Tuesday, December 27, 2022

அவுஸ்திரேலியப் பாரம்பரியங்களும் பழக்கவழக்கங்களும் - 2 - மறு சுழற்சி -

 அவுஸ்திரேலிய முதலாம் உலக நாடுகளில் ஒன்று. அது பணக்கார நாடு என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. மக்கள் செல்வச் செழுமையுடனும் பாதுகாப்புடனும் சிறந்த மருத்துவ வசதிகளுடனும் நன்றாக வாழ்கிறார்கள். அரசாங்கம் மக்களை சிறப்பாகப் போஷிக்கிறது. கருத்தோடு கவனித்துக் கொள்கிறது.

மக்களிடம் பணத்திற்கும் வசதிக்கும் பஞ்சமென்பதில்லை. வேண்டிய பொருட்களை வேண்டிய நேரம் உடனடியாக வாங்கிக்கொள்ள மக்களால் முடியும். ஆனாலும் இங்கு பொருள்களுக்கு  இரண்டாம் வாழ்க்கை கொடுக்கும் தொண்டு நிறுவன மனப்பாண்மையோடு இயங்கும் கடைகள் இருக்கிறது என்று சொன்னால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது இல்லையா?

ஆம்.ஆனேகமான அவுஸ்திரேலியர்கள் தாம் வாங்கும் பொருட்கள் நல்ல நிலையில் இருந்தால் கூட அவற்றில் சிறு கீறல் அல்லது அதன் பிரபலம் குறைந்து போனால் கூட அதனை விட்டு விட்டு புதிதான ஒன்றை வாங்க ஆசைப்படுகிறார்கள். நாம் இப்போதெல்லாம் தொலைபேசிகளை இரு வருடங்களுக்கொரு தடவை மாற்றிப் புதிய ஒன்றை வாங்கப் பிரியப்படுகிறோம் அல்லவா? அது மாதிரி.

ஆனால் பொருட்களோ புதிது போல பாவனைக்குரியதாக இருக்கிறது. அதற்கான ஒரு தீர்வாகவும் குறைந்த வருமானம் உள்ளவர்கள் வாங்குவதற்காகவும் இம்மாதிரியான பொருட்களை மக்கள் தொண்டு நிறுவனங்களுக்கு இலவசமாக வழங்குகிறார்கள். இத் தொண்டு நிறுவனங்களுக்கு நாம் தொலைபேசி எடுத்து நாம் இருக்கும் இடத்தையும் இருக்கும் பொருட்களையும் ஆதாரங்களைக் காட்டிச் சொன்னால் இத் தொண்டு நிறுவனங்கள் வாகனத்தில் சென்று பொருட்களை ஏற்றி வந்து விடுகிறார்கள்.

 சில வேளைகளில் உரிமையாளர்களே எடுத்து வந்து இக்கடைகளில் கொடுத்து விடுவார்கள். இக் கடைகளில் வேலை பார்க்கும் தொண்டர்கள் அவற்றை சீர்படுத்தி தேர்ந்தவர்களால் விலை குறித்து குறைந்த விலையில் பொது மக்களுக்கு விற்கிறார்கள். அல்லது இலவசமாக இல்லாதவர்கள் வந்து ஆதாரத்தோடு கேட்கின்ற போது அதனைக் கொடையாக வழங்குகிறார்கள்.

 இத்தகைய மலிவு விலைக் கடைகளில் உடுபுடவைகள் மட்டுமன்றி குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்கள், தளபாடங்கள், மின்சார பாவனைப் பொடுட்கள், சமையலறை உபகரணங்கள், புத்தகங்கள், அழகு பொருட்கள் என சகலதும் இருக்கும். 

Treasure Hinter ஆக நான் அடிக்கடி போகும் இந்தக் கடையில் காணப்பட்ட வாசகம் இது!


இங்கு வரும் பல நூதனமான பொருட்கள் காண்போரை கவர வல்லதாகவும் ஆச்சரியப் படுத்துவனவாகவும் இருக்கின்றன. அப்படி நான் கண்ட ஒன்றை அடுத்துவரும் பதிவில் நீங்கள் காணலாம்.

