Monday, July 25, 2011

நற்றிணையில் ஒரு காட்சி



சங்க இலக்கியங்கள் கலப்பற்ற தனித்தமிழில் காதலையும் போரையும் இயற்கையோடிணைந்த வாழ்வையும் அதன் உணர்வுகளையும் சொல்லி நிற்பவை.அவை எட்டுத் தொகை பத்துப்பாடு நூல்களாகத் தொகுக்கப் பட்டுள்ளன.அந்த எட்டுத் தொகை நூல்கள் பற்றி ஒரு பாடல் இப்படிச் சொல்லும்.

‘நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறு நூறு
ஒத்த பதிற்றுப் பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தோர் ஏத்தும் கலியொடு அகம் புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை’

அந்த எட்டுத் தொகை நூல்களில் ஒன்று நற்றிணை.இது பல புலவர்களாலும் பாடப்பட்டு பின்னர் தொகுக்கப் பட்டது.இதிலுள்ள 400 பாடல்களிலும் 234வது பாடலிலும் 385 சில பகுதிகள் கிட்டவில்லை என்றும் கூறப்படுகிறது.இது முழுவதும் காதல் உணர்வைச் சொல்கிறது.

அதில் வரும் 22வது பாடல் இது.குறிஞ்சி மலைப் பகுதியைச் சேர்ந்தவன் அவன்.விடலைப் பருவத்து இளைஞன் அவன்.கீழைப் புறத்து யுவதி ஒருத்தியைக் காதலிக்கிறான். திருமணம் செய்யத் தீர்மானிக்கிறான் அவ்விளைஞன்.தோழி மூலமாகச் செய்தி சொல்லி விடுகிறான் அவன்.பெற்றோரின் சம்மதத்தைப் பெற வருகிறான் என்ற செய்தி தலைவியை வந்தடைகிறது.

தோழி சொல்கிறாள்.தோழியைத் தயார் படுத்துகிறாள்.எப்படி அச்சத்தை நீக்கி நம்பிக்கையை ஊட்டுகிறாள் என்று பாருங்கள்.அவள் சொல்லும் போது அவனின் குறிஞ்சி நாட்டு வளத்தை சொல்லும் பாங்கைப் பாருங்கள்.அதற்கூடாக விரிகின்ற காட்சி எவ்வளவு அழகாகாய் இருக்கின்றது என்பதைக் காணுங்கள்.

தோழி, ஊர்புறத்தே நெற்கதிர் முற்றுகின்ற வேளையில் அருகில் இருக்கின்ற ஆறு, குளம், நீரேரி எல்லாம் வரண்டு நீருக்காய் ஏங்கிக் கொண்டிருக்கும் போதினில் ஒரு நள்ளிரவுப் பொழுதொன்றில் இடி மின்னலோடு மழை பொழிந்தால் எவ்வாறு இருக்கும் சொல்?அது போல உன் காதலன் பொருத்தமான ஒரு வேளையான - பருவம் கனிந்து நிற்கின்ற தருணமான இப்போது உன்னைத் திருமனம் செய்து கொள்வதற்காக வரப் போகிறான்.

அவனுடய - அவன் வாழ்கின்ற குறிஞ்சி நிலம் எப்படியானது என்று தெரியுமா உனக்கு?அங்கே திணை பயிர் செய்யப் பட்டிருக்கின்றது.அந்தத் தோட்டங்களைத் திணைப் புலத்துப் பெண்கள் காவல் காக்கிறார்கள்.அக்காவலையும் மீறி சில புத்திசாலிக் குரங்குகள் அதற்குள்ளே புகுந்து விடுகின்றன. அவை திணை விளைந்து நிற்கின்ற பருவம் மிக்க திணைப் பயிர்களைக் கவனமாக நோட்டம் விடுகின்றன.அதில் இளமையாக இன்னும் முற்ற காலம் இருக்கின்ற திணைக் கதிர்களை விட்டு விட்டு நல்ல பருவமான முதிர்ந்த கதிர்களை மிக அவதானமாகத் தெரிவு செய்து அவற்றைத் தம் கைகள் நிறையப் பறித்துக் கொள்கின்றன.

அவை அவற்றை உடனேயே வாய்க்குள் போட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை.மழை கார் இருட்டானாலும் கொப்பிழக்கப் பாயாத புத்திசாலி மந்திகள் அவை.திணைக் கதிர்களில் இருந்த திணைத் தானியத்தைக் கை நிறயை கொண்டு விட்டது தான் தாமதம்.கொப்பிழக்காமல் அவதானமாக திணைப் புலத்துக் காவல் மங்கையரின் கண்களுக்கு எட்டி விடாமல் பாய்ந்து வருகின்றன.அவதானமாக அதே நேரம் விரைவாகவும் லாவகமாகவும் புலத்துக் காவல் பெண்டிரின் கண்கலுக்குள் தட்டுப் படாமல் தப்புகின்றன. அவை அத்தனையும் பெண்குரங்குகள்.

அவை எங்கே பாய்ந்தோடி வருகின்றன தெரியுமா? அவைகளுடய அனுபவம் இல்லாத உறவினர் கூட்டம் திணைப் புலத்துக்கப்பால் பசியோடு இப் பெண்குரங்குக்காகக் காவல் இருக்கின்றன.காரனம் காவல் உள்ள திணைப்புலத்துக்குப் போய் பாதுகாப்பாய் வருவதென்பதற்கு அனுபவமும் அறிவும் சமயோசிதமும் அவசியமல்லவா? அதனால் இப்பெண் குரங்கு அனுபவமற்ற தன் உறவுக் கூட்டத்தைப் பாதுகாப்பான ஒரு இடத்தில் நிறுத்தி விட்டு வந்திருக்கிறது. அங்கு தான் இது கை நிறைந்த முதிர்ந்து உண்ணத் தயாராக இருக்கும் திணைகதிர் தானியங்களைக் கை நிறைய உருவி எடுத்துக் கொண்டு விரைகிறது.

