மேலே இருக்கும் இந்த பொருள் என்ன என்று உங்களால் அனுமானிக்க முடிகிறதா?
இதற்குப் பெயர் வம்பளக்கும் வாங்கு. அதாவது Gossip Bench. இதுவரை கண்டதோ கேள்விப்பட்டதோ இல்லாததாக இருந்த இந்தப் பொருளை முன்னைய பதிவில் சொல்லி இருந்த ஒரு பழம்பொருட்கள் விற்கும் கடையில் கண்டேன்.
ஏதோ ஒரு கம்பீரமான வீட்டில் பலகாலம் இருந்து விட்டு இரண்டாம் வீடு தேடி இந்தக் கடையில் காத்திருந்த இதனை கண்டதும் பிடித்துப் போய் விட்டது.
இரும்பினால் மிகக் காத்திரமாகவும் உறுதியாகவும் அழகுணர்ச்சியோடும் வடிவமைக்கப்பட்டிருந்த இந்தப் பொருளைப் பார்த்ததும் நான் அதன் மீது தீவிர காதல் கொண்டு விட்டேன்.
இன்றய காலங்களில் எல்லாம் தொட்டவுடன் உடைந்து விடும்; பெட்டிகளில் அடைத்து வரும்; நாமே முழுமைப் பொருளாக ஆக்கவேண்டிய தேவைகள் உள்ள படியாக வரும் பாவனைப்பொருட்களின் மத்தியில் உறுதியாகவும் அழகாகவும் நல்ல முறையில் பேணப்பட்டதாகவும் வசீகரமானதாகவும் இருந்த இச் சாதனம் என் கருத்தைக் கவர்ந்ததில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?
Old is Gold.
$35.00 களுக்கு விற்பனையில் இருந்த இதனை உடனடியாக வீட்டுக்கு எடுத்து வந்து விட்டேன். அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. அது என்னவென்றால் மிருதுவான அதன் இருக்கையுடன் கூடிய மேல் தட்டு கையை வாகாக வைத்து ஏதேனும் எழுத மிகப்பயனுள்ளதாக இருக்கும் என்பதும் தான்.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் படித்த காலங்களில் விரிவுரை மண்டபங்களில் இருக்கும் மரத்தாலான மூங்கில் இழைகளினால் பின்னப்பட்ட கை பிடியுடன் கூடிய இருக்கையின் வலது கைப்புற கைப்பிடி மாத்திரம் நுனியில் சற்றே பரந்து ஒரு கொப்பி வைக்கக்கூடிய அளவுக்கு விரிந்து காணப்படும். அது அமரவும்; அமர்ந்து எழுதவும் வசதியாக அமைந்த 2 in 1 கதிரை. இடச் சிக்கனமும் வசதியும் தேவைப்பட்டால் தனி ஒருவரால் நகர்த்தத் தக்கதாகவும் நடைமுறைக்கேற்ற வசதியோடும் உள்ள அது போல ஒன்றை இங்கும் எங்கு தேடினும் கிடைக்கப் பெறவில்லை. இணைய உலக விற்பனைச் சந்தையில் கூட அது இல்லை.
இது அதுபோல எனக்குப் பயன்படும் என்பது என் எண்ணம். அதனால் வாங்கி வந்து விட்டேன்.
ஆனால், இதனை எதற்காக ஆங்கிலேயர்கள் பயன்படுத்தினார்கள் என்ற சுவாரிசமான கேள்விக்கும் தேடலுக்கும் கிடைத்த பரிசு மிகவும் ஆச்சரியமானது.
அதற்கு, சுமார் 50 வருடங்களுக்கு முன்பான காலத்திற்கு நீங்கள் பின்புறமாகப் பயணிக்க வேண்டும். அப்போதெல்லாம் தொலைபேசி மிகவும் அபூர்வம். யாரேனும் ஒரிரு பணக்கார வீடுகளில் அது காணப்படும். இல்லையா?
இந்த பாவனைப்பொருள் தொலைபேசி வைக்கப் பயன்பட்ட ஓர் உபகரணமாகும். வீடுகளில் அதற்கென தனியான ஓரிடமும் சிறப்பாக ஒதுக்கப்பட்டிருந்தது. மேலே உள்ள தட்டில் தொலைபேசி வைக்கப்பட்டிருக்கும். தொலைபேசி அழைப்பு வந்தால் அதனை எடுப்பவர் அந்த இடத்துக்குப் போய் தொலைபேசியை எடுத்து அருகில் அதனோடு இணைக்கப்பட்டிருக்கும் வாங்கில் இருந்து ஆறுதலாக அமர்ந்திருந்து கதைத்துக் கொண்டிருப்பார்கள்.
அப்படி ஒருகாலம் இருந்திருக்கிறது. ஆற அமர இருந்து புதினம் கதைக்கும் ஒரு காலம். அதனால் இதற்கு Gossip Bench என்று பெயர்.
அதற்கு இன்றுவரை அதன் அழகும் கம்பீரமும் மிடுக்கும் குறையாத இந்தப் பாவனைப் பொருள் இன்றும் அபூர்வமான சாட்சியாக இருக்கிறது.
ஆங்கிலேயர்களின் அழகுணர்ச்சியின் சாட்சியாகவும் செல்வச் சீமாட்டிகளின் வாழ்க்கைமுறையின் ஓர் அங்கமாகவும் வீட்டுக்குத் தனிக் கம்பீரத்தைக் கொடுத்த ஒரு பாவனைப் பொருளாகவும் அமைந்த அது உண்மையில் ஓர் அழகுப் பொக்கிஷம் தான்.
ஆங்கிலேய அழகு!
இன்று என் வீட்டில்!
No comments:
Post a Comment