Tuesday, January 11, 2011

ஒரு துளி சோழ வளம்


என் அன்புத் தோழி தாருஹாசினி அறிமுகப் படுத்தி வைத்த புத்தகம் பொன்னியின் செல்வன். நம் கவுன்சில் நூலகத்தில் சில நல்ல தமிழ் நூல்கள் இருப்பதை நானறிவேன். ஒரு படியாக கிடைத்த ஒரு நேர அவகாசத்தைப் பயன் படுத்தி அங்கு சென்றால் முதல் இரண்டு பாகங்களையும் யாரோ எடுத்துப் போயிருந்தார்கள். மூன்றாவது பாகம் மட்டும் இருந்தது.

பெரிய புத்தகம். ஒரு விதமான ஏமாற்றமும் மகிழ்ச்சியும் கலந்த ஒரு மன நிலை எனக்கு. கைக்கெட்டியும் வாய்க்கெட்டாத நிலை மாதிரி.அம் மூன்றாம் பாகத்தைப் புரட்டிப் பார்த்தேன். 2004ம் ஆண்டு 12ம் பதிப்பை அது கண்டிருந்தது. ம.செ.யின் ஓவியங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். இதில் அவரது தந்தையார் மணியன் என்பவர் ஓவியங்களை வரைந்திருந்தார். ஆசையோடு அதனைச் சற்று நேரம் பார்த்திருந்து விட்டு முதல் பாகத்தில் இருந்து முறைப்படி படிக்கத் தொடங்குவதே நல்லது என்ற தீர்மானத்தோடு கவுண்டரில் சினேகமாய் சிரிக்கும் பெண்மணியிடம் அதன் முதல் இரண்டு பாகங்களுக்குமான பதிவினைச் செய்து விட்டு வந்திருந்தேன்.அவரது கூற்றுப் படி அது தை மாத நடுப்பகுதியில் வந்து சேரும் சாத்தியக் கூறுகளே அதிகம் இருந்தன.

ஆனால் இன்று நல்ல வேளையாக நான் வீட்டில் நின்றிருந்த ஒரு பொழுதில் நூலகத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது.நீ கேட்டு வைத்திருந்த புத்தகத்தில் முதலாம் பாகம் வந்திருக்கிறது. நீ வந்தால் எடுத்துச் செல்லலாம் என்றது அவ் அழைப்பு.

அது மிகச் சொற்ப வேளையில் கைப் பைக்குள் அது இடம் மாறியது மட்டுமன்றி வெளி வேலையாய் திரிந்த பொழுதுகளிலும் அது ஒரு சுகமான பாரமாகக் கனத்துக் கொண்டிருந்தது.ஆம் படிக்காத போதிலும் அது ஒரு சுகமான பாரமாகத் தான் இருந்தது. ஒரு விதமான உற்சாகம் அப்போதிருந்தே தொற்றிக் கொண்டது.வேலைகளை விரைவாக முடிக்க அது ஒரு காரணமாகவும் இருந்தது.

ஆயிற்று. வீடு வந்து சேர்ந்தால் மழை வரவா விடவா என்று வெருட்டிக் கொண்டிருந்தது.இனிமையான பழைய பாடல்கள் வானொலியில் ஒலித்துக் கொண்டிருக்க வானம் இருட்டி குளிர் காற்றைத் தந்து கொண்டிருந்தது.களைப்புத் தீர குளித்து சிறப்பானதொரு தேநீரோடு ஜன்னல்களைத் திறந்து வைத்து விட்டு பிரம்பு நாற்காலியை வெளிச்சம் வரும் இடத்தில் தள்ளி வைத்து விட்டு தேநீரின் இதமான சூட்டோடு படங்களில் லயித்து பதிப்புரை முன்னுரையினூடாக மெல்ல முதல் அத்தியாயத்துக்குள் காலடி எடுத்து வைத்தேன்.

அது ஆடிப் பெருக்கைப் பார்க்கும் வல்லவரையன் வந்தியத்தேவனின் கண்களூடாக விரியும் காட்சி.ஆடிப் பெருக்கும்,மக்கள் வருகையும், களனிகளின் உழவும் நடவும் நடந்து கொண்டிருக்க; ஆற்றோரம் மக்கள் குழுமி கூட்டஞ்சோறும் சித்திரான்னமும் பகிர்ந்துண்ணுகிறார்கள். அவை கமுகம் பாளைகளில் இட்டு உண்னப் படுகின்றன.சோழ தேசத்து வளத்தில் தோய்ந்தவாறு கதை நகருகிறது.

ஆனால் முதல் அத்தியாயத்துக்கு மேல் என்னால் நகர முடியவில்லை.சோழ வளம் கண்ணில் கருக்கட்டி விட்டது தான் அதற்குக் காரணம்.அந்தச் சோழ நாட்டினுடய வளத்தினை ஒளவையார் இப்படிப் பாடுகிறார்.

“வெளளத்தடங்காச் சினை வாளை
வேலிக் கமுகின் மீதேறித்
துள்ளி முகிலைக் கிளித்து மழைத்
துளியோடிறங்கும் சோ நாடா
......”

என்றவாறு தொடரும் அப்பாடல்.இந்தப் பொன்னியின் செல்வனின் அதே ஏரிக் கரையோரம் வெளளம் கரை புரண்டோடுகிறது. அருகில் மருத நிலம். விவசாயபூமி.குடியானவர்கள் உழுது கொண்டிருக்கிரார்கள்.பெண்கள் நடவு நட்டுக் கொண்டிருக்கிறார்கள்.கரை புரண்டோடும் ஏரியையும் வயல் நிலங்களையும் பிரிப்பது கமுகம் வேலி.வந்தியத் தேவன் காண்கின்ற பெண்கள் ஆடிப் பாடிக் களித்த படி கூட்டாஞ் சோறுண்ணும் கமுகம் பாழைகள் நிறைந்திருக்கின்ற அதே கமுகம்வேலி.

கருக் கொண்டிருக்கிறது மேகம்.வெள்ளத்துக்குள் துள்ளியோடும் மீன்களுக்கோ கொள்ளை மகிழ்ச்சி.அதனால் நுரைத்துக் கொண்டோடும் வெள்ளத்துக்குள் அடங்கா மகிழ்ச்சியோடு துள்ளிக் குதித்தவாறு ஓடுகின்றன.அதற்குள் ஒரு கர்ப்பம் தரித்திருக்கிற வாளை மீன்.(சினை வாளை)அப்படியே அது உயர ஒரு துள்ளுத் துள்ளுகிறது.அப்படித் துள்ளிக் குதித்த வேகத்தில் அது வேலியோரம் நிற்கின்ற கமுகம் மரத்தில் ஏறி கரு முகிலாய் கூடி இருக்கின்ற முகிலையும் கீறிக் கிழித்தவாறு கீழிறங்கி மீண்டும் வெள்ளத்துக்குள் விழுகின்றது.அது அவ்வாறு முகிலைக் கிளித்து துள்ளி விழுந்த காரணத்தால் மழை முகிலாது மழைத் துளியாக மண்ணில் விழுகிறது.அதன் காரணமாக வாளை மீன் வெள்ளத்துக்குள் விழுகின்ற போதினில் மழைத் துளியையும் இழுத்துக் கொண்டு வந்து விழுகின்றது என்று ஒளவையார் சோழ வளம் கூறுவார்.

இந்த ஒளைவையாருக்கும் அவருக்குச் சம காலத்தில் இருந்த ஒட்டக் கூத்தர் என்ற புலவருக்கும் எப்போதும் புலமையில் ஒரு போட்டி நிகழ்வது சோழ சாம்ராஜ்ஜியத்தில் பிரபலமான ஒரு சங்கதி. இங்கு ஒட்டக் கூத்தர் அச் சோழ வள நாட்டினுடய வளத்தை இப்படிப் பாடுகிறார்.ஒளையார் நீரின் வளத்தைப் பாட இவர் நிலத்தின் வளத்தைப் பாடுகிறார் இப்படி,

“பங்கப் பழனத் துழுமுழவர்
பலவின் கனியைப் பறித்ததென்று
சங்கிட்டெறியக் குரங்கு இளநீர்
தனைக் கொண்டெறியும் தமிழ் நாடா
....”

என்று பாடுகிறார்.அதாவது வயல்களிலே உழுது களைத்த உழவர்கள் தாம் தாக சாந்தி செய்வதற்காக ஒரு உபாயம் செய்கிறார்கள். அது என்னவென்றால் இந்த மரங்களிலே இருக்கின்ற குரங்குகள் பலாக்கனிகளைப் பாழ் செய்கின்றன என்று சாட்டுச் சொல்லிக் கொண்டு நிலத்திலே இயற்கையாக விளைந்து கிடக்கின்ற சங்குகளை எடுத்து குரங்குகளுக்கு மேலாக வீசுகிறார்கள்.அதன் காரணமாக அவர்களுக்கு அந்தக் குரங்குகள் இளநீர் குலைகளில் இருந்து இளநீர்களைப் பிடுங்கி உழவர்களை நோக்கி எறிகிறது. அதனால் உழவர்கள் தாக சாந்தி செய்து கொள்கிறார்கள். அத்தகைய வளம் பொருந்திய சோழ வள நாடு என்பார் ஒட்டக் கூத்தர்.

அந்த வள நாட்டில் தான் நான் இப்போது பயணம் செய்து கொண்டிருக்கிறேன்.நூற்றாண்டுகள் தாண்டிய பயணம் அது!

இன்றைக்கு இவ்வளவும் தான்.:)


இங்கே இப்போது மழை.

எங்கோ ஒரு அழகான உவமை ஒன்று பார்த்தேன்.அது இப்படி அமைந்திருந்தது.


“நிதானமோ பக்குவ நளினமோ அற்றுச் சட்டென்று நிலத்தில் வைத்த வீணையின் தந்திக் கம்பி அதிர்வில் உதிர்ந்து விழுந்த ஒரு நாதத் துளிபோல; அவளது கண்களில் உருண்டு திரண்ட கண்ணீர் முத்து, தாமரைக் கன்னத்தில் ஒட்டாமல் உருண்டோடி, நிலத்தில் பொட்டென்று விழுந்து சிதறியது”

இப்போது இங்கு விழுகின்ற மழைத் துளிகளும் அப்படித் தான் இருக்கின்றன.அத்தனை பெரிசு.

Monday, January 3, 2011

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்....



எல்லோருக்கும் ஏதோ ஒரு விதத்தில் ஏதோ ஒன்று பிடித்திருக்கும்.

இது தெரிய வந்தது வெளி நாடு வந்த பின் தான்.ஊரில் நாம் செய்வது எல்லாமே பிடித்திருந்தது.இங்கு செய்வது ஒன்று பிடிப்பது ஒன்றென்பதால் பிடிப்பதைச் செய்வதற்கு நேரமொதுக்கி சக்தியை மீட்டெடுக்க வேண்டி இருக்கிறது.

அது அன்றாட ஓட்டத்துக்கு காருக்கு பெற்ரோல் அடிப்பது மாதிரி!எங்கள் சக்தியை எமக்கு மீட்டுத் தரும் உபாயமாக அது இருக்கும்.பதிவு எழுதுவது, பாட்டு படிப்பது, இசைகேட்பது,வாத்தியங்கள் இசைப்பது,.....இப்படி!

என் தங்கைக்கு ஒரு வித விசித்திர வியாதி இருக்கிறது. விடுமுறையோ ஓய்வு நாளோ வருமிடத்து தன் ஆடைகள் நிறைந்த அலுமாரியை, முகம் பார்க்கும் கண்னாடி மேசையை மீண்டும் மீண்டும் அடுக்கி மகிழ்வாள்.அது அவளுக்கு தன் நாளாந்த சக்தியை மீட்டுத் தரும் ஒரு செயற்பாடு.