குறிப்பிட்ட அந்த இடத்தை அடைந்ததும் தன் உறவுக் கூட்டத்தினராகிய அவர்களை அழைத்துக் கொண்டு இன்னும் பாதுகாப்பான மலையுச்சிக்கு அழைத்துச் செல்கிறது.இடம் இன்னும் பாதுகாப்பானது என்பதை உறுதிப் படுத்திக் கொண்ட பின்னால் கூட்டமாக இருக்கும் தன் உறவுக்கூட்டத்துக்கு முன்னால் தன் உள்ளங்கைகளை விரிக்கிறது.சுற்றிவர உறவுக்கூட்டம்.ஆவலும் பசியுமாய் அமர்ந்திருக்கின்றன.தன் உள்ளங்கையில் அவற்றை வைத்துக் தானியங்கள் வேறாவதற்காகக் கசக்குகிறது அக்கதிர்களை.பின் கசடுகளை நீக்கி எல்லோருக்கும் பங்கிடுகிறது.அவற்றை எல்லாருமாகச் சேர்ந்து வாய்க்குள் போட்டுக் குதப்புகின்றன. அதனால் உட்குழிந்த கன்னங்கள் ஊதி விட்டன.எல்லோருமாக பாதுகாப்புப் புறத்தில் இருந்து வாய்நிறைய திணைத் தானியத்தைப் போட்டு பொக்குபொக்கு என்று உட்புறமாகக் குழிந்திருந்த கன்னங்கள் வெளிப்புறமாக தள்ளி இருக்க அவற்றை ஆசையோடு அவை உண்கின்றன.

அந்த நேரம் மலைப் புறத்தே முகில் கூட்டம்.மழை மெல்லத் தூறல் போடுகிறது. ஆனால் அவை அவற்றைக் கவனித்ததாயோ கண்டுகொண்டதாகவோ தெரியவில்லை. அவைகளின் முதுகுப் புறமாக மழைத் தூரல் போடுவதையும் பொருட்படுத்தாமல் அவை திணைத் தானியத்தை உண்கின்றன.

இந்தக் காட்சி எப்படி இருக்கின்றது தெரியுமா? தைத்திங்களில் நோன்பு நோற்பவர்கள் அதிகாலையில் எழுந்து நீராடி ஈர உடை உடலோடு ஒட்டி இருக்க நீர் துளிகள் சொட்டுச் சொட்டாக கொட்ட கோயில் பிரசாதத்தை பக்தி சிரத்தையோடும் பவ்வியத்தோடும் உண்பது போல இருக்கிறது.

இப்படியான காட்சிகளைத் தினம் காணக் கூடிய ஒரு நிலப்பகுதியைச் சேர்ந்த ஒருவனை நீ திருமணம் செய்து கொள்ளப் போகிறாய் என்கிறாள் தோழி.சிற்றறிவுடய உயிரினங்களும் புத்திசாலித்தனமும் சமயோசிதப் புத்தியுமாக எல்லோருமாகக் கலந்து ஒற்றுமையாக கூடி வாழும் ஊர் அது என்பதும்;நெறிமுறை தவறாத சமூகத்தைச் சேர்ந்த ஒருவனையே நீ திருமணம் செய்து கொள்ளப் போகிறாய் என்கிறாள் அவள்.தோழியைத் தயார்படுத்துகிறாள் இவ்வாறு.அந்த நற்றிணைப் பாடல் இது தான்.


"கொடிச்சி காக்கும் அடுக்கற் பைந்தினை
முந்துவிளை பெருங்குரல் கொண்ட மந்தி
கல்லாக் கடுவனொடு நல்வரை ஏறி
அங்கை நிறைய ஞெமிடிக்கொண்டு தன்
திரை அணல் கொடுங்கவுள் நிறைய முக்கி
வான்பெயல் நனைந்த புறத்த நோன்பியர்
கைஊண் இருக்கையின் தோன்றும் நாடன்
வந்தனன் வாழி தோழி உலகம்
கயம்கண் அற்ற பைது அறு காலை
பீளொடு திரங்கிய நெல்லிற்கு
நள்ளென் யாமத்து மழை பொழிந்தாங்கே'' - (நற்றிணை - 22)

இந்த ஊர்க்காட்சியைப் பார்க்கும் போது குற்றாலக் குறவஞ்சி கூறும் தன் மலைவளக் காட்சி நினைவுக்கு வந்து போகிறது. அதுவும் குறிஞ்சிப் புறம். மலையும் மலைசார்ந்த இடம்.அங்கிருக்கும் வானரங்கள் எப்படி இருக்கின்றன தெரியுமா?

‘வானரங்கள் கனி கொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்’.

இன்றய சினிமாவில் மலையாளக் கரையோரம் தமிழ் பாடிச் செல்கிறது குருவி.

Tuesday, July 12, 2011

எழுத்தாளர்;முருக பூபதி



என் அன்புக்கும் அபிமானத்துக்குமுரிய எழுத்தாளர்.லெ.முருகபூபதி அவர்களுக்கு நாளை 13.07.2011 அன்று அறுபதாவது பிறந்த தினம்.

என்னைப் பல வழிகளிலும் ஊக்குவித்து, கட்டுரைகளை வலிந்து என்னிடம் இருந்து வரவழைத்து,சொந்தச் செலவில் புத்தகங்கள் அனுப்பி, எழுத்தாளர் விழாக்களிலும் என்னை மேடையேற்றி,வெளிச்சத்துக்குக் கொண்டு வந்ததில் இந்தப் பெருந்தகைக்கே முழுப் பொறுப்பும் உண்டு.

வாஞ்சையும் எளிமையும் இலக்கிய ஓர்மமும் தன்னலம் கருதா இனிய சுபாவமும் மானுட தர்மமும் நிரம்பப் பெற்றவர்.சிறந்த சிறுகதை எழுத்தாளர்.அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியப் பரப்புக்கு அவர் ஆற்றிய பங்களிப்பும் புத்தக வெளியீடுகளும் அநேகம்.மிகப் பெரிதும் கூட.அதற்காக அவர் ஏற்றுக் கொண்ட; சந்தித்த சவால்கள் பல. அனைத்து விமர்சனங்களையும் உள்குத்துக்களையும் புறங்கையால் ஒதுக்கி விட்டு தான் போகும் வழியில் சளைக்காது நடை போடும் அவர் இலட்சியவாதிகளுக்கும் துயர் கொண்ட நெஞ்சங்களுக்கும் முன் மாதிரி.

