Monday, August 6, 2012

முகிழ்ந்து மணம்பரப்பிய பெண்ணியச் சிந்தனைகள்: இலக்கிய சந்திப்பு - 5 இனை முன்வைத்து..........!





            மனைவி – என் மனைவி

மனமெங்கும் வியாபித்திருப்பதால்
மனைவியோ? – வாழ்வு முழுக்க
துணையாய் வருவதனால் துணைவியோ?

மனதுக்குள் எழுந்ததொரு
பட்டிமன்றம் – ஒவ்வொருவர்
மனதையும் படம் பிடிக்கவே
சோதரியினிந்த வட்டமன்றம்!

இல்லத்து அரசி – அவளென்
இதயத்துள் உறை அரசி! – அவளை
சொல்லத்தான் நினைத்தேன்
மூளையை எழுது கோலால் உரசி!

அவள்,
இறைவன் தந்த வரம்
இனிய வாழ்வின் உரம்!
இயைந்தே பற்றினேன் கரம்
இமயமாய் உயர்ந்ததவள் குணத் திறம்!

கண்ணகியை, மாதவியை
கன்னித் தமிழீந்த சரஸ்வதியை
எண்ணிப் பார்த்தேன்
என்னிதயத் தராசோ இறங்கி நின்றது!
கண்ணிலும் கருத்திலும்
கரைந்தே இதயத்துள் நிறைந்தவளை
எண்ணிப் பார்த்தேன்
இவர் தம் இடமோ உயர்ந்தது!

காதலனாய் கணவனாய்
ஆனதினால் அயல் வீட்டு
மருமகனாய் மைத்துணனாய்
மாறியதென் மாயமென்ன?

மனைவியெனும் மைதிலியின்
மனமொன்றி கரம் பற்றிய
மாத்திரமே சாத்திரம்
மாறுமோ இந்தக் கதா பாத்திரம்?

பார்வதியோ ஈசனின்
இடப்பக்கம் – இந்த
பாமர நேசனுக்கோ
இதயத்துள் முழுப்பக்கம்       
இதயத்தை
எப்பக்கம் பகுத்தாலும்
அவள் முகம்!
இடப்பக்கமும் வலப்பக்கமும்
இதே திருமுகம்!

உணைர்ச்சிக்காக உரைக்கவில்லை வாழ்வை
உணர்ந்தே உரைத்த உண்மை!
புணர்ச்சிக்கும் புலன் பெறும் – பொய்யான
மகிழ்ச்சிக்கும் அல்லாது எனது
மகிழ்ச்சிக்காக வாய்த்த பிறவி – என்
மனமெங்கும் நிறைந்தாள் பரவி!
புகழ்ச்சி அவளுக்குத் தேவையில்லை – இந்த
புலவனின் வாழ்வுக்கு அவளே எல்லை!

மாணவியாய் வந்து
ஆசானாகிப் போனாள்!
தாரமாய் வந்து
தாயாகிப் போனாள்!
ஆதாரமாய் நின்று
அன்புத் திருவுருவானாள்!
சேதாரமாகாமல் என்வாழ்வு
செழிப்புறும் நல்லுரமானாள்!

என் மனைவி  என் வாழ்வின்,

வளமைக்கு கிட்டிய தூண்டுகோல்!
வயோதிபத்திற்குக் கிட்டிய ஊன்றுகோல்!
இளமைக்குக் கிட்டிய கடிவாளம்!
இனிமைக்குக் கிட்டிய பூபாளம்!

அவள்,  ஆலம் விழுது – ஆதலால்
ஆகவில்லை என் வாழ்வு பழுது!
அனுதினமும் மனதால் தொழுது
ஆனந்தமாய் செல்கிறதென் பொழுது!

’மெல்லினம்’ சஞ்சிகையின் உதவியாசிரியரும் கவிஞருமான குமார செல்வம்: 29.07.2012 அன்று வாசித்தளித்த இந்தக் கவிதையோடு ஆரம்பித்தது நம்முடய 5 வது இலக்கிய சந்திப்பு.

கடந்த 21ம் திகதி கோலாகலமாக நடந்தேறிய கம்பன் விழாவின் இயல் அரங்குக்கு குமார செல்வம் தன் மனைவி குழந்தைகளோடு வந்திருந்த போது அவர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்திருந்தார்.

எப்போதும் இளம் குடும்பஸ்தர்கள் ஒரு நிகழ்ச்சிக்குத் தனியாக வருகை தரும் போது அவர்களுடய குடும்ப பாரத்தை வீட்டில் ஒருவர் சுமந்து நிற்கிறார். அவர்களுடய ஒத்தாசை, புரிந்துணர்வு, விட்டுக் கொடுப்பு, நற்குணம் இல்லாமல் இவை சாத்தியப்படாது. ஆனால் அவை எப்போதும் இலக்கிய அந்தஸ்துப் பெறாத தியாகங்களாகவே இருக்கின்றன. அதிகம் அவை பாடுபொருள் ஆனதில்லை என்ற மனக்குறை எனக்கெப்போதும் இருக்கிறது. அதன் காரணமாக அன்றய தினம் நம்முடய இலக்கியச் சந்திப்புக்கு வரும் போது மனைவி பற்றி ஒரு கவிதை எழுதி வாருங்கள் என்று சொன்னது தான் இந்தக் கவிதைக்கான பின்னணி.

நம் நிகழ்ச்சி திட்டமிட்டபடி 6.00 மணிக்கு நடைபெற இருந்ததில் சற்றே தடங்கல். நாம் பதிவு செய்திருந்த அதே நேரத்துக்கு வேறொரு நிறுவனத்தினரும் அதே நேரத்தைப் பதிவு செய்திருந்ததே அதற்குக் காரணம். அதனால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நாங்கள் வெளியே காத்திருக்க நேர்ந்தது. பலவித வேலைகளுக்கு மத்தியிலும் அவர்கள் நிகழ்ச்சிக்காகக் குளிருக்குள் காத்திருந்தார்கள். 

மனித கவனயீனங்கள். போதாததற்குத் தாமதமாக உட்சென்ற போது தான் அறையின் இரகசியக் குறியீட்டு இலக்கம் கொண்ட தாளை நான் கொண்டு செல்ல மறந்தது நினைவுக்கு வர அதனால் சுமார் 10, 15 நிமிடங்கள் மேலும் வீணாயிற்று. இது ஒரு விதமான திருட்டு மாதிரி! நேரத்திருட்டு. ’ஏதோ ஒன்று’ இலகுவாக நிச்சயத்து விடுகிறது சிலவற்றை!

நிகழ்ச்சி 6.30 அளவில் தொடங்கியது.

அறைக்குள் சென்ற போது குளிரில் விறைத்துப் போயிருந்த எல்லோருக்கும் ’நீங்கள் தொடங்குங்கோ’ என்று சொல்லி எல்லோருக்கும் மிகச் சுவையான தேனீரை; கோப்பியை அவரவர் விருப்பம் தெரிந்து தயாரித்துத் தந்த படியும் செல்வத்தின் கவிதையைக் கேட்ட படியும் வந்தமர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் தமிழ்முரசு அவுஸ்திரேலியா மின்னிதழ் ஆசிரியர், நாடக இயக்குனர், கவிஞர்,வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் என பல கலைமுகங்கள் கொண்ட பாஸ்கரன்.

அந்தப் புரிந்துணர்வும் உதவியும் ஒத்தாசையும் சுவை மிகுந்த தேனீரும் குளிர் மிகுந்த அந்தப் பொழுதை இதமான ஒரு பொழுதாக மாற்றியதில் பேருதவி புரிந்ததைச் சொல்லாமல் அப்பால் நகரவியலாது.

இன்றய ஆரம்பம் விரும்பியோ விரும்பாமலோ பெண் என்ற பாத்திரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் நிகழ்ச்சியாய் அமைந்து போனது நாம் திட்டமிட்டுச் செய்த ஒன்றல்ல. சுருக்கமாகச் சொல்வதானால் முகிழ்ந்து மணம் பரப்பிய பெண்ணிய சிந்தனைகளின் மலர்தோட்டமாக இந்த மணித்துளிகள் அமைந்திருந்தது. அது தனாக அமைந்து விட்ட ஒரு சிறப்பு. ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்ளாமலே பெண்ணைப் பற்றியதான விடயங்களை எடுத்து வந்திருந்தார்கள்.

வழமை போல சிந்தனையைக் கிளறி விடும் வீரியமான கேள்வி  ஒன்றை செல்வத்தின் கவிதையைக் கேட்டதன் பின்னணியில் ஒரு துருப்புச் சீட்டாக பாஸ்கரன் முன் வைத்தார். பொதுவான ஆண்களின் மரபு சார்ந்த சிந்தனைப் போக்கை கேள்விக்குட்படுத்துவதாக அது இருந்தது.
அவர் முன் வைத்த கேள்வி ஆண்கள் ஏன் எப்போதும் தனக்கெப்படி பெண் உறுதுணையானவளாக இருக்கிறாள்? எப்படி எல்லாம் என்னைக் கவனித்துக் கொள்கிறாள்? என்று பாடுகிறார்களே ஒழிய அவளுடய பாரங்களையும் பாடுகளையும் தான் எப்படி சுமந்து கொள்கிறான்? எவ்வாறெல்லாம் அவளின் உயர்வுக்காகத் தான் பாடுபடுகிறான் என்று பாடுவதில்லை – எவ்வாறு அவள் உணர்வுகளைப் புரிந்து வைத்திருக்கிறான் என்று பாடுவதில்லை என்ற கேள்வியை முன் வைக்க ‘பெண் உலகினுள்’ இலக்கிய சந்திப்பு இலகுவாக உள் நுழைந்தது.

இது ஒரு மிகப்பெரும் விவாதத்துக்குரிய களமாகும். இந்தப் போராட்டம், கேள்வி குறித்த சிந்தனைகள் மரபின் வழிகளைக் வீரியத்தோடு எதிர்த்து நிற்கும் கேள்வியாகும். ஆண்களுடய சிந்தனைப் புலத்தை மாற்றங்களை நோக்கியதான ஒரு சமான்யனின் மனிதம் சார்ந்த கேள்வி. பாரதியும் பெரியாரும் நினைவில் வந்து போயினர்.

இந்தக் கேள்வி உடனடியாக எனக்கு என் தம்பியும் இலக்கிய ஆர்வலரும் சிங்கை நகரில் பொறியியலாளராக இருந்தவரும் தற்போது இங்கு வசிப்பவருமான ஜே.கே. சொன்ன ஒரு சம்பவத்தை நினைவு படுத்திச் சென்றது.அவர், பேராதனை பல்கலைக் கழகத்தில் இருந்து பட்டதாரியாக வெளியேறிய யாழ்ப்பானத்து மரபு வழி வளர்க்கப் பட்ட இளைஞன். முதன் முதலாக தன் மேலதிகாரியான சிங்கை நகர் பெண்அதிகாரியோடு  வேலை ஒன்றை அவசரமாக முடிக்க வேண்டி இருந்ததன் நிமித்தம் முதன் முதலாக அவர்களுடய வீட்டுக்குச் சென்றிருந்தாராம். தாம் போன போது அவ் இளம் பெண்னும் தானுமே வீட்டில் இருந்ததாகவும் வேலை செய்து கொண்டிருந்த போது மிக மிக உயர் பதவி வகித்துக் கொண்டிருந்த அவள் கணவன் வீட்டுக்கு வந்ததாகவும் சிறு புன்னகையோடு வரவேற்புக் கூறி குளித்து உடைமாற்றி மூவருக்குமாக தேனீர் போட்டுக் கொடுத்ததோடு அல்லாமல் அவர்களுக்கு இடையூறு கொடுக்காமல் தன்னையும் நின்று தான் சமைக்கும் உணவை ருசிபார்த்துச் செல்லச் சொல்லி சமையலும் செய்ய ஆரம்பித்தது தன் சிந்தனைக்குக் கிடைத்த எழ முடியாத பெரும் அடி.! என் மரபு வழிச் சிந்தனைக்குக் கிடைத்த அந்த அடி என் சிந்தனை வளர்ச்சியின் பாரிய திருப்பம்!! என்று சொன்னது நினைவுக்கு வந்து போனது. 


மிக இயல்பாக நடக்கும் ஒரு சிறு சம்பவம் சிந்திக்கக் கூடிய ஒருவரின் வாழ்வில் மிகப் பெரும் மாற்றங்களை மிக அநாயாசமாக ஏற்படுத்தி விட்டுச் சென்று விடுகிறது இல்லையா?


மேலும் அவர், நாங்கள் சொல்வதை விட உங்களைப் போன்ற பெண்கள் தான் இவை பற்றி நிறையப் பேச வேண்டும் என்று கூறி, ‘A Thousand Splendid Suns’ என்ற KHALED HOSSEINE எழுதிய நாவலையும் எனக்குப் பரிசளித்துப் போயிருந்தார். ஆப்கானிஸ்தான் பெண்ணின் பாடுகளைப் பேசும் அற்புதமான புத்தகம் அது என்பது அவரின் ஆணித்தரமான கருத்து.

பெண்கள் கவனிக்க!


இந்தப் பாரம்பரிய ஆண்வழிச் சிந்தனை என்பது சங்க காலத்தில் இருந்தே இலக்கிய அந்தஸ்துப் பெற்றிருப்பதைக் காணலாம். நற்றிணை 10 ல்

“அன்னாந்து நோக்கிய வன முலை தளரினும்
பொன்நேர் மேனி மணியின் தாழ்ந்த
நல் நெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்
நீத்தல் ஓம்பு மதி – பூக்கேள் ஊர!....."