அது போல எனக்கும் ஒரு வித வியாதி இருக்கிறது.பார்க்கின்ற போது படிக்கின்ற போது பிடித்தவற்றைச் சேகரித்து வைக்கும் வழக்கம் ஒன்று இருக்கிறது என்னிடத்தில்.ஓய்வின் போது அல்லது (காருக்கு பெற்ரோல் அடிப்பது போல)சக்தி தேவைப் படும் போது முன்னர் ஒரு போது சேர்த்து வைத்த விடயங்களை மீண்டும் ஒரு முறை எடுத்துப் பார்த்து மகிழ்வதுவே அது.

நீங்கள் என்ன மாதிரி?

இது மாதிரி என் அக்காளுக்கு இருப்பது இன்னொரு விதமான விஷேச வியாதி.மரங்கள் செடி,கொடி பூக்களோடு பேசுவது தான் அது. அவற்றுக்கு உணவு, தண்ணீர்,சத்துகள் போடுவது,மண்ணைக் கிண்டி இதமாக்குவது,பூ இதழ்,நிறம்,வாசம்,மற்றும் அதன் செழுமை,வடிவம் இவற்றில் மனதைப் பறி கொடுத்து நிற்பது.. இப்படி தொடரும் அவர் வியாதி.

அது மாத்திரமல்ல வாழை, கொய்யா, பலா, மாமரம் எனவும் மேற்கொண்டு தொடரும் அது.சைவ போசனம் அருந்துபவர்கள் என்பதால் வல்லாரை தக்காளி, கத்தரி, வெண்டி,முருங்கை,பச்சை மிளகாய் என வீட்டுத் தோட்டமும் உண்டு பிறிம்பாக!பிதிரர்களுடய வருடம் ஒரு முறை வரும் நினைவு நாட்களில் தோட்டத்தில் விளைந்த மரக்கறிகளோடு வாழை இலையில் சைவ போசனம் அங்கு உண்ணக் கிடைப்பது - அதுவும் வெளி நாட்டில் -ஒரு வரம் மாதிரி.

அவவுக்குப் பிறந்த தினம் வருகிறது.அவவுக்கு என்ன வாங்கலாம் என யோசித்து கடை எல்லாம் சுற்றியதில் இறுதியாகக் கண்டு கொண்டது இது தான்.

மூங்கிலினால் மிக நேர்த்தியாக வளைத்துச் செய்யப் பட்ட பல வடிவங்களைக் கொண்ட பாத்திரங்கள் வியற்நாம் நாட்டவர்களால் வீட்டுக் கைவினையாகச் செய்து சந்தையிடப் படுகின்றன. மிக இலேசாகவும் வசீகரமாகவும் வடிவமைக்கப் பட்டிருக்கும் அப்பாத்திரங்கள் புழக்கத்துக்கும் சுகமானவை.இலேசானவை.கூடவே மரத்தினால் வடிவமைக்கப் பட்ட கரண்டிகளும் குடுவைகளும் உள்ளன.அது மாத்திரமன்றி ஓலைகளால் இழைக்கப் பட்ட பெட்டிகள்,பல ரகங்களிலும் பல அளவுகளிலும் மூடிகளோடும் வருகின்றன.

இவற்றைப் பார்த்ததும் பழைய நினைவுகள் வந்து விட்டன.இப்போது வாயு,மின்சார அடுப்புகளும் ஸ்ரிமரும் பாவனைக்கு வந்து விட்டன.பிட்டு அவிப்பது வேலை மினைக்கேடு ஆகி ரெடிமேட் சாப்பாடுகள் வீட்டு மேசைக்கு வர ஆரம்பித்து விட்டன.இனி ஈழத்து முற்றத்துக்கு யாரும் வந்து முந்தி எப்பிடி நாங்கள் பு(பி)ட்டு அவித்தோம் என்று பார்க்கிற காலம் வரும்.

அதற்காகத் தான் இந்தப் பதிவு.

முன்னர் ஒரு காலம்! இற்றைக்கு 40 வருடங்களாவது இருக்கும்!!

அது ஒரு கொண்டாட்ட காலம்! தாயக மண்.போர் மூளாக் காலம்!!

யாழ்ப்பாணத்தில் ஊர் கோயில் திருவிழாக் கொண்டாட்டங்களின் போது என் தாயாரின் தாய் தந்தையரின் வீட்டுக்கு மற்றும் தந்தையாரின் தாய் தந்தையர் வீட்டுக்கு போவது வழமை.திருமணமாகி வெளியூர்களில் வாழ்ந்து கொண்டிருந்த சகோதர சகோதரிகளின் குடும்பம் ஒன்று கூடும் காலமும் அது தான்.

பலாப்பழம்,வெத்திலைத் தட்டம்,பாக்குரல்,மூக்குப் பேணி,சிவப்பு சீமேந்துத் தரை,பனையோலை,முள்முருக்கு, கட்டித் தொங்க விடப் பட்டிருக்கும் வாழைக்குலை, மற்றும் வெங்காயம்,மாட்டுக் கொட்டில்,மாதுளங்கன்று,விளாம்பழம்,புலவு என்று அழைக்கப் படும் தோட்டம்,கற்தறை,அதற்குள்ளும் செழித்து வளர்ந்திருக்கும் புகையிலைத் தோட்டங்கள்,செம்மண்,கிணறு,துலா,நெசவுசாலை,காங்கேசன் துறை சீமேந்துக் கூட்டுத் தாபனத்து விசில் ஓசை,எண்னை வைத்து வாரி இரட்டை பின்னலோடு திருநீறும் கறுப்புப் பொட்டும் போட்டு வெள்ளைச் சீருடையில் சைக்கிள் ஓடும் மாணவிகள் மற்றும் மாணவர்கள்,,இரவு 8.30க்கு காங்கேசன் துறையில் வந்து நிற்கும் யாழ்தேவியில் இருந்து வரும் மாமா,மாமியை மச்சான்,மச்சாளை அழைத்து வரப் போகும் கறுப்புக் கார்,திருவிழாக்காலங்கள்,வாழையிலைச் சாப்பாடு,தண்னீர் பந்தல்,காப்புகள்,அம்மம்மா குழல்....என்று அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில நினைவுகள்!

இவற்றில் ஏதேனும் ஒன்று உங்கள் நினைவுகளிலும் நிழலாடக் கூடும்!

அத் திருவிழாக் காலங்களில் மாலை ஆறுமணி அளவில் சமையலறை பக்கமாய் மிக அமளியாய் இருக்கும்.தென்னந்தும்பும் சாம்பலும் கொண்டு விளக்கப் பட்ட வெங்கலப் பானையில் காய்ந்த தென்னம் மட்டைகளாலும் பன்னாடை மற்றும் பனை மட்டைகளாலும் எரிக்கப் படும் அடுப்பில் மருமக்களும் மச்சாள் மார்களுமாகக் குழல் புட்டு/ நீத்துப் பெட்டியில் பிட்டு அவிக்கும் வாசம் தூள் கிழப்பும்.பிட்டும் தேங்காய் பூவும் தரும் வாசம் என்பதையும் தாண்டி பனை ஓலையால் கூம்பு வடிவில் தயாரிக்கப் படும் நீத்துப் பெட்டிக்கும் மூங்கில் குளாயினால் செய்து பருத்தித் துணி கொண்டு சுற்றப் பட்ட பிட்டுக் குழலினால் அவிக்கப் படும் பிட்டு மீண்டும் பனை ஓலைப் பெட்டுக்குள் கொட்டப் படும்.பிட்டின் வாசமும் பனை ஓலையின் வாசமும் சேர்ந்து ஒரு வித வாசம் அந்த நாற்சார வீடு பூரா பரவும்.

சரி இதற்குப் பொருத்தமா ஏதாவது கூகுளில் படம் ஏதாவது இருக்கிறதா பார்ப்போம் என்று பார்த்தால் மாதேவி என்றொரு சகோதரி பல அரிய - இப்போது பெரும்பாலும் கானக் கிடைக்காத படங்களைப் பதிவேற்றி இருக்கிறார்.(http://maathevi.wordpress.com/)
நன்றியோடு அவரிடம் இருந்து சில படங்களை இங்கும் காட்சிக்கு வைக்கிறேன்.நன்றி மாதேவி.

இது அரிக்கன் சட்டி.இதனை ஒரு வித தாள லயத்தோடு லாவகமாக ஆட்டி அரிசியில் இருந்து கல்லைக் களைவார்கள்.



இது திரிகை.தானியங்களை மாவாக்க தரையிலே (நிலத்திலே) துணி விரித்து நடுவில் இருக்கும் துளையினுள் தானியத்தினைப் போட்டு கரையில் இருக்கும் தடியினைப் பற்றிய படி சுற்றச் சுற்ற தானியம் மாவாகி கீழே கொட்டுண்ணும்.



இது அம்மி.இதில் அரைச்சு அரைச்சு அம்மி தேய்ந்து போய் விடும்.அப்போதெல்லாம் அம்மி பொழிவதற்கென்று ஆக்கல் வருவார்கள். அம்மியில் சின்னன் சின்னனாய் நுனி கூரான ஆயுதத்தால் சிறு சிறு பள்லங்கலை உருவாக்கி விடுவார்கள். அதன் பின் இலகுவாக அரைத்து விடலாம். அரைத்துச் சாப்பிடும் சம்பலின் சுவையை மறக்குமா நாக்கு?



கொக்கத் தடி என அழைப்பது.உயர இருக்கும் பழங்கள், கெட்டுகளை கைக்குக் கொண்டுவந்து தருவது இது தான்.



இது தயிர் கடையிற மத்து.தயிரில் இருந்து வெண்னையும் மோரையும் பிரித்தெடுக்கப் பயன் படுவது.


உரல்! மறக்க முடியுமா இதை? உரல் மாதிரி ஏன் நிக்கிறாய் என்று பேசுவதில் இருந்து இதன் மகிமை உங்களுக்குத் தெரிந்திருக்கும்.அது மாத்திரமா? அது ஒரு ஜிம் மாதிரி! இயற்கையான எக்சசைஸ்.குறிபாகப் பெண்களுக்கு.அரிசியை நனையப் போட்டு இடிப்பது, மிளகாய் வறுத்து இடிப்பது என்று அதன் பயன் பாடு பல விதத்தில்.

இதைப் போல பொக்குணி உரல் என்றும் ஒரு உரல் இருந்தது. அது மரத்தாலானது. இடித்து இடித்து அது மிக ஆழத்துக்கு உட் குழிந்து போயிருக்கும். தோசைக்கு இடிச்ச சம்பல் என்று ஒன்று இதில் தான் இடிப்பார்கள்.



அடுப்பு! பறன் மீது அமைந்திருக்கும். பறனுக்கு கீழே விறகும் தென்னம் மட்டைகளும் இருக்கும். போர் காலங்களில் அவசர கால பங்கராகவும் அது பயன் பட்டது. கொங்கிறீற்ரால் அமைக்கப் பட்டது அதற்குக் காரணமாக இருக்கலாம்.சூட்டடுப்பு என்று ஒன்று பெரிய அடுப்புக்கு அருகாக இருக்கும். அதற்கு விறகு வைக்கத் தேவை இல்லை. பெரிய அடுப்பின் பிள்ளை அடுப்பு மாதிரி அது.பெரிய அடுப்பில் இருந்து வரும் நெருப்பும் சூடும் அதற்குப் போதும்.



ஆ,..! இது தான் நீத்துப் பெட்டி, மற்றும் இடியப்ப உரல். இதைத் தேடிய போது தான் மாதேவியின் வலைப்பதிவினைக் கண்டடைந்தேன். மீண்டும் நன்றி மாதேவி!இதற்குள் அவிக்கும் புட்டுக்கு தனி வாசம். தனி மகத்துவம்!எங்கட ஊர் பாசையில சொல்லுறதெண்டா, ‘சொல்லி வேலையில்லை’



பாக்கு வெட்டி! பாக்கு வெட்ட!!இப்ப காணக் கிடைக்குமோ தெரியாது!குறிப்பா வெளிநாட்டில பிறந்த தமிழ் பிள்ளையளுக்கு கட்டாயம் இது ஒரு புதினமாத்தான் இருக்கும்!



சட்டியும் அகப்பையும்! களிமண்ணில் செய்து சுட்டெடுத்த சட்டி!தேங்காய் துருவிய சிரட்டையில் செதுக்கித் துளையிட்டு தடியினைச் சீவி உள் நுளைத்து செம்மையுறச் செய்யப் பட்ட அகப்பை!! நெருப்படுப்பில் சமையல்!! - அது ஒரு காலம்! இயற்கையோடு இசைவுற வாழ்ந்த கடந்த நூற்றாண்டு!



காம்புச் சத்தகம்! இது வால்புறம் கூராக இருக்கும்.பெட்டி இளைக்கப் பயன் படுவது.ஓலை வார, மற்றும் இளைக்கப் பட்ட பெட்டிக்குள் ஓலையை செலுத்த ஓலையை பக்கவாட்டுக்கு கூராக வெட்டவும் அது சமயத்துக்குப் பயன் படும்.மேலும் கூரான பகுதி துளையிட்டு ஈர்க்கில் சொருகப் பயன் படும்.



ஆட்டுக் கல்! வேறையென்ன தோசைக்கு அரைக்கத் தான். தோசைக்கு இட்லிக்கு மாவாட்ட!கருங்கல்லு மேட்.இப்ப கிறைண்டர் வந்து விட்டதால் இதுவும் இனி மியூசியம் குவாலிட்டி!!



சுளகும் இடியப்பத் தட்டும்! சுளகு அரிசியில் இருந்து நெல்லை வேறாக்க,தானியங்களில் இருந்து குறுணிகளை,மேலும் கஞ்சல்களை வேறாக்க என்று பலதுக்கும் பயன் படுவது.அதனை பயன் படுத்துவதிலும் ஒரு லாவகம் இருக்கும். ’தனக்குத் தனக்கெண்டா சுளகு படக்கு படக்கெண்று அடிக்குமாம்’ என்ரொரு பழமொழி ஊரில் வழக்கில் இருந்தது.கடசி வரைக்கும் அந்த லாவகம் எனக்கு கைவரவே இல்லை என்பது ஒரு தனிப்பட்ட சோகம்.

இடியப்பத் தட்டு மூங்கில் நார்களினால் பின்னப் படுபவை. பின் நாட்களில் அவை வெள்ளை நிறப் பிளாஸ்டிக்கிலும் வந்த ஞாபகம்.இப்போது இன்னொன்றும் நினைவுக்கு வருகிறது. அந் நாட்களில் கதிரைகளும் இந் நார்களினால் பின்னப் படுபவையே!



திருவலகை! இது தான் சமையலறை நாயகன்.இதில இருந்து முழுத் தேங்காயும் துருவி எடுத்து முதல் பால், இரண்டாம் பால், கப்பிப் பால் என்று பிறிம்பாக எடுத்து வைத்து விட்டால் ஊர் சமையலில் பாதி வேலை முடிந்ததற்குச் சமன். இப்ப இங்கு தாய் லாந்தில் இருந்து ரின்னில் தேங்காய் பால் வருகிறது.குறைந்த விலையில் கிடைக்கவும் செய்கிறது.என்றாலும் யாரும் அதில் சமைப்பதில்லை!!



வெத்திலத் தட்டம்!வெத்திலை வைக்கப் பயன் படுவது.யாரும் வீட்டுக்கு வந்தால் முதலில் நீட்டப் படுவது.



இதுவும் மாதேவியின்ர வலைப் பக்கத்தில் தான் இருந்தது. தட்டத்துக்கு அருகில் இருப்பதைப் போடு செம்பு எண்டு எழுதி இருக்கிறா.அது வெத்திலையை ஸ்ரொக் பண்ணுற சாமானா இருக்கலாம்.



இதுக்குப் பேர் விசிறி. பனையோலையில செய்யிறது.வெய்யில் காலத்தில விசுக்கிறது.இப்ப நீங்கள் பதிவ வாசிச்சும் நல்லாக் களைச்சுப் போயிருப்பியள். அவ்வளவு நீட்டாப் போச்சுது.

விசிறி வேணுமோ?




விசேட நன்றி;மாதேவி.

(http://maathevi.wordpress.com/)

Wednesday, December 29, 2010

பிசிராந்தையார் போல வாழ்க




நல்லென கற்று
நலம் பெறுவீரென
நம்மரசளித்த
நன்கொடை இந்நூல்.
நன்கிதைப் பேணி
நலமே கற்று
நற்குணம் பெற்ற
நற்குடியாவீர்.

சிறு வயதில் இலவசமாகக் கிடைத்த அரச பாடசாலை நூல்களில் முதல் பக்கத்தில் எழுதி இருக்கும் வாசகங்கள் இவை.முதன் முதல் இலங்கையில் பிரேமதாசா ஆட்சிக்கு வந்த போது இலவச பாடநூல், இலவச சீருடைத் துணி, இலவச பிஸ்கற் என்பன பாடசாலையால் வழங்கப் பட்டதுடன் பல்கலைக் கழகக் கல்விக்கும் நல்ல புள்ளிகள் பெற்ற மாணவர்களுக்கு மஹாபொல என்ர்ற அரச மானியமும் வழங்கப் பட்டது மங்கலாக நினைவிருக்கிறது.

சுகம் வரும்; ஆள் தப்பாது என்ற கனக்காக அரசு எப்படி இருக்க வேண்டும் என்பதும் அது எவ்வளவு முக்கியம் என்பதும் புரிந்து கொள்ளப் படாது போய் விட்டதால் நாட்டில் நடந்த அனர்த்தங்களை நாமறிவோம்.மழையும் புயலும் அடித்தோய்ந்த தேசம் அது இப்போது.சேதப் பட்டுக் கிடக்கிறது தேசம்.

அதே நேரம் அந்த நற்குணம் பெற்ற நற்குடி என்பது பாடசாலைக் கல்வியால் கிட்டுகின்றதா? அல்லது பாரம்பரியமாகக் கற்பிக்கப் படாமலே நடைமுறை வாழ்க்கையினூடு கடத்தப் பட்டுக் கொண்டிருக்கும் குடும்பச் சமூகப் பண்பாட்டினால் வந்து சேர்கின்றதா அல்லது நாமாக ‘நம்மை’ உருவாக்கிக் கொள்கின்ற போது கிட்டுகின்றதா என்பதும் சுவாரிசமான விவாதப் பொருளாக இருக்கும்.

கற்றறிவு பெற வசதியற்ற ஏழைகள் நல்ல நற்குடி மக்களாக இருப்பதையும் நல்ல கல்வியறிவும் பண அந்தஸ்தும் கொண்டுள்ள மக்கள் சிலர் நற்குண இயல்புகள் என்பது பற்றி மேம்போக்கான தன்மையைக் கொண்டவர்களாக இருப்பதையும் நடைமுறை வாழ்வில் நாம் காண்கிறோம்.

நேற்றய தினம் பார்த்த இலங்கையின் தினக்குரல் என்ற தமிழ் பத்திரிகை ஒன்றில் (26 டிசம்பர்2010) திருமலை நவம் என்பார் “பனையோலையும் பாடும் மீனும் கட்டி வளர்த்த கலாசாரங்கள் வாழுமா” என்ற தலைப்பில் சமூகப் பொறுப்புணர்வுள்ள கட்டுரை ஒன்றை எழுதி இருந்தார்.அதில் மேலைத் தேய மாயங்கள்,மரபுகளின் திரிபு,இளவயதுத் திருமணங்கள்,விவாகரத்து மலிவுகள்,இளைஞர்களின் நடத்தை சார் மாற்றம்,சிறுவர்கள் துஷ்பிரயோகம்,மாணவ வக்கிரங்கள்,ரியூஷன் ஆதிக்கம்,மூத்தோரை மதியாமை,சடங்குகளின் தேய்வுகள்,மனம் முடிக்காக் கன்னியரின் மன உளைச்சல்கள்,கணிகையர் வியாபரம் என பல விடயங்களை மன வருத்தத்தோடு பட்டியலிட்டிருந்தார்.

இவற்றுக்கு என்ன காரணம்? அல்லது யார் காரனம்? பிச்சைக் காரர்களே இல்லாதிருந்த ஊர் நம்முடய ஊர்.வறுமையிலும் செம்மையாய் வாழ்ந்த மக்கள் எம் மக்கள்.தமிழையும் கோயிலையும் கண்ணெனக் காத்து நின்றவர்கள்.கல்வியிலும் தாம் சார்ந்த பண்பாட்டிலும் தனித்துவமாய் திகழ்ந்தவர்கள் அவர்கள்.

இன்று எத்தனை அநாதைக் குழந்தைகள் நம் ஊரில்!நிராதரவாய்,நிக்கதிக்குள்ளாகியிருக்கும் ஏதுமறியாச் செல்வங்கள் எத்தனை பேர்!போர் உக்கிரம் பெற்றிருந்த பொழுதில் B.B.C யே கதியாய் கிடந்த போது ஓர் இளந்தாய் இப்படிக் கதறினாள்.’என் கணவனைத் தொலைத்து விட்டேன்; என் 13 வயது மகள் இறந்து போனாள்; என் சிறுமகன் தன் கால்களில் ஒன்றையும் கைகளில் ஒன்றையும் இழந்து போனான்.இறந்த என் மகனின் உடலையும் காயமுற்ற என் மகனையும் இந்தத் திறந்த வெளி மருந்துகளற்ற வைத்திய சாலையில் வைத்துக் கொண்டிருக்கிறேன்.

சுற்றிவரக் காயமுற்றும் இறந்தும் கிடக்கும் உடல்கள்.ஒன்றரை வயது நிரம்பிய பெண்குழந்தை ஒன்று அழுதவாறு என்னை நோக்கி வந்தது. யார் பெற்ற பிள்ளையோ! பசியோ? பெற்றோர் இறந்தனரோ? அல்லது தொலைத்து விட்டதோ? யாதுமறியேன். நான் எப்படி அக்குழந்தையைக் காப்பேன்”என்று கதறி அழுத குரல் இன்னும் காதுகளில் கேட்ட வண்னமாக இருக்கிறது.

அரசும் சமூகமும் இதற்கு எவ்வளவு தூரம் பொறுப்பேற்க முடியும் என்பது பற்றியும் அதன் தார்ப்பரியம் பற்றியும் யோசித்துப் பார்த்த போது ஒரு வானொலி நிகழ்ச்சி ஒன்றுக்காகத் தயார் படுத்தி வைத்திருந்த சங்க காலப் பாடல் ஒன்று நினைவுக்கு வந்தது. மகிழ்ச்சிக்கும் நல்வாழ்வுக்கும் என்னென்னெ தேவை என்பது பற்றி அந்தப் புற நாநூற்றுப் பாடல் அழகாகச் சொல்கிறது.(பாடல்191)

பிசிர் என்றொரு ஊர். அங்கே ஆந்தையார் என்றொரு புலவர்.அதனால் அவருக்குப் பிசிராந்தையார் என்று பெயர்.இது என்ன விசித்திரமான பெயராக இருக்கின்றதே என்று நீங்கள் சற்றுச் சிந்திக்கலாம். இயற்கையோடு பின்னிப் பிணைந்த வாழ்வு முறையைக் கொண்டிருந்த வாழ்க்கை வாழும் மக்கள் அவர்கள்.காலம் கிறிஸ்து பிறப்பை அண்டிய நூற்றாண்டு. அதனால் கண்ணுக்குத் தென்படும் இயற்கை அம்சங்களை வைத்துப் பெயர் சூட்டும் மரபு புழக்கத்தில் இருந்திருக்க வேண்டும்.அவருக்கு ஆந்தையின் ஏதோ ஒரு அம்சம் பொருந்திப் போயிருக்க வேண்டும். அதனால் அவர் பெயர் பிசிராந்தையார் ஆகி விட்டது.

