Thursday, September 30, 2010

தோழிமார் கதை - வைரமுத்து -


ஆத்தோரம் பூத்த மரம்
ஆனை கட்டும் புங்க மரம்
புங்க மரத்தடியில் பூ விழுந்த மணல் வெளியில்
பேன் பார்த்த சிறு வயசுப் பெண்ணே நெனப்பிருக்கா?

சிறுக்கி மக பாவாடை சீக்கிரமா அவுறுதுண்ணு
இறுக்கி முடி போட்டு எங்காத்தா கட்டி விட
பட்டுச் சிறு கயிறு பட்ட இடம் புண்ணாக
இடுப்புத் தடத்தில் எண்ணை வச்சே நெனப்பிருக்கா?

கருவாட்டும் பானையில சிறுவாட்டுக் காசெடுத்து
கோணார் கடை தேடி குச்சி ஐசு ஒண்ணு வாங்கி
நாந்திங்க நீ கொடுக்கு;நீ திங்க நாங் கொடுக்க
கலங்கிய ஐஸ் குச்சி கலர் கலராய்க் கண்ணீர் விட
பல்லால் கடிச்சுப் பங்கு போட்ட வேளையிலே
வீதி மண்ணில் ரெண்டு துண்டு விழுந்திடுச்சே நெனப்பிருக்கா?

கண்ணாமூஞ்சி ஆடயிலே கால் கொலுச நீ துலைக்க
சூடு வப்பா கிழவீன்னு சொல்லி சொல்லி நீ அழுக
எங்காலுக் கொலுசெடுத்து உனக்கு போட்டனுப்பி
என் வீட்டில் நொக்குப் பெத்தேன் ஏண்டி நெனப்பிருக்கா?

வெள்ளாறு சலசலக்க வெயில் போல நிலவடிக்க
பல்லாங்குழி ஆடயிலே பருவம் திறந்து விட
என்னமோ ஏதோன்னு பதறிப் போய் நானழுக
விறு விறுன்னு கொண்டாந்து வீடு சேர்த்தே நினப்பிருக்கா?

ஆடு கனவு கண்டா அருவா அறியாது
புழுவெல்லாம் கனவு கண்டா கொழுவுக்குப் புரியாது
எப்படியோ பிரிவானோம்; இடி விழுந்த ஓடானோம்

வரட்டூரு தாண்டி வாக்கப் பட்டு நான் போக
தண்ணியில்லாக் காட்டுக்கு தாலி கட்டி நீ போக
எம் புள்ள எம் புருசன் எம் புழப்பு என்னோட
உம் புள்ள உம் புருசன் உம் புழப்பு உன்னோட

நாளும் கடந்திருச்சு நரை கூட விழுந்திருச்சு
வயித்தில வளத்த கொடி வயசுக்கு வந்திருச்சு
ஆத்தோரம் பூத்த மரம் ஆனை கட்டும் புங்க மரம்

போன வருசத்து புயக் காத்தில் சாஞ்சிருச்சு!


சிறு வயசுத் தோழிமார் தம் நட்பு - அதிலும் கிராமத்துச் சிறு பெண்களின் நட்பு பற்றிய வைரமுத்துவின் இக்கவிதை -அதிலிருக்கின்ற உண்மை - அது வெளிப்படுகின்ற கிராமத்து வாடை வீசும் எளிய தமிழ் - அதன் ஊடு பொருளாக இருக்கும் உணர்வுப் பெருக்கு எவ்வளவு அருமையாக இருக்கிறது இல்லையா?

இதுவும் கையால் அள்ளிய கடலின் ஒரு துளி!

Tuesday, September 21, 2010

வளையாப்பட்டித் தவிலும் வயதுக்கு வந்த வயலினும்


வளையாப்பட்டித் தவிலும் வயதுக்கு வந்த வயலினும் இந்த வார விருந்து.

ஒரு புள்ளி மான் அறிமுகப் படுத்த கண்முளித்த புலிக்குட்டிகள் பாடுகிறார்கள்.ரசிக்க வைக்கும் துள்ளலிசை.கவி வளமும் சேர்ந்து தாளம் போட்டு ரசிக்க வைக்கிறது.யார் எழுதினார் என்று தெரியவில்லை.மலையாள மொழி என்றாலும் விளங்குகின்ற வித்தியாசமான பாடல் வரிகள்.அவையும் களிப்பூட்டுகின்றன.


மறக்காமல் அடிக்கடி வருபவர்களுக்காக -

சிறு மாற்றமாக ஒரு மொழி கடந்த துள்ளல் பாடல் ஒன்றினை இன்று பதிவேற்றுகிறேன்.

பல சொற்கள் தெரிந்த மலையாள மொழி தான் என்றாலும் எவ்வளவு இனிமையையும் உற்சாகத்தையும் தருகிறது இது இல்லையா? இசை மொழியைக் கடந்தது என்பதற்கு இப்பாடல் ஒரு சாட்சி.

YouTube - Roshan, Sourav, Reshma sing 'Valayapatti...'

மேலே உள்ள ஆங்கில பதிவின் மேல் இரு முறை அழுத்திப் பாடலைக் கேட்கலாம்.