என்று தொடங்கும் அப்பாடலில் தோழி தன் தோழியின் தலைவனைப் பார்த்து இப்படி உரைக்கிறாள்.”மேல் நோக்கி நிமிர்ந்துள்ள கொங்கைகள் தளர்ந்து போனாலும்; பொன் போல மிளிர்கின்ற இவளின் மேனியிலே கருமனிபோல கீழ் நோக்கித் தொங்கிக் கொண்டிருக்கின்ற நீளமான கூந்தல் நரை தட்டிப் போனாலும்; இவளை நீ கைவிட்டு விடாமல் காக்க வேண்டும். அக்காலத்தில் இவள் உன் சுகத்துக்கு ஈடுகொடுக்கக் கூடியவளாக விளங்கமாட்டாள். ஆனால் அப்பொழுதிலும் இவளை நீ கை விடாது காக்க வேண்டும்” என்று தோழி தன் தோழியின் தலைவனுக்கு உரைப்பதாக இப்பாடல் அமைந்திருக்கிறது.

ஒரு பெண் எப்போது வேண்டுமானாலும் ஒரு கையறு நிலைக்குப் போகக் கூடியவளாகவே வரலாற்றில் இருந்து வந்திருக்கிறாள். அறிவுச் செல்வமும் பொருட் செல்வமும் கிட்டத்தகாத ஒருத்தியாக ஓர் ‘இலட்சியப் பெண்’ நம் பண்பாட்டு மரபில் இருந்து வந்ததோடு அச்சம், மடம் நாணம்,பயிர்ப்பு என்பன பெண்ணின் அணிகலனாகச் சொல்லப் பட்டும் வந்திருக்கிறது.’ பேதமை என்பது மாதர்க்கணிகலமாகப்’ பேசப்பட்ட மரபு நமது.

சிற்றிலக்கிய வகையைச் சார்ந்த சுப்பிரதீபக் கவிராயரின் இந்தப் பாடலைப் பாருங்கள்!

“கச்சிருக்கும் போது கரும்பானேன்: கைக்குழந்தை
வச்சிருக்கும் போது மருந்தானேன்: - நச்சிருக்கும்
கண்ணார் கரும்பானார்: காணவும் நான் வேம்பானேன்
அண்னாமலை அரசுக்கு!” – 

என்று பெண்ணின் நிலையைப் பாடுகிறார்.பல நூற்றாண்டுகளைத் தாண்டிய பின்பு இங்கும் அதே கையறு நிலைதான்.

இத்தகைய சிந்தனைகள் முன் வைக்கப் பட்ட போது எப்போதும் நாம் பார்க்காத கோணங்களில் இருந்து துணிவாகக் கருத்துகளை முன் வைக்கும் நாட்டியக் கலாநிதியும் வானொலியில் ‘பண்பாட்டுக் கோலங்கள்’ நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான கார்த்திகா, இத்தகைய ஒரு சிந்தனைப் பின் புலத்தில் ஒரு “SINGLE MOTHER” ஆக மாதவி எத்தகைய சவால்களைச் சந்தித்திருக்கக் கூடும்? என்ற தர்ம சீற்றமிகு கேள்வியை முன் வைத்தார்.

சிலப்பதிகாரத்தின் எந்த ஒரு இடத்தில் தானும் கோவலன் தான் பெற்ற பிள்ளைக்கான பொறுப்பை – கடமையைச் செய்ததற்கான சான்றில்லை. தன் மரபு சார்ந்த, குலம் சார்ந்த பாதையில் இருந்து விலகி, ஆரம்ப நூற்றாண்டுகளிலேயே தனக்கென தனிப்பாதையை வகுத்துக் கொண்டவள் மாதவி. அவளை, அவள் சுயசிந்தனை முனைப்புகளை எப்படி அந்த சமுதாயம் நடத்தியது, அவளுக்கு எத்தகைய இடத்தைச் சமுதாயத்தில் அது கொடுத்திருந்தது என்பதை அவள் இறுதியில் புத்த தர்மத்தை சரனடைந்ததில் இருந்தும், மகள் துறவியானதில் இருந்தும் கண்டு கொள்ளலாம். 

இது தான் சுயசிந்தனை கொண்ட பெண்ணுக்கு சமுதாயம் சொல்லி வைத்த பாடம்! தமிழ் காவியம்!!

ஒரு பெண்ணோடு விரும்பிய காலம் மட்டும் வாழ்ந்து விட்டு விரும்பிய நேரம் சுலபமாக விட்டுச் செல்லும்; மேலும் அப்பெண்ணை கேவலமாக இழித்துரைக்கும் ஒட்டுமொத்த ஆணாதிக்க வாழ்வு முறை மேலும் அதன் நடத்தை மீதான சீற்றமாகவும் கோபமாகவும் கூட  கார்த்திகாவின் அந்தக் கேள்வி வெளிபட்டது.

பாரமான – கனதியான ஓரமைதி அப்போது அங்கு நிலவியது. – அந்த அமைதிக்கு பல அர்த்தங்கள். அது அநாதரவாக வரலற்றில் தனித்து விடப்பட்ட ஒவ்வொரு பெண்ணினுடயதுமான மென்மையான மெளனம்! ஆணாதிக்க சிந்தனைகளை -அநீதியைக் கேள்வி கேட்ட மெளனம். அது ஒரு வரலாற்றின் விசும்பலுமாகும்.

இவற்றினூடு – பெண் நடந்து வந்த இத்தகைய வராலாற்றுப் பாதையினூடு தொடர்பு பட்டதாக இருந்தது இந்துமதி.ஸ்ரீநிவாசன் கொண்டு வந்திருந்த பாரதி தாசனின் ‘எழுச்சசியுற்ற பெண்கள்” என்ற தலைப்பில் இருந்து கொண்டு வந்திருந்த கவிதை.
.....................
பெருங்கல்விப் பண்டிதனே உனக்கோர் கேள்வி;
பெண்களுக்குச் சுதந்தரந்தான் உண்டோ ? என்றாள்.
தரும்போது கொள்வதுதான் தருமம் என்றான்.
தராவிடில்நான் மேற்கொண்டால் என்ன வென்றாள்.
திருமணமா காதவள்தன் பெற்றோரின்றிச் 
செயல்ஒன்று தான்செய்தல் அதர்மம் என்றான்.
.....................

இந்துமதி கம்பீரமான தொனிப்பான குரலுக்குச் சொந்தக்காரி. அவர் பேசுகின்ற போது ஒவ்வொரு சொல்லும் அதன் நெளிவு வளைவுகளும் உணர்ந்து முழுவதுமாக உச்சரித்து முடியும். குரல் கணீர் என்றொலிக்கும்.அதனால் அந்த ஒவ்வொரு  சொற்களும் நல்ல அழகாய் வந்து விழும். இந்தப் பகுதியில் இருந்த முழுப்பாடலையும் பொருளுணர்ந்து முழுமையாகக் கூறி தான் நயந்த பெண்ணின் துணிவை சுவை படச் சொன்னார்.
…………..
இதுகேட்டுச் செல்வப் பிள்ளை
என்னேடி, இதுஉனக்குத் தெரிய வில்லை;
மன்றல் செயும் விஷயத்தில் ஒன்றில் மட்டும்
மனம்போல நடக்கலாம் பெண்கள் என்றான்.


ஆண்களின் தமக்குச் சாதகமாக நிகழ்ச்சியை மரபுகளை மாற்றிக் காரியத்தைச் சாதிக்கும் வழக்கு இவரின் இப்பாடலில் சிறப்பாக வெளிப்பட்டு நிற்கிறது என அவர் மேலும் எடுத்துச் சொன்னார்.

பாரதி தாசனுடய மன உலகு தடுமாற்றத்துக்குரியதாக விளங்கியதா? என்ற கருத்துப் பரிமாற்றம் இக்கவிதையை அடியொற்றி நிகழ்ந்தது. இப்பாடலில் வீரமிக்க ஆணை எதிர்த்த பெண்ணைச் சுட்டிக் காட்டிய பாரதி தாசன், அவரின் ’குடும்ப விளக்கு’ என்ற பாடலில் பெண் என்பவள் செய்யும் வேலைகளை என்னவாறாகப் பட்டியலிடுகிறார்? பலரின் ஆர்வத்துக்குரிய பேசுபொருளாக அது இருந்தது.

குடும்பவிளக்காய் இருப்பவள் அவள். அவள்,காலை எழுந்து மாலை வரை என்னவெல்லாம் செய்கிறாள் எனப் பட்டியலிடுகிறார். எழுந்தாள், கோலமிட்டாள், வீட்டு வேலைகள் செய்தாள், கணவனுக்கு உதவினாள், குழந்தைகளுக்குத் தொண்டு செய்தாள், காலை உணவு தயாரித்தாள்,வாத்திச்சியாகவும் இருந்தாள், பள்ளிக்கு பிள்ளைகளைத் தயார்படுத்தி அனுப்பினாள், கடைக்கு புறப்பட்ட கணவனுக்கு பீத்தல் துணி தைத்து கொடுத்தாள், இத்தனையும் செய்த பின் காலையுணவு கொள்ளும் போது ‘இணையற்ற அவரன்புக்கு நிகராமோ இவையெல்லாம்’: ‘பள்ளிக்குச் சென்றிருக்கும் பசங்களில் சிறிய பையன் துள்ளிக் குதித்து மான் போல தொடர்ந்தோடி விழுந்தானோ’ என நினைத்தாள்.

பின் வீட்டைச் சுத்தம் செய்தாள், மரச்சாமான்களைப் பழுதுபார்த்தாள், இடிந்துள்ள சுண்ணாம்புச் சுவரை சரி செய்தாள், இப்போது நாத்தனார் வீடு சென்ற மாமன் மாமி வருகிறார்கள்,. அவர்களை வரவேற்கிறாள், அவர்களோடு நல்லுறவினைப் பேணுகிறாள்,

மதிய உணவுக்காக மீண்டும் அவள் சிந்தனை இவ்வாறு ஓடுகிறது. ’கொண்டவர்க்கெது பிடிக்கும்,குழந்தைகள் எதை விரும்பும், மாமன் மாமிக்குத் தக்கதென்ன,உண்பதில் எவருடம்புக்கு எது உதவாதென்றெல்லாம் எண்ணிக் கடையில் பொருட்கள் வாங்குகிறாள்,
உணவினைச் சமைக்கின்ற போது அவள் நினைவுகள் இப்படியாகப் போகிறது.

இனிவாழும் நாள் நினைத்தாள்
இளையவர் மாமன் மாமி:
நனி இரங்கிடுதல் வேண்டும்
நானவர்க்கன்னை போல்வேன்.
எனதத்தாந்தனையும் பெற்று
வாழ்நாள் எண்ணும் போகில்
தனிக்கடன் உடையேன்
நானோர் தவழ்பிள்ளை அவர்கட்கென்றாள்

கிழங்கினை அளியச் செய்வாள்
கீரையைக் கடைந்து வைப்பாள்
கொழுங்காய்ப் பச்சடி வைப்பாள்
கொல்லையில் முருங்கைக்காயை
ஒழுங்காகத் தோலைச் சீவி
பல்லிலார் உதட்டால் மென்று
விழுங்கிடும் வகை முடித்து 
வேண்டிய எல்லாம் முடித்தே.


பின்னர் முதியவருக்கு மருத்துவிச்சியாக துணை இருக்கிறாள். பள்ளியால் வீடுவரும் பிள்ளைகளை வழிந்தோடும் புது வெள்ளத்தை வரவேற்கும் உழவர்போல் எழுந்தோடி மக்கள் தம்மை ஏந்துகிறாள், இருகையாலும்! மேலும் அவர்களுக்கு ஆகவேண்டியதைப் பார்க்கிறாள்.

இப்போது கணவன் வீடு வருகிறான். ’இன்றைக்கு மணம் புரிந்தான் என்னும் படி, நெஞ்சில் அன்பு குன்றாத விழியால் வரவேற்கிறாள். அன்றய நாள் நிலவரங்களைப் பேசுகிறாள். உணவருந்திய பின்பான ஓய்வில் அவன் பாடென்றான். அவள் யாழெடுத்துப் பாடுகிறாள். அவள் பாடல்,

உள்ளத்தில் கவிதை வைத்தே
உயிரினால் எழுப்பினாள்
வெள்ளத்தில் சுவையைக் கோத்தாள்
வீணையின் அளவிற் சாய்த்தாள்:
தெள்ளத்தெளிந்த நீர் போல்
செந்தமிழ் பொருள் போல் நெஞ்சப்
பள்ளத்தில் கோடைத் துன்பம்
பறந்திடப் பாய்ச்சி விட்டாள்
உயிரெல்லாம் தமிழில் தொக்கின

வீடெல்லாம் இசையே: வீட்டில்
நெஞ்செல்லாம் மெருகே: நெஞ்ச
ஏடெல்லாம் அறிவே: ஏட்டின் 
எழுத்தெல்லாம் களிப்பே: அந்தக்
காடெல்லாம் ஆடும் கூத்தே:
காகங்கள் குருவி எல்லாம்
மாடெல்லாம் இவ்வாறானால்
மனிதர்க்கா கேட்க வேண்டும்?