இனிய உபசரிப்பிலும் மகிழ்வான மனோபாவத்தாலும் இரக்க சிந்தையாலும் அவர் பலரின் உள்ளங்களில் நிறைந்து வாழ்பவர்.இனியும் வாழ்வார்.அவரின் பிறந்த தினத்தின் போது அவர் சகல வளங்களும் பெற்று சீரும் சிறப்போடும் சகல வளங்களோடும் வாழ்ந்து இலக்கிய உலகுக்கு - அதிலும் குறிப்பாக அவுஸ்திரேலிய புலம்பெயர் இலக்கிய உலகுக்கு இன்னும் பல
சேவைகளை ஆற்றி மகிழ்ந்திருக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் பூபதி அண்ணா!



வாழி நீ பல்லாண்டு

இனிய மனிதா! பூபதி அண்ணா!
எழுத்துலகில் எனை ஏற்றி
பெற்றுவிட்ட தாயவள் போல் பூரித்து
இன்கதவம் திறந்து இனிதாய் உபசரித்து
புலம் பெயர்ந்த புதுச் செடிக்கு
புலமையொடு நல்ல நீரூற்றி
வாஞ்சையொடு வளர்த்து வரும் வள்ளலே!
வளமோடு நீ வாழி!

எத்தனை துன்பம்?எத்தனை சோதனை?
எத்தனை நிந்தனை? அத்தனையும் மனித குணம்.
அத்தனையும் உந்தனது ஓர்மத்தால்
வியத்தகு நல்ல தீரத்தால்
சிறந்த உந்தன் உழைப்பதனால்
நெஞ்சு நிகர்த்த ஞான நெருப்பதனால்
விலக்கி ஒழித்து வாழ்ந்திட்டாய்.
வானில் விளக்காய் ஒளிர்ந்திட்டாய்
இந் நன் நாளில் வாழ்த்துகிறேன் நீ வாழி!

கேட்டவுடன் புத்தகங்கள் தபால்களோடு வந்து சேரும்
நா நுனியில் விபரங்கள் தொலைபேசியில் கிட்டி விடும்
அன்பான விசாரிப்புகள்;எளிமையான குண இயல்பு
மற்றோரை மதிக்கும் மான்பு மிகு நல்ல குணம்
எல்லோர்க்கும் உதவு குணம் அமைந்திட்ட மாமனிதா!
(உனக்கு நான்)நன்றி சொல்ல நாவேது? நவிலுகிறேன் நல்வாழ்த்து!

உறுதியாய் சொல்லுகிறேன் ஒன்று மட்டும் உற்றுக் கேள்!
புத்திலக்கியச் செடியாம் புலத்திலக்கியச் செடிக்கு
அன்னிய மண்ணதனில் எழுத்தாளர் விழாக் கூட்டி
இலக்கியப் பசளையோடு கலைகளும் புத்தகப் பதியங்களும்
பாங்குடனே போட்டதனால் பற்றை,புதர்க்காட்டிடையும்
அந்தோ பார்! தமிழ் தளிர்!! துளிர்த்ததென்றால்,
பெருமகனே! பூபதியே!! அது உன்னாலே! உன்னாலே!!
அதனாலும் வாழ்த்துகிறேன்; மனையாளொடும்
மக்களொடும்; நீ விரும்பும் நூல்களோடும்
நீடூழி நீ வாழ்க!!

Friday, July 8, 2011

லெமூரியாக் கண்டம்



கடல்கோள் (சுனாமி) கொண்டதாகச் சொல்லப் படும் லெமூரியாக் கண்டம் இவ்வாறான வடிவத்தில் இருந்ததாகச் சொல்லப் படுகிறது.(விபரம் எங்கிருந்து பெறப்பட்டதெனத் தெரியவில்லை)

Monday, June 20, 2011

ஊதாப் பூக்கள் ((Jacaranda tree)



வான் முட்ட உயர்ந்து நிற்கும் ஊதாப் பூ மரம்.



தனித்துவம் பிரகாசிக்க கம்பீரமாய் ஊதாப் பூ மரம்.



மக்களிடையேயும் நிழல்குடை பிடித்த படி ஊதாப்பூ மரம்.



வீட்டுக்கும் காவலாய்...



வீதியோரம் விழாக் கோலமாய்.....



கொட்டிய பின்னும் கம்பளமாய்.......

(படங்கள்: நன்றி, கூகுள் இமேஜ்)

Thursday, June 16, 2011

ஓர் இலையின் குரல்




உலகம் சற்றே நிதானிக்கின்றது.

ஓட்டத்தை நிறுத்தி பின்னோக்கிப் பார்க்கிறது.

எதையோ தவற விட்டதாய் உணர்கின்றது.

இயற்கையுடனான தொடர்பறுந்து நேரத்தோடும் விஞ்ஞான தொழில் நுட்பத்தோடும் ஓடிப் பல வருட மைல்களையும் நூற்றாண்டுகளையும் கடந்தாயிற்று என்ற சோக உண்மை உறைக்க ஸ்தம்பிக்கிறது உலகு, மனதும்.

ஓடிக் களைத்து மூச்சு வாங்குகிறது 21ம் நூற்றாண்டு உலகம்.சந்திரனை எட்டி, அணு ஆயுதங்களைக் கொட்டி, நாடுகளோடு நாடுகள் மோதி முட்டுப் பட்டு நிற்கிறது நவீன நாகரிகம்.

இனிப் போக இடமில்லை என்றான போது பூமி வெப்பப் பந்தாகிப் போனது.இயற்கை இப்போது உரத்தும் அதட்டியும் பேசத் தொடங்கி விட்டது.மனச்சாட்சியின் குரலாய் விஸ்தாரம் எடுக்கிறது அது.விரக்தி விளைந்திருக்கும் மயாண மனப் பரப்பில் அது துல்லியமாய்க் கேட்கிறது.

