஆறு குறித்தது.



வைகைக்கரைக் காற்றே நில்லு! வஞ்சிதனைப் பார்த்தச் சொல்லு...
தென்மதுரை வைகைநதி தினம் பாடும் தமிழ் பாட்டு....
வைகைநதி பெருகி வர வண்ணமலர் ஊர்ந்து வர.....

என்றெல்லாம் சினிமாப்பாடல் சொல்லும் அதே வைகை தான் இன்றய பதிவின் கதாபாத்திரம்!

பரிபாடலில் புரண்டு வரும் நதி இது...

‘ நிறைகடல் முகந்துராய் நிறைந்துநீர் துளும்புந்தம்
பொறைதவிர் பசைவிடப் பொழிந்தன்று வானம்
நிலமறைவது போல் மலிர்புனல் தலைத்தலைஇ
மலைய இனங்கலங்க மலைய மயிலகவ
மலைமாசுகழிய கதழும் அரவி யிழியும்
மலிநீர் அதர்பல கெழுவு தாழ்வரை
மாசில் பனுவற் புலவர் புகழ்புல
நாவிற் புனைந்த நன்கவிதை மாராமை
மேவிப்பரந்து விரைந்து வினைநந்தத்
தாயிற்றே தண்ணம் புனல்’

என்னவாமெனில்,

கடல் நீரை முகர்ந்து கொண்ட மேகங்கள் தங்களுடய நீரின் பாரத்தை தாங்க முடியாமல் இளைப்பாற நினைத்ததைப் போல பெரும் மழையைப் பொழிந்தன. ( கவனியுங்கள்; சங்க காலத்தில் மழை எப்படி பொழிகிறது என்பதைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். பின்நாளில் ஆண்டாளும் அதைக் தன் அழகு தமிழில் சொல்லுவாள் )

மழை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. மலைவாழ் உயிரினங்கள் கலங்க; மயில்களோ களிப்பால் அகவுகின்றன. மலைப்பகுதிகளில் வீழ்ந்த மழைநீர் வருகிற வீச்சினால் மலைகளில் உள்ள  தூசிகளை நீக்கிக் கழுவிக்கொண்டே கீழிறங்குகின்றது. இப்போது வெள்ளம் அடிவாரத்தில் பெருகி ஓடுகிறது.

அது எப்படி இருக்கிறதென்றால் குற்றமற்ற நூலறிவு கொண்டவர்கள்  புலவர்கள். அவர்கள்  நா அறிவுரைகளைக் கூறும். அவர்கள் அழகிய நல்ல கவிதைகளைப் புனைவார்கள். அவை ஒருபோதும் பொய்யாகிப் போவதில்லை. அறிவுச் செல்வத்தின் வீரியம், அழகு எல்லா இடத்தும் பரவும். அதனால் பல நன்மைகள் விளையும்.

அது போல வைகைவெள்ளம் பெருகி வருகிறதாம்!

சரி, மலையிலிருந்து எல்லாவற்றையும் கழுவித் துடைத்துக் கொண்டு கீழே வந்து விட்டது வெள்ளம்.வைகை வெள்ளம். அதன் குணாம்சம் எப்படி இருக்கிறது?

”நளியிருஞ் சோலை....” என்ற பாடல் அதை இப்படிக் குறிக்கிறது.

நரந்தம் புற்களில் மேலாக; வேங்கைமரத்தின் உதிரல்களை எல்லாம் கூட்டிக் கொண்டு மலைகளில் இருந்து இறங்கும் போது முறித்தெடுத்துக் கொண்டு வந்த மரக்கிளைகளையும் தன்னோடு எடுத்துக் கொண்டு, உயரமான இடத்தில் இருந்தவற்றை எல்லாம் எடுத்து பள்ளமான இடங்களை நிரப்பிய படியுமாக அது வந்து கொண்டிருக்கிறது. கரைபுரண்டு வருகிறது வைகை.

அதனால் உழவர்களுக்கு மகிழ்ச்சி.அதனால் முழவுகளையும் பறைகளையும் ஒலிக்கிறார்கள்.

இந்தக் காட்சிக் கோலம் எப்படி இருக்கிறதென்றால்,

ஆடல்கலையை முறைப்பட தெரியாத ஒருத்தி தாறுமாறாக ஆடி வருவதைப் போலவும்; ஊடல் என்றால் என்ன என்று தெரியாத ஒருத்தி சந்தோஷப்படாமல் செருக்கோடு போவதைப் போலவும்; புது வெள்ளம் ஒரு வித செருக்கோடு போகிறதாம். அது தனக்கு பிடித்த வழியில் போகிறது. அது தடைகளை ஒரு பொருட்டாக மதிக்காத படி போகிறது. விதிமுறைகளுக்கு ஆட்படாத ( விதிமுறைகளைத் தெரியாத)  ஒருவன் தான் விரும்பியபடி உடலுக்கு பூசும் கலவைச் சாந்தினை ( பவுடர்) தயாரித்து பூசிக்கொண்டிருப்பதைப் போல ஒரு வித புது மணத்தோடு சிவந்த அழகிய வைகை நதி ஓடுகிறது.

என்ன அருமையான கற்பனை இல்லையா?

Saturday, December 7, 2019

அறிவுக்கு வழிகாட்டுதல் பற்றி....


அறிவு என்றவுடன் இரண்டு பேர் நினைவுக்கு வருகிறார்கள்.

ஒருவர் தமிழர்; வள்ளுவர். ’மெய்பொருளைக் காண்பது தான் அறிவு’ என்றவர். கீழைத்தேய தமிழ் சிந்தனை மரபின் முதல் பிரதிநிதியென அவரை நாம் அழைக்கலாம்.

மற்றவர் சோக்கிரட்டீஸ். கிரேக்கச் சிந்தனை திறனின் ஊற்றுக்கண். ‘எதையும் ஏன் எதற்கு எப்படி என்று கேள்’ என்று சொல்லித் தந்த மேற்கத்திய ஞானி.

இருவரும் இரு வேறு நாடுகளில் இருந்து இருவேறு பண்பாட்டு சிந்தனைப்புலத்தின் வழி சிந்தித்த தத்துவப் பிரதிநிதிகள்.

இதனை எழுதும் இந்தத் தருணத்தில் யாழ் பல்கலைக்கழகத்தின் அடையாளச் சின்னம் நினைவுக்கு வருகிறது. 64 கலைகளையும் பிரதிதிநித்துவப்படுத்தும் 64 அடையாளங்கள் வட்டமாய் சுற்றி இருக்க மேலே ‘மெய்பொருள் காண்பது அறிவு’ என்ற வாசகமும் கீழே யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் என்ற வாசகமும் அதில் பொறிக்கப்பட்டிருந்த ஞாபகம்...

அண்மையில் கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களின் பிரசங்கம் ஒன்றைக் கேட்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. ( எங்கே என்பது மறந்து போயிற்று.) அதில் அறிவு குறித்து ஒரு எளிய விளக்கத்தைத் தந்திருந்தார். நீர் இறைக்கும் இயந்திரத்தினை இயக்குவதற்கு முன்னர் கிணற்றுக்குள் இருந்து ஒரு குளாய் இயந்திரத்தோடு இணைக்கப்படும். அது போல இயந்திரத்தின் மறு வாயிலில் இருந்து இணைக்கப்படும் குளாய் நீரினை வெளியேற்றும்.

இவ்வாறான ஓர் அடிப்படை அமைப்போடு இருக்கும் இயந்திரத்தில் கிணற்றுக்குள் இருந்து வரும் குளாயை இணைக்கு முன்னர் கிணற்றில் இருந்து நீரை அள்ளி அந்தக் குளாயினுள் நீரை விட வேண்டியது அவசியம். அது நிறைந்ததன் பின்னர் அதனை இயந்திரத்தோடு இணைத்து தேவையான அளவு எரிபொருளைச் சேர்த்து இயந்திரத்தை இயக்கினால் முதலில் குளாய்க்குள் விட்ட நீர் ‘பொக்’ என்று முதலில் தள்ளும். பின்னர் இயந்திரம் கிணற்று நீரை வாரி வழங்க ஆரம்பிக்கும்.

கல்வி முறையும் கற்பித்தலும் கூட அவ்வாறு தான் இருக்க வேண்டும். ஆசிரியர்களோ வழிகாட்டிகளோ பெற்றோரோ ’குளாய்க்குள் விடும் நீரைப்போல’ இருக்க வேண்டும் என்றார்.

எத்தனை அழகான ஒரு எளிய விளக்கம் இல்லையா?

அது தாகமுள்ள ஒருவரை நன்நீர் நிலைக்கு கொண்டு சென்று விடுதல் மாதிரி.... இங்கே இதனைப் பெறலாம் என்று சொல்லும் ஒரு வழிகாட்டி. பெற்றோர், ஆசிரியர், பாதுகாவலர், பாடசாலை, கல்லூரி எல்லாவற்றின் பணியும் கடமையும் அதுவே.அதுவாகவே இருக்க வேண்டும் என்பது என் ஆசையும்.

தற்காலங்களில் நாம் பரீட்சைக்குத் தயார் படுத்தும் வாழ்வியலை மாணவர்களுக்குப் புகுத்துகிறோமே தவிர, தம் சொந்த வாழ்க்கைக்கும் சமூகத்துக்கும் தயார்படுத்தும் விதமான கற்பித்தலை மாணவர்களுக்கு வழங்குகிறோமா என்று தெரியவில்லை.

பரிபாடலில் ஒரு பாடல் வரும். வடபுலத்தாரின் சிந்தனைகளும் தென்புலத்தாரின் சிந்தனைகளும் ஒன்றுகலந்து விளங்கப்பெற்ற காலம் பரிபாடற்காலம். சங்ககாலத்தின் பிற்பகுதிக்குரியதும். அப்பாடல்களை முழுவதுமாகப்படிக்கும் போது அதில் இரண்டு பண்பாட்டுச் சிந்தனை மரபுகளும் சேருதலையும் ஒன்றுகலத்தலையும் சீர்தூக்கிப் பார்த்தலையும் தெளிவாகக் காணலாம்.

இந்தப்பாடல் (9) அந்த வகை சார்ந்த ஒன்றுதான். இரண்டுவிதமான காதல் நிலைகளை அது ஒப்பிட்டு தென்னகத்துக்குரிய தொல் காதலே சிறந்தது என்று கூறுகிறது. அந்தப் பாடல் இப்படியாகத் தொடரும்.

‘நான்மறை விரித்து நல்லிசை விளங்கும்
வாய்மொழிப் புலவீர்யீ! கேண்மின்சிறந்தது;
காதற்காமம் காமத்துச் சிறந்தது;
விருப்போர் ஒத்தது மெய்யுறு புணர்ச்சி;
புலத்தலில் சிறந்தது கற்பே; அதுதான்
இரத்தலும் ஈதலும் இவையுள் ளீடாப்;
..........’

அதாவது, காதலித்துத் திருமணம் செய்யும் அன்பும் காதலும் காமமுமே காம இன்பத்துக்குள் சிறந்தது; கற்புக்காமம் என்பது தலைவன் பரத்தையிடம் போய் வருவதன் காரணமான  ஊடலினால் பெறப்படுகிற இன்பத்தின் பாற்பட்டது. அது அத்தனை உயர்வுடையதல்ல என்று விளக்குகிறது அப்பாடல்.

அறிவு என்பதற்கும் அதனை ஒப்பிட்டு பார்க்கலாம். மனதிற்கு பிடித்த ஒன்றைச் செய்வதற்கும் ‘விதிக்கப்பட்டு விட்ட ஒன்று’ என்பதற்காக ஒன்றைச் செய்வதற்குமான வேறு பாடு அது!

விருப்பமான ஒன்றைக் கற்பதற்கும்; இதனால் எனக்கு நல்ல வருவாய் வரும் என்று ஒன்றை தெரிவு செய்வதற்கும் இடையில் உள்ள வேறுபாடு போலாதானதாக அதைக் கொள்ளினும் தவறில்லை.

உயர்புள்ளி, உயர்பதவி, நல்ல பணவருவாய், வசதி வாய்ப்புகள், சமூக அந்தஸ்து - இவைகளை ஈட்டித்தரும் கல்வி - மாணவர்களின் மகிழ்ச்சியை - வாழ்வை அனுபவித்தலை - வாழ்க்கையைக் கொண்டாடுதலை - வாழுதலை - இரண்டாம் பட்சத்துக்குத் தள்ளி விடுகிறது. பணம் மட்டுமே மகிழ்ச்சியைத் தரும் என்ற தவறான புரிதலை அது வழங்குகிறது. பணம் வசதியை மட்டுமே வழங்கும் என்பதும் மகிழ்ச்சி என்பது ஆத்மாவுக்குப்  பிடித்தமான ஒன்றைச் செய்யும் போது உள்ளிருந்து ஊற்றெடுக்கும் ஒரு வஸ்து என்பதையும் நாம் கருத்தில் கொள்வதில்லை.

கூடவே ஒவ்வொரு குழந்தையும் தனக்குரிய தனித்துவம், குணஇயல்புகள், திறமைகள், ஆசைகள், அபிலாஷைகள், விருப்பங்கள், நோக்கங்கள் ஆகியனவோடு பிறக்கின்றன என்பதையும்; அவைகள் என்ன என்பதையும் கண்டறிய நாம் நேரம் ஒதுக்குவதில்லை. அவர்களின் தனித்துவம் என்ன என்பதே தெரியாத பெற்றோரும் நம் மத்தியில் இல்லாமல் இல்லை.

வீட்டில் குழந்தைக் காப்பகம் ஒன்றை நடாத்தி வரும் என் மரியாதைக்குரிய மாது ஒருவருடனான சாதாரண ஓர் உரையாடலின் போது ஒரு விடயத்தைக் குறிப்பிட்டார். மாலையில் பிள்ளைகளைப் பொறுபேற்க வரும் பெற்றோரில் ஆங்கிலேயப் பெற்றோர்கள் ‘என்பிள்ளை இன்று மகிழ்ச்சியாக இருந்தானா’ என்று தவிப்போடு கேட்பார்களாம். தமிழ் பெற்றோரோ எனில்’ என் பிள்ளை இன்று உணவு சரியாகச் சாப்பிட்டானா’ என்று கேட்பார்களாம்.

இது போதும் நம் சிந்தனையின் மாறுபாட்டை - எது நம் வாழ்க்கைக்கு தேவை என எதை நாம் நினைக்கிறோம் என்பதை - எடுத்துச் சொல்ல....

 லெபனான் நாட்டுக் கவிஞன் கலில் ஜிப்ரான் அதனைத்தான் ’பெற்றோர்களே! உங்கள் குழந்தைகள் உண்மையில் உங்கள் குழந்தைகள் அல்லர்; அவர்கள் உங்களால் வரவில்லை; மாறாக உங்கள் வழியாக வருகிறார்கள்’ என்றார்.

உலகின் எந்த மூலையில் எந்தப்பண்பாட்டில் எந்தக் காலப்பகுதியில் இருந்து வந்திருந்தாலும் என்ன! அறிவென்பதற்கான வரைவிலக்கணம் ’மெய்பொருளைக் காண்’ என்பதாகத் தானே இருக்கிறது!

எது மெய்பொருள் என்பதை உணர்வதும், அந்த மெய்பொருளைக் காண்பதற்கான பாதையைக் காட்டுவதும்,  இப்போதைக்குப் போதுமானது.

முதலில் அதற்கு  நாம் அதனை அறியத் தயாராக வேண்டும்.

பெருமானே அருளாளா!