அவர் கம்பீரமாக நடந்து வருகிறார்.அவர் அக அழகு முகத்தில் பிரகாசிக்க கம்பீரமாக உற்சாகமாக நடந்து வருகிறார்.உடல் தளர்ந்திருந்தாலும் முகத்தில் ஒரு பிரகாசம். புன்னகையில் ஒரு பூரணம்.பரி பூரண திருப்தி ஒன்று அவர் முகத்தில் நர்த்தனமாடுகின்றது.அதனால் நடை குதியாட்டம் போடுகிறது.தலையில் கூட மூப்பின் சாயல் எதுவும் இல்லை.

பார்ப்பவர்களுக்கு அவர் ஒரு ஆச்சரியம்.அவரிடம் அவரது இளைமையின் இரகசியத்தைக் கேட்கிறார்கள்.அவர் பாடலில் பதில் சொல்கிறார் இப்படி.

“யாண்டு பலவாக நரையில ஆகுதல்
யாங்கு ஆகியர் என வினவுதீர் ஆயின்
மாண்ட என் மனைவியடு; மக்களும் நிரம்பினர்
யான் கண்டனையர் என் இளையரும்; வேந்தனும்
அல்லவை செய்யான்; காக்கும் அதன் தலை;
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே”

பல ஆண்டுகள் வாழ்ந்த பின்னாலும் என் தலையில் நரை எதுவும் தோன்றவில்லையே காரணம் யாது என்று கேட்பீர்கள் ஆயின் (யாண்டு பலவாக நரையிலவாகுதல்; யாங்கு ஆகியர் என வினவுதீர் ஆயின்; யாண்டு - ஆண்டு; யாங்கு - எப்படி)அதற்குக் காரணம் மாண்புடைய எனது மனைவி!சொல் கேட்கும் என்னுடய பிள்ளை!விசுவாசமுளள என் வேலையாட்கள்!வேந்தனோ பிழையான எதனையும் செய்யாதவன்.காக்கும் அவனுடைய தலை(அவனுடைய தலைமை என்னைக் காக்கிறது).என்னைச் சுற்றிச் சூழ இருக்கின்ற குடிமக்களோ ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர்.அதாவது நன்கு கற்று சரியான கொள்கையைக் கண்டறிந்து, அடங்கி;அதன் படி வாழும் சான்றோர்கள் என் சுற்றம் சூழ இருக்கிறார்கள்.இது நான் வாழும் ஊர்.

இதுவே அதற்குக் காரணம் என்கிறார் பிசிராந்தையார்.

புது வருடம் ஆரம்பிக்க இன்னும் ஒரு சில நாட்களே உள்ளன.இலத்திரனியல் கண்டுபிடிப்புகளால் உலகோடும் உலகத் தமிழர்களோடும் மிக இலகுவாகத் தொடர்பாட முடிகிறது.பாதுகாப்புக்கு உத்தரவாதம் உள்ள ஊரில் இருக்கிறேன்.என் தேசத்து மக்களை அவர் தம் இழப்புகளை நினைத்துப் பார்க்கிறேன்.

அவர்களுக்கான மன நிறைவை; மகிழ்ச்சியை யார் தருதல் கூடும்?

தாயகத்து அநாதைக் குழந்தைகளே!இளம் விதவைகளே!நிக்கதியான குடும்பங்களே!குடிசை வாழ் உறவுகளே!பிசிராந்தையாருக்குக் கிட்டியது போன்றதொரு வாழ்வு உங்கள் எல்லோருக்கும் அமைவதாக!.

மற்றும் என் சக பாடிகளே உங்கள் எல்லோருக்கும் கூட என் புது வருட வாழ்த்துக்கள் உரியதாகுக.

இப்படியான ஒரு அழகிய வாழ்வு எல்லோருக்கும் கிட்டட்டும்!

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

(படம் எண்னை வர்ணம்;ஓவியர்;இளையராஜா; நன்றி; கூகுள் இமேஜ்)

Tuesday, December 7, 2010

ஒளிரும் ஓவியம்

வருட இறுதி!

விடுமுறை ஆரம்பம்!!

புது வருடத்தில் மீண்டும் உங்கள் எல்லோரையும் சந்திக்கிறேன்.

எல்லோருக்கும் என் சுபீட்சமான நத்தார், புது வருட வாழ்த்துக்கள்!

வருகின்ற புது வருடம் எல்லோருக்கும் அன்பையும் மகிழ்ச்சியையும் உண்மையையும் நேர்மையையும் அதனால் விளைகின்ற நின்மதியையும் எடுத்து வரட்டும்!

அது வரை இந்த அழகிய எண்ணை வர்ண ஓவியம் இப்பக்கத்தை அலங்கரிகிறது.

இதனை ஓவியக் கலைஞர் இளைய ராஜா என்பவர் தை மாதம் ஒன்பதாம் திகதி 2010 ல் தீட்டியிருக்கிறார்!

எத்தனை அழகு! எத்தனை அழகு!!

பெண்ணின் அழகு,வெளிச்சம் படும் அழகு,பாவாடைக் கரை,வலையல்கள்,உட்கார்ந்திருக்கும் லாவகம், தூரிகைக்குள்ளால் கொண்டு வந்திருக்கும் பெண்ணின் வயது, அமானுஷமாக ஆச்சர்யமாக தூரிகை துலங்குகிறது! ஓவியமாய் மிளிர்கிறது! ஆஹா! என்ன அருமை!!

இது ரவி வர்மன் எழுதாத கலையோ?

“ஒளிரும் ஓவியம்”


Wednesday, December 1, 2010

கைத்தடி (HUCKLEBERRY FRIEND)



சில வாரங்களுக்கு முன் நான் Huckleberry Friend என்ற ஆங்கிலப் பதம் பற்றிப் பிரஸ்தாபித்து அதற்கு இணையான தமிழ் பதம் பற்றி நான் மதிக்கின்ற பதிவர்களில் ஒருவரான பழைமை பேசியிடம் கேட்டிருந்தேன். அதற்கு அவர் அளித்திருக்கின்ற அழகான தமிழ் விளக்கம் இவ்வாரம் என் வலைப்பூவை அலங்கரிக்கிறது.

மிக்க நன்றி சகோதரா!


ஆசுதிரேலியாவில இருந்து பதிவர் மணிமேகலை அவங்க, Huckleberry Friend எனும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் கேட்டு இருந்தாங்க. நமக்கு இருக்கிற கடுமையான வேளைப்பளுவுக்கு இடையில, அதற்கான என் தரப்பு விபரங்களை உடனே கொண்டு சேர்க்க முடியலை.

அதான், இந்த நன்றி நவிலும் நாளுக்கான விடுப்பைப் பாவிச்சிகிட்டு இந்த இடுகைய இடுறேன். முதல்ல, அவங்களுக்கு சொல்ல விரும்புறது, ஒரு கிராமத்தான்கிட்ட இது போலக் கேட்டா, கிராமத்துத்தனமாத்தான் விடை வரும். இஃகி!

சரி, Huckleberry Friend அப்படின்னா என்ன? எளிமையானவனாக இருக்கலாம்; பெரிய பின்புலம் இல்லாதவனாவும் இருக்கலாம்; ஏழ்மையானவனாகவும் இருக்கலாம்; பெரிய படிப்பறிவு இல்லாதவனாகவும் இருக்கலாம்; மொத்தத்தில் அற்பனாகவும் இருக்கலாம்.

அப்படி இருந்தும், இக்கட்டான நேரங்கள்ல, ஏழைப்பங்காளனா வந்து உதவக் கூடிய ஒருவரைச் சொல்றதுதாங்க இந்தப் பதம். பசி, பட்டினி, மற்ற உணவுகள் கிடைக்காமை போன்ற நேரங்கள்ல நாம, தோட்டங்காட்டுல இருக்குற இரக்கிரியப் புடுங்கி கடைஞ்சி உங்றது இல்லையா? அது போலத்தானுங்க இதுவும். எந்த நேரத்துலயும் பசிக்கு உதவுற ஒரு கனிதான். அதை ஒப்பிட்டு, அவசரத்துக்கு உதவுற நண்பன்னு சொல்லிச் சொல்றதுதான் இந்த ஆங்கிலப்பதத்தின் பின்னணி.

சரி, இனி நம்ம வாழ்க்கையில அமைஞ்ச Huckleberry Friend பத்திப் பேசுலாமுங்க. ஆமாங்க, இது எனக்கு மட்டும் அல்ல; ஊர்ல சமகாலத்துல இருந்த எல்லாருக்குமே இதானுங்க Huckleberry Friend. அது என்ன??

ஆமாம்; சிஞ்சுவாடி காளியாத்தா கோயல் நோம்பிக்கிப் போனா வாங்குவேன். தை நோம்பியப்ப மாலகோயலுக்குப் போனா வாங்குவேன். தைப்பூசத்தப்ப செஞ்சேரிமலை தேரோட்டத்துக்குப் போகும் போதும் வாங்குவேன். முக்கோணம் முத்தாலம்மன் கோயில் நோம்பிக்குப் போனாலும் வாங்குவேன். கடைசியா, அம்பது நயாப் பைசாவுக்கு வாங்கினதா ஒரு நினைவு. அது என்ன??

அண்ணாக்கவுத்துக் கொத்துதானுங்க அது. அரைஞாண் கயிற்றுல தொங்கவுடுற அந்தக் கொத்துல மூணு சிறு பொருட்கள் இருக்குமுங்க. முதலாவது, சின்ன இடுக்கி. அதுல எதையும் பிடிச்சி உருவலாம், பிடுங்கலாம். இரண்டாவது, காதூசி. சும்மா ஒரு ரெண்டு விரக்கடை அளவுக்கு நீட்டமா வந்து, முனையில சின்னதா மடிப்போட இருக்கும். மூனாவதா, முள்ளூசி. சின்ன ஊசிங்க, அதுல கால்ல ஏறுன முள்ளைக் கடைஞ்சி எடுக்கலாம். பல் குத்தலாம்.

இதுதானுங்க என்னோட இடருய்தி. எந்த இடைஞ்சல்னாலும், இதைத்தான் முதல்ல பாவிப்பேன். கால்ல முள் ஏறிடுச்சா, இவர்தான் கை கொடுப்பாரு. காதுல குப்பை, அழுக்கு எடுக்கணுமா, இவர்தான் உதவுவாரு. பல் குத்தணுமா, இவர்தான்! பேனாவுல நிப்பைப் புடுங்கணுமா, இவர்தான். சாவி இல்லாத ஊட்ல பூந்து ஆட்டையப் போடணுமா, இவர்தான்! இப்படி, தேவைங்ற போது வந்து நிக்கிற இடருய்திங்க இது! கிட்டத்தட்ட நான் கல்லூரிப் படிப்பு முடியுற வரைக்கும், என்னுடலின் ஒரு அங்கமா இருந்தாருங்க இவரு!

அடுத்துச் சொல்லப் போனா, காக்காப் பொன்னு! இதுவும் பல வழிகள்ல நமக்கு உய்வனா இருந்தாருங்க. குறிப்பா, இளம்பிராயத்துல, பெண் தோழமை கிடைக்க உதவி செய்தது இதான்! ரேவதி, சுகுண சரசுவதி, சந்திரலேகா, கீதா, சாந்தாமணி அப்படின்னு ஊர்ல இருக்குற பொண்ணுக எல்லாம் நம்ம மேல ஒரே அன்பா, பந்த பாசமா இருப்பாங்க. எல்லாம், இந்த காக்காப்பொன்னு செய்த உதவிதான்!

