சில வருடங்களுக்கு முன்னால் ‘மீசைக்கரண்டி’ என்பது பற்றி என் பிரிய தோழி கீதா ஒரு பதிவு போட்டிருந்தார். மேசைக்கரண்டி கேள்விப்பட்டிருக்கிறோம். அது என்ன மீசைக்கரண்டி என்று கேட்கிறீர்களா?
ஆங்கிலேயர்கள் சூப் குடிக்கும் போது மீசை இடைஞ்சலாய் இல்லாமல் இருப்பதற்காகவும் அதே நேரம் சூப்பில் நனையாமல் மீசையைப் பாதுகாப்பதற்காகவும் விசேடமாக தயாரிக்கப்பட்ட கரண்டி தான் அது. அந்தக் கரண்டி தான் கீழே காட்டப்பட்டிருக்கிற ஒளிப்படத்தில் காட்சிப்படுத்தப் பட்டிருக்கிறது.
இம் மீசை மறி கரண்டிகளில் நடுவில் இருக்கும் பகுதி மீசையை நனையாமல் பாதுகாக்கும் அதே நேரம் கீழே இருக்கும் பகுதியினால் திரவ பதார்த்தத்தைக் குடிக்க இந்த மீசை மறி கரண்டிகள் உதவின.
அது போன்றது தான் இந்த Moustache Guard என்று சொல்லப்படுகிற கீழே காட்டப்பட்டிருக்கிற இச் சிறு சாதனம்.
தேவைப்படும் போது பொருத்தவும் நீக்கவும் சட்டைப்பைக்குள் வைத்துக் கொண்டு செல்லவும் ஏற்ற வகையில் அமைந்திருக்கிறது இச் சாதனம்.
ஆங்கிலேயர்களிடம் ஒரு விதமான தரத்தை பேணும் நேர்த்தியும்; நுட்பமான சிந்தனைத் திறனும்; அழகுணர்ச்சியும், வாழ்க்கையை அனுபவிக்கும் இயல்பும் சற்று ஏனைய இனத்தவரை விட அதிகமாக இருக்கிறதோ என்று எனக்கு எண்ணத் தோன்றும்.
அவர்கள் தேநீர் அருந்துவதாக இருந்தால் கூட தேநீரின் தரத்தில் மட்டும் அவர்கள் சிரத்தை எடுப்பதில்லை. அதனை பருகும் பாத்திரமும் அழகியல் நிரம்பியதாக இருக்கும். அவர்களுக்கு அதனைக் குடிப்பதென்பது ஒரு திருவிழா போன்ற இன்பம் பயப்பது. தயாரிக்கப்பட்ட தேனீராக அதனை அவர்கள் அருந்துவதில்லை. தனித்தனியாக எல்லாவற்றையும் எடுத்து வைத்து தத்தம் சுவைக்கேற்ப தாமே அதனைத் தயாரித்துக் கொள்வார்கள்.
கேத்தல், சீனி, பால் வைக்கும் பாத்திரங்கள், அவைகளை வைக்கும் மேசை, அதன் விரிப்புகள், கதிரை எல்லாமே அழகியலோடு இசைந்தவாறிருக்கும். அதனை; அந்த அழகியலை அனுபவித்தவாறே ஆறுதலாக ஒவ்வொரு சொட்டையும் அனுபவித்து அருந்துவார்கள். ( நம் நாட்டையே அதற்காகத் தானே கைப்பற்றிக் கொண்டார்கள்)
இவ்வாறு வாழ்வின் ஒவ்வொரு சொட்டையும் அனுபவிக்கத் தெரிந்தவர்கள் தமக்கு இடைஞ்சலாக இருக்கும் தம் அழகு மீசைகளுக்கு ஒரு வழி கண்டுபிடிக்காமலா இருந்திருப்பார்கள்? அதற்கான தீர்வு தான் இந்த மீசைக் காவலன். Moustache Guard.
அவர்களுக்கு சூப் குடிக்கும் போது மட்டுமா மீசை நனைகிறது? அது தேநீர் மற்றும் பியர் போன்ற பான வகைகளை அருந்தும் போதும் தானே தொந்தரவாக இருக்கிறது... அதற்காக எல்லாம் சிரத்தை எடுத்து வளர்த்துவரும் மீசையை எல்லாம் எடுத்துவிட முடியுமா என்ன? அது முடியாதென்பதால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சிறு கருவி தான் இது.
கைக்கடக்கமான அழகான பேழையில் வைத்து காவிச் செல்ல ஏற்ற விதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிற இச் சாதனம் அவசியம் ஏற்படும் போது குவளையின் மேலே வைத்து மீசையைப் பாதுகாத்து விரும்பிய பானத்தை அருந்தும் விதமாக இது தயாரிக்கப்பட்டிருக்கிறது.
சில பாத்திரங்கள் அதனோடு இணைந்தே பாவனையில் இருந்திருக்கிறது. அவற்றையே கீழே உள்ள இணைய வழி சேகரித்த படங்களில் காண்கிறீர்கள்.
இப்போதெல்லாம் மேலைத்தேயத்தவர்களுக்கு மீசையின் மீது மோகம் இல்லாது போய் மொழு மொழு முகங்களோடு காட்சி தருவதால் இதன் பாவனைகளும் படிப்படியாக மறைந்து இல்லாதொழிந்து போயின.
அடிச்சு வளர்க்காத பிள்ளையும் பிள்ளையோ! முறுக்கி வளர்க்காத மீசையும் மீசையோ!! என்று நம்மவர்களிடம் ஒரு பழமொழி வழங்கி வருகிறதல்லவா? நம்மவர்களும் மீசையில் வீரத்தை முடிந்து வைத்துக் கொண்டவர்கள் தானே?
பல வடிவங்களிலும் தோற்றங்களிலும் தென்பட்டுவந்த மீசைகளில் பாரதியாரின் மீசையும் வீரபாண்டிய கட்டப்பொம்மனின் மீசையும் பிரபாகரனின் மீசையும் நமக்கு நினைவில் வரக்கூடும். கூடவே மெல்லிய கோடு போல வைக்கப்பட்டிருக்கும் மீசையும் அரிவாள் மீசையும் திரைப்படங்களில் பார்த்து வியந்தவை. கூடவே ஹிட்லரின் மீசை உலக மகா பிரபலமாயிருந்தது.
அது சரி! அப்படி எல்லாம் பிரச்சினை இருந்திருக்குமென்றால் நம்மவர்கள் எப்படியெல்லாம் இதனைச் சமாளித்திருப்பார்கள்?
புகைப்படங்கள்: நன்றி -கூகுள் இணையம்.
No comments:
Post a Comment