நீள நினைந்தடியேன் உனை
    நித்தலுங் கைதொழுவேன்
வாளன கண்மடவா ளவள்
    வாடி வருந்தாமே
கோளிலி எம்பெருமான் குண்டை
    யூர்ச்சில நெல்லுப் பெற்றேன்
ஆளிலை எம்பெருமான் அவை
    அட்டித் தரப்பணியே!

Tuesday, November 26, 2019

தாமரைச் செல்வியின் ‘உயிர்வாசம்’ - முன்னுரை

     
     

ஒரு புது வெளிச்சம்

காலம் செதுக்கிய சிற்பி தாமரைச் செல்வி.
வன்னி மண் கடைந்தெடுத்துத் தந்த காலத்தின் கண்ணாடி.

அவர் கடதாசிக்காலத்திலும், கணனிக்காலத்திலும் வன்னியின் வாழ்வைச் செவ்வனே செதுக்கும் கைதேர்ந்த கதைச்சிற்பி என அறியப்படுபவர். வன்னியின் போருக்கு முன் - போர் காலம் - போருக்குப் பின் - என்ற பெரு  மாற்றங்கள் நிகழ்ந்த முக்கிய காலகட்டத்தின் தவிர்க்க முடியாத இலக்கியப் பிரதிநிதி.

வயலும் வாழ்வும்; காடும் களனியும்; உழைப்பும் உறுதியும்;  தன்மானமும் அடங்காத் தன்மையும்; வன்னி மண்ணின் தனித்துவமான அழகு. அது யுத்தத்திற்கு முன்பும்; யுத்த காலத்தின் போதும்; யுத்தத்தின் பின்பும்; எவ்வாறாகத் தன்னை அடையாளப்படுத்தியதோடு தக்கவைத்தும் கொண்டிருந்தது; இருக்கிறது என்பதை இவரது படைப்புகளை மாத்திரம் பார்க்கும் ஒருவர், நேர்த்தியாகவும் தொடர்ச்சியாகவும் சலிக்காத வகையிலும் கலைத்துவத்தோடு உணர்ந்து கொள்ளலாம்.

அவை கதைப்புலங்களைக் கொண்டிருந்தாலும் ஆவணத்தன்மை கொண்ட வரலாற்றுத் தார்ப்பரியங்களை உள்ளே கொண்டுள்ளவை. அதன் வழியே தாமரைச்செல்வி ஒரு ’காலச் சிற்பி.’ காலத்தை மொழியால் செதுக்கியவர். அவைகளை வாசிப்பது என்பது இருந்த இடத்தில் இருந்த படி காலங்களைக் கடக்கும் ஒரு பயண அனுபவம்.

அதன் தொடர்ச்சியாகவும் நீட்சியாகவும் இன்று வெளிச்சத்திற்கு வருகிறது போருக்குப் பின்பான ‘படகு மனிதர்’ வாழ்வு சொல்லும் ’உயிர்வாசம்.’

இந் நாவல், ஊர்வாழ்வில் இருந்து தப்புதலும் மண்ணை இழத்தலின் வலிகளும், படகுப்பயண அனுபவங்களும் பயங்கரங்களும், புதியநாட்டின் வரவேற்புகளும் இங்குள்ள நிலைகளும் எனப் பயணித்தலின் வழி அகதி மாந்தர்களின் ஒரு புதிய வாழ்வியல் நெருக்கடிகளை பதிவு செய்கிறது. அவர்கள் வாழ்வா சாவா என்ற போராட்டத்தோடு கப்பல் ஏறிய சமான்யர். அந்த அபாயகரமான கடல் பயணத்தில் மாண்டு போனவர்கள் போக, உயிர் தப்பியவர்கள் வந்துவிட்டோம் என்று மூச்சுவாங்க முடியாமல் ‘எண்ணைக்குத் தப்பி நெருப்புக்குள் விழுந்த கதையாக’ ஆகிப்போன நிலையினை சொல்லுமிடங்கள் மிகுந்த வலி மிக்கவை; தமிழுக்குப் புதிதானவை; மேலும், ஏனைய தமிழர்கள் அனுபவிக்காதவையும் கூட.  இவர்களின் அனுபவங்கள் ஈழ/ புகலிட தமிழ் இலக்கியத்திற்குக்  கிட்டிய  புது வரவு; புது வெளிச்சம்; புதுப் பார்வை என்று துணிந்து கூறலாம்.

முன்னர் சொன்னது போல் அகதிகளாக அல்லலுறும் அப்பாவிகளின் அவலங்கள், அழகியல், ஆச்சரியங்கள், அனுபவங்களை கலைத்துவத்தோடு ஓர் இனத்தின் வாழ்க்கைக் கோலமாக வெளிக்கொணரும் இதன் நிதர்சனமான காட்சிக்கோலங்கள் தாயகத் தமிழனுக்கும் புலம்பெயர்ந்த தமிழனுக்கும் இடையே இருக்கும் காலதேச சிந்தனையின் இடைவெளியையும் நுட்பமாகப் பதிவு செய்கிறது.

உயிர்வாசம் - நானறிந்தவரை அவுஸ்திரேலியாவுக்கு வந்த படகு மனிதர்களை  மையப்படுத்தி வெளிவரும் முதல் நாவல். அந்தவகையில் இது அவுஸ்திரேலிய தமிழர் வரலாற்றின் பெரு ஆவணமுமாகும்.

 தேர்ந்த; சுமார் 46 வருடங்களுக்கு மேலான; அனுபவமுள்ள, கதை சொல்லியான; இலங்கையின் சாகித்திய விருது பெற்ற தாமரைச் செல்வி தற்போது அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகிறார். எழுத்தாளர்கள் எங்கு போனாலும் இடறும் கருக்களைச் சேகரிக்கும் ’தொல்லியல் ஆய்வாளர்களுமாவார்’. உண்மை என்னும் உளியால் மனிதாபிமானக் கல்லில் செதுக்கிய சிற்பமாக இந்த உயிர் வாசம் முகிழ, தாமரைச் செல்வி கடந்த சில வருடங்களாக அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வருவதும் ஒரு முக்கிய காரணம். அதன் விளைவாக பலதையும் பாடுகளையும் நேரே கண்ட; சொன்ன, கேட்ட, அறிந்த சம்பவங்கள், அனுபவங்கள் பல வருடங்களாகக் கருக்கொண்டு இங்கே உயிர்வாசமாக ஜனித்திருக்கிறது என்பதை அதில் வரும் மிகைப்படுத்தல்கள் இல்லாத ‘உண்மைகள்’ உணர்த்துகின்றன.

இதில் வரும் ஏதேனும் ஒரு பாத்திரம் நாம் நிச்சயம் சந்தித்த ஒருவராக இருக்கும்.

அந்த வகையில் இது ஒரு பிரதான அவுஸ்திரேலியத் தமிழர் வரலாற்றுக் காலகட்டத்துக்கும் மிக முக்கியமான கலைச் செல்வம்.

போரினால் புலம்பெயர்ந்த அவுஸ்திரேலியத் தமிழரின் இறுதி அலை 2009ம் ஆண்டுக்குப் பின் நிகழ்ந்தது. இறுதிப் போர் அவலங்கள் நிகழ்ந்ததன் பின்பான இக்காலம் இதற்கு முன்பான அவலங்களில் இருந்து வேறுபட்டதும் தனித்துவமானதுமாகும். உள்நாட்டிலும் சரி வெளிநாட்டிலும் சரி அவர்களை உலகமும் அரசுகளும் மக்களும் பார்க்கும் பார்வைகள் பல்வேறு விதங்களில் மாறுபட்ட அணுகுமுறைகளைக் கொண்டிருக்கின்றன. அவை கதை மாந்தரில் நிகழ்த்தும் செல்வாக்கினை நாவலின் அடிப்படை வாசமாக எங்கும் நுகரலாம்.

அவுஸ்திரேலியாவைப் பொறுத்தவரை கூட இது ஒரு முக்கியமான காலகட்டம். அதனை கூட நாம் மூன்றாகப் பிரித்துப் பார்க்கலாம்.

1. அவுஸ்திரேலிய மக்களின் மனநிலையில் ஏற்பட்ட மாற்றங்கள்
2. அவுஸ்திரேலியத் தமிழரின் நோக்கு நிலையில் ஏற்பட்ட மாற்றங்கள்
3. அவுஸ்திரேலிய அரசியலில் அகதிகள் பற்றிய கொள்கையில் ஏற்பட்ட மாற்றங்கள்

இவைகள் மூன்றும் ஒன்றை ஒன்று சந்திக்கிற ஒரு முக்கியமான ஜலசந்தியில் இக்கதை முகிழ்கிறது. திரள்கிறது. ஒரு புறம் அகதிகளும் மறுபுறம் அவுஸ்திரேலிய அரசும் நிகழ்த்தும் இந்த பாற்கடல் கடைதலில் வந்த அமுதமென இந் நாவல் திரண்டிருக்கிறது.

2009 க்குப் பிற்பான காலப்பகுதியில் ஈழத்தவரைப் போலவே உலகின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் அகதிகளாக அலை அலையாக அவுஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் வந்திறங்கினார்கள். அப்போது ஆட்சியில் இருந்த  தொழில்கட்சியினால் அவர்களுடய வருகையினையும் அதனால் எழுந்த உள்நாட்டு அழுத்தங்களையும் சமாளிக்க முடியவில்லை. பொதுவாக வரிசையாக நின்று சகலதிலும் சட்டத்தையும் ஒழுங்கையும் பின்பற்றும் மக்களால் இந்த அலை அலையான வருகையின் அழுத்தங்களை எதிர்கொள்ள இயலவில்லை.

 பல வருடங்களாக ஐக்கியநாடுகள் சபையூடாக தம்மைப் பதிந்து விட்டு இடைத்தங்கல் நாடுகளில் காத்திருக்கும் அகதிகள் மீண்டும் பின் தள்ளப்படுவதையும் ’வரிசையை இடித்துக்’ கொண்டு இடையில் வந்து நிற்கும் இந்த அகதிகளின் விண்ணப்பப் படிவங்கள் பரிசீலிக்கப் படுவதையும் இம் மக்களால் எற்றுக் கொள்ள முடியவில்லை.

மக்களின் அபிப்பிராயங்கள் செல்வாக்குச் செலுத்தும்  இந்த ஜனநாயக ஆட்சி நிலவும் நாட்டில் அப்போது இருந்த தொழில்கட்சியை இறக்கி  லிபரல் கட்சி தன் ஆட்சியை அமைக்கும் வகையில் இந்த அகதிகள் பிரச்சினை வலுவாக மக்கள் மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. 2013 செப்.7 இல் நடந்த தேர்தலில் இதனைக் காரணம் காட்டியே ரொனி அபேர்ட் ஆட்சிக்கு வந்தார்.

அன்றிலிருந்து இன்றுவரை பல மனித நேய அமைப்புக்கள் போர்க்கொடி உயர்த்தியும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும் வழக்குகளைப் பதிவு செய்தும் வந்தாலும் இன்றுவரை லிபரல் ஆட்சியே நிலவுகிறது என்பது ஒரு முக்கியமான செய்தியாகும்.

சுனாமியின் போது இலட்சக்கணக்கான பணத்தை அள்ளிக் கொடுத்த மக்கள்; சர்க்கஸ்சின் போது விலங்குகள் துன்புறுத்தப் படுகிறது என்ற ஒரே காரணத்துக்காக வெளிநடப்புச் செய்து சர்க்கஸ் கம்பனியை தன் சொந்த நாட்டுக்கே அனுப்பிவிடச் செய்த பள்ளிச் சிறார்களைக் கொண்ட தேசம்; தியனமென் சதுக்கத்தில் சீனப் பல்கலைக்கழக மாணவர்கள் கொலை செய்யப்பட்ட போது, இங்கு படித்துக் கொண்டிருந்த அனைத்து சீன மாணவர்களுக்கும் நிரந்தர வதிவிட உரிமையை மறுநாளே வழங்கிய அரசாங்கம்; வியற்னாமிய அகதிகள் படகு மூலம் வந்த போது கைகொடுத்து தூக்கி விட்ட அரசு இன்று படகில் வந்த அகதிகள் தொடர்பில் ஈரமின்றி இருப்பதன் பின்னணி இது தான்.

சட்ட விரோதமாக உள்ளே வந்தார்கள் என்பதும்; உயிர்பாதுகாப்பின்றி பொருளாதார சுபீட்சமே நோக்கம் என நம்பவைக்கப்பட்டதும்; அவர்களின் பராமரிப்புச் செலவுக்கு ஒதுக்கப்படும் பணம், நாட்டின் பொருளாதாரத்தில் கனிசமான தாக்கத்தைச் செலுத்தும் என்பதும்; நாட்டின் தேசியபாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் என்பதும் அதனோடு இணைந்து வந்த காரணங்களாகிப் போயின. அதனால் தான் அகதிகளுக்கு அவுஸ்திரேலியா அபயம் அளிக்க வேண்டுமா என்ற கருத்துக் கணிப்பின் போது 75%மான மக்கள் ஆம் என்றும்; படகு அகதிகளை ஏற்கவேண்டுமா என்ற கேள்விக்கு மூன்றில் ஒருவர் மட்டும் ஆம் என்றும் பதிலளித்திருந்தனர்.

இது இவ்வாறு இருக்க, அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழர்களது மனநிலை எப்படியாக இருக்கிறது என்பதும் அவதானிக்க வேண்டிய ஒன்றுதான்.

அவுஸ்திரேலியப் பெரும்பாண்மைத் தமிழர்களைப் பொறுத்தவரை இவர்கள் ஏனைய நாடுகளுக்குச் சென்ற தமிழர்களை விட சற்றே வேறுபட்டிருப்பதற்கு இரண்டு மூன்று காரணங்களைச் சொல்லலாம்.

1. சீதோஷனம் மற்றும் ஆங்கில மொழி பாவனை –இதனால் இந் நாட்டைத் தெரிவு செய்து   இங்கு வந்தவர்கள்.
2. கல்வித்தகைமை வழி வந்தவர்கள்
3.பல தசாப்தங்களுக்கு முன்பே இங்கு வந்து ‘வேரூன்றி’ கல்வி தொழில் வாய்ப்புகளோடு ‘தக்கோன் எனத் திரி’பவர்கள்.

அவர்களால் இப் படகில் வந்த சமான்ய அகதிகளைச் சமனாக நடத்த முடியவில்லை என்பது பொதுவாக முன்வைக்கப்படும் குற்றச் சாட்டு. இருந்தாலும் மனித நேய அமைப்புகள் வழியாகவும் தனிப்பட்ட வழியிலும் பல தமிழர்கள் தம்மால் முடிந்ததை செய்தே வருகிறார்கள் என்பதை இந் நாவல் வழியாகவும் அறியலாம்.

இலங்கையர் என்ற எளிய வாழ்க்கைக்குச் சொந்தக்காரர்களான புதிதாக வந்தவர்கள் கனவுகளோடும் கற்பனைகளோடும் எதிர்பார்ப்புகளோடும் வந்து எவ்வாறாக இப்பெரு
தேசத்தின் மக்களதும், இங்குள்ள தமிழர்களதும், சட்டங்களதும், மனோபாவங்களோடு ‘உலகை’ எதிர்கொள்கிறார்கள் என்பதை ’இலங்கையர்’ மனநிலை வழி நின்று முன்வைக்கிறது நாவல்.

அந்த வகையில் இது ஈழத்துக்குரிய நாவலுமாகும்.

ஆகையால், ’இரட்டைக்குழந்தையாக’ ஈன்றெடுக்கப்பட்டு இன்று உங்கள் கையில் தவழும் இந் நாவல் ஒரு வரலாற்றுக் கனம் மிக்க வாழ்வைத் தாங்கி நிற்கிறது.