ரேவதி அவங்க தோட்டத்துக் கொய்யாப்பழம் வேணுமா? கொஞ்சம் காக்காப்பொன்னு கொடுத்தாப் போதும், இனிப்பான கொய்யாப்பழம் என்னோட இடம் தேடி வரும். வீதம்பட்டி மாரியாத்தா கோயில் நோம்பிக்கு செய்த தினைமாவும், அரிசிமாவும் வேணுமா, சாந்தாமணிக்குக் கொஞ்சம் அள்ளிக்குடு காக்காப்பொன்னை... இப்படி நெம்ப உதவிகரமா இருந்துச்சுங்க இந்த காக்காப் பொன்னு!

எப்பவும் என்னோட பைக்கட்டுல காக்காப்பொன்னு கைவசம் இருக்கும். அது என்ன இந்த காக்காப்பொன்னு??

வாய்க்கா மேட்டுல இருக்குற கருங்கல்லு, கிணத்து மேட்டுல இருக்குற கருங்கல்லு, இப்ப்டித் தோண்டி எடுத்து கருங்கல்லுல அங்கங்க, மினுமினுன்னு மின்னிகிட்டு இருக்குமுங்க இந்த காக்காப்பொன்னு. மேல சொன்ன முள்ளூசிய வெச்சி சன்னமா நோண்டுனா, பாளம் பாளமா பெயர்ந்து வருமுங்க இந்த காக்காப் பொன்னு.

எந்த அளவுக்குப் பெருசா பேர்த்து எடுக்குறீங்களோ, அந்த அளவுக்கு உங்களுக்கான கிராக்கி கூடும். இதை அவிங்கங்க, பள்ளிக்கூடத்துப் பைக்கட்டுல ஒரு பொன்னாப் பாவிச்சு வெச்சிக்குவாங்க. எப்பவாச்சும் சிலேட்டுப் பென்சில் இல்லாதப்ப, அதை வெச்சி எழுதிக்கவும் செய்யலாம். இவர்னால, நான் அடைஞ்ச பலன்கள் கொஞ்ச நஞ்சமில்லங்க. ஆகவே, இவரும் நமக்கு ஒரு இடருய்திதானுங்க!

கொஞ்சம் வளர்ந்தவுட்டு, அமைஞ்ச Huckleberry Friend யாரு? கைத்தடிதானுங்க அது. வேலூர்ப் பள்ளிக்கூடத்துல இருந்து எங்க ஊட்டுக்கு அஞ்சு மைல். தினமும் அரக்கன் இட்டேரி வழியா நடந்து போய்ட்டு வரணும். அப்ப, போகும் போதும் சரி, வரும் போதும் சரி, எங்க எல்லார்த்து கையிலயும் கைத்தடி ஒன்னு இருக்கும்.

இது சமகாலத்துல வளர்ந்த, பெரியவங்களுக்கும் பொருந்தும். தோட்டங்காட்டுக்குப் போய் வரும் போதெல்லாம் கைத்தடியோடத்தான் போவாங்க, வருவாங்க. மூணு அடி நீளத்துல இருக்குற கைத்தடி எதுக்கும் உதவுமுங்க. பாம்படிக்கலாம்; ஓணானைப் புடிச்சி விளையாட்டுக் காட்டலாம். உயரத்தில தொங்குற கிளையக் கீழ சாச்சி, நெல்லிக்கா, சூரிக்கா பறிக்கலாம். சமயத்துல, லொள்ளுப் பேசுறவனையும் ஒரு காட்டுக் காட்டலாம். இடருக்கு உய்பவன் இடருய்தி.

Huckleberry Friendன்னு எப்படி ஒப்புமைப்படுத்திச் சொல்றாங்களோ, அதே போல இந்தக் கிராமத்தானும் அந்த மாதிரி அன்பு நண்பர்களைச் சொல்றது, அவிங்க என்னோட கைத்தடின்னு. இப்பத்தான், கைத்தடி அப்படிங்றதை இளக்காரமாப் பாவிக்கிறாய்ங்க. என்னைப் பொறுத்த மட்டிலும், கைத்தடி, கைத்தடிதானுங்க!!

Wednesday, November 24, 2010

செம்மொழியான தமிழ் - தொகுப்பு



தமிழ் செம்மொழிகளில் ஒன்று.

இன்று உலகில் செம்மொழிகளாகக் கருதப்படும் மொழிகள் 8 ஆக இருக்கின்றன.

•இந்தோ-ஐரோப்பிய மொழிகள்:
◦கிரேக்க மொழி
◦சமஸ்கிருதம்
◦இலத்தீன்
◦பாரசீக மொழி
•ஆபிரிக்க-ஆசிய மொழிகள்:
◦அரபு மொழி
◦எபிரேயம்
•திராவிட மொழிகள்:
◦தமிழ்
•சினோ-திபெத்திய மொழிகள்:
◦சீன மொழி

2. 1. கிரேக்கம்
கிரேக்க மொழி மிகப் பழமையான பாரம்பரியம் வாய்ந்த ஒரு மொழியாகும். கிரேக்க இலக்கியத்தில் ஹோமர் எனும் மகாகவியின் காப்பியங்களான இலியது, ஒடிசி ஆகியன கி.மு.700 ல் வரி வடிவத்தை அடைந்திருந்தாலும் அதற்கு முன்பாகச் செவி வழிச் செய்திகளாக பல நூற்றாண்டுகள் இருந்திருக்கக் கூடும் என்கிறார்கள். கி.மு 500 ஆம் ஆண்டு முதல் கி.மு.310 ஆம் ஆண்டு காலத்தில் பல இலக்கியங்கள் இம்மொழியில் படைக்கப்பட்டுள்ளன. ஹிரொடோட்டஸ் என்பவரின் வரலாற்றுப் பதிவுகள், டுமாஸ் தனிசின் சொற்பொழிவுகள் , பிளேட்டோ , அரிஸ்டாட்டில் போன்றவர்களின் தத்துவ நூல்கள் போன்றவை இன்றும் கிரேக்க மொழியின் இலக்கிய வளத்திற்குப் பெருமை சேர்ப்பதாக உள்ளது. மேலும் அந்நாட்டில் உள்ள 4500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பிரமிடுகள் இன்னும் அந்நாட்டின் கட்டிடக் கலைக்குச் சான்றாக விளங்குவதும் குறிப்பிடத் தக்கது.

2. 2. இலத்தீன்
ஐரோப்பிய நாடுகளில் உள்ள இலத்தீன் மொழியில் வர்ஜில் என்பவர் படைத்த இனீட் எனும் காவியம் சிறப்புடையது. மேலும் இம்மொழி அறிஞர்களான சிசிரோ, சேலஸ்ட், டேசிட்டஸ், செனகா போன்றவர்களின் சொற்பொழிவுகள் , தத்துவங்கள் இலத்தீன் மொழிக்கு வளம் சேர்க்கின்றன. கி.மு.70 முதல் கி.பி. 18 வரையிலான காலப் பகுதிகளில் பல இலக்கியங்கள் படைக்கப்பட்டிருக்கின்றன. 1900 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழும் இத்தாலிய நாட்டு கோலோசியம் எனும் மாபெரும் திறந்தவெளி அரங்கம் பழம் கட்டிடக்கலைக்குச் சான்றாக விளங்குகிறது.

2. 3. அரபு மொழி
அரேபிய மொழியில் எழுத்து வடிவம் கி.மு.328 ஆம் ஆண்டில் அரச குடும்பத்தினரின் இறுதிச் சடங்கில் பொறிக்கப்பட்டது என்கிறார்கள். அரேபிய மொழியில் குர் ஆன் சிறந்த இலக்கியமாகி விட்டது. அரேபியப் பழமொழிகள் , கவிதைகள் போன்றவை ஏழு மற்றும் எட்டாம் நூற்றாண்டுகளில் எழுத்து வடிவம் பெற்றிருக்கின்றன. முகலாயர்களின் பண்டையக் கட்டிடக் கலையின் சிறப்புத் தன்மைகள் உலகமே வியக்கக் கூடியதாய் உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத் தக்கது.

2. 4. சீனம்
சீன இலக்கியம் மிகப் பழமை வாய்ந்த ஒன்றாகும். சீன இலக்கிய வரலாற்றில் கி.மு. 600 ஆம் ஆண்டின் காலப்பகுதியில் வாழ்ந்த கன்ஃபூசியஸ் , லாவுட்ஸ் என்பவர்கள்தான். கன்ஃபூசியஸ் சீன மொழியில் கி.மு.3000 ஆண்டு முதல் கி.மு. 600 ஆம் ஆண்டு வரையுள்ள இலக்கியங்களை நான்கு தொகுதிகளாகத் தொகுத்தளித்திருக்கிறார். ஐந்தாவதாக அவருடைய படைப்பான தென்றலும் வாடையும் தந்திருக்கிறார். லாவுட்ஸ் “தாவ்” எனும் நெறியை வழங்கியிருக்கிறார். இவர்கள் வழங்கிய இலக்கியம் இன்னும் உலகம் முழுவதும் எடுத்துக்காட்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சீனாவின் கட்டிடக் கலைக்கு அங்குள்ள 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவர் ஒன்றே போதுமானது.

2. 5. ஹீப்ரூ
ஹீப்ரு மொழிக்கு கி.மு. 12 ஆம் நூற்றாண்டு முதல் தற்காலம் வரை நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கி.மு. 3 ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலத்தில் பழைய ஏற்பாடு எழுதப்பட்டது. இது விவிலியக் காலம் எனப்படுகிறது. ஜீடா-ஹா-நசி என்பவரால் யூதர்களின் நீதிநெறிகள் , சட்டங்கள் ஆகியவை கி.பி. 200 ஆம் ஆண்டு காலப் பகுதியில் தொகுக்கப்பட்டது. இது மிஷனா காலம் எனப்படுகிறது. இத்தொகுப்பிற்கு பல தலைமுறை அறிஞர்கள் எழுதிய விளக்கம் கெமாரா என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டது. மிஷ்னா மற்றும் கெமாரா ஆகிய இரண்டின் தொகுப்புதான் யூதர்களின் முக்கிய நூலாக இருக்கும் டாலமுட் எனப்படுகிறது. மூன்றாவதாக கி.பி 6 ஆம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை இடைக்காலம். அடுத்ததாக நவீன ஹீப்ரு காலம். அரசர் எரோது என்பவர் 3000 ஆண்டுகளுக்கு முன்பு ஜெருசலேம் பகுதியில் எழுப்பிய சாலமன் ஆலயம் இம்மொழியின் கட்டிடக்கலைக்குச் சான்றாக விளங்குகிறது.

2. 6. பாரசீகம்
ஈரான் நாட்டின் ஆட்சி மொழியான பாரசீகம் அரேபிய வரி வடிவத்தில்தான் எழுதப்படுகிறது. இன்றைய உலக நாகரீகங்கள், அறிவியல் முதலியவற்றை உலகிற்கு வழங்கியது முந்தைய பாரசீகம்தான். இன்று உலகம் முழுவதும் பயன்பாட்டில் இருக்கும் எண்கள் பாரசீகம் வழங்கியதுதான். உமர் கய்யாம் எனும் கவிஞரின் கவிதைகள் உலகம் போற்றக் கூடிய ஒன்றாகும். பாரசீகத்தின் பழமையை 2500 பழமை வாய்ந்த கட்டிடக் கலையான பெரிசிபோலிசு என்பதும் குறிப்பிடத்தக்கது.

