Friday, April 22, 2016

அனுபவித்தல்.....




வாழ்க்கை......
வேலை, குடும்பம், உறவுகள், உணர்வுகள் சம்பந்தப்பட்டது.

அதற்கும் மேலே கொஞ்சம் போனால் வாழ்க்கை என்பது ஒரு அனுபவம் என்றும் சொல்லலாம்.

ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமான அனுபவங்கள்......

50 சதத்திற்கு வாங்கிய வாழ்த்து அட்டை ஒன்று “ celebrate the precious gift of life " என்று எழுதி ஒரு கடற்கரையும் கரையில் ஒரு தேவதையும் வரையப்பட்டிருக்கக் கண்டேன்.

எங்களில் எத்தனை பேர் வாழ்க்கையை கொண்டாடுகிறோம்? அனுபவம் செய்கிறோம்?

துன்பச்சுவையையும் ஒரு அனுபவமாக உணர்கிறோம்? அவை தரும் படிப்பினைகளை பின் புலமாகக் கொண்டு  வாழ்வின் தார்ப்பரியங்களை புரிந்து கொள்கிறோம்?

வாழ்க்கையில் நாம் அன்றாடம் சந்தித்துக் கடக்கும் சின்னச் சின்ன விடயங்களை நாம் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. அவற்றில் பொதிந்து கிடக்கும் சந்தோஷ கணங்களை ஆகார்ஷிப்பதும் இல்லை. 


கடந்த வாரம் ஒரு வட இந்திய சினேகிதி ஒருத்தியின் மகனாரின் திருமணத்திற்கு முந்திய கொண்டாட்டம் ஒன்றுக்குச் சென்றிருந்தேன். ஆடலும் பாடலும் சாப்பாடும் கொண்டாட்டமுமாய் ஒரு வாழ்வின் வரவை அவர்கள் கொண்டாடினார்கள்.

20.4.2016 அன்று காலை எடுத்ததாகத் தன் நாயினுடய படத்தை என் நண்பன் காட்டினான். இந் நாய் காலை நேர குளிர் காற்றை கண்மூடி அனுபவிப்பதைப் பார்த்தீர்களா? இந் நாய் - அதன் பெயர் Bear. நமக்கு வழங்குகின்ற பாடம் ஒன்று உண்டு. அது,

"Enjoy the simple things in life" 





Thursday, April 21, 2016

அங்க மொழியும் ஒரு பாடலும்



பேசுகிற மொழியை விட உடல் மொழிக்கு அதிக பலம் உண்டு என்று மேலைத் தேயக் கலாசாரம் சொல்கிறது. அதன் ஆற்றல்  60% என உடல் மொழி வல்லுனர்கள் சொல்லுகிறார்கள்.பேசுகிற சொல்லுக்கு அது 40% தத்தினைத் தான் ஒதுக்குகிறது.

இன்றைக்கு நான் ரசித்த பாடல் ஒன்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விருப்பமாக இருக்கிறது. இந்தப் பாடல் மாட்டுக்கார வேலன் என்ற திரைப்படத்தில் கே.வீ. மகாதேவனின் இசையமைப்பில் டி.எம். செளந்தரராஜன் எம்.ஜி.ஆர் இற்காகப் பாடி இருக்கிறார்.

பாடல்வரிகள் கண்ணதாசனுக்குச் சொந்தமானவை.

சொற்செட்டை விட்டுக் கொடுக்காத எளிமையான வரிகள்! ஒன்றை ஒன்று தூக்கிக் கொடுக்கும் சொற்களுக்கு நோகாத இசையமைப்பு!! சொற்களில் கரைந்து கரைந்து வரும் அபிநயமாகிப் போன குரல்.

எல்லாவற்றையும் விட பிடித்துப் போன ஒன்று என்னவென்றால் இந்தக் கவிஞன் என்ன மாதிரி காதல் வசப்பட்டிருக்கிற ஒரு பெண்ணின் உடல் மொழியை கவனித்திருக்கிறார் பாருங்கள்!!


ஒருபக்கம் பாக்கிறா
ஒரு கண்ண சாய்க்கிறா
அவ உதட்டக் கடிச்சிக்கிட்டு மெதுவா(க)
சிரிக்கிறா சிரிக்கிறா சிரிக்கிறா  (2)

ஆடய திருத்திறா
அள்ளி அள்ளி சொருகிறா (2)

அர குற வார்த்த சொல்லி
பாதிய முழுங்குறா (2)

பின்னல முன்ன விட்டு
பின்னிப் பின்னி(க்) காட்டுறா

பின்னால தூக்கி விட்டு
கையால இழுக்குறா

பூப்போல காலெடுத்து
பூமிய அளக்குறா

பொட்டொண்டு துள்ளித் துள்ளி
சிட்டாகப் பறக்குறா

நிலையில கைய வச்சு
நிக்கிறா நிமிருறா(2)

நிறுத்தி மூச்சு விட்டு
நெஞ்சத் தாலாட்டுறா
நெஞ்சத் தாலாட்டுறா (ஒரு பக்கம்)

காலால நிலத்தில
கோலம் போட்டுக் காட்டுறா
கம்பி போட்ட ஜன்னலிலே
கன்னத்தத் தேய்க்கிறா (2)

கண்கள மூடி மூடி
ஜாட கொஞ்சம் காட்டுறா
கறந்த பால நான் கொடுத்தா
கையத் தொட்டு வாங்குறா - என்
கையத் தொட்டு வாங்குறா

கை விரல் பட்டதிலே
பால் சொம்பு குலுங்குது
கைய இழுத்துக்கிட்டு
பாலோடு ஒதுங்குது

ஒன்னப் போல எண்ணி எண்ணி
என்கிட்ட மயங்குது (2)

ஒன் முகம் பாத்ததும் தான்
உண்மை எல்லாம் விளங்குது (ஒரு பக்கம்)


பார்க்கின்ற போதோ கேட்கின்ற போதோ ஒரு காதல் வயப்பட்ட பெண் நம்முன்னால் நிற்பது போல ஒரு பிரமை தோன்றுகிறதல்லவா? பாடலை இப்போது கேட்போம்.




Monday, April 11, 2016

கண்டறியாத கதைகள் - 4 - செம்பும் செம்பு வகைகளும்

செம்பு:





பித்தளை, சில்வர், ஈய உலோகங்களில் நீர் போன்ற திரவ பதார்த்தங்களை கொள்வதற்காக வீடும் வீடு சார்ந்த இடங்களுக்குள்ளும் தண்ணீர் கோல, குடிக்க, கழுவ பாவிக்கப்படும் ஒரு நாளாந்த சமையலறை புழங்கு பொருள் இதுவாகும். குசினிக்குள் தண்ணீர் வாளிக்குள் இப்பாத்திரம் சரிந்து மிதந்த படி இருக்கும். குடமெனில் அதன் வாய்ப்புறத்தில் ஒரு தலைப்பாகை போல நிமிர்ந்திருக்கும். குடத்தின் குழந்தை என்றும் இதைச் சொல்லலாம். குடத்தின் சாயலில் அளவில் சிறியது என்பதால்!

செம்பு என்ற பெயர் இக்கலத்துக்கு எவ்வாறு ஏற்பட்டது என்பதற்கு தெளிவான சான்றுகள் இல்லை. எனினும் செம்பு என்ற உலோகத்தால் ஆரம்பகாலத்தில் செய்யப்பட்டு புழங்கப்பட்ட பொருள் என்பதால் செம்பு என்ற பெயர் இக் கலத்துக்கு உரியதாக நிலைபெற்றிருக்கலாம். ’கம்மியர் செம்பு சொரி பானையில் மின்னி’ என்ற நற்றிணையின் 153 வது பாடல், ’கம்மியர்கள் செம்பினால் செய்கின்ற பானையைப் போல மிளிர்ந்து’ எனச் சொல்வதில் இருந்து இப்புழங்கு பொருள் பலநூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே புழக்கத்தில் இருந்து வந்ததையும் இதனைச் செய்கின்ற புலமையாளர்கள் இதனை ஒரு தொழிலாக செய்து வந்ததையும் அவர்கள் கம்மியர் என அழைக்கப்பட்டதையும் கூடவே உணரலாம்.

இதன் பயன்பாடு இன்றளவும் பிரபலமாக இருந்து வருக்கிறது. இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் மாத்திரமன்றி இலங்கையின் ஏனைய பகுதிகளில் வாழும் பெளத்த, இஸ்லாமிய, கிறீஸ்தவ சமயப் பண்பாட்டைப் பின்பற்றும் மக்களிடையேயும் இச் செம்புக் கலம் தனக்குரிய ஸ்தானத்தைப் பெற்றிருக்கிறது. தற்காலங்களில் நவீன இயந்திரசாதனங்களின் உதவி கொண்டு சற்றே வேறுபட்ட வடிவங்களிலும் இதன் தோற்றப்பாடு காணப்படுவதுண்டு.

அது அளவிலும் அழகிலும் தோற்றப்பாட்டிலும் அன்றாடப் பாவனைக்கு ஏற்றவாறான தனித்துவமான வடிவத்தில் இருப்பது அதன் சிறப்பு. வாயகன்று கை பிடிக்க லாவகமாய் கழுத்துப் புறம் ஒடுங்கி தண்ணீர் கொள்ள வாகாய் உடல் பகுதி அகன்று அடிப்புறம் வரும் போது ஒடுங்கி வைப்பதற்கு தோதாய் கீழ் புறம் தட்டையாக அது அமைந்திருக்கும்.

 வெளியிடங்களுக்குச் சென்று விட்டு தாம் குடியிருக்கும் வீடுகளுக்குச் செல்பவர்கள் கால்களைச் சுத்தமாகக் கழுவி விட்டு வீட்டுக்குள் செல்வது தமிழரின் மரபார்ந்த பழக்கமாகும். எப்போதும் வளவின் பிரதான வாசல் புறத்திற்கும் வீட்டு வாசலுக்கும் இடையில் வைக்கப்படுகின்ற தண்ணீர் வாளிக்குள் செம்பு கால்களைக் கழுவி வீட்டுக்குள் செல்பவர்களுக்காக தண்ணீர் வாளியோடு சேர்த்து வைக்கப்பட்டிருக்கும்.

இதனோடு இணைந்த வகையில் நளன் தமயந்தி கதையை கூறி, வருங்கால சந்ததியினரை வயதானவர்கள் கீழ்கண்ட கதையூடாக வழி நடத்தினர். அதாவது, சனீஸ்வரன் நளனைப் பீடிக்க இடமும் தருணமும் பார்த்துக் கொண்டிருந்ததாகவும் ஒரு முறை நளன் வெளியே சென்று விட்டு வீடு திரும்பி கால்களைக் கழுவும் போது கால் புறத்தின் பின் புறத்தைச் சரியாகக் கழுவவில்லை என்றும்;பீடிக்கக் காத்திருந்த சனீஸ்வரன் கழுவப்படாத பிரதேசத்தில் இருந்து நளனைப் பற்றிக் கொண்டதாகவும்; அதனால் கடுமையான காலங்களை நளன் எதிர்கொள்ள நேரிட்டதாகவும் ; அதனால் வெளியே சென்று விட்டு வருகின்ற ஒவ்வொரு பொழுதுகளிலும் கால்களைச் சரியாகக் கழுவும் படியும் பெற்றோர் அடுத்த சந்ததிக்கு அறிவுறுத்துவது உண்டு. இவ்வாறு பண்பாடு சார்ந்த வாழ்க்கைமுறை ஒன்று அடுத்த சந்ததிக்கு மூத்தோர் வழிநடத்தல் ஊடாக கதையின் வழியாகச் சொல்லிக் கொடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இது தவிர இன்னொரு ஆரோக்கியமான வழக்கமொன்று தமிழர் மத்தியில் உண்டு. அது காலையில் எழுந்தவுடன் ஒரு செம்பு நிறைய தண்ணீர் குடிக்கும் வழக்கமாகும். ஒரு செம்பு நிறையத் தண்ணீர் என்பது அவர்களது அளவீட்டின் ஒரு அம்சமாகவும் இருக்கிறது.  திருமகள் தமிழகராதி ஒரு செம்பின் நீர் கொண்ட அளவை 3 1/4( மூன்றேகால்) சேர் கொண்ட ஒரு முகத்தல் அளவு எனக் குறிப்பிடுகிறது. சிலர் இரவு படுக்கைக்குச் செல்லும் போதே ஒரு செம்பு நிறைய தண்ணீரை மொண்டு தம் தலைமாட்டுக்கு அருகில் வைத்துக் கொண்டு படுக்கைக்குச் செல்வது வழக்கம்.

காலை எழுந்தவுடன் பல் துலக்கு முன்னர் ஒரு செம்பு நிறையத் தண்ணீர் குடிப்பதால் உடலின் உள் அங்கங்கள் யாவும் சுத்தமடைவதோடு நரம்பு மண்டலங்கள் தூண்டப்பட்டு கழிவுகள் யாவும் வெளியகற்றப் படுகின்றன. பல உள்ளார்ந்த நோய்கள் இயற்கையான முறையிலே குணமடைகின்றன என்பது அவர்களது நம்பிக்கை. (இக் காலை நேர செம்பு நிறைந்த தண்ணீரை ‘உஷை பானம்’ என அழைத்தனர் என ஒரு குறிப்புச் சொல்கிறது. (உஷை என்ற பெண் தெய்வம் அதிகாலைக்குரிய தெய்வமாக வேதங்கள் போற்றுகின்றன). தமிழரின் பாரம்பரிய வைத்திய முறையான ஆயுள்வேத மருத்துவ முறையும் யோகாசனம் போன்ற பயிற்சி முறைகளும் கூட இத்தகைய முறையினை பரிந்துரைக்கின்றன.