இந் நாவலை ஆறுதலாக வாசியுங்கள், ரசித்து, நின்று, நிதானித்து, உள்வாங்கி வாசியுங்கள்; நேரங்களை தெரிந்தெடுத்து வாசியுங்கள். வாசித்தவை கிரகிக்கப்பட கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். இது வரை  நாம் அறிந்திராத படகு வாழ்வும் முகாம் வாழ்வுமான வாழ்க்கைக் கோலங்கள் பல இங்கே பொதித்து வைக்கப்பட்டுள்ளன.  அவைகளை உள்வாங்குங்கள். ‘வாசனைகளை’ நுகருங்கள். அந்தக் கதை மாந்தர்களோடு நீங்களும் பயணியுங்கள்.

ஒரு விடயத்தை நாங்கள் எப்படிப் பார்க்கிறோம் என்பது; எங்கள் எண்ணங்களில்; தீர்மானங்களில்; முடிவுகளில்; செயல்பாடுகளில் எத்தகைய மாற்றங்களையும் வலிமையையும் செல்வாக்கையும் செலுத்தும் என்பதும்: எதிர்காலத்தைப் புரட்டிப் போடும் ஒன்றாக ’அந்தப் பார்வை’ எத்தகைய வீரியத்தைக் கொண்டிருக்கும் என்பதும் உணரப்பட்டால்,
இந் நாவலை  வாசித்து முடிக்கும் போது, நீங்கள் வேறொரு எண்ணமும் சிந்தனையும் பார்வையும் கொண்ட மனிதராக வெளியே வருவீர்கள் என்பதை நான் உறுதிபடக் கூறுவேன்.

மண்ணும் கடலும் வானும் வெளியும் கொண்ட ஒரு பெரும்பரப்பை உள்ளடக்கி, ஒரு காலகட்டத்து அகதித் தமிழனின் உண்மை வாழ்வைச் சுமந்து நிற்கும் ஒரு காலத்தின் பிரசவம் இந்த நாவல். அதே நேரம் மொழிவீச்சுகளுக்குள்ளும் சொல்லடுக்குகளுக்குள்ளும் மறைந்து போகாத எளிமை மிக்கதும் ஆகும். அது உங்களுக்குச் சுட்டிக் காட்ட இருக்கும் ’வெளிச்சப்புள்ளி’ தெளிவானது; வலுவானது; பிரகாசம் மிக்கது. பார்வையையும் பாதையையும் சீர் செய்யும் ஆற்றல் மிக்கது. அதுவே இந் நாவலின் பெரு வெற்றியுமாகும். அந்த வகையில் இதன் சமூகப்பணி மகத்தானது.

இனி நான் உங்களுக்கிடையே ஒரு ’கடவுச் சொல்லாக’ நிற்கவில்லை. எத்தனையோ இலக்கிய ஜம்பவான்கள் இருக்கிற இந்த தமிழ் இலக்கிய உலகில், ஓர் இலக்கியப் பிரியை என்ற ஒரு சிறு தகுதிப்பாடு தவிர்ந்த, வேறெந்த ஆற்றலும் இல்லாத என்னை, தன் நாவலுக்கான அபிப்பிராயத்தைத் தரும் படி கேட்டு, ஒரு சாதாரண ரசிகையை பெருமைப்படுத்திய தாமரைச் செல்விக்கு ஆத்மார்த்தமான என் வணக்கங்களையும் நன்றிகளையும் சமர்ப்பிக்கிறேன்.

இந்தக் ’காலச் சிற்பியின்’ நேர்மையான எழுத்து காலத்தைக் கடந்தும் வரலாற்றைப் பேசும்; வரலாறும் பேசும்.

உயிர்வாசம் உங்கள் முன்னே விரிந்து மணம் பரப்புகிறது;

நுகர்க!


யசோதா.பத்மநாதன். – சிட்னி.
9.9.19.

Monday, November 11, 2019

ஆசி.கந்தராஜாவின் ’கள்ளக் கணக்கு’ குறித்து....


'ஒரு சிறுகதையில் இருந்து சிறுகதையைக் கழித்து விட்டால் எது மிஞ்சுகிறதோ அதைத் தான் வாசகன் ’வீட்டுக்கு’ எடுத்துச் செல்லுகிறான்’- இந்த சிறுகதை குறித்த அழகிய கூற்று, அண்மையில் வாசிக்கக் கிட்டிய ‘கள்ளக்கணக்கு’ என்ற தலைப்பிடப்பட்ட எழுத்தாளர் ஆசி. கந்தராஜா அவர்களின் சிறுகதைத் தொகுதியில் அ.முத்துலிங்கம் அவர்கள் எழுதி இருந்தது.

முத்துலிங்கம் அவர்களுடய சிறுகதை ஒன்று ( ‘வேதாகமத்தின் முதல் பாவம்; 9.10.19 பக்: 50 - 59) அண்மையில் ஆனந்தவிகடனில் பிரசுரமாகி இருந்தது. உடனே மனம் இந்த சமன்பாட்டை அந்தக் கணக்குக்கு போட்டுப் பார்த்தது.

கச்சித விடை வந்து சேர்ந்தது.

விடை வருகிற போது வரும் குதூகலிப்பும் அது சார்ந்த சூழல் விரியும் போது புலப்படும் காட்சிக் கோலங்களும் எழுத்தாளனை தூக்கி நிறுத்திக் கொண்டாட தோன்றும். அது  வாசகன் அனுபவம் செய்யும் ஒரு வித எக்காளக் கிறுக்கு.

இந்தப் புரிதலோடு காலச்சுவடு பதிப்பகத்தாரால் ஜூலை 2018 இல் வெளியிடப்பட்ட பேராசிரியர். ஆசி.கந்தராஜாவின் சிறுகதைகளுக்குள் ஒரு ஆறுதலான நாளொன்றில் புக முடிந்தது.

புலம்பெயர்ந்தோர் இலக்கியங்கள் குறித்து பல்வேறு விதமான பார்வைகள் தமிழர் மத்தியில் உண்டு. 30 - 50 வருடங்களுக்கு மேலான காலப்பகுதியை புலம்பெயர்ந்தோர் கடத்தி விட்ட போதும்; மனதளவிலும் உணர்வுகளின் அடிப்படையிலும் அவர்கள் இன்னும் ஊரிழையில் இருந்து அறுபடாத வேரினைக் கொண்டிருப்பது என்பது ஒருபுறம் இருக்க, ‘புலம்பெயர்ந்தோர்’ என்ற பொது தலைப்பின் கீழ் ஒட்டுமொத்த புலம்பெயர்  இலக்கிய வெளிப்பாடுகளை ஆய்தல் என்பது எத்தனை பொருத்தப்பாடு உடையது என்பதும் கேள்விக்குரியது.

ஒவ்வொரு புலம்பெயர்ந்த நாடுகளும் தனக்கென தனியான சில பண்பாட்டு அலகுகளை கொண்டிருக்கிறன. புவியியல் அமைவிடம், தட்பவெப்பம்; மொழி, ஆட்சிமொழியுடனான ஊடாட்டம், பொருளாதாரம், தொழில், அரச ஆதரவு, மக்கள் மனோ பாவம், தமிழர்களின் இவற்றின் மீதான ஊடுருவல்; அவற்றைத் தம் வாழ்க்கைக்கு அமைவாக அமைத்துக் கொண்ட பாங்குகள் எல்லாம் நாட்டுக்கு நாடு வேறுபாடுடையன. அதன் பொருட்டு இனி நாம் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்ற பொது தலைப்பின் கீழ் நம் இலக்கியங்களை வகைப்படுத்தலைத் தவிர்த்து, இனி அந் அந் நாட்டு தமிழர் இலக்கியமென வகைப்படுத்துதல் பொருத்தப்பாடுடயதாக இருக்கும் என்பது என் கணிப்பு.

கூடவே, இந்த அவுஸ். புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்களுக்குள் தமிழக,மலேசிய, சிங்கைத் தமிழ் எழுத்தாளர்கள் உள்ளனர் என்பதும்; அவர்களின் பார்வைப்புலங்கள் தமக்குரியதான பண்பாட்டு வீரியத்தின் தனிப்பட்ட வீச்சுக்களைக் கொண்டிருக்கின்றன என்பதும்; அவைகளும் நுட்பமாகப் பார்த்து பதிவு செய்யப்பட வேண்டியவை என்பதும் முக்கியமானதாகும். இவைகளுள் தீர்க்கப்பட வேண்டி இருக்கும் சில நுட்பமான சிக்கல்களும் அடையாளம் காணப்பட வேண்டியவை. இவைகள் எல்லாம் - அதன் சாதக, பாதகங்கள் உட்பட - ’அவுஸ்திரேலிய புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்கள்’ என்ற வகைப்பாட்டுக்கு தனித்துவமான இயல்பினை தர வல்லன.

ஆசி கந்தராஜாவின் எழுத்துக்களை அந்த வகையில் பார்க்கிற போது, அது பல்வகையான தனித்துவமான பக்கங்களை விரித்து வைக்கிறது. அவருடய பண்பாட்டுப் பின்னணி, கல்விப்புலமை, இந் நாடு அதற்குக் கொடுத்திருக்கிற இடம், அதன் வழி அவருக்கு விரிந்த உலகு, அதனைப் பார்க்கும் அவருக்கு மட்டுமே அமைந்ததான  ‘எழுத்தாளப் பார்வை’ - இவைகள் எடுத்துக் கொண்டு வரும் விடயங்கள் அவுஸ். தமிழுக்கு மட்டுமே உரியதானதாக விளங்கும் அதே வேளை உலகத்தமிழருக்கு புதிய ஒரு பார்வையை நல்குவனவாகவும் உள்ளன.

இதன் பாணி வேறு; பார்வை வேறு; சிந்தனைத்தளம் வேறு; இந்த மனித மூளை தனக்குள் பதித்து வைத்திருக்கிற புலமைப்புலம் வேறு. இவைகள் எல்லாம் ஒன்று சேர்ந்த இந்த எழுத்தினை ஆழ்வோன் கண்டு பிடித்த கருவின் உரு வேறு.

இவருடய கதைகள் அவுஸ்திரேலியாவைப் பிரதான  தளமாகக் கொண்டிருப்பினும் அவருடய மனநிலை இலங்கையர் மனநிலை கொண்டது. கால்களை அவுஸ்திரேலியத் தளத்திலே ஊன்றி, மனதளவிலே ஈழத்தமிழ் பண்பாட்டுக் கூறுகளைக் கொண்ட ஒரு எழுத்தாள உள்ளம், தனக்குத் தொழில் வழி  பார்க்கக் கிட்டிய உலகப் பண்பாட்டையும் வாழ்க்கைமுறையையும் கண்டுணர்ந்து அதனை நம் வாழ்வியலோடு பொருத்திப் பார்த்து புனையப்பட்ட கதைகள் அவருடயவை. ஆங்காங்கே புன்னகைப்பன.

எனினும் அவை புன்னகை அல்ல; அது ஒரு சிறு கீற்றே. சிவந்த சீமேந்துத் தரையில் முத்துக்களைச் சிந்தி விட்டால் தெறித்தோடி நின்றபடி மெல்லியதாகப் பிரகாசிக்கும் உண்மையின் எழில் கொண்டது இக்கதைகள். அவைகள் கண்ணைப் பறிக்கும் நியோன் வெளிச்சங்கள் அல்ல; குத்துவிளக்கின் சுடர் கொண்டிருக்கும் ஒளிபோன்றது. அந்த சுடரின் ஒளியை அறிவினதும் உண்மையினதும் எழில் மிக்கது எனவும் மொழிபெயர்க்கலாம்.

அவைகளின் அடிச்சரடாக ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ ஒலித்துக் கொண்டிருக்கிறது.

முதலாவது கதை யப்பானை காட்டுகிறது; நாம் கற்பனையில் வைத்திருக்கிற ஜப்பானுக்கும் அவர் காட்டும் யப்பானுக்கும் இருக்கும் வேறுபாடு கற்பனைக்கும் நடைமுறைக்கும் இடையே இருக்கிற வேறுபாடு. இரண்டாம் கதை நம் ஊரில் நம் மன உலகில் நிகழ்கிறது. நம் இருப்பினையும் சிந்தனைகளையும் கேள்வி கேட்கிறது. மூன்றாம் கதை ஆபிரிக்காவில் நிகழ்கிறது. அவர்களுடய பண்பாடுகளையும் அதன் வழியான அவர்களுக்கே உரித்தான வாழ்வியல் நியாயங்களையும் தமிழ் பண்பாட்டின் முன்னே அப்பட்டமாகப் பரப்பி வைக்கிறது. அதிலிருக்கும் ஒரு மெல்லதிர்வு தமிழ் பண்பாட்டுக்கு புதிது. தமிழ்  பண்பாட்டின் காவலர்களை; சமூகத்தை மெல்ல யோசிக்கச் செய்யும் அது!

பாரசீகக் காதல் ஒன்றை உள்ளங்கையில் வைக்கும் மற்றய கதை காதலின் இன்னொரு பரிமானத்தை இஸ்லாமிய பண்பாட்டுப் பின்னணியில்; அது திறந்து விடப்பட்ட கலாசாரப் பின்னணியில் படும் தடுமாற்றத்தை முன் வைக்கிறது. லெபனான் / சிரியா சிறுவனின் அகதி வாழ்வு சொல்லும் மற்றய கதை உலகத்தின் இன்னொரு கோணத்துக்கு நம்மை அழைத்துச் செல்கிறது.

விதி போடும் முடிச்சினை மெல்லக் கட்டவிழ்க்கும் இன்னொமொரு கதை நம் பண்பாடு சார்ந்திருக்கிறது. பண்பாட்டு அதிர்ச்சிகளும் வாழ்க்கை போடும் புதிர்களும் அதனைக்கட்டவிழ்க்கும் போது காணும் மனிதக்  கோலங்களும் என பயணித்தலின் வழி வாழ்க்கையின் சூட்சுமமான அர்த்தங்களை விளக்குகிறது.

அது போன்ற அமானுஷ தொடர்பியல் ஒன்றை மனித மிருக உறவு வழி சித்தரிக்கும் கதை அடுத்து வருவது. மனிதர்களோடு மட்டுமன்றி, மிருகங்கள் மற்றும் மரம் செடி கொடி இவைகளோடு ஊடாடும் ஒருவரால் கண்டறியத்தக்க அமானுஷ தொடர்பாடல் ஒன்றை இக்கதை விபரிக்கிறது.

இலங்கை இந்தியத் தமிழ் அடையாளங்களுக்குள் இருக்கும் ஒரு நுண்ணிய இடைவெளியை எடுத்துக் காட்டும் அடுத்த கதையைக் கடந்து போனால் வருவது ஒரு படிமக்கதை. ஷோஷலிச நாட்டு வாழ்வியலையும் அவைகளின் இயலாமைகளையும் சீன தேசத்து வாழ்வியல் ஒன்றின் மூலம் விளக்கியபடி நகரும் கதை அது. இந்த எழுத்தாளரிடம் இருக்கும் ஷோஷலிச சிந்தனைகளை அதனூடே நாம் ஊகிக்க முடிகிறது என்பது கதைகளை மீறி எழுத்தாளன் வெளித்தெரியும் ஒரு நுட்பமான இடமென அடையாளம் காண முடிகிறது. அடுத்ததாக வரும் கதை மனித மனங்களை விமர்சிக்கிறது. மனிதரின் மிருக பக்கம் ஒன்று எவ்வாறு தன்னை தோலுரிக்கிறது என்பதை அது வெளிப்படையாக முன்வைக்கிறது.