என்னும் படியாகப் பாடுகிறாள். இப்படியான பாடலுக்குச் சொக்கிப் போய் இருக்கும் கணவனுக்கு கடைக்குப் போகவேண்டும் என்பதை மேலும், நினைவு படுத்துகிறாள். சோம்பல் மிக்க கணவன் அவளைக், ’கடைக்குப் போய் கணக்கர் தம்மை உண்பதற்கனுப்பி உண்டு வந்த பின் வா’ என்கிறான். அவளும் அது போல கடைவேலைகளைச் செய்து கனக்கு வழக்குகளைச் சரியாக ஒப்புவிக்கிறாள். மாலையில் நோயுற்ற மாமனுக்கு பணிவிடையும் வீட்டு வேலைகளையும் பார்த்துக் கொள்கிறாள். வீட்டு வேலைகள் என்ன தெரியுமா?

வரிசையாய் காய வைத்த
வடகத்தை வற்றல் தன்னைப்
பெரிசான சாலில் சேர்த்தாள்:
பிணைந்துள்ள மாடுகன்றுக்(கு)
உரிய நல் தீனி வைத்தாள்:
உறிவிளக்குகள் துடைத்தாள்:


என நீள்கிறது வரிசை. குழந்தைகள் வீடு வர அவர்களை மாலையில் கடற்கரைக்கு அழைத்துப் போகிறாள். இருள் கவிக்கிறது. வீடு வருகிறாள்.

கட்டுக்குள் அடங்காதாடிக்
களித்திடும் தனது செல்வச்
சிட்டுகள், சுவடிக்குள்ளே
செந்தமிழ் தீனி உண்ண
விட்டுப் பின் அடுக்களைக்குள்
அமுதத்தை விளைவு செய்தாள்:
எட்டுமணி அடிக்க
அத்தானை எதிர்பார்க்கின்றாள்

இரவுணவு, இத்யாதிகள் எல்லாம் முடிந்த பின்னால் – குழந்தைகளும் தூங்கிய பின்னால் கணவனண்டை வந்து,

அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும்
அடுக்கடுக்காய் நமது நலம் சேர்ப்பதல்லால்,
இதுவரைக்கும் பொது நலத்துக்கென்ன செய்தோம்?



எனக் கேட்கிறாள். மேலும் அவள் சொல்வதைக் கேளுங்கள்,

“இன்றைக்குக் கறி என்ன? செலவு யாது?
ஏகாலி வந்தானா? வேலைக்காரி
சென்றாளா? கொழுக்கட்டை செய்யலாமா?
செந்தாழை வாங்குவமா? கடைச்சரக்கை
ஒன்றுக்கு மூன்றாக விற்ப தெந்நாள்?
உன்மீதில் எனக்காசை பொய்யா? மாடு
குன்றுநிகர் குடம் நிறையக் கறப்பதுண்டா?
கொடுக்கலென்ன? வாங்கலென்ன? இவை தான் கண்டோம்.

தன்னலத்தால் என்ன நடக்கும்?

”தமிழரென்று சொல்லிக் கொள்கின்றோம் நாமும்:
தமிழ்நாட்டின் முன்னேற்றம் விரும்புகின்றோம்:
எமதென்று சொல்லுகின்றோம் நாடோறுந் தான்
எப்போது தமிழனுக்கு கையாலான
நமதுழைப்பை ஒரு காசைச் செலவு செய்தோம்?
நாமிதனை என்றேனும் வாழ்நாள் தன்னில்,
அமைவாகக் குந்தி நினைத்தோமா? இல்லை:
அனைவரும் இவ்வாறிருந்தால் எது நடக்கும்?”

இச்சொல் கேட்டு மகிழ்ந்த கணவன் சொல்கிறான்.

”அன்றிலடி நாமிருவர் பழமும் பாலும்
ஆருக்கு வேண்டுமடி! அன்றன் ஆசைக்
குன்றத்திற் படர்ந்த மலர்க்கொடியே, மண்ணில்
குவிந்திருக்கும் சுவையுள்ள பொருள்கள் எல்லாம்
ஒன்றொன்றும் மறு நாளே பழைமை கொள்ளும்;
ஒன்றொன்றும் சில நாளில் தெவிட்டிப் போகும்;
அன்றன்று புதுமையடி, தெவிட்டலுண்டோ?
ஆருயிரே நீ கொடுக்கும் இன்பம்” என்றான்.


ஒரு பெண்னாக இத்தனை வேலைகளையும் செய்து அறிவுத்திறமும் படைத்த ஒரு பெண்ணைப் படைக்கும் பாரதி தாசன் காட்டிய இந்தப் பெண்ணுக்கு அவர் காட்டிய விடுதலை என்னவாக இருந்தது என்ற சிந்தனையையும் அவளுக்குக்கு அவர் என்ன செய்தார் என்ற சிந்தனையையும் அது விதைத்துச் சென்றது.

கூடவே, வீட்டில் இருந்து இத்தனையையும் செய்கிற பெண்ணை உங்கள் மனைவி என்ன செய்கிறாள் என்று யாரும் கேட்டால் “அவ வீட்டில சும்மா தான் இருக்கிறா” என்று சொல்லும் தற்கால நடைமுறை அந்த வரலாற்றின் நீட்சியைச் சற்றே நினைவுறுத்திச் சென்றது. “சும்மா தான் இருக்கிறா’ என்பதன் பின்னால் இத்தனை அர்த்தங்களும் நிறைந்திருக்கிறது என்ற உண்மை பெறுமதியானது. 

ஊழியம் என்பது பணத்தால் மாத்திரம் மட்டிறுக்கப் பட்டிருப்பதன் தாற்பரியத்தால் விளைந்தது அது. ஓய்வோ ஓய்வூதியமோ அற்ற தன் அந்திம காலம் வரை செய்யப்படும் அந்தத் தன்னலம் கருதா சேவை சேவிக்கப் படுவதில்லை. மாறாக ‘சும்மா வீட்டில இருக்கிறா’ என்ற ஒரு சொல்லால் இலகுவாகப் புறந்தள்ளப்பட்டு விடுகிறது.

1999ம் ஆண்டு சக்தி வெளியீடாக வெளிவந்த ’புது உலகம் எமை நோக்கி’ என்ற புத்தகத்தில் நந்தினி எழுதிய “மூளைக்குள் ஒரு சமையலறை” என்ற கதை பாரதி தாசன் காட்டிய இதே பெண்ணின் மன உலகு இன்றும் எப்படி மாறாதிருக்கின்றது என்ற சிந்தனையை சிறப்பாக வெளிப்படுத்தி நிற்கிறது. கிடைத்தால் வாசித்துப் பாருங்கள்.

நேரம் அதன் பாட்டுக்குப் போய்க்கொண்டிருந்தது.

இத்தகைய தகவல் பரிமாற்றங்கள் பெண் என்ற பிராகிருதியின் நிலையினையும் சவாலினையும் அவள் வகிக்கும் பாத்திரத்தையும் அவளின் வரலாற்றுத் துயரினையும் அவள் இன்னும் நடைபோடவேண்டி இருக்கின்ற தூரத்தையும் நம் முன் கொண்டு வந்து நிறுத்தியது.

மேலும், யசோதரன், பெண்ணுக்கென இருக்கும் இயற்கை உடலமைவுகள் அவள் வகிக்கும் பாத்திரத்தில் எவ்வாறு செல்வாக்குச் செலுத்துகின்றது என்பது பற்றிச் சொன்னார். தன் மகள் இப்போதே தன் தம்பியைப் பார்ப்பதில் காட்டும் தாய்மை தன்னை வியப்புறச் செய்கிறது என்பதும் பெண்கள் மிக ஆழமானவர்கள் அவர்களினுடய சிந்தனைகளை கண்டறிவது கடினம் என்பதும் அவர் வைத்த கருத்தாக இருந்தது. 

அதே நேரம் ஆண்கள் அவர்களைப் புரிந்து கொள்ளவோ தம் உணர்வுகளை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ள முயல்வதோ இல்லை என்பது அற்கான மறுமொழியாக இருந்தது. நம் பண்பாட்டுப் புலத்தில் ’பலவீனமற்ற பாதுகாவலன்’ என்ற கருதுகோளை ஆண்கள் இலகுவாகக் கைவிடத் தயாராக இல்லாத தன்மையும்; பெண்களுக்கு அது எப்படி இலகுவாகவும் சவாலற்றதாகவும் தன்னை அறிந்து கொள்வதற்குத் தடையாகவும் அமைந்து விடுகிறது என்பதை கார்த்திகா சொந்த வாழ்வின் அனுபவங்களினூடும் வரலாற்று வழிகளினூடும் விளக்கிச் சொன்னார். மாற்றங்களை ஏற்றுக் கொள்வதில் இருபாலாருக்கும் இருக்கும் தன்மான இடைஞ்சலும் சமூகப் பாதுகாப்பு / சமூக அங்கீகாரம் என்ற மாய இழையும் கூடவே சிந்தனைத்தளத்துக்குரிய  பேசு பொருளாக இருந்தது.


இளம் சந்ததிக் காலத்தைச் சேர்ந்த மைத்திரேயிஜி தன் வரமுடியாமையைத் தெரிவித்திருந்தார். அவர் வந்திருந்தால் இளம் சந்ததியின் சிந்தனைப் புலத்தையும் புலம்பெயர் சிந்தனையின் வழிவந்த சிந்தனைப் பண்பாட்டின் செல்வாக்கையும் இன்னும் வேறுபட்ட கோணத்தில் கண்டுணர வழி வகுத்திருக்கும்.

அது போல,பிரபல எழுத்தாளர் கோகிலா.மகேந்திரன் அவர்களும் அயல் மாநிலம் ஒன்றுக்குச் சென்றிருந்த காரணத்தால் வர இயலாமையைத் தெரிவித்திருந்தார். வந்திருந்தால் கண்ணுக்கும் நம் கருத்துக்கும் புலனாகாத வேறு சில அம்சங்களை அவர் தொட்டுச் சென்றிருப்பார்.

அண்மைக் காலமாக ஆனந்த விகடனில் ராஜுமுருகன் என்பார் ‘வட்டியும் முதலும்’ என்ற தலைப்பில் சமான்யர்களின் வாழ்க்கைக் கோலங்களை எழுத்துச் சித்திரங்களாய் பகிர்ந்து வருகிறார்.அதில் அவர் ஒரு முறை பெண்கள் பற்ரி எழுதி இருந்தார். அது இவ்வாறு முடிக்கப் பட்டிருந்தது.

பெண்கள் இல்லாமல் ஆண்களால் ஒரு நாள் ஜீவித்திருக்க முடியுமா? நம்மில் எத்தனை பேர் அவர்களைச் சரிசமமாய் சரிபாதியாய்ப் பார்க்கிறோம்? திடீரென்று யோசித்துப் பார்த்தேன். எனக்கு என் அம்மாவின் இளமைக் காலம் பற்றி எதுவுமே தெரியாது. அவளது சிறுபிராயம், படிப்பை நிறுத்தியபொழுதுகள், விளை யாட்டு, காதல் எதுவுமே தெரியாது. ஏனோ அது பற்றி எல்லாம் கேட்காமல் பேசாமலேயே இத்தனை காலம் வந்திருக் கிறோம். இப்படி எத்தனை எத்தனை அம்மாக்கள் இருக்கிறார்கள்... பகிரப்படாத நினைவுகளோடு

முன்பு நான் தங்கியிருந்த ஒரு குடியிருப் பில் கீழ் வீட்டில் ஒரு தம்பதி குடியிருந்தனர். அந்த ஆள் தினமும் மனைவியைக் கண்ட படி திட்டிக்கொண்டே இருப்பார். அச்சடிக்க முடியாத வார்த்தைகளால் கடாசுவார். அக்கம்பக்கத்து ஆட்களெல் லாம் பயங்கர டென்ஷனிலேயே இருப்பார் கள். அவர் அடிக்கடி, "இந்த பொம்பளைக் கழுதைங்களே இப்பிடித்தானடி... தே...... ஒன்னையெல்லாம் எவன்டி நம்புவான்?" என்கிற வார்த்தைகளாலேயே சுடு தண்ணியை வீசுவார். அந்த பெண்மணி அமைதியாக உட்கார்ந்தே இருப்பார். தனது பெண் பிள்ளையைத் தூக்கிக்கொண்டு வெளியே வந்து கேட் பக்கத்திலேயே நிற் பார். எனக்கெல்லாம் அவ்வளவு கோபம் வரும். தினமும் இப்படியே கிடக்கும். ஒருநாள் அந்த ஆள் திடுதிப்பென்று செத்துப் போய்விட்டார். நெஞ்சு வலியில் பொட்டென்று போய்விட்டார். வெளியே கண்ணாடி பெட்டியில் வைத்திருந்தார்கள். அந்தப் பெண்மணி உருண்டு புரண்டு அழுதார். தடுக்கவே முடியாமல் அப்படி அழுதார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.

"அவ்வளவு கேவலமான ஆளுக்கா இப்படி அழுவுது இந்தம்மா?" இதைக் கேட்டு மேல் வீட்டுத் தாத்தா சொன்னார், "பொம்பளைங்க அப்பிடித்தான் தம்பி... என் அனுபவத்துல சொல்றேன்... நாமெல்லாம் அவங்களோட நெழலுக்குக் கூட துப்பில்ல!"


ஏற்கனவே மிகத்தாமதமாய் தொடங்கி இருந்தது நிகழ்ச்சி. 8 மணிக்கு அறையைத் திருப்பிக் கொடுக்க வேண்டிய கட்டாயம் இருந்தது நமக்கு. நேரம் 7.55 ஆகி இருந்ததால் இன்னும் பேச சுவாரிசமான விடயங்கள் இருந்த போதும் நேரம் கருதி நிறைவு செய்யும் நிலைக்கு நாம் தள்ளப் பட்டிருந்தோம்.

அப்போது பாஸ்கரன், தான் இந்தியா சென்ற போது பார்க்கக் கிட்டிய ராஜ அரண்மனை ஒன்று எப்படி அரசன் மேலிருந்து கீழே இருக்கும் தன் மனைவிமாரை பார்க்கும் வண்ணமாகவும் ஆனால் கீழிருக்கும் மனைவிமார் ஒருவரை ஒருவர் பார்க்க முடியாதவாறு அமைந்திருந்த தன்மையை கொண்டிருந்தது என்பதை நினைவு கூர்ந்தார். மேலும் ஆடல் அரங்கு எப்படி நிலத்தில் நிலைக்கண்ணாடி பதிக்கப் பட்டு மேல் விதானம் மேலும் கீழ் கண்ணாடியில் ஆடல் மகளிரின் அங்க லட்சணங்களை - உருவங்களை எதிரொலிக்கும் விதமாக இருந்தது என்பதைச் சொன்னார்.

அது அன்று மாத்திரமா? இன்று வரை ஆணுக்கு இன்பமூட்ட மட்டுமே பிறந்த மங்கையராய் பெண்கள் இருக்கின்ற நிலை இன, மத, நிற, மொழி, நாடு என்ற வேறுபாடின்றி உலகமெங்கும் பெண்களின் நிலையாக இருப்பது உண்மை தானே? ஆங்கிலேயர் வட்டமேசையில் கூடி இருந்து பியர் குடிக்க பெண்ணானவள் மேசையின் மேல் ஏறி நின்று சுருக்குப் பாவாடை சுளன்றாட பார்த்து ரசிக்கும் கணவான்கள் கூட்டம் உலகமெங்கும் பிரசித்தம் தானே? உலகில் இப்படி எந்த ஒரு மிருகம் (காட்டு விலங்கு) தன் இணையை ஆடவைத்து வேடிக்கை பார்க்கிறது சொல்லுங்கள்?

ஒரு 24 வயது இளம் பெண் திறமையாகப் பாடக்கூடிய ஆற்றல் படைத்தவள் ஆசைப்பட்டுப் பாடினாள் என்ற ஒரே காரணத்தால் தந்தையையும் மகளையும் பகீரங்கமாகச் சுட்டுக் கொன்ற நிகழ்ச்சியை ஆப்கானிஸ்தான் தீவிரவாதம் செய்ய, கண்கட்டி வாய் பொத்தி உலகம் பார்த்திருந்தது கடந்த மாதம் தான் நிகழ்ந்தது. show case பொம்மைகளாய் கண்ணாடிப் பேழைகளுக்குள் பார்வைக்குரிய பொருளாய் மேற்குலகில் பெண்கள் நிற்க; ஈழத்தில் குலைகுலையாக கற்பழிப்புக் கொலைகள் நிகழ்ந்தது முடிந்திருக்கிறது. பாரதத்தில் பெண் சிசுக்கொலையும் வரதட்சனை கொடுமைகளும் தொண்டைக்குள் சிக்கி இருக்கிற முள்ளைப் போல!...........

பெண் சமமாக மதிக்கப்படும் உயிரும் அறிவும் உணர்வும் சம உரிமையும் கொண்டவளாய் உயர்வதெப்போ?

இவ்வாறெல்லாம் பெண்ணுலகத்துக்குள் உலாவி வந்து 8.00 மணிக்கு குறியீட்டு இலக்கம் பதிந்து கதவு மூடினோம்.

வீடு வரும் போது வரலாற்றில் பெண்ணின் பாதையில் நடந்து வந்த களைப்புக்கு பாஸ்கரன் தயாரித்துத் தந்திருந்த சூடான பானம் ஒட்டு மொத்தப் பெண்ணுக்கான நடைக் களைப்பின் ஆறுதலுக்கான உயிரூக்கியாக இருந்தது நினைவுக்கு வந்து போனது. அது தூரத்தில் மங்கலாய் தெரியும் சமூக மாற்றத்தின் வெளிச்சமும் கூடவே!

ஆனாலும், இன்னும் பெண் நடக்க வேண்டிய பாதை தூரம்: அது வெகு தூரம்!

பெண் ஆண் உள்ளடங்கலான மனிதரையும் தேவர்களையும் தெய்வங்களையும் உள்ளடக்கிய பெயர்ச்சொல் உயர்திணை எனத் தமிழ் அகராதி குறிப்பிடுகிறது.

பெண் அடைய வேண்டி இருக்கிற அந்தத் தூரத்தை எட்டும் போது தான் “உயர்திணை” தன் சொல்லுக்கான முழுமையான பரிபூரணமான அர்த்தத்தை உண்மையில் எட்டும்.






”உயர்திணை!”………………………………………..





Wednesday, July 11, 2012

ஹென்றி லோசன் கதை

இன்றய தினம் தோழி ஒருத்தியை சுகயீனம் பார்க்கச் சென்றிருந்தேன். மனமொட்டிப் பேசக்கூடிய சிலருக்குள் அவரும் ஒருவர். சுகயீனம் பார்க்கச் செல்வது அடிப்படையில் இருந்தாலும் மனதுக்குப் பிடித்த விடயங்களை பேசுவதில் இருக்கும் ஆர்வம் அதை விடக் கூடுதலாக இருந்தது.அது அவரையும் என்னையும் சோர்வில் இருந்து சுறுசுறுப்புக்கு இட்டுச் செல்லும்  என்பது இருவருக்கும் தெரியும்.

என்னை அவர் ஏமாற்ற வில்லை. நம்முடய பேச்சு பலவிடயங்களையும் சுற்றி வந்து தான் இந்தியாவில் வாழ்ந்த போது தன்னோடு வெளிநாட்டில் இருந்து வந்து தங்கியிருந்த பெண்னைப் பற்றிய பேச்சில் வந்து நின்றது.

அமெரிக்காவில் வசித்த அப் பெற்றோருக்கு அப்பெண் இந்திய வாழ்வினையும் ஒழுக்க நெறிகளையும் அறிந்து வரவேண்டும் என்பது விருப்பமாய் இருந்தது. அவளுக்கு எப்படியோ இந்தியாவில் இடம் பெற்ற பெண் சிசுக்கொலை பற்றிய செய்தி கிட்டியிருந்திருக்கிறது. அவள் அது பற்றித் தன்னிடம் தூண்டித்துருவி கேள்வி கேட்டுக் கொண்டிருப்பாளாம்.என் தோழியோ அப்படி எல்லாம் ஒன்றுமில்லை எனச் சொல்லிய வண்ணம் இருப்பாராம்.

ஒரு நாள் பஸ்சில் பயணித்துக் கொண்டிருந்த போது மேலாடை அணியாத நீண்டகாதுத் துவாரம் கொண்ட பெரும் பாரம் கொண்ட காதணி அணிந்த மூதாட்டியைக் கண்டு இம்மூதாட்டியிடம் அது உண்மையா என்று கேட்குமாறு அப்பெண் இவரை வற்புறுத்தினாராம்.(அப்பெண்னுக்குத் தமிழ் தெரியாது) இவரும் அதனைத் தவிர்க்க முடியாது கேட்டிருக்கிறார்.அம்மூதாட்டியும், ஆமாம், நானே அதைச் செய்திருக்கிறேன்.ஒரு நெற்பருக்கை அதற்குப் போதும்.அப்பெண் ஜென்மம் என்னைப் போலவோ ஏனைய நம் பெண்களைப் போலவோ கஸ்ரப்படவா வேண்டும்? நான் அக்குழந்தைக்கு நன்மையையே செய்திருக்கிறேன் என்று மிக மனநிறைவோடு சொன்னாராம்.

அவரைப் பொறுத்தவரை அவர் செய்தது அவருக்கு தர்மமாக இருந்திருக்கிறது. அதன் சரி பிழைகளை  விமர்சிப்பது எனது நோக்கமல்ல.ஒருவர் என்ன காரணத்துக்காக ஒரு விடயத்தைச் செய்கிறார் என்பதற்குப் பின்னால் இருக்கின்ற உளவியல் காரணங்களை பெரும்பாலான நேரங்களில் நாம் காணத்தவறி விடுகிறோம். உடனடியாகவே தீர்ப்புகளை வழங்கி விடுகிறோம்.

இது மனித சமுதாயத்துக்கே உரிய குறைபாடு போலும். நம்மிடம் இருக்கும் ஒரு அளவுகோலை வைத்துக் கொண்டு மற்றவர்களை வெகு சுலபமாக எடை போட்டு விடுகிறோம்.

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் ஹென்றிலோஷன் என்று ஒரு அவுஸ்திரேலிய வந்தேறு குடியான ஒரு மதுவுக்குப் பெரிதும் அடிமையாகி விட்ட அஃறிணை உயிரினங்களைப் பெரிதும் நேசித்த ஒரு இலக்கியவாதி இருந்தார். அவருடய பல சிறுகதைகள் அவுஸ்திரேலியப் பத்திரிகைகளில் வெளியாகி அவுஸ்திரேலியர்களுடய இலக்கியத்துக்குப் பெரிதும் பங்களிப்புச் செலுத்தியுள்ளன.

அவருடய பல கதைகள் மனிதாபிமானம், நாணயம்,தோழமை,கருணை போன்ற மனித இயல்புகளை சொல்லி நிற்கின்றன.அவருடய 10 கதைகளைத் தேர்ந்தெடுத்து நவீனன் ராஜதுரை என்பார் தமிழில் மொழிபெயர்த்து ’ஹென்றி லோஷன் கதைகள்’ என்ற தலைப்பில் 1995ம் ஆண்டு வெளியிட்டிருக்கிறார். அதில் மிச்சேல் என்ற முரடன் என்ற கதை தன் இயல்போடு இருக்கின்ற ஒருவனை மற்றவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைத் தெளிவாகச் சொல்கிறது.

அந்தச் சம்பவத்தை கேட்ட போது இந்தக் கதை எனக்கு நினைவுக்கு வந்தது.

                                  மிச்சல் என்ற முரடன்



அது ஒரு வறிய பண்ணை. மேற்பார்வையாளரிடம் சென்று ஏதாவது உணவு கிடைக்குமா பார்க்கலாம் என்று மிச்சல் எண்னினான். அவன் தோழர்களோ மேற்பார்வையாளர் போன பின் சமையல் காரனிடம் சென்று கேட்கலாம் என்று காத்துக் கொண்டு நின்றார்கள். ஆனால் தந்திரசாலியும் வாயாடியுமான மிச்சல் அது வரை காத்திராமல் உள்ளே செல்லத் தீர்மானித்தான்.

‘வணக்கம்’ என்றான் மிச்சல்.

‘வணக்கம்’ என்றார் மனேஜர்.

‘நல்ல வெய்யில் இல்லையா?’ என்றான் மிச்சல்.

ஆமாம் வெய்யில் தான்.

ஏதாவது வேலை பார்க்கலாம் என்று தான் வந்தேன்.ஏதாவது வேலை.....

உம்... இல்லை.

வேலி கீலி ஏதாவது அடைக்க வேணுமா?

இல்லை.

வேலி கீலி திருத்தக் கொள்ள.....

இல்லை.

வேறு ஏதாவது வேலை செய்ய ஆள் தேவையா?

இல்லை.

அப்பிடித்தான் நானும் நினைச்சன். இப்ப எல்லாம் படு மோசம் போல தெரியுது.

இல்லை...அ..ஆமாம்..உண்மைதான்.

எங்கள் பாடும் அப்பிடித்தான். எண்டாலும் ஏதாவது சாப்பாடு கீப்பாடு கிடைக்குமோ எண்டுதான் வந்தனான்.

உனக்கு என்ன வேணும்?

என்ன ஒரு கொஞ்ச இறைச்சியும் மாவும் தான்.அது போதும் எண்டு தான் நினைக்கிறன். சீனியும் தேயிலையும் போதுமான அளவு இருக்குது.

கோக்கி அங்க இறைச்சி இருக்குதா?

உம்? இல்லை.

உனக்கு ஆடு அறுக்கத் தெரியுமா?

ஏன் தெரியாது?

இந்தாப்பா இவனுக்கு கத்தியும் துணியும் குடு. முற்றத்துக்குப் போய் ஆடு அறுக்கட்டும். என்றார் மனேஜர் சமயல்காரரிடம்.

பின்னர் மிச்சலிடம் - இந்தாப்பா! பிறகு முன்னங்கால் துண்டொன்றையும் கொஞ்ச மாவையும் கொண்டு போ.

அரை மணி நேரம் கழிந்த பின் மிச்சல் அறுத்த ஆட்டை துணியால் போர்த்த வண்ணம் வந்து சேர்ந்தான்.

இந்தா ஆடு! என்றான் சமையல் காரனிடம்.

அதோ அங்கே கொழுவு! முன்னங் கால் துண்டை எடுத்தியா?

இல்லை.

ஏன் பெரியவர் தான் சொன்னாரே?

எனக்குப் பின்னங்கால் துண்டு தான் வேணும்.

அவன் பின்னங்கால் துண்டொன்றை வெட்டி எடுத்துக் கொண்டான்.

சமையல் காரன் தலையைச் சொறிந்து கொண்டான்.அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை போலும். அத்தோடு மூளையும் வேலை செய்யவில்லை.