Wednesday, September 15, 2010

படித்ததில் பிடித்தது

நேரத்தைப் பிடிக்க ஓடிக்கொண்டிருப்பதால் முன்னரைப் போல் இங்கு அதிக நேரம் மினைக்கிட முடியவில்லை.என்றாலும் இந்த வலைப் பூவைப் பார்க்க வரும் என் நிரந்தர நண்பர்களுக்காக முன்னர் நான் சேகரித்து வைத்த பத்திரிகைத் துண்டொன்றில் இருந்து ஒரு விடயத்தை இன்று பதிவேற்றுகின்றேன்.

இது 2001ம் ஆண்டு ஜனவரி மாதம் கொழும்பில் இருந்து வெளியாகி வாரம் 3 லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகிக் கொண்டிருந்த தினக்குரல் பத்திரிகையில் இது வெளிவந்திருந்தது.

படித்ததில் பிடித்தது:-

*அன்பும் கருணையும் உடையவராய் இருங்கள்.அது உங்களது முகத்துக்குப் பொலிவைத் தருவதுடன், மற்றவர்களை உங்களிடத்தில் ஈர்க்கும் விசையாகவும் செயற்படும்.

*மற்றவர்களுடன் பேசும் போது உரத்த குரலில் பேசாதீர்கள்.முக்கியமாகத் தொலைபேசியில் பேசும் போது.

*புதிய நண்பர்கள் அறிமுகம் ஏற்படும் போது விவாதங்களை முற்றிலுமாகத் தவிருங்கள்.

*உங்கள் தோற்றம் மற்றும் உடைகளை விடவும் உங்கள் வார்த்தைகள் தான் உங்களின் மதிப்பை உயர்த்தும் உண்மையான சாதனம் என்பதை அறியுங்கள்.

*மற்ரவர்களை உளப்பூர்வமாக மரியாதை செய்யுங்கள்.போலியான உபசரணைகளை முற்றிலுமாகத் தவிருங்கள்.

*இலக்குகளை நோக்கிய பயணங்களின் போது வரும் இடையூறுகளைப் பொருட்படுத்தாதீர்கள்.

*நீங்கள் மற்றவர்களுக்குச் சொல்வதையே நீங்களும் நடைமுறையில் கடைப்பிடியுங்கள்.உங்கள் பேச்சுக்கும் செயலுக்கும் வித்தியாசமில்லாதவாறு நடந்து கொள்ளுங்கள்.

* உங்கள் நலனை முன்னிட்டு மற்றவர்களுக்கு இடையூறு செய்யாதீர்கள்.

*யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் மேலோட்டமாக விமர்சனம் செய்யாதீர்கள்.

* எந்த மோசமான நிகழ்ச்சியிலும் எத்துணை மோசமான நபரிடத்திலும் உங்களுக்கு ஒரு செய்தி அல்லது படிப்பினை இருக்கும் என்பதில் முனைப்போடு இருங்கள்.

*சுய முயற்சி இல்லாத வெற்றியும் தகுதியில்லாத புகழும் நெடு நாள் நீடிக்காது என்பதை மனதில் நிலை நிறுத்திக் கொள்ளுங்கள்.

Thursday, September 9, 2010

BODY CLOCK


'நாம் எல்லாம் சாய்வு நாற்காலி மனிதராகி விடும் ஒரு பொழுதில் இந்த நினைவு மலரைப் புரட்ட நேர்ந்தால் இதிலிருக்கின்ற ஒரு சிறு சம்பவம் உங்களுக்கு நம் பல்கலைக் கழக வாழ்வை நினைக்கப் போதுமானதாக இருக்கும்' என்ற வாசகம் நாம் வளாகத்தை விட்டு வெளியேறிய போது அச்சடிக்கப் பட்டு விநியோகிக்கப் பட்ட மலர் ஒன்றில் இருந்தது.அம்மலர் கையில் இப்போது இல்லை.ஆனால் அந்த வாசகம் மட்டும் மனதோடு பதிந்து விட்டது.அதில் நம்முடைய ஆண்டில் வளாகம் புகுந்த ஒவ்வொருவர் பற்றியும் ஒவ்வொரு வரி எழுதப் பட்டிருந்தது ஞாபகம்.என்னைப் பற்றிய வாசகமும் ஞாபகம் இருக்கிறது. அதை இப்ப சொல்லி உங்களைக் கஸ்டப் படுத்த விரும்பவில்லை நான்:).

புவியியலைச் சிறப்புப் பாடமாகக் கற்ற ஒரு அழகான பெண்ணைப் பற்றி இப்படி எழுதியிருந்தார்கள்'அன்ன நடை உன் அழகு அனிதா' அப் பெண் நடையிலும் நிறத்திலும் புன்னகையிலும் அன்னத்தையே ஒத்திருந்தாள்.அதனாலோ என்னவோ என்னோடு படித்த எத்தனையோ பேர் இருந்த போதும் என்னோடு படிக்காத அப் பெண்னைப் பற்றிய அவ்வரி அப்படியே காரணமில்லாமல் மனதோடு தங்கி விட்டது.