‘வினை விதைத்தவன் வினையறுப்பான்’ என்பதை உருக்கமாக முன்வைக்கும் கதை அடுத்து வருவது. சூட்சுமம் என்ற அதன் தலைப்பு வெகு கச்சிதம். ’காதலின் அடிப்படை வேதியல் மாற்றமே’ என்பதோடு முடிவுக்கு வருகிறது இந்தச் சிறுகதைத் தொகுப்பு.

வாசிக்க சுவாரிசமான இக்கதைகள் உலகப்பண்பாட்டினை தமிழ் கண்வழி விரித்துவைக்கிறது. அதில் அவுஸ்திரேலிய மண்ணின் பங்களிப்பை; அது கொடுத்த வாய்ப்புகளை நாம் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. அந்த வகையில் இது அவுஸ்திரேலிய தமிழரின் தமிழ் இலக்கிய வகைக்கு உரித்தானதுமாகும்.

அந்த வகையில் தான் இவருடய ’கறுத்தக் கொழும்பான்’ என்ற புத்தகத்துக்கு எழுத்தாளர் ஜெயமோகன் சொன்ன முன்னுரையில் ’எழுத்தாளர் அ. முத்துலிங்கத்தின் கதைகளில் இருக்கும் புன்னகையை இவரின் எழுத்துக்களிலும் காணமுடிகிறது’ என்ற கூற்றை முற்றாக மறுக்க முடிகிறது.

இது அதுவல்ல;

இது  சிவந்த பளிங்குத் தரையில் சிந்தி விடப்பட்ட உண்மை மிளிரும் அவுஸ்திரேலியத் தமிழ் முத்துக்கள்! 

Tuesday, October 29, 2019

நிலைபெறுமாறு எண்ணுதியேல்...

நெஞ்சே நீ வா!

என்றழைத்த கம்பன் விழா வியாழக்கிழமை மாலை 10.10.19, வெள்ளிக்கிழமை மாலை 11.10.19 மற்றும் அதனைத் தொடர்ந்த  வார இறுதியிலுமாக ( 12.10. 19 / 13.10.19 ) கோலாகலமாக நடந்து நிறைவெய்தியது.




செவிக்குணவும் அப்பாலே வயிற்றுக்குணவும் இலவசமாய் ஈந்து சிந்தை, சொல், செயல் மூன்றாலும் வந்த அத்தனை பேருக்கும் ‘உணவளித்த’ கம்பன் கழகம் அதன் சிந்தை நலத்தாலும் சொற்திறத்தாலும் திட்டமிட்ட செயற்பாட்டாலும் தமிழரை கட்டிப்போட்டிருந்தது.

இக் கழகம் தனக்கென சில பண்பாட்டு விழுமியங்களைக் கொண்டிருக்கிறது. அலங்காரங்களில் இருந்து ஆரம்பமாகும் அது, கொடி குடை ஆலவட்டம் பதாகைகள், மலர் அலங்காரங்கள் சிம்மாசனங்கள் மேடை அலங்காரம் என புறவயமாக சில கட்டாய தோற்றப்பாடுகளைக் கொண்டிருக்கும். பொன்னாடைகள், மரியாதைகள், சிரமபரிகார உபகாரம் ஆராதனைகள் என மேடை நிகழ்வு பல புகழ்மாலைகளையும் தன்னோடு கொண்டிருக்கும்.

 நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் சுதந்திரத்துக்கும் அழகுணர்ச்சிக்கும் அவர்களுடய எண்ணப்பாங்குக்கும் ஏற்ப இவைகள் துலங்குவதால் இவை குறித்து என்னுடய அபிப்பிராயத்தைக் கூற எனக்கேதும் உரித்துக் கிடையாது. இவை ஒரு விழாக்கால கொண்டாட்ட உணர்வைத் தூண்டிவிட வல்லவை என்பதில் எனக்கு கருத்து முரண்பாடு கிடையாது. எனினும் யாம், ’பேரியாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறை வழிப் படூஉம்  காட்சியில் தெளிந்தனம்’.

அது நிற்க,

இவைகளை அப்பால் வைத்து விட்டு மக்களுக்கு இந்தத் தமிழ் தந்த விருந்து என்னவென்று பார்ப்பது இந்த எழுத்தின் பிரதான நோக்கம். முதல் நாள் காலை நிகழ்வு இளையோரின் விவாத அரங்கோடு ஆரம்பித்தது. ’கற்பவர் நெஞ்சைப் பெரிதும் கவர்பவன்’ என்ற தலைப்பில் தமிழ் நாட்டில் இருந்து வருகை தந்த முனைவர். இராதா. மாது என்பாரின் தலைமையில்
மாணவன் இராமனே!
மானுடன் இராமனே!
காதலன் இராமனே!
நண்பன் இராமனே!
பகைவன் இராமனே!
என்ற தலைப்புகளில் அவுஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்த இளைஞர் யுவதிகள் பேசக் கேட்டோம். அழகாய் தான் இருந்தது. பேச்சு வன்மையும் மேடையை ஆழும் ஆற்றலும் சொற்தேட்டமும் பொருள் வனப்பும் மிகுந்த பேச்சுக்கள் அவை.பல விதமாக இராமனைப் பார்த்த பார்வைகள் அவை! இதன் பின்னாலே ஒரு பெரிய தயார்படுத்தல்கள் சரிபார்ப்புகள் ஒத்திகைகள் அயராத பயிற்சிகள் எல்லாம் இருந்திருக்கும் என்பதை ஊகித்து உணரத்தக்க வகையில் கனகச்சிதமாகப் பேசினார்கள்.

பின்னாலே இவைகளை எல்லாம் சரிபார்க்கும் ’நாணயக் கயிறு’ அவுஸ்திரேலிய கம்பன் கழக அமைப்பாளர் ஜெயராம் அவர்களுக்கு இந்தப்பாராட்டுக்களின் பெரும் பகுதி சென்று சேருதல் தகும்!



அதன் பின்னரான கவிநய அரங்கு பெரியவர்களால் அமையப் பெற்றது. கம்பவாரிதி.இ. ஜெயராஜ் அவர்கள் தலைமை தாங்க, இராமாயணத்தில் அமையப்பெற்றிருக்கும் சொற்திறம் குறித்து ம. தனபால சிங்கம் அவர்களும்; அணிநலம் குறித்து முனைவர் இராதா. மாது அவர்களும்; கற்பனை குறித்து ஸ்ரீ பிரசாந்தன் அவர்களும் உரையாற்றினார்கள்.

ஒவ்வொரு முறை அடுத்த நிகழ்ச்சி தொடங்கு முன்னும் அதற்கு முன்னரான நிகழ்ச்சி குறித்த தன் அறிவார்ந்த அபிப்பிராயத்தை முதலிலே சொல்லி, தன் தொடக்க உரையை ஆற்றுவது கம்பவாரிதியின் வழக்கம். மிக மகிழ்வுக்குரியதாக விளங்கும் அந்த கருத்துச் சுருக்கம் முன்னர் நிகழ்ச்சி செய்தவர்களுக்கும் கேட்போருக்கும் நல்லதொரு ‘பார்வையை’ நல்கவல்லது. வெறுமனே புகழுரையும் பாராட்டுரையுமாக அல்லாது அவரது மனமார்ந்த கருத்துரையாக அமைவதை கேட்போர் நன்குணர்ந்து கொள்வர்.

இந் நிகழ்ச்சியை ஆரம்பிக்கும் போது, முதல் நிகழ்ந்த விவாத அரங்கில் பேசிய மாணவர்களின் திறமையை பாராட்டி, கூடவே இம் மாணவர்களின் பேச்சுத்தொனியில் இருக்கும் ஒரு வித ’ஒரே மாதிரியான’ இயல்பு எங்கிருந்து வருகிறது என்ற கேள்வியை எழுப்பி இருந்தார்.

கவிநய அரங்கு அறிஞர் பெருமக்களால் வழங்கப்பெறும் போது அதன் அழகுக்கு சொல்லவா வேண்டும். எல்லாமே கன கச்சிதமாக நேர வரம்புக்குள் நின்று சொல்லவேண்டியவற்றை சொற்திறம் மேலோங்க சொல்லியபாங்கில் பொருளுணர்ந்து சொல்லி மக்களின் மனங்களில் நயங்களை நவரத்தினங்களாகப் பதித்துச் சென்றனர்.

அதிலும் கற்பனை வளம் என்பது ‘புகுந்து விளையாடக்கூடிய’ பெரும் சுரங்கமல்லவா? கற்பனைக்குள் ஸ்ரீ பிரசாந்தன் சென்று கொணர்ந்த கட்சிகள் கொஞ்சநாட்களுக்கு காட்சியாக மனதில் விரிந்து நிலைபெற்றிருக்கும். கலித்தொகைக்காதலியின் குறும்பும் புறநானூற்று புரவலனின் /கிழவரின் ‘நரையிலவாகிய’ மகிழ்ச்சியும்  விவேக சிந்தாமணியின் ஒளியும் தமிழ்மொழி வழி பொங்கிப் புரண்டோடின.

பெருமையும் பெருமிதமும். மனதிலும் மகிழ்ச்சி தான் காண்!

காலைநிகழ்வு செவிக்குணவாக, பின் வயிற்றுக்கு சற்று ஈய வேண்டி காலைநிகழ்வு அத்தோடு நிறைவுற்றது. இந்த உணவு குறித்து கொஞ்சம் சொல்ல வேண்டும். இம் மேலை நாடுகளில் பணத்துக்கும் உணவுக்குமா பஞ்சம்! எல்லாம் ஜே ஜே என்று தான் இருக்கும்.பலரகங்களிலும் பல விதங்களிலும் கறிகள் சோறை மூடும் வண்ணம் பலவண்ண வகைகளில் மின்னும்.  எங்கெங்கு செல்லினும் அது  கல்யாண சமையல் சாதம் தான்.

 எங்கேனும் எப்போதேனும் எங்கள் ஊர் கிராமத்துச்  சிறு கோயிலில் உள்ள மடங்களில் வாழையிலையில் தரும் அன்னதானம் சாப்பிட்டிருக்கிறீர்களா? வெறும் சோறும் பருப்பும்  சாம்பாரும் அப்பளம் மிளகாய் பொரியலுமே எனினும் அது எத்தனை சுவையூறும் ருசி என்பதை உணர்ந்திருக்கிறீர்களா? அத்தனை ருசியினை சுடச்சுட சோறும் சாம்பாரும் பருப்பும் ரசமும் அப்பளம் மிளகாய் பொரியலோடு தந்த சுவையை என்னவென்று சொல்வது!! ஜோர்ரோ ஜோர்!

யாருக்கு கிட்டும் செவிக்குணவும் வயிற்றுக்குணவும் - அதிலும் எல்லாம் இலவசமாக......கம்பன் கழகத்தாரே யாரையா நீர்? தமிழையும் இயலையும் பண்பாட்டையும் தூக்கி நிறுத்த வந்த நீவீர்?

 வாழ்க!

சனிக்கிழமை மாலை நிகழ்வு மாலை 4.45 மணிக்கு ஆரம்பமாகியது. எனினும் எனக்கு சரியான நேரத்துக்குப் போக முடியவில்லை. இத்தியாதி இத்யாதி நிகழ்வுகளின் பின்னர் இடம்பெற்ற சிறுவர் அரங்கை நான் தவற விட்டதோடு விருது வழங்கும் வைபவத்திலும் மாருதி விருது கிட்டும் போது தான் சென்று சேர முடிந்தது. உயர் மாருதி விருதுக்குத் தேர்வானவர் டார்வினில் இருந்து வந்திருந்த பல்கலைக்கழகம் ஒன்றின் உபவேந்தர். திரு. பிரதாபன்.....அவர் ஒரு சிறந்த ஒரு ஏற்புரையை வழங்கி இருந்தார்.





நம் மொழிக்கும் சமூகத்துக்கும் மட்டுமன்றி நாம் வந்து சேர்ந்திருக்கும் இந் நாட்டுக்கும் நாம் எவ்வாறு நல்ல பிரஜைகளாகவும் நன்றி உணர்வுள்ளவரகளாகவும் இருக்க வேண்டும் என்பதைக் கூறி, உலகின் மிகப்பழமையான மொழியை நான் பேசுகிறேன்; உலகிலேயே மிகப்பழைமையான சமயத்தை நான் பின்பற்றுகிறேன் என்பதில் எனக்குப் பெருமை என்றும்; விருதுகளைப் பெறுபவர்கள் விருது கிடைக்கும் என்றெண்ணி உழைப்பதில்லை என்றும் கம்பன் கழகம் தனக்கு விருது கொடுக்க வேண்டும் என்று கேட்ட போது அவர்களை மரியாதை செய்வது என் கடமை என்பதால் நெடுந்தூரம் கடந்து  தான் வந்ததாகவும் கூறினார்.

இந்த சந்தர்ப்பத்தில் அவருக்கு அணிவிக்கப்பட்டிருந்த தலைப்பாகை சற்றே நழுவியது. அதனை இலாவகமாக மீண்டும் தலையிலே சரியாக வைத்தபடி,’ எனக்கும் மண்டை வீங்கிப்போச்சுப் போல இருக்கு’ என்று நிதானமாகச் சொன்னது அந்த மனிதரிடம் இருந்த இடம்பார்த்து வரும் நகைச்சுவை உணர்ச்சி கொண்ட குணம்சத்தை வெளிக்கொணர்வதாக இருந்தது.

அந்த மனிதர் உண்மையாகவே பெரிய மனுஷன் தான்!

அதன்பிறகு இடம்பெற்றது பட்டி மண்டபம். இராமனுக்குப் பெரிதும் ஏற்றம் தந்த தொடர்
‘போர்க்கு நாளை வா’
’சிந்தையாலும் தொடேன்’
’விடையும் கொண்டேன்’
என்ற தலைப்புகளில் முறையே திருவாளர்கள் திருநந்தகுமார், ஞானாகரன்; திருவாளர்கள் குமாரதாசன் ஸ்ரீபிசாந்தன், மற்றும் திருவாளர்கள்  இராதா.மாது, ஜெயராம் ஆகியோர் சொற்பொழிவினை நிகழ்த்தினார்கள். கம்பவாரிதி ஐயா தலைமை ஏற்றார். எல்லோரும் கம்பன் கழக நெடுநாள் உறுப்பினர்கள்; பேச்சாளர்கள்; அனுபவஸ்தர்கள். செவிக்கு சென்றடைந்த உணவின் திறத்தைச் / சுவையை / தரத்தைச் சொல்லவா வேண்டும்!

தேநீர் மாலைச் சிற்றுண்டிகளோடு முதல் நாள் விழா இனிதே நிறைவு பெற்றது.

மறு நாள் காலை ஞாயிற்றுக் கிழமை. எனக்கு வேலை நாள். எனினும் போவதில்லை என்று தீர்மானம் எடுக்க தோதான நிகழ்ச்சிகள் அடுக்கடுக்காய் அமைந்திருந்தன. முதலில் அமைந்திருந்தது கவிஅரங்கம். ஸ்ரீ.பிரசாந்தன் தலைமையில் ’ஒருவனைத் தந்திடு’ என்ற தலைப்பில் இரவிச்சந்திரன். எத்திராஜ் அவர்களும் ’ஏயவரங்கள் இரண்டு’ என்ற தலைப்பில் செல்லையா. பாஸ்கரனும் ‘மும்மைசால் உலகு’ என்ற தலைப்பில் ஆனந்பாலா அவர்களும் கவிமழை பொழிந்தார்கள்.