2. 7. சமஸ்கிருதம்
இந்தியாவில் வடமொழி என்று அழைக்கப்பட்ட சமஸ்கிருதம் கி.மு1500 முதல் கி.மு 200 வரை வேதகால இலக்கியமாகவும், அதற்கடுத்து கி.மு. 500 முதல் கி.பி. 1000 ஆண்டுகளில் இராமாயணம் , மகாபாரதம் போன்ற காப்பியங்கள் செம்மொழிக்கான நிலையைப் பெற்றது. சர்.வில்லியம் ஜோன்ஸ் என்பவர் கல்கத்தாவில் 1784 -ல் ஆசியக் கல்விச் சங்கம் எனும் நிறுவனத்தை உருவாக்கினார். இந்நிறுவனம் மூலம் மார்க்ஸ் முல்லர், கேல் புரூக் போன்றோர் வடமொழி நூல்களை ஆங்கிலம் , ஜெர்மன் , பிரெஞ்ச் போன்ற ஐரோப்பிய மொழிகளில் வெளியிட்டார்கள். கீழை உலகின் புனித நூல்கள் என்ற வரிசையில் மார்க்ஸ் முல்லர் பதிப்பித்த 50 தொகுதிகளில் பெரும்பாலானவை வடமொழி நூல்களாகும். இலக்கியம் , தத்துவம் , அரசியல் போன்ற துறைகளில் பெரும்பான்மையாக கிரேக்க, ரோமானியப் பங்களிப்புகளையே பார்த்துக் கொண்டிருந்த ஐரோப்பியர்களுக்கு வேதம் , உபநிடதம் , இதிகாசங்கள் , காப்பியங்கள் , நாடகங்கள் , தத்துவ நூல்கள், நீதி நூல்கள் போன்றவை வடமொழி இலக்கியத்தை செம்மொழியாகக் கருதச் செய்தது.

2. 8. தமிழ்
இந்தியாவில் ஆரியம் சார்ந்த பண்பாட்டிற்கு வடமொழி எப்படி விளங்கியதோ அதைப் போலவே திராவிடம் சார்ந்த பண்பாட்டிற்கு திராவிட மொழிகளில் முதலாவதான தமிழ் 6000 ஆண்டுகள் இலக்கியப் பழமை வாய்ந்தது. ஐரோப்பிய நாகரீகத்தை அறிந்து கொள்ள கிரேக்கம், இலத்தீன் மொழிகள் போல் இந்திய வரலாற்றை அறிய தமிழ், சமஸ்கிருதம் மொழிகள் தேவையாக உள்ளது. தமிழின் செம்மொழித் தகுதிக்கு திருக்குறள் மற்றும் சங்க இலக்கிய நூல்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், தொல்காப்பியம் , சிலப்பதிகாரம் , மணிமேகலை , முத்தொள்ளாயிரம், இறையனார் களவியல் போன்றவை உள்ளன.

ஒரு மொழியை செம்மொழியாக தகுதி உயர்த்த மொழியியல் அடிப்படையில் விதிகள் வகுத்துள்ளனர். அந்த விதிகள் அனைத்தும் தமிழுக்குப் பொருந்தி வருவதால் செம்மொழி எனும் நிலைக்கு தமிழ் உயர்ந்து விட்டது. உலக இயற்கை மொழிகளிலேயே மிக மிக மூத்த மொழியாக தமிழ் இருப்பினும் அதற்கு உரிய காலத்தில் செம்மொழி எனும் மதிப்பு காலம் தாழ்த்தி வழங்கியுள்ளமை சற்றே நெருடலானது.

தகுதிகள்
செம்மொழிக்கான தகுதிகள் பதினோரு விதிகளாக வழங்குகின்றனர். அவை :

1. தொன்மை
2. தனித்தன்மை
3. பொதுமைப் பண்பு
4. நடுவு நிலைமை
5. தாய்மைப் பண்பு
6. பண்பாட்டுக் கலை அறிவு பட்டறிவு வெளிப்பாடு
7. பிற மொழித் தாக்கமில்லா தன்மை
8. இலக்கிய வளம்
9. உயர் சிந்தனை
10. கலை இலக்கியத் தனித்தன்மை
11. மொழிக் கோட்பாடு

1. தொன்மை

செம்மொழி நிலைக்கு ஒரு மொழி ஆயிரம் ஆண்டுக்கால தொன்மை படைத்ததாக விளங்க வேண்டும். தமிழோ ஆயிரமல்ல ஈராயிரம் ஆண்டிற்கும் மேலாகப் பேசி, எழுதி, படைத்து தனக்குள்ளே பெரும் இலக்கியச் செல்வங்களைக் கொண்டது. இதனை எவராலும் மறுக்கப்படாமல் ஏற்கத்தக்க அளவிற்கு இதன் தொன்மை சிறப்பானது. அத்துடனில்லாமல் இன்றளவும் உலகமெங்கும் பரவியுள்ள தமிழர்களின் பேச்சு மொழியாகவும், எழுத்து மொழியாகவும், கல்வி கற்கும் மொழியாகவும், படைப்பு புனைதலில் புதிய புதிய துறைகளிலும் நிகரற்று விளங்குவது அதன் தனிச் சிறப்பு.

2. தனித் தன்மை

பல்வேறு திணை நிலங்களிலும் திராவிட குடும்ப மொழிகள் கிளைத்திட வைத்த தமிழ், தாயாக விளங்கி தனக்கென ஒரு மொழிக் குடும்பத்தை உருவாக்கி தன்னைச் சுற்றி வேர்களாகவும், விழுதாகவும் மொழிகள் கிளைப்பினும் தன்னிலை மாறாத உன்னத நிலையுடன் நிலைபெற்று விளங்குவது இதன் தனித்தன்மையாகும்.

3. பொதுமைப் பண்பு

உலகின் எந்த இயற்கை மொழிக்கும் இல்லாத சிறப்புமிக்க இலக்கணக் கட்டமைப்பு கொண்டது தமிழ் மொழி. தமிழின் இலக்கணப் பொதுமைப் பண்பு நெறிகள் திராவிட மொழிக் குடும்பத்திற்கு மட்டுமல்லாமல் இதர இயற்கை மொழி அனைத்தும் பயனுறும் வகையில் அமைந்துள்ளது இதன் சிறப்பாகும்.

4. நடு நிலைமை

தமிழின் இலக்கண விதி உன்னத நெறியுடனான பன்முகத் தன்மை கொண்டது. எனினும் இதன் இலக்கண விதிகள் வேறு எதனுடனும் சாராமல் தனித்தியங்கி நடுநிலையுடன் விளங்குவது.

5. தாய்மைத் தன்மை

தமிழ் எனும் மூல மொழி தான் மட்டுமே என்ற தன்னலமின்றி தாய்மைப் பண்புடன் திராவிட மொழிக் குடும்பம் உருவாகிட அடிப்படையில் விளங்கியது. பேச்சு மொழியென்றும், இலக்கிய வளமிக்க மொழிகளென்றும், பல்வேறு தன்மையுள்ள மொழிக் குடும்பத்தில் முதலாய் ஏனையவற்றுக்குத் தொடக்கமாய் விளங்கும் தாய்மைப் பண்பு ஏனைய இயற்கை மொழிகளை விட சிறப்பானது.

6. பண்பாட்டுக் கலையறிவு பட்டறிவின் வெளிப்பாடு

தமிழின் உன்னதமே அதன் இலக்கிய வளங்கள் தாம். தமிழரின் அகத்திணைக் கோட்பாடும், புறத்திணைக் கோட்பாடும் இலக்கியப் படைப்பாளர்களான முன்னோர்களின் பண்பாட்டுக் கலையறிவின் வெளிப்பாடாகும். அகத்திணை புறத்திணை மட்டுமல்லாமல் மெய்யியல் கோட்பாடும், அறவழிக் கோட்பாடும் வேறெந்த இயற்கை மொழிப் படைப்பிலும் தமிழில் உள்ள அளவுக்கு இல்லை. இந்த இலக்கிய வளமே தமிழ்ப் புலவர் பெருமக்களின் அறிவுப் புலன் சான்றாக இன்றளவும் திகழ்கிறது.

7. பிறமொழித் தாக்கமில்லா தனித் தன்மை

உலகில் நிலவும் மொழிக் குடும்பங்களில் மூல மொழியாய்த் திகழும் மொழிகள் யாவும் வேர்ச் சொல்லாக்கத் திறன் குறைவால் பிறமொழிகளின் கூறுகளை சில துறைகளில் தாங்கி நிற்கின்றன.

வினைகளால் ஒரு புதிய துறை சார்ந்த சொற்களை தமிழில் எளிதாக உருவாக்கும் அளவுக்கு இலக்கண வளம் செறிந்தது தமிழ். ஆகையினால் கடந்த காலமாயினும் சரி நிகழ்காலமாயினும் சரி எதிர்காலமாயினும் சரி எக்காலத்திலும் சமூகப் பண்பாட்டில் நிகழும் மாற்றங்களுக்கேற்ப தனித் தன்மையுடன் தனக்கேயுரிய இலக்கண செழுமையுடன் தமிழில் புதிய சொற்களை, துறைகளை உருவாக்குதல் எளிது.

காட்டாக, கம்ப்யூட்டர் எனும் 20ஆம் நூற்றாண்டு சாதனம். உலகெங்கும் பல துறைகளில் பரவியது போன்றே தமிழ் நிலத்திலும் காலூன்றியது. பிறமொழிகள் அதில் வழங்கும் துறை சார்ந்த சொற்களை நேரடியாகப் பயன்படுத்தும் நிலையில் தமிழில் அதனை பொருளுணர்ந்து கணியம், கணினி, கணிப்பொறி என ஆக்கம் செய்து பயன்படுத்தல் ஒன்றே தமிழின் பிறமொழி கலவாத் தனிந்தன்மை விளங்கிக் கொள்ளத்தக்கது.

8. இலக்கிய வளம்

தமிழர் தமிழ் இனம் எனும் மக்களினத்தைத் தெளிவாக அறியக்கூடிய காலக் கண்ணாடியாக விளங்குவது தமிழில் உள்ள இலக்கியங்களே. இலக்கியங்கள் வழியாக தமிழரைப் பார்க்கும் போது தமிழ் நிலத்தில் ஓங்கி இருந்த பண்பாட்டை, சமூக, பொருளாதார, இயற்கைக் கோட்பாட்டுடன் இணைந்த தமிழரின் வாழ்வை, வளத்தை அறிய இயலும்.

சங்க காலத்திலிருந்து தொடங்கும் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒவ்வொரு காலம் தோறும் அந்தந்த சூழல்களுக்கேற்ப அரசன், தலைவன், தெய்வம், அற வாழ்க்கை, அக வாழ்க்கை, புற வாழ்க்கை, வீரம், இயற்கை வளம், பழக்க வழக்கம், வழிபாட்டு முறைகள் என்பன போன்றவற்றின் தாக்கம் எப்போதெல்லாம் அதிகரிக்கின்றதோ அப்போதெல்லாம் அது தொடர்பான இலக்கியங்கள் படைக்கப்பட்டன. எந்த இலக்கியமாக இருந்தாலும் அதில் கையாளப்படும் மொழியின் ஓசை, எழுத்து, சொல், பொருள் போன்றவை பொதுமைப் பண்புடன் துலங்கும் வகையில் இலக்கணக் கட்டமைப்புடன் இலக்கியங்கள் படைக்கப்பட்டுள்ளது.

தமிழிலக்கியத்தின் சிறப்பு : பொதுவில் இத்தகைய இலக்கியப் படைப்புகள் தனிநபர், தன்னார்வக்குழு, அரசு நிறுவனம் எனும் மூன்று தளங்களில் உருவாக்கப்பட்டன. சிற்சில இலக்கியம் தனிப்புலவர்களால் உருவாக்கப்பட்டது. அதைப் போலவே கூட்டாக புலவர்கள் குழுக்களும் நூல்களைப் படைத்துள்ளனர். இது போன்ற படைப்பிலக்கியப் பணிகளுக்கு கொடையாளர்களாக அரசர்கள், அரசாங்கம் விளங்கியுள்ளது. சில அரசர்களே புலமைமிக்கவர்களாக விளங்கி இருந்தமையால் நேரடி இலக்கியப் படைப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.