குரல் இடியாய் காதில் விழுகிறது.நிவாண உண்மையாய் அது விகசிக்கிறது!

அது சுனாமியாக,நில அதிர்ச்சியாக,வெள்ளப் பெருக்காக,புயற்காற்றாக, காட்டுத் தீயாக பூகம்பமாக,சொல்லுகின்ற செய்தி ஒன்று இருக்கின்றது. அந்தப் பயமுறுத்தும் செய்திக்கு நம் விஞ்ஞானத்திடம், தொழில் நுட்பத்திடம் பதில் ஏதும் இல்லை.

அது இன்னும் நம்மைப் பயமுறுத்துகின்றது.

நாம் எங்கு தோற்றோம்? எங்கு தோற்றோம்?

மனிதம் தோற்ற பொழுதுக்கும் இயற்கையின் குரலைக் கேட்க மறந்த பொழுதிற்கும் வயது ஒன்றா?

தெரியவில்லை.

நம் மூதாதையரின் முணுமுணுப்பை அசட்டை செய்த பொழுதுக்கும் சுயநலம் மேலோங்கிய பொழுதுக்கும் வயது ஒன்றா?

அதுவும் தெரியவில்லை.

'உங்களுக்கு நிலம் விலைக்கு விற்கப்படும் ஒரு பொருள்.எங்களுக்கு அதுவே வாழ்க்கை.
தூய்மையான காற்றை,பெருகியோடும் ஆற்றை,மலைகளின் மெளனத்தைப் புரிந்து கொள்ளவும் ரசிக்கவும் தெரியாத அதிகார வர்க்கத்திடம் எப்படி இயற்கையை நாங்கள் ஒப்படைப்பது? அவர்கள் இயற்கையை விலைக்கு விற்கப் படும் பொருட்களைப் போலவே கருதுகிறார்கள்.

இங்கு உள்ள மரத்தை நீங்கள் வெறும் மரமாகப் பார்க்கிறீர்கள். நாங்கள் அதை எங்கள் மூதாதையர்களாகப் பார்க்கிறோம்.இங்கு பூத்துள்ள பூக்கள் இறந்து போன எங்கள் சகோதரிகளின் சிரிப்பு.காடு தான் எங்களின் வீடு.எங்களின் தாய் தகப்பன்.எங்களை நீங்கள் அதிகாரத்தின் துணை கொண்டு விரட்டி இதைக் கைப்பற்றக் கூடும்.ஆனால் இதன் புனிதத்தை நீங்கள் புரிந்து கொள்ளாமல் சிதைத்து விடுவீர்கள் என்பதற்காகவே நாங்கள் போராட வேண்டி இருக்கிறது.' என்றான் அமெரிக்கப் பழங்குடிகளின் தலைவன்.

இந்த இடத்தில் தான் நாம் தவறிழைத்தோமா?

சுயநலம் மேலோங்கிய அந்தப் பொழுது?
சாத்வீகக் குரலைப் புறக்கணித்தோமே அந்தப் பொழுது?
அம்புவில்லை துவக்குத் தோட்டா வென்று விட்ட பொழுது?
மூர்க்கம் முந்தியடித்து முந்திக் கொண்ட அந்தப் பொழுது?
அதிகாரம் கோலோச்சிய அந்த அலட்சியப் பொழுது?
மிதமிஞ்சிய இறுமாப்பு ஆட்கொண்ட அந்தப் பொழுது?

இருக்கலாம்; தெரியவில்லை.

ஆனால் பண்டய தமிழ் இனம் எவ்வாறெல்லாம் இயற்கையின் பாஷையைப் புரிந்திருந்தது என்று சற்றுப் பார்ப்போமா?

சங்க காலத்து மந்தாரப் பொழுது அது! சேர சோழ பாண்டிய மன்னர்களுக்கிடையே எப்போதும் பூசல்.வீரம் பொருந்திய படைதிரட்டிப் போருக்குத் தயாராக இருக்கும் பாண்டிய மன்னனிடம் வருகிறான் ஒரு குடியானவன். அவன் சமான்யன்.வாழ்வை நேசிக்கும் ஏழை.மண்ணோடு ஒட்டிய உறவு அவனுக்கு.அதிகாரம்,ஆதிக்கம்,போர்,பூசல் எல்லாம் அவனுக்குப் புரியாத சமாச்சாரம்.என்றாலும் ஓர் அசட்டுத் துணிவு அவனுக்கு.அணில் மண் கொண்டு வந்து கொட்டி ராமனுக்கு உதவியதே! அதைப் போல.ஏதோ அவனால் முடிந்தது!

அவனுக்குத் தெரியும் வெற்றி பாண்டியனுக்கே என்பது. அதனை எதிர் கொண்டு அவன் சொல்கிறான்."வேந்தே! கற்றவர்களும் சரி கல்லாதவர்களும் சரி உன்னைப் புகழவே செய்கிறார்கள்.அத்தகைய சிறப்புடையவன் நீ.உனக்கு ஒன்று சொல்கிறேன் சற்றே கேட்பாயாக! நீ எங்கள் நாட்டு வயல்களை, வயல் வெளிகளை எடுத்துக் கொள்; ஊரினை எரிக்க வேண்டுமென்று தோன்றினால் அதனையும் செய்;உன் வேலினால் மக்களைக் கொல்ல விரும்பினாலும் அதனை நீ செய்யலாம்.ஆனால் எங்கள் காவல் மரங்களை மட்டும் அழித்து விடாதே,அது உன் யானையைக் கட்டுவதற்குக் கூட பலமற்றது என்று கெஞ்சுகிறார் இவர்!

அந்த அழகான பாடல் இது தான்,

"வல்லவராயினும் வல்லுனராயினும்
புகழ்தலுற்றோருக்கு மாயோனன்ன
உரைசால் சிறப்பிற் புகழ் சால் மாற
நின்னொன்று கூறுவதுடையே னென்னெனின்
நீயே; பிறர் நாடு கொள்ளுங் காலை யவர் நாட்
டிறங்கு கதிர் களனி நின்னிளையருங் கவர்க
நனந்தலைப் பேரு ரெரியு நக்க
மின்னு நிமிர்ந்தன்ன நின் னொளிறிலங்கு நெடுவேல்
ஒன்னார்ச் செகுப்பினுஞ் செகுக்க வென்னதூஉம்
கடிமரந் தடித லோம்பு நின்
நெடுதல் யானைக்குக் கந்தாற்றாவே!"

வஞ்சித்திணையில் வரும் இப்பாடலை காவிரிப் பூம் பட்டிணத்துக் காரிக்கண்ணனார் பாடி இருக்கிறார்.மரங்கள் மீது அவர்கள் கொண்ட நேசத்தைப் பார்த்தீர்களா?

இயற்கையைத் தடுக்கும் ஆற்றல் நம்மிடம் இல்லை என்று பாடும் ஒரு புறநானூற்றின் 51 வது பாடல் "நீர் மிகின் சிறையும் இல்லை;தீ மிகின் மண்ணுயிர் நிழற்றும் நிழலும் இல்லை;வளி மிகின் வலியும் இல்லை...." என்று இயற்கையின் ஆற்றலினைச் சொல்கிறது. இயற்கையினை சீற்றத்தின் முன் நாமெல்லாம் சிறு துளி என்பதனை நமக்கு ஆழிப் பேரலையும் காட்டுத் தீயும், வெள்ளப் பெருக்கும், நில நடுக்கமும், சூறாவளியும் சொல்லிக் கொடுத்த வண்ணம் தானே இருக்கின்றன.

அவற்றின் இன்றய குரல் தான் நமக்கு அச்சம் ஊட்டுவதாக இருக்கிறது.அதுவே பின்னோக்கி அச்சத்தோடு பார்க்க வைக்கின்றது.

இங்கே சங்கத்துப் பெண்ணொருத்தி புன்னை மரத்தைத் தன் தோழி என்கிறாள். எப்படி?நற்றினையின் நெய்தல்-172 வது பாடல் அதனை நயமுற இப்படி நவில்கிறது.

"விளையாடு ஆயமொடு வெண்மல் அழுத்தி
மறந்தனம் துரந்த காழ் முளை அகைய
நிய் பெய் தீம்பால் பெய்து இனிது வளர்ப்ப
நும்மினும் சிறந்தது நுவ்வையாகும் என்று
அன்னை கூறினள் புன்னையது நலனே
அம்ம நாணுதும் நும்மொடு நகையே
விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப
வலம் புரிவான் கோடு நரலும் இலங்கு நீர்த்
துறை கெழு கொண்க நீ நல்கின்
இறைபடு நீழல் பிறவுமார் உளவே"

அதாவது ஒரு நாள் புன்னை விதைகளை நானும் அவளுமாக மண்ணுக்குள் புதைத்து விளையாடிக் கொண்டிருந்தோம்.அப்போது தாயார் எங்களை அழைத்ததால் அதனை அப்படியே போட்டு விட்டு ஓடி வந்து விட்டோம். அதன் பிறகு பெய்த மழையால் புன்னை விதை முளை விட்டு வளரத் தொடங்கி விட்டது. நாம் அதற்கு தேனும் பாலும் ஊற்றி எங்கள் தங்கை எனவே கருதி சிரத்தையோடு வளர்த்தோம்.

அம்மா எங்களைத் திட்டுவதென்றால் கூட'நும்மிலும் சிறந்தது நுவ்வையாகும்'என்றெல்லோ திட்டுகிறாள்.அவ்வளவுக்கு புன்னையை எங்கள் தங்கையைப் போலவே அவளும் மதிக்கிறாள். யாராவது தங்கையின் முன் காதல் சல்லாபத்தில் ஈடு படுவார்களா என்ன? அதனால் நான் இனி அந்தப் புன்னை மரத்தடிக்கு வரமாட்டேன் என்று தலைவி கூறியதாகத் தோழி தலைவனுக்கு உரைக்கிறாள். மரத்தைத் தன் தங்கையாக வளர்த்து அதன் முன்னால் சந்திக்க வரத் தயங்கும் கூச்சம் கொள்ளும் காதல் மகளீரைக் கொண்டிருந்தது சங்க காலம்.தாய் கூடவல்லவா தன் குடும்பத்துள் ஒருத்தியாய் புன்னை மரத்தை வரிந்து கொண்டு விட்டாள்.

இன்று எங்கே போனது அந்தப் பிணைப்பு?

இன்னொருத்தி ஊடல் கொள்கிறாள் முல்லைப் பூவோடு.அவளுக்குப் பெரும் கோபம் முல்லைப் பூவோடு.'முல்லையும் பூத்தியோ' என்று பேசுகிறாள் முல்லைப் பூவை.காரணம் சாந்தன் என்ற வீரன் இறந்து போனான்.மக்கள் துக்கத்தோடு இருக்கிறார்கள்.நாடே சோகத்தில் ஆழ்ந்திருக்கிறது. அவளின் மனமும் வெறிச்சோடிப் போய்க் கிடக்கிறது.இந்த அழகான பாடல் புற நானூற்றில் 242வது பாடலாக அமைகிறது.பாடலைப் பாடிய புலவர் குடவாயிற் தீரத்தனார். பாடல் இது தான்.

"இளையோர் சூடார்;வளையோர் கொய்யார்
நல் யாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
பாணன் சூடான்;பாடிணி அணியாள்;
ஆண்மை தோன்ற ஆடவர்க்கடந்த
வல் வேற் சாந்த்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ? ஒல்லையூர் நாட்டே!"

என்று கேட்கிறாள் இப்பெண். அதாவது முல்லை மலரே! உன்னை இளையவர்கள் சூடிக் கொள்ள மாட்டார்கள்; வளையல்களை அணிந்த இளம் பெண்களும் பறிக்கப் போவதில்லை; யாழினை வாசிக்கின்ற பாணனும் பறிக்க மாட்டான்; பாடினியும் அதனைச் சூடிக் கொள்ளப் போவதில்லை;வலிய வீரனான ஒல்லையூர் நாட்டைச் சேர்ந்த சாந்தன் வீர மரணம் எய்திய பின்பு இந்த ஒல்லையூர் நாட்டில் (இந்த நாட்டுப் பிரஜையாய் இருக்கிற)முல்லையே நீ ஏன் வீணாகப் பூத்திருக்கிறாய்? வலிய வீரனான அவன் மரணமெய்தியதால் பகை நாட்டவர்கள் தான் களி கொள்வர்.மனம் மகிழ்வர்.நீ ஏன் மகிழ்ந்து பூத்திருக்கிறாய்? உனக்கு என்ன சந்தோஷம் என்று இப்படிக் கொள்ளையாய் பூத்துப் போய் கிடக்கிறாய்? என்று முல்லைப் பூவோடு கோவித்துக் கொள்கிறாள் இம்மகள்!

முல்லைப் பூவோடு கோவித்துக் கொள்ளும் இந்த உறவினளை என்னவென்பது?

இயற்கையோடு நம்மூதாதையர் எப்படி எல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள் பார்த்தீர்களா?

அண்மையில் இணையத்தில் பார்த்த ஒரு கட்டுரை இப்படி முடிந்திருந்தது.'என்றேனும் ஒரு நாள் சில மணித் துளிகளாவது ஏதாவது ஒரு தாவரமாய் உங்களை நீங்கள் உருவகித்துப் பார்த்திருக்கிறீர்களா? உங்கள் மீது இலைகளும் கிளைகளும் மலர்களும் காய்களும் கனிகளும் உருவாகியிருப்பதை கற்பனை பண்ணிப் பாருங்கள். ஒரு மரத்தின் மகத்துவமும் அதன் தாய்மை மிக்க தியாகமும் அப்போது புரியும்.'

இந்த இலையின் குரல் இந்த இயற்கையின் செய்தி இப்போது உங்களுக்குக் கேட்கிறதா?


ஒரு மரத்தை, அதன் தியாகத்தை, அதற்குரிய உன்னதத்தோடும் மரியாதையோடும் இனியும் எம்மால் பார்க்க முடிதல் கூடுமா?

அதில் துளிர்க்கட்டும் புது உலகு!

மனிதமும் சமாதானமுமான புது உலகு!!

Tuesday, May 31, 2011

பழ மரம்


”பயன்மரம் உள்ளூர்ப் பழுத்துஅற்றால் செல்வம்
நயன்உடை யான் கண் படின்”

என்பது ஒப்புரவறிதல் என்ற அதிகாரத்தில் வரும் ஒரு குறள்.அதன் பொருள் என்னவென்றால் உலக நன்மை அறிந்து உபகாரம் செய்யும் ஒரு அறிஞனிடம் பொருள் சேர்வது ஊரின் நடுவே இருக்கின்ற பழமரம் ஒன்று நன்கு கனிந்து பலருக்கும் பயன்படுவது போலவாகும் என்பதாகும்.

ஒரு மரம், தனி மரம், ஊரின் நடுவே நிற்கிறது.அது மழைநீரை உண்டு பொது நிலத்தில் விரிந்து நிற்கிறது.யாரும் பரிபாலிக்க வேண்டிய தேவை இல்லை.விடலைச் சிறுவரகள் வெய்யில் பொழுதில் அதன் நிழலில் தான் மாபிள் அடித்து விளையாடுகிறார்கள். மதியப் பொழுதில் வயதானவர்கள் அதன் நிழலில் குந்தியிருந்து ஊர் புதினம் பேசுகிறார்கள். பஞ்சாயத்துக் கூடுவதற்கும் அது தான் இடம்.இரவு நேரங்களில் காதலர் சந்தித்துக் கொள்ள தோதான இடமும் அது தான்.வெளியூரில் இருந்து வருபவர்கள் கூட அந்த பொது மரத்தை அடையாளம் வைத்தே இடத்தைக் கண்டு பிடிக்கிறார்கள்.இடம் காட்டும் வழிகாட்டிகள் கூட இடத்தைச் சரியாகச் சொல்ல அந்த மரத்தில் இருந்தே இடத்தைக் காண்பிக்க ஆரம்பிக்கிறார்கள்.குருவிகளும் பறவைகளும் கூடுகளைக் கட்டுகின்றன.குடியும் குடித்தனமுமாய் அங்கேயே வசிக்கவும் செய்கின்றன.

அந்த மரத்திடம் நிறையப் பழங்கள். பூத்துக் காய்த்துப் பழுத்து இனியனவும் சுவை மிக்கதுமான கனிகளையும் அது அம்மக்களுக்குக் கொடுக்கிறது.அதன் மூலம் அம்மரம் பெறுவதென்ன? எதுவுமில்லை அல்லவா? பயன் கருதா சேவை; கைமாறு கருதா உதவி என்பன இவை தானே? ஒரு பழ மரம் எத்தனை பெரிய தத்துவத்தை நமக்குச் சொல்லிய வண்னம் நிற்கிறது.கீதையின் தத்துவமே அதுவாகியெல்லோ இருக்கிறது.அது போல ஒரு மனிதனும் சமூகத்துக்கு பயன்பாடு உள்ளவனாக இருக்க வேண்டும் என்பது அக்குறளின் பொருள்.

இந்தப் பழமரம் போல ஒரு அரசன். சங்க காலத்தில் வாழ்ந்திருக்கிறான்.அவன் பாரி மன்னன்.அம்மன்னனை கபிலர் நமக்குக் காட்டுகிறார்.புறநானூற்றின் 119வது பாடல் அது.பாரியினுடய வள்ளல்மையை கூறவந்த கபிலர்,’நிழல் இல் நீளிடைத் தனிமரம் போல’ இரந்து வருபவர்களுக்கு அதாவது, நிழல் இல்லாத நீண்ட வழியில் தனி மரம் ஒன்று இருந்து நிழலும் கனியும் வழங்குவதைப் போல வள்ளல் தன்மையுடயவனாக விளங்குகின்றான் பாரி என்று குறிப்பிடுகிறார்.