இந்தாப்பா இந்தப் பைகளை நிரப்பு. இது தேயிலைக்கு. இது சீனிக்கு. அது மாவுக்கு’ என்றான்.அவன் தன் சேட்டுக்குள் மறைத்து வைத்திருந்த பைகளை நீட்டியவண்ணம்.

நல்லா அள்ளி நிரப்பு. நான் இன்னும் இரண்டு கூட்டாளிமாருக்குச் சாப்பாடு போட வேண்டும்.

சமையல் காரன் அந்தப் பைகளை வாங்கி அவற்றை நிரப்பத் தொடங்கினான்.அவனுக்குத் தான் செய்வது என்னவென்றே அவனுக்குத் விளங்கவில்லை.

நன்றி என்றான் அவன். பேக்கிங் பவுடர் கொஞ்டம் கிடைக்குமா?

ஓ.. ஓ.. இங்கே.

நன்றி. இங்கே ஒரே சலிப்பாக இருக்கிறது இல்லையா?

ஆம் உண்மைதான்.அங்கே அவிச்ச இறைச்சியும் பாணும் இருக்கிறது.வேண்டுமானால் எடுத்துக் கொள்.

நன்றி என்றான் மிச்சல்.அந்த உணவுகளை தலையணைப் பை ஒன்றினுள் திணித்த வண்ணம்.இதற்கென்றே ஒரு பழய தலையணை உறை ஒன்றை அவன்  கொண்டு திரிந்தான்.

இங்கே ஒரே சலிப்பாக இருக்கிரது இல்லையா?

ஆம். உண்மைதான்.

கதைப்பதற்குக் கூட ஆட்கள் இல்லை

கனபேர் இல்லைத்தான்

சரி சரி நன்றி.இவ்வளவு நேரம் இருந்திட்டன்.

ஓ..ஓ.. இவ்வளவு நேரம்...’ என்றான் சமையல் காரன்.அவன் வாயில் இருந்து நன்றி என்ற சொல்லும் வரப்பார்த்தது.

அப்ப நான் வாறன். பிறகு சந்திப்பம். சமையல் காரன் தலையைச் சொரிந்து கொண்டான்.சற்று நேரத்தின் பின்னர் அவன் மேற்பார்வையாளருடன் பேசினான்.

அந்த வழிப்போக்கனுக்கு பைத்தியம் என்று இருவரும் எண்ணிக் கொண்டார்கள்.

அவனுக்கு உண்மையில் பைத்தியமல்ல. விறைத்த தலை. அவ்வளவுதான்.

நன்றி: ஹென்றிலோசன் கதைகள்;  தமிழாக்கம்; எடில்பேட் நவீனன் ராஜதுரை.


(ஆங்கிலேயர் அவுஸ்திரேலியாவைக் கைப்பற்றிய போது அவுஸ்திரேலியப் பழங்குடி மக்களிடம் பணப்புழக்கமோ வெலியடைத்து சொத்துப் பிரிக்கும் இயல்புகளோ இருக்கவில்லை. எல்லாம் எல்லோருக்கும் சொந்தமாய் இருந்த, இயற்கையோடு இணைந்த வாழ்க்கைமுறை அவர்களுடயது. ஆங்கிலேயர் வருகையோடு நிலங்கள் யாவும் அவர்கள் வசமாயின.பழங்குடி மக்கள் நிர்க்கதியானார்கள். இந்த நிலையில் மிச்சேலை ஒரு பழங்குடி பிரஜையாய் எண்ணிக் கொள்ளுங்கள்)














Saturday, June 23, 2012

ஆக்காண்டி ஆக்காண்டி.....

21.04.2012.

ஒரு சனிக்கிழமை. விடுமுறை நாள். வலையில் ஏதோ தேடி yaarl.com சென்றடைந்த நேரம்.

இப்பாடலும் கவிதையும் கிட்டியது. (நன்றி: yaal.com) இயற்றியவர் சண்முகம் சிவலிங்கம் என்ற ஈழத்துக் கவிஞர்.என் ஏழாம் வகுப்பு அல்லது எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது தமிழ் பாடப்புத்தகத்தில் இப்பாடல் இருந்தது நினைவுக்கு வர என் இலக்கிய நண்பர் மற்றும் நாடக இயக்குனர் திரு. பாஸ்கரனுக்கு இக்கவிதையை அனுப்பி வைத்தேன்.

அவர் அப்போது புதிய நாடகம் ஒன்றுக்கான முஸ்தீபு முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார். ஏதேனும் ஒரு வகையில் இது அவருக்கு உதவக்கூடும் என்பது என் அனுமானமாக இருந்தது.

அதனை நான் அனுப்பி வைத்தது அதே சனிக்கிழமை.

திங்கள் கிழமை வழமை போல தமிழ்முரசு அவுஸ்திரேலியா என்ற வாராந்த மின் சஞ்சிகையைப் பார்த்தேன்.கடந்த வெள்ளியன்று (20.04.2012) சண்முகம். சிவலிங்கம் என்ற ஈழத்துக் கவிஞர் காலமானார் என்ற செய்தி தலைப்புச் செய்தியாகப் பதிவாகி இருந்தது.

முகத்தில் அறைந்து சென்றது அச்செய்தி.

கவிதையைக் கண்டடைந்த நேரம் கவிஞனைத் தவற விட்டிருந்தோம்.

கடந்த 10.06.2012 அன்று நடந்த உயர்திணையில் விமர்சன அரங்கில் கவிதை பற்றிப் பேசிய கோகிலா.மகேந்திரன் அவர்கள் கவிதை காலம் கடந்தும் மனித உணர்வுகளோடு ஒர் உறவு முறையைக் கொண்டாடும் என்றார்.

இப்பாடலைப் பார்க்கும் போதும் கேட்கும் போதும் அது புரிகிறது.


இப்பாடல் புலரும் வேளை என்ற இறுவட்டில் இருக்கிறது.பாடியவர்கள்: ஞான ஆனந்தன்,(சங்கீத்வர்மன்,பிரகீத்வர்மன்,டிலீப்குமார்)

                                                                

சண்முகம். சிவலிங்கம்: (1937 - 2012 சித்திரை 20 -2012 பாண்டிருப்பு.)

ஆக்காண்டி ஆக்காண்டி
எங்கெங்கே முட்டை வைத்தாய்?
கல்லைக் குடைந்து 
கடலோரம் முட்டை வைத்தேன்.

வைத்ததுவோ ஐந்து முட்டை
பொரித்ததுவோ நாலு குஞ்சு
நாலு குஞ்சுக்கிரைதேடி
நாலுமலை சுற்றி வந்தேன்
மூன்று குஞ்சுக்கிரைதேடி
மூவுலகம் சுற்றி வந்தேன்

ஆக்காண்டி ஆக்காண்டி
எங்கெங்கே முட்டை வைத்தாய்?
கல்லைக் குடைந்து 
கடலோரம் முட்டை வைத்தேன்.

குஞ்சு பசியோடு 
கூட்டில் கிடந்ததென்று
இன்னும் இரைதேடி
ஏழுலகம் சுற்றி வந்தேன்

கடலை இறைத்து 
கடல் மடியை முத்தமிட்டேன்
வயலை உழுது
வயல் மடியை முத்தமிட்டேன்

கடலிலே கண்டதெல்லாம் 
கைக்கு வரவில்லை
வயலிலே கண்டதெல்லாம்
மடிக்கு வரவில்லை

கண்ணீர் உகுத்தேன்
கடல் உப்பாய் மாறியதே
விம்மி அழிதேன் 
மலைகள் வெடித்தனவே

ஆக்காண்டி ஆக்காண்டி
எங்கெங்கே முட்டை வைத்தாய்?
கல்லைக் குடைந்து 
கடலோரம் முட்டை வைத்தேன்.

வண்டில்கள் ஓட்டி 
மனிதர்க் குழைத்து வந்தேன்

கையால் பிடித்து
கரைவலையை நான் இழுத்தேன்

கொல்லன் உலையைக் 
கொளுத்தி இரும்படித்தேன்

நெய்யும் தறியிலே
நின்று சமர் புரிந்தேன்

சீலை கழுவி
சிகையும் அலங்கரித்தேன்

வீதி சமைத்தேன்

விண்வெளியில் செல்லுதற்கு
பாதை சமைக்கும்
பணியும் பல புரிந்தேன்

ஆனாலும் குஞ்சுக்கு
அரைவயிறும் போதவில்லை
காதல் உருக
கதறி அழுது நின்றேன்

கதறி அழுகையிலே
கடல் இரத்தம் ஆயினதே
விம்மி அழுகையிலே
வீடெல்லாம் பற்றியதே

கடல் இரத்தம் ஆகுமென்று
கதறியழவில்லை
வீடுகள் பற்றுமென்று
விம்மியழவில்லை

ஆக்காண்டி ஆக்காண்டி
எங்கெங்கே முட்டை வைத்தாய்?
கல்லைக் குடைந்து 
கடலோரம் முட்டை வைத்தேன்.
குஞ்சு வளர்ந்தும்
குடல் சுருங்கி நின்றார்கள்

பசியைத் தணிக்க
பலகதைகள் சொல்லி வந்தேன்

கடலை இறைத்துக்
களைத்த கதை சொல்லி வந்தேன்

வயலை உழுது 
மடிந்த கதை சொல்லி வந்தேன்

கொல்லன் உலையும்
கொடுந் தொழிற்சாலையதும்
எல்லா இடமும்
இளைத்த கதை சொல்லி வந்தேன்

சொல்லி முடிவதற்குள் 
துடித்தே எழுந்து விட்டார்
பொல்லாத கோபங்கள்
பொங்கி வரப் பேசுகிறார்

“கடலும் நமதன்னை
களனியும் நமதன்னை
கொல்லன் உலையும்
கொடுந்தொழிற்சாலையதும்
எல்லாம் நமது” என்றார்
எழுந்து தடி எடுத்தார்

கத்தி எடுத்தார்
கடற்பாரையும் எடுத்தார்
யுத்தம் எனச் சென்றார்
யுகம் மாறும் என்றுரைத்தார்

எங்கும் புயலும்
எரிமலையும் பொங்கி வர
சென்றவரைக் காணேன்
செத்து மடிந்தாரோ?

வைத்ததுவோ அஞ்சு முட்டை
பொரித்ததுவோ நாலு குஞ்சு
நாலு குஞ்சும் போர் புரிய
போய் விட்டார் என்ன செய்வேன்? 

ஆனவரைக்கும் 
அந்த மலைக்கப்பாலே
போனவரைக் காணேன்
போனவரைக் காண்கிலேனே!

ஆக்காண்டி ஆக்காண்டி
எங்கெங்கே முட்டை வைத்தாய்?
கல்லைக் குடைந்து 
கடலோரம் முட்டை வைத்தேன்.


இந்திய நாட்டுப் புறப்பாடல்: (பின்னிணைப்பு 24.06.2012)



Friday, June 15, 2012

உயர்திணையின் விமர்சன அரங்கு

உயர்திணையின் ஜீவநதி சிறப்பிதழின் விமர்சன அரங்கு சரியாக 10.06.2012 அன்று ஞாயிற்றுக்கிழமை மப்பும் மந்தாரமும் மழையுமாய் இருந்த ஒரு மாலைநேரம் சரியாக 1.30 மணிக்கு ஆரம்பமாயிற்று.

அரங்கு வழமையான மேடை, சபை என்ற பாணியில் இல்லாமல் எல்லோரும் ஒரேதளத்தில் வட்டமாக ஒரு கலந்துரையாடல் பாணியில் அமைந்திருந்தது.அது சிட்னிக்குச் சற்றே புதிது.

சிற்றுண்டிக்கான இடைவேளை விடப்படாதெனவும் விரும்பியவர்கள் விரும்பிய நேரம் மற்றவர்களுக்குச் இடையூறு ஏற்படுத்தா வண்ணம் தமக்கு செளகரிகமான நேரங்களில் அவற்றைச் சென்று எடுத்துக் கொள்ளலாம் என்ற அறிவிப்பும் சற்றே புதிது.

எதிர்பாராத புலமையாளர் கூட்டம்.

பாரதக் கவிஞர் வைதீஸ்வரன் ஐயா,ஈழத்தின் சுடரொளி பத்திரிகையின் ஆசிரியர், வில்லுப் பாட்டுக் கலைஞர்,சிறந்த ஓவியர் கனகசிங்கம் அவர்கள், சக்கர நாற்காலியில் தூர இடத்தில் இருந்து வந்திருந்த கவிஞர் அம்பி,அவுஸ்திரேலியப் பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியராக இருக்கும் எழுத்தாளர் ஆஸி. கந்தராஜா அவர்கள் (அவர் முதல் நாள் தான் வெளி நாடு ஒன்றில் இருந்து வந்திருந்தார்.),யாழ்.பல்கலைக் கழக முன்னாள் தமிழ் துறை விரிவுரையாளர். கலையரசி.சின்னையா அவர்கள்,’கலப்பை’ சஞ்சிகை ஸ்தாபகர் Dr.கேதீஸ்,நியூசவுத்வேல்ஸ் தமிழ் பாடசாலைகள் கூட்டமைப்பின் நடப்பாண்டுத் தலைவர்.திரு.கதிர்காமநாதன்,வென்ற்வேர்த்வில் தமிழ் கல்வி நிலைய நடப்பாண்டு அதிபர் கணநாதன் அவர்கள். கம்பன் கழகப் பேச்சாளர்.திருநந்த குமார் அவர்கள், எனத்தொடங்கிய அந்த வரிசை இரண்டாம் சந்ததியின் சிந்தனைகளைக் கொண்டிருந்த இணையம் பிறப்பித்த தமிழ் பிள்ளைகளான மெல்போர்னில் இருந்து இந் நிகழ்ச்சிக்கென வருகை தந்திருந்த ஜேகே, கேதா, மற்றும் வைத்தியக் கலாநிதி.திருமுருகன் ஆகியோராலும் ’ஈழத்து முற்றம்’ ஸ்தாபகர் கானா.பிரபா, இணைய வழியால் இணைந்து கொண்ட ஆழமான வாசிப்பனுபவங்களைக் கொண்ட யசோதரன், சக்திவேல், போன்றவர்களாலும், இந் நிகழ்ச்சி பற்றி இணையமூடாக அறிந்து katoomba வில் இருந்து தொடரூந்து வழியாக வந்த செல்வி.கெளரி போன்றவர்களாலும் அழகு பெற்றிருந்தது.



