Tuesday, September 22, 2015

இலக்கியச் சந்திப்பு - 24 -




மரங்களும் இலைகளும் பூக்களும் கையசைக்க முகிலுக்கு அப்பால் இருந்து சூரியன் புன்னகைக்கும் மாதம்!
வசந்த கால வாரம்!
வசந்தகால உற்சவங்களும் தெருவோரக் கொண்டாட்டங்களும் வார இறுதிகளில் களைகட்ட ஆரம்பித்து விட்டன.
நாங்களும் கொண்டாட வேண்டாமா?
கடந்த மாத சந்திப்பு இரு புதிய இளைஞர்களின் வருகையினால் புதுப் பார்வையை; விஸ்தீரனத்தை;வியப்பை; புதியதொரு வாசனையை சந்திப்புக்கு வழங்கி இருந்தது. ஆம், கார்த்திக் என்ற பெயர் கொண்ட பாரத இளைஞனும் பிரவீணன் என்ற நாமம் கொண்ட ஈழத்து இளைஞனும் சந்திப்புக்கு புது வாசம் சேர்த்தார்கள். 
வழக்கம் போல பானுவும் கமலாம்மாவும் ஆதரவு சேர்த்தார்கள்.
கீதா வர இயலாமையை முன் கூட்டியே தெரியப்படுத்தி இருந்தார். கார்த்திகா சுகயீனமுற்றிருந்திருந்தார் என்பதை நாம் முன் கூட்டியே அறிந்திருந்தோம்.
சிட்னியின் தென்பகுதியில் இருந்து சந்திப்பன்று காலை சீதா என்றொரு சகோதரி அழைப்பில் வந்து சந்திப்புக்கு வர முடியா ஆதங்கத்தை வெளிப்படுத்தி, சந்திப்பினை ஸ்கைப்பில் தர முடியுமா எனக் கேட்டிருந்தது மனதுக்குத் தனிப்பட்ட உற்சாகத்தை ஏற்படுத்தி இருந்தது.
அது பற்றிய குறிப்புகளை எழுதி பதிவேற்றும் முன்னாடியே வந்து விட்டது அடுத்த சந்திப்பு!
இம்மாத சந்திப்பை தாவரவியல் பூங்காவில் வைப்பதற்கு ஒரு காரணம் உண்டு.வசந்த காலத்தின் இயற்கை அழகை ரசித்த படி புத்தக உலகத்துக்குள் போவது ஒரு ரம்யமான அனுபவமாய் இருக்கும் என்பது ஒரு காரணம்.
இன்னுமொன்றுண்டு.
இப்போதான பூக்களைப் போல பூத்திருக்கும் புத்தகங்களை நம் அங்கத்தவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.
கீதா. மதிவாணன் ஹென்றி.லோஷன் என்ற அவுஸ்திரேலிய செவ்வியல் படைப்பாளியின் கதைகளைத் தேர்ந்தெடுத்து தமிழுக்கு புது வண்ணம் சேர்த்திருக்கிறார்.
கார்த்திகா. கணேசர் ‘காலந்தோறும் நாட்டியக் கலை’ என்றதொரு புத்தகத்தை புலம்பெயர்ந்த மண்ணில் இருந்து புதிய பார்வைகளோடு அளித்திருக்கிறார்.
பிரவீணன். மகேந்திரராஜா - விஞ்ஞானக் கதைகளை ‘ஏலியன் கதைகள்’ என் ற தலைப்பில் தந்து தமிழுக்கு விஞ்ஞான வண்ணம் தீட்டி இருக்கிறார்.
ஜே.கே என்பார் ‘கொல்லைப் புறத்துக் காதலிகளை’ நம்மூடாக அறிமுகம் செய்ய ஆவல் பட்டிருந்தார்.
கன்பராக் கவிஞை ஆழியாழில் கருநாவு கவிதைத் தொகுதி உள்ளடக்கம் சார்ந்து மிகக் கனதியானது.
இவைகள் எல்லாம் எந்த சத்தமும் இல்லாமல் முழுமையான பரிபூரண குழந்தைகளாக தமிழ் தாய் மடியில் அமைதியாக அமர்ந்திருக்கின்றன.
அவைகளைப் பரந்து பட்ட தமிழ் சமூகத்துக்கு அடையாளம் காட்ட வேண்டியது நமது கடமையாகும். 
அவற்றின் பயன்பாட்டுப் பார்வையில் இருந்து அவற்றை திறம் காணுதலும் அதன் வரலாற்றுப் பெறுமதியை உலகறியச் செய்யவும் நாம் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறோம்.
அவைகள் பற்றிய கலந்துரையாடலாக இம்மாத சந்திப்பு வசந்த கால உற்சவத்தோடு சித்திக்கிறது.
ஆர்வலர்கள் மரங்களினதும் பூக்களினதும் புன்னகைகளுக்கு தலையசைத்து விட்டு அவற்றின் முற்றலில்அமைந்திருக்கும் கூடாரத்தில் பூத்திருக்கின்ற புத்தகப் பூக்கள் பற்றி கலந்துரையாடவும் செயற்பாட்டுத் தார்ப்பரியங்களைப் பேசவும் வாருங்கள்.
ஊர் கூடித் தேரிழுப்போம்.
இம்மாதம் 26.9.15 சனிக்கிழமை என்பதும் மாலை மூன்று மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பமாகிறது என்பதும் உங்கள் மேலதிக கவனத்திற்கு!
சந்திப்போம்; தமிழால் இணைந்திருப்போம்!!

Sunday, September 20, 2015

ஏன் நாங்கள் இப்படி ஆயிட்டம்?



சனிக்கிழமை மாலை. எல்லோரும் ஓய்வாய் இருக்கும் ஓரு நாள்.

அது ஒரு மாலைநேர மழைநாளும் கூட. வின்ரர் பொழுது என்பதால் கணப்பும் மிதமாக இருப்பிடத்தைச் சூடேற்றிக் கொண்டிருந்தது.