பெரும்பாலான சங்க இலக்கிய நூல்கள் புலவர்கள் அமர்ந்த பெரும் குழுவால் உருவாக்கப்பட்டு அவைகளை பிரிதொரு புலவர் குழு அந்த இலக்கிய திறனை அதன் மொழியமைப்பை ஆய்வு செய்வர். பிறிதொரு புலவர் குழு. அப்படைப்பு எக்காலமும் தமிழர்களுக்குப் பொதுவில் பயன்பட வேண்டும் எனும் உயரிய சிந்தனையால் அதன் இலக்கணக் கட்டமைப்பை ஆய்ந்திடுவர். இவ்வாறு ஒரு படைப்பு ஆய்வுக்குப்பின்னரே மக்களை அடைந்ததால் மொழிப் பயன்பாடு, பொதுமைப்பணபாடு தமிழரிடம் மிகுந்திருந்தது. தமிழ் இலக்கிய நூல்களில் கற்பனை நயத்தை விட இயைபுறு நோக்கு அதிகமிருக்கும். இயற்கையோடு இணைந்த வாழ்வியல் பண்பாட்டை தமிழர்கள் கொண்டிருந்ததால் அது இலக்கியப் படைப்புகளிலும் எதிரொலித்தன.
தமிழ் இலக்கியப் படைப்புகள் சங்க காலம் தொடங்கி 16ஆம் நூற்றாண்டு வரை செய்யுள் நடையிலேயே படைப்புகள் உருவாக்கம் நிகழ்ந்துள்ளது. ஐரோப்பியர் வருகைக்குப் பின்னரே உரைநடை எனும் புதிய நடை தமிழில் இடம் பெற்றது. பின்னர் ஈழத்து ஆறுமுகநாவலர் தொடங்கி நாடகத்தந்தை பம்மல் சம்பந்த முதலியார், திரு.வி.க. வரை பலர் உரை நடை இலக்கியம் வளர வித்திட்டனர். மேலைநாட்டு இலக்கியங்களையொத்த புதினங்கள், சிறுகதைகள் கட்டுரைகள் எனத் தமிழிலக்கியம் உரைநடை பரிமாணம் பெற்றது. செய்யுள் நடைகளில் படைத்த இலக்கியங்களில் இலக்கணக் கட்டமைப்புடன் பல்வேறு சிற்றிலக்கியங்களும், காப்பியங்களும் விரவியுள்ளன. இவற்றில் தூது, பிள்ளைத் தமிழ், பரணி, கலம்பகம், குறவஞ்சி, பள்ளு, உலா, பல்சந்தம் எனச் செய்யுள் வடிவ இலக்கியத்துள் உறுப்புகளாக விளங்குகிறது.
இது போலவே மரபு நடைச் செய்யுள் வடிவிலிருந்து புதுக்கவிதை, அய்க்கூ எனும் வடிவுடனும் தமிழ்க் கவிதை படைக்கப்படுகிறது.

தமிழ் தன் இலக்கியச் செல்வங்களால் இயைபுறு, கற்பனை இலக்கியத்துடன் நில்லாமல் தொழில் நுட்பம் சார்ந்த அறிவியல் நூல்கள் படைப்பாக்கத்திற்கும் உட்பட்டுள்ளது. படைப்பின் எந்த உறுப்பாக இருப்பினும் அதற்கேற்ற சொல்வளமும், பொருள் வளமும் தமிழில் சிறப்புடன் விளங்குவதால் உலக இயற்கை மொழிகளின் இலக்கிய தளத்தில் தமிழுக்கென தனித்துவமான இடமுள்ளது.

9. உயர் சிந்தனை

இலக்கியத்தில் உயர் சிந்தனை என்பது அது எத்தகைய படைப்பாக விளங்கிடினும் மக்கள் சமூகத்திற்கு பயன் விளைவிப்பதாக விளங்குதலே. இந்த அடிப்படைதான் தமிழ் இலக்கியங்களின் கருப் பொருளாக விளங்குகின்றன. தமிழ் இலக்கியங்கள் எத்தகைய காலத்தவையாக இருப்பினும் அவை மானுடம் போற்றும் உயர் சிந்தனைகளின் தொகுப்பாகவே மிளிர்வதைக் காணலாம். சங்க இலக்கியங்களில் பாடுபொருளாக விளங்கும் அகத்திணையும், புறத்திணையும், அறவியலும் தமிழர் வாழ்வுடன் இணைந்த உயர் சிந்தனை மரபாகும். உயர் சிந்தனை மரபுகள் இலக்கியத்தில் நிலை பெற்றிட வேண்டி இலக்கண நெறிகள் பிழையுற பின்பற்றப்பட்டன. தனிமனிதர் தொடங்கி சமூகம், அரசு என்ற மூன்று நிலைகளிலும் கோட்பாடுகளை, வாழ்வியல் நெறிகளை வலியுறுத்தும் தமிழ் இலக்கியங்களில் உள்ள உயர்ந்த சிந்தனை மரபு உலக சிந்தனை மரபிலிருந்து உயர்ந்தோங்கியவை என்பது மறுக்கவியலாது.

10. கலை இலக்கிய தனித் தன்மை வெளிப்பாடு

தமிழ் இலக்கியங்களில் திகழும் கலை நயம் தனித் தன்மை பெற்றது. தமிழ் இலக்கியங்களில் தனிப்பாடலாயினும், புலவர்கள் குழு படைத்து, தொகுத்த பாடலாயினும் அரசர்கள் அரசு உதவியுடன் படைப்புகளை உருவாக்கிய இலக்கியங்களில் இழையோடும் கலை நயமும், கவி நயமும் போற்றத்தக்கவை.

ஏழைப்புலவரான சத்திமுத்தாப் புலவர் அக்காலத்தில் பாடிப்பரிசு பெறும் வண்ணம் ஓர் ஊருக்குச் சென்றார். அது பனிக்காலம் என்பதால் மேலாடை இல்லா கவிஞர் குளிர்தாங்காமல் ஊர் புறத்தே இருந்த குட்டிச் சுவருக்கருகில் நடு நடுங்கி இருந்தார். அச்சமயம் இரைதேடப் பறந்த நாரையொன்றைப் பார்த்த சத்திமுத்தாப் புலவரின் சிந்தனை கவிபுனையத் தொடங்கியது. அவர் கவிதையை உரக்கக் கூறிய போது அந்த வழியாக இரவுக் காவலுக்குத் தாமே பொறுப்பேற்ற அவ்வூர் அரசன் குட்டிச் சுவரருகே ஒரு கவிதை ஒலிப்பதைக் கண்டு கூர்மையாக அதைக் கேட்டனன்.

"நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்
நீயு நின் மனைவியும் தென்றிசைக் குமரியாடி
வட திசைக்கு ஏகு வீராயின்
எம்மூர்ச் சத்திமுத்த வாவியுட் டங்கி
நனைசுவர்க் கூறைகளை குரற் பல்லி
பாடு பார்த்திருக்குமென் மனைவியைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதி கூடலில்
ஆடையின்றி வாடையின் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலே தழீஇப்
பேழையுள் இருக்கும் பாம்பென வுயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனும் எனுமே"

என்று பாடினார் சத்திமுத்தப் புலவர். பாடி முடித்ததும் மறைவிலிருந்த அரசன் அவரறியாமல் தன் மேலாடையை அவர் மேல் போர்த்துமாறு வீசி விட்டு உடனிருந்த காவலரை பணிந்து இப்புலவரை அரண்மனைக்கு அழைத்து வர ஆணையிட்டுச் சென்றான்.

தமிழகத்தை ஆண்ட பல அரசர்களும் சிறந்த புலமையுடையோர். இயற்கையோடு இணைந்த வாழ்வில் ஊறித் திளைப்பவர்கள். அதனால் அவர்கள் நாட்டு நலத்துடனேயே தங்களின் புலமை வளர்க்கும் திறத்தால் அறிவு சார் புலவர் பெருமக்கள் எப்போதும் அரசவையில் சூழ்ந்திருக்குமாறு வாழ்ந்தனர். இது போன்ற அவைக்களத்தில்தான் கருத்துப் பரிமாற்றம், புதிய பொருட்களை பற்றிய ஆய்வு, இலக்கியம் படைத்தல் போன்ற தமிழ்ப் பணிகள் நடந்தது. மேற்காணும் அரசனும் அத்தகையவனே. நாரையின் கூர்மையான நீள மூக்கிற்கு இயற்கையான எடுத்துக்காட்டை அறிய பல புலவர்களையும், நூல்களையும் ஆய்வு செய்தும் சரியான விடை தெரியாத நிலையில் அரசனின் ஐயத்தையும் போக்கி, தன் நிலையையும் தன் மனைவியின் பிரிவாற்றாமையையும் நயம்படக் கூறிப் பாடிய செய்யுள்.

ஒரு புலவனின் புலமை அவன் வறுமை. அரசனின் ஐயம் என்பவற்றை மட்டும் கொண்டதல்ல. அந்நாளில் ஆள்வோரும், புனைவோரும் இயற்கையோடு இணைந்த இயல்பு வாழ்க்கையில் திளைத்தனர். அவர்கள் வாழ்க்கை முழுவதும் ஒரு கோட்பாட்டுடன் விளங்கியுள்ளது. வாழ்வதற்கேற்ற நிலம், காலம் அமையப் பெற்றதால் அன்பு தழைக்கும் அமைதி வாழ்வை கொண்டிருந்தனர். அதனால் அவர்களின் சிந்தனை எச்சூழலிலும் இயற்கை வயப்பட்டதாகவே விளங்கியுள்ளது. இந்த பண்பே பொதுமையாக இக்கால இலக்கியங்களிலும் வெளிப்பாடாக விளங்குகிறது.

11. மொழிக்கோட்பாடு

உலகில் சில இனங்களின் அடையாளமாக மொழி காணப்படுகிறது. அந்த மொழியில் படைக்கப்பட்டுள்ள படைப்புகளும், மொழியின் பயன்பாடும், அதன் பொதுமைப்பண்புகளும் எல்லா காலங்களுக்கும் பொருந்தும் வகையில் மொழியானது தனக்குள் உரியவாறு கட்டமைப்பைக் கொண்டிருப்பதே அம் மொழியின் அடிப்படைக் கோட்பாடாகும். இந்த அரும்பண்புகள் தமிழுக்குண்டு.

மொழியியலார் ஒரு மொழியை மதிப்பிடுகையில் மொழியில் உருவான இலக்கியங்களை திறனாய்வு செய்வர். அதில் அம்மொழிக்குரிய இனம், அது வாழ்ந்த, வாழ்ந்துவரும் சூழல், காலம் எனும் மூன்றையும் நோக்குவர்.

ஏனெனில் ஒரு மொழியால் உருவான இலக்கியம் அச்சமூகத்தை மட்டுமே நமக்குத் தெரிவிப்பவை அல்ல. கூடவே அச்சமூகத்தை தொடர்ந்து வரும் மரபார்ந்த பண்பு நலன்கள் பலவற்றையும் தெரிவிக்கின்றன.

எனவே தான் முன்னோர்கள் தமிழ் மொழிகளின் படைப்புகள் சமுதாயத்தில் தாக்கத்தை உருவாக்கும் வல்லமை கொண்டது என்கிற காரணத்தால் இலக்கியங்கள் கற்பதற்கும், கற்பிப்பதற்கும் வழங்கும்போது பொருளமைதி குறித்த கோட்பாட்டை வகுத்தனர். இந்த கோட்பாட்டை நெறிபிறழாமல் விளங்க இலக்கணத்தை வகுத்தனர். அதனால் தான் தமிழ்மொழி தனக்குள்ளே இலக்கணம் என்கிற கட்டமைப்பை பெற்றுள்ளதால் தரமிக்க இலக்கியப் படைப்புகள் அனைத்தும் சங்ககாலம் முதல் ஓர் ஒழுங்கமைதியுடன் பேணப்பட்டுவருகிறது.