சரி அது போகட்டும் நான் சொல்ல வந்த விடயம் வேறு.

நான் இப்படி நினைத்துப் பார்த்ததுண்டு.அப்படிச் சாய்வு நாற்காலி மனிதராகி விடும் ஒரு நாளில் என் வாழ்க்கையின் உன்னதமான தருணங்கள் பற்றி நினைத்துப் பார்த்தால் எவ்வெவற்றை எல்லாம் நான் பட்டியலிடக் கூடும் என்று.

1.படித்த புத்தகங்கள்
2.சந்தித்த மனிதர்கள்
3.அனுபவித்த சில சில தருணங்கள்
4.மனதுக்கு நேர்மையாய் வாழ்ந்த வாழ்க்கை
5.விட்ட தவறுகள், பெற்ற பாடங்கள், சந்தித்த சவால்கள்,
6.மீண்டெழுந்த வரலாறுகள்
7.என் மீது எனக்கிருந்த நம்பிக்கை
8.என் பலவீனங்கள்,
9.இலக்கியம் இணையம் என்று மேய்ந்து மேய்ந்து இரை மீட்டியவை
10.சேர்த்து வைத்த பொக்கிஷங்கள்
11.தேடாமல் கிட்டிய அதிஷ்டங்கள் தேடியும் கிட்டாத துரதிஷ்டங்கள்
12.சமூகத்தைக் கற்றுக் கொண்டது
..........

இப்படி நீளும் பட்டியல்.இறுதியில் எஞ்சி நிற்கும் வாழ்க்கை பற்றிய என் சொந்த சாரம்.

அப்படிப் பார்க்கும் போது இந்தப் பானங்கள் பற்றிச் சொல்லாமல் போக முடியாது.நான் துயிலால் எழுந்த பின்னரும் 'என்னை'எழுப்பும் பானம் இது.நீர் இறைக்கும் இயந்திரத்தை start ஆக்குவதற்கு முன்னால் அந்த வெள்ளை நிற புளொக்கில் கொஞ்சம் பெற்றோல் ஊற்றிப் பின் கயிற்றினால் 3,4 சுற்றுச் சுற்றி ஒரு இழு இழுத்து start ஆக்குவார்களே! அது போல என் நாளைத் தொடங்கவும் இப்படி ஒரு 'பெற்றோல்'ஊற்ற வேண்டி இருக்கிறது.

அவுஸ்திரேலியாவில் இந்தப் பெற்றோல் ஒவ்வொரு மூலையிலும் தாராளமாகப் புளக்கத்தில் இருகிறது.இங்கு ஒரு வழக்கம் இருக்கிறது.புதிதாக வேலையில் சேருகின்ற போதிலும் சரி புதிதாக ஏதேனும் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ளும் போதிலும் சரி முதலில் அவர்கள் அறிமுகப் படுத்துவது எங்கு தேநீர் சிற்றுண்டி வசதி இருக்கிறது, எங்கே கழிப்பறை வசதி இருக்கிறது என்பதைத் தான்.ஆரம்ப காலங்களில் இது எனக்குச் சற்று அதிர்ச்சியளிக்கும் விடயமாகத் தான் இருந்தது.பின்னர் அது இங்கத்தைய பண்பாடு என்று புரிந்தது.

அண்மையில் ஒரு கலந்துரையாடல் ஒன்றுக்குச் சென்றிருந்தேன்.அது நாம் வசிக்கின்ற பகுதியின் பந்தோபஸ்து நடவெடிக்கைகளை மேலும் எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது பற்றிய கூட்டம்.அங்கு ஒரு பிறேசில் நாட்டுப் பெண்மணி வந்திருந்தார்.இங்கும் அப்படித்தான்.எல்லோரும் அவரவர் தேநீர்,பிஸ்கட் போன்றவற்றோடு அமர்ந்து கொண்டாயிற்று.அந்த பிறேஸில் நாட்டுப் பெண்மணி இப்படி ஆரம்பித்தார்.

ஒரு நாள் வேலை முடித்து வீடு வந்து மிகவும் களைப்போடு இருந்ததால் குளித்து விட்டு தேநீரும் ஒரு புத்தகமுமாக ஒரு சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து புத்தகத்தை விரித்துக் கொண்டே தேநீரை உறிஞ்சினாராம்.அப்போது தான் அதற்குச் தான் சீனி போடவில்லை என்பதை உணர்ந்து கொண்டாராம். மீண்டும் எழுந்து போய் சீனி போடப் பஞ்சியாய் இருந்ததால் அப்படியே குடிப்போம் என்று விட்டுக் குடித்தாராம்.ஆனால் அது நாவுக்கும் உடலுக்கும் நல்ல உவப்பாக இருந்ததாம்.அன்றிலிருந்து தான் உடலின் பாசையை அறியக் கற்றுக் கொண்டு விட்டேன்.உண்மையில் உடல் சீனியின் தேவையைப் புறக்கணித்தே வந்திருக்கிறது. நான் அதனைக் கவனியாது விட்டிருந்ததை அத் தற்செயல் நிகழ்வே எனக்கு உணர்த்தியது என்றார்.நீங்கள் எப்போதேனும் இந்த உடலின் பாசையை அறிந்திருக்கிறீர்களா?