குறிப்பாக எத்திராஜ் அவர்கள் குறித்து கொஞ்சம் சொல்ல வேண்டி இருக்கிறது. பேச்சுக்களை நாம் குறிப்புகள் இன்றி பேச்சாளர்கள் பேசக் கேட்டிருக்கிறோம். கவிதையை - அதுவும் 10 நிமிடங்கள் தொடர்ச்சியாக சொல்ல வேண்டிய கவிதையை குறிப்புகள் எதுவுமின்றி கவிதையாக பொழிய கேட்டிருக்கிறோமா? அன்று கேட்டோம்.! அந்த மனிதர் தன் மூளையையே குறிப்புத் தாளாகக் கொண்டு கொட்ட ஆரம்பித்தார். ஒரு தங்கு தடங்கல் இல்லாத ஆசுகவி மழை! இடையிலே தலைவர் ஏதோ கேட்டார். அந்த மனிதர் அதற்கும் கவித்திறத்தாலே பதில் சொன்னார்! மேடையை அந்த மனிதர் கையாண்ட நிதானத்தைச் சொல்வதா? தமிழ் உச்சரிப்புச் சுத்தத்தைச் சொல்வதா? கவித்திறத்தைச் சொல்வதா? கவிப்பொருளை உரைப்பதா? அதில் உறைந்து நின்ற உணர்வுகளைச் - அதிலிருந்த உண்மைத்தன்மையை உரைப்பதா? பிரிஸ்பேர்னில் இருந்து வந்த ஓர் அபூர்வமான ஆசுகவி அவர்!

பிறகு கருத்தரங்கு ஆரம்பமானது. ஜெயராஜ் அவர்களின் தலைமையில் ‘அறிவு அஞ்லோட்டம்’ என்பது தலைப்பு. சங்கப்புலவரிடம் இருந்து வள்ளுவரும் வள்ளுவரிடம் இருந்து கம்பரும் கம்பரிடம் இருந்து பாரதியும் பெற்றவைகளைப் பேசியவர்கள் முறையே ஸ்ரீ பிரசாந்தன், ஜெயராம் மற்றும் இராதா.மாது ஆகியோர்.

தலைமை கொண்ட ஜெயராஜ் அவர்கள் தலைமை உரையாற்றும் போது இந்த அஞ்சலோட்டம் என்பதனை தன் குரு சீஷ்ய பரம்பரையில் இருந்து தொடங்கினார். குருவிடம் இருந்து மாணவர்கள் பெற்றுக் கொள்வது என்பது குறித்து அவர் வழங்கிய கருத்துக்கள் ’அஞ்சலோட்டத்துக்கு’ மிகக் கச்சிதமாக பொருந்தி அமைந்ததை என்னவென்று சொல்வது! அவை ஆழம் நேர்த்தி பொருள் அனுபவம் எல்லாம் குழைத்து ஊட்டிய சொற் சத்து!

இந்த மனுஷாள் நமக்கு ஒரு வரம்! இவரை குருவாகப் பெற்றவர்கள் பாக்கிய சாலிகள்! இந்த மனுஷாள் வாழும் நாளில் நாமும் வாழ்கிறோம் என்பதும் அவரின் கருத்துக்களை நேரடியாகக் கேட்கும் வாய்ப்பு நமக்குக் கிட்டியிருக்கிறது என்பதும் நம் அதிஷ்டம்!

வழமை போல மீண்டும் மதிய உணவு! ஆனால் இன்று ஏனோ அதிக பதார்த்தங்களோடு கல்யாண சமையல் சாதம்! நேற்றயைப் போலல்ல....

மாலை நிகழ்வு மாலை ஐந்து மணிக்கு ஆரம்பம். ‘தீரஜடாயு’ என்ற நாடகத்தை ’கலை தெரி அரங்கம்’ என்ற தலைப்பின் கீழ் கம்பன் வகுப்பு மாணவர்கள் நடாத்திக் காட்டினார்கள். அபூர்வமான தலைப்பை எடுத்து அதற்கு வெளிச்சம் போட்டுக்காட்டிய கச்சித நிகழ்வில் அதுவும் ஒன்று. சிறந்த பயிற்சியும் ஒழுங்கும் நேர்த்தியும் ஒவ்வொரு சிறு விடயத்திலும் துலங்கியது. ஜடாயுவுக்கு நடித்த பெண் என்னை பெரிதும் கவர்ந்தாள்.

இறுதி நிகழ்வாக இடம் பெற்றது வழக்காடு மன்றம். அங்கு குற்றவாளிக் கூண்டில் கும்பகர்ணன் நிறுத்தப்பட்டிருந்தான். வழமைபோல அனுபவஸ்தர்களான கம்பன் கழகத்துப் பேச்சாளர்கள் இராதா.மாது, திருநந்தகுமார், பிரசாந்தன் மற்றும் குமாரதாசன் அவர்கள் வாதிட நீதியர் ஆயத்தில் ஜெயராஜ் அவர்களும் ம. தனபாலசிங்கம், பூ. ஞானாகரன் ஆகியோரும் வீற்றிருந்தனர்.

தேர்ச்சி பெற்ற பேச்சாளர்களாயினும் அவர்கள் மீண்டும் மீண்டும் படிக்கிறார்கள்; புதிது புதிதாய் அறிகிறார்கள்; அறிபவற்றை அதன் அம்சம் குலையாமல் அதன் அத்தனை ருசியோடும் அதனை மக்களுக்கு அளிக்கிறார்கள்;  அந்தத் தேடலையும் அறிதலையும் அதனை மற்றவர்களுடன் பகிரும் போதும் அறிகிறபோதும் நம் நேரமும் இருப்பும் அர்த்தமுடையதாகிறது.

அது பார்வையாளர்களின் நேரத்தையும் இருப்பையும் மதிக்கும் குணாம்சமுமாகும். அதனை இந்த தேர்ச்சி பெற்ற பேச்சாளர்களிடம் காணமுடிந்தது.

கூடவே, நிகழ்ச்சிகள் யாவும் குறிப்பாக மாலை நிகழ்ச்சிகள் யாவும்  மண்டபம் நிறைந்த பார்வையாளர்களோடும் இலக்கியப் பிரியர்களாலும் நிறைந்திருந்தமை மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தர அடுத்தது எப்பவரும் என்ற எதிர்பார்ப்பைத் தந்து நிறைவு பெற்றது 2019 கம்பன் விழா!

இலைமறை கனியாக இருந்த சில கம்ப பக்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டி ஓரளவு இலக்கிய தேர்ச்சி பெற்றவர்களையும் ‘கற்றுச் செல்ல’ வாய்ப்புகளைத் தந்த வகையில் கம்பன் கழகத்தாருக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் யாவும் முழு மனதோடு உரியதாகுக!

நிலைபெறுமாறு எண்ணுதியேல்

நெஞ்சே நீ வா! தமிழ் பருக! பண்பாடு பழக!!

என்றழைத்து, தமிழ் தந்த அவுஸ்திரேலிய கம்பன் கழக அமைப்பாளர் திரு. ஜெயராம்,

வாழ்க! நீ, எம்மான்!!


Wednesday, September 25, 2019

தமிழில் பேசினால்....

 குங்குமம் கொட்டும் செய்தி ...

அதாகப்பட்டது என்னவெனில், வணிக சஞ்சிகையான குங்குமம் வார இதழில் வரும் பல்வேறுவிதமான துணுக்குகளில் 6.9.19 திகதியில் வெளிவந்த (பக்:10) பேச்சுக் குறித்த சொற்களுக்கான ஆங்கிலத் தமிழ் விளக்கங்கள் அற்புதமாக இருந்தன.

அவைகளை என் சொந்த சேமிப்பாக இங்கு சேர்த்து வைக்க ஆசையாக இருந்ததால் இங்கு அதனை மறு பதிவிடுகிறேன்.


விளம்பு: Speak with a Massage

ஓது: Speak with Recite

இயம்பு: Speak Musically

பேசு: Speak

பகர்: Speak with Data

செப்பு: Speak with Answer

கழறு:Speak with Censure

உரை: Speak with Meaningfully

நவில்: Speak Rhymingly

கூறு: Speak Categorically

பறை: Speak with Reveal

சாற்று: Speak with Declare

நுவல்:Speak with an Introduction

கரை: Speak with Calling

மொத்தம் 14 வகையான பொருள்பட பேசும் கலைக்கு பெயர்களை வைத்திருக்கிறது நம் தமிழ்!



தகவல்: நன்றி: குங்குமம் வார இதழ்; 6.9.19; பக். 10)

Tuesday, September 3, 2019

சிட்னியில் தமிழ் போட்டிகளும் தீர்ப்புகளும்

ஒரு பெரிய வசனத்தை நிறுத்த ஒரு  முற்றுப்புள்ளி போதும்.
பல முற்றுப்புள்ளிகள் சேர்ந்தால் அவ்வசனம் தொடர்கிறது என அர்த்தமாகும்.

இந்தக் கட்டுரை ஒரு முற்றுப்புள்ளி குறித்த கதை பற்றியது.

இந்த நாட்டுக்குப் புலம்பெயர்ந்த காலம் முதலாக முக்கியமாக இரண்டு விடயங்களில் ஈழத்தமிழர் தம் ஆர்வங்களைக் காட்டி வருகிறார்கள்.

1. தாயகத்தில் ஆதரவற்றவர்களுக்கு உதவுதல்.
2. இங்கு தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடுதல்.

இவைகளில் ஈடுபடுவோர் அநேகமாக 50களைத் தாண்டியவர்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக சில இளையோர் சில நிகழ்ச்சிகளை நடாத்தி வந்தாலும் மிகப் பெரும்பாலானவர்கள் தம் வாழ்வை நிலை நிறுத்திய பிறகு கிடைக்கிற ஓய்வு நேரங்களில் மேற்கூறிய பணிகளைச் செய்து வருகிறார்கள்.

செய்வது நன்றே! நன்றி.

இவர்கள் சுமார் 25/ 30 வருடங்களுக்கு முன் புலம்பெயர்ந்தவர்கள். அவர்கள் புலம்பெயரும் போது எத்தகைய வாழ்க்கை முறைகள், கற்பித்தல் முறைகள் தாயகத்தில் இருந்தனவோ அவற்றை தம் வாழ்வாதாரமாகத் தம்மோடு எடுத்து வந்தவர்கள். அவைகளே உன்னதமான கற்பித்தல் முறைகள் என்பதை நம்புகிறவர்கள். இடையில் நிகழ்ந்த இந்த 30 வருட கால தகவல் தொழில் நுட்பப்புரட்சியும் புதியநாட்டு கற்பித்தல் முறை குறித்த அவதானிப்புகளும் அவர்களால் கவனிக்கப்படாத ஒன்றாக இருக்கிறது.

இது ஒரு வித தேக்க நிலை.

இவர்கள் தமிழ் மீதான அதீத ஆர்வத்தின் நிமித்தம் தமிழ் போட்டிகளை ஒரே சீராக நடத்தி வருகிறார்கள். அவை மரபு நீதியானதாகவும் மாற்றங்களுக்கு உட்படாததாகவும் இருக்கிறது.

மாணவர்களைப் பொறுத்தவரை அவர்கள் இங்கு பிறந்து வளர்ந்தவர்கள். பிரதான பாடசாலையில் மிக முன்னேற்றகரமான தொழில்நுட்பங்களையும் பல புதிய யுக்திகளையும் உபயோகிக்கத் தெரிந்தவர்களாகவும் அவற்றில் கைதேர்ந்தவர்களாகவும் விளங்குகிறார்கள். சுய ஆற்றல்களுக்கும் சிந்தனைகளுக்கும் ஊக்கமளிக்கும் கற்பித்தல் முறைகள் அவை

 PowerPoint presentation லும் கைகளில் card வைத்து கதைப்பதையும், ஒரு விடயத்தை விளங்கி, அதனைத் தன் மொழியில் தன்னம்பிக்கையோடு பேசுதலையும் அங்கு ஊக்குவித்து, பிள்ளையில் ஆழுமைத்திறனையும் தலைமைத்துவப் பண்பினையும் மொழி ஆற்றலையும் ஆராய்ச்சி திறத்தையும் ஊக்குவிக்கிற; சொந்த கருத்தாக்கமும் தனித்துவமும் வெளித்தெரிவதை  வளர்க்கிற ஒரு கல்விப்பின்னணியில் இருந்து அவர்கள் வருகிறார்கள்.

இந்த இரு தரப்பாருக்கும் இடையே இருக்கிற பெற்றோர் தன் பிள்ளை தமிழ் கற்கவேண்டும் என்ற ஆசையை வைத்துக் கொண்டிருப்பவர்கள். தமிழ் பாடசாலைகளுக்கு பிள்ளைகளை அனுப்புவதிலும் போட்டிகளில் பங்கு கொள்வதன் மூலமாகவும் தன் பிள்ளை தன் மொழியையும் பண்பாட்டையும் அறிந்து கொள்ளவேண்டும் என்ற தீரா ஆர்வத்தையும் கொண்டவர்கள்.

அவர்களுக்கு முன்னே இருக்கிற option இது மட்டும் தான்.

இத்தகைய பின்னணி கொண்ட ஒரு சமூக மரபில் நாம் இன்று வாழ்கிறோம்.

அறிவுத்தேடலில் சுதந்திரம் கிடைக்கும் மாணவரிடம் இருந்து சமூகத்துக்குக் கிடைக்கும் அறிவுத்தார்ப்பரியங்கள் பல.

வெளிப்படைத்தன்மையும், பரந்த உலகப் பார்வையும், சுய ஆற்றல்களுக்கு; சுதந்திரமான சுயமுடிவுகளுக்கு களம் அமைக்கும் போட்டிகளும்; அதனை அளவீடு செய்ய அதற்கும் மேலான தகுதி வாய்ந்த நடுவர்களும் நம் இன்றய தேவை.

மாற்றங்களை ஏற்காத எந்த ஒரு சமூகமும் மேம்பட்டதில்லை. பழையன கழிதலும் புதியன புகுதலும் தமிழுக்குப் புதிதானதுமில்லை.

அண்மையில் சில தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகளை சென்று பார்க்கின்ற சந்தர்ப்பம் கிடைத்தது.

இதில் பலவிதமான தரப்பினர் ஆர்வத்தோடு பங்கு கொள்ளுகின்றனர். இவைகளில் பங்கு பெறுபவர்கள் சுதந்திரமானவர்களாக இருக்கிற பொழுதிலும் அவர்கள் கற்கிற தமிழ் பாடசாலை சார்ந்து மூன்று பிரிவுகளில் அடங்குகின்றனர்.

1. ஹோம்புஷ் பாடசாலை மாணவர்கள்.
2.வெண்ட்வெர்த்வில் பாடசாலை மாணவர்கள்.
3. பாலர்பள்ளி பாடசாலை மாணவர்கள்.
4. தனிப்பட்ட பிள்ளைகள்.

நடத்தப்படும் போட்டிகள் பேச்சுப் போட்டிகள், மனனப் போட்டிகள் எனவாக  அமைகின்றன. அப்போட்டிகளுக்கான பேச்சுக்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. மனனத்துக்குரியவையும் ஏற்கனவே தெரிவுசெய்யப் பட்ட ஒன்றாக இருக்கின்றன.

இது ஏற்பாட்டாளர்களின் முழு சுதந்திரத்திற்குமுரியது என்பதை நான் மரியாதையோடு ஏற்றுக் கொள்ளுகின்ற அதே வேளை,அறிவுக்கான முதல் முட்டுக்கட்டை இங்கே இடப்படுகிறது என்ற என்  மிகத் தாழ்மையான கருத்தையும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். நாம் தருவதையே பாடமாக்கி ஒப்புவிக்க வேண்டும் என்பது ஒரு வித சர்வாதிகாரமாகும்.