தேரையர் என்ற முனி சிரேஷ்டர் அருளிச் செய்த “பதார்த்தகுண சிந்தாமணி” என்ற வைத்திய சாஸ்திர நூல் செம்புக் கலத்தின் குணவிஷேஷம் பற்றியும் காலை நேரம் விழித்தவுடன் சுத்த ஜலம் அருந்தலின் சிறப்புப் பற்றியும் சிறப்பாக எடுத்துரைக்கின்றது. அதாவது,

‘செம்புக் கலத்தில் உண்ண தேகா ரோக்கியமாம்
பம்பிரத்த தோடம் பறக்குங்கா – நம்புவியி
லண்ணியிடுங் காந்தி யணங்கே விழியொளியாம்
புண்ணியமு நண்னும் புகல்’

செம்புக் கலத்தில் உண்ண சரீர செளக்கியமும் தேஜசும் கண்ணுக்கு ஒளியும் கிடைப்பதோடு ரத்த பித்த ரோகங்கள் விலகும் என்கிறது அப்பாடல்.(பாடல் 1361)
அது போல விழித்தவுடன் சுத்த ஜலம் அருந்தலின் சிறப்பை 1310 வது பாடல் பின்வருமாறு எடுத்துரைக்கிறது.

”தூங்கி விழித்தவுடன் சுத்தோதக மருந்தி
லோங்கி நின்ற பித்தமொழிவதன்றித் – தேங்கு
மல மூத்திரந் தங்கா வாதியுத்தந்
தலமாத் திரமுலவுந தான”

அதாவது. ”நித்திரை செய்து விழித்தவுடன் சுத்தோதகமென்னும் நீராகாரம் அல்லது நல்ல சலம் இதுகளில் ஏதேனும் ஒன்றை பிரமானமாகப் பருகில் பைத்திய தோஷம் விலகும், அன்றியும் மலஜல பந்தங்களும் நீங்கும். வாத முதலிய மூன்று தோஷங்களும் தத்தம் நிலைகளில் சஞ்சரிக்கும்” எனச் சொல்கிறது.

இந்தக் காலை நேரப் பழக்க வழக்கங்கள் என்ற வகையில் சிலர் தண்ணீர் குடித்த பின் காலைக் கடன் கழிக்கச் செல்வதும் சிலர் கறுப்புத்தேநீர் குடித்த பின் செல்வதும் வேறு சிலர் சுருட்டுக் குடித்த பின் கழிவறைக்குச் செல்வதுமாகத் தம் உடலை புரிந்து வைத்திருக்கிறார்கள். சிலர் பத்திரிகையோடு போவதுமுண்டு. அவர்கள் தம் நாள் ஒன்றை அவரவருக்கு இலகுவான முறைகளில் தம் உள் உறுப்புக்களை விளங்கிக் கொண்ட வகைகளில் வகுத்துக் கொண்டிருப்பதையும் சொல்ல வேண்டும். தம் உள்ளார்ந்த உடல் உறுப்புகளைச் சுத்தம் செய்யும் முதல் கருமமாக இவ்வாறான வழக்கங்களை அவர்கள் கொண்டிருக்கிறார்கள்.

நிற்க, வீட்டுக்குள் வருகின்ற விருந்தாளிகள் தண்ணீர் கேட்கின்ற பொழுதுகளில் இவ் ஏதனத்தினுள் தண்ணீர் கொடுப்பது ஒரு மரியாதையான செய்முறை என்ற நம்பிக்கை தமிழர் மத்தியில் உண்டு. அத்தோடு குறிப்பாக இந்துக்கள் விரதகாலங்களில் சைவ போசனம் உண்ணும் போது, அதிலும்  வாழையிலையில் சோறு உண்ணும் போது இடது கைப்பக்கத்தில் தண்ணீர் செம்பு வைத்துக் கொள்வர்.

அநேகர் இதில் தண்ணீர் குடிக்கும் போது வாயிலே செம்பின் வாய் புறத்தை வைக்காது தலையை அன்னாந்து செம்பினை சற்றே மேலே உயர்த்தி தண்ணீரை பாத்திரத்தில் உதடுகள் முட்டாத படிக்கு நேரே வாய்க்குள்ளே ஊற்றுவர்.

நாட்டார் பாடல்களிலும் கிராமிய நடனங்களிலும் கூட செம்பு என்ற பாத்திரம் தன் இருப்பை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறது. செம்பு நடனம் என்பது பிரபலம் வாய்ந்த  கிராமிய நடனங்களில் ஒன்று. இந்திய குச்சுப்புடி நடனத்தின் சாயலில் தலையில் செம்பினை வைத்து அது விழாதவாறு இலாவகமாகப் பாடலுக்கேற்ப இளம் பெண்கள் நடனமாடுவது இதன் சிறப்பு. இந்தியாவில் கரகாட்டம் என்ற நடனவகையில் செம்பு பயன்படுத்தப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

செம்பு என்ற பாத்திரத்தின் பயன்பாடு வீட்டு விஷேஷங்களிலும் சுப,அசுப தின சைவ பாரம்பரிய நிகழ்வுகளின் பொழுதும் குறிப்பாக சிவாச்சாரியார்கள் வந்து வீடுகளில் செய்யும் கிரியைகளின் போதும் குறிப்பாகத் திருமண வைபவங்கள், துடக்குக் கழிவுகள், சுபதினக் கொண்டாட்டங்கள், அசுப தினங்களிலும் தீர்த்தம் (சுத்தமான / புனிதமான தண்ணீர் ) வைக்கும் ஒரு கலமாகவும் இது விளங்குகிறது.

தண்ணீரின் பயன் பாட்டையும் இயற்கையோடு இணைந்த வாழ்வு முறையினையும் தனித்துவமான தோற்றப்பாடுகளைக் கொண்ட உலோகத்தெரிவோடு கூடிய பாத்திர வகைகளையும் பயன் படுத்தி வந்த தமிழர் பண்பாட்டில் தவிர்க்க முடியாத படிக்கு இப்போது பிளாஸ்டிக் பொருட்கள் பாவனைக்கு வந்திருப்பதைக் காணலாம்.

கிணற்றில் இருந்து கொண்டு வந்து வாளி நிறைய தண்ணீரோடும் அதற்குள் மிதந்து கொண்டிருக்கும் செம்போடும் இருக்கும் வீட்டின் முன்புறங்களில் வருவோர் யாவரும் கால்களை முன்னும் பின்னுமாய் நன்றாகக் கழுவி வீட்டுக்குள் வருவதும்; வெய்யிலுக்குள் சென்றுவிட்டு வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்குச் தாகம் தீர செம்பு நிறையக் குளிர் நீர் கொடுப்பதும் பாவனையாளர்கள் பாத்திரத்தில் வாய் முட்டாத படிக்கு அன்னாந்து அத் தண்ணீரைக் குடிப்பதும்; பாத்திர வார்ப்பின் லட்சணமும் அதன் உலோகப் பெறுமதியும் இயற்கைக்கும் சுத்தத்திற்கும் செம்புக்கும் தமிழர் கொடுத்த இடத்தைச் சொல்லும்.

வெளி நாடுகளிலோ எனில் செம்பு என்ற பாத்திரமும் அது சார்ந்த வாழ்வியல் கோலங்களும் முற்றாக இல்லாது போன நிலையில் அன்றாடப் பாவனைக்கு பிளாஸ்டிக் சாதனங்களும் குளிர்சாதனப் பெட்டிகளுக்குள் நிறைந்திருக்கும் குளிர் பானங்களும் தண்ணீரின் இடத்தையும் செம்பின் தனித்துவத்தையும் இடம் மாற்றி வைத்திருக்கின்றன. வாழ்க்கை முறை ஒன்றினையும் கூடவே. இயற்கையோடு அவர்களுக்கு நேரடியாக எந்தப் பிணைப்பும் இல்லாது போய் விட்டது.

