Sunday, March 6, 2011

கள்ளூறும் பொய்கை


அண்மையில் அருணாச்சலப் பிரதேசத்தில் அற்ககோல் தொழில்நுட்பம் பயின்ற இரசாயணத்துறையில் முதுகலைமானிப் பட்டம் பெற்ற பங்கஜ் என்பவர் அருணாசலப் பிரதேசத்தில் இருக்கின்ற மலைப்புறங்களில் விளைகின்ற வாழைப்பழத்தில் இருந்து வைன் தயாரிக்கலாம் என்று கண்டு பிடித்திருப்பதாக ஒரு செய்தி அறிந்து கொண்டேன்.மலைப் புறங்களில் செழிப்பாக வளர்கின்ற அந்தக் குறிப்பிட்ட வாழைப்பழங்களுக்கு இனிமையும் சுவையும் அதிகமாகக் காணப்படுவது தான் அதற்குக் காரணமாம்.

அவுஸ்திரேலியாவும் வைன் தயாரிப்புக்கு மிகவும் பிரசித்தி பெற்றது.விருந்துக்கு யார் வீட்டுக்காவது செல்வதாக இருந்தால் அல்லது உணவு விடுதிகளுக்கு இரவு விருந்தொன்றுக்குச் செல்வதாக இருந்தால் வைன் போத்தல்களோடு அவர்கள் செல்வார்கள்.

வைன் உற்பத்தி செய்கின்ற பிராந்தியத்துக்கு ஒரு முறை நானும் சென்றிருந்தேன்.கண்னுக்கெட்டிய தூரம் வரை திராட்சைத் தோட்டங்களும் பல நூற்றுக் கணக்கான வகைகளில் திராட்சை ரசங்கள் ருசி பார்ப்பதற்காகவும் வைக்கப் பட்டிருக்கும்.நாம் அருந்திப் பார்த்து விருப்பமானதைத் தெரிவு செய்யலாம்.

அவர்கள் போத்தலைப் பிடிக்கும் விதம், அதனை கண்ணாடிக் குடுவைக்குள் ஊற்றும் போது ஊற்றுவதில் அவர்கள் காட்டும் பக்குவம், என்று எல்லாவற்றிலும் ஒரு பக்குவம் இருக்கும்.அந்தக் குறிப்பிட்ட வைனைப் பற்றி அதன் தோற்ற வரலாறு குண இயல்புகளை வர்ணிக்கும் போது பார்த்தால், யாரோ ஒரு பாசமுள்ள பெற்றோர் தன் ஒரே மகளைத் திருமணம் பேசும் மாப்பிள்ளை வீட்டாருக்கு தாரைவார்த்துக் கொடுக்கு முன் மகளின் இனிய குண இயல்புகளைப் பேசுவது போலவோ; அல்லது குண்டுமணியைத் அல்லது மஞ்சாடியை தராசின் ஒரு பக்கம் போட்டு மறு பக்கத்தில் தங்கத்தை நிறுப்பது போலவோ ஒரு பொறுப்பான பