Thursday, September 22, 2022

பண்ணையில் ஒரு மிருகம் - நாவல் குறித்த பார்வை -



8.7.22 அன்று வெள்ளிக்கிழமை மாலை பத்திரிகையாளர், கவிஞர். பாஸ்கரன் அவர்களது இல்லத்தில் இலக்கியக் கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிட்டியது. கொரோனாக் கால இடர்களின் பின் சாஸ்வதமாக மேடை, பேச்சு, மைக்  என்ற ஆரவாரங்கள் இல்லாத கலந்துரையாடலில் சுமார் 10பேர் கலந்து கொண்டிருந்தார்கள். எழுத்தாளர் நடேசன் அவர்களும் அவர் மனைவியும் மெல்போர்னில் இருந்து வந்திருந்ததால் அவரின் ‘பண்ணையில் ஒரு மிருகம்’ நாவல் அப்போது தான் பிறந்த குழந்தையாக ( மே 22 வெளிவந்திருக்கிறது) என் கைக்குக் கிட்டி இருந்தது. அது குறித்து கலந்துரையாடியதன் விரிவாக்கம் இது.

எச்சரிக்கை! பதிவு சற்று விரிந்தது!! 

 84 - 86 க்கிடைப்பட்ட தமிழகக் கிராமம் ஒன்று பற்றிய அந் நாடல்லாத ஒருவரின் வரிகளில் விரிந்த ஒரு பார்வைப் புலம் இந்த நாவல்.

இலங்கையரான அவுஸ்திரேலியாவில் வாழும் மிருகவைத்தியராகத் தொழில் புரியும் சிறுகதைகள், நாவல்கள், பயண இலக்கியம், தொழில் அனுபவங்களை தமிழுக்குத் தந்திருக்கும் நோயல் நடேசனின் ஐந்தாவது நாவல் இது.

காலச்சுவடு பதிப்பாக 2022 மேயில் இந் நாவல் வெளிவந்திருக்கிறது.சுமார் அறிமுகம், முன்னுரைகளைத் தவிர்த்துப் பார்த்தால் 130 பக்கங்களில் 10 அத்தியாயங்களாக விரிகிறது கதை.

கதையை நான் சொல்வது தகாது. அது என் நோக்கமும் அல்ல. அது வாசகர்களின் முன்மொழிவுகள் இல்லாத பார்வைக்கும் ரசனைக்கும் அனுபவிப்புக்கும் உரியது. இருந்த போதும்,  கண்ணுக்குப் புலனாகாமல் உலவி வரும் ‘சமூகமிருகம்’ ஒன்று பற்றியது இந்த ’பண்ணையில் ஒரு மிருகம்’ என்ற இந் நாவல் என்று சொல்வது தவறாகா. ஆனால் நிச்சயமாக நான் இந்தக் கதைப்போக்குப் பற்றியும்  அதனை அவர் எவ்வாறு நகர்த்திச் செல்கிறார் என்றும் பேசுதல் தகும். 

அதனை மூன்று பிரதான உப தலைப்பில் பார்ப்பது நான் விடயத்தை விட்டு விலகிச் செல்லாதிருக்க உதவும் என்பதால் அப்படிப் பிரித்துக் கொள்கிறேன்.

1. அவர் கதையை நகர்த்திப் போகிற பாணி.

2. அதில் எடுத்தாளப்பட்டிருக்கிற ஒரு சூட்சுமத்தளம்.

3. வரலாற்றுப் புள்ளி.

1, கதைப்பாணி:

மழைக்கால இரவொன்றின் குளிர் காலக் கும்மிருட்டில் கைநிறைய மின்னி மின்னிப் பூச்சிகளை அள்ளி கைகளை விரித்தால் பறந்து செல்லும் காட்சியை; அதே கும்மிருட்டில் ஒரே ஒரு வாண வேடிக்கை வானில் மலர்ந்து கீழே கொட்டும் ஒரு காட்சியை; பார்க்கும் போது நம்மை அறியாமல் முகத்தில் இயல்பாக  மலரும் மந்தகாசமான புன்னகை போல கதை நிறையக் கொட்டிக் கிடக்கின்றன உவமைகள். அவை வலிந்து திணிக்கப்பட்ட வாடா மலர்களாக அல்லாமல் இயல்பாக மலர்ந்து மணம் வீசும் பூக்களின் புன்னகைகளை ஒத்திருக்கிறன. 

ஒரு குழந்தையின் சிரிப்புப் போல இயல்பாக மலரும் அவை கதையை உந்தித்தள்ளுவதில் பிரதான இடத்தை வகிக்கின்றன. பொதுவாக ஒரு இடத்தைச் சம்பவத்தை விபரிக்க எழுத்தும் சொற்களும் வகிக்க வேண்டிய இடத்தை இங்கு உவமைகளே எடுத்துக் கொண்டுவிட்டதால் ஆசிரியருக்கும் விபரிக்க வேண்டிய தேவை ஏற்படாது கதை முன்நகர்ந்து போய் விடுகிறது. ஒரு ரோச் லைட்டைப் போல ஆசிரியர் உவமைகளைக் கச்சிதமாகக் கையாண்டுள்ளார் என்றே தோன்றுகிறது.

அதில் வரும் சில உவமைகள் என்னைச் சங்ககாலத்தின் இலக்கிய அழகியலில் கொண்டு சென்று நிறுத்தின. உதாரணமாக ‘இருட்டில் தனித்தெரியும் குழல்விளக்கைப் போல புன்னகை’ என்கிறார் ஆசிரியர். அது 

‘மாக்கடல் நடுவண் எண்னாட் பக்கத்துப்

பசுவெண் திங்கள் தோன்றியாங்குக்

கதுபயல் விளங்கும் சிறுநுதல்’ (குறு 129) 

என்பதை நினைவூட்டிப் போகிறது. இருட்டில் தெரியும் 8 ம் பிறைபோல கருங்கூந்தலுக்கிடையே அவள் நெற்றி’ என்பது சங்கத்துக் கவிஞன் காட்டும் காட்சி.

நாவலில் ஓரிடத்தில் வயிற்றில் கத்தியால் குத்திய இரத்தக் காயம். அது மேலாடையில் ஊறி  ஆசிரியருக்கு சுதந்திரத்திற்கு முந்திய இந்திய வரை படம் போல இருக்கிறதாம். அது சங்ககாலத்தில் 

‘கலைநிறத்து அழுத்திக்

குருதியோடு பறித்த செங்கோல் வாளி 

மாறுகொண் டன்ன உண்கண்’ (குறு 272)

ஆகத் தெரிகிறது. மானின் மார்பிலே ஆழமாகத் தைக்கப்பட்ட அம்பை வெளியே இழுத்தால் அது எப்படி இரத்தம் தோய்ந்து அதன் முனைப்பகுதி காணப்படுமோ அதனை எடுத்துப் (பக்கம்பக்கமாக) மாறுபட வைத்தது மாதிரி அப்பெண்ணின் கண்கள் காணப்படுகின்றனவாம்.

இன்னோர் இடத்தில் ஒரு காட்சியை ஆசிரியர் விபரிக்கிறார். ஒருவர் ஆட்டினால் குத்துப்பட்டு சரிந்து கிடக்கிறார். ‘ பெரிய மரக்கதிரையில் தலை சாய்த்துக் கைகளைக் கிழே தொங்கவிட்டபடி மேவாய் நெஞ்சில் தொட ஏதோ மங்கலச் சடங்கிற்காக வெட்டியபின் அந்தச் சடங்கு தடைப்பட்டதால் வெட்டிப் பல நாட்களாக, வேலியில் சாய்த்து வைக்கப்பட்ட வாழையாக அந்தக் கதிரையில் அவர்...’ இந்தக்காட்சி மனதில் படமாக எழுந்த போது தவிர்க்கமுடியாமல் ஒரு கலித்தொகைக் காட்சி (10) நினைவுக்கு வந்தது. 

வாடி நிற்கும் மரத்தைக் கவிஞர் சொல்ல வருகிறார். ‘ இளமையில் வறுமை உள்ளவன் மாதிரி தளிர்கள் வாடி இருக்கிறது; கொடுக்கிறதுக்கு மனமில்லாதவர் போல அம்மரம் நிழல் குடுக்காமல் இருக்கிறது; தீங்கு செய்யிறவரின்ர இறுதிக்காலம் புகழ் இல்லாமல்; பார்க்கவும் யாரும் இல்லாமல் கெட்டுப் போன மாதிரி மரம் வெம்பி, வாடி, வதங்கிப் போயிருக்கு’ என்கிற அந்த கலித்தொகைக் காட்சியை நினைவு படுத்துகிறது எழுத்தாளரின் காட்சியமைப்பு.

இவ்வாறு அநேக காட்சிகள் ஆங்காங்கே காணக்கிடைக்கின்றன. எனினும் அவை அழகுக்காகச் சேர்க்கப்பட்டவையல்ல; அவை கதையை உந்தித் தள்ளும் எத்தனங்களாகப் பயன் பட்டுள்ளன. ஒரு வெட்டுக்கிளியைப் போல கதைகள் துள்ளித் துள்ளி முன்னகர இவைகள் உந்துகோலாகியுள்ளன. இங்குதான் கற்பனை வளமும் அழகியலும் கதையோடு பின்னிப்பிணைந்து வாசகருக்கு சுவையூட்டுகின்றன. அது ஓர் ஓய்வு நாளொன்றில் ஓய்வான மனநிலையோடு சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து சுவையாகத் தயாரிக்கப்பட்ட ஒரு கோப்பியோடு  புத்தகம் வாசிக்கும் சுகம் போன்றது. கடனில்லாத ஒரு பெரு வாழ்வு போல; நோயில்லாதிருக்கும் ஒரு உடல்வாகு போல சுகம் தருவது.

இலக்கியம் ஒன்றின் அழகு கதை மட்டும் அல்ல; கதையை ஆசிரியர் நகர்த்திச் செல்லும் அழகு, பாணி, நுட்பம், தமிழை - மொழியை எடுத்தாளும் இலாவகம் ... அவை சிறப்பாக அமைந்து அவைகளில் உங்கள் மனம் இலயித்து ஈடுபடுமானால் அது தானே இலக்கிய சுகம்! வாசிப்புச் சுவை. இல்லையா? இங்கும் வாசிப்புச் சுவைக்கு பஞ்சமிருக்கவில்லை. 

’எதிர்பாராத போது யாரோ முகத்தில் கொதிநீரை நேரெதிரில் நின்று எற்றியது போல வார்த்தைகள் சுட்டன’,’நெருப்புப் பற்றிய வீட்டில் இருந்து வெளியேறும் அவசரம் மனதுக்குள்’, ’சேர்க்கஸ் புலி வனத்துக்குச் சென்றது மாதிரி’, ’நாடியும் நாளமும் பக்கம் பக்கமாக இருந்தாலும் பிரிந்து இருப்பது போல’, ’சிங்கம் ஒன்று தன் இரையைப் பங்கு போட மறுத்து மற்றய சிங்கத்தைப் பார்த்து உறுமுவது போல குறட்டை’, ’போரில் களைத்து இளைப்பாறும் யானைகளைப் போல குடிசைகள்’, ’சூரியன் நிலத்துக்கருகில் வந்து குளித்த குழந்தையின் தலை ஈரத்தைத் துவட்டும் தாயாக ஈரத்தை ஒத்தி எடுத்திருந்தது’, (மழைக்காட்சி ஒன்று) ’வானத்திலே தீபாவளி; (இடியும் மின்னலும்) அது அசுரர்களும் அரக்கர்களும் பூமியில் வந்து ஆடிக்குதித்துக் கொண்டாடுவது போல இருந்தது’, ’எடையைக் குறைக்க அளவாகச் சாப்பிடுவது மாதிரி பேச்சுவார்த்தை’, ’நீர் அள்ளாத கிணற்றில் கிடக்கும் பாசியாக நினைவுகள்’..... இவை நான் ரசித்த சில உதாரணங்கள். இவைகள் எல்லாம் வாசகருக்கு நல்லதொரு இலக்கியத்தரம் வாய்ந்த வாசிப்பனுபவத்தைத் தருகிறது. தமிழ் மெல்ல புன்னகைக்கிறது. அது ஒரு வசீகரமான இலக்கியப் புன்முறுவல்.