மண்ணின் ஒரு சிறு துணிக்கையேனும் படாத சப்பாத்துக் கால்களோடு வீட்டுக்கு வந்து கால் துடைப்பத்தில் சப்பாத்தைத் துடைத்து கம்பளத்தரையில் கால் பதித்து வியர்க்காத உடலுக்குக் குசினிக்குள் இருக்கும் குளிர் சாதனப்பெட்டி திறந்து குளிர் பானம் அருந்தும் மேலைத்தேய வாழ்வு முறையோடு இவ் இயற்கை சார்ந்த பணச் செலவற்றதும் எளிமையானதும் ஆரோக்கியமானதும் அழகுணர்வு சார்ந்ததுமான வாழ்வு முறை பயன்பாடற்றும் பொருத்தமற்றும் போய் விட்டது.

இச் செம்பின் பின்னால் விழுமியம் சார்ந்த ஆரோக்கிய வாழ்வு ஒன்று மறைந்து நிற்கிறது.

செம்பு இனம் / வகை சார்ந்தவை:
பூட்டுச் செம்பு:





 இறுக்கமாகப் பூட்டிப் பாவிக்கக் கூடியதாக இருந்ததால் பூட்டுச் செம்பெனவும் தூக்கும் கைப்பிடியைக் கொண்டு செம்பு வகையினைச் சார்ந்திருந்ததால் தூக்குச் செம்பெனவும் அழைக்கப் பட்டது.

இதனை பாரதத் தென்னகப் பண்பாட்டுக்குரியோர் கூஜா என அழைப்பர் என்று க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி குறிப்பிடுகிறது.

பித்தளையினால் ஆன செம்பு இனத்தைச் சார்ந்த இப்பாவனைப் பொருள் மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கிறது. செம்பு (அடிப்பகுதி), குவளை, மூடி என்பவையே அவையாகும். செம்பின் வாய் பகுதியோடு உள்ளார்ந்து இணைக்கத்தக்க விதமாக குடிக்கும் குவளையை உள்ளடக்கி அது வெளியே தெரியாத விதமாகவும் வெளியே திரவ பதார்த்தங்கள் சிந்தாத விதமாகவும்
7- 8 புரிகள் கொண்ட மூடி அமைந்திருப்பது இதன் சிறப்பம்சம் எனலாம்.

தற்போது பலருடய சமையலறைப் பறன்களில் (பறன் – பழைய பொருட்கள் கட்டி வைக்கும் இடம்) தூங்கிக் கொண்டிருக்கும் இப்பாவனை பொருள் பயணங்களும் வசதிகளும் தற்போதயைப் போல இலகுவற்றிருந்த காலங்களில் தம் நீண்ட வழிப்பயணத்துக்காக பானங்களை இதில் இட்டு நிரப்பி எடுத்துச் செல்ல பயன்பட்ட ஒரு சாதனமாகும்.

பானங்கள் ஒன்றோடு ஒன்று கலக்காத வகையிலும் அதே நேரம் வெளித்தெரியாத வகையிலும் தூக்கிச் செல்ல இலகுவான முறையிலும் கச்சிதமான அழகியல் சார்ந்த தனித்துவமான வடிவிலும் அமைந்த இவ் வகைச் செம்புகள் பழந் தமிழரின் வாழ்க்கைத் தரத்தையும் நுட்பத் திறனையும் ரசனை உணர்வையும் ஒருங்கே வெளிப்படுத்தி நிற்பன.


அதே நேரம் தீர்த்தச் செம்பு, பன்னீர் செம்பு போன்றனவும் சுப அசுப தினங்களின் போது இன்றளவும் வீடுகளில் புழக்கத்தில் உள்ள செம்பு வகை சார்ந்த பாவனைப் பொருட்களாகும்.
தீர்த்தச் செம்பு:





பன்னீர்ச் செம்பு:


உசாத்துணை:
• பதார்த்தகுண சிந்தாமணி மூலமும் – உரையும்; திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை,1932
• நற்றிணை மூலமும் உரையும்:

செம்பின் சாரம்:
• கலைநுட்பம், செய்திறன், வடிவமைப்பு, நாளாந்த வாழ்வில் அதன் இடம்
• உலோக பாவனை
• பண்பாட்டு வாழ்க்கைமுறை கதைகளூடாக அடுத்த சந்ததிக்குக் கடத்தப்படல்
• ஆரோக்கிய முறைமைகள் நாளாந்த வாழ்வில் கடைப்பிடிக்கப் பட்ட பாங்கு
• நாளாந்த வழக்குகள் மற்றும் நுண்கலைகளில் செம்பு.

அரும்பத விளக்கம்:
ஏதனம்: பாத்திரம், கலம்: பாத்திரம், கோல: அள்ள, புழக்கம்: பாவனை, தோதாய்: பொருத்தமாய், வாகாய்: இலாவகமாய் குசினி: சமையலறை,


பிற்குறிப்பு: 15.12.2017

செம்பு என்ற சொல்லுக்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு.
1.செம்பு உலோகம்
2.செம்பு என்ற பெயரோடு இருக்கும் ஒரு வகைப் பாத்திரம்.

மேலே விபரிக்கப் பட்டவையாவும் செம்பு என்ற பாத்திரத்தைப் பற்றியது. ஆனால் பதார்த்த குண சிந்தாமணி விபரிக்கின்ற பாடல் செம்பு என்ற உலோகத்தினால் செய்யப்பட்ட பாத்திரம் பற்றிய குறிப்பாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. சிட்னிக் கடைகளில் விற்பனைக்கு வந்திருக்கும் செம்பு என்ற உலோகத்தினால் ஆன பாத்திரங்கள் மற்றும் அண்மையில் தாயகம் சென்ற போது இணுவில் பகுதியில் குடியிருக்கும் எனதன்புக்குரிய ஸ்ரீ அக்கா வீட்டில் பாவனைக்கு வைத்திருந்த செம்பு உலோகத்தினாலான குடிநீர் கொள்கலன் போன்றன செம்பு உலோகத்தின் பாவனையையும் சிறப்பையும் குறிப்பாக பழந்தமிழரில் இருந்து இன்றுவரை அறிந்து வைத்திருக்கும் புழக்க இயல்புக்கு சான்றாகலாம். 


செம்புக் கலத்தில் தண்ணீர் திருகணி மீது அமர்ந்திருக்க; அதன் மேலே அன்னாந்து குடிக்கத் தக்க ஈழத்தமிழரின் கண்டுபிடிப்பான மூக்குப் பேணி அமர்ந்திருப்பதைப் படத்தில் காண்க.


கீழ் வரும் இவ் ஒளிப்படம் 17.10.2017 அன்று பழம் பொருட்கள் மீதும் அவற்றின் பாவனைகள் மீதும் அதீத ஈடுபாடு கொண்டிருக்கும், வாழும் மரபு என்ற இணையத்தளத்துக்குச் சொந்தக்காறியும்; யாழ் பல்கலைக்கழக நூலகராக விளங்குபவரும்; தன் வீடு நிறைய தன் பிள்ளைச் செல்வங்களாக இத்தகைய பொருட்களைச் சேர்த்து வைத்திருப்பவருமான  யாழ்ப்பாண பிரதேசத்தில் இருக்கும் இணுவில் என்ற இடத்தில் வசிப்பவருமான ஸ்ரீகாந்த லக்ஷ்மி என அழைக்கப் பெறும் ஸ்ரீ அக்கா வீட்டில் எடுத்தது. 