என் தோழி ஒருத்தி இருக்கிறாள்.அவருக்கு தேனீர் எவ்வளவு சுவையாகப் போட்டுக் கொடுத்தாலும் அதில் பாதியளவு மிச்சமிருக்கும். ஒரு முறை வந்த போது அது கூடுதலாக இருக்கிறதோ என்றெண்ணி பாதியளவு போடுகிறேன் என்றேன்.( எனக்கு அநியாயமாக்குகிறவர்களைப் பார்த்தால் கெட்ட கோபம் வரும்) அதற்கு அவர் சொன்ன பதில் இல்லை இல்லை எனக்கு இப்படி விட்டு பழகி விட்டது. நான் வீட்டில் எனக்குப் போட்டாலும் அப்படித்தான். அடியில் மண்டி இருக்கும் என்று ஒரு பயம் என்றார்.இதற்கு என்ன செய்வது?

என் அக்காள் இருக்கிறார். அவவுக்கு எல்லாம் கொளகொளா என்று ஆறி வெள்ளையாய் இருக்க வேண்டும்.(எனக்கு வாசமாய் கலராய் கண்டு கேட்டு உண்டு உயிர்க்கத் தக்கதாய் இருக்க வேண்டும்)அப்படிப் போட்டுக் கொடுத்தாலும் கொஞ்சம் பால் விடு; கொஞ்சம் ஆறட்டும் என்று ஆறிய பின் குடிப்பா.

அண்மையில் இடம் பெற்ற தமிழ் பாடசாலைக் கலைவிழாவின் நிமித்தம் நான் வேறொரு ஆசிரியையோடு சேர்ந்து பணியாற்ற வேண்டி இருந்தது. அங்கு இடை வேளையின் போது நானும் அவ் ஆசிரியரும் தேநீர் குடிக்கப் போயிருந்தோம்.நாமே நமக்குப் போட்டுக் கொண்டு சீனியைக் கலக்குவதற்காக என் கையில் வைத்திருந்த கரண்டியை அவவின் கையில் கொடுத்தேன். உடனே ஐயோ வேண்டாம் நான் கலக்குவதில்லை. எனக்கு குறைந்த அளவு சீனியின் ருசியில் இருந்து அதன் அளவு கூடிக்கொண்டு போவது வரை அதன் சுவை வேறுபாட்டை அனுபவித்துக் கொண்டே குடிப்பது பிடிக்கும் என்றார்.

இப்போதும் எனக்கு நினைவில் இருக்கும் ஒரு தேநீர் ஊர்மிளா என்ற ஒரு பெண்மணி போட்டுத் தந்த தேநீர்.அவரை அதற்குப் பிறகு 'ஊர்மிளை' என்று செல்லப் பெயரிட்டு மன அறையில் வத்திருக்கிறேன்.அவரின் வீட்டுக்கு ஏதோ ஒரு காரிய நிமித்தம் போயிருந்தேன்.மிகவும் அன்பும் பண்புமான தம்பதிகள். சற்று நேரத்தின் பின் அங்கு ஒரு அருமையான தேநீர் வாசம் நாம் இருந்த வரவேற்பறை முழுக்கப் பரவி தேநீருக்கு மனதைத் தயாராக்கியது.நாமெல்லாம் இலங்கையராக இருப்பதாலோ என்னவோ அதன் வாசம் குணாம்சம் எல்லாம் நம்மோடு கலந்து விட்டவை. அதன் பின் பால் வாசம் வந்தது. பின்னர் அவை இரண்டும் சேர்ந்து ஒரு தனித்துவ நிறத்தோடும் குணாம்சத்தோடும் அத் தேநீர் என்னை வந்தடைந்தது. அதன் பின் ஏனோ அவரை ஊர்மிளை என்று அவருக்கு மனம் பெயர் போட்டு விட்டது.ஊர்மிளையின் தேநீர் என் வரையில் மிக விஷேஷமானது.ஒரு சிலரால் மட்டும் தான் அப்படி விஷேஷமாகத் தேநீரைத் தயாரிக்க முடியும் போலும். ரசனையுள்ள கரங்கள்!

கடைகளுக்குப் போனால் English tea என்று ஒரு வகையான தேநீர் வாங்கலாம். கெண்டியுள்ள கேத்திலில் அது வருவதே அழகும் கம்பீரமுமாக இருக்கும்.சீனி, பால் தனித்தனியாகவும் cup & sauser தனியாகவும் கரண்டி இன்னொரு வகையாகவும் மிகக் கலைத்துவமான இயல்போடு அது வரும்.எம்முடைய சுவை விருப்பங்களுக்கேற்ப நாமே அதனைத் தயாரித்தும் கொள்ளலாம்.பெரிய பெரிய தேநீர் கடைகளுக்குப் போனால் பீங்கான் கேத்திலும் பாத்திரங்களும் அழகிய வேலைப் பாடுகள் அமைந்ததாய் இருக்கும்.