இத்தகைய தொண்டு நிறுவனங்களில் வேலை செய்யும் அத்தனை பேரும் தொண்டு அடைப்படையிலேயே வேலை செய்கிறார்கள். நேர்மையோடும் கண்ணியத்தோடும் உண்மையோடும் தம் நேரத்தையும் சக்தியையும் அவர்கள் இந் நாட்டுக்குப் பயபக்தியோடு வழங்குகிறார்கள். 

இவ்வாறான செயல்களைச் செய்ய நம்பிக்கையான பல்லாண்டுகளாக இதனைச் செய்துவரும் பல தொண்டு நிறுவனங்கள் உள்ளன. ஒருவித ஒழுங்கமையுடன் கூடிய மேற்பார்வை / கண்காணிப்பின் கீழ் இத்தகைய கடைகள் பல ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி வருகிறன. இதற்கு அவ்வப்போது கோடீஸ்வரர்களும் ஏனைய நிறுவனங்களும் கூட பல்வேறுவகையான  நன்கொடைகளை அவ்வப்போது வாரி வழங்குகின்றன. அவை சமைத்த உணவு, உலர் உணவுப் பொருட்களில் இருந்து வீட்டு வசதிகள் வரை பல வகையின. இவற்றுக்கு வரிவிலக்குகளை அரசாங்கம் அறிவித்திருப்பதால் கொடுக்கப்படும் பணம் முழுக்க முழுக்க மக்களின் தேவைகளைச் சென்றடைகிறது. இருந்த போதும் இந் நிறுவனங்களும் அரசாங்கத்திற்குத் தன் கணக்கு வழக்குகளைக் காட்டித் தான் ஆக வேண்டும்.

இத்தகைய தொண்டு நிறுவனங்களில் அநேகமாக வயதானவர்களே தம் உழைப்பை வழங்குகிறார்கள். வயதான காலத்தில் அரச வருமானத்தைப் பெற்று வாழ்ந்து வரும் இவர்கள், தம் உபரி நேரத்தை இவ்வாறு செலவு செய்ய விரும்புகிறார்கள். தாம் மற்றவர்களுக்கு உபயோகமாக இருக்கிறோம் என்ற உணர்வே அவர்களுக்கு வாழ்வின் மீதான நேசத்தையும் பற்றையும் கொடுத்து மகிழ்ச்சிப் படுத்துகிறது என்று நான் நினைக்கிறேன்.

வாகனத்தைக் கொண்டு சென்று பொருட்களை ஏற்றி வந்து இறக்கும் ஒருவரும், மக்களிடம் இருந்து வந்திருக்கும் பொருட்களைச் சுத்தப்படுத்தும் ஒருவரும், கடைமுகப்பில் நின்று பொருட்களை மக்களுக்கு விற்பனை செய்யும் பிரதிநிதியும், வேலைபழக வந்திருக்கும் இளைஞர் யுவதிகளும் ஒன்றாக இருந்து மகிழ்ந்து சிரித்து அளவளாவி இம்மாதிரியான கடைகளை இயக்குவதற்கு அவர்களிடம் இருக்கும் ’நாம் எல்லோரும் ஒரே நோக்கத்திற்காக இங்கு வந்திருக்கிறோம்’ என்ற உணர்வே காரணம் போலும்! நலிந்தவர்களுக்காக இயங்கும் இவர்கள் எல்லோரிடமும் இருக்கும் ஒருவித சினேகமான இயல்பும் பொறுமையும் புன்னகையும்  புரிந்துணர்வு மனப்பாண்மையும் மனித குணமும் மனிதாபிமானமும் இன்னும் உயிர்வாழ்கிறது என்ற நம்பிக்கையைத் தரவல்லதாக இருக்கிறது.

இப்படித்தான் மக்களும் பொருட்களும் நேரமும் மறுசுழற்சிக்குட்பட்டு உபயோகமாக இவ்வுலக வாழ்வைக் கடக்கின்றன.

No comments:

Post a Comment