வீதியோரம் சிந்திக் கிடந்த
புன்னகையை
கூந்தலில் அள்ளிச் செருகியபடி
நடக்கும் அவளோடு சேர்ந்து
ஓடியும்; நடந்தும்; திரும்பிப் பார்த்தபடியுமாக
முன்னேறி நடக்கின்றனர்
பாலர் பள்ளிப் பிள்ளைகள்.
கைகளைப் பிடித்து நடக்கும் படியும்;
பக்கத்தோடே பாதுகாப்பாய் வா
என்னும் வார்த்தைக்கும்
பதிலில்லை அவர்களிடம்....
பக்கத்தில் பூத்திருந்த பூக்களுக்குக்
கால் முளைத்தது போல
வீதியை அழகாக்கி
முன்னோக்கியே ஓடும் நதியினைப் போல...
நடக்கும் அவர்களோடு சேர்ந்து
அவர்களையும் கூட்டிப் பெருக்கியபடி
ஒரு மரமாக
நானும் நடக்கிறேன்
பின்னோடு....
ஆசிரியருக்கு வேலை
வீதியிலும் இருக்கவே செய்கிறது..
17.09.2025 புதன் காலை
அழகான கவிதை. கடைசி வரிகள் சிறப்பு.
ReplyDeleteநன்றி கீதா.
ReplyDelete