மாணவர்களுக்கு குறிப்பிட்ட தலைப்பைக் கொடுத்து, குறிப்பிட்ட சொற்களுக்குட்பட்டதாக, உங்கள் பேச்சு அமைய வேண்டும் என்று கொடுப்பதன் மூலமும்; அதனை வெளிப்படுத்துவதற்கு நவீன தொழில்நுட்பங்கள் எதை வேண்டுமென்றாலும் அவர்கள் உபயோகப்படுத்தலாம் என்று சுதந்திரம் வழங்குவதன் மூலமாகவும்; அவர்களிடமிருந்து மிகச் சிறந்த பெறு பேற்றைப் பெறலாம் என்பது என் நம்பிக்கை.அவர்கள் எட்டி நிற்கும் சிகரங்களையும் அதன் வழி நாம் அடையாளம் காணலாம்.

குறிப்பிட்ட தலைப்பில் மிகச் சிறந்த கருவூலத்தை கொண்ட பேச்சினையும் பொருளினையும் கூட நாம் அதனூடே பெறலாம். கூடவே, பல்வேறுவிதமான ஆழுமை வளர்ச்சியையும் இது ஊக்குவிக்கும்.

ஆனால் ஒரு போட்டியில் இவ்வாறு பேசிய ஒரு பிள்ளைக்கு புள்ளிகளே வழங்கப்படவில்லை என்பது எத்துணை வருத்தமானது!

இப் போட்டிகளில் மாணவர்கள் பேச்சினை ஒரு சீராக ஒப்புவிக்கிறார்கள். ஆனால் பேச்சுப் பாணியைப் பொறுத்தவரை இந் நான்கு வகைப்பட்ட மாணவர்களிடமும் நான்கு விதமான பேச்சுப்பாணி இருக்கிறது. வருகிற மாணவர்களும் இலங்கை இந்தியப் பின்னணி கொண்டவர்களாக மாத்திரமல்லாது இந்தியாவின் தமிழ் நாட்டை அண்டிய அயல் மாநிலப் பின்னணி கொண்ட மாணவர்களும் வருகிறார்கள்.

பிரதான முதலிரு பாடசாலைப் பின்னணிகளிலும் இருந்து வரும் மாணவர்களிடம் தனிப்பட்ட விதமான ஒரு பேச்சுப் பாணி பின்பற்றப்படுவதை தெளிவாகவும் பிரித்துணரவும் முடியும். ஆனால் பாலர் பள்ளியில் இருந்தும் தனிப்பட்ட பெற்றோரின் வழியாகவும் வருகிற மாணவர்களிடம் தனித்துவமான பேச்சுப் பாணி நிலவுகிறது.

அவர்கள் தரப்பட்டிருக்கிற பேச்சினை தமக்கானதாக ஆக்கி பேச்சின் உள்ளடக்கத்தை உணர்ந்து சொற்களுக்கு போதுமான அழுத்தம் கொடுத்து, ஏற்ற இறக்கங்களோடு; இயற்கலையின் அம்சங்கள் மிளிர, சொல்ல வல்லவர்களாக இருக்கிறார்கள். அது அவர்களின் மூல மண்ணின் அழகின் வழி வந்தது. பெற்றோரின் தனிப்பட்ட வழிநடத்தல் வழி நிகழ்ந்தது. அதன் அம்சமும் தனித்துவமும் வரலாற்றுப் பின்னணியும் வேறு.

ஆனால் போட்டிகளை நடாத்துவோரார் தாம் தரும் பேச்சில் வேறெந்த மாற்றங்களையும் செய்யக் கூடாதென்பதை வலியுறுத்துவதோடு; வரிகளை மீளச் சொல்லுதல், தான் விரும்புகிறபடிக்கு சபைக்கு வணக்கம் சொல்லுதல் போன்ற மாணவரின் சொந்த இயல்புகளுக்கு இடமில்லாத வகையில் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுகின்றன.

இத்தகைய கட்டுப்பாடுகள் மாணவரின் எத்தகைய அம்சத்தை எடைபோட?

 மாணவர்கள் மனனம் செய்து ஒப்புவிக்கும் இத்தகைய போட்டிகள் மூலமாக நாம் எதனை கொடுக்க முற்படுகிறோம் என்ற கேள்விக்கு  என்ன பதில் இருக்க முடியும்? என்ற கேள்வி ஒரு பக்கம் இருக்க,

தீர்ப்பினை வழங்கும் நடுவர்கள் அந்தத் தீர்ப்பினை வழங்க எத்தகைய தகுதிப்பாடுகளைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்ற கேள்வி முக்கியமானது. அநேக நடுவர்கள் நாலு பேருக்குத் தெரிந்தவர் என்ற பாணியிலேயே தெரிவு செய்யப்படுகிறார்களே தவிர பேச்சுக்கலை அதாவது இயற்கலை குறித்த அவர்களின் புலமைத்துவம் யாது? என்ற ஒரு கேள்வியைக் கேட்டால் அது புலப்படாத ஒன்றாகவே இருக்கிறது.

தமிழ் அன்னைக்கு முதல்வணக்கம் சொல்லி, சொற்களைக் கோலிக் கோலி, சுய அழகோடு, கவளம் கவளமாய் கேட்போருக்கு சந்தோஷமாக தமிழை அள்ளிக் கொடுத்து, புன்னகையோடு சென்றமர்ந்த சிறுவனுக்கு, முதலிடம் கிடைக்காமல்; கிளிப்பிள்ளை போல் கொடுத்ததை அப்படியே ஒப்புவித்த ஒரு சிறுவனுக்கு முதலிடம் கொடுத்த தீர்ப்பு என்னை பல நாட்கள் தொந்தரவு செய்து கொண்டே இருந்தது.

முளையிலேயே கிள்ளி விட்ட அரும்பு அது! ஒரு வசீகரமான வசனத்தை நிறுத்திவிட்ட ஒரு கரும் முற்றுப்புள்ளி அது!

அண்மையில் சென்று பார்க்கக் கிட்டிய அதன் பின்பான இன்னொரு பேச்சுப்போட்டியின் போது 3 நடுவர்களில் இரு நடுவர்கள் மாணவர்கள் பேசுகின்ற போது  பேசும் மாணவரைப் பார்க்காது தமக்கு வழங்கப்பட்ட தாளினையே முற்றுமுழுதாகப் பார்த்துக்கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

இவர்களிடம் இருந்து வருவது எத்தகையதான ஒரு தீர்ப்பாக இருக்க முடியும் என்ற ஒரு தர்மாவேசம் ஏற்பட்டதை தவிர்க்க முடியாதிருந்தது. இயற்கலை குறித்த எந்த ஒரு தார்ப்பரியங்களும் அறியாத நடுவர்களால் வழங்கப்படும் தீர்ப்பே இறுதியானது என்ற நிகழ்ச்சி நடத்துவோரின் வாதங்கள் மேலும் சகிக்கவொண்ணாததாக இருந்தது.

ஒரு பேச்சுக்கலை என்பது கண்ணால் பார்ப்பது, காதால் கேட்பது. ஏற்ற இறக்கங்களின் வழி மொழியின் அழகு மிளிர்வது, அறிவால் உணர்வது. உணர்வில் செறிவது. 70% nonverbal communication ஆல் சென்றடயும் ஒரு விடயம் அது! நிமிர்ந்து பிள்ளையைப் பார்க்கவே பார்க்காத நடுவர்களால் எவ்வாறான தீர்ப்பினை வழங்கி இருக்க முடியும்?

ஒரு குழந்தை போற்றப்படலாம். போஷிக்கப் படலாம்; பாராட்டப் படலாம். அது வேண்டியதே. ஆனால் ஒரு போற்றலுக்கு முற்றிலும் தகுதி வாய்ந்த ஒரு குழந்தை புறக்கணிக்கப்படக் கூடாது.

தொடர்ந்து செல்ல வேண்டிய ஒரு வசனத்துக்கான முற்றுப் புள்ளியாக இந்தப் போட்டிகள் ஒரு பிள்ளைக்கு அமைந்து விடக்கூடாது. அவ்வாறு அது நடக்குமெனில்; ஒரு கரிசனை உள்ள சமூகப் பிரஜையாக அதை இலகுவாகக் கடந்து விட முடியாது என்பதைப் பதிவு செய்ய நான் கடமைப்பட்டிருக்கிறேன்!

 இவை தட்டியும் அதட்டியும் கேட்கப்பட வேண்டியவை!

நன்மை செய்யாது விடினும் தீமை செய்யாதிருக்கக் கடவீர்!


தமிழ்திருவடி சரணம்


Wednesday, August 7, 2019

கொஞ்சம் யோசிச்சுச் சொல்லுங்கோ...




வாழ்க்கையில் கனமான கணங்களைக் கடந்து போக - கொஞ்சமாக றிலாக்ஸ் செய்து கொள்ள - அன்றாட வேலை தவிர்ந்த, ஏதேனும் ஒன்று நமக்கு அன்றாடம் தேவைப்பட்டுக்கொண்டு தான் இருக்கிறது.
நண்பர்கள்...
சினிமா...
இசை...
விளையாட்டு...
குழந்தைகள்...
இணையம்...
முகப்புத்தகம் போன்ற சமூக வலைத்தளங்கள்...

மேலும் வைன், பியர் வகையறாக்களும் மேலும் புகைத்தல், மதுபான நுகர்வும் இதற்குள் அடங்குமா என்று தெரியவில்லை...


இவ்வாறாக வளர்ந்து செல்லும் பட்டியலில் உங்கள் அம்சம் என்னவாக இருக்கிறது?

என் அக்காளுக்கு பூந்தோட்டம்.
என் தங்கைக்கு அவள் வளர்க்கும் நாய்குட்டி
என் பிரிய தோழிக்கு வீட்டுத் தோட்டம்...

எனக்கு?

எனக்கு என்னவாக இருக்கும் என்று யோசித்த போது புத்தகங்கள் இலகுவாக வந்து என்னோடு செல்லம் கொஞ்சிக்கொண்டு என்னைச் சொல், என்னைச் சொல் என்கின்றன.

என்றாலும் ஒரு பெற்றோருக்கான கண்டிப்போடு ’கனமான’ உள்ளடக்கம் கொண்ட புத்தகங்களுக்கு அந்த அன்பளிப்பை கொடுக்க மறுத்து, அது ஆனந்த விகடன் மாதிரியான சிறு வணிக சஞ்சிகைக்களுக்கானது அந்த இடம் என்று கண்டிப்பாகச் சொல்லி, ‘பெரியவர்களை’ அகற்றி, கொஞ்சம் தூரம் நிற்கச் சொல்லி, குழந்தைகளைப் போன்ற இச் சிறு சஞ்சிகைகளை மடியில் தூக்கி வைத்துக் கொள்ளத் தோன்றுகிறது.

ஆனந்த விகடன்.

அது ஒரு கனமில்லாத சுவாரிசஸம்...

இதற்கும் எனக்குமான பரீட்சயம் பலவருடங்கள் கொண்டது. விகடன் வீட்டுக்கு வாராந்த விருந்தாளி. இங்கும் கூட. (ஊரில் இருந்த போது கலைமகள்.) முன்னர் விகடனில்  மதன் என்றொருவர் மிக அற்புதமாக கார்ட்டூன் வரைவார். அப்போதெல்லாம் அவருடய கேள்வி பதில்கள் தான் நான் முதலில் விரும்பிப் படிப்பது. இப்போது எப்படி இருக்கிறாரோ தெரியவில்லை. அந்த அற்புதமான திறமைசாலியை விகடன் தொப் என்று போட்டு விட்டதில் எனக்கு இன்று வரை வருத்தமுண்டு. ஏன் கோபமும் தான்.

இப்போதெல்லாம் அதில் அரசியலும் சினிமாவும் அதிக இடத்தைப் பிடித்து விடுகிறது. கூடவே புத்தி மதிகளைப் போல அமைந்து விடும் கட்டுரைகளும் எனக்கு பிடிக்கிறதில்லை.  கூடவே கவிதைகளும்... எனக்கு சற்றேனும் உவப்பானவைகளாக இல்லை. ஏதோ புரியாத சொல்லடுக்குகளைக் கொண்டு மணல் வீடு போல அனேக கவிதைகள் அமைந்து விடுகின்றன.

இதில் ஏதேனும் உங்களுக்கு மாற்றுக் கருத்திருந்தால் தெரிவியுங்கள். எனக்குள்ளே மீண்டும் நான் என்னை மீள் வாசிப்புச் செய்து கொள்ளுகிறேன். அதனால், அவைகளைத் தவிர்ந்து, வரும் ஒரே ஒரு சிறுகதையும் மற்றும் சில துணுக்குகளும், வலைப்பேச்சும் பார்த்து விடுவதோடு இப்போதெல்லாம் ஆனந்த விகடனைப் பார்ப்பது தீர்ந்து போய் விடுகிறது.

‘கனமாக’ வரும் / வந்த வேள்பாரி மற்றும் இப்போது வந்து கொண்டிருக்கும் இறையுதிர் காடு போன்றவை பயனுடைத்து எனினும் நான் அவைகளை ஆனந்த விகடனில் எதிர்பார்ப்பதில்லை.

ஆனால் இப்போது கடைசி சில மாதங்களாக அதில் சில சுவாரிசங்கள் கூடி இருக்கின்றன. வாசகர் கேள்வி பதில் அந்த மாதிரியானது. அவற்றில் சிலதை உங்களிடம் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது. (நன்றி ஆனந்த விகடன்; 31.7.19; பக். 70 - 71.)

கேள்வி: உங்கள் மொபைலுக்கு காரணத்தோடு பேர் வைக்கச் சொன்னா என்ன பேர் வைப்பீங்க?

1. மாயவலை - வட்ஸப், பேஸ்புக், டுவிட்டர் எனத் தொடங்கும் இதனூடான பயணம், கொஞ்சம் கொஞ்சமாக நம்மை ஆக்கிரமித்து, கடசியில் வலையில் சிக்கிய மானாக நம்மை ஆக்கி விடுவதால்... - லக்ஷ்மணன். திருநெல் வேலி.

2. குரங்குக் குட்டி - குட்டியை விட்டுத் தாய் இருக்காது. தாயை விட்டு குட்டி இருக்காது. அது போல நாம் செல்லை வைத்திருப்பதால் இந்தப் பெயரை வைத்துக் கொள்லலாம். - சரவன்கவி.

3. உலகத்தையே செல்போனில் தெரிந்து கொள்ள முடிகிறது. அதனால் பெட் நேம் ‘இரண்டாம் உலகம்’ - குப்புசாமி, சங்கரபுரம்.

4. மற்றவர்களுடன் நம்மை இணைப்பதால் டார்’லிங்’ - ஷிவாஸ்

5.’ஆளவந்தான்’ - கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை மொபைல் என்பதால். - தரணிஷிராஜ்.

6. ‘கறையான்’ - நேரத்தை அரிப்பதால்.- மணி-

7.ருவிட்டர் அதிகம் பார்ப்பதால் செல்லமாய் ’ருவிட்டி’ னு பெயரிடுவேன். - முருகானந்தி.

8.’சனியன் சகடை’ இது இல்லேன்னா வாழ்க்கையில் உருப்பட்டு இருப்பேனோ என்னமோ...- கார்த்தி.-

9.ஷேக்’கிளார் - சம்சாரத்துக்கிட்ட இருந்து கால் வரும் போதெல்லாம் உடம்பில் ஒரு நடுக்கம் ஏற்படுவதால்...! - லெக்ஸ்வெனி.