தேநீரும் கொறிக்க சிலதுமாக சொகுசு நாற்காலியில் காலை மேலே தூக்கிப் போட்டுக்கொண்டு இருப்பதிலும் ஒரு செளகரிகம் உண்டு தானே!

 தொலைக்காட்சியில் ஒரு ஆவணப்படம் ஓடிக்கொண்டிருந்தது.

BBC தயாரிப்பு.

உண்மைக்கும் தத்துரூபத்துக்கும் தரத்துக்கும் அணுகுமுறைக்கும் ஆற்றலுக்கும் ஒரு வரலாற்று உதாரணமாக உலகமே ஏற்றுக் கொண்ட உன்னதத்தின் பெயர் BBC.

 British Broadcasting Corporation!

அன்றும் அப்படியான ஒரு நிகழ்ச்சிதான். வனங்களில் மிருகங்களின் வாழ்க்கை முறை பற்றிய - குறிப்பாக புலியின் வாழ்க்கை வரலாறு.

மான்கள் துள்ளி ஓடுவதும் புலி துரத்துவதுமான ஒரு காட்சி. அதிலும் ஓர் இளமான் உயரமாயும் நீளமாயும் பாய்ந்தோடுகிறது. காட்டில் தானாக வளர்ந்த வாளிப்பு! ஒரு வித மதாளிப்பு! குருத்துப் பருவம்!அந்தரவெளியில் ஒரு துள்ளலுமாக ஒரு நீளப் பாச்சலோடு உறுதியாக புல் வெளியில் கால் பதித்து பின் அதே வேகத்தில் மீண்டும் மேலெழும்புகிறது. அதன் உயிர் தப்புவதற்கான ஓட்டம் புல் வெளியில் கால் பதிக்கிற முறையில் சிறப்பாகப் பதிவாகிறது.

 கமறா துல்லியமாய் மான்கூட்டத்தைப் பின் தொடர்கிறது. தப்பி ஓடிய மான்கூட்டத்துக்குள் புலியோ அந்த துள்ளி ஓடிய இளமானை குறி வைத்து என்னமாய் பின் தொடர்கிறது என்பதும் அது எவ்வாறு தன் இரையைக் கவ்விக் கொள்கிறதும் என்பதும் BBC தரத்தை மீண்டும் உறுதி செய்யப் போதுமானதாக இருந்தது.

என் குடும்பத்தோர் எல்லோரும் அதை ஆழ்ந்து ரசிக்கவும் ஒன்றிப் போகும் படியாகவும் இருக்க என்னால் மாத்திரம் அவ் இளமானின் இழப்பை; இறப்பை; அதன் கடசி நேரத் துடிப்பை; தாங்க முடியவில்லை.

ஏன் நாங்கள் இப்பிடி ஆயிட்டம்?

(கொஞ்ச நாளாய் நான் ஏன் இப்பிடி ஆயிட்டன் என்று நீங்கள் என்னைக் கேட்காமல் இருந்தால் சரி. :) உண்மையாகவே கொஞ்சநாளா என் பதிவுகள் எல்லாம் ஒரு திணுசாத் தான் போய்க் கொண்டிருக்கிறது என்பதை நானும் உணர்கிறேன். வாசகர்கள் பொறுத்தருள்க!)

 வன்முறையை பார்த்து ரசிக்கும் வன்மம் மனித சமுதாயத்தில் எப்போது ஒட்டிக் கொண்டது?

‘முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டிலே என்று தன் காதலன் மறைந்த பின்னால் பூத்த தன் கொல்லையின் முல்லையைப் பார்த்துக் கோவித்துக் கொண்ட காதலியைக் கொண்டிருந்த சமுதாயம்-

காவல் மரத்துக்கு எந்தத் தீங்கும் செய்து விடாதே மன்னா என்று எதிரி நாட்டு குடிமகன் போரிட வரும் நாட்டின் அரசனிடம் மரத்துக்காகவே தூது போன வரலாற்றைக் கொண்டிருந்த ஒரு சமுதாயம் -

உன்னுடய காதலுக்கு சாட்சி யாரடி எனக் கேட்க, ஒரு கொக்கு பார்த்துக் கொண்டிருந்ததே! அது தான் நம் காதலுக்குச் சாட்சி என -

பூக்களையும் மரங்களையும் பறவைகளையும் தமக்குச் சமமாகக் கொண்டாடிய ஒரு அன்பும் அறமும் சார்ந்த ஒரு பண்பாட்டின் வேரில் இருந்து கிளர்ந்த ஒரு செவ்விய பண்பாட்டின் லாவன்யத்துக்குச் சொந்தக்காரரான நாம் இன்று நிற்கின்ற இடம் எது?

கோழிகளைச் சண்டைக் கோழிகளாக வளர்த்து அவை இரத்தக் களரிகளாக ஆகுவதை - அந்த உயிர் வதையை பார்த்து ரசிப்பவர்களாக ஆகி விட்டோம்.

தேனீக்கள் பாடு பட்டு பூப்பூவாய் குந்தி துளி துளியாய் சேகரிக்கும் தேனை நெருப்பிட்டுக் கொழுத்தி அவற்றை கொன்று அல்லது துரத்தி தேனை எடுக்கக் கற்றுக் கொண்டிருக்கிறோம்.

தன் பிள்ளைக்கென தாய்பசு வைத்திருக்கும் பாலை கன்றினைக் கட்டிப் போட்டு விட்டு நாம் கறந்தெடுத்துக் கொள்ளுகிறோம்.

நம் ஆசைக்காக நன்றியும் சிநேகிதமும் கொண்டாடும் நாய்களின் ஆண்மையை / பெண்மையை வலிக்க வலிக்கப் பறித்து விட்டு இப்பிராணி என் செல்லம் எனக் கொஞ்சுகிறோம். மிருகங்களின் மிக குறைந்த பட்ச சந்தோஷமும் அதிகபட்ச வாழ்வின் இருப்பும் அது தானே என்பது எப்படி நமக்கு மறந்து போயிற்று?