ஆனால் இந்த அழகியலை அவர் ஏன் தொடக்கத்தில் இருந்து இறுதி வரைக்கும் கொண்டு செல்லவில்லை என்று தெரியவில்லை. அவர் பாணியில் சொல்வதானால் கரும்பின் சுவை மேலே மேலே போகப்போகக் குறைவதைப் போல கதையிலும் போகப்போக இந்த ’மின்மினிப்பூச்சிகளும்’ மறைந்து போய் விட்டன. ’இருள்’ சூழ்ந்து விட்டது.

2. சூட்சுமத்தளம்:

இந் நாவலைப் பின்ன ஆசிரியர் தேர்ந்தெடுத்துக் கொண்ட இன்னொரு உத்தி இந்தச் சூட்சுமத்தளம். இது ஒரு ஆழமான நோக்கிற்குரியது என்பது என் அனுமானம். இது குறித்த ஆழமான பார்வையும் அறிவும் எனக்கில்லை. இருந்த போதும், என் இனிய தோழி கீதா.மதிவாணன் மொழிபெயர்த்த ‘நிலாக்காலக் கதைகள்’ என்ற யப்பானிய 18ம் நூற்றாண்டுப் படைப்பாளி யுடா அஹினாரியை அறிந்த பின் யப்பானிய தத்துவார்த்தங்கள், அவர்களின் சிந்தனை மரபுகள், யென் மற்றும் சூஃபி தத்துவங்கள் பற்றிய மேலோட்டமான பார்வை கிடைத்தபின் பெற்ற விழிப்பு இந்த சூட்சுமத்தளம் பற்றிய என் பார்வை சிறிதளவேனும் விரியக் காரணமாயிற்று. 

தமிழ் மரபு அறங்களைக் கொண்டாடி இருக்கிறது.  ‘அவரவர் கருமமே’ கட்டளைக் கல்’ என்பது குறள் காட்டும் அறவழி. சீன,யப்பானிய அராபிய தத்துவார்த்தங்கள் பூவுலக வாழ்வோடு மட்டும் தம் சிந்தனையை நிறுத்துவனவல்ல. அவை இறப்புக்குப் பின்னாலும் ஆய்வை மேற்கொள்வன. இந்திய தத்துவ ஞானம் போல் அறக்கருத்துக்களைத் தோறணங்களாக அவை தொங்கப் போடுவனவல்ல. மாறாக அவை சமூக ஒழுங்குகளைப் புரட்டிப் போட்டு நம்மை சிந்திக்கத் தூண்டுவன. அதற்கு அவர்களும் 18ம் நூற்றாண்டு பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, இங்கிலாந்து எழுத்தாளர்களும் கையாண்ட ஒரு யுக்தி தான் இந்த மஜிக் றியாலிசம், மாந்திரிக யதார்த்தம், மற்றும் மாய யதார்த்தம் என அழைக்கப்படுவன என்றறிகிறேன். 

இங்கு பாத்திரங்கள் இறந்த பின்னும் பேசும்; கனவுகளில் வழிகாட்டுதல்களை வழங்கும்; அதற்கும் இதற்கும் ஒத்தனவாக காட்சிகள் காணக்கிடைக்கும், கனவின் தொடர்ச்சியாக நனவுலகில் நிகழ்வுகள் நடக்கும். அவ்வப்போது அந்த உலகுக்கும் இந்த உலகுக்குமான காட்சிப்புலங்கள் ஒன்றுகலந்து விட்டிருக்கும். யுடா அஹினாரி அது போன்றவர். யப்பானிய படைப்பாளிகளால் பெரிதும் மதிக்கப்படுபவர். 

அது மாதிரி முல்லாவையும் காணலாம். பலரும் நினைப்பது மாதிரி அவர் இந்திய தென்னாலிராமன் மாதிரி விகடகவி அல்லர். அவர் ஒரு சூஃபி ஞானி. அவர் சமூக ஒழுங்குகளைக் குழப்பிப் போடுதலின் வழியாக மக்களைச் சிந்திக்கத் தூண்டியவர். இவ்வாறான சூஃபிகளை ‘இதயத்தின் ஒற்றர்கள்’ என்றும் ‘மனதின் இயக்கத்தை வேவு பார்ப்பவர்கள்’ என்றும் அறியப்படுகிறார்கள்.அவரின் கதை ஒன்று இப்படியாக வரும்.

‘அனுபூதி மரபுகளைஅறிந்துவர போய் வந்தார் முல்லா. வந்தபின் என்ன அறிந்துகொண்டீர்கள் என்று கேட்டனர் சீடர்கள். ‘கரட்’ என்று சொல்லிவிட்டு மெளனமானார் முல்லா. அதனைக் கொஞ்சம் விரித்துச் சொல்லுங்களேன் என்றனர் சீடர்கள். ‘கரட்டின் பயனுள்ள பாகம் மண்ணுக்குள் புதைந்து போயுள்ளது.வெளியே தெரியும் பச்சை இலைதழைகளைப் பார்த்து அதனடியில் ஒரேஞ் நிற கிழங்கு இருப்பதை அனுமானிக்க முடியாதிருக்கிறது. அதே நேரம் உரிய நேரத்தில் கிழங்கை வெளியே எடுக்காவிட்டால் அது மோசமடைந்தும் போய் விடும். அதோட அந்தக் கரட்டோட தொடர்புடைய பல கழுதைகளும் இருக்கின்றன’ என்றார் முல்லா. ( என்றார் முல்லா; முல்லா.நஸ்ருதீன் கதைகள், தமிழில் சஃபி, பக் 231)

இந்த அமானுஷ்யங்களும் கரட்டைப் போன்றவை தான். எழுத்தாளக் கமக்காரர்  பேனாவால் கிண்டிக் கிண்டி கரட்களை பிடுங்கிப் போடுகிறார்கள். மரவெள்ளிக் கிழங்கோடு போராடும் நமக்கு கரட்கள் புதிய பார்வைகளை நல்குகின்றன. புதிய பார்வைப் புலங்களும் நவீன காட்சிகளும் அந்த அமானுஷ்ய கண்ணாடி வழியே புலப்படுகின்றன. தமிழ் சூட்சுமத்தளத்தில் ஏறி நிற்கிறது. அது ஒரு புதிய குன்றம். அதிலிருந்து பார்க்கக் கிடைக்கும் தமிழ் / தமிழகப் பண்ணைப் பரப்பும் வெளியும்  சற்று வித்தியாசமானது. புதியது. அதனை ஆசிரியர் மிகுந்த எச்சரிக்கையோடு ஒரு சத்திரசிகிச்சை நிபுணரின் கைத்திறத்தோடு குன்றத்தில் ஏற்றி வைத்திருக்கிறார்.

முன்னுரையில் சிவகாமி எடுத்துக் காட்டும் புத்தர் பிறக்குமுன் நிகழ்ந்தவை, யேசுவின் வருகைக்கு முன் நிகழ்ந்தவை, முகம்மது நபிக்கு கப்ரியேல் உரைத்தவை எல்லாமும் கூட அமானுஷம் சார்ந்தவையே. உலக இலக்கியங்களும் சமய புத்தகங்களும் அவற்றைக் கொண்டாடி வந்திருக்கின்றன. இந்துசமயப் புராணங்களிலும் நரகாசுரர்களையும் தேவர்களையும் காண்கிறோம். 

ஆனால் இந்த உத்திகளை உலக இலக்கியங்கள் போல தமிழ் இலக்கியங்கள் அதிகம் கொண்டாடவில்லை என்றே நம்புகிறேன். இறந்தோர், மூதாதையர், பேய், பிசாசுகள் என்பன நடமாடும் கதைகளை நாம் வாய்மொழியாகவும் ஆங்காங்கே சில கதைகளாகவும் கண்டறிந்திருந்தாலும் அவை வாழ்வு முழுமைக்கும் நம்மைத் தொடர்வனவல்ல. அவை வாழ்வை கொண்டு நடத்துவனவல்ல. வாழ்வு முழுமைக்கும் நீடித்து வருவனவல்ல. அமானுஷ்யங்களை தமிழ் உலகு வரவேற்பதுமில்லை. அவர்கள் கடவுள்களாகக் காவல் தெய்வங்களாக, குலதெய்வங்களாக உருமாறி விடுவார்கள். ’எல்லைகளை’ அவர்கள் தாண்டுவதில்லை. இதைத் தாண்டிய ‘இலக்கிய அந்தஸ்து’ அவர்களுக்குத் தமிழில் இல்லை.

இங்கு தான் இந்த நாவல் ஒரு வேலை செய்திருக்கிறது. அந்த உலக பாணியை நம்முடய அறசிந்தனையோடும் கர்மவிதியோடும் பொருத்தி இந்தக்கதையை இந் நாவலில் ஆசிரியர் பின்ன முயன்றிருக்கிறார். இந் நாவலில் வரும் அமானுஷ்ய சக்திகளுக்கான நியாயங்களை எல்லோரும் ஏற்றுக் கொள்ளும்  ‘அறவழியில்’ ஈட்டிக் கொடுக்கிறார் ஆசிரியர். அவை பல்வேறு நிகழ்வுகளின் வழி நிரூபிக்கப்படுகிறது. இந்துக் கடவுளர் ஆயுதங்களோடும் அவரவர் வாகனங்களோடும் நின்று “பயமுறுத்துவது” மாதிரி ஒரு மெய்மை மீதான நாட்டத்துக்கு, மனிதாபிமானம் மீதான நியாயத்துக்கு, தர்மம், அறம் என நாம் நினைக்கும் கோட்பாடுகளுக்குள் நின்று நியாயமான தீர்ப்புகளை இந்த சூட்சுமத்தளம் ஈட்டிக் கொடுக்கிறது.

இது அநிய்யாயங்கள் செய்பவருக்குக் கொடுக்கும் எச்சரிக்கையாகவும் ஆங்காங்கே நின்று ’ஐயனாராக’ கத்தியைக் காட்டுகிறது.

அதில் கவனிக்கத்தக்க இன்னொரு அம்சம் அதில் அவர் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதும் தான். இந்த அமானுஷ்யங்கள் வெகு இயல்பாக கதையோடு இணைந்து போகின்றன.  இந்த இலக்கியப் போக்கு இயல்பாக அவருக்குக் கைவரப்பெற்றிருக்கிறது. அதை அவரே ஓரிடத்தில் சொல்வதைப் போல ‘மாய யதார்த்தம்’உண்மைக்கும் கற்பனைக்குமிடையே ஒரு இடைவெளியற்ற தன்மையை ஏற்படுத்தி தன்மை நிலையில் எழுதி இருப்பது வெற்றிக்கு அணுக்கமாக அவரைக் கொண்டு சென்று நிறுத்தி இருக்கிறது.

வாழ்க்கைத் தத்துவங்களோடு இந்தக் கதை அநாயாசமாக விளையாடுகிறது. 