மகா பாரதத்தில் ஒரு இடம் வரும்.வில்வித்தையில் சிறப்புற்றிருந்த அர்ச்சுணனுக்கும் கர்னனுக்குமான களம் அது. கர்னன் தன்னால் அர்ச்சுணனுக்குப் போட்டியாக வில்வித்தைப் போட்டிக்கு வரத் தயார் நிலையில் நிற்பான். ராஜகுரு கர்னனைப் பார்த்து ஒரு கேள்வி கேட்பார்.” எந்த சிம்மாசனத்தை நீ அலங்கரிக்கிறாய் கர்னா?” 

இணையத்தைத் தமிழால் அலங்கரிக்கும் ஒரு சந்ததி; பாரம்பரிய மரபுவழி சிந்தனைகளின் வழிவந்த மூத்த சந்ததி இரண்டுக்குமான களமாக இது இருந்தது. சமானமான அறிவுப் புலம் கொண்ட இருவேறு அணியை அங்கு வந்திருந்த பலரும் தெளிவாக அடையாளம் கண்டிருப்பர்.மூத்த அறிவுஜீவிதங்களின் சிந்தனை ஓட்டமும் இளைய சிந்தனையாளர்களின் தீவிர சிந்தனையும் அங்கு ஆரோக்கியமாக அமர்ந்திருக்கக் கண்டேன்.



இவர்களை விட தமிழ் இலக்கிய ஆர்வலர்கள்! 

எல்லோருமாகச் சுமார் 40 பேர்! அது இலக்கத்தினால் அல்லாமல் காத்திரமான அறிவினால் சூழப்பட்ட சபை. அது தான் இதன் தனித்துவமான சிறப்பு.

நம்முடய எதிர்பார்ப்பு கிட்டத்தட்ட 10 - 15 பேராகத் தான் இருந்தது என்பதையும் நான் சொல்லியாகவேண்டும். தீவிர வாசகர்கள், எழுத்தாளுமைகள், புதிய சிந்தனைகளைக் கொண்ட ஒரு சிலர் - இது தான் எங்கள் இலக்காக இருந்தது.

இந்த ஆதரவு நாம் எதிர்பார்த்த ஒன்றல்ல. இதற்கு முக்கியமான காரணம் எழுத்தாளர் முருக பூபதி அவர்கள்.அவர் நல்ல ஒரு மனிதக் களஞ்சியம்.மற்றும் இளஞ் சந்ததித் தமிழர்களும் அவர்களுடய இணையப் பக்கங்களும். சிட்னியில் இருக்கும் நமக்கே தெரியாத தீவிர தமிழ் இலக்கிய வாசகர்களை மெல்போர்னில் இருந்த படியே வரவழைத்த பெருமை ஜேகேக்கும் கேதாவுக்கும் உரியது!

உண்மையில் இந்தக் களம் புதிய தலைமுறையையும் மூத்த தலைமுறையையும் சந்திக்கப் பண்ணிய சிந்தனைகளின் மனம் திறந்த ஒரு மோதலாக இருந்தது என்பதையே நான் உணர்கிறேன்.

முதலில் ஜீவநதியின் சிறுகதையை முன்வைத்து ஆறு.குமாரசெல்வம் தன் விமர்சனத்தை முன்வைத்தார்.மிக மென்மையான போக்கை அது கொண்டிருந்தது.அதற்கு எதிர்வினையாற்றிய ஜேகே சிறுகதை என்பதன் பரிமானங்களை உலக இலக்கியங்களில் இருந்து எடுகோள்காட்டி சில கதைகளை கதைகளே இல்லை என முழுமையாக நிராகரித்து; கோகிலா அவர்களுடய கதையில் இரண்டு கதைகள் இணைக்கப் பட்டிருக்கின்றன என்று கூறி ஒரு சிறுகதை என்பது ‘ஒரு கல்லை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு நகர்த்தி இருக்கவேண்டும்’ என்ற கருத்தைக் கூறி சிறுகதைக்கான பரந்துபட்ட வாசிப்பனுபவத்தின் அடிப்படையில் ஒரு பார்வையை வெளிப்படுத்தி இருந்தார்.


இது இப்படியே இருக்க விவசாயத்துறையில் பேராசிரியராய் இருக்கும் எழுத்தாளரான ஆஸி. கந்தராஜா சிறுகதை என்பதற்கு வரைவிலக்கணம் என்பதில்லை.ஆரம்பத்தில் இருந்த சிறுகதைக்கான வடிவம் அதன் அமைப்பிலும் தோற்றத்திலும் கொள்ளளவிலும் எத்தகைய மாற்றங்களைக் காலப் போக்கில் கொண்டுவந்து தந்திருக்கிறது என்ற வாதத்தை முன் வைத்து தற்போது அது ஒருபக்கக் கதையாகி ஒரு வரிக் கதையாகக் கூட வந்து விட்டது என்ற கருத்தை வைத்தார்.


அதற்குப் பதிலளித்த கோகிலா அவர்கள் எல்லாவற்றுக்கும் வரவிலக்கணங்கள் உண்டெனவும் இல்லாவிட்டால் ஒரு கட்டுரைக்கும் கதைக்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும் என்றும் எடுத்துக் காட்டி முன்னாள் யாழ்பல்கலைக்கழக தமிழ் விரிவுரையாளரான கலையரசி. சின்னையா அவர்களைக் இதற்குக் கருத்துக் கூறுமாறு கூறி அமர்ந்தார்.சற்றுப் பொறுத்து அதற்குக் கருத்துக் கூறிய கலையரசி அவர்கள் நிச்சயமாகச் சிறுகதைக்கு வரைவிலக்கனம் உண்டு என்பதை தெளிவாக முன் வைத்தார்.

அதன் போது இவற்றை உன்னிப்பாக அவதானித்த படி இவற்றை ஒளிப்படம் எடுத்துக் கொண்டிருந்த கானா.பிரபா மக்கள் - ரசிகர்கள் - வாசகர்கள் தான் வடிவத்தைத் தீர்மானிப்பார்களே தவிர வரைவிலக்கணங்கள் எது கதை என்பதைத் தீர்மானிப்பதில்லை என்ற கருத்தை முன் வைக்க மேலும் இந்த உரையாடல் நகராத படிக்கு நேரம் நகர்ந்து கொண்டிருக்க கதைப்பாகம் முடிந்து கவிதைப் பாகம் ஆரம்பித்தது.


ஜீவநதியின் கவிதைகளை முன் வைத்து கோகிலா அவர்கள் நன்கு செப்பனிடப்பட்ட பேச்சினை கம்பீரமாக ஆரம்பித்து வைத்தார். அது சிறந்த ஒரு ஆய்வுக்கட்டுரையின் வடிவத்தை ஒத்திருந்தது. சற்றுமுன்னர் தான் சிறுகதையின் வரைவிலக்கணம் பற்றிய சர்ச்சை நிகழ்ந்து முடிந்திருந்ததால் கவிதைக்கான வரையறையை அவர் சொல்லுகின்ற போது கவிதைக்கான வரைவிலக்கணத்தை அழுத்திச் சொல்லி கவிதைகளுக்குச் சந்தம் இருந்தால் அது சிறப்பு என்று முன்மொழிந்து அமர்ந்தார். அவரது அந்தப் பேச்சும் அதற்குப் பதிலாய் அமைந்திருந்த கேதாவினது பேச்சும் எழுத்தினால் விபரிக்கத் தக்கதன்று. அது பார்த்துக் கேட்டு உய்த்து உணரவேண்டியது. இந்நிகழ்ச்சியின் பேரழகாய் அது இருந்தது. அதனை வீடியோக் காட்சியாக இங்கு பதியும் எண்ணம் இருப்பதால் அதனை இப்போதைக்கு ஒரு வெற்றிடமாக விட்டுச் செல்கிறேன்.

இங்கும் மரபுக்கும் புதுமைக்குமான மோதலை காணமுடிந்தது.புதுக்கவிதையும் ஹைக்கூ கவிதையும் மரபுக்குள்ளும் எதுகைமோனைக்குள்ளும் சந்தத்துக்குள்ளும் சிறைப்பட்டிருந்தால் தமிழுக்குப் புதிய வரவுகள் சித்தித்திருக்குமா என்ற கேள்வியும் உதாரணங்களும் எதிர் எதிராய் வீசப்பட அழகான புலமை யுத்தம் ஒன்று மிக அழகாக ஆரோக்கியமாக முன்னெடுக்கப்பட்டது.

உண்மையில் சிறுகதைகளுக்கும் கவிதைகளுக்குமான களம் ஆரோக்கியமாக விரிந்து செல்லும் சாத்தியங்கள் நிறையவே இருந்தன. எனினும் நேரம் காரனமாக அதுவும் முடிவுக்கு வர கட்டுரைகள் பற்றிய விமர்சனத்தை இந்துமதி அவர்கள் முன் வைத்தார்.ஆற்றொழுக்கான கம்பீரக்குரலுக்குச் சொந்தக்காரி அவர். பல கட்டுரைகளை இணைத்தும் சில கட்டுரைகளைச் சிலாகித்தும் சில கட்டுரைகளில் இருந்த திருத்தக் கூடிய அம்சங்களை சொல்லியும் அவர் அமர செளந்தரி கட்டுரைகள் பற்றிய கேள்விகள் சிலவற்றை முன் வைத்தார். 

கூடவே முன்னாளில் பல கவிதைகளை எழுதி வந்த  பாமதி கட்டுரைகள் - அதிலும் சமூகம் சார்ந்து எழுதப்படும் கட்டுரைகள் முறையாக ஆய்வு செய்யப்பட்டு எழுதப்படவேண்டும் என்றும் மேம்போக்காக எழுந்தமானமாக தனக்குத் தெரிந்த ஒரு சின்ன வட்டத்தை முழுமையான சமூகத்துக்குமான பார்வையாக வைத்து விட்டுப் போவதில் இருக்கும் சமூகப் பொறுப்பின்மையைக் காரசாரமாகக் கண்டித்தார்.

எனினும் கட்டுரையின் இறுதியில் இடம்பெற்ற அகிம்சை பற்றிய கருத்து பலரினதும் ஆர்வத்துக்குரிய பேசு பொருளாக இருந்தது. ஜீவநதியில் இடம்பெற்றிருந்த செளந்தரியின் அகிம்சைபற்றிய கட்டுரை இக்காலத்துக்கு அகிம்சை பொருந்துமா பொருந்தாதா என்ற கேள்வியை முன்வைத்திருந்ததும் அது உணர்வு ரீதியாக பலரின் கேள்வியாக இருந்ததும் அதற்குக் காரணமாக இருக்கலாம்.

மாகாத்மாகாந்தி வென்றதற்கான காரணம் அவர் தன் கொள்கையில் உறுதியாகவும் விடாப்பிடியாகவும் இருந்தார் என்பதும் அவருக்கு வாய்த்திருந்த எதிரி மனசாட்சி உள்ளவனாக - தர்மத்துக்குப் பயந்தவனாக இருந்தான் எனவும் பிரவீணன் எடுத்துச் சொல்ல (பிரவீணன் இம்முழு நிகழ்வையும் தொகுத்தளிக்கும் பணியையும் திறம்படச் செய்து கொண்டிருந்தார்) அதற்குப் பதில் கொடுத்த கேதா அவுஸ்திரேலியப் பழங்குடிமக்களை அதே ஆங்கிலேயர் எப்படி நடத்தினார்கள் என கேள்வி எழுப்பினார். தர்மம் வென்றே தீரும் எனவும் அதற்கு நமக்கு பொறுமையும் கொள்கையில் உறுதிப்பாடும் தேவை எனவும் பேச்சுக்கள் சுவாரிசமாய் நடந்து கொண்டிருந்த போது நேரம் 4.25 என கடிகாரம் காட்டியது.

திட்டமிட்ட நிகழ்ச்சிப் பிரகாரம் 45 நிமிடங்களைக் குறும்படக்காட்சிக்கும் அது பற்றிய கலந்துரையாடலுக்கும் ஒதுக்கி இருந்தோம் என்பதும் தாமதமாய் உறைக்க இந்த விவாத அரங்கை நெறிப்படுத்திக் கொண்டிருந்த பாஸ்கரன் அவசரமா ஓடி வந்து என்ன செய்வோம் எனக் கேட்டார்.

நிகழ்ச்சியை நிறைவு செய்வோம் என்று நன்றி கூடி முடித்த போது நேரம் சரியாக 4மணி.30 நிமிடம்.