10. இடது பக்க பாக்கட்டில் தான் எப்போதும் செல்போனை வைத்திருப்பேன். இதயத்திற்குப் பக்கத்தில் இருப்பதால் ‘லப் டப்.’  -வைரச் சந்திரன்-

11. ஆந்தை மாதிரி நைட்டில முழிச்சுக்கிட்டு ஆன்லனில பிஸியா இருக்கிறதால ‘பிஸிராந்தை’.- புது வண்டி ரவீந்திரன்.

நான் என்ன பேர் வைப்பேன் என்று நினைத்துப் பார்த்தேன் பதில் இன்னும் அவ்வளவு இலகுவாகத் தெரியவில்லை. யோசிக்கிறேன்.

அது சரி, நீங்கள் என்ன பேர் வைப்பீர்கள்? கொஞ்சம் சொல்லுங்களேன்....

இதில் வந்த இன்னுமொரு கேள்வி.

உங்கள் வாழ்க்கை வரலாற்றை எழுதினால் என்ன தலைப்பு வைப்பீர்கள்?

1.’முற்றும்’. - அரியாஸ். சேலம்.

2.’சும்மா இருக்கிறதுன்னா சும்மாவா’? - கார்த்திகா.

3.’ஹையோ.. ஹையோ...
என் வாழ்க்கையின் நேசமணி மொமெண்ட்ஸ்’.-விக்கி-

4.’இந்த வாழ்க்கைய... அப்படியே வரலாறா... எழுதிட்டாலும்’...! - மாதொருபாகன் -

5.’இதெல்லாம் எங்க உருப்படப் போகுது’? - பாகம் 1.- ராமுவேல்-

6.90’s kid! -ரமேஷ். ஷா.

7.’படித்தவுடன் கிழித்து விடவும்’ - மனோ. பிரான்ஸிஸ்.

8.’ஒண்ணுஞ் சொல்லுறதுக்கில்ல’ - வைகை சுரேஷ்.

வேலைத்தலத்தில் என் மியன்மியார் நாட்டு தோழி ஒருத்தியிடம் உணவு இடைவேளையின் போதான உரையாடலில், ‘போனுக்கு நீ என்ன பேர் வைப்பாய் என்று கேட்டேன். அவள் சொன்னாள்,

'It is part of my body - actually my Head.- We don't need to save any think in our brain any more. All are saved in this device, சற்று நேரத்தின் பின் புன்னகையோடு சொன்னாள், For my husband, that is his 2nd wife.

நான் என்ன சொல்லக் கூடும்....? யோசிக்கிறேன்...

நீங்களும் யோசித்துச் சொல்லுங்களேன்......


Tuesday, August 6, 2019

பட்டறையில் பட்ட அறிவு

’காலம் பிழைத்தால் ஒரு புல்லுக் கூட உன் பல்லை உடைக்கும்’ என்று கண்ணதாசன் ஓரிடத்தில் கூறி இருந்தார்.



அதன் உண்மையினை அறிய முடிந்தது சமீபத்தில் தான். சமீபத்தில் வீட்டுக்கு வர்ணம் அடிக்கும் வேலைகள் நடந்தன. ஒருவர் வீட்டில் நின்று ஒவ்வொரு சிறு விடயங்களையும் அவதானமாகக் கண்காணித்தாலன்றி வேலைகள் உரிய வகையில் நடைபெறாதென்பதை உணர்ந்த தருணம் அது.

என்னவோ அது ஒரு சிறு விடயம் தான். வேலைகள் நடைபெறுவதற்காக மின்சார உபகரனங்கள் அதன் மின்னிணைப்பில் இருந்து துண்டிக்கப்பட்டிருந்தன. மீண்டும் அவை உரிய இடத்துக்கு போகவும் நின்று சொல்லி செய்தாகி விட்டது. எனினும் off செய்யப்பட்ட மின்னிணைப்பை மீண்டும் வழங்குவதற்கான switch போட மறந்த ஒரு நாளில்  குளிர்சாதனப் பெட்டியில் உறை நிலையில் இருந்த இறைச்சி வகைகள் குளிர் விட்டுப் போய் போட்ட நாற்றம் இருக்கிறதே.......

அது ஒரு வித எலி செத்த நெடி.....வீடு முழுவதுமாய் பரவி எங்கிருந்து அந்த நாற்றம் வருகிறதென்பதே தெரியாது இறுதியில் அது குளிர் சாதனப் பெட்டியில் இருந்து தான் என்பதைக் கண்டுபிடித்த போது அதனை சுத்தம் செய்ய ஒரு நாள் வேலையில் இருந்து விடுப்பு எடுக்க வேண்டியதாயிற்று.

இதில் இன்னொரு கஸ்ரம் என்னவென்றால் கெட்டுப் போனவற்றை உடனடியாகக் கொண்டு போய் Bin இற்குள்ளும் போட முடியாது. அது Bin எடுக்கும் வார நாள் வரை அப் பொருட்கள் குளிர்சாதனப் பெட்டிக்குள் தான் இருக்க வேண்டிய நிலை. இல்லையெனில் அந்தச் சுற்றுப் புறமே நாற்றத்தின் தொட்டிலாகி விடும். அதனால் எல்லாம் தெரிந்தும் ஒன்றும் செய்ய முடியாது அந்த நாற்றச் சகிப்புத் தன்மையையும் 3 நாட்கள் சகித்துக் கொள்ள வேண்டி இருந்தது.

அதனை ஒரு விதமாகச் செய்து முடித்த போது தான் தெரிகிறது அதன் நாற்றம் வீடு முழுவதிலும் ஆடைகளிலும் பொருள்கள் மீதும் படிந்து போயிருப்பதால் வீடு, பொருட்கள், ஆடைகள், துணிமணிகள், நிலையான பொருட்கள் எல்லாவற்றையும் சுத்திகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது என்பது.

இத்தனைக்கும் செய்ய மறந்தது என்னவோ அந்த ஸ்விட்ஸ் ஐ போட மறந்த அந்த ஒன்று தான். அதுவும் சில மணித்துளி நேரம் மட்டும் தான்.

அது போலத்தான் ஆடை துவைக்கும் இயந்திரமும். அதனையும் களற்றி வேலை நடந்த பின் பூட்டியாகி விட்டது. பூட்டிய பின் தண்ணீர் வரும் குளாயைத் திறந்தால் அது தண்ணீர் வரும் பகுதியினூடாக தண்ணீர் ஒழுக ஆரம்பித்து விட்டது. இது என்னடா இப்படி ஆகிறது என்று பார்த்து உரிய வேலையாட்களை வர அழைத்தால் இன்று, நாளை என்று போக்குக் காட்டிய படியே இரு வாரங்கள் கழிந்து விட்டன. இதற்குள் உடுப்புகள் நிறைந்து வழிய ஆரம்பித்து விட்டது தனி ஒரு கதை.

இறுதியாக வேறு ஒருவர் வந்து பார்த்து விட்டு ( வந்து பார்த்து என்ன பிழை என்று சொல்ல மட்டும் தனியாகப் பணம் கொடுக்க வேண்டும்.) வந்தவர் குளாய் புதிதாக மாற்ற வேண்டும். அதற்கு 60 டொலர்கள் வரை செலவாகும் என்றார். சரி வாங்கி வந்து வேலையை முடிக்கலாம் என்று வந்ததற்கும் பொருளுக்கும் என்று அவர் கேட்ட பணத்தைக் கொடுத்து விட்டால் அவர் வருவதற்கிடையில் முதல் வருவதாகச் சொல்லி போக்குக் காட்டிக்கொண்டிருந்தவர்  சொல்லாமல் கொள்ளாமல் ஒரு நாள் வந்து இறங்கினார்.

வந்து பார்த்து விட்டு அது setting இல் தான் தவறு நேர்ந்திருக்கிறது. தண்ணீர் குளாயை முழுவதுமாகத் திறக்கக் கூடாது. பாதி திறந்து விட்டால் மட்டும் போதும் என்று கூறி அதனைச் set பண்ணி விட்டு போனார். புரியினை சரியாகத் திறந்து விடத் தவறிய ஒரு சிறு சம்பவத்துக்காக கொடுத்த விலை அதிகம்.

மன உளைச்சலும் தான்.

இப்போது தான் புரிகிறது ஒரு சிறு தவறு அல்லது ஒரு சிறு அவதானமின்மை தரும் தண்டனை எத்தனை பெரிதென்று.

இதற்கே இத்தனை பாடென்றால் வாழ்க்கைக்கு.......

இதில் படித்த பாடம்,

 “ The best maths you can learn is how to calculate the future cost of current decision"

" No amount of guilt can solve the past and no amount of anxiety can change the future"

இது நான் பட்டறையில் பட்ட அறிவு.

Wednesday, July 24, 2019

peer pressure / சமூக அழுத்தங்கள்

கடந்த வார இறுதியில் அண்மைக்காலத்தில் இந் நாடுக்கு குடிபுகுந்த இலங்கைத் தமிழ் இளைஞர்கள் வேலை செய்வதைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.

ஒரு ஓடையில் அமைதியோடும் தெளிவோடும் ஓடும் ஒரு குளிர்ந்த நீரோடையை பார்ப்பது போல இருந்தது அவர்கள் தம்மோடு உறவாடுவதையும் வேலைகளைப் பகிர்ந்து செய்ததையும் மற்றவருக்கு கடினமாக இருக்கும் ஒன்றை ஒருவித தயக்கமும் இல்லாமல் தன் வேலையை அப்படியே போட்டுவிட்டு ஓடிப்போய் கை கொடுத்ததையும் பார்த்த போது....

அதற்குள்ளும் இருந்தது குணாதிசயங்களின் வேறுபாடுகள். அவற்றை அவர்கள் புரிந்து கொண்ட விதமும் அதற்கேற்ப தம்மை அஜஸ்ட் பண்ணிக் கொண்ட பாங்கும் வேலையையும் உணவையும் பகிர்ந்துண்ட விதமும்.....

இலங்கையில் நம் இளமைக்காலத்தையும் நம் வாழ்க்கையையும் மீண்டும் ஒருமுறை நினைத்து ஏங்க வைத்தது அந்த அவர்களைப் பார்க்கக் கிடைத்த அனுபவம்!

முன்னர் ஒரு தடவை என் வேலைத்தலத்தில் fork lift இல் வேலை செய்யும் ஒரு வேலையாள் என்னிடம், அதெப்படி சொல்லி வைத்தாற் போல் எல்லா இலங்கையர்களும் யாரைப் பார்த்தாலும் - அவர்கள் அறிமுகமில்லாதவர்களாக இருந்தாலும் கூட -சினேகிதத்தோடு ஒரு புன்னகையைச் சிந்தி விட்டுப் போகிறீர்கள்? என்று கேட்டான்.

மனம் சுத்தமாகவும் அமைதியாகவும் இருக்கும் போது அது சாத்தியப்படுதல் கூடும் போல...

ஊரில் நாம் பிறந்து வளர்ந்து ஆளாகி வேலைக்கு பொகும் பொழுதுகளிலும் இங்குள்ள stress என்ற வார்த்தையை நாம் கேட்டதோ உணர்ந்ததோ இல்லை. அதன் அர்த்தங்கள் தார்ப்பரியங்கள் குறித்து நாம் அனுபவம் செய்ததும் இல்லை.

ஆனால் இங்கு வந்த பிறகு நாம் சந்திக்கும் மனிதர்களும் வேலைகளில் இருக்கும் அழுத்தங்களும் முன்னுக்கு செல்ல உந்தித்தள்ளும் போட்டிகளும் பல்வேறு சிந்தனை மாறுபாடு உள்ளவர்களோடு பரிபாஷிக்கும் போது ஏற்படும் மன உளைச்சல்களும் என இந்த வாழ்க்கை ஒரு வித வேறுபட்ட உலகை நமக்கு விரித்து வைத்திருக்கிறது.

நமது அடிப்படை விழுமியங்கள், நம்பிக்கைகள் என சில இங்கு சுக்கு நூறாக உடையக் காண்கையில் வாழ்க்கை போட்டி நிறைந்ததாகவும் ஒப்பீடுகள் கொண்டதாகவும் போலி முகங்கள் கொண்டதாகவும் மாறுகிறது.

இன்றய காலங்களில் வீதிகளில் போகும் மனிதர்களிடம் புன்னகைகளைக் காண முடிவதில்லை. அது பள்ளிக்குப் போகும் பிள்ளைகளிடமும் தொற்றிக் கொண்டுள்ளது. ஒருவித அழுத்தம் அவர்கள் எல்லோரையும் ஆட்கொண்டு விட்டது.

குழந்தைகள் குழந்தைகளாக இல்லை. விளையாட்டை அவர்கள் விளையாட்டாக விளையாடுவதில்லை. அதனை அவர்கள் ஒரு task ஆக வைத்துக் கொண்டுள்ளனர். அதனால் அதிலிருக்கிற சந்தோஷ அனுபவம் காணாமல் போய் விடுகிறது. வார இறுதி சமூகப் பாடசாலைகளுக்கு பிந்தி வருகிற பிள்ளைகளிடம் தாமதத்திற்குக் காரணம் கேட்டால் விளையாட்டை முடித்துக் கொண்டு வீட்டுக்கு போய் குளித்து சாப்பிட்டுவிட்டு வர தாமதமாகி விட்டது என்று சொல்லும் போது ஐயோ என்றிருக்கிறது. வார இறுதியில் கூட அவர்கள் மணி நேரங்களை இவ்வாறாகவே பங்கிட்டுக் கொள்ள வேண்டி இருக்கிறது. வகுப்பறையில் வீட்டுப்பாடம் கொடுத்தால் ஐயோ தராதைங்கோ எங்களுக்கு வேற பாடங்களின்ர வீட்டுப்பாடம் செய்யவே நேரமில்லை என்று புலம்புகிறார்கள். அதில் ஓர் உண்மையும் இருப்பதால் அவர்களை எண்ணி கலங்கவே நேர்கிறது.

எதனை நோக்கி பிள்ளைகளை நாம் வழி நடத்துகிறோம்?

என்னிடம் பாடசாலை விடுமுறைக்காலங்களில் 3 சிறு பிள்ளைகள் விளையாட வருவார்கள். எல்லோரும் 8 வயதிற்கும் கீழ் பட்டவர்கள். கடந்த வருடத்தில் இருந்து அவர்களுக்கு விளையாட வர நேரமில்லை. அந்த வகுப்பு இந்த வகுப்பு என பெற்றோரும் பிள்ளைகளுமாக விடுமுறைக்காலங்களிலும் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்.

குழந்தைகளின் குழந்தைமை இவ்வாறாக பறி போகிறது....

கல்வியும்; அதனால் வரும் பதவியும்; பதவி தரும் அங்கீகாரமும்; பணமுமே வாழ்க்கை என்ற கற்பிதங்களோடு ஓடும் சமூகம் எதைச் சென்றடையப் போகிறது?

அண்மையில் ஒரு cardiologist இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டு விட்டாள். என்ன காரணம்? தொழில் ரீதியான அழுத்தம், சிறுவயதிலிருந்தே படிப்பின் மீது பெற்றோர் திணித்த அழுத்தம், படித்துக் கொண்டே இருந்ததால்  வந்த திருமண வாய்ப்புகள் பறி போனமை, பெண் திருமணத்திற்குத் தயாரான போது மாப்பிள்ளைமார் இவரின் தகுதிக்கு ஏற்ப வராதிருந்தது, வயது 20களின் இறுதியை நெருங்கியமை, பெற்றோரின் இழப்பு மற்றும் சுகவீனம், இங்கு வளரும் பிள்ளைகளுக்கு கஸ்ரம் தெரியாது வளர்ந்ததால் பாதியில் வருகிற இடைஞ்சல்களை மேவிச் செல்ல இயலாதிருக்கிற அனுபவமின்மை.... என இவைகள் அவ் இளம் பெண்ணை தற்கொலைவரை துரத்திக் கொண்டு சென்று விட்டது. அவள் இலகுவாக இறந்து போனாள்.