கம்பீரமான எருதுகளின் மூக்கில் துளையிட்டு நாணயக் கயிறு மாட்டி இழுக்கிறோம். என்னமாய் அதுக்கு நோகும் என ஒரு பொழுதேனும் யோசித்திருக்கக் கூடுமா நாம்?

பட்டுப் பூச்சிகளின் கொலைகளில் அரங்கேறுகிறது பட்டுப் புடவைகளின் புன்னகை.

ஆண் யானைகளின் கொலைகளில் நடை பெறுவது வெறும் அதன் தந்தங்களில் செய்யப்படும் கலைப்பொருட்களுக்கான  கண்கவர் விருந்துகள். (கூட்டமாகவும் குடும்பங்களாகவும் வாழும் யானைகள் வெளியே வரும் போது மனிதர்களைக் கண்டால் ஆண்யானைகள் மாத்திரம் மரங்களின் பின்னால் மெல்ல ஒழிந்து கொள்கின்றனவாம் தாய்லாந்துக் காடுகளில். அவைகளுக்கு ஏன் தாம் கொலைசெய்யப் படுகிறோம் என்பது நன்கு தெரிந்திருக்கிறது)

முதலைகள் கொல்லப்படுவது அவற்றின் தோல்களில் தயாராகும்  கைப்பைகளுக்காகவும் சப்பாத்துக்களுக்காகவும் என்பது எத்தனை அல்பமானது!

இவற்றில் மட்டுமா? மனிதர்களைக் கூட சண்டை போட வைத்து ரத்தம் வழிவதைப் பார்த்து கைதட்டி ரசிக்கவும் ஒரு கூட்டம் இருக்கத் தானே செய்கிறது குத்துச் சண்டைப் போட்டிகளில்.

இதில் அப்பாவி மிருகங்களை கொலை பண்ணி மனிதர்களாகிய நாம் உண்பது வெறும் வாய்க்கும் தொண்டைக்கும் மட்டுமான சொற்ப தூரத்துக்கானது என்பது இப்போதைக்கு ஒரு புறமாக இருக்கட்டும்.

இப்போது சீன உணவகங்களில் மீன்களும் நண்டுகளும்  உயிரோடு ஓடிக்கொண்டிருக்க நாம் குறிப்பிடும் உயிரினம் உங்கள் உத்தரவின் பேரில் தன் உயிரை உடனே  துறந்து உங்கள் பசிக்கு மருந்தாகும் இங்கு.

தனிப்பட்ட ஒருவர் ஏதோ ஒரு காரணம் நிமித்தம் உயிரொன்றைப் பறித்து விட்டால் ஆயுள் தண்டனை கொடுக்கும் அரசாங்கத்தில் இராணுவம் செய்தால் விருது கொடுத்து கெளரவிக்கும் ஓர் அரசின் ஆட்சியின் கீழ் -

கல்லிலே நம் காலைக் கொண்டு சென்று அடித்து விட்டு ‘கல்லடித்து விட்டது’ என்று முறைப்பாடு சொல்லும் கூட்டமல்லவா நாம்?

ஏன் நாங்கள் இப்பிடி ஆயிட்டம்?





Monday, August 17, 2015

இலக்கிய சந்திப்பு - 23


அன்பான இலக்கிய உள்ளங்களே!

எல்லோரும் நலம் தானா?

பல இலக்கிய உள்லங்கள் ஏன் இலக்கிய சந்திப்பு நிகழ்த்த வில்லை? இம்மாதம் இலக்கிய சந்திப்பு உண்டா என நேரிலும் தொலைபேசி மூலமாகவும் கேட்டிருந்தார்கள். ஆம். கடந்த சில மாதங்களாக நம் சந்திப்பு நிகழ இயலாமல் போனமைக்கு குளிர்காலம் ஆரம்பித்தமை ஒரு பிரதான காரணம்.நாம் பூங்காவில் நிகழ்ச்சிகளை நிகழ்த்துவதால் குளிர்காலத்துக்கு அது தோதாக இல்லாமை ஒரு காரணம். கணப்புகளுடன் கூடிய மூடிய கூடாரங்களைப் பெற்ருக் கொள்வதன் சிரமங்கள் இன்னொரு காரணம்.

இதோ சற்றே மெல்ல சூரியன் வெளியே வர தொடங்கி விட்டான்.

நீண்ட குளிர் காலத்தின் பின் மீண்டும் ஒரு மாலையில் சந்திக்க இருக்கிறோம். இன்னும் குளிர் முற்றாகத் தீராத போதும் சில இலக்கிய நண்பர்களின் விருப்பின் பேராலும் தூண்டுதலின் பேராலும் பிற்பகல் 5.00 மணிக்கு ஆரம்பமாகும் நம் சந்திப்பை 4.00 மணியாக முன்னாக்கி நிகழ்த்த முடிவு செய்திருக்கிறோம். பின்னாலும் விரைவில் குளிர் ஆரம்பித்து விடும் என்பதால் ஒரு மணி நேரத்துக்குள் முடித்து விடவும் தீர்மானித்திருக்கிறோம்.

இம்முறை ஈழத்துக் கவி மொழி பற்றியதாக நம் கலந்துரையாடலை நிகழ்த்தலாம் என்று தீர்மானித்திருக்கிறோம். ஈழத்துக் கவிதைகள் அதன் பொருளடக்கத்திலும் சொல்லும் முறையிலும் தாய்தமிழ் நாட்டின் அடிப்படையில் இருந்து காலத்துக்குக் காலம் தனித்துவமாகவும் வேறுபட்டும் சில வேளைகளில் ஒன்று பட்டும் விளங்கி வந்திருக்கிறது. ”இலக்கியம் சமூகத்தின் கண்ணாடி” என்பதற்கிணங்க சமூக வாழ்வும் அதன் அரசியல் பொருளாதார பின்னணிகளும் கவிதைகளில் எவ்வாறு பிரதி பலித்திருக்கின்றன என்ற பார்வை நமக்கு புது பரிமானங்களின் தரிசனங்களைத் தரலாம். உங்கள் ஒவ்வொருவருடய பார்வைகளும் நம் கண்களுக்கு புலனாகாத புதிய பக்கங்களை கானச் செய்யும். அதனால்,ஈழத்துக் கவிதைகளின் களமும் வளமும் பலமும் பலவீனமும் பற்றிய ஒரு அலசலாக இம்மாத சந்திப்பை அமைத்துக் கொள்ள தீர்மானித்திருக்கிறோம்.

