Tuesday, December 27, 2022

ஆடு நாற்காலி - Rocking chair - அவுஸ்திரேலியப் பாரம்பரியங்களும் பழக்க வழக்கங்களும் - 5 -







( முன்னும் பின்னும் அசைய வல்லதாகவும் அதே நேரம் பயமில்லாமல் பாதுகாப்பாகவும் முதுகு நிமிர்ந்திருக்கத் தக்கவாறு ஆடும் படியாகவும் அமைக்கப்பட்டுள்ள ஆடு நாற்காலி இது.)



( மிகவும் பலமாக ஆடும் வகையில் அமைந்துள்ள ஆடு நாற்காலிகள் மேலே உள்ள இவை.)

 நாற்காலிகள் பலதரப்பட்டவை. எனினும் அவற்றில் சோம்பேறி நாற்காலிகள் என்றழைக்கப்படுபவை சற்று வித்தியாசமானவை. Easy chair என்றழைக்கப்படும் துணி பொருத்தப்பட்டிருக்கும் வகையின நம் ஊர்களில் பரவலாக உபயோகத்தில் இருப்பவை.

நம் ஊர்களில் இன்னுமொருவிதமான சாய்வு நாற்காலிகள் உள்ளன. அவை மூங்கில் இழைகளினால் பின்னப்படுபவை.  அகலமானவையாகவும் சாய்ந்து படுக்கத் தக்கவையாகவும் இரு கைப்பிடிச்  சட்டங்களும் மடித்து மூடத்தக்க வகையிலும் அமைந்துள்ளவை. 

இந்திய மக்களால் உபயோகப்படுத்தப்படுபவை இன்னும் சற்று வேறுபட்ட பாங்கில் அமைந்தவை. ஆடு நாற்காலிகளுக்குப் பதிலாக அவர்களின் அக்கிரஹாரங்களிலும் வீட்டு நடுவிலும் ஊஞ்சல்கள் வீடுகளுக்கு தனிக் கம்பீரத்தை வழங்கி வந்தன.

சிங்கள மக்கள் அதனை வேறுவிதமாக செய்து பாவிப்பார்கள்.அவை மிகுந்த கலை நுணுக்க வேலைப்பாடுகளுடன் அமைந்திருக்கும். ஆனாலும் இவைகள் எல்லாம் அவுஸ்திரேலிய ஆடுநாற்காலிகளை விட பலவிதத்திலும் மாறுபட்டவை. சீதோஷன நிலைக்கும் கிடைக்கும் மூலப்பொருட்களுக்கும் கற்பனை வளத்திற்கும் ஏற்ப அவை மாறுபடுபவை.

இப்போதெல்லாம் அவுஸ்திரேலியாவில் பாரம்பரியமாக மேலே காட்டப்பட்டுள்ள படத்தில் இருக்கும் வகைகளினாலான ஆடுநாற்காலிகளைக் காண்பதரிது. இப்போது புழக்கத்தில் உள்ள இத்தகைய படத்தில் காட்டப்பட்டுள்ள ஆடு நாற்காலிகள் எல்லாம் சுமார் 60 / 70 வருடங்கள் பழமையானவை என்பது என் அனுமானம்.

இப்போதும் பாவனைக்குகந்ததாக இருக்கும் அவைகளின் செய்நேர்த்தியும் காத்திரத்தன்மையும் மரத் தெரிவும் அதனைப் பாவித்து வரும் மக்களிடம் காணப்படும் கவனமாகப் பாவிக்கும் தன்மையுமே அவற்றை இன்னும் பாவனைக்குகந்தவையாக இருக்க முக்கிய காரணமாகும்.

இவற்றைப் பாவித்து வந்த மக்கள் காலமாகி விட பழங்கடைகளைத் தேடி மறுவாழ்வுக்காக வந்திருக்கும் இத்தகைய நாற்காலிகள் இனி வாங்குபவர்களின் மனநிலைக்கேற்ப தம் வாழ்வை கொண்டிருக்கும். இவற்றின் காலம் காலாவதியாகிப் போன பின்னால் இவற்றைக் காண்பதும் அரிதாகி விடும்.

ஒரு காலகட்டத்தின் வாழ்வும் பண்பாடும் கூட அதனோடு மறைந்து போய் விடும் என்பது தான் அதிலுள்ள பெரும் சோகம்!

அப்படியென்றால் இப்போது எப்படியான சாய்வு நாற்காலிகள் / ஆடு நாற்காலிகளை இன்றய மக்கள் பாவிக்கிறார்கள் என்ற கேள்வி எழுவது இயல்பு தான். இன்றய காலங்களில் சொகுசு மெத்தைகளாலும் உலோகங்களாலும் செய்யப்படும் recliner chair கள் தான் பரவலான பாவனையில் உள்ளன.

No comments:

Post a Comment