எங்கே நாங்கள் பிழை விடுகிறோம்? எங்கே தவறிழைக்கிறோம்?

எது நமக்குத் தேவை என்பது தெளிவாக தெரியாதவிடத்து இத்தகைய தடுமாற்றங்கள் ஏற்படுகின்றன போலும்.

அதனால் அடுத்தவரைப் பார்த்து அது மாதிரி நாமும் செய்ய முற்படுகிறோம். ஒப்பீடுகள் போட்டிகள் இதிலிருந்து ஆரம்பமாகின்றன. இது சரியா அது சரியா எனத் தெரியாதவிடத்து எல்லாவற்றுக்கும் பிள்ளைகளை அனுப்புகிறோம். அதனால் அவர்கள் இலக்கற்று போகிறார்கள். நேர முகாமைத்துவம் பிழைத்து குழந்தைமையும் தொலைந்து விரைவில் களைப்படைந்து போகிறார்கள். அவைகளை; இலக்குகளை அடைய முடியாத போது போலி முகமூடிகளைப் போட்டுக் கொள்ளுகிறோம். அது ஒரு இறுக்கமான வாழ்க்கையை நோக்கி மனிதர்களை நகர்த்துகிறது.

எப்படி இருந்தோம் ஊரில் அன்று....

புழுதி பறக்க பக்கத்து வீட்டுப் பிள்ளைகளோடு அடித்துப் பிடித்து விளையாட்டு. சிக்கன வாழ்வு சொல்லித் தந்த பொருள்களை கவனமாகப் பாவிக்கும் தன்மை, வேலியிலே கம்பியை துணியாலே அணைபோட்டு சற்றே கீழிறக்கி அதனூடாக தோசை சுட்டு அடுத்த வீட்டுக்கும் கொடுத்தனுப்பும் அன்னியோன்னியம்,  வீட்டுக்கு வரும் தபால்காரனிடமும் சுகநலம் விசாரிக்கும் மனப்பாங்கு, தேவாரம் பாடியபடி வீதியோரம் பூப்பறித்துச் செல்லும் பழசுகள் வந்து குந்தி செல்ல அனுமதித்த வீட்டுத் திண்ணைகள், வீடு முத்தம் கூட்டி சமயலுக்கும் உதவி செய்து குளித்து பொட்டும் திருநீறும் வைத்து எண்ணை வைத்து படிய வாரி பின்னலிட்டு சைக்கிளில் பள்ளி செல்லும் மாணவ மணிகள்.... என வாழ்க்கையின் அர்த்தங்களையும் பாடுகளையும் இயல்பாக ஏற்றுக் கொள்ள வைத்த வாழ்வியல். இயல்பாகவே அனுபவங்களை வாழ்க்கையில் இருந்தே கற்றுக் கொண்ட;  பாடுகளை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்ட பால்யம்.....

அவைகள் எல்லாம் அவர்கள் முகங்களில் புன்னகைகளாக பரிமளித்தன. மனம் சுத்தமாகவும் அமைதியாகவும் பளிச்சென்றும் இருக்கும் போது புன்னகையாக அது பளிச்சிடுவதில் ஆச்சரியம் என்ன? இந்த வாழ்க்கை பிள்ளைகளுக்கு கண்ணியத்தையும் ஒழுக்கத்தையும் விழுமியங்களையும் அன்றாட வாழ்க்கையினூடாகவே கற்பித்தது.

ஏன் இங்கு தமிழர்களே தமிழர்களைப் பார்த்தாலும் சிரிக்கிறார்கள் இல்லை? இது தான் அன்று வேலையில் இருந்த தமிழ் இளைஞன் என்னிடம் கேட்ட கேள்வி.

இவைகளுக்கு பல காரணங்கள். அதில் அடிப்படையானது எது நம் வாழ்க்கைக்கு தேவை என்பதில் தெளிவில்லாமல் இருப்பது என்றே எனக்குத் தெரிகிறது. எங்கு ஏன் ஓடுகிறோம் என்று தெரியாமல் ஓடுகிறவர்களுக்கு பின்னால் நாமும் ஓடுவதே இந்த இறுக்க நிலைக்கு காரணம் என்பது என் அபிப்பிராயம்.

கல்வி
பதவி
பணம்
அந்தஸ்து ( வீடு கார் என இன்ன பிற..)

இவைகள் தான் வாழ்க்கையின் வெற்றியின் அடையாளம் என நாம் நம்பவைக்கப்பட்டு விட்டோம். ஆனால் இவை அல்ல வாழ்வின் மதிப்பீடுகள்.

நாம் சந்தோஷமாக இருக்கிறோமா இல்லையா? எது நமக்கு சந்தோஷத்தைத் தரும்? இவைகள் ஆள் ஆளுக்கு வேறுபடும் என்ற போதும் இந்தக் கேள்விகளுக்கு நம்மிடம் தெளிவான, கலக்கமில்லாத விடை இருக்க வேண்டும்.

பிள்ளைகளுக்கு எந்த வழியை நாம் காட்ட போகிறோம்? இதற்கான சரியான விடையை நமக்குள் நாம் தேடி அதை அடையாளம் காண்பதும் அந்தப் பாதையில் எம்மை நாம் நடத்திச் செல்வதும் ஒப்பீடுகள் அற்றிருப்பதும் நம் முகத்தில் புன்னகையை இயல்பாக மலரவிடும் என்பது என் அபிப்பிராயம்.

நாட்டுப்புறத்திற்கு நகர்ந்து விட்ட என் சினேகிதி ஒருத்தி சொல்லுவதும் அதைத்தான். எனக்கு ஒரு திருப்தி என் இரு பெண் பிள்ளைகளும் தம் குழந்தைக்காலத்தை அழுத்தங்கள் இன்றி சந்தோஷமாக அனுபவித்தார்கள் என்று சொன்ன போதும் அவர்கள் தமிழ் படிக்க முடியவில்லை; மற்றும் பல்கலைக்கழத்துக்கு தெரிவாகும் போது அவர்கள் நகர்புற மாணவர்களிடம் இருந்து வேறுபட்டு தெரியப்போகிறார்கள் என்று சற்றே கவலைப்பட்டார்.

எல்லோரும் எல்லாவற்றையும் பெற்று விட முடியாது தானே.

அவரது கவலை நியாயமானதாக இருந்த போதும் எனக்குள் ஏற்பட்ட அபிப்பிராயம் என்னவெனில் நாட்டுப்புற பிள்ளைகளிடம் இருக்கும் அன்பு, பணிவு, இரக்கம், உதவும் மனப்பாண்மை, அமைதியான இயல்பு, நேர்மையான சிந்தை இவைகள் அன்றோ ஒரு மனித உயிரினத்தை அலங்கரிக்கும் உயர்ந்த ஆபரணங்கள்!

பொதுவாக, நகர்புறத்தில் இருக்கும் புன்னகையற்ற முகம், இறுக்கமான சிந்தை, எங்கிருந்து தாக்குதல் வந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருப்பது போன்ற ஒரு உசார் மனநிலை, நாகரிகத்தின் உச்சமென அவர்களிடம் இருக்கும் நடை உடை பாவனைகள், அங்கு நுழைந்து இங்கு நுழைந்து காரியமாற்றிவிடும் சமர்த்தியம்... என இவைகளா மனித குணத்திற்கு ஆபரணங்கள்?

நம் குடும்பத்துக்கும் நம் பிள்ளைகளுக்கும் எது சந்தோஷத்தைத் தரும்! எது நம் வாழ்க்கைக்குத் தேவை என நாம் தெளிவு கண்டு விட்டு அதன் வழியில் ‘என் வழி தனி வழி’ என்று போனால் முகத்தில் ஒரு புன்னகைக் கீற்று தெரியக் கூடும்.

இறுதியாக நிறைவு செய்யும் முன் இந்த இளம்பெண்ணின் கூற்றையும் சொல்லி நிறைவு செய்ய ஆசை.

என் இன்னொரு பிரிய சினேகிதியின் மகள். அவள் கலாநிதி பட்டப்படிப்பை மேற்கொண்டபடி உச்ச பட்ச சம்பளத்தோடு காரியமாற்றக்கூடிய தகுதியும் வாய்ப்புகளும் நிரம்பப் பெற்றவள். எனினும் அவள் தான் ஒரு ஆசிரியராக வரப் போகிறாளாம். காரணம் கேட்டவிடத்து, ‘எனக்கு ஊர் சுற்றிப் பார்க்க ஆசை. விரிவுரையாளர் போன்ற பதவிகள் மற்றும் ஆராய்ச்சியாளர் போன்ற தொழில் துறைகள் எனக்கு அதிகளவு விடுமுறைகளைத் தராது. ஓய்வும் கிட்டுவது கடினம். எனக்கு ஒரு ஆசிரியர் பதவி போதுமான அளவு சம்பளத்தையும் போதுமான அளவு விடுமுறைகளையும் மனதுக்கு நிறைவையும் தரும். இது தான் என் தேவை மற்றும் என் விருப்பு என்றாள்.

இதுவல்லவோ தெளிவு! இதுவல்லவோ அறிவு! அறிவைத் தன் வாழ்க்கைக்கு பிரயோகிக்கும் வல்லமை அது எனில் அது மிகையோ?

சிவசக்தி,
வல்லமை தாராயோ இந்த மானிலம் பயனுற வாழ்வதற்கே.......


Wednesday, June 12, 2019

வன ருசி

டபோ வுக்குப் போயிருந்தேன்.

மிருகக் காட்சி சாலைகள் குறித்தும் அங்கு அடைத்து வைத்திருக்கும் விலங்குகள் குறித்தும் எனக்கு எப்போதும் ஆர்வம் இருந்ததில்லை. கூடவே சுதந்திரமாக அலைந்து திரியும் விலங்குகளை அடைத்து வைத்திருப்பதற்கு நான் பணம் அளிக்கக் கூடாது என்ற ஒரு வித கறார் மனநிலையும் அதற்குள் எனக்கிருக்கத் தான் செய்தது.

நாய்களைத் தமக்கேற்றாற்போல் வசதியாக்க அதன் ஆண்மையை வேரோடு பிடுங்கி விடும் ‘இரக்க மனிதர்கள்’ குறித்து நன்றாகவே நானறிந்ததும் இம் மனநிலைக்கு ஓர் காரணம்.

இருந்த போதும் டபோவுக்கும் போவதும் அங்குள்ள மிருகக் காட்சிச் சாலையைப் பார்ப்பதும் ஏகோபித்த அபிப்பிராயமாக இருந்ததால் மறுப்புச் சொல்ல இயலாததாயிற்று.

அங்கு சென்றதன் பின்பு ஒரு வனம் சுமந்திருக்கும் இரகசியங்கள் குறித்து ஒரு சிறு ருசி கிடைத்தது.

வனருசி.

ஆபிரிக்காவில் இருந்து இறக்குமதி செய்திருந்த காண்டாமிருகம், ஒட்டகச் சிவிங்கி, சீட்டா புலி, கம்பீரமான சிங்கம், வரிக்குதிரை, யானை, மாட்டுக்கும் ஆட்டுக்கும் இடைப்பட்ட வகையிலான வகைவகையான விலங்கினங்கள், மானுக்கும் மரைக்கும் இடையில் அகப்பட்ட வித விதமான கொம்புகளைக் கொண்டுள்ள செம்மை நிறம் கொண்ட விலங்கினங்கள், குன்று போலும் பெருத்திருந்த ஆமை, ஒரு குழந்தையின் குதூகல மனநிலையில் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்த இரண்டுகாலில் எட்டிப் பார்க்கும் பூனை போல தோற்றமும் துறு துறு இயல்பும் கொண்டிருந்த ஒருவித பிராணி மற்றும் அவுஸ்திரேலிய விலங்கினங்கள் என சுமார் 5 கிலோ மீற்றர் சுற்றாடலில் அவை பெரும் நிலப்பரப்பில் சுதந்திரமாக விடப்பட்டிருக்கின்றன.

அவை வனத்தின் சிறு ருசியினை தந்திருந்தது.

ஆபிரிக்கா -

ஆபிரிக்கக் காடுகள், அதன் மக்கள் பற்றிய ஒரு பூதாகரமான விளக்கத்தைக் கண்டு கொள்ளவும் இந்த டபோ சிற்றி உதவியது.

மனித உயிரினம் பரிநாம வளர்ச்சி அடையாதிருந்திருப்பின் நாமும் அவைகளோடு நாளாந்த உணவுக்கும் இனப்பெருக்கத்துக்குமாகவே வாழ்ந்து நம் வாழ்வை முடித்துக் கொண்டிருப்போம்.

புள்ளிகள், நிறங்கள், உருவங்கள், மொழிகள், உணவுகள், வாழிடங்கள் என வெவ்வேறு விதமாய் அமைந்து கொடுக்கப்பட்டிருக்கும் வாழ்வில் மனித உயிரினம் எத்தனை சிறிது!

அது போக, இந்த வனம் எத்தனை வாழ்வுகளை; வாழ்வின் வகைகளை; அதற்குள்ளும் ஒரு ஒழுங்கினைக் கொண்டிருக்கிறது. ஒன்றிலே ஒன்று தங்கி வாழ்ந்து, ஒன்றுக்காக ஒன்று வாழ்ந்து, இறுதியில் எருவாகி அம்மண்ணுக்கே உணவாகி அழிகின்றன!

இது ஒரு பெருத்த வாழ்வின் இரகசியம் ஒன்றை தனக்குள்ளே பொதித்து வைத்திருக்கிறது.

ஒரு மரத்தினைப் போல!
இலை உதிர்கால மரத்தின் வனப்பும் அது சொல்லும் பாடமும் போல!!

இந்த இலைஉதிர்கால மரங்களில் தான் எத்தனை வண்ண ஜாலம்!

பச்சைப் புல்வெளிகள் தரையிலே படர்ந்திருக்க; முகிலுக்குள்ளே ஒழித்துபிடித்து விளையாடிய படி வெளியே வரும் சூரியக் கதிர்கள், நீல நிற ஆகாயம் மேலே விரிந்திருக்க;  இடையிலே மஞ்சளில் ஆரம்பித்து ஒரேஞ், சிவப்பு, மரூண் என நிற நிறமாய் விரிந்து அதன் வடிவங்களிலும் தோற்றங்களிலும் பல்வேறு தோற்றப்பாடுகளைக் காட்டி, இறுதியிலே காய்ந்து மண்ணிறமாகி தரையிலே உதிர்ந்து, தான் பிறந்த மண்ணுக்கே உரமாகி போகும் அதன் பாதை சொல்லும் பாடம் என்ன?

மக்களுக்கு அது உணர்த்தும் தத்துவம் யாது?

ஒரு வனத்தினைப் போல,
ஒரு மரத்தினைப் போல,

மக்களுக்குப் பொருள் சொல்வார் யாருளர்?

ஒரு வனத்தின் ருசி தரும் வாழ்க்கைப்பாடம் அதன் தத்துவார்த்த பின்னணியில் எத்துணை மலர்ச்சியானது!!

இலையுதிர்கால டபோ,
உனக்கு நன்றி.