3. வரலாற்றுப் பெறுமானம்

பல விதங்களில் இக்கதைக்கு ஒரு வரலாற்றுப் பெறுமானம் உண்டு என்று நான் நம்புகிறேன். அதிலொன்று இந்த ஆசிரியர் இலங்கையர் என்பது. ஒரு மூன்றாம் நபரின் பார்வையாக இந்தக்கதை தமிழகக் கிராமம் ஒன்றை விமர்சனம் செய்கிறது. நேற்றயதினம் 8.7.22 நடந்த ஆசிரியருடனான புத்தகக் கலந்துரையாடலின் போது சொன்ன ஒரு விடயத்தையும் இங்கு சேர்த்துக் கொள்ளல் பொருத்தமாக இருக்கும். ஒருவர் இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு,  ’எங்கள் சமூகத்தின் மீது இந் நாவல் காறித் துப்பி இருக்கிறது’ என்று விமர்சித்திருந்தார் என்று தெரிவித்தார். அது சற்றுக் காட்டமான விமர்சனமாக இருந்த போதும்  கண்ணியமாக தன் அபிப்பிராயத்தை ஒரு கணவானின் சொல்லைப் போல முன்வைத்திருக்கிறது இந் நாவல் என்று  சொல்வேன். 

இன்னொன்று ஆசிரியரே தன் உரையில் குறிப்பிட்டிருப்பதைப் போல இப்போது இந்தக் கிராமங்கள் இல்லாது போய் விட்டன. அந்த விவசாயப் பண்ணை நிலங்கள் மீது இன்று கட்டிடங்கள் முளைத்துவிட்டன. விவசாயக்கூலிகள் கட்டிடத் தொழிலாளர்களாக உரு மாற்றமடைந்து விட்டார்கள். வாழ்க்கை குலைத்துப் போடப்பட்டு விட்டது. வாழ்க்கைமுறைகள் வளர்ச்சி என்ற பெயரில் மாற்றமடைந்து விட்டன. 

ஆனாலும் கட்டமைப்பு மாறவில்லை; காலம் மாறினும் கருத்தமைப்பு மாறவில்லை. அந்த ’மிருகம்’ வேறொரு உருக் கொண்டு விட்டது; தொடர்ந்து சூரனைப் போல, நர அசுரனைப் போல மீண்டும் மீண்டும் புத்துருக் கொண்டு வாழ்கிறது.

 யாரேனும் எவரேனும் பழங்காலக் கட்டமைப்பு ஒன்று எப்படி இருந்தது என்பதை ஒரு மூன்றாம் நபராக நின்று பார்க்க விரும்பினால் இந் நாவல் அவர்களுக்கு ஒரு பார்வையைத் தரும். ஒரு view point கிடைக்கும்.

மற்றயது உலக இலக்கிய உத்தி ஒன்றை நம் பாரம்பரிய, பழக்கப்பட்ட அதே சிந்தனைகளின் வழியாக ’உரத்த எச்சரிக்கைக்கு’ பயன்படுத்தியது.

இந்த மூன்று அம்சங்களின் வழியாக இந் நாவல் கவனம் பெறுகிறது என்பது என் அபிப்பிராயம். வெளிப்படையாக, நேரடியாக இக்கதை புரிந்து கொள்ளக்கூடியது தான் எனினும் உயர்ந்த உலகத் தரத்தில் இந் நாவலை எடைபோட / புரிந்துகொள்ள; உலகசிந்தனை மரபுகள் பற்றிய சிந்தனைப் புரிவை வேண்டி நிற்கிறது இந் நாவல் என்பதையும் சொல்லக் கடமைப்பாடொன்றுளது.

தமிழின் ஆழ இலக்கிய அழகியலிலும் சிந்தனை மரபிலும் வேரூன்றி, சமகால சமூக வாழ்வியல் களத்தில் கால்பரப்பி, அன்னிய இலக்கியபாணி ஒன்றைப் பின்பற்றி, கண்ணியமாக மூன்றாம் கண்ணாக நின்று ஒரு தமிழகக் கிராமம் ஒன்றை கண்முன்னே விரிக்கிறது இந் நாவல்.

தமிழுக்குக் கிடைத்த புதிய சிந்தனைப் புரிவு இது எனினும் தகும்.

( 9.7.22 அன்று எழுதி இன்று 22.9.22 இங்கு பிரசுரமாகிறது ) 


Tuesday, May 3, 2022

சுடலை ஞானம்

 



அண்மையில் என் தந்தையை நான் இழந்தேன். 

அது என் முதல் இழப்பு. இந்த இரண்டரை மாதமும் எனக்குள் ஒரு தத்துவ விசாரம். எது உண்மை? எது வாழ்வு? ஏன் நாம் இங்கு? இவ்வாறான கேள்விகள் குடைந்த வண்ணமாகவே உள்ளது. பதில் கண்டறிய முடியா கேள்விகள். ஞானிகள் கூட தத்தம் சமய தத்துவங்களை ஒட்டியே பதில்களைத் தந்திருக்கிறார்கள். அது மேலும் குழப்பங்களைத் தருவதாகவே இருக்கிறது.

இந்து தத்துவஞானிகள் உலகவாழ்வை வெறுத்தவிதமாகவே பாடி கடவுளை அடைதலை இலட்சியமாகக் கூறிப் போயிருக்கிறார்கள். உண்மையில் வாழ்க்கை என்பது வெறுத்து ஒதுக்கத் தக்க ஒன்றுதானா? பட்டினத்தாரின் இந்தப்பாடல் அவர் வாழ்க்கையை எவ்வளவு சலிப்போடு எதிர்கொண்டிருக்கிறார் என்பதைக் காட்டும்.

‘அன்னை எத்தனை எத்தனை அன்னையோ?

அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ?

பின்னை எத்தனை எத்தனை பெண்டிரோ?

பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ?

இன்னம் எத்தனை எத்தனை சென்மமோ?

என்செய்வேன் கச்சியேகம்பனே!’ 

என்று பாடுகிறார். இன்று அவர் இருந்திருந்தால் இங்கு உளநல மருத்துவ சிகிச்சைக்கு அவரை அனுப்பி எடுத்திருப்பார்கள் என்று தோன்றுகிறது. வாழ்க்கையைச் சலித்து ஒதுக்கியவர்களின் பாடல் தொகுப்பின் வழியாகவே இந்து தத்துவஞானத்தில் கடவுள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறார். 

எனக்கு அப்படி இல்லை என்றே தோன்றுகிறது.

இந்த உலகம் எத்தனை அழகு? அனுபவிக்கவும் மகிழ்ந்து குலாவவும் எத்தனை எத்தனை உண்டு? 

சரி, அப்படி ஆண்டவனின் நிழலை அடைவதே இலட்சியம் என்றிருந்தாலும் அங்கு போனதன் பிறகு செய்ய என்ன இருக்கிறது? அந்த வாழ்வு சலித்து விடாதா? 

பிறப்பதும்; இன்பத்தையோ துன்பத்தையோ இல்லையேல் இவை இரண்டையுமோ அனுபவித்தல் தானே உயிர்ப்பு! அது தானே வாழ்வு என்று கொண்டாடத் தகுந்தது? இதை ஏன் வேண்டாம் என்று சொல்ல வேண்டும்? 

தனு (உடம்பு), கரண ( மனம்), புவன (உலகு), போக ( அனுபவிப்பு) வழி ஆண்மாக்கள் பிறப்பெடுக்கின்றன என இந்து தத்துவம் சொல்கிறது.

சரி, ஆண்மா என்பது யாது? என்று கேட்டால்,

ஆண்மா என்பது நித்தியமாய், வியாபகமாய் அறிவுடய பொருளாய், பாசத்தை உடையதாய், சார்ந்ததன் வண்ணமாய், சரீரம் தோறும் வெவ்வேறாய், வினைகளை செய்து வினைப்பயனை அனுபவிப்பதாய், சிற்றறிவும் சிறு தொழிலும் உடையதாய் தனக்கு ஒரு தலைவனை உடையதாய் இருப்பது என்று விளக்கம் கிடைக்கிறது.

அது இயங்க ஒரு தூல சரீரம் தேவைப்படுகிறது என்று அது மேலும் சொல்கிறது.

அப்படி என்றால் தூல சரீரம் எனப்படுவது யாது?

ஐம்பூதங்களால் ஆன உடம்பு என்று அதற்கொரு சுருக்க விடை இருக்கிறது.

 அதற்குள் சூக்கும சரீரம் என்று ஒன்றும் உண்டாம். அதனை விரித்துப் பார்த்தால், அது சப்தம், பரிசம், ரூபம், கந்தம் என்னும் காரண தன்மாத்திரைகள் ஐந்தையும்; மனம், புத்தி, அகங்காரம் என்னும் அந்தகரணம் மூன்றுமாகிய இந்த எட்டு உறுப்புகளாலும் ஆக்கப்பட்டு ஆண்மாக்கள் தோறும் வெவ்வேறாய் அவ் ஆண்மாக்கள் போகத்தை அனுபவிப்பதற்கு கருவியாய்; ஆயுள் முடிவில் உடம்பை விட்டு மற்றோர் உடம்பை எடுப்பதற்கு ஏதுவாய் இருக்கிற அரு உடம்பு. என்று விளக்கம் அளிக்கிறது,

இது ஏழுவகைப் பிறப்புகளை எடுக்கிறதாம்.

 அவை தாவரம்,நீர்வாழ்வன, ஊர்வன, பறவை, விலங்கு, மனிதர், தேவர் என வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன.

இதிலும் நாலு விதமான தோற்றப்பாடுகள் உள்ளனவாம். 

அண்டசம் - முட்டையில் தோன்றுவன

சுவேதசம் - வியர்வையில் தோன்றுவன (?)

உற்பிச்சம் - வித்து, வேர், கிழங்கு முதலியவைகளை மேற்பிளந்து தோன்றுவன.

சராயுசம் - கருப்பையில் தோன்றுவன.

எப்படி ஆண்மாக்கள் பிறந்து இறந்து உழலும்?

அது நல்வினை தீவினை என்னும் இருவினைக்கீடாக நாலுவகை தோற்றத்தையும் ஏழு வகை பிறப்பையும் 84 நூறாயிர யோனிபேதத்தையும் உடையவர்களாய் பிறந்துழலுமாம்.

இப்படி ஆறுமுகநாவலரின் சைவ வினாவிடை கூறுகிறது.

நாலடியார்,

‘நின்றன நின்றன நில்லா என்றுணர்ந்து அறத்தைச் செய்’ என்றும்

’இன்றுகொல் அன்றுகொல் என்று கொல் எனாது’ யமன் விரைவில் வரப்போகிறான் என்று எண்ணி அறத்தை உடனே செய் என்றும் நாலடியார் அறிவுறுத்துகிறது. 

இதனை எழுதுகிற போது அதிகம் பிரபலமாகாத பாரதியாரின் ’ஞானரதம்’ நினைவுக்கு வருகிறது. அருமையான புத்தகம் அது. அவர் கற்பனையில் ; கனவில் ரதமேறி மறு உலகங்களுக்கு பயணமாகிறார். அங்கு காணும் காட்சிகளை விபரிப்பதாக அவ் உரையாடல் தொடரும். அதில் ஓரிடம் வரும். பர்வதகுமாரியிடம் கேட்கிறார். இப்படி தினமும் இன்பம் சுகித்துக் கொண்டே இருக்கிறீர்களே உங்களுக்கு சலிப்பு வருவதில்லையா என்பார். அதற்கு அவள் நீங்களும் தான் தினமும் சோறு சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறீர்களே! உங்களுக்கு அதில் எப்போதாவது சலிப்புத் தட்டுவதுண்டா? என்று கேட்பார்.