இலக்கிய ஈடுபாடுடய அன்பர்கள் தயவு கூர்ந்து அவை பற்றிய உங்கள் பார்வைகளை; படித்ததை; மனதில் பதிந்ததை; அல்லது மறுப்பதை அன்றேல் முரண்களை நம்மோடு பகிர்ந்து கொள்ள வாருங்கள். 

பல மாத இடைவெளிக்குப் பின் உங்கள் எல்லோரையும் மீண்டும் சந்திக்க ஆவலுடையோம்.

தமிழால் இணைந்திருப்போம்.

Tuesday, August 11, 2015

புறநானூற்று மனிதன்




உண்பது நாழி!
உடுப்பது இரண்டே!!

புறநானூற்று மனிதனின் தேவைகள் இந்த இரண்டுக்குள்ளும் அடங்கி விட்டன.

இந்தத் தேவைகள் மட்டும் தானா மனிதனின் வாழ்வு? சந்தோஷம் என்பதை எது தரும்? சங்க காலத்து மனிதன் அதையும் சொல்கிறான். இப்படி.

அவர் ஒரு முதியவர். தன் ஊரில் இருந்து அடுத்த ஊருக்குப் போகிறார். அந்த பக்கத்து ஊர் மக்கள் இவரைப் பார்க்கிறார்கள். வயதான தாத்தா நல்ல சந்தோஷமாக துள்ளல் நடையோடு போகிறார். தலையில் ஒரு நரை மயிரையும் காணோம். குடிமக்கள் அவரை வழி மறிந்த்து கேட்கிறார்கள். இவ்வளவு சந்தோஷமாக நீங்கள் இருப்பதன் இரகசியம் என்ன?

அவர் சொல்கிறார். எனக்கு மாண்புள்ள மனைவி இருக்கிறாள். சொல்வது கேட்கிற பிள்ளைகள் இருக்கிறார்கள். விசுவாசமான வேலையாட்கள் இருக்கிறார்கள். அறநெறியில் இருந்து வழுவாமல் ஆட்சி செய்கிற அரசன் எங்களை ஆட்சி செய்கிறான். கல்வி அறிவு நிரம்பப் பெற்றதால் ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் என் சுற்றமெல்லாம் நிறைந்திருக்கிறார்கள். அதனால் நான் நல்ல இளமையோடும் சந்தோஷத்தோடும் இருக்கிறேன் என்கிறான். (காண்க: புறநா.பாடல் 191)

தேவைகளையும் சந்தோஷத்துக்கான ரகசியத்தையும் சொன்ன புறநானூற்று மனிதனின் வாழ்வின் கொள்கையை விழுமிய சிந்தனையை பார்க்க வேண்டாமா?

எல்லாம் எங்களுடய ஊர் தான். எல்லோரும் எங்களுடய உறவினர் தான்.எங்களுக்கு வருகிற இன்பமும் துன்பமும் மற்றவர்களால் வருவதல்ல.மாறாக அது எங்களின் ஊழ்வினைப் பயனால் வருவதே. எங்களுடய சந்தோஷமும் துக்கமும் அதனால் வருவதென்பதால் நான்  அதை இட்டு சந்தோஷப்படுவதோ கவலைப்படுவதோ இல்லை.வாழ்க்கை நிரந்தரமற்றது மாத்திரமல்ல. அது ஆற்று வெள்ளத்தில் அதன் போக்கில் அள்ளுண்டு செல்லும் ஒரு மிதவையைப் போல ஊழ்வினையின் உந்துதலால் தள்ளப்பட்டுக் கொண்டு தன் வழி செல்கிறது. இந்தத் தெளிவு நமக்கு இருப்பதால் நாங்கள் மாண்போடு வாழும் மாந்தரைப் பார்த்து வியப்பதும் இல்லை.சிறுமையோடு வாழும் எளியவரைப் பார்த்து இகழ்வதும் இல்லை. (காண்க புறநா. 192)

இவ்வளவும் தான் புறநானூற்று மனிதன். அப்படி என்றால் அவன் ஏன் போர் புரிந்தான். ஏன் அரச புகழ் பாடித்திரிந்தான் என்பதெல்லாம் ஒரு புறமாக இருக்கட்டும்.

காதலையும் காமத்தையும் தமிழன் பாடியதைப் போல வேறுயார் பாடி இருக்கக் கூடும்? அகநானூறு மட்டுமல்ல தமிழ் இலக்கிய வரலாறு முழுக்க பரவிக் கிடப்பவை அவை. கம்பன் ஓரிடத்தில் ஊர் அழகைச் சொல்லும் போது அந் நாட்டு வீரர்கள் நாண் இழுத்து ஒரு இலக்கை குறி வைத்து அம்பினை எய்தால் அக்குறி ஒரு போதும் தப்புவதே இல்லையாம். அது போல அந் நாட்டு பெண்கள் கண்ணினால் குறி வைத்து ஒருவனை நோக்கினால் அவன் தப்பியதாய் கூட சான்றில்லை என்பான். அப்படி ஊரை; வீரத்தைச் சொல்லும் போது கூட காதலையும் அதனூடு கலந்து சொன்னவன் தமிழன். அது பற்றி பின்னொருமுறை பேச ஆவல். அதற்கு கத்தி முனையில் நடக்கும் ஒரு லாவன்யம் என் தமிழ் நடைக்கு வர வேண்டும். வரும் போது அதைப் பார்ப்போம்.