அத்துடன் வளர்ந்து வரும் புதிய துறைகள் எதுவென்றாலும் அதனையும் ஏற்று தனித்தன்மை மாறாமல் தூய தமிழ் சொற்களிலேயே அத்துறைகளை அறியும் வண்ணம் சீரிளமைத் திறனுடன் தமிழ் மொழி விளங்குகிறது. இத்திறனே அதன் கோட்பாடாகும்.

இந்தப் பதினோரு தகுதிப்பாடுகளும் தமிழுக்கு மட்டுமே பொருந்துவனவாகும் என்பதுதான் தனிச் சிறப்பு சம்ஸ்கிருதத்துக்கு ஏழு தகுதிப்பாடுகளும், லத்தீன், கிரேக்க மொழிகளுக்கு எட்டுத் தகுதிப்பாடுகளும் மட்டுமே பொருந்துகின்றன என்பது மொழியியலாளர் கணிப்பு.

தமிழ் அளவைகள்.

1 = ஒன்று
10 = பத்து
100 = நூறு
1000 = ஆயிரம்
10000 = பத்தாயிரம்
100000 = நூறாயிரம்
1000000 = பத்துநூறாயிரம்
10000000 = கோடி
100000000 = அற்புதம்
1000000000 = நிகற்புதம்
10000000000 = கும்பம்
100000000000 = கணம்
1000000000000 = கற்பம்
10000000000000 = நிகற்பம்
100000000000000 = பதுமம்
1000000000000000 = சங்கம்
10000000000000000 = வெள்ளம்
100000000000000000 = அந்நியம்
1000000000000000000 = அற்ட்டம்
10000000000000000000 = பறற்ட்டம்
100000000000000000000 = பூறியம்
1000000000000000000000 = முக்கோடி
10000000000000000000000 = மகாயுகம்

இது போல் அளவைகளுக்கும் வாய்ப்பாடுகள், பெயர் வழக்குகள் இருந்திருக்கின்றன.உதாரணமாக,

நீட்டல் அளவை

காதம் = 10 மைல்
ஓசனை = 4 காதம்
கல் = 1 மைல்
முழம் = முழங்கை முதல் நடுவிரல் நுனிவரை
சாண் = கட்டைவிரல் நுனி முதல் சிறுவிரல் நுனி வரை
ஒட்டைச் சாண் = கட்டைவிரலுக்கும் ஆள்காட்டிவிரலுக்கும் இடையில் உள்ள இடைவெளி.
சாட் கோல் = சாண் அளவுள்ள கோல்
அங்குட்டம்= கட்டை விரல் நீளம்
அடி= 12 அங்குட்டம்
காசாங்கிரம்= மயிர் நுனி அளவு
ஆள்= ஒரு மனிதனின் உயரம்

நிறுத்தல் அளவை

ஆழாக்கு = 1/8 படி
செவிடு = 1/5 ஆழாக்கு
சேர் = 5 ஆழாக்கு
வீசை = 1400 கிறாம்
இடா = முகத்தல் அளவை( எதுவென்று தெரியவில்லை)
உழக்கு = 1/4 படி
சின்னப் படி = 1/2 படி
பக்கா = 2 படி
லட்டி = 1 படி
வல்லம் = 2 அல்லது 4 படி
எத்துணை = எள் அளவு
கஃகு = 1/4 பலம்
பலம் = தோராயமாக (அண்னளவாக) 35 கிறாம்(1 மஞ்சாடி?)
இறாத்தல் = 13 பலம்

கோட்டை = 21 மரக்கால்
தூணி = 8 மரக்கால்
கலரை = 1 1/2 மரக்கால்
குருணி (மரக்கால்)= 8 படி

பரப்பளவு

குண்டு = 1089 சதுர அடி
குழி = 144 சதுர அடி
மா = 100 குழி
வேலி = 20 மா(6.67 ஏக்கர்)


கற்பம் = பிரம்மாவின் ஒரு நாள் 4,32,00,00,000 வருடம்
பதும கற்பம் = பிரம்மாவின் வாழ்க்கையின் முதல் பகுதி
உரி = அரை நாழி
கன்னல் = (நாழிகை)24 நிமிடங்கள்
கணம் = நொடிப் பொழுது / கண் இமைக்கும் பொழுது.
படலம் = செயல் நடக்கும் நேரம்

கால அளவு


யாமம் = 3 மணி நேரம் அல்லது 7 1/2 நாழிகை
மண்டலம் = 40 / 41 / 45 நாட்கள்
மாமாங்கம் = 12 வருடங்கள்.


இறங்குமுக இலக்கங்கள்

1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
/23654400 - மும்மி
1/165580800 - அணு
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்


அளவைகள்

நீட்டலளவு

10 கோன் - 1 நுண்ணணு
10 நுண்ணணு - 1 அணு
8 அணு - 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் - 1 துசும்பு
8 துசும்பு - 1 மயிர்நுணி
8 மயிர்நுணி - 1 நுண்மணல்
8 நுண்மணல் - 1 சிறுகடுகு
8 சிறுகடுகு - 1 எள்
8 எள் - 1 நெல்
8 நெல் - 1 விரல்
12 விரல் - 1 சாண்
2 சாண் - 1 முழம்
4 முழம் - 1 பாகம்
6000 பாகம் - 1 காதம்(1200 கெசம்)
4 காதம் - 1 யோசனை


பொன்நிறுத்தல்

4 நெல் எடை - 1 குன்றிமணி
2 குன்றிமணி - 1 மஞ்சாடி
2 மஞ்சாடி - 1 பணவெடை
5 பணவெடை - 1 கழஞ்சு
8 பணவெடை - 1 வராகனெடை
4 கழஞ்சு - 1 கஃசு
4 கஃசு - 1 பலம்


பண்டங்கள் நிறுத்தல்

32 குன்றிமணி - 1 வராகனெடை
10 வராகனெடை - 1 பலம்
40 பலம் - 1 வீசை
6 வீசை - 1 தூலாம்
8 வீசை - 1 மணங்கு
20 மணங்கு - 1 பாரம்

முகத்தல் அளவு

5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி


பெய்தல் அளவு

300 நெல் - 1 செவிடு
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி
5 மரக்கால் - 1 பறை
80 பறை - 1 கரிசை
48 96 படி - 1 கலம்
120 படி - 1 பொதி

தமிழ் கால அளவு, நாள், திதி, மாதம், ஆண்டுகள் குறித்த ஒரு பார்வை:

கால அளவு:

1 நாழிகை = 24 நிமிடம்
2 1/2 நாழிகை = 1 மணி
3 3/4 நாழிகை = 1 முகூர்த்தம்
7 1/2 நாழிகை = 2 முகூர்த்தம் = 1 ஜாமம்
8 ஜாமம் = 1 நாள் (பகல் + இரவு சேர்ந்து)
7 நாள் = 1 வாரம்
15 நாள் = 1 பக்ஷம் (பட்சம்)
2 பக்ஷம் = 1 மாதம்
2 மாதம் = 1 ருது (பருவம்)
3 ருது = 1 ஆயனம்
2 ஆயனம் = 1 வருடம்



நாட்கள்:

ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி

திதிகள்:

பிரதமை, திவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, த்வாதசி,திரயோதசி, சதுர்த்தசி, பெளர்ணமி, அமாவாசை.

மாதங்கள்:

சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி.

பக்ஷங்கள்:

கிருஷ்ண பக்ஷம், சுக்ல பக்ஷம்.

பருவங்கள் (ருதுக்கள்):

இளவேனில் (வசந்த ருது), துவேனில் (கரிஷ்ம ருது), கார் காலம் (வர்ஷ ருது), குளிர் காலம் (சரத் ருது),முன்பனிக் காலம் (ஹேமந்த ருது), பின் பனிக் காலம் (சிசிர ருது).

ஆயனம்:

6 மாதங்கள் அடங்கியது ஒரு ஆயனம். மொத்தம் 2 ஆயனங்கள்

உத்தராயனம் -சூரிய ஒளிக் கதிர்கள் நில நடுக்கோட்டிற்கு வடக்கே நேரடியாக வீழும் காலம்.

தக்ஷினாயனம் - நில நடுக்கோட்டிற்கு தெற்கே வீழும் காலம்.

ஆண்டுகள்:

1.பிரபவ
2.விபவ
3.சுக்கில
4.பிரமோதூத
5.பிரஜோத்பதி
6.ஆங்கீரச
7.ஸ்ரீக
8.பவ
9.யுவ
10.தாது
11.ஈஸ்வர
12.வெகுதான்ய
13.பிரமாதி
14.விக்கிரம
15.விஷூ
16.சித்திரபானு
17.சுபானு
18.தாரண
19.பார்த்தீப
20.விய
21.சர்வசிஷ்து
22.சர்வதாரி
23.விரோதி
24.விக்ருதி
25.கர
26.நந்தன
27.விஜய
28.ஜெய
29.மன்மத
30.துன்கி
31.ஹேவிளம்பி
32.விளம்பி
33.விகாரி
34.சார்வரி
35.பிளவ
36.சுபகிருது
37.சோபகிருது
38.குரோதி
39.விஸ்வவசு
40.பராபவ
41.பிளவங்க
42.கீலக
43.செளமிய
44.சாதாரண
45.விரோதிக்ருது
46.பரிதாபி
47.பிரமாதீச
48.ஆனந்த
49.ராக்ஷ
50.நள
51.பிங்கள
52.காலாயாகுதி
53.சித்தார்த்தி
54.ரெளத்ரி
55.துன்மதி
56.துந்துபி
57.ருத்ரோகாரி
58.ரக்தாக்ஷி
59.குரோதன
60.அக்ஷய

குழந்தைகளின் பருவம்10;

ஆண் பிள்ளைப் பருவம்;

1. காப்பு (2ம் மாதம்)
2.செங்கீரை (5ம் மாதம்)
3.தால் (7ம் மாதம்)
4.சப்பாணி (9ம் மாதம்)
5முத்தம் (11ம் மாதம்)
6.வருகை (13ம் மாதம்)
7.அம்புலி (15ம் மாதம்)
8.சிற்றில் (18ம் மாதம்)
9.சிறுபறை (19ம் மாதம்)
10.சிறுதேர். (21ம் மாதம்)

அது போல பெண் பிள்ளைப் பருவம்

1.காப்பு
2. செங்கீரை
3.தால்
4.சப்பாணி
5.முத்தம்
6.வருகை
7.அம்புலி
8.கழங்கு
9.நீராடல்
10.ஊசல்.

தமிழ் வரி வடிவம் இன்றுள்ள நிலையை அடைந்த வரலாறு;




தமிழில் கணக்குக்கு தனியான எழுத்து முறை இருந்திருக்கிறது.


தமிழ் இலக்கங்கள்:



( ௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௱ ௲ )



அதனை இப்போதும் மொறிசியஸ் நாடு தன் ரூபாய் நோட்டுக்களில் பயன் படுத்தி வருகின்றது.



கடித எந்திரம்:

காலத்தைக் கணக்கிட கடிக எந்திரம் எனப்படும் நேரக் கணக்கிடும் கருவியை அக்காலத் தமிழர்கள்பயன்படுத்தியுள்ளனர். கடிகை + ஆரம் என்ற இரு பதங்களும் சேர்ந்துதான் கடிகாரம் என்று மருவியுள்ளது.

இந்தக் காலம் அறியும் கருவியை மாலை போல கழுத்தில் சூடிக் கொண்டிருப்பர் அக்காலத்து தமிழர்கள்.இதனால்தான் இதற்கு கடிகை, ஆரம் என்று பெயர் வந்தது. சூரியனின் போக்கை வைத்து நேரம் அறிய இந்தக்கருவி உதவியதாம்.

குத்து மதிப்பாகத் தமிழ் சொத்து விபரங்கள் இவை.


நன்றி; இணைய உலாவி.

Thursday, November 18, 2010