ஒளிப்படம்: யசோதா.பத்மநாதன்.

Thursday, April 7, 2016

கண்டறியாத கதைகள் - 3 - புலிப்பல் பதக்கம்

ஆண்களின் கழுத்தினை அலங்கரிக்கும் புலியினுடய பல்லினை பதக்கமாகக் கொண்டிருக்கும் அணிகலன் இதுவாகும்.

தமிழ் பண்பாட்டு மரபில் வீரமும் காதலும் விதந்து போற்றப்பட்டு வந்ததைத் தமிழ் இலக்கியவரலாறு எடுத்துரைக்கும்.போரில் வெற்றி கண்டு வந்த இளைஞர்களைப் பெண்கள் விரும்பி மணம் செய்து கொண்டார்கள்.

ஆண்களும் தம்மை வீர வழி வந்ததைக் காட்டும் ஒரு மரபாகவே புலிப்பல் பதித்த ஆபரணங்களை அணிய ஆரம்பித்தனர். ஆரம்ப காலங்களில் ஆண்கள் வீரக் கழல், வீரக்கண்டை, சதங்கை, அரையணி,அரை நாண், பவள வடம்,தொடி, கங்கணம்,வீரவளை, கடகம், மோதிரம்,கொலுசு, காப்பு, பதக்கம்,வகுவலயம், கழுத்தணி,வன்னசரம், முத்து வடம், கடுக்கண், குண்டலம் ஆகிய அணிகலன்களை அணிந்தனர் என அறிய முடிகிறது. (மேற்கோள்:தமிழ் நாட்டு அனிகலன்: சாத்தான் குளம்,அ. இராகவன்)














இலக்கிய வரலாற்றில் புலிப்பல் 

ஆரம்ப காலத்தில் கழுத்தில் அணியும் அணிகளை எல்லாம் தாலி எனவே அழைத்தனர்.அச்சுத்தாலி, முளைத் தாலி,புலிப்பல் தாலி,ஐம்படைத்தாலி என அவை பெயர் பெற்றிருந்தன. ( இவ் ஐம்படைத்தாலியில் சங்கு,சக்கரம், வில், வேல், வாள் ஆகியவற்றின் உருவங்கள் இருந்தன. அவை அன்றும் குழந்தைகளின் கழுத்தில் அணிவிக்கப்பட்டன. இன்று அவை பஞ்சாயுதமாக குழந்தைகளுக்கு அணிவிக்கப்படுவது நோக்கத்தக்கது.) 




அகநானூற்றின் 54வது பாடல்”பொன்னொடு புலிப்பல் கோத்த புலம்பி மணித்தாலி” எனக்குறிக்கும் வரியில் இருந்து  சிறார்கள் தம் கழுத்தைச் சுற்றி புலிப்பல் கோர்த்த  ஆபரண்த்தை அணிந்தது பற்றி அறியமுடிகிறது. 
பொன்னால் ஆக்கப் பட்ட இதில் புலிப்பல் கோர்க்கப்பட்டது .அதன் காரணத்தால் இது புலிப்பல் தாலி என அழைக்கப்பட்டது. 

குழந்தைகளின் கழுத்தில் புலிப்பல் கோர்க்கப்பட்ட ஆபரணத்தை அணிவித்தால் அது அவர்களைக் கண்ணூறினின்றும் காக்கும் என அவர்கள் நம்பியதைப் புறநானூற்றின் 374 வது பாடலின் 9வது வரி சொல்லி நிற்கிறது.”புலிப்பல் தாலி புன் தலைச் சிறார்” என வரும் வரி அதனை உறுதிப்படுத்துகிறது.(மேற்கோள்: செம்மொழித் தமிழ் இலக்கியம் உணர்த்தும் மக்களின் வாழ்க்கை முறைகள் பகுதி 2: முனைவர். சி. சேதுராமன்,இணைப்பேராசிரியர், தமிழ்துறை,மாமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை)

சிலப்பதிகாரத்தில் தெய்வ சக்தி கொண்ட சாலினி என்பவளை கொற்றவை போல அலங்காரம் செய்த போது எயினர் இன மக்கள் புலிப்பல் தாலி அணிவித்ததாக ஓரிடம் வருகிறது.அது கொற்றவையின் அணியில் ஒன்றெனச் சொல்லப்பட்டதால் புலிப்பல் தாலி ஒரு வீரத்தின் சின்னமெனக் கருதப்பட்டதாகக் கொள்ள இடமுண்டு. 

மேலும் சிலப்பதிக்காரம் “மறங்கொள் வரிப்புலி வாய் பிளந்து பெற்ற மாலை வெண்பல் தாலி  நிரை பூட்டி ..” (சிலப்பதிகாரம் 12,27, வரி 28) அதாவது அஞ்சாத வலிமையுடய புலியின் வாயைப் பிளந்து பெற்ற வெண்பற்களை ஒழுங்கான மாலையாகக் கோர்த்த புலிப்பல் தாலி  என வருவதில் இருந்து புலிப்பல் தாலியின் பின்னணியில் இருந்த வீரத்தை ஒருவாறு கண்டு தெளியலாம்.

திருத்தொண்டர் புராணம் ”இரும்புலி எயிற்றுத் தாலி குடையிடை மனவுகோத்து”  - எனச் சொல்வதில் இருந்து தான் கொன்ற புலியின் பல்லை எடுத்து தன் வீரத்தின் சின்னமாக ஆண் அதனைத் தன் கழுத்தில் மாலையாக அணிந்து கொண்டான் என்பதை அறிய முடிகிறது. அதனை அவர்கள் புலிப்பல் தாலி என அழைத்தார்கள்.

தன் வீரியத்தைத்; தன் ஆற்றலை; வீரபராக்கிரமத்தை; கன்னிப் பெண்ணுக்கு  நிரூபித்து பெண்ணெடுத்த மரபு வழி வந்த தமிழின் அழகு அது! அதன் எச்சமாக இன்று மிஞ்சி இருப்பது இந்தப் புலிப்பல் பதக்கம் ஒன்று தான்.

புலிப்பல் பதக்கம் அணிதல் இன்று வரைத் தொடர்கிறது. புலிப் பல்லிற்குத் தங்கத்தினால் பூண் போட்டு அழகுக்காகக் கற்களும் பதிக்கப்பட்டு நீண்ட சங்கிலியில் அதைத் தொங்க விட்டு அதனை இன்று வரை ஆண்கள் பயன் படுத்துகிறார்கள். ஆனாலும் அதன் மரபு வழியான வரலாற்றுப் பாரம்பரியத்தை இன்றய சந்ததியினர் குறிப்பாக வெளிநாடுகளில் பிறந்து வளரும் பிள்ளைகள் அறியாதவர்களாக வளருதல் வருந்தத் தக்கதன்றோ?

Monday, March 28, 2016

தொழிலுக்கு அப்பால்....


யார் பெத்த பிள்ளையோ? 