முழுவதுமாக மூன்று மணி நேரம்! போனதே தெரியவில்லை. ஓரிருவர் மாத்திரம் 4 மணியளவில் தமக்கு வேறு நிகழ்ச்சி இருப்பதாகத் தெரிவித்து மன்னிப்புக் கோரி விடைபெற்றதைத் தவிர மற்ற அனைவரும் நிகழ்ச்சியோடு ஒன்றியிருந்தனர்.

இந்த நிகழ்ச்சி எப்படி நடந்தது என்று என்னை யாரும் கேட்டால் என்ன பதிலைச் சொல்லலாம் என எனக்குத் தெரியவில்லை.எல்லோரும் உணர்வு பூர்வமாக இணைந்து கொண்டிருந்தார்கள். தம்முடய கருத்துக்களையும் அபிப்பிராயங்களையும் தயக்கமின்றி முன்வைத்திருந்தார்கள். அது ஒரு சிறந்த ஆரம்பம் என்றே நினைக்கிறேன். 

எனினும், இந்த நிகழ்ச்சியின் பிடியில் இருந்து வெளியே வர எனக்கு 4 நாட்கள் பிடித்தன. மறு நாள் காலை எனக்கு பலவிதமான தொலைபேசி அழைப்புகள் வந்தன.நேரிலும் பலர் கருத்துச் சொன்னார்கள்.அவர்களுடய கருத்துக்களை அப்படியே தருகிறேன்.

1.”அடுத்த முறை இப்படி ஒரு நிகழ்ச்சியைச் செய்வதற்கு என்ன உதவி வேணுமெண்டாலும் கேளுங்கோ. நான் செய்து தாறன். என்ர தொலைபேசி இலக்கம் இருக்குத் தானே!”.- நிகழ்ச்சி முடிவின் போது திரு கந்தசாமி அவர்கள்.

2. ”High Quality” - திரு.நாகேஸ்வரன். 

3.”பிள்ள இது தான் என்ர இடம். என்ர மகளிட்ட சொல்லியிட்டன். இனி என்னை நீ எங்கும் அழைத்துப் போக வேண்டாம்.மாதம் ஒரு தடவை இங்கு அழைத்து வா அது போதும். நல்ல சந்தோசமா இருக்குப் பிள்ளை.” - ஓய்வு பெற்ற ஆசிரியர். திருமதி. நடராஜா.

4. ”நீங்கள் ஜீவநதி விமர்சனம் என்று ஒருவரை முழுமையாகப் புத்தகத்தை ஆய்வு செய்யக் கொடுத்து விட்டு மிகுதி நேரத்துக்கு சிறுகதை, கவிதை என்று அதன் ஆழ அகலங்களைக் கண்டு வந்திருக்கலாம். விடயங்கள் கூடி விட்டன”. -க.செளந்தரி.

5.”அக்கா,ஒரு விசயத்தை மட்டும் எடுங்கோ. அதப்பற்றி முழுமையாய் ஒரு விமர்சன அரங்கு வையுங்கோ. நீங்கள் நினைக்கிற மாதிரி இல்லை இங்கு பிறந்து வளர்ந்த பிள்ளைகளில் HSC தேர்வு விடயங்களில் எனக்கிருக்கிற அனுபவத்தை வைத்துச் சொல்கிறேன்.மின் தமிழ் பற்றி ஒரு அரங்கு வையுங்கோ.எத்தனை இளம் பிள்ளைகள் வருகிறார்கள் என்று பாருங்கோ”. - கானா.பிரபா.

6.”வருசம் ஒருக்கா ஆய்வரங்கை ஒரு நாள் முழுக்கச் செய்யலாம் நீங்கள்”. - எழுத்தாளர் முருக பூபதி.

7. ”புத்தகத்தை முதலில் வாசிக்கக் கொடுத்து விட்டு பிறகு இந்த நிகழ்ச்சியை நடத்தி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். என்றாலும் இந்த செட்டப் நல்லாக இருக்கிறது. நான் இதை எதிர்பார்க்கவில்லை.இதுவும் ஒரு சாதாரண நிகழ்ச்சியாகத் தான் இருக்கும் என்று நினைத்து வந்திருந்தேன்” -  Dr.பால முருகன்

8.”பலரையும் எழுத்துக்களால் மட்டுமே அறிந்திருந்த நமக்கு அவர்களை நேரில் கண்டு அளவளாவும் வாய்ப்புக் கிட்டியது. அது பற்றி நான் பெரிதும் மகிழ்கிறேன். அக்கா ’கேணியடி’ பாருங்கோ. உங்களுக்கு ஒரு ஐடியா வரும்.”. - ஜே.கே.

9. ”உங்களுடய மாதாந்த இலக்கியச் சந்திப்புக்கு இனி நானும் வருகிறேன்”.- யசோதரன்.

10.”எங்கட முதல் நிகழ்ச்சி தானே! பறவாயில்லை. திருப்தி”. - எழுத்தாளர் கோகிலா.மகேந்திரன்.

11.”எனக்கு சந்தோசம். எதிர்பார்த்தத விட நல்லாக நடந்தது. ஆனா இதே தரத்தை நாங்கள் maintain பண்ண வேணும். அது முக்கியம்.நாங்கள் நல்லாக் காலூண்டினாப் பிறகு கவிதைப் போட்டி, சிறுகதைப் போட்டி எண்டும் செய்யலாம்”. - பாஸ்கரன்.

12.” இலக்கியம் அதின்ர அழகியல் - இது பற்றிப் பேசிறதில எனக்குப் பிரியமே இல்லை. இலக்கியம் மக்களின்ர பிரச்சினையைத் தொடவேணும். அதப் பேச வேணும்.அதப்பற்றின பகிர்தல் இருக்க வேணும். குடுமிப்பிடிச் சண்டையள், எது இலக்கியம்,எது இலக்கியத்தரம் வாய்ந்தது என்பதெல்லாம் நேரத்தை வீணாக்குகின்ற சண்டைகள். நீங்கள் திசைமாறிப்போகாமல் சரியான பாதையில் போக உங்களைச் சிறப்பாகச் செப்பனிட்டுக் கொள்ள வேண்டியது அவசியம் அதுவும் இப்பவே” - பாமதி.

13. “ நான் நினைச்சத விட வித்தியாசமா நல்லா இருந்துது” - பா.சாந்தி.

14. ஒரு email Group  ஒண்ட தயார் செய்யுங்கோ. தமிழ் பள்ளிக்கூட ரீச்சர் மாருக்கும் இப்பிடியான விடயங்களைச் சொல்லுங்கோ. எங்கட பள்ளிக்கூடத்திலேயே 47 ரீச்சர் மார் இருக்கினம்.அவைக்கும் வர விருப்பமா இருக்கும். - இந்து.-

15. குறும்படம் ஒரு தனி subject. அத இதோட கலக்காதைங்கோ.ஆனா சரியான நேரத்துக்குத் தொடங்கி சரியான நேரத்துக்கு முடிச்சீங்கள்.

என்னைக் கேட்டால் இவை எல்லாமே பெறுமதியான கருத்துக்கள். மிக மிக அவசியமாகத் தேவைப்படுபவை. அனைத்தும் உண்மையான, நேர்மையான விமர்சனங்கள்.

இது புதுசு.

அது தான் எங்கள் வெற்றி. நேர்மையான விமர்சனத்தை நாம் வென்றெடுத்திருக்கிறோம். உண்மையான சமூகக் கரிசனையோடு அவை முன்வைக்கப் பட்டிருக்கின்றன. ஒரு சமூகத்தினுடய தேவையை அது உணர்த்துகிறது.அது இந்த விமர்சனங்கள் நமக்குத் தரும் நம்பிக்கை.

உயர நீண்ட தூரம் இருக்கிறது. சிறுதுளிகளில் இருக்கிறது பெரு வெள்ளத்துக்கான சாத்தியங்கள். சிறு விதையில் இருக்கிறது பெரு விருட்சத்துக்கான இருப்பு. ஒரு ஒளிக்கீற்றுக்குள் அடங்கி இருக்கிறது பல வண்ணங்களின் சூட்சுமம். ஒரு காலடியில் தொடங்குகிறது நீண்ட தூரத்துக்கான பயணம்.

இது தள்ளாட்டத்தோடு சேர்ந்த தனித்துவமான முதலடி!



”உயர்திணை” - அதன் பின்பக்கம்.

நம்முடய இலக்கியச் சந்திப்பின் நாலாவது காலடி!

திரும்பிப் பார்க்கிறேன்.(வரலாறு படித்ததாலோ என்னவோ ஒரு வித வரலாற்று நோக்கில் இது போகும். சலிப்பூட்டக்கூடியது எனத்தெரிந்தும் ஒரு விதமான ஆவணப்படுத்தலுக்காகவும் இதனைச் செய்ய வேண்டி இருக்கிறது: பொறுத்துக் கொள்வீர்களாக)

சென்ற மாசி மாதம் கடசி வாரத்து ஞாயிற்றுக் கிழமை நம் முதலாவது சந்திப்பு நிகழ்ந்தது. நாங்கள் நாலு பேர்: பாஸ்கரன்,செல்வம்,கார்த்திகா, மற்றும் நான் - கூடினோம். இப்படி ஒன்றை செய்ய ஆவல் இருக்கிறது என கூறிய போது முதல் பச்சைக்கொடியை காட்டிய கோகிலா அவர்களும்; பின்னாளில் அறிந்து அழைப்பு விடுத்த போது வந்திணைந்து கொண்ட இந்துமதியும் பின்னாளில் எமக்குக் கிடைத்த பெரிய பலம்.

இவ்வளவு பேர் தான் நாங்கள்.

பெரிதாக எதையும் சாதிக்கும் எண்ணம் எம்மிடம் இருக்கவில்லை. மாதம் ஒரு தடவை கூடி நாம் உருவாக்கிய இலக்கிய வடிவங்களை ரசித்து மகிழ்ந்த தரிசனங்களை பகிர்ந்து மகிழ்ந்து செல்வது மாத்திரமே எங்கள் எண்ணமாக இருந்தது.

முதல் சந்திப்பில் அந்த வீரியம் கொண்ட விதை ஊன்றப்பட்டது. அதன் அடுத்த மாதத்தில் அது மெல்ல முளை விட்டதைக் கண்டோம். அடுத்த மாத சந்திப்புக்கு முதல் ஈழத்தின் மலையகத்தைச் சேர்ந்த எளிய மக்களின் குரலை உயர்த்திக் காட்டிய தெளிவத்தை யோசெப் அவர்களின் சுகயீனத்துக்கு அவர் சர்வதேச தமிழர்களிடம் உதவி கேட்ட செய்தி நம்மை வந்தடைந்தது. அந்தச் செய்தியைப் பகிர்ந்து கொண்ட போது நாம் எல்லோரும் நம் குடும்ப அங்கத்தவர் ஒருவருக்கு இடையூறு வந்ததைப் போல உணர்ந்தோம்.

ஒரு சொற்ப நேர தொலைபேசிஉரையாடலில் சேர்ந்த பணத்தை TSS நிறுவனத்தினூடாக அனுப்பப் போன போது அதன் நிறுவனர் பார்த்திபன் அதனை இலவசமாக அனுப்பி தன் பங்கினைக் கேட்காமலே செலுத்தினார்.

நம்மிடையே இலக்கியம் சார்ந்து ஒரு குடும்ப நெருக்கத்தை உணர வைத்த நிகழ்வு இது.

இதற்கிடையில் கோடை காலம் போய் குளிர் காலம் ஆரம்பித்து விட்டிருந்தது. பரமற்றா பூங்காவில் கூடிய நம்மை இயற்கை கூடாரம் ஒன்றுக்குப் போகத் தள்ளியது. எங்கு போகலாம் என்று யோசித்த போது yaarl function centre தன் அகலக் கதவுகளை எமக்காக இலவசமாகத் திறந்து விட்டது.

அந்தச் சந்திப்பு நடந்து அடுத்த சந்திப்புக்கான இடைவெளியில் மெல்போர்ன் மாநிலத்தில் இருந்து எழுத்தாளர் முருக பூபதி அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருகின்ற நீண்ட வார விடுமுறையில் ஜீவநதி அவுஸ்திரேலியச் சிறப்பிதழை நமக்கூடாக சிட்னி மக்களுக்கு அறியத் தரும் ஆவலை வெளியிட்டிருந்தார்.

நம்மிடையே அது பற்றிக் கலந்து பேசிய போது விருப்பமும் குழப்பமும் எப்படிச் செய்வதென்ற யோசினையுமாக நாம் இருந்தோம். செய்வதென்று தீர்மானித்த போது நாம் யார் என்பதை - நம் நோக்கம் என்ன என்பதைத் தீமானிக்கும் நிலமைக்கு நாம் தள்ளப் பட்டோம்.

இங்கு பல பல நிறுவனங்களும் சங்கங்களும் அமைப்புக்களும் அதன் குடுமிப்பிடிச் சண்டைகளும் பலரிடம் ஒருவித வெறுப்பை விளைவித்திருந்ததாலும் ஒரே விதமான போக்குகளால் பலரும் சலிப்புற்றிருந்ததாலும் நம்மிடையே அதற்கான தயக்கமும் இருக்கவே செய்தது.

விமர்சனங்களை மாத்திரம் முன் வைக்காமல் இதனை ஒரு குழுவாக ஒரு முன்மாதிரியாக நம்முடய தனித்துவமான பார்வையில் இதனைச் செய்வோம் என்ற ஒரு புரிந்துணர்வின் அடிப்படையில் இதனைச் செய்வோம் எனத் தீர்மானித்தோம்.