அது நிற்க,

என்னுடய இந்த தத்துவசாரத்தில் எனக்கு குழப்பமே மிஞ்சியது. இதனை வாசிக்கும் உங்கள் எவருக்கேனும் ஏதேனும் தெரிந்தால் என்னோடு உங்கள் பார்வைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். என் சிற்றறிவு கீழ்கண்டவாறு ஒரு முடிவுக்கு வந்து அமைதி கொண்டது. :)

நான் என்பது யார்?

உடலா? முகமா? செய்யும் தொழிலா? உயிரா? ஆண்மாவா? பெயரா? நடத்தையா? குடும்பமா?

எதுவுமில்லை. 

’போன’ பின்னும் மக்கள் மனதில் விட்டுச் செல்லும் நினைவுகள் மட்டும் தான் நாம்.

சரி, சரி இந்தப் பதிவும் தான். ( இங்கு பதிவேற்றப்படுவதும் எப்போதும் நித்தியமாய் இங்கேயே இருக்குமாமே....)

Thursday, December 30, 2021

புலப்பெயர்வும் பண்பாட்டு வெற்றிடமும்; என் சிற்றறிவுக்கு எட்டிய தீர்வு - 3 -

புலப்பெயர்வும் பண்பாட்டு வெற்றிடமும் - 2 - பிரச்சினையை இனம் காணுதல்

புலப்பெயர்வும் பண்பாட்டு வெற்றிடமும் - 1 - பிரச்சினையைக் கண்டறிதல்

( இந்தப் பதிவு முன் வந்த இரு பதிவுகளின் தொடர்ச்சியாகும். அவற்றை வாசிப்பதற்கு மேலே உள்ள தலைப்பினை அழுத்தவும்: நன்றி ) 


புலம்பெயர்ந்து வாழும் சமூகம் ஒன்றில் நற்பண்பாட்டின் மூலக் கூறுகளை

சமயம் சொல்லத் தவறி விட்ட ஒன்றை;

பாடசாலைகள் தீர்த்து வைக்க முடியாத ஒன்றை;

குடும்பங்களால் தீர்வு காணப்பட முடியாத ஒன்றை;

சமூகமாகச் சேர்ந்து தீர்வு காண வேண்டிய நிர்ப்பந்தம் ஒன்று இருக்கிறது. எவ்வாறு அறக்கருத்துக்களை பிள்ளைகளுக்கு அவர்களுக்குப் பிடித்த வழிவகைகளில் சொல்லிக் கொடுக்கலாம்? 

அதற்குப் பல வழிவகைகள் இருக்கக் கூடும். எனக்குத் தெரிந்த வழிவகைகளில் ஒன்றை மட்டும் சில சான்றாதாரங்களோடு இங்கு பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். உங்கள் அபிப்பிராயங்கள் கருத்துக்களையும் என்னோடு தயவு கூர்ந்து பகிர்ந்து கொள்ளுங்கள். அவை என் பார்வைப் புலத்தை விசாலிக்கப் பெரிதும் உதவும் என்பது என் நம்பிக்கை.

நாங்கள் சமூகமாக இந்திய இலங்கைத் தமிழர்கள் இணைந்து ஒரு ‘தமிழ் கலாசார இல்லம்’ ஒன்றை ஏற்படுத்தினால் என்ன? 

இங்கு யோகா, தியானம் போன்ற பயிற்சிகள் இலவசமாக சொல்லிக் கொடுக்கப்படும் இடமாக;

கலைகள் ( இசை, நடனம், வாத்திய கலைகள்) இலவசமாகக் கற்றுக் கொடுக்கப் படும் இடமாக;

இலக்கியம் அதன் சுவை அதன் பாடுபொருளை சுவையோடு சொல்லிக் கொடுக்கும் ஓர் இடமாக,

ஓரிடமும்; 

கூடவே அங்கு நம் பாரம்பரியப் பொருட்கள் - இன்று பாவனையில் இல்லாத பொருட்கள் - பார்வைக்கு வைக்கப்பட்டு - எத்தகைய ஒரு வாழ்வு முறையை நம் மூதாதையர் பின்பற்றினார்கள்; எப்பேற்பட்ட ஆழமான பண்பாட்டு வாழ்க்கைமுறை வேரில் இருந்து நாம் வந்திருக்கிறோம்; எப்படி எல்லாம் அவர்கள் வாழ்ந்திருந்தார்கள் என்பதை பார்க்கும் விதமாக ஒரு மியூசியமும் உள்ளதாக ஒரு ‘தமிழ் கலாசார இல்லம்’ - 

இதற்கு அவ் அவ் துறையில் துறைபோகிய சமூகசேவை மனப்பாண்மை கொண்ட குருமார் அவ் அவ் கலைகளை இலவசமாக பிள்ளைகளுக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் சினேக மனப்பாண்மையோடு  கற்றுத்தர முன் வருவார்களாக இருந்தால் அது எத்தகையதான சமூகத்தை உருவாக்கும் என்று கற்பனை பண்ணிப் பார்க்கவே மனதுக்கு பூரண இதத்தைத் தருவதாக  இருக்கிறது!!

சுமார் 5,6 வருடங்களுக்கு முன்னால் ஒரு சாதாரண, சமான்ய தோற்றம் கொண்ட ஒரு மனிதரை என் வேலை நாளொன்றில் சந்தித்தேன். கூச்ச சுபாவத்தோடு தயங்கித் தயங்கி என்னை அணுகினார். அவரின் பெயர் சிவசோதி. யாழ்ப்பானத்தில் உள்ள ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும் வட்டுக்கோட்டை, கொட்டைக் காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட அவர், போர் சூழலால் துரத்துண்டு தமிழ் நாட்டில் சிலகாலங்கள் வசித்து, அதன் பின்னால் சிட்னிக்குப் புலம்பெயர்ந்தவர். இலங்கையில் இருந்த போது அச்சகத்தில் பணியாற்றியதாகக் கூறினார். அவர் கடந்த 17.12.21 அன்று தனது பிறந்ததினத்தைக் கொண்டாடியதோடு அவரின் கொண்டாட்டப் படங்களையும் எனக்கு அனுப்பி வைத்தார். அதனை உங்களோடும் அவசியம் பகிர்ந்து கொள்வேன்.

சிவசோதி ஐயா தன் மனைவியோடு

சிவசோதி ஐயா தன் பேரப்பிள்ளைகளோடு

அவரைப் பற்றி நான் இங்கு ஏன் சொல்கிறேன் என்றால் அவர் தன் வாழ்நாளில் சேகரித்த சில சேகரிப்புகளை எனக்குக் காட்டினார். ஊரை விட்டுப் புலம் பெயரும் போதும்; பின்நாளில் தமிழ் நாட்டை விட்டுப் புலம் பெயரும் போதும்; அவர் தன்னோடு கொண்டுவந்த பொருட்கள் என்னவென்றால் பழங்கால முத்திரைகள், நாணயங்கள், முதல்நாள் தபால் உறைகள், அரசால் வெளியிடப்பட்ட நாட்டுத்தலைவர்கள் குறித்த சிற்றேடுகள் போன்றவை தான்.



அரிதாக அச்சிடப்பட்ட 1 ரூபாய் தாள் 1963.6.5.
1 ரூபாய் தாளின் பின் புறம்


1974ம் ஆண்டுகளில் புழக்கத்தில் இருந்து இன்று காணமுடியாத 10 ரூபாய் நோட்டு


அந்த 10 ரூபாய் நோட்டின் பின் புறம்

சுமார் 1974ம் ஆண்டளவில் புழக்கத்தில் இருந்த 2 ரூபாய் தாள்

2 ரூபாய் தாளின் பின் புறம்


பின்நாளில் வந்த 10 ரூபாய் நாணயம்



இவைகள் எல்லாம் பண்பாட்டின் கருவூலங்கள்; இன்று பார்வைக்குக் கிடைக்கப் பெறாதவை; அவைகளின் சில ஒளிப்படங்களைய் உங்கள்  பார்வைக்காகத் தருகிறேன். இது போல பல கலைப்பொக்கிஷங்கள் அவரிடம் உள்ளன.

இந்த இந்திய நாணயங்களைப் பாருங்கள்.



இந்த இந்திய நாணயங்களில் 5ம் ஜோர்ஜ் மன்னர் காலம், 1 பைசா, 1 அனா,2,3,5 பைசாக்கள், கால் அனா,1/2 ரூபா நாணயங்கள் இதில் பார்வைக்கு உள்ளன. இவை போல பல உள்ளன. ( எனக்கு இந்த பைசா, அனா, ரூபாய்களுக்கான வேறுபாடுகள் புரியவில்லை. தெரிந்தவர்கள் விளக்கினால் அறிந்து கொள்வேன்.) 
இவைகளோடு கூடவே புராதன தலைவர்களின் தபால் தலைகள், 1st day cover என்று சொல்லப்படும் தலைவர்களின் படம் பொறித்த தபால் உறைகள் மற்றும் அவர்களைப்பற்றி தபாலகம் வெளியிட்டுள்ள சுருக்கப் பதிவுகள் என்று ஏரளமான வரலாற்றுக் குறிப்புகள் சிவசோதி ஐயா வழியாக என் வசம் தற்போது உள்ளன.

அவை சரியான இடத்தில் வாழ்நாள் பூராக சேகரித்து அதனைப் பொக்கிஷமாகக் காத்து வந்த சிவசோதி ஐயா அவர்களின் பெயரோடு நம் எதிர்கால சந்ததிக்குப் போய் சேர வேண்டும் என்பது என் அவா. ஒரு பெரும் கனவு. 

காலங்கள் கடக்கின்றன. வருடம் ஒன்று போக வயதும் ஒன்று கூடுகிறது. மலையில் ஏறிய காலம் கடந்து, நாம் இப்போது மலையில் இருந்து இறங்கும் வாழ்க்கைக் காலத்தில் இருக்கிறோம். இருக்கும் போது பிடித்தவற்றைச் செய்து விட வேண்டும் என்றும்; அதனை காலம் தாழ்த்தாது இப்போதே செய்து விட வேண்டும் என்றும் நுணுயிர் கிருமிகளும் வாழ்க்கைப் பாடங்களும்; வாழ்வியல்புகளும் நமக்கு உணர்த்திய வண்ணமாக உள்ளன. நாம் அதனை உதாசீனம் செய்து விடக் கூடாது என்று எஞ்சி இருக்கும் வாழ்க்கை அறிவுறுத்திக் கொண்டே இருக்கிறது...

 நான் ஒரு வரலாற்று ஆர்வலர் என்பதை எப்படியோ அறிந்து கொண்டதாலோ என்னவோ இவைகளின் சொந்தக்காரர் இவற்றை மகிழ்வோடு என்னிடம் தந்து வைத்திருக்கிறார். நானும் என்ன செய்வது என்று தெரியாமல் பூதம் பொக்கிஷத்தைப் காப்பதைப் போல இவற்றைக் காத்து, காத்து வருகிறேன்.

இதனால் என்ன பயன்? இவை எல்லாம் சமூகத்துக்குப் பயன்படும் போது தானே அது எல்லோருக்கும் பயனுடயதாகும்!!

கூடவே என்னிடமும் சில மூதாதையர் பயன் படுத்திய பொருட்களை பெரும் முயற்சி எடுத்து தாயகம் போன ஒரு விடுமுறை நாளில் உருக்குப் பட்டறைகளில் இருந்து மீட்டெடுத்து இங்கு கொண்டு வந்திருக்கிறேன். 

இவைகளையும் கூட உங்கள் பார்வைக்கு தருகிறேன்.












இவைகள் எல்லாவற்றையும் கூடவே ஒவ்வொரு ஈழ, தமிழகத் தமிழர்களும் ஊருக்குப் போய் வரும் போது கண்டெடுத்து வரும் அரும் பொக்கிஷங்களையும் ஓரிடத்தில் - அதாவது இந்த - தமிழர் கலாசார இல்லத்தில் - பார்வைக்கு வைத்து, மாணவர்களின் பார்வைக்கு வைத்தால் அது சமூகத்தில் கலைவழி கற்றலினாலும் பார்வை வழி புரிதலினாலும் அறிதலின் வழி ஒரு பெரு மாற்றத்தைக் கொண்டு வராதா?

அதற்கு நாங்கள் முயற்சிக்கக் கூடாதா?

இந்தப் புது வருடத்தில் அதற்கு ஒரு வழி கிட்டாதா?

......................

எல்லோருக்கும் இன்னும் இரு நாளில் மலர இருக்கின்ற 2022 புதுவருட நல்வாழ்த்துக்கள்!

காலம் காயங்களை ஆற்றி எல்லோருக்கும் நல்வழி காட்டட்டும்!

மனிதம் மலரட்டும்!!

புலப்பெயர்வும் பண்பாட்டு வெற்றிடமும்; இனம் காணல் - 2 -

புலப்பெயர்வும் பண்பாட்டு வெற்றிடமும் - பிரச்சினையை கண்டறிதல் - 1 -

( முதல் பகுதியை வாசிக்க மேலே உள்ள தலைப்பை அழுத்தவும்.)

சரி, அப்படி என்றால் அதனை நாம் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க என்னதான் செய்ய வேண்டும்? 

நாம் பாடசாலைகளை நிறுவி இருக்கிறோம்; கோயில்களைக் கட்டி இருக்கிறோம்; நடை, உடை பாவனைகள், உணவு முறைகள், பண்டிகைகள் எல்லாவற்றையும் முடிந்தவரை பின்பற்றுகிறோம். இனி என்னதான் செய்வது என்று கேட்பது காதில் ஒலிக்கிறது.

குடும்ப அலகில் இருக்கும் நாம்  ஒரு குடும்பச் சூழலில் ஒரு முக்கியமான வேலை ஒன்றைச் செய்ய நாம் தவறிவிட்டோமோ என்று எனக்குத் தோன்றுகிறது...

அது, அறத்தைக் கற்றுக் கொடுத்தல் என்பது தான். 

அறத்தோடு நின்ற வாழ்க்கை நமது. சங்க காலத்து காதல் வாழ்வில் இருந்தே நமக்கு அதற்கான ஆழ வேர்கள் விரவி விருட்சமாகி நம் பண்பாட்டில் தளைத்து நிற்கிறது. இன்றய தமிழில் எளிமையாகச் சொல்வதாக இருந்தால் ‘மனச்சாட்சியோடு இருத்தல்’, மனிதத்தன்மையோடிருத்தல்  என்று இலகுவாக அதனைத் தெளிவு படுத்தி விடலாம். 

இதனை தமிழ் பாடசாலைகள் கற்றுக் கொடுக்கவில்லை; கோயில்கள் கற்றுக் கொடுக்கவில்லை; பண்டிகைகளோ கொண்டாட்டங்களோ கற்றுக் கொடுக்கவில்லை; கூடவே குடும்பங்களும் அதனைச் சொல்லிக் கொடுக்கத் தவறிவிட்டது என்றே எனக்குத் தோன்றுகிறது. 

இது கற்றுக் கொடுத்து வருவதா என்ன என்று நீங்கள் கேட்கலாம். ஆம்; இங்கு அதனை நாம் கற்றுக் கொடுத்துத் தான் ஆகவேண்டும். ஆங்கிலப் பாடசாலைகளில் அதன் கல்வி முறைகளில் தனி மனித சுதந்திரம்; தனிமனித சிந்தனை; முயற்சி அதன் வழி பெறப்படும் வெற்றி என்பது முதன்மைப் படுத்தப் படுமிடத்து; இல்லங்களில் பணத்தின் வழி பொருட்கள் நிறைந்து அன்பு பற்றாக்குறையாகிப் போகுமிடத்து; இரு பண்பாட்டுக்குள் வாழும் ஒரு குழந்தை அறத்தைக் கற்றுக் கொள்ளுதல் எங்ஙனம்? சுயநலம் மேலோங்கும் சாத்தியம் தானே அநேகம்....விட்டுக் கொடுக்க வேண்டி இருக்காது; சகித்துக் கொள்ள வேண்டிய தேவை இருக்காது; ஒரு பொருளின் அருமை புரியாது; அன்பு என்பதன் வலிமையும் அதன் தார்ப்பரியமும் புரிந்து கொள்ளப்படாததாக ஆகி போயிருக்க தன்னை மையப்படுத்தியதாக ஒரு குழந்தை வளரத்தானே சாத்தியம் அதிகம்...

இவற்றுக்கெல்லாம் யாரைக் குற்றம் சொல்வது? சமூகமாக நாம் இணைந்து இதற்கு என்ன செய்யலாம் என்பது இன்று நமக்கு முன்னால் உள்ள சவால்.

பண்பாட்டின் வேர்களை இன்னும் ஆழமாகச் சொல்ல கல்விச்சாலைகளை விட வேறென்ன வழிவகைகள் உள்ளன? கவர்ச்சியாக; விரும்பும் படியாக; அவர்களின் ஆர்வத்தை ஊட்டும் படியாக;  பார்வைப் புலன் வழியாக பார்த்து; ஸ்பரிசித்து; உணர்ந்து பார்த்து, இளம் சமூகத்துக்கு ஒரு கருத்தினைக் கொண்டு செல்ல இருக்கும் வேறு வழி வகைகள் எனென்ன?

இது தான் நமக்கு முன்னால் இன்று நமக்குள்ள கேள்வி.

தொடரும்.....

புலப்பெயர்வும் பண்பாட்டு வெற்றிடமும் - பிரச்சினையைக் கண்டறிதல் - 1 -

 வருடம் ஒன்று நிறைவடையப் போகிறது. 2021 போய் 2022 வர இருக்கிறது.

கடந்த இருவருடங்கள் கொரோனா பேரிடர் பல வாழ்க்கைத் தத்துவங்களை நமக்குச் சொல்லி வருகிறது.  நாடுகள் ஒற்றுமையாக இணைந்து இந்த வைரஸைத் துரத்தினாலொழிய அதனை இப்போதைக்கு இல்லாது செய்ய முடியாது என்பதை அரசியல் வாதிகளுக்கும் அவர்கள் ஆழும் அரசுகளுக்கும் அது அடித்து அடித்துச் சொல்லிக் கொண்டிருக்கிறது. அதனை செவிசாய்க்க எந்த வல்லரசு நாடுகளும் தயாராக இல்லை. ஆபிரிக்காவின் அழுகுரலை; தமக்கு முதலாவது தடுப்பூசியே போதுமான அளவு கிடைக்கவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கும் அதன் ஈனக்குரலை யாரும் செவிமடுப்பதாக இல்லை. நாமோ போதுமான அளவு தடுப்பு ஊசியினை போட்டுவிட்டுக், கையிருப்பிலும் வைத்துக் கொண்டிருக்கிறோம். மூன்றாவது ஊசிக்கும் நாம் தயாராகிக் கொண்டிருக்கிறோம். அவர்களின் வளங்களைச் சுரண்டி எடுத்து வந்து விட்டு அவர்களை ஏழைகளாக வைத்திருந்தபடியே அவர்கள் மீது எந்த இரக்கமோ மனசாட்சியோ இல்லாது ஒதுக்கி வைத்திருக்கிறது முதலாம் உலக நாடுகள்; இன்று வரை.  அவர்கள் மீதான குறைந்த பட்ச இரக்கத்தை; மனிதாபிமானத்தை; நீதியை தர மறுக்கிறது அது!  

போதாததற்கு மூன்றாவது ’ஒமிக்குரோன்’ வைரஸ் ஆபிரிக்காவில் இருந்து வந்திருக்கிறது என்று சொல்லி அவர்களுடனான போக்குவரத்து தொடர்புகளை முற்றாகத் துண்டிக்கிறது ஏனைய நாடுகள்.... பாவம் ஆபிரிக்கா....நாங்கள் எப்போது இயற்கையிடம் இருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளப் போகிறோம்... எப்போது சுயநல சிந்தனையில் இருந்து விடுபட்டு எல்லாரும் ஓரினம் எல்லோரும் ஓர் குலம் என்று ஒற்றுமையாக எல்லோரையும் அரவணைத்துப் போகப் போகிறோம்... தெரியவில்லை.

சரி, நாம் இதற்கு என்ன செய்யலாம்? அதுவும் தெரியவில்லை...கிடைத்திருக்கிற இந்த வீட்டில் சும்மா இருக்கிற தன்மை அடுத்த வருடமும் நீடிக்கப் போகும் சாத்தியக் கூறுகள் தென்படுகின்றன. 

இந்த lockdawn காலப்பகுதி கொஞ்சம் படிப்பு மற்றும் புலம்பெயர்ந்தோரின் எதிர்கால பார்வை நோக்கி என்னைத் திருப்பியது.

இது ஒரு பின்னணி.... இனி விடயத்துக்கு வருகிறேன்,

.......................

சிலப்பதிகாரத்தில் ஓரிடம்,

கண்ணகி பாண்டியன் வாயிலில் வீராவேசத்தோடும் கோபம் நிறைந்த துக்கத்தோடும் அறச் சீற்றத்தோடும் வாசலுக்கு வருகிறாள். காவலன் அவளை மறித்து நீ யார் என்று கேட்கிறான். அதற்கு அவள்,

’தேரா மன்னா செப்புவது உடையேன்’ என்று சொல்லி விட்டு,

’எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்

புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்

வாயிற் கடைமணி நடுநா நடுங்க

ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்

அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்

பெரும்பெயர்ப் புகார்என் பதியே’ 

என்று ஆரம்பிக்கிறாள். எது என் நாடு; எது என் தாயகம் என்பது அவள் சொல்லும் முதல் கூறு. அதிலும் ஓர் அடைமொழி வைக்கிறாள். எத்தகையது என் நாடு தெரியுமா? அழும் மாட்டுக்கும் நீதி வளங்கிய அறம் கொண்ட நாடு அது என்கிறாள்.அதன் பிறகு தான்,

’அவ்வூர்

ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி

மாசாத்து வாணிகன் மகனை ஆகி

வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச்

சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்தீங்கு

என்கால் சிலம்பு பகர்தல் வேண்டி நின்பால்

கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி’

என்கிறாள். அதாவது, அந்த ஊரில் உள்ள பெருங்குடிமக்களான வணிகனான மாசாத்துவானின் மகனை மணந்து ஊழ்வினை துரத்தியதால் உன் நகருக்கு வந்து சிலம்பை விற்கப் போனதால் கொலைக்களப்பட்ட கோவலனின் மனைவி நான் என்கிறாள்.

