சிட்னிக்கு வந்த காலத்திலிருந்தே பார்த்து ஆச்சரியப்பட்ட விடயங்களில் ஒன்று சாதாரண குடி மக்களிடமும் காணப்படும் தம் நாடு குறித்த அக்கறையும் கரிசனையும் தான்.
யார் ஒருவர் வீதியில் குப்பையைப் போட்டாலும் அவரை அப்படிப் போட வேண்டாம் என்று சொல்லித் திருத்துகிறார்கள். போட்டவரைக் காணாதவிடத்து தாமே அதனை எடுத்து உரிய இடத்தில் போட்டுவிட்டுப் போகிறார்கள். வருடத்தில் ஒரு தடவை தம் நேரத்தை ஒதுக்கி நாட்டை சுத்தப்படுத்தும் செயலில் ஈடுபடுகிறார்கள். எதிர்வரும் மார்ச் 5ம் திகதி (05.03.2023) Clean Up Australia Day. இதனைப் பாடசாலை மாணவர்களில் இருந்து தனிப்பட்ட பெரியவர்கள் வரை தம் நேரத்தையும் சக்தியையும் அதற்கென ஒதுக்குகிறார்கள்.
இந்த நாடு நம்முடையது. இதனைப் பாதுக்காப்பதற்கான உரிமையும் கடமையும் நமக்கு உண்டு என்று இருக்கும் இந்த குடிமக்கள் மனோபாவம் ஆச்சரியமும் அழகும் நிரம்பியதாக இருக்கிறது.
நேரமில்லை; நேரமில்லை என்று பறக்கும் இந் நாட்டு மக்கள் தான் இதனையும் செய்கிறார்கள். அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து இலவசமாகத் தம் நேரத்தை இந் நாட்டுக்கு வழங்குகிறார்கள். அதனை யாரும் வற்புறுத்துவது கிடையாது. பாராட்டுகளை எதிர்பார்த்து அவர்கள் இதனைச் செய்வதும் இல்லை. போகாமல் விடுவதனால் தண்டனைகளும் வழங்கப்படுவதில்லை. முழுக்க முழுக்க தம் சொந்த விருப்பத்தின் பெயரில் கூட்டாக நாடு பூராக மக்கள் இதனைச் செய்து வருகிறார்கள்.
No comments:
Post a Comment