அந்தப் பழமரம் போல யாரேனும் ஒருவரை நாம் இக்காலத்தில் காண முடியுமா?

ஒரு மரமாகக் கூடவா நம்மால் இருக்க முடியவில்லை?

இயற்கையை விட்டு அது சொல்லும் பாடங்களை எல்லாம் தவற விட்டு வெகுதூரம் விலகி வந்து விட்டோமோ?

(பாடசாலை மாணவர்களுக்காக எழுதியது சிறு மாற்றங்களுடன் copy & paste செய்யப் பட்டிருக்கிறது)

Monday, May 9, 2011

என்னை வளர்த்த மண்ணும் பசளையும்


தொடர்ச்சி.....

மீண்டும் பல்கலைக் கழகத்து வாழ்க்கைக்கு வருகிறேன்.

சிறப்புத்துறைக்குள் சென்ற பின்னர் வீட்டில் நானே ஏக போக ராணியாக இருந்தேன். அவர்களுடய பெரிய அறை தவிர்ந்த ஏனைய அனைத்துப் பாகங்களையும் நான் ஆக்கிரமித்தும் இருந்தேன்.அவர்கள் விறாந்தையில் போட்டிருக்கும் விருந்தினர்களுக்கான நாற்காலி என் பரீட்சைக் காலங்களில் வீட்டின் பின் புறத்து மாமர நிழலுக்கும் கிணற்றுக் கரையோரங்களுக்குமாக நகர்ந்த படி இருக்கும்.கதிரையில் உட்கார்ந்து விட்டு இரண்டு கைபிடிக்கும் குறுக்காக ஒரு அகன்ற பலகையைப் போட்டு விட்டு அதில் புத்தகத்தை வைத்துப் படிப்பது நல்ல வசதி.அமைதியான சூழல்,அன்பான தாய்,நல்ல சாப்பாடு,முழு சுதந்திரம்,பிரச்சினைகள் ஏதுமில்லாத மனம்! படிப்பதற்கு என்ன குறை?

இப்படியாக இருந்த வீட்டு சூழலில் படிப்பில் என்னோடு தோழிமாராக இருந்தவர்கள் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.நீலா,தங்கேஸ்வரி,அவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள்.(தற்போது லண்டனிலும் சுவீடனிலும் இருக்கிரார்கள்) அதில் நீலா பொதுப் பட்டப் படிப்பை தொடர்ந்தார். அநேகமாக 11-12 ஒரு விரிவுரை இருந்தால் அடுத்தது 2-3 ஆக இருக்கும்.இவர்கள் எல்லோரும் மதியம் சாப்பாட்டைக் கொண்டு நான் இருந்த வீட்டுக்கு வருவார்கள். ஒன்றாக இருந்து உண்போம்.பின்னர் சின்னத் தூக்கம் பிறகு சிரம பரிகாரம் ஒப்பனைகள் எல்லாம் செய்து கொண்டு அடுத்த ஊர்வலம் போவோம்.

இப்படியாக இருந்த ஒரு நாளில் நீலாவின் அக்கா மீரா அறிமுகமானார். அவர் பல்கலைக் கழக நிதித்துறையில் கடமையாற்றி வந்தார்.உணவு உண்பதற்காக வந்த அவரோடு நாளடைவில் நான் மிக்க நெருக்கமானேன். நம் இருவருக்கும் இடையே அப்படி ஒரு ஒத்த ரசனை இருந்தது.அரசியலில் இருந்து சினிமா வரை நமக்குள் வேறுபட்ட அபிப்பிராயங்கள் பெரும்பாலும் இருக்கவில்லை.அப்படி இருந்தாலும் இறுதியில் ஒரு இணக்கப் புள்ளியில் வந்து நிற்போம்.

நான் கலைப் படங்கள் பற்றிப் பேசும் போது அவர் திருமறைக் கலா மன்றத்தின் கலைப் படைப்புகள் பற்றிப் பேசுவார்.நான் படித்த கிட்லர்,முசோலினி,அலக்சாண்டர்,காந்தி பற்றி - அவர்களுடய ஆளுமைகள் - நாட்டை என்ன உலகத்தையே புரட்டிப் போட்ட அவர்களின் அதீத இயல்புகள் பற்றிப் பேசும் போது, அவர் இந்திரா காந்தியின் ஆளுமை பற்றிப் பேசுவார்.நான் வைதீகத்தின் குறை நிறைகளைப் பேசும் போது அவர் கத்தோலிக்கத் தமிழர் பற்றிப் பேசுவார்.பல்கலைக்கழகக் கல்வியை தொடராத அவரிடம் இருந்து நான் கற்றுக் கொண்டது நிறைய.

அமைதி,மென்மை,அன்பு, அதே நேரம் ஆழம் நிறைந்தவர்.அவரது புன்னகை விடயங்களை நிராகரிக்கும்,அன்புசெய்யும்,புறக்கணிக்கும்,கடந்து செல்லும்,நட்புக் கொள்ளும்.மெளனமும் புன்னகையும் இத்தனை விடயங்களைச் செய்யும் சக்தி வாய்ந்ததா என்று அந்நேரங்களில் நான் வியப்பதுண்டு.அருகில் இருப்பவருக்கு மட்டுமே கேட்கும் படியாக மிக மென்மையாகப் பேசுவார்.மெல்லிய புன்னகையோடு எந் நேரமும் காணப்படுவார்.அநேக நேரங்களில் அவருக்கு கோபம் வந்தால் அதை எப்படி வெளிப்படுத்துவார் என்று நான் நினைப்பதுண்டு.அப்படி ஒரு சந்தர்ப்பம் எனக்குக் கிட்டவே இல்லை.என் வாழ்வில் அறிவாலும் தோழமையாலும் குணங்களாலும் என்னைக் கொள்ளை கொண்டு போனவர் ஒருவர் உண்டென்றால் அது அவர் ஒருவரே.அதன் பின்னரும் அவருக்கு முன்னரும் அவருடயதைப் போன்ற ஒரு நட்பு எனக்குக் கிட்டவில்லை.