இந்தத் தன்மை தமிழ் மொழிப் பண்பாட்டில் மட்டுமல்லாது சமஸ்கிருத மொழிப் பண்பாட்டிலும் இடம்பெற்றே வந்திருக்கிறது. பிராமணப் புதல்வனான அறிவில் சிறந்த கவி புனையும் ஆற்றலும் நடிப்பு வல்லமையும் கொண்ட அஷ்வகோஷ் என்பான்  பிரபா என்கிற கிரேக்கப் பெண்ணைக் காதலித்து, கிரேக்க நாடக உத்திகளை பிராகிருத மொழிக்கு ( சமஸ்கிருதத்திற்கு முற்பட்ட மொழி வழக்கு) கொண்டுவந்து இந்தியாவின் முதல் நாடக ஆசிரியனாக வரலாற்றில் புகழப்படும் (ஊர்வசி வியோகம்’ என்பது பிராகிருத சமஸ்கிருத கலப்போடு எழுதப்பட்ட முதல் நாடகம்) அஷ்வகோஷ் பிராமணீய தத்துவங்களை எல்லாம் கற்றுத்தேர்ந்து அதன் சாதி குறித்த  பாதகங்களை உணர்ந்து பின்நாளில் புத்த தத்துவங்களால் கவரப்பட்டு பெளத்தனான, அறிவாற்றல் மிக்கவனான  அஷ்வகோஷ் தன் சிருஷ்டிகளில் எல்லாம் முடிவில் தன் கையொப்பத்தை இடும் போது, “ சாகேதத்தைச் சேர்ந்த, ஆர்ய சுவர்ணாட்சியின் புதல்வன் அஷ்வகோஷ் எழுதியது” என்று எழுதி தன் பெயரோடு கூட தான் பிறந்த சாகேதத்திற்கும் பெற்றெடுத்த தாய் சுவர்னாட்சிக்கும் சிரஞ்சீவித்தன்மையை ஏற்படுத்திவிட்டான் என்று கூறப்படுகிறது. (வொல்காவில் இருந்து கங்கை வரை - பக் 318 - 345 )

இந்தியப் பெரும் பரப்பில் வரலாற்றால் அறியப்படும் இவர்கள் இரண்டு பேரும் இரு பெரும் பண்பாடுகளின் முகவர்கள். அதாவது கண்ணகியும் அஷ்வகோஷும் தங்களை முன்னிலைப் படுத்துவதற்கு முன்னர் தாம் பிறந்த நாட்டை முன்னிலைப்படுத்தி இருப்பதைக் காணலாம்.

தாயகம்; நாம் பிறந்த பொன்னாடு என்பதற்கு அத்துணை மதிப்பும் மரியாதையும் பற்றும் பாசமும் வரலாற்றினால் அறியப்படும் அளவுக்கு மனித மனங்களால் போற்றப்பட்டு வந்திருக்கிறது.

அதற்கு புலம்பெயர்ந்து வேறொரு நாட்டில் குடி வந்திருக்கும் நாம் என்ன விதிவிலக்குகளா என்ன!!

காலமாற்றத்துக்குள்ளாகி எண்ணிம (டிஜிட்டல்) உலகில் அறிவினாலும் போரினாலும் இன்னபிற காரணங்களாலும் புதிய நாட்டொன்றுக்கு வந்திருக்கிற நாம், அடுத்த இரண்டு சந்ததிகளை புதிய தாயகத்தில் சந்தித்துக் கொண்டிருக்கிற நாம், நம் தாயக சிந்தனையை அதன் பண்பாடு பாரம்பரிய நம்பிக்கைகளை, வாழ்க்கை முறைகளை எப்படி அடுத்த சந்ததிக்கு கொடுக்கலாம் என்பது பெரும் சவாலாகி வரும் இந் நாட்களில்; பிள்ளைகள் பல புதிய பண்பாட்டு மொழி பாரம்பரியங்களைக் கொண்டுள்ள ஏனையவர்களோடு பழகும் வாய்ப்பும் கலப்பு மணங்களும் கூடிவரும் இந் நாளில், இதெல்லாம் தேவையா என்று கேட்க வேண்டிய சூழலுக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம்.

உண்மைதான். தேவையா தேவை இல்லையா என்ற கேள்விக்கப்பால் இருவேறு பண்பாட்டுக்குள் திருமணம் வழியாக இணையும் உள்ளங்கள் எந்த இடத்தில் தம் சமநிலை புள்ளியை வைத்திருக்கப் போகிறார்கள் என்பது திருமணத்துக்குப் பின்பான சவால்களுக்கப்பால் இவர்கள் கண்டடைய வேண்டி இருக்கிற மேலதிக சவால்.

இதனைச் சவால் என்று பார்க்காமல் அது அவர்களுக்குக் கிடைத்திருக்கிற தனி வாய்ப்பு என்றும் கருதலாம். அவர்களின் முன்னே ஒரு பிரச்சினையைத் தீர்க்க இரு பண்பாடு சொல்லிக் கொடுத்த  வழிமுறைகள் முன்னால் இருக்கின்றன. அது ஒரு பெரிய வரப் பிரசாதம் தான்.

ஆனால், அதனைத் தெரிவதற்கு அவ்வப் பண்பாடுகளைப் பற்றித் தெரிந்திருக்க வேண்டுமல்லவா? இந்தப் புதிய பண்பாட்டுக்குள்ளும் நாம் நிலை பெற்று நிமிருவதற்கிடையில் எண்ணிமப்புரட்சி நடந்து தொழில்நுட்பமும் நம்மை கட்டுப்படுத்தி வரும் சூழலில் இந்த புதிய சந்ததியினரின்  நிலை என்ன?

அதற்கு நாம் எத்தகைய வழிகாட்டுதல்களை வழிகளை அவர்களுக்குக் காட்டி இருக்கிறோம் என்பது தான் நமக்கு முன்னால் இருக்கின்ற பெரும் கேள்வி. ஆம் கோயில்கள் கட்டி இருக்கிறோம், மொழிப் பாடசாலைகளை உருவாக்கி இருக்கிறோம், அறிவகம் உண்டு, சமூக வானொலிகள் உண்டு, பண்பாடு சொல்லிக் கொடுத்த உணவு, உடை, கொண்டாட்டங்கள், பண்டிகைகள் எல்லாவற்றையும் அறிமுகப்படுத்தி இருக்கிறோம் சில பல குறை நிறைகளோடு. அது மட்டும் அவர்கள் ஒரு விடயத்தை ஆழமாகப் புரிந்து கொள்ளப் போதுமா?

இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. அவர்கள் தோற்றங்களின் வழியாக; பார்வைப் புலன்களின் வழியாகவே பலவற்றையும் உள்வாங்குகிறார்கள். கற்றுக் கொடுத்தலும் மொழியும் அவர்களை சலிப்படையச் செய்வனவாக உள்ளன. பொதுவாகவே விரைவாக ஒன்றில் சலிப்படைந்து விடுகிற தன்மை இளைய சந்ததியிடம் பரவலாகக் காணப்படுகிறது. 

நாம் சந்ததியினர் ஒன்றினைப் பெறக் கடினமாகப் போராட வேண்டி இருந்தது. அதன் காரனமாகவோ என்னவோ அதன் பின்னால் கிடைக்கும் அந்தப் பொருள் அருமையானதாக போற்றத்தகுந்ததாக இருந்தது அன்று.ஆனால்  இன்றோ முயற்சி எதுவும் செய்யாமல் விரைவாகவே வேண்டியதை பெற்றுவிடும் வாய்ப்பு வந்து விட்டதால் அதன் அருமை புரிந்து கொள்ள முடியாத ஒன்றாகி விரைவில் சலிப்படையச் செய்து விடும் ஒன்றாக மாறி விடுகிறது போலும்! 

இங்கு இருக்கிற சொகுசான வாழ்வு; கடின உழைப்பு என்பதை; சிக்கனம் என்பதை கற்றுக் கொடுக்கவில்லை. அன்பு, பற்று, பாசம், அக்கறை என்பதை காட்ட பண்பாடு கற்றுத்தரவில்லை. ‘ஒருவருக்காக நிற்றல்’ என்பது அர்த்தமற்றதாக இருக்கிறது. பாசம் பணத்தால் நிறுக்கப் படுகிறது. அறம் என்பது பற்றிய புரிதல்கள் இல்லாதே போயின. சுயநலம், பணபலம் இவைகளால் பெறுமதிகள் நிர்ணயிக்கப்படுகின்றன.

தமிழின் மூல சொத்தே ‘அறம்’ தான் இல்லையா?

இவைகளை நாம் பிள்ளைகளுக்கு எப்படிச் சொல்லிக் கொடுக்கப் போகிறோம்?

 ஏன் சொல்லிக் கொடுக்க வேண்டும்? என்று  ஒருசாரார் கேட்கக் கூடும். வாழ்க்கை முறை மாறினாலும் வாழ்க்கை சொல்லிக் கொடுக்கும் பாடங்கள் மனித ஜீவராசிகள் அனைத்துக்கும் ஒன்று தான்.இரத்தமும் வியர்வையும் ஒன்றுதான் என்று சொல்வார்களே அது மாதிரி.  இழப்புகள், விபத்துகள், துன்பங்கள், இன்பங்கள், நோய்கள், பிறப்புகள், இறப்புகள் எல்லாம் எல்லோருக்கும் ஒன்று தானே!

இவைகளை எதிர்கொள்ளும் அணுக்க வழிமுறைகளை ஒவ்வொரு பண்பாடும் ஒவ்வொரு விதமாக  கற்றுக் கொடுக்கின்றன. ஒரு தமிழன் பிரச்சினை ஒன்றை அறத்தின் வழியாக அணுகுகின்றான். ஒரு மேலைத்தேய பண்பாட்டினன் தன்னம்பிக்கையின் வழியாக அணுகுகிறான். மத்திய தேசத்தவன் மத நம்பிக்கையின் வழியாக ஆறுதலை கண்டடைகிறான். ஆசிய நாட்டவன் விடாத முயற்சி, பயிற்சி மற்றும் வேறொன்றில் மனதைச் செலுத்துதல் வழியாக சம்பவத்தை மறக்க முயல்கிறான்.

இவ்வாறாகப் பண்பாடுகள் சொல்லிக் கொடுக்கும் மூலோபாயங்கள் வேறு வேறானவை. அவைகளை - குறைந்த பட்சம் நம் பண்பாடு நமக்குச் சொல்லிக் கொடுத்த அணுகு முறைகளை அடுத்த சந்ததிக்கு சொல்லிக் கொடுக்க நாம் கடமைப்பட்டிருக்கிறோமல்லவா? 

எப்படி இதனைச் சொல்லிக் கொடுக்கப் போகிறோம்?

ஓர் இளங்குடும்பம் - அவளது கணவனை அவளின் நெருங்கிய தோழி சுவீகரித்துக் கொண்டு சென்று விட்டதோடு மட்டுமன்றி அவளின் வீட்டுக்கருகிலேயே தலை நிமிர்ந்து வாழவும் செய்வதை அண்மையில் கண்கூடாகக் கண்டேன்.

புற்றுநோய் வந்துவிட்ட இரண்டு பிள்ளைகளின் தாயொருத்தியை அப்படியே விட்டு விட்டு தன் பள்ளிக் காலக் காதலியை முகப்புப் புத்தகத்தில் கண்டுபிடித்து அவளோடு உலகம் சுற்ற போன ஒரு கணவனை என் வேலைத்தலத்தில் கண்டேன்.

இவ்வாறெல்லாம் செய்யத் துணிவதற்கு எது காரணமாயிற்று என்று நீங்கள் கருதுகிறீர்கள்? 

பண்பாடு பற்றிய அறிதலில் ஏற்பட்ட வெற்றிடம்.

அந்த வெற்றிடம் ஒன்றே தான்! 

தொடரும்......

Thursday, November 25, 2021

ஆஸ்பத்திரி அனுபவங்கள்

 


அண்மையில் ஓர் அறுவை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் இருக்க நேர்ந்தது. கொரோனாக் காலம் வேறு. அதனால் தங்கியிருப்போர் தொகை கனிசமான அளவு குறைந்திருந்தது. யாரும் யாரையும் பார்க்க வரமுடியாத நிலை. அது தாதியர்களுக்கு சற்ரு செளகரிகத்தைக் கொடுத்திருந்தது. வளாகம் அமைதியில் நிரம்பிப் போய் இருந்தது.  அதனால் தாதியர்களுக்குப் போதுமான நேரம் இருந்ததோடு பணிச்சுமையும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அளவுக்கு குறைந்திருந்தது. எல்லோரும் நோயாளிகளோடு அன்புறவோடு பழகினார்கள். அக்கறையோடு இருந்தார்கள்.

வாழ்க்கை பல நேரங்களில் அனுபவங்களூடாக பல பாடங்களைச் சொல்லித் தருகிறது. அதனை ஏற்று நம்மை நாம் சரிப்படுத்திக் கொள்ளும் போது நாம் இன்னும் நல்ல மனிதர்களாக மாற சந்தர்ப்பம் கிடைக்கிறது.

சரியான மனிதர்களைப் புரிந்து கொள்ளவும் நாம் பின்னாளில் முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ளவும் அது வாய்ப்பளிக்கிறது.

எது வாழ்க்கையில் முக்கியம் என்பதும்; நாம் வீணாக்கிய நேரங்களும்; ஆரோக்கியத்தின் முக்கியத்துவமும் புரியும் இடமாக ஆஸ்பத்திரியும் அனுபவங்களும் அமைந்து விடுகிறது.

‘ஏணி; தோணி; வாத்தியார்’ என்று ஒரு சொற்கூட்டை முன்நாளில் நம் சிறுவர்களாக இருந்த போது சொல்வது வழக்கம். ஏணி ஏற்றி விட்டு தன் இடத்தில் இருக்கும். தோணி ஆட்களை ஏற்றி இறக்கி விட்டு தண்ணீருக்குள் இருக்கும். வாத்தியார்களும் அப்படித்தான். என்பதால் அதனை சேர்த்து அப்படிச் சொல்வது வழக்கம்.

இவர்களுக்குள் வைத்தியர்களையும் தாதியர்களையும் சேர்த்துக் கொள்ளலாம். கூடவே வாகனத்தைப் பழுத்து பார்ப்பவர்களையும் இதற்குள் சேர்த்துக் கொள்ளலாமோ என்று தோன்றுகிறது. 

பழுதுபட்டிருப்பவற்றைச் செப்பனாக்கித் தந்து விட்டு தம் இடத்தில் இருப்பவர்கள்.

கூடவே மனநிறைவு தந்த ஒரு விடயத்தையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆவல். என் குடும்பவைத்தியர் ஒரு தமிழர். சுமார் 25 வருடங்களுக்கு மேலாக அவர் தான் எங்கள் குடும்ப வைத்தியர். சுகவீனமுற்றுப் போன போது அவர் பரிந்துரைத்த சிறப்பு நிபுணர் ஒரு தமிழர். ஆஸ்பத்திரியில் தங்கியிருந்த போது என்னைப் பார்த்துக் கொண்டவர் - என்னை மாத்திரமல்ல - அந்த தங்கு விடுதியை கவனித்துக் கொண்ட வைத்தியர் புதிதாக கற்றுத் தேறி தொழில்பார்க்க வந்திருக்கும் ஒரு இளம் தமிழ் வைத்தியர். டொக்டர். துஷ்யந்தி என்பது அவர் பெயர். துஷ்யந்தி என்ற அந்த இளம் வைத்தியர் - அவரிடம் இருந்த அன்பு, அக்கறை, கவனிப்பு, அவதானம், அர்ப்பணிப்பு, அன்பு, தாய்மைப் பண்பு நிறைந்த ஒருவித மென்மை, வேலை மீது அவர் கொண்டிருக்கும் நேசம்,.... ஆஹா... அது தான் எத்தனை அழகு! டொக்டர் துஷ்யந்தி என்பது அவர் பெயர். நன்றி என்பது மிகச் சிறிய வார்த்தை தாயே!

சரி இவர்கள் தான் தமிழர்கள் என்று பார்த்தால் எனக்கு அறுவை சிகிச்சை  செய்தவர் ஒரு தமிழர். அது குறித்தும்; எவ்வாறெல்லாம் அறுவை சிகிச்சை நடைபெறப்போகிறது என்பதையும்; அதில் தன் பங்கு என்னவாக இருக்கப் போகிறது என்பதையும் அறுவை சிகிச்சை நடைபெறும் தினத்தன்று வாசலில் வைத்து எனக்கு விளக்கிக் கூறி புன்னகையோடு எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று இன்முகத்தோடு சொன்னவர் இன்னொரு இளம்தமிழ் வைத்தியர் டொக்டர். காயத்திரி. நான் வீடு வரும் வரை தினம் தோறும் வந்து பார்த்து என் தேறுதல் பார்த்து மகிழ்ந்து என்னை விடையனுப்பி வைத்தவர்.

இவ்வாறாக வீடு வரும்வைரை தமிழர்களாலே அன்னியநாடொன்றில் நான் சூழப்பட்டிருந்தேன்; கவனிக்கப் பட்டிருந்தேன் என்பது ஓர் ஆசீர்வாதம் தான் இல்லையா? 

எல்லா வைத்தியர்களும் இதைத்தான் செய்திருப்பார்கள் என்ற போதும் தமிழன் கையால் அன்னிய இடத்தில் ஒரு சிறந்த சேவையைப் பெறும் சுகம் சற்று வித்தியாசமானது.

இந்த இளம் வைத்தியர்கள் துஷ்யந்தியும் காயத்திரியும் என் பிள்ளை வயதொத்தவர்கள். சிட்னியில் வாழும் இந்த சிறு தமிழ் சமூகத்தில் நான் முன்னெப்போதும் கண்டறிந்திராதவர்கள். 

எதிர்பாராத, மிக வேண்டப்படும், இவ்வாறான தருணங்களில் மிக தற்செயலாக அமைந்து விட்ட இப்படியானவர்களின் பிரசன்னமும் அவர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவையும் அவர்களின் உயர்வும் பண்பும் என இவற்றை எல்லாம் காணவும் அனுபவிக்கவும் கிடைத்தது இறைவனின் பெருங்கருணையின்றி வெறென்னவென்று நான் சொல்ல! 

 என் வாழ்வில் இடம்பெற்ற இந்த முதலாவது அறுவை சிகிச்சை பலவிதங்களில் எனக்கு மறக்க முடியாத அனுபவங்களைத் தந்து போயிருக்கிறது. அவைகளை எண்ணிப் பார்க்கிற போது இந்த இளம் வைத்தியர்களும் அவர்களின் மனதுக்கிதமான சேவையும் கூடவே வந்து செல்லும். இவர்களை எல்லாம் இப்போதைக்கு மறக்க முடியும் என்று தோன்றவில்லை.

வாழ்க்கையை இன்னும் சரியாக செப்பனிட்டுக் கொள்ளத்தக்க வாய்ப்புகளையும் அனுபவங்களையும் இந்த அறுவை சிகிச்சை எனக்கு வழங்கி இருக்கிறது.

அன்பே சிவம்! கொடுப்பதனால் குறைவு படாதது அன்பு. தேவைப்படுமிடத்து இலவசமாக வழங்கத்தக்கது அன்பு. 

இந்த இளம் வைத்தியர்களும் தாதியர்களும் அதையே எதிர்பார்ப்பின்றி புலமையோடு நமக்கு இலவசமாக வழங்குகிறார்கள்.

பிறகு அடுத்து வருபவருக்குக் கொடுக்க தயார் நிலையில் அங்கேயே நிற்கிறார்கள். அவர்களை நடமாடும் கடவுள்கள் என்பது சற்று மிகையாகத் தோன்றலாம். ஆனால் கடவுளால் தன் தொழிலைச் செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட  ஊழியர்கள் என்று நிச்சயமாகச் சொல்லலாம்.

அதில் வேறொரு மொழிபேசும் தேசமொன்றில் முன் பின் தெரியாத தமிழர்கள் கையால் அந்தச் சேவையைப் பெறுவதென்பது கொஞ்சம் விஷேசம்.

இளந்தமிழா உன்னைக் காண இன்பம் பெருகுது......

Saturday, November 6, 2021

ஆதித் திராவிடத் தமிழர்களின் ஜீவ காருண்யம்

 


காருண்யம், இரக்கம், அன்பு,அக்கறை  என்பது எல்லாம் உயர்வான ஒரு மனநிலை. மேலான மனங்களில் மேலோங்கி நிற்பன.

அது என்ன தமிழரிட்ட மட்டும் அது தனியா இருக்கிற ஒரு பண்பா எண்டு கேட்டா நிச்சயமா இல்லை. அது எல்லா இன, மொழி, பண்பாடு கொண்ட மக்களிட்டையும் எந்த ஒரு வேறுபாடும் இல்லாமல்  இருக்கு. அது ஒரு நல்ல மனிசரின்ர குணம்.

இண்டைக்கு நான் இங்க குறிப்பா சொல்ல விரும்புற விஷயம் என்னெண்டா எங்கட தமிழ் மரபில; அதிலயும் குறிப்பா வேற எந்த ஒரு சிந்தனைக் கலப்பு, பண்பாட்டு செல்வாக்குகளும் தமிழுக்குள்ள வராமல் இருந்த ஒரு காலத்திலயே இந்த ஜீவகாருண்யம் எண்ட விஷயம் தமிழன்ர மனநிலையில நிலைச்சு இருந்திருக்கு எண்டதத் தான்.

அது தெளிவா தெரியிற ஒரு தனித்தமிழ் வேர். பின்னாளில அது பிறகு அறமா நிலைக்கிறதுக்கு இது தான் அடிப்படையா அமைஞ்சிருக்கு. இதுக்கு தமிழ் இலக்கியத்தின்ர பாதை யெல்லாம் தொடர்ச்சியான தெளிவான சான்றிருக்கு. அத எல்லாம் இணைச்சா  ஒரு பெரிய தமிழ் Free Way யே போட்டிடலாம். அவ்வளவு கிளியர் அது!

சரி அது இருக்கட்டும், நாங்கள்  ஆதித்தமிழ் திராவிட வாழ்க்கை முறையின்ர தொடக்கத்துக்கு வருவம்.  தமிழ் மூதையையரின்ர தனித்தமிழ் வாழ்க்கை ரொம்ப சிம்பிள் வாழ்க்கை. காதல், சண்டை இந்த ரெண்டு பிறக்கெட்டுக்குள்ளயும் எங்கள அடைச்சுப் போடலாம். இதுக்குள்ள தான் மானம் ரோசம், அறிவு புலமை, அன்பு பண்பு, ரசிப்பு ருசிப்பு, வாழ்க்கை இறப்பு எல்லாம் அடங்கி இருந்திருக்கு. 

ஏன் சண்டையள் வந்திருக்கு எண்டு பாத்தா அது நாட்டுக்கு நாடு நிலம் பிடிக்கிறதா இல்லாட்டி ஒருத்தரின்ர மந்தையளை அடுத்த நாட்டுக்காரன் வந்து கடத்திக் கொண்டு போக இந்த நாட்டுக்காரர் அதை மீட்க  சண்டைக்கு போன விதமா தான் இருந்திருக்கு. போரில போய் செத்த வீரருக்கு அவர தாட்ட இடத்தில ஒரு கல்லை வச்சுப் போட்டு அந்த நடுக்கல்ல கடவுளா வழிபட்ட வாழ்க்கை தான் இவையின்ர கடவுள் கொள்கை. ஒரு விதமான செய்நன்றிக்கடன். அதத்தாண்டி அவை வேற ஒண்டையும் யோசிக்கேல்ல. 

கண்ணுக்குத் தெரிஞ்ச இந்த வாழ்க்கையை எல்லாரும் ஒரேமாதிரி; ஒரு பாகுபாடும் இல்லாமல்; நல்லா அனுபவிச்சு வாழ்ந்திருக்கினம். தன்னைச் சுத்தி இருக்கிற இயற்கையை  அவை அவதானிச்சு நேசிச்சு வாழ்ந்திருக்கினம்.

உதாரணமா ஒரு சின்ன சம்பவத்தை உங்களோட பகிர்ந்து கொள்ளலாம். நற்றிணை எண்ட இலக்கியத்தில வாற உலோச்சனார் எண்ட புலவர் பாடின பாட்டு இது. ரெண்டு இளஞ் சினேகிதியள் கதைக்கினம். வேறை என்ன? காதல் தான். வாறன் எண்டு சொன்ன காதலனைக் காணயில்லை. இது தான் ரொபிக். ஒரு சினேகிதி மற்றச் சினேகிதியயிட்ட இதச் சொல்லி கவலைப்படுரா. மற்ற சினேகிதி இவவுக்கு கவுன்ஸிலிங் செய்யிறா; இப்பிடி. இங்க பாரு, ஆருஞ் சூடாமல் சும்மா வச்சிருக்கிற பூமாலை மாதிரி வாடுறியே! முதல்ல இப்பிடி கவலைபடுறத நிப்பாட்டு எண்டு முதல்ல கவலையை நிப்பாட்டச் சொல்லிப் போட்டு ஏன் அவன் வரத் தாமதமாகுது எண்டதுக்கு காரணம் சொல்லுறா.

 ஏனெண்டா அவன் கடற்கரை வழியா இரவு வர வேணும். இரவில நண்டுகள் எல்லாம் கடற்கரையில ஓடித்திரியும். இப்பிடி நண்டுகள் ஓடித்திரியிற பாதைவழியா தேரை ஓட்டி வரவேணும். அது லேசான காரியமில்லை. இந்தகாலத்தில நாங்கள் இரவு ரோட்டுகளில கங்காருகள் குவாலாக்கள் ரோட்டுகள குறொஸ் பண்ணேக்கை அடிபடாமல் கவனமா கார் ஓட்டி வாற மாதிரி - அந்தக்காலத்தில  நண்டுகளை மிதிச்சிடாமல் தேரை ஓட்டி வரவேண்டிய தேவை இருந்திருக்கு போல. அப்பிடி அவன் கவனமா நண்டுகளை கவனிச்சு தேர் ஓட்டி வாறதால தான் தாமதமாகுதாம் எண்ணுறா. பெய்யாது வைகிய கோதை போல... எண்டு தொடங்குற அந்தப்பாட்டில அந்தச் சினேகிதி.

அட இதெல்லாம் என்ன பெரிய விஷயமா எண்டு நீங்க கேட்டா, அது பெரிய விஷயம் தான் எண்டு சொல்லுறதுக்கு தமிழிட்ட ஒரு காரணம் இருக்கு. அது என்னெண்டா கிட்டத்தட்ட இதே காலப்பகுதியில செம்மொழியா; தெய்வீக மொழியா; தேவ பாஷையா  வளர்ச்சி அடைஞ்சிருந்த சமஸ்கிருதத்தில - யாகம் எண்டு ஒரு சடங்கு நடந்திருக்கு.  வேதங்களும் பாரத இராமாயண இதிகாசங்களும் செல்வாக்கோட இருந்த  அந்த ஆரிய வாழ்க்கையில - அதின்ர சிந்தனைப் பண்பாட்டில - வேத மந்திரங்களை ஓதி, அக்கினி வளர்த்து அதில கடவுளுக்கான உணவுப் பொருள்களை அவிப்பாகமாக போட்டு  கடவுளோடு அவர்கள் தொடர்பு கொண்டு தமக்கு தேவையானதை பெற்ற முறை அது. அப்பாவி உயிரினங்களை அக்கினியில போட்டு ஆகுதி ஆக்கி கடவுளுக்கு சமர்ப்பிக்கிற முறையும் அதில இருந்து இருக்கு. 

இதை எல்லாம் நாங்கள் சிம்பிளா ஒரு வரியில கடந்து போயிட முடியாது. பக்கம் பக்கமா; கிட்ட கிட்டவா; அருகருகா வளர்ந்து வந்த  சிந்தனைப்பண்பாடு  எண்டாலும் வேற வேறயான வாழ்க்கை நெறிமுறையள் நம்பிக்கையள் இந்த ரெண்டு பண்பாட்டிலயும் இருந்திருக்கு. அதுக்கு ஒரு சின்ன உதாரணம் ஒண்டு சொல்லலாம்.

’முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டிலே’ எண்டு தன்ர காதலன் போரில செத்தாப்பிறகும் எங்கட வீட்டுல இருக்கிற  நீ எப்பிடி இப்பிடி பூத்திருக்கிறாய் எண்டு முல்லைப்பூவோட ஒரு தமிழ் காதலி கோவிச்சுக்கொண்டிருந்த தமிழ் பண்பாட்டு நிலவின அதே காலத்தில  குதிரையின்ர முதுகில அரசன் வெற்றிக் கொடியை வச்சு அது சுத்தித்திரிஞ்ச ஊரெல்லாம் தன்ர ஊர் எண்டு பிரகடனப்படுத்தி, அந்தக் குதிரைய வேற ஒரு அரசன் பிடிச்சிட்டா அவனோட போர் செய்து, அவனை வெற்றி கொண்டு, அதுக்குப் பிறகு  தன்னை சக்கரவர்த்தி எண்டு பிரகடனப்படுத்தி, அந்த வெற்றியைக் கொண்டாடும் முகமாக யாகம் செய்து அதில அதே குதிரையை கொன்று அதின்ர கொழுப்பை ஆகூதி ஆக்கி அந்த முளாசி எரியுற அக்கினியில அந்த குதிரையின்ர  மாமிசத்தை வாட்டி விருந்து கொடுத்து ‘அஸ்வமேத யாகம்’ நடத்திக் கொண்டிருந்தது தேவ பாஷை. 

சரி, இப்ப இந்த ஜீவகாருண்யம் எண்ட விஷயத்துக்கு வருவம். இண்டைக்கு நான் உங்களோட பகிர்ந்து கொள்ள இருக்கிற பாட்டு புறநானூறு எண்ட இலக்கியத்தில கோவூர் கிழார் எண்ட புலவர் பாடின 46வது பாட்டு.

இந்தப் பாட்டை சொல்லுறதுக்கு முதல் ஒரு முன்கதைச் சுருக்கம் சொன்னால் நல்லா இருக்கும். கிள்ளிவளவன்; மலையமான் எண்டு ரெண்டு சோழ ராசாக்கள். ரெண்டுபேருக்கும் பகை. ஒருமுறை கிள்ளிவளவன் மலையமானின்ர ரெண்டு பிள்ளைகளையும் உயிரோட பிடிச்சுக்கொண்டு வந்திட்டார். யானையால பிள்ளையளக் கொண்று பழி தீர்க்கிறது தான் கிள்ளி வளவன்ர நோக்கம். இது தான் சம்பவப் பின்னணி.

பிள்ளையள் சின்னவை. ரோற்றிலர்ஸா இருந்திருப்பினம் போல.  பெரிய ஆக்களின்ர உலகம் போல இல்லத் தானே குழந்தையளின்ர உலகம்! பிள்ளையளுக்கு இடம் ஆக்கள் எல்லாம் புதுசா இருக்கு; பழக்கமில்லாத இடம். மருண்டு போய் நிக்கினம். என்ன நடக்குது; ஏன் தாங்கள் அங்க நிக்கிறம் எண்ட ஒண்டும் அவைக்கு விளங்கேல்ல. யானை கொண்டுவரப் படுது. யானையை கண்ட உடன பிள்ளையளுக்கு கொண்டாட்டம். வாவ்... யானை... எண்டு ஆச்சரியமும் குதூகலமுமாக எல்லாத்தையும் மறந்து சந்தோஷமா ஒரு விதமான கூறியோசிற்ரியோட அதப் பாத்துக் கொண்டு நிக்கினம்.

கோவூர் கிழார் பாடுறார்.


நீயே, புறவின் அல்லல் அன்றியும் பிறவும்

இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை!

இவரே, புலன் உழுது உண்மார் புன்கண் அஞ்சித்

தமது பகுத்து உண்ணும் தண் நிழல் வாழ்நர்!

களிறு கண்டு அழூஉம் அழாஅல் மறந்த 

புன் தலைச் சிறாஅர் மன்று மருண்டு நோக்கி

விருந்தின் புன்கண் நோவு உடையார்!

கேட்டனை! ஆயின், நீ வேட்டது செய்ம்மே!

மன்னா, புறாவின்ர துன்பம் போக்கின சோழ பரம்பரையில வந்தவன் நீ. புறாவுக்கு மட்டுமா? எல்லா உயிர்களின்ர துன்பங்களையும் போக்குகிறவன் நீ. இந்தப் பிள்ளையளப் பாரு! இவையும் பெரிய குடும்பத்தில பிறந்த பிள்ளையள் தான். படிச்ச ஆக்களும் அறிஞர்களும் வறுமையில் வாடக்கூடாது எண்ணுறதுக்காக தங்கட செல்வங்களை எல்லாம் பகிர்ந்து குடுத்து வாழுற மரபில வந்த பிள்ளையள் இவை!

நேற்றுவரைக்கும் குளிர்மையான நிழலில; ஒரு கவலையுமில்லாமல் பாதுகாப்பா விளையாடிக்கொண்டிருந்த பிள்ளையள். இண்டைக்கு உனக்கு முன்னால கைதியளா நிக்கினம். இந்த புது இடத்தைப் பாத்து திகைச்சுப் போய் நிக்கினம். 

இவையை கொல்லுறதுக்காக நீ யானையை கொண்டு வந்திருக்கிறாய். அது கூட தெரியாமல் அதுகள் யானையை பார்த்து சந்தோஷமா ஆச்சரியப்பட்டுக் கொண்டு  நிக்குதுகள்.. இந்த அப்பாவிப் பிள்ளையளையா நீ கொல்லப் போறாய்?

என்னவோ நான் சொல்லுரத சொல்லியிட்டன். இனி நீ உனக்கு எது சரி எண்டு படுதோ அப்படிச் செய் 

எண்டு சொல்லுறார். 

ஒரு காருண்யமான காரியத்தை உணர்ச்சி வசப்பட்டு கோபப்பட்டு சுடச் சுட சொல்லாமல்; மென்மையா உணர்த்திற அதே நேரம் எதிரி மன்னன்ர குண இயல்புகளை அதுக்காக இகழ்ந்து கூறியோ அல்லது இந்த மன்னனிட்ட பணிஞ்சு போயோ சொல்லாமல் கோவூர் கிழார் சொன்ன பாணி எவ்வளவு அழகாயிருக்கு இல்லையா? 

கோவூரார்; தமிழ; அதின்ர ஜீவகாருண்யத்தை சொன்ன முறையும் இந்த வரலாற்று சம்பவமும் அதைப் பாட்டுக்குள்ள புகுத்தி காட்சிப்படுத்தின பாங்கும் தமிழ் உள்ள வரை தமிழன்ர அறம், கருணை, காருண்யம், மனசாட்சி எல்லாத்துக்குமான தொடக்கப் புள்ளியா இருந்தே வரும்.

இப்பிடி எத்தினையோ பாட்டிருக்கு. அதில இது ஆதித் தமிழ் திராவிடனிட்ட இருந்த காருண்யத்தின்ர ஒரு சிறு துளி!