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இந்தச் சிறு பெண்குழந்தை தன் குடும்பத்தையே காவு கொடுத்து விட்டாள். அவளுக்கு அது தெரிந்திருக்கக் கூடுமோ என்னமோ? அவளுக்குமே தலையிலே காயம். வைத்திய சாலையில் தான் இருக்கிறாள். சுகமான பின் எங்கு போவாளோ?  அவள் வாழ்வு எப்படி எல்லாம் இனித் திசை மாறிப் போகுமோ? சிணுக்கமும் வலியில் துவளுவதும் மன வாட்டமுடனும் கிடக்கும் அவள் இந்த உயர் பட்டம் வகிக்கும் இந்த இராணுவ அதிகாரி வந்தாலன்றி யார் வந்தாலும் சமாதானம் ஆகுவதில்லையாம். சில வேளை அவர் தான் காப்பாற்றிக் கொண்டுவந்திருக்கக் கூடுமோ?  கடந்த நான்கு இரவுகளாக இந்த அதிகாரி அவள் கூடவே இருந்து அவளை அமைதி கொள்ளச் செய்கிறாராம்.

நெஞ்சினில் ஈரம்.......

பார்த்த போது மனதை நெகிழ வைத்தது.

அனுப்பி வைத்திருந்தவர்: பரா.சுந்தா. (நன்றி)

Friday, March 25, 2016

கண்டறியாத கதைகள் - 2 - சிரட்டை அகப்பை

தேங்காய் சிரட்டையும் தடியும் கொண்டு ஆக்கப் படும் சமையல் செய்வதற்குப் பயன் படும் கருவி சிரட்டை அகப்பை ஆகும்.இதனைக் காம்பகப்பை அல்லது தடியகப்பை என அழைப்பாரும் உளர்.

தேங்காயயைப் பயன் படுத்திய பின் சிரட்டையைச் செதுக்கி வாகாக இரண்டு துளைகள் செய்து கச்சிதமாக எது வித நீக்கலும் (இடைவெளியும்) இல்லாத வண்ணமாக பக்குவமாக அதனுள் நன்கு சீவிய தடியை உட் செலுத்தி இவ் அகப்பையைத் தயார் செய்வார்கள்.

இலங்கையின் தென் பகுதியில் வாழும் சிங்கள மக்கள் இவற்றைச் செவ்வனே செய்வதில் சிறப்பு வாய்ந்தவர்கள்,சிறு தேக்கரண்டி அளவுகளில் இருந்து மேசைக்கரண்டி, கறி எடுக்கும் கரண்டி, மற்றும் பெரும் அளவிலான உணவுப் பொருட்கள் செய்யும் அகப்பை வரை அழகும் நுட்பமும் செய்திறனும் அழகுணர்வும் பொருந்த சிரட்டைகளில் அவர்களால் செய்யப் படும் அகப்பைகள் பல உள்ளூர் மக்களாலும் வெளி நாட்டு உல்லாசப் பயணிகளாலும் விரும்பி வாங்கிச் செல்லப் படுபவை.


கிழக்கு, தெற்கு பகுதிகளில் தென்னை மரம் அதிகம் நிற்பதாலும் அவற்றின் பாவனைகளும் அவற்றினால் செய்யப்படும் பொருட்கள் அதிகளவில் வரவேற்பைப் பெற மற்றுமொரு காரணமெனலாம்.

பொதுவாகப் படத்தில் காட்டப் பட்டுள்ள அகப்பைகள் பரிமாறப்படுவதற்கன்றி சமைப்பதற்கே பயன் பட்டு வந்தன: வருகின்றன. மேலும் வழுவழுப்பாக்கப் பட்டு கரிசனையோடும் அழகுணர்வோடும் தயாரிக்கப்பட்ட சிரட்டையிலான அகப்பைகள் விருந்தினரை உபசரிக்கும் உணவுக் கிண்ணங்களை அலங்கரிக்கவும் உணவினைப் பரிமாறவும் பயன் பட்டன.




இவையும் செலவதிகம் இல்லாத இயற்கையாகக் கிடைக்கும் மூலவளங்களைப் பயன் படுத்தி நடைபெற்று வந்த குடிசைக் கைத்தொழில் முயற்சியாகும்.இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் மாத்திரமன்றி கீழைத் தேய நாடுகளிலும் ஆசிய ஆபிரிக்க நாடுகளிலும்  இவ்வகைக் கரண்டிகள், அகப்பைகள் பல்வேறு விதமான அளவுகள் வண்ணங்கள்,வடிவங்களில் கற்பனை அழகு நயம் பொருந்த விற்கப் படுகின்றன.

தற்காலங்களில் இவற்றின் இடங்களை மரங்களினாலும் உலோகத்தினாலும் பிளாஸ்டிக்குகளினாலும் ஏனைய மூலக்கூறுகளினாலும் ஆக்கப் பட்ட செலவதிகமற்ற இலகுவாகப் பயன்படுத்தப்படக் கூடிய நவீன மோஸ்தரில் தயாரிக்கப்பட்ட வெவ்வேறு தேவைகளுக்கும் பாவிக்கக் கூடிய பாவனையோடு கூடிய அகப்பைகள், கரண்டிகள் வருவதனால் இவற்றின் பயன்பாடும் அருகி வருகிறது. 

அகப்பைகளின் பிள்ளைகள் எனச் சொல்லக் கூடியனவாக விளங்கியவை கரண்டிகள். அவை அளவில் சிறியனவாக இருப்பவை. வெளி நாடுகளில் சோறு கறி சாப்பிடவும் சப்பாத்தி கிழங்குக் கறி சாப்பிடவும் கூட கரண்டிகளும் கத்திகளும் முள்ளுக்கரண்டிகளும் பாவிக்கப்படுகின்ற இன்றய காலங்களில் வாழுகிற பிள்ளைகளுக்கு கரண்டி என்று ஒன்று பாவனைக்கு வந்திராத ஒரு காலத்தை அறிமுகப்படுத்துவதும் இந்த இடத்தில் பொருத்தமாக இருக்கும் போலத் தோன்றுகிறது. 

அது சமையலறையில் குடும்பமாக எல்லோரும் பலகையில் உட்கார்ந்து தாயார் அகப்பையினால் எல்லோருக்கும் பரிமாற கைகளினால் குழைத்து சாப்பிட்ட காலம். அங்கு கரண்டி என்று ஒன்று பாவனைக்கு வேண்டி இருக்கவில்லை.

விறகடுப்பும்; களி மண்ணினால் ஆக்கப் பட்ட சட்டியும்; தேங்காய் சிரட்டையில் இணக்கிய அகப்பையும்; வாழையிலையில் வழங்கப்பட்ட சாப்பாடும்; கைகளினால் குழைத்து சாப்பிட்ட சுவையியலும்; இயற்கையோடு தமிழ் பண்பாடு எப்படி இணைந்திருந்தது என்பதைச் சொல்ல போதுமான எளிய உதாரணமாகும். 

கூழ் காச்சி அயலாரையும் விருந்துக்கழைத்து பிலா இலை கோலி சுடச்சுட சுவை பட கூடி இருந்து குடித்த கதை யாழ்ப்பாணத்தின் ஒரு கால கட்ட வாழ்வியல். அதனை சுமார் 1965, 1966ம் ஆண்டளவில் மகாகவி என்ற கவிஞர் இப்படிப் பாடுகிறார்.
‘ கூழ் பானையின் முன் கூடிக்
   குந்தி இருந்து, இலை கோலி,
                       கரம் தெரிந்து ஊற்றும் அவ்விருந்து...’ 
இதில் கரண்டிக்குப் பதிலாக  பலா இலை பாவிக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.