இங்கு தேநீர் அருந்துவது ஒரு பண்பாடு. ஒருவர் coffie க்குப் போவமா வெளியில என்று கேட்டால் அவர் ஏதோ முக்கியமான விடயம் பற்றி உங்களோடு பேச விரும்புகிறார் என்று அர்த்தம்.மற்றும் அயலவர் உங்களை வீட்டுக்குத் தேநீர் அருந்த வா என அழைத்தால் உங்களோடு அவர் சுமூகமான நட்புறவைப் பேண விரும்புகிறார் என்று அர்த்தம்.

வேலை சம்பந்தமாக முகாமையாளர் தரத்தில் உள்ளவர்கள் விடயங்களைப் பேசுவதற்கும், காதலர்கள் தம் நேரத்தைச் செலவிடுவதற்கும்,புதிதாகக் காதலைத் தெரிவிப்பவர்கள்,நண்பர்கள் என்று நேரத்தை பயனுள்ள வகையில் செலவளிக்கத் தேநீர் விடுதிகளைத் தேர்ந்தெடுப்பார்கள். தேநீர் என்பதைத் தாண்டி அதற்கு ஒரு வலுவான காரணம் அங்கு இருக்கும். ஏன் சில வேளைகளில் தேநீர் குடித்துக் கொண்டே நேர்முகத் தேர்வுகளும் நடப்பதுண்டு.

வெளித் தேநீர் சாலைகளைத் தேர்ந்தெடுப்பதற்கும் தேநீரைத் தேர்ந்தெடுப்பதற்கும் மனதை இலகுவாக்கும் அதன் தன்மை ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் போலும்!


தேநீரைக் கண்டு பிடித்த மனித வலு வாழ்க!!

அது சரி உங்கட Body clock என்ன சொல்லுது? :)


குறிப்பு;

என் அக்ஷ்ய பாத்திரத்திலும் ஏதோ இருக்கும் என்று வரும் என் வாசகப் பெருங்குடி மக்களுக்கு என் வணக்கங்கள். சில தவிர்க்க முடியாத காரணங்களால் புதன் கிழமை தோறும் வழக்கமாக வருவது போல் வர முடியவில்லை. சில மதங்களுக்கு இந் நிலைமை நீடிக்கலாம் போலத் தோன்றுகிறது. என்றாலும் தெண்டித்து வரப் பார்க்கிறேன். புதன் பதிவு வரத் தாமதித்தால் கோபித்துக் கொண்டு போய் விடாதீர்கள். இணையப் பக்கம் வருகின்ற போது ஒரு முறை இப்பாத்திரத்தையும் எட்டிப் பாருங்கள்.

Wednesday, September 1, 2010

வசந்த காலம்


இன்று இங்கு வசந்த காலத்தின் முதல் நாள்.
செப்ரம்பர் மாதம் முதலாம் திகதி.
மழையில் குளித்து முகிலில் முகம் துடைத்துச் சூரியன் மெல்ல எட்டிப் பார்க்க,
மெல்லியதாய் ஒரு குளிர்தென்றல் நாட்டைச் சற்றே தழுவிச் செல்ல,
மரங்கள் குருத்து விட மலர்கள் மெல்ல மொட்டவிழ,
பறவைகள் தத்தம் கீதங்களை இசைத்த படி முட்டை போட இடம் தேட,
இயற்கை இன்று சட்டை மாற்றுகின்றது.
இனி,நாடு இருட் குளிர் போர்வைக்குள் இருந்து மெல்ல மெல்ல சோம்பல் முறித்து எழும்.
பொன் கூந்தல் அலைந்தாட சிறுமிகள் பூப்போட்ட சட்டையும் புன்னகையுமாய் புதினம் பார்த்துச் செல்வர்.
கடைகளில் கனக்க மலிவு விற்பனை.
வீடுகள் கேட்டின் மாற்றும்.
நேரம் ஒரு மணி தள்ளிப் போகும்.
மகரந்தங்கள் காற்றோடு கலந்து பலரை தும்மப் பண்ணும். சிவந்த முகங்கள் தும்மி தும்மி மேலும் சிவக்கும்
ஆனாலும் வசந்த காலம் வரவே செய்யும்.
குளிர் காலம் எப்படி வந்ததோ அதே மாதிரி.

ஒரு வாழ்க்கை அதுவாக எப்படி இருக்குமோ
அது மாதிரி!

Friday, August 27, 2010

மின்னாமல் முழங்காமல் வந்த மழை


லைசன்ஸைப் பார்த்துப் பார்த்து போய்க் கொண்டே வேலைத்தலம் போய்ச் சேர்ந்தேன் என்று சொன்னேன் தானே! அதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் இதை.