இன்றய தினம் 11.8.15 அவுஸ்திரேலிய தொலைக்காட்சியில் செய்தி பார்த்த போது ரஸ்மானிய மாநிலத்து செனற்ரர் Jacqui.Lambie தன் 21 வயது மகன் போதைப்பொருளுக்கு அடிமையாகி விட்டதோடு அது தன் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டு விட்டதாகவும் இனி நான் இது பற்றி மகனோடு பேசப்போவதில்லை எனவும் போதைப்பொருளோடு பேசப்போவதாகவும் கூறி, தேசத்துக்கு போதைப்பொருள் சம்பந்தமாக இத் தேசம் என்ன செய்யப் போகிறது என்பது பற்றிக் கண்ணீரோடு பேசக் கேட்டேன்.

தலையிடியும் காச்சலும் தனக்குத் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பார்கள் நம் பாசையில். இந்தத் தேசம் போதைப் பொருளுக்கு மாத்திரம் அடிமையாகிக் கிடக்கவில்லை. மது, போதைவஸ்துப்  பாவனை, அளவுக்கு அதிக உடல் எடை, நடத்தைக் குறைபாடுகள், (behavior problems) உள ஆரோக்கிய பிரச்சினைகள் / குறைபாடுகள் (mental health problems) அதிகரிக்கும் விவாக ரத்துக்கள். (இத் நாட்டில் 40% விவாகரத்தானவர்கள் என்று அரச தரவு ஒன்று தெரிவிக்கின்றது.) மிகப் பிரதான பிரச்சினையாக இருக்கிறது.

எங்கோ அடிப்படையில் ஒரு கோளாறு இருக்கிறது.

தேசம் இது பற்றி சிந்திக்கட்டும். நாம் எப்படி இருக்கிறோம்?

இன்றய மனிதனின் தேவைகள் எப்படியானவையாக இருக்கின்றன? ஒரு நாழி சாப்பாடும் இரண்டு துண்டு உடுப்புகளோடும் நாம் திருப்தி அடைந்து விடுகிறோமா? எங்களுக்கு எத்தனை ஆசைகள்... தேவைகள்... மின்சாரம் இல்லாமல்; கைத்தொலைபேசி இல்லாமல் ஒரு வாழ்வை கற்பனை பண்ணத்தான் நம்மால் முடியுமா?

நம் சந்தோஷம் என்பது புறநானூற்று மனிதனின் சந்தோஷம் மாதிரியா இருக்கிறது? எங்களுக்கு எது சந்தோஷத்தைத் தருகிறது?

 பெரிய வீடு, போய் வர வாகனம், பீற்றிக் கொளள பதவிகள், கைத் தொலைபேசிக்குள் அடங்கி விட்ட உலகம்......

கை விட்டுப் போன பொறுமை,எனக்கு மட்டும் என்ற சிந்தனைகள், தற்காலிகங்களை தேடி ஓடும் வேகம், விழுமியங்களை மறந்து விட்ட வாழ்வு.......

என் வேலைத்தலத்தில் சீன அவுஸ்திரேலிய கலப்புக் கொண்டவள் சொன்ன சீனக் கதை இது. ஒரு செம்மொழி அந்தஸ்துக் கொண்ட மொழி மூலக்கூறு ஒன்றில் இருந்து கிளர்ந்த கதை.

முன்னொரு காலத்தில் ஓர் அரசன் இருந்தான். அவன் 1000 ஆண்டுகள் தான் வாழ வேண்டும் என்று ஆசை கொண்டான். அதனால் தன் குடி மக்களிடம் அப்படி வாழுவதற்கான சிரஞ்சீவிச் செடியைக் கொண்டு வருமாறு காட்டளை இட்டான். அப்படி கொண்டு வர முடியாதவர்களை அவன் சிரச் சேதம் செய்தான். ஒரு நாள் ஒரு சிறுமி சென்றாள். தான் அந்த இரகசிய சிரஞ்சீவி மூலிகையைக் கொண்டு வந்திருப்பதாகச் சொன்னாள். அரசன் ஆவலோடு எங்கே என்று கேட்டான். அவள் அதனை தன் வாயினாலே தான் சொல்ல முடியும் என்றாள். எங்கே சொல் பார்க்கலாம் என்றான் அரசன். அவள் சொன்ன 4 இரகசியங்கள் இவை தான்.

1. நல்ல ஆரோக்கியமான உணவு.
2. வியர்வை சிந்தும் உழைப்பு.
3.போதுமான உறக்கம்.
4. திறந்த நல்ல இதயம்.

நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்வீர்கள் மன்னா என்றாள் சிறுமி.

“நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் உருவாக்கும் அரூப சக்தியே வரலாறு”

அந்த சங்கிலித்தொடரில் நாங்கள் காணாமல் போன இடம் எது?



Thursday, July 16, 2015

தனித்தமிழ்ச் சிறுகதைப் போட்டி




தனித்தமிழ்ச்சிறுகதைப்போட்டி

தனித்தமிழியக்கம் நடத்தும்
தனித்தமிழ்ச் சிறுகதைப்போட்டி
 பரிசு 3000.00 உருவா

கதைகள் வந்துசேர வேண்டிய கடைசி நாள்: 20.8.2015
முகவரி : முனைவர் க. தமிழ மல்லன், தலைவர், தனித்தமிழ் இயக்கம்,
66,மாரியம்மன்கோயில்தெரு, தட்டாஞ்சாவடி,புதுச்சேரி-605009 தொ:0413-2247072

நெறிமுறைகள்:

 1. அ4 தாளில் 5 பக்கம்கொண்ட, குமுகாயக்கதைகள், பிறசொற்கள்
பிறமொழிப்பெயர்கள் கலவாத நடையில்எழுதப்படல்வேண்டும்.
2. கதையின்இரண்டுபடிகளைஅனுப்பவேண்டும்.
ஒருபடியில்மட்டும் பெயர், முகவரிகளைத் தனித்தாளில்இணைத்துஅனுப்புக.
கதையின்ஏந்தப்பக்கத்திலும் எழுதியவர்பெயர் இருக்கக்கூடாது.
3. மொழிபெயர்ப்பு, முன்னரே வெளிவந்தவை, தழுவல், ஏற்கப்படா
4. தேர்தெடுக்கப்பட்ட கதைகள்‘வெல்லும்தூயதமிழ்’மாதஇதழில்வெளியிடப்படும்.
5. நடுவர்தீர்ப்பேஇறுதியானது .
6. சிறுகதைப் படைப்பாளர் உறுதிமொழி இணைக்க வேண்டும்.
பொறிஞர்இரா.தேவதாசு இவ்வாண்டு  பரிசுகள் வழங்குகிறார்.