நிறைய ஆர்வமும் சக்தியும் வந்து சூழ நிகழ்ச்சி நிரலை வகைப்படுத்தினோம்.ஜேகே என அழைக்கப்படும் ஜெயக்குமரனை அழைக்கும் ஆவல் என்னை உந்தித்தள்ள அழைப்பெடுத்துக் கேட்ட போது கவிதையின் விற்பன்னன் கேதாவையும் உடன் அழைத்து வருகிறேன் என்ற போது நமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.அவர்களுக்கு அது 8 - 10 மணி நேரக் கார் பயணம்!

நாளாந்த நம் முழு நேர வேலைகளின் நடுவே இதனைச் செய்வதும் நம் ஆத்மாவைத் திருப்திப் படுத்தும் ஒரு நிகழ்வாக இருந்தது.அதற்கு ஒரு இடம் தேவையாக இருந்தது. மாலை நேரச் சிற்றுண்டியைக் கொடுக்க பணம் தேவையாக இருந்தது. மற்றும் நமக்கென ஒரு பெயரை அவசர அவசரமாகத் தீர்மானிக்க வேண்டி இருந்தது. நன் ஒரு சமூக நிறுவனம் ஒன்றிலும் வேலை செய்ததால் (புலம்பெயர்ந்தோர் வள நிலயம்(MRC) அவர்களிடம் இருந்து வசதியான அறை ஒன்றை 5 மணி நேரத்துக்கு பெற முடிந்தது.

அவசரத் தேவைக்காக நான் அடிக்கடி போகும் நம் தெருமுனையில் இருக்கும் இளந்தமிழன் ஒருவரின் கணணிக் கடை ஒன்றில் உரிமையோடு நம்முடய நிகழ்ச்சிக்கு ஆதரவு வழங்குமாறு கேட்ட போது கேட்டதை விட அதிகளவு ஆதரவை பெற்றோம்.

இப்போது நம்முன்னால் நமக்கு என்ன பெயர் சூட்டுவது என்ற கேள்வி எழுந்தது. பலரும் பலவிதமான பெயர்களைப் பரிந்துரைத்தோம்.வெளி, உள்ளொளி, சாகரம்,பிரபஞ்சம்,ழகரம்,சாளரம்,அகரம்,உள்வெளி,திசைகள், கோணங்கள், கண், மெளழவு,தேமதுரம்,தாய்மொழி, ழகரம்இலக்கியப்பூ,எழுது, சங்கு,பசுந்தி,....எனப்பல பெயர்கள் முன் மொழியப்பட்டன. அதில் உள்ளொளி என்ற சொல் பலருக்கும் பிடித்துப் போக அதனை நமக்கு பெயராக வைப்பதெனத் தீர்மானித்தோம்.

மறுநாள் இணையத் தளங்கள் ஏதேனும் அப்படி இருக்கின்றதா என இணையத்தில் ஆராய்ந்த போது அப்பெயர் ஏற்கனவே எடுத்தாளப்பட்டிருப்பதை அறிந்து கொண்டோம்.அதனால் அப்பெயர் கைவிடப்பட மீண்டும் பெயர் வேட்டையில் இறங்கினோம். அவசரம் காரணமாக நமக்குத் தெரிந்த தமிழ் மீது ஆர்வம் கொண்டிருக்கிற சிலரிடம் கூட சில ஆலோசனைகளைக் கேட்டோம்.

அதன் ஒருவகையாக மெல்போனில் இருந்து எழுதிக் கொண்டிருக்கும் இரண்டாம் சந்ததித் தமிழின் தோழன் ஜேகே யிடமும் கேட்டேன். அவர் உங்களுடய நோக்கம் என்ன என்று கேட்டார்.கோகிலா அவர்கள் ஆர்வத்தோடு தந்திருந்த “கலை இலக்கியத்துறையில் உயர்தர ரசனையைப் பேணுதல்” என்ற முதலாவது வசனத்தைக் கேட்டவுடன் ‘ உயர்திணை’ எப்படி என்று கேட்டார். மேலும் உடனடியாக என் மனதில் பட்டது என்று விட்டு வேறேதாவது சொல் தட்டுப்பட்டால் சொல்கிறேன் என்றார்.

அதனை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்ட போது எல்லோருக்கும் அது பிடித்துப் போய் விட கணனிப் பக்கங்களில் எல்லாம் அப்படி ஒரு பெயர் இருக்கிறதா எனத் தேடிய போது இல்லை என்ற நற்செய்தி கிட்ட நாம் “உயர்திணை” ஆனோம்.

இவற்றை எல்லாம் நான் எதற்குச் சொல்கிறேன் என்றால் ஒரு விதை வளர்ந்து முளைகொள்ளத் தேவையான அனைத்து விடயங்களும் இந்த நான்கு மாதங்களுக்குள் தாமாகவே வந்து சேர்ந்தன என்பதைத் தாழ்மையோடு தெரிவிக்கத் தான்.

அதன் பின்னர் அழைப்பிதழ் தயாரானது.




அதன் நிகழ்ச்சி நிரல் கீழ் கண்டவாறு தயாராயிற்று.


 ”உயர் திணை” நடாத்தும் ஜீவநதி
சிறப்பிதழ் விமர்சன அரங்கு 10.06.2012

Toongabbie Community Centre,” Billard Room” 244,Toongabbie Road, Toongabbie.

                        நிகழ்ச்சி நிரல் 
         நிகழ்ச்சி நெறியாளர்:திரு.ம.பிரவீணன்   
  
1.00– 1.30 -  அமர்வு
1.30 – 1.35 – வணக்கமும் வரவேற்பும்;
1.35 – 1.45 – ”உயர்திணை” அறிமுகம்: திருவாட்டி.ப.யசோதா.
1.45 – 2.00 – “ஜீவநதி” அறிமுகம்: திரு; லெ.முருகபூபதி.

2.00 – 4.00             விமர்சன அரங்கு  
          நெறிப்படுத்துபவர்: திரு.செ.பாஸ்கரன்
15 நிமி. விமர்சனம்: சிறுகதைகளைமுன்வைத்து:திரு:ஆறு.குமாரசெல்வம்
         – சபையின் கருத்து: தொடக்கி வைப்பவர் திரு;ச.ஜெயக்குமாரன்
15 நிமி. விமர்சனம்: கவிதைகளை முன்வைத்து: திருவாட்டி.ம.கோகிலா.
         – சபையின் கருத்து: தொடக்கி வைப்பவர்: திரு;இ.கேதாரசர்மா.
15 நிமி.– விமர்சனம்: கட்டுரைகளை முன்வைத்து; திருவாட்டி;சி.இந்துமதி.
        – சபையின் கருத்து: தொடக்கி வைப்பவர்;திருவாட்டி.க.செளந்தரி


4.00 – 4. 05 –நன்றியுரை – திருவாட்டி.ப.யசோதா.
4.05. – 4.30 - தேநீர் விருந்தும் குறும்படக்காட்சியும் கலந்துரையாடலும்         நெறிப்படுத்துபவர்:திரு.செ.பாஸ்கரன்.


இப்படியாக ஒரு நிகழ்ச்சிக்கான முன் மொழிவுகள் ஆரம்பமாயின.நாட்டியக் கலாநிதியும் ATBC யில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் இருக்கும் திருவாட்டி.கார்த்திகா. கணேசர் அவர்கள் என்னை வற்புறுத்தி வானொலி நிலயத்துக்கு அழைத்து அரைமணி நேர நேர்முகத்தை வழங்கி பலரையும் இச் செய்தி கிட்ட வழிவகை செய்தார். மின் பத்திரிகை நடத்தும் பாஸ்கரன் அழைப்பிதழை தன் பத்திரிகையில் பிரசுரித்து பலரும் அரிய வழிவகை செய்தார். ஜேகே தன் http://www.padalay.com  இல் அவருக்குரிய பாணியில் அதனை அறிமுகம் செய்திருந்தார். இவை எல்லாம் நாம் கேட்காமலே தாமாக முன் வந்து செய்யப் பட்டவை.

அதே நேரம் இந் நிகழ்ச்சி தயாரான போது அந்த மூன்று விடுமுறை நாட்களிலும் ஒரு பெரும் இசைவிழா அருகிருந்த பெரு நகரத்தில் நடைபெற ஏற்பாடாகி இருந்தது. அனுபவம் வாய்ந்த இசைக்கலைஞர்கள் பாரதத்தில் இருந்து வருவிக்கப் பட்டு நடாத்தப் படும் வருடாந்த விழா அது. அதற்கான ஏற்பாடுகள் மிகத்திட்டமிட்டு கச்சிதமாக நடந்து கொண்டிருந்தன. அதே நேரம் சிட்னி மாநகரில் சர்வதேச திரைப்பட விழா ஒன்றும் நடந்து கொண்டிருந்தது.

இத்தகைய ஏற்பாடுகளின் இடையே தான் இந்த நிகழ்வும் ஏற்பாடாக்க வேண்டி இருந்தது.

தொடரும்........

                                         

Tuesday, June 5, 2012

உள்ளொளி



பல வாரங்களின் பின் மீண்டும் சந்திக்கிறேன்.

ஒரு மாதத்தின் முன் வேலைத் தலத்தில் என் அருகிருந்த தோழன் - வெள்ளிக்கிழமை அருகில் இருந்து விடுமுறை நாள் வாழ்த்துக் கூறியவன் - திங்கள் கிழமை உயிரோடு இல்லை என்ற அதிர்ச்சியையும் அது கிளர்த்திச் சென்ற சிந்தனைகளையும் ஜீரணிக்கவும் என்னை ஒரு தடவை சுய விமர்சனம் செய்து கொள்ளவும் இந்த இடைவெளி தேவையாய் இருந்தது.

பல விடயங்களில் என்னை நான் சரி செய்து கொள்ள வேண்டி இருக்கிறது.

நேரத்தை சீரமைத்து திட்டமிட்டுக் கொள்ள வேண்டி இருக்கிறது.

உறவுகளிடையே செய்ய வேண்டி இருக்கின்ற கடைமைகள் நிறைய இருக்கின்றன.

‘போகின்ற’ திகதி தெரியாததால் போகின்ற போது மனநிறைவோடு போக சில பிராயச் சித்தங்களையும் செய்ய வேண்டி இருக்கிறது.

எப்போதும் ‘தயார்’ நிலையில் இருக்க மனம் பணிக்கிறது.

தெரியாமல் செய்த குற்றங்கள் தவறுகளுக்கு என்ன செய்யலாம் என்று சிந்திக்க பல மணி நேரங்களைச் செலவிட வேண்டி இருக்கிறது.

முழுவதுமாக என்னைக் குலைத்துப் போட்டு விட்டு மீளச் சீராகக் கட்டி எழுப்பத் தோன்றுகிறது.

பல விடயங்களைச் சொல்லவும் எழுதவும் விடயங்கள் இருக்கின்ற போதும் அவற்றைத் தொட மனசில்லாமல் இருக்கிறது.

இதற்கிடையில் நம் இலக்கியச் சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. அது பற்றி நம் ஸ்தாபகருள் ஒருவரான நாட்டியக் கலாநிதி.கார்த்திகா.கணேசர் எழுதித் தந்த ஆக்கம் ஒன்று பதிவுக்காகக் காத்திருக்கிறது.

மேலும் அடுத்த இலக்கியச் சந்திப்பு வருகின்ற வாரம் மேலும் ஒரு தளத்துக்கு எடுத்துச் செல்லப்பட இருக்கிறது.

இந்த ஜோர்ஜ் கிளர்த்திச் சென்ற சிந்தனைகளில் இருந்து விடுபட முடியா சிறையில் நான் இப்போது இருக்கிறேன்.

இந்த இடத்தைக் கடந்தால் தான் அடுத்த பகுதிக்கு நகரலாம் என்றும் தோன்றுகிறது. காலம் நம்மைத் துரத்திக் கொண்டிருக்க விரும்பியோ விரும்பாமலோ அடுத்த கட்டத்துக்குப் போயாக வேண்டும் நாம்.

அண்மையில் பார்த்த ஆனந்த விகடன் கவிதை ஒன்று என் மனநிலையை அப்படியே சொல்லிச் செல்கிறது.





உயில் மொழி

என்னுயிர்
பிரியும் வேளையில்
தலைமாட்டிலும்
கால்மாட்டிலும்
நின்றவர்கள்
நீங்கள் தானா?

இமைகளை மூடி விட்டது
எந்த விரல்கள்?

நாடிக் கட்டுக்காய்
கிளிக்கப்பட்ட துணி
எவருடயது?

அசுத்தங்கள் நீக்கி
என் பிரேதத்தை
குளிப்பாட்டி
கபன்* பொதித்தவர்கள்
யாரெல்லாம்?

வியர்வை சிந்த
எனக்கான
கபர் குழியை*
வெட்டியவர்கள் எவர்?

என் ஜனாஸாவை*
சுமந்து சென்ற
தோள்கள் எவருடயவை?

என் பிரிவிற்காய்
கண்ணீர் வழிந்த
கன்னங்கள் எத்தனை?

என் வாழ் காலத்தில்
உங்களைக் கடக்க நேர்ந்த
பொழுதுகளில்
உங்களுக்காகப்
புன்னகைத்திருக்கிறேனா
நான்?


*கபன் - இறந்தவர்கள் மீது போர்த்தப்படும் துணி.
*கப்ர் குழி - அடக்கம் செய்யப்படும் குழி
*ஜனாஸா - பிரேதம்.

_வி.எஸ்.முஹம்மது அமீன். - 
25.04.2012 ஆனந்த விகடன். பக்; 37.