இப்போது கொஞ்சம் என் வேலை இடத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும். அது ஒரு அரச திணைக்களம்.தபால் திணைக்களம்.பல்லாயிரம் ஊழியர்கள் கண்டம் முழுவதும் வேலையில் இருக்கிறார்கள்.அதில் நான் ஒரு சிறு துளி.அது மக்களுக்குப் பல பிரிவுகளில் பல சேவைகளை வழங்குகிறது.நான் வேலை செய்கின்ற பிரிவின் பிரதான வேலை தனிப்பட்ட நிறுவனங்களுக்கு வருகின்ற போகின்ற தபால்கள்,பாசல்களைப் பெற்று அவற்றை பிரித்து பகுத்து (உட்பிரிவுகளின் படி)அவர்களுக்கு அனுப்பி வைப்பது காலையில் வேலை செய்கின்றவர்களுடய வேலை.(5 மணி நேரம்.6-11)

மாலையில் 5 மணி நேரம் வேலை செய்கின்றவர்கள் காலையில் பிரித்து வைத்து விட்டுப் போன தபால்கலைத் திணைக்கள ஊழியர் மூலமாகக் கொடுத்தனுப்பி விடுவதும்,அவர்களிடம் இருந்து வருகின்ற தபால்கள்,பாசல்கள்,உள்நாட்டு வெளிநாட்டு கடுகதிக் கடிதங்கள் போன்ற வற்றை அவர்களுக்கான சலுகை விலையில் கணனியில் பதிவு செய்வதும்;ரசீதை அவர்களுக்கு அன்றே அனுப்பி வைப்பதும் அவர்களது வேண்டுகோள்களுக்கேற்ப தபால் திணைக்களத்து பொருட்களைக் கொள்வனவு செய்து அனுப்பி வைப்பதுமாகும். சில வேளைகளில் அவசர காரியமெனில் கூரியரை ஒழுங்கு படுத்தி அந்த பொருள் குறிப்பிட்ட நேரம் போய்ச் சேர ஒழுங்கு செய்வதும் மாலையில் வேலை செய்பவரது பொறுப்பு.

நான் சொனி நிறுவனத்துக்கும் அரச பாதுகாப்பு திணைக்களத்துக்குமான வெளியே செல்லும் தபால்களுக்குப் பொறுப்பாக இருந்தேன்.(இது நான் சொல்வது சுமார் 10 வருடங்களுக்கு முந்திய கதை)

இந்தச் சந்தர்ப்பத்தில் பல நூற்றுக்கணக்கான அரச தனிப்பட்ட நிறுவனங்கள் பல ஒப்பந்த அடிப்படையில் நம் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்து கொண்ட படியால் அவர்களுக்குப் பல சலுகைகள் அளிக்கப் பட்டிருந்தன. திடீரென நம் தலைமையகம் இவற்றைத் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு இப்பகுதி வேலைகளை விற்று விட்டது. அதனால் அங்கு வேலை செய்த தபால் திணைக்களத்து ஊழியர்களுக்கு 3 வாய்ப்புகளைத் தந்திருந்தார்கள்.

1.குறிப்பிட்டளவு சன்மானத்தைப் பெற்றுக் கொண்டு வேலையில் இருந்து நீங்கிச் செல்லலாம்.
2.புதிய நிறுவனத்தோடு அதே அளவு சம்பளத்தில் சேர்ந்து கொள்லலாம்.
3. வேறு இடத்துக்கு மாற்றம் தரும் வரை தாமதிக்கலாம்.

நான் 3 வது தீர்மானத்தை எடுத்திருந்தேன்.(அது பிரித்தானிய கொலனிக்குள் நம் நாடு இருந்ததன் எச்சம்.:)

அதனால் இப்போது எனக்கு என் வேலையோடு, புதிய நிறுவனத்துக்கு வேலையைக் கற்றுக் கொடுக்க வேண்டிய வேலையும் இருந்தது.5 மணி நேரம் என்பது தரப்பட்டிருக்கின்ற வேலையைச் செய்து முடிக்கவே போதுமானதாக இருக்கும். அதற்குள் புதிதாதச் சில வேலைகளும் சேர்ந்து கொள்வதால் 12 - 5 மணி வரையுமான வேலை சில வேளைகளில் கூடுதலான நேரத்தையும் எடுக்கும். ஆனாலும் வரவுப் பதிவேட்டில் 12 - 5 என்றே பதிந்து செல்வது வழக்கம்.நானே ராணி நானே பொறுப்பு என்பதால் வந்த ஒரு வித பொறுப்புணர்வு என்று சொல்லலாம்.எப்போவாவது இருந்து விட்டு முகாமையாளர் வருவார். நலமா? வேலை எப்படி? என்று கேட்டு விட்டுப் போவார். அவ்வளவு தான். வேலை கை நழுவிப் போக இருப்பதால் வந்த அசிரத்தை என்றும் இதனைக் கொள்ளலாம்.

இனி விடயத்துக்கு வருகிறேன்.(ஆலாபனை எல்லாம் முடிந்து விட்டது)வழமை போல் வந்து கையெழுத்திட்டுப் பொருட்களைப் பொறுப்பேற்று வேலை ஆரம்பித்து சுமார் 2 மணி நேரம் இருக்கும். என் முகாமையாளர் மைக்கல் பிறவுன்( எங்கள் முன்னாள் பிரதமர் கெவின் ரட் மாதிரி இருப்பார்) வந்தார். எமக்கிடையிலான் உரையாடல் கீழ் கண்டவாறு இருந்தது.