இரண்டுமுதற்பரிசுகள் 750.00=1500
இரண்டுஇரண்டாம் பரிசுகள் 500.00=1000
இரண்டுமூன்றாம்பரிசுகள் 250.00= 500

க.தமிழ்மல்லன்
தலைவர், தனித்தமிழ்இயக்கம்.

இங்கு வரும் என் நண்பர்கள் பலர் தனித்தமிழில் வாஞ்சையும்  வல்லமையும் கொண்டிருப்பதோடு சிறுகதையை கலை நயத்தோடு நெய்யவும் வல்லவர்கள்.

மறைமலை அடிகளாரின் தனித்தமிழ் போல விபுலானந்த பெருந்தகையின் எளிமை கூட்டி மலர இருக்கும் கதைகளுக்கு முன் கூட்டியே என் அன்பார்ந்த வாழ்த்துக்கள்.



Monday, July 6, 2015

எனக்கு முன்பாகச் செல்லும் சமூகம்......



அரிஸ்டோட்டில் மரணத் தறுவாயில் இருந்த போது அவரைச் சுற்றிலும் சீடர்கள் இருந்தார்கள். அப்போது அரிஸ்டோட்டில் ‘நான் இப்போது தான் உண்மையை அறிந்து கொண்டேன்’ என்று கூறினார். ‘எந்த உண்மை?’ என்று சீடர்கள் ஆவலோடு கேட்டார்கள். ‘எனக்கு ஒன்று தெரியாது என்ற உண்மையை அறிந்து கொண்டேன்” என்றார் அவர். (தமிழ் ஓசை, ஜூன் 2015)

’எனக்கு முன்பாகச் செல்லும் சமூகம், இண்டிக்கேட்டரையும்  போட்டுக் கொண்டு சென்றால் நன்றாக இருக்கும்’ என்று ஒரு வணிக சஞ்சிகையில் வந்திருந்த வலை வாசகம் ஒன்று  அதனை நவீன வடிவில் மொழிபெயர்த்து மேற்கூறியவாறு கூறி இருந்தது ஆ.வி. 22.2.15 இல்.

’ஜிப்ஸி’ என்றொரு தொடர் பதிவினை விகடனில் எழுதிக்கொண்டு வந்த ராஜு முருகன் என்பார் அதன் நிறைவுப் பகுதியில் இப்படி எழுதுகிறார்.
” தொழில்நுட்பங்களும் பொழுது போக்குகளும் மலிந்து விடுவது மட்டுமா ஒரு தேசத்தில் வளர்ச்சி? உண்மையில் இன்றய இந்தியாவின் வளர்ச்சி என்பது முதலாளிகளின்; அரசியல் தரகர்களின் அரசியல் தலைவர்களின் வளர்ச்சி தான். அன்பும் அறமும் தான் இந்தத் தேசத்தின் ஆத்மா. அதில் மட்டுமே தான் இந்தியா துண்டாடப்படாமல் எழுந்து நிற்கிறது. உழைப்பும் ஒற்றுமையும் தான் இதன் ஆண்ம சக்திகள். இன்றய ‘வளர்ச்சி இந்தியாவில்’ இதெல்லாம் எப்படி இருக்கிறது?  சாதியமும் மதவாதமும் முன்னிலும் கோர முகம் எடுத்திருக்கிறது. சொல்ல முடியாத ஒரு வன்முறையின் நிழல் நம் மனங்களில் படிந்து கொண்டிருக்கிறது.இயற்கையில் இருந்து விலகி விலகிப் போய்க் கொண்டிருக்கிறோம். அறமற்ற, குற்றங்களைக் கண்டு கொள்ளாத, தவறுகளை வளர்ச்சியாக எடுத்துக் கொள்ளுகிற அபத்தங்களைக் கொண்டாடுகிற, வாழ்வைப் பழகிக் கொள்ளுகிறோம். நல்லோரை மிக எளிதாக ஒதுக்கி வைத்து விடுகிறோம். ஏராளமான சுய நலன்களைச் சுமக்கிறோம்....” ( ஆ.வி. 1.4.15 பக். 58)

எப்படி இருந்த ஒரு சமூகம்? ஒழுக்கம், கோட்பாடு, வரையறை, திட்டமிட்ட வாழ்வு, கலைகள், பண்பாடு, சுற்றம், சூழல், அழகியல், இயற்கை, ஒப்புரவு என விரிந்து சென்ற அதன் போக்கு இன்று வேறொரு திசையில் போகக் காரணம் என்ன?

நற்றிணையில் ஒரு பாடல்.
.......
யாங்காகு வென் கொல் யானே! ஈங்கோ
சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவின்
பிறப்பு பிறிதாகு ஆயின்
மறக்குவென் கொல்! என் காதல் எனவே (397)

சாவதற்கு நான் அஞ்சவில்லை. ஆனால் இறப்புக்குப் பிறகு வரும் பிறப்பு வேறொன்றாக அமைந்து விட்டால் என் காதலனை அந்தப் பிறப்பில் மறந்து விடுவேனோ என்று தான் அஞ்சுகிறேன். என்கிறாள் தலைவி.

“இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனா,
கண்நிரை நீர் கொண்டனள்” - 1315

என்றொரு குறள். இந்தப் பிறவியில் நான் உனைப் பிரியேன் என்கிறான் தலைவன். அப்படியானால் அடுத்த பிறவியில் பிரிய நினைத்தீரோ? என ஊடும் தலைவியைக் கொண்ட அன்பும் அறமும் உடைத்தான காதல் வாழ்வு கொண்ட சமூகம்,

“ வழுத்தினாள் தும்மினேனாக அழித்து அழுதாள்
யார் உள்ளித் தும்மினீர் என்று” 1317

இயல்பாகத் தும்மினேன். அவளும் பெண்மைக்குரிய அன்பினோடு நூறாண்டு வாழ்க என வாழ்த்தினாள். ஆனால் உடனே மனம் மாறி யார் உம்மை நினைத்ததால் தும்மினீர்  அது யார்? யார்? என்று கேட்டு பொருமும்  காதலும் அன்பும் கூர்மையும் கொண்டு ஒழுகிய பெண்டிரைக் கொண்டிருந்த ஒரு சமூகம்,

அண்மையில் இப்படி ஒரு ஜோக் சொல்லி சிரித்து இருந்தது.

“ சாதாரண நோய்னு ஆஸ்பத்திரிக்கு வந்தவருக்கு எப்படி திடீர்னு ஹாட் அட்டாக் வந்துச்சு?
“ நம்ம ஆஸ்பத்திரியில பொம்பிள நார்ஸ் கிடையாதுங்குற உண்மையை டாக்டர் அவர் காதுபட உளறிட்டாராம்” (வி. சகிதா.முருகன் தூத்துக்குடி, குங்குமம்)

எப்பிடி இருந்த உலகம் எப்பிடி ஆயிட்டுது பாத்தீங்களா?

இந்த வாரம் விடுமுறையில் நிற்பதால் சேர்ந்தும் தேங்கியும்  போய் விட்டிருந்த சஞ்சிகைகள் எல்லாவற்றையும் பார்த்து முடிப்பது என்ற தீர்மானிப்பின் விளைவாக வாசிக்க நேர்ந்த சில விடயங்களை உங்களோடு பகிர்வது இப்பதிவின் நோக்கம்.

ஒரு சிதறு தேங்காய் போல...

9.3.15 குங்குமத்தில் பெண்னுரிமை பற்றி சில பிரபலங்கள் பகிர்ந்து கொண்டிருந்த விடயங்களை தருகிறேன்.

1.”எங்கெல்லாம் பெண்கள் இழிவு படுத்தப் படுகிறார்களோ அங்கெல்லாம் தன்னுடய எதிர்ப்பைப் பதிவு செய்வது தான் பெண்ணுரிமை. ஒரு நடிகை பல்டாக்டரிடம் ‘பல் கூசுகிறது’ என்றாள்.அதற்கு டாக்டர், ‘உனக்கு அங்கேயாவது கூச்சம் இருக்கட்டும்’ எனச் சொல்ல அதற்குக் கதட்டி ரசித்த பலரும் பெண்கள் தான்.நம்மை இழிவு செய்பவர்களைக் கண்டு கோபம் கொள்வதும் எதிர்ப்பைப் பதிவு செய்வதும் தான் பெண்ணுரிமை. - சுமதிஸ்ரீ.

2. பெண்களுக்குப் பாதுகாப்பானது என நம்பிய வீடுகளில், குடும்பங்களில் கூட வன்முறை நடப்பது அம்பலமாகி உள்ளது.பெண்கள் பெற்று வரும் ஆளுமையை ஆண்களால் தாங்கிக் கொள்ள முடியாமல் தான் சொல்லிலும் செயலிலும் வன்முறை நிறைந்தவர்களாக ஆகி விட்டனர். பெரியார் பெண்ணுரிமைக்காகக் களமிறங்கிய மண்ணில் தான் பெண்களுக்கு எதிரான பாலியல் முறை கேடுகளையும் வார்த்தைகளையும் எளிதாகப் பேசி விட்டு தப்பிக்க முடிகிறது. - குட்டி ரேவதி.

3.தன்னுடல் பிறரின் துய்ப்பிற்கும் உயிர்பெருக்கத்திற்கும் மட்டுமானதல்ல என்பதை நிறுவவே பெண்கள் பலநூற்றாண்டுகள் போராட வேண்டி இருந்தது.பெண்ணடிமைத் தனத்தின் அடிப்படைகள் பெருளாதாரமும் ஆண் மையப் பண்பாடும் என்பது இன்னும் பரவலாக அறியப்படாமல் இருப்பது துரதிஷ்டவசமானது” - எம்.டி. முத்துக்குமாரசாமி.

4.சுயமரியாதையா காதலா என்றால் பெண்ணுக்குச் சுயமரியாதையைத் தேர்வு செய்யும் திடம் வேண்டும். அன்பு,நேசம், பாசம், குடும்பம், திருமணம், பிள்லைகள் எதற்காகவும் பெண் தன் சுயத்தை விலையாகத் தருவதை நிறுத்தினால் தான் அடிமை முறையை வேரில் இருந்து தகர்க்க முடியும். சுதந்திரம் என்பது பிறப்புரிமை. யாரும் தருவதோ யாரிடம் இருந்தும் பெறுவதோ அல்ல என்பதில் பெண்னுக்கு மட்டும் விதி விலக்கு இருக்க முடியுமா என்னா? - லீனா. மணிமேகலை.

5.பெண்கல்வி கடந்த 50 வருடங்களாகத் தான் நடைமுறைக்கு வந்திருக்கிறது.15 வருடங்களாகத் தான் பெண்கள் பலத்த குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.இதற்கே ஆண் சமூகம் பயந்து நடுங்குகிறது. பிளஸ்டூ தேர்வில் பெண்களே அதிகம் தேர்வு பெறுவது அதிகம் பேர் டைவோர்ஸ் கேட்க ஆரம்பித்திருப்பது.... இப்படி பெண்கள் தங்களை மீறிப் போய் விடுவார்களோ என நினைக்கிறது ஆண் சமூகம். அதனால் தான் பெண்கள் மீதான வன்முரை அதிகரித்திருக்கிறது. இனி வரும் நூற்றாண்டுகளில் பெண்களின் கையே ஓங்கி இருக்கும். - வசந்த பாலன்.