அவர் கத்தோலிக்கர்.சைவத்தில் இருந்து தமிழைப் பிரித்து தமிழ் கத்தோலிக்கம் பற்றிய தெளிவை எனக்கு ஏற்படுத்தியவர் அவர் தான்.பொட்டு வைப்பது, பொங்கல் விழாக்கள் இந்துப் பண்பாடல்ல தமிழர் பண்பாடு என்று கற்றுத்தந்தவர்.மதங்களுக்கு வெளியே நின்று மதங்களை ஊடுருவிப் பார்க்கும் திறன் கொண்டவர்.திருமறைக்கலா மன்றம் அதன் செயற்பாடுகள் பற்றி நான் கார சாரமான விவாதங்களை நிகழ்த்துவேன்.நான் அதீத விமர்சனங்களை முன்வைக்கும் போதெல்லாம் புன்னகையோடும் நிதானத்தோடும் மாறாத குரலின் இனிமையோடும் எனக்கு பதில் தருவார்.இப்போது கண்டாலும்,’இப்பவும் அப்படியே தான் இருக்கிறீங்களா மீராக்கா?” என்று கேட்க ஆவல்.ஆனால்,1995ம் ஆண்டோடு தொடர்பு விட்டுப் போய் விட்டது.

அந்தக் கத்தோலிக்க திருமறைக்கலாமன்றம் திருக்குறளைக் கையில் எடுத்துக் கொண்டு அரசியலையும் உளவியலையும் பக்க பலமாகக் கொண்டு இந்துத் தமிழ் பண்பாட்டுக்கு எதிராக கத்தோலிக்கத் தமிழ் பண்பாட்டை நிறுவியது.அதற்கு அவர்கள் அரங்காற்றுக் கலையை ஊடகமாகப் பயன் படுத்தினார்கள்.யாழ்ப்பாணத்து விடுதலை அரசியலின் பின்னணியில் அவர்கள் நிகழ்த்திக் காட்டிய அரங்காற்றுக் கலை மிக்க வீரியத்தோடு வெளிப்பட்டு நின்றிருந்தது.

கத்தோலிக்கக் குருமார்களால் சமூகத்தை விளங்கிக் கொண்டு வெளிவந்த ‘நான்’என்ற உளவியல் சஞ்சிகை அவர்கள் எவ்வளவு வல்லமை பொருந்தியவர்கள் என்பதற்கும் தூரதிருஷ்டி நோக்கோடு செயற்பட்டார்கள் என்பதற்கும் நல்லதொரு சாட்சி.அதே நேரம் சைவ சித்தாந்தத் தத்துவங்களையும் சைவர்களை விட அதிகம் விளங்கிக் கொண்டவர்களாக அக் குருமார்கள் விளங்கினார்கள்.

அது நிற்க,

இவ்வாறாகச் சிந்தனைச் சுவாரிசங்களோடும் நாட்டின் அரசியல் பிரச்சினைகளோடும் நான்கு வருடங்கள் ஓடி முடிந்தன.அப்போது ’திசை’ என்றொரு வாரப் பத்திரிகை மிக அமைதியான முறையில் மிகக் கனதியான பக்கங்களோடும் புதிய சிந்தனைகளோடும் புதிய பார்வைகளோடும் வெளி வந்து கொண்டிருந்தது.

ஒருவாறாக நான் பல்கலைக்கழகத்தின் இறுதி வருடத்தை அடைந்தேன்.அப்போது ஒரு ஆய்வுக்கட்டுரை ஒன்றை இறுதி வருடத் தேர்வுக்காக சமர்ப்பிக்க வேண்டி இருந்தது.அதற்கு எதனைப் பற்றி ஆய்வு செய்யலாம் என்ற கேள்வியோடு நான் இருந்த வேளை திசை பத்திரிகையில் ஒரு மூலையில் “நீர்கொழும்பில் சிங்களம் பேசும் தமிழர்கள்” என்ற தலைப்பில் ஒரு துணுக்குச் செய்தி இடம் பெற்றிருந்தது.எனது ஆய்வுக்கான தலைப்பு கிட்டியது இப்படித்தான்.

ஒரு பதிவொன்றின் பிறப்பு இப்படித்தான் ஆரம்பமாயிற்று!

அது இறுதி ஆண்டுக்கான தேர்வுகள் முடிந்த நேரம்.மூன்று மாதத்துக்குள் ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பிக்க காலக்கெடு இருந்தது.நான் பரீட்சையை முடித்த கையோடு ஆய்வுக்காக நீர்கொழும்பு பயணமானேன்.தலைநகர் கொழும்பில் இருந்து நீர் கொழும்பு பஸ் எடுத்து அங்கு சென்று அங்குள்ள மக்களோடு அளவளாவி விடயங்களைச் சேகரித்துக் கொண்டு
மீண்டும் கொழும்பு வருவதாக என் ஆய்வு தொடர்ந்து கொண்டிருந்த ஒரு நாளில் யாழ் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையில் இருந்து தந்தி ஒன்று வந்திருந்தது. அது உடனடியாக வந்து உங்களது’தற்காலிக உதவி விரிவுரையாளர்’பதவியைப் பெற்றுக் கொள்ளுமாறு தக்வலைத் தந்தது.

இறுதித் தேர்வுக்கான ஒரு பாடப்பகுதியை இன்னும் சமர்ப்பிக்காத நிலையில் இவ்வாறான நியமனம் மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்த, மறுநாள் ரயிலில் வவுனியா வந்து பின் ஒரு வாகனத்தில் யாழ்ப்பாணம் வந்து நியமனத்தைப் பெற்றுக் கொண்டேன்.

எனக்குக் கிட்டிய முதல் மாதச் சம்பளத்தில் அந்த ஆய்வுக்கட்டுரையை முடிக்கும் செலவை யும் பார்த்துக் கொண்டேன்.

இவ்வாறு பிறப்பெடுத்தது தான் “நீர்கொழும்பில் சிங்களம் பேசும் தமிழர்கள்” என்ற என் பதிவு!

தொடரும்.....