நலமா யசோதா?
நலம் நீங்கள் எப்படி மைக்?
(அதற்குப் பதில் இல்லை)வேலை எப்படிப் போகிறது?
வழமை போல.
பிரச்சினை ஏதேனும் உண்டா?
இது வரை இல்லை. சுமூகமாகப் போகிறது.
புது நிறுவனத்தினர் உன்னோடு எப்படி நடந்து கொள்கிறார்கள்.
நட்போடும் ஒத்துழைப்போடும்.
நேரம் உனக்குப் போதுமானதாக இருக்கிறதா?
சற்றுக் கடினம் தான் ஆனாலும் சமாளிக்கக் கூடியதாக இருக்கிறது.
முழு நேரமாக வேலை செய்ய உனக்குச் சம்மதமா?
என்ன? போஸ்டிலா?
ஆம் நாளையில் இருந்து உன்னால் அதனை ஆரம்பிக்க முடியுமா?
!!!!!!உண்மையாகத் தான் கேட்கிறாயா?
ஆமாம். ஒருவர் ராஜினாமாச் செய்திருக்கிற படியால் அதனையும் சேர்த்து நீ செய்ய வேண்டி இருக்கும்.
நேரம்?
9 - 5.
நிச்சயமாக. என்னை நீ தெரிவு செய்ததற்கு நன்றி.
நாளை காலை வேலை ஆரம்பிக்கு முன்பாக என் காரியாலையத்துக்கு வந்து உன் நியமனக் கடிதத்தைப் பெற்றுச் செல்.வாழ்த்துக்கள்.

முழு நேர வேலைக்குத் தவம் கிடந்த நான் எப்படி உணர்ந்திருப்பேன் என்பதை உங்கள் கற்பனைக்கு விட்டு விடுகிறேன்.

மின்னாமல் முழங்காமல் பெய்த மழை அது.

அது என் வாழ்வுக்கான சுபீட்சமான பாதை திறக்கப் பட்ட நாள்.

நவம்பர் மாதம் 22ம் திகதி.

Thursday, August 19, 2010

லைசன்ஸ் எடுத்த கதை


சில ஆண்டுகளுக்கு முன் ஆனந்த விகடனில் ஒரு சிறுகதை படித்தேன். அது சுரேந்திரநாத் என்பவர் எழுதிய தீராக் காதல் என்ற கதை.அது இப்படித் தொடங்குகிறது."கடவுள் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒரு மகா அற்புதமான தருணத்தை எங்கேனும் ஒழித்து வைத்திருப்பார்.எனக்கு அது..." என்று ஆரம்பிக்கும்.

என்னுடய வாழ்விலும் வந்த ஓர் அற்புதமான தருணம் இது.அப்போது நான் பகுதி நேரமாக பிற்பகல் 12 மணி தொடக்கம் 5 மணிவரை வேலைக்கு (நகர் புறம் என்பதால் தொடர் தொடரூந்தில்) பயணித்துக் கொண்டிருந்த காலம்.அதனால் காலையில் இருந்த நேரத்தை கார் பழகுவதற்கு ஒதுக்கிக் கொண்டேன்.ஒரு மணி நேரம் பழக 35 டொலர்கள் கொடுத்து பழகிப் பரீட்சைக்கு மேலும் காசு கட்டி பரீட்சை நேரம் ஓடுவதற்காக காருக்கு வாடகையாக(பழகிய கார் என்றால் ஓடுவது சுலபமில்லையா)மேலும் பணம் கொடுத்து பழகிய காரையே வாடகைக்குப் பெற்று, பரீட்சைக்கு முதல் 2 மணி நேரம் பயிற்சியும் பெற்றுத் தயாராகக் காரியாலயத்தில் குந்தியாயிற்று.

பரீட்சகர் வெளியே வந்து என்னை வருமாறு அழைத்த கையோடு எனக்குப் பதட்டம் ஆரம்பமாயிற்று.என் பயிற்சியாளரிடம் வாழ்த்தினையும் திறப்பையும் பெற்றுப் பரீட்சகருடன் நடந்து வெளியே வந்தேன்.காரை எடுக்குமாறு கூறினார் பரீட்சகர். எனக்கு காரை எப்படித் திறப்பதெனத் தெரியவில்லை.பாருங்கள் பல மாதங்கள் பயிற்சி பெற்ற அதே காருக்கு எப்போதும் திறந்தவாறே கார் இருப்பதால் எனக்கு காரை திறக்கும் வழி தெரியவில்லை.(றிமோட் கொன்றோல்)அட இந்தச் சின்ன விடயம் கூட எனக்குத் தெரியவில்லையே என்று மனம் அலுத்துக் கொண்டது.நான் முழித்துக் கொண்டு நிற்க,போய் உன் பயிற்சியாளரை அழைத்து வா என்றார் பரீட்சகர்.மனம் கணக்குப் போட்டது.சரி ஒரு பிழை.முதற் கோணல் முற்றும் கோணலாயிற்றே.மனம் சோர அவரை அழைத்து வந்தேன்.

அவர் வந்து அசட்டுப் புன்னகையோடு திறந்து விட,காரை ஸ்டாட் பண்ணினேன். காரியாலய வளாகத்தை தாண்டி இடது புறம் திருப்பு என்று ஆணை பிறந்தது.அந்த இடத்தில் இருந்த ஸ்ரொப் சைன்னுக்கு கிவ் வே கொடுத்து இடது புறம் திருப்பினேன்.ப்ரீட்சகர் அதனைக் குறித்துக் கொண்டதை 'மூன்றாவது கண்'கவனித்துக் கொண்டது.மனம் அடச் சீ 2 வது பிழை என்றது. தொடர்ந்து கொமாண்டிங் தந்து கொண்டே இருந்தார் பரீட்சகர்.

முன்னால் தரித்து நிற்கிற காருக்குப் பின்னால் றிவேர்ஸ் பாக் செய்து விட்டு நீ சரி என்று நினைத்த பின் எனக்குக் கூறு என்றாள். இதற்கு மிகக் கடும் பயிற்சி எடுத்துக் கொண்டாலும் சற்று நான் இடறுகின்ற இடம் இது. எனவே வலு அவதானமாகவும் ஆறுதலாகவும் சரியாகவும் பாக் பண்ணினேன்.அதில் எனக்கொரு ஆறுதல்.கெட்டிக்காரி என்று எனக்கு நானே மனதுக்குள் ஒரு சான்றிதழையும் கொடுத்து விட்டு பாக் பண்ணியாயிற்று என்றேன் கியர் றிவேஸில் இருக்கத் தக்கதாக.சரி இனி எடுக்கலாம் என்றாள். கியரை டிறைவ்வுக்குக் கொண்டு வரும் போது நினைத்தேன். சரி மூன்றாவது பிழை.

அதன் பின் மனம் ஒரு தெளிவான தீர்மானத்துக்கு வந்திருந்தது. சரி இம்முறை லசென்ஸ் கிடைக்கப் போவதில்லை.அடுத்தமுறை கவனமாக பார்ப்போம் கிட்டத் தட்ட 120 டொலர்கள் கொடுத்து 3 தவறுகளைப் படித்திருக்கிறேன் என்று மனம் தீர்ப்பினை வழங்க, அதன் பின் தெளிவான நிதானத்தோடு கார் சுமூகமாக ஒரு தவறுகளும் நேராமல் இருப்பிடத்தை வந்தடைந்தது.

தீர்ப்புக்குக் காத்திருக்கின்ற அப் பொழுதில் பயிற்றுனர் பரீட்சை எப்படி என்று கேட்டார். நான் மூன்று தவறுகளைச் சொன்னேன்.மனம் தோல்வியை ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு வந்திருந்தது.அது தன்னை எப்போதும் சிறப்பாகத் தயார் படுத்திக் கொள்கிறது.மனதுக்குத் தெரியாத தவறு என்று ஒன்று இருக்கிறதா என்ன? அது தன்னைச் சரியாக இடம், சூழல், நிலைமை - இவற்றிற்கமைவாகத் தன்னைத் தானே சிறப்பாகத் தகவமைத்துக் கொள்கிறது.

மறு நாள் பயிற்சிக்கு நேரத்தை பயிற்றுனரிடம் குறித்துக் கொண்டு, தொடர்ந்து சிற்றிக்கு வேலைக்குப் போக வேண்டி இருப்பதால் நானே காரை ஓட்டி ரயில் நிலையம் வரை போகிறேன் என்று அவரிடம் வேண்டுகோளையும் விடுத்து விட்டுக் காத்திருந்தேன். 10 நிமிடங்களின் பின் அழைப்பாணை வந்தது.

பதில் இவ்வாறு இருந்தது."கொன்கிறாஜுலேஷன்ஸ்.யூ பாஸ்ட் த டெஸ்ட்".

ஒரே தடவையில் சித்தியடைந்த என் மன நிலையைப் பிறகு சொல்லவும் வேண்டுமா?

குதூகல மனதோடு அந்தப் புதிய லசென்ஸை அடிக்கடி திறந்து பார்த்துக் கொண்டே வேலைக்கும் போய்ச் சேர்ந்தேன்.காணுகின்ற மனிதர்கள்,மரங்கள்,வாகனங்கள் எல்லாம் அழகாக இருந்தன.நானும் ஒரு கார் வாங்கி....என்று கற்பனை விரிய பிடித்தமான கார், வண்ணம், மொடல் என்று மனம் ஒரு புதிய உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தது.

உண்மையில் கார் லசென்ஸ் என்பது, புது உலகுக்கான திறப்புத் தான்.சுதந்திரம் கைப்பிடிக்குள் வந்த நாள் அது.

கொஞ்சம் பொறுங்கோ, அடுத்த வாரம் வரை.சொல்ல இன்னுமொரு பாதி இருக்கிறது. அது அடுத்த வாரம் தொடரும்.அதையும் சொன்னால் தான் இந்த நாளின் அற்புதம் பூரணமாகும்.:-)