6.பெண் எனும் பிறப்பிற்கென வகுக்கப்பட்டிருக்கும் தனிப்பட்ட சமூக விதிகளை, நடத்தை விதிகளை ஒழிப்பது, விதிகள் உருவாகக் காரணமாக இருக்கும் ஆணாதிக்க சமூக அமைப்பை சமத்துவ சமூகமாக மாற்றி அமைப்பது,  பெண்ணுடலை அனைத்து விதமான ஆதிக்கக் கருத்தியலில் இருந்தும் மீட்பது, அதன் மூலம் ஆண்மயமாக்கப்பட்ட ஆபத்து நிறைந்ததாக மாறிப்போன பொது வெளியை பெண்களுக்கு உரியதாக ஆக்குவது. - நிர்மலா. கொற்றவை.

7.பெண்ணுரிமை என்பது வாழ்வின் குறிக்கோளை அடைய தடையற்று இருப்பதிலும் அதை உணர்வதிலும் இருக்கிறது. பெண் விடுதலை என்பது யாரும் யாரிடமும் கெஞ்சிக்கேட்கும் பிச்சையல்ல. அது பிறப்புரிமை. நம் மனதில் விடுதலையை நேசிக்கும் உணரும் அதே நேரத்தில் மற்றவரின் விடுதலை உணர்வைப் போற்றுவதிலும் மதிப்பதிலும் அதன் உன்னதம் கூடுகிறது. - இளம்பிறை.

8.சமூகத்தின் நியாயத் தராசுகள் ஆண்கள் என்று வரும் போது இயல்பாகவும் பெண்கள் என்று வரும் போது கலாசாரத்தின் மீதேறி நின்றும் எடை போடுவது ஏன்? ஒரு பெண் தானும் ஒரு மனுஷியாக ( மனிதராக) அங்கீகரிக்கப்பட வேண்டும் எனதற்கான போராட்டம் தான் பெண்ணியம். அதற்கான தீர்வு தான் பெண்ணுரிமை. பெண்னுரிமை என்பது மனித உரிமை. - கவிதா. முரளீதரன்.

9. கற்றைச் சிறகுடன் வானில் பறப்பது
ஒற்ரை இறகாக காற்றில் மிதப்பது
குடை இருக்கும் போதும் மழையில் நனைவது
கூடு இருக்கும் போதும் கிளையில் அமர்வது
வேண்டும் என்பதை தேர்ந்து எடுப்பது
வேண்டாம் என்பதை திடமாய் மறுப்பது
பெண்ணென பிறரால் உணர்த்தப் படாதது
பெண்ணென தானே தன்னை உணர்வது. - வண்ணதாசன்.

10.சாதி, மதம், கலை, கலாசாரம், வியாபாரம், குடும்பம், விளம்பரம் அனைத்துமே இங்கு ஒரு பெண்ணின் உடலை முன்வைத்தே பேசப்படுகின்றன. பாலியல் வன்முறை என்பதோடு முடியாமல் உயிரும் பறிக்கப்பட்டு வீதி ஓரங்களில் குப்பையாக வீசப்படுகிறாள் பெண். தன் உடல் மீதே பெண்ணுக்கு சுதந்திரமில்லாத சமூகத்தில் பெண்ணுரிமை பற்றிப் பேசுவதில் அர்த்தமில்லை. முதலில் அவள் உடல் மீது அவளுக்கு இருக்கும் பதற்றத்தைப் போக்குவதற்கு என்ன செய்யப் போகிறோம்? - கவிஞர். பழனி பாரதி.
இவை குங்குமத்தின் 9.3.15 செய்திகள்.

இன்றயதினம் 28.6.15 இலங்கையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு விட்டதாகச் செய்தி. அதனோடு கூடவே பிரதமராக இருந்த மைத்திரிபாலா. செனநாயக்கா யாழ்ப்பாணத்தில் மதுபானசாலைகள் அதிகரித்து விட்டதென்றும் பாடசாலையில் மாணவர்களின் கல்வி வளர்ச்சி வீதம் வீழ்ச்சி அடைந்து விட்டதென்றும் கவலை தெரிவித்து, ஊடகங்களினதும் கலை வடிவங்களும் தார்மீகப் பொறுப்புகளை நினைவு படுத்தி அவர்கள் தம் பொறுப்புகளை சுதந்திரமாகவும் பொறுப்புணர்வோடும் ஆற்ற வேண்டிய காலகட்டம் இதுவென்றும்; அதனை செவ்வனே ஆற்ற அவர்கள் முன்வரவேண்டும் என்றும் அறைகூவல் விடுத்திருந்தார்.

குமுதத்தில் ( 29.12.14) ஒருதடவை வைரமுத்து சிறுகதைகள் பற்றி இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். “ இயற்கை மறைப்பதை மனிதன் கண்டடைகிறான். மனிதன் மறைப்பதைக் கலை கண்டறிகிறது. மனிதனைக் கண்டறிந்து அதன் விழுமியங்களைச் செழுமை செய்யும் சிறுகலை சிறுகதை”

ஊடகமும் கலைகளும்; ஊடகவியலாளர்களும் கலைநெய்வோரும் சமூகத்தை செழுமை செய்ய என்ன செய்கிறார்கள்?

எப்படி அதைச் செய்கிறார்கள்?

அவர்கள் முதலில் தமக்குள் ஒரு தெளிவான நிலைப்பாட்டுக்கு வந்தாக வேண்டுமே!

”குடை இருக்கும் போதும் மழையில் நனைவது
கூடு இருக்கும் போதும் கிளையில் அமர்வது” - இதன் மறைபொருளும் அங்கதமும் என்னைக் கொஞ்சமாய்  பயமுறுத்துகிறது.

சமூக விடுதலை பேசுவோர் மிருக இயல்பு வாழ்வுக்கு வழிகாட்டுகிறார்களோ என்றொரு அச்சம்.

எனக்கு முன்னால் செல்லும் சமூகம் கொஞ்சம் இண்டிக்கேட்டரையும் போட்டுக் கொண்டு சென்றால்.....