படங்கள்: யசோதா.

இடம்: இலங்கை மக்களுக்கான நாளாந்தப் பாவனைப் பொருட்கள் விற்கும் கடை
Seven hills N.S.W.2146.





Thursday, January 28, 2016

கண்டறியாத கதைகள் - 1 - திருகணி

என் தோழி நாட்டியக் கலாநிதி. கார்த்திகா அவர்களோடு ஓர் உரையாடலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஒரு நாள் தன் கணவர் விஞ்ஞான சஞ்சிகை ஒன்றை கொழும்பில் இருந்து வெளியிட்டு வந்தார் என்றும், அந் நாளில் எல்லாம் உலக விடயங்கள் பற்றிக் கதைக்க எந் நாளும் தம் வீட்டில் அறிஞர் பெருமக்கள் கூடி இருப்பர் என்றும், அவ்வாறு ஆரம்பித்த சம்பாசனையில் உதித்து வெளியிட தொடங்கியது தான் அந்த விஞ்ஞான சஞ்சிகை என்றும்; அதன் கடசிப்பக்கத்தில் தன் கணவர் “ கண்டறியாத கதை” என்று ஒரு பக்க வடிவில் சிறிய விஞ்ஞான தொழில் நுட்பம் ஒன்று எவ்வாறு இயங்குகிறது என்று ( ஒரு ரோச் லட் எப்படி ஒளியை உமிழ்கிறது என்பது மாதிரி) எழுதி வந்தார் என்று குறிப்பிட்டார்.

“கண்டறியாத கதை” என்பது ஒரு அழகான சொற்பதமாக எனக்குத் தோன்றியது. ஈழத்துப் பேச்சு வழக்கில் இச் சொற்பதத்தை ஒரு அபிப்பிராயத்தை மறுத்துப் பேச பயன் படுத்துவார்கள்.’கண்டறியாத கதையெல்லே கதைக்கிறியள்’ என்று சொன்னால் ‘நீங்கள் சொல்வதில் ஒரு அர்த்தமும் இல்லை’ என்று அர்த்தமாகும்.

அதனை இலங்கையைச் சார்ந்த இஸ்லாமியத் தமிழர்கள் தம் பேச்சு வழக்கில் இன்னும் அழகாக ‘இத்துப் போன கதையில்லியா கதைக்கிறீங்க நீங்க’ என்று சொல்லுவார்கள். பிரயோசனமில்லாத கதை என்பது அதன் பொருளாகும்.

ஆனால் இங்கு அது அதன் நேரடி அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. அதாவது நாங்கள் அறிந்த அடுத்த சந்ததி அறியாத கதைகள் என்று வைத்துக் ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்ளலாம்.

புலம்பெயர்ந்த பிறகும் தொழில்நுட்பம் டிஜிட்டலுக்கு மாறிய பின்பும் பண்பாட்டில் நிகழ்ந்த மாற்றங்கள் ’உலகப்பண்பாடு’ ஒன்றை கட்டமைத்துக் கொண்டுள்ளன.

பல விடயங்கள் வழக்கொழிந்து போயுள்ளன. இங்கு பிறந்த பிள்ளைகளுக்கு அது பற்றிய எந்த தகவலும் வாழ்வியலும் தெரியாமலே இருக்கிறது. தெரியாமல் போய் விடக்கூடாது என்பது என் ஆவல்.அது அவர்களது பக்க வேர்.அதனால், இன்றய சந்ததிக்கு அதனை அறியப்படுத்துவதும் ஆவணப்படுத்துவதும் இரு பரம்பரையிலும் காலூன்றி இருக்கும் நமது கடமையாக இருக்கின்றன.

சில வருடங்களுக்கு முன்னர் ஒருவித உத்வேகத்தோடு அவற்றைப் பட்டியலிடவும் பகிர்ந்து கொள்ளவும் தொடங்கி பாதியில் அது நின்றுபோய் விட்டது.

இன்று ஏற்கனவே சேகரித்து வைத்த அதன் சில விடயங்களை படிப்படியாக வெளியிடலாம் என்று தோன்றியது.

அதன் முதல் பதிவே இந்தத் திருகணை.
..................................................

சட்டி, பானை, குடம் போன்ற வளைவான அடிப்புறங்களைக் கொண்ட பாத்திரங்கள் அசையாமல் இருக்கும் பொருட்டும் விழாதிருக்கும் பொருட்டும்  வட்ட வடிவில் திரணையாக அல்லது உருளையாக இணக்கப்பட்ட வடிவத்தை திருகணி என்பர்.

இதன் முக்கிய பயன் சூட்டினைப் பொறுத்தலும் பாத்திரத்தை விழாது தாங்குதலும் ஆகும்.

பாரமான பொருட்களைத் தலையில் சுமந்து செல்வோரும் இதனை ஒத்த பொருளொன்றை தலைக்கு வைத்து அதன் மேல் சுமையை வைத்து சுமந்து செல்வது வழக்கு. அதனைச் சும்மாடு என அழைப்பது இந்திய மரபு.ஆயினும் அது துணியை ஒத்த பொருளினால் மென்மையானதாக இணக்கப் பட்டிருக்கும்.

திருகணை அல்லது திருகணி என பேச்சு வழக்கில் வழங்கி வரும் இச் சொல் பொருளை அணைத்து ஆதரவு கொடுத்தவாறிருப்பதால்  திருகணை அல்லது திருகணி எனப் பெயர் பெற்றிருக்கலாம். அடிப்புறம் வளவாக இருக்கின்ற பாத்திரத்தை எவ்வாறு சரித்து வைத்தாலும் அது அப்பாத்திரத்தைத் தாங்கி விழாது வைத்திருக்கும் தன்மை அதன் சிறப்பம்சமாகும்.






குறிப்பாக 20ம் நூற்றாண்டின் கீழைத் தேய நாடுகளின் சமையல் அறைகளில் இத்தகைய திருகணிகள் அவர்களின் நாளாந்த சமையல் வேலைகளில் சூடான பாத்திரங்களை இறக்கி வைப்பதற்கும் உறியில் பானைகளை வைப்பதற்கும் தோதாகப் பயன் பட்டன. 

இந்து சமய மரபில் நேத்திக் கடன் கழிக்கும் பொருட்டு கற்பூரச் சட்டி தலையில் ஏந்தி வருவோர் தீச் சூட்டினைத் தாங்கும் பொருட்டும் சட்டி தலையில் விழாதிருக்கும் பொருட்டும் திருகணை வடிவிலான மென்மையான துணியினால் இணக்கப்பட்ட திருகணைகளை பாவித்தலை காணலாம். இப்போதும் கிராமப் புறங்களில் இவற்றின் பாவனை அளவில் சிறிதாகவேனும் இருந்தவாறே இருக்கின்றது.



இதன் பயன் பாட்டினை கலைவடிவத்துக்கும் எடுத்துச் சென்றது இந்திய அழகியல்.கரகாட்டம் என அழைக்கப்படும் இந்திய மரபு வழி ஆட்டமான கரகாட்ட கூத்து மரபில் சுமார் ஒன்றிலிருந்து 3,5,7,...என பானைகளை ஒரு திருகணையின் மேலே  கூத்தினை ஆடிய படியே ஒன்றொன்றாகப் பானைகளை எடுத்து ஒன்றின் மேல் ஒன்றாக அவற்றை அதன் சமநிலைகெடாத வண்ணம் தலைமேல் வைத்து ஆடும் கரகாட்டம் நவீன யுக இளைஞர் யுவதிகளாலும் வியந்து பார்க்கப்படுகிறது. திருகணையின் பயன்பாட்டை  கலை வடிவத்துக்குள் கொண்டு வந்ததில் இவ் ஆட்டம் இந்திய எளிய அழகியல் மரபில் ஓர் பண்பாட்டுப் புன்னகை!

கடந்த வருடம் சிட்னிமாநகரில் பரமற்ரா நகரில் இடம் பெற்ற பராமசாலா என்ற 3 நாட்கள் நடைபெற்ற தீபாவளிக் கொண்டாட்டத்தை இந்திய சுற்றுலாத் துறையும் அவுஸ்திரேலிய அரசாங்கமும் உள்ளூர் வரத்தக நிறுவனங்களோடு இணைந்து நடாத்தி இருந்தது. அதற்காக வரவளைக்கப்பட்ட கிராமிய அரங்கியல் ஆட்டக் கலைஞர்களில் கரகாட்டக் கலைஞர்களும் அடங்கி இருந்தனர். அங்கு போகக் கிடைத்த சந்தர்ப்பம் ஒன்றில் முதன் முதலாக எனக்கும் கரகாட்டம் பார்க்கக் கிட்டியது. 25.10.15 அன்று பார்க்கக் கிடைத்த போது எடுத்த படம் கீழே வருவது.


( தலைக்கும் பானக்கும் இடையில் திருகணி / திருகணை பாவிக்கப்படிருப்பதைக் காண்க)


திருகணைகள் அவ் அவ் இடங்களில் கிடைக்கும் மூலப் பொருட்களை வைத்து  ஆக்கப் படுகின்றது. இலங்கையின் வட பகுதி பனை மரத்துக்குப் பெயர் போன பிரதேசமாக விளங்கியதால் அங்கு திருகணைகள் பனைப் பொருட்களைக் கொண்டு ஆக்கப் பட்டன. அடவியன் என அழைக்கப்படும் பனை நாரினால் வட்டமாய் அவை இணக்கப்பட்டு பனை ஈர்க்கும் மேலும் கொஞ்ச அடவியனும் சேர்த்துச் பின்னிச் சுற்றி இறுகக் கட்டி அவை அவிழாத வண்ணமாக முடிச்சிட்டு பாவித்தார்கள். 

இவை சுமார் 50, 60 வருடங்களுக்கு முன்னர் குடிசைக் கைத்தொழிலாக மக்கள் தம் வீடுகளில் இவற்றைச் செய்து கிழைமைச் சந்தைகளிலும் கடைகளிலும்  விற்று வருமானத்தை பெற்று வந்தனர்.

இலங்கயின் தெற்கு கிழக்கு கரையோரங்களிலோ எனில் தென்னை மரங்கள் அதிகம் காணப்பட்டதால் மக்கள் தும்பினால் செய்து கயிறு திரித்து கயிறினால் அத் திரளையினை இறுகச் சுற்றிக் கட்டி அவற்றைத் தம் நாளாந்த பாவனைக்கு உபயோகித்து  வந்தார்கள்.

சமையல் அறையில் பயன்படுத்தப்படும் இத் திருகணை இந்தியப்பண்பாட்டில் வேறு பெயர் கொண்டு வழங்கப்படுவதும் குறிப்பிடத் தக்கது. இதனை quickiwiki.com கீழ்கண்டவாறு சொல்கிறது. அதனை அவர்கள் பரணை அல்லது பிரிமனை என அழைக்கிறார்கள்.

”பரணை அல்லது பிரிமணை என்பது பெரிய பாத்திரங்கள் நிலைகுலையாமலும், வைக்கப்படும் இடம் பாதிக்கப்படாமலும் இருக்கும் வண்ணம் அடியில் வைக்கப் பயன்படும். பொதுவாக வட்ட வடிவலான தாங்கி ஆகும். தமிழ்நாட்டில் இதைப் பொதுவாக வாழைநாரில் அல்லது மூங்கில் சீவலில் இருந்தும் செய்வார்கள்”. அவ்வாறு செய்யப்பட்ட திருகணை ஒன்றையும் அவர்கள் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். அந்தப்படம் நன்றியுடன் அவர்களிடமிருந்து இங்கும் பிரசுரமாகிறது.




களிமண்ணினால் செய்யப்பட்ட சட்டி பானைகளும் விறகு வைத்து தீமூட்டி சமையல் செய்யும் வழக்கமுமிருந்த  அக் காலங்களில் கிடைத்த இயற்கை மூலக் கூறுகளில் இருந்து செய்யப் பட்ட திருகணைகளும்  மக்கள் வாழ்வில் முக்கிய இடம் பெற்றிருந்தன. 

இன்றய உலகமயமாதல் தொழில் நுட்ப முன்னேற்றங்கள்  போன்ற மாற்றங்கள் சமையலறையிலும் தன் புரட்சியைக் கொண்டுவந்து சேர்த்த காரணத்தால் கரியை வெளித்தள்ளாத அடுப்புகளும் தட்டையான இலகுவான சூட்டை வெளிவிடாத பாத்திரங்களும் இன்ன பிற வசதிகளும் வந்து விட்ட காரணத்தால் குடிசைக் கைத்தொழிலாக முளைவிட்டிருந்த இத் திருகணிகளும் முறையான வரவேற்பின்மையால் மிக மந்த கதியிலேயே பாவனையில் இருக்கின்றன.

அந்த இடத்தை தற்போது சில்வர் தாங்கிகள், ரப்பர் விரிப்புகள், மூங்கிலால் மற்றும் ஈர்க்கிலால் செய்யப் பட்ட சிறு விரிப்புகள் என்பன பெற்றுக் கொண்டன. இவற்றின் இலகுப் பாவனை, நீண்ட உழைப்பு, மலிவான விலை, அழகு,வண்ணம், கவர்ச்சியான வடிவம், நாகரிகம்போன்ற காரணங்கள் மக்கள் இவற்றை நோக்கி ஈர்க்கப் பட பிரதான காரணியாக விளங்குகிறது.


படங்கள்: யசோதா: 30.10.2012

இடம்: இலங்கை மக்களின் நாளாந்த பாவனைப் பொருட்கள் விற்கும் கடை, 
Seven hills, N.S.W. 2146.

(தெரிந்தால் சொல்லுங்கள்: 
சில நாட்கள் நான் இங்கு வரவில்லை. இப்போது வந்து பார்த்தால் சுமார் 5 பேர் தம் விருப்பப் பக்கத்தில் இருந்து துண்டைக்காணோம் துணியைக் காணோம் என்று ஓடி விட்டார்கள். ஒண்ணுமே புரியல்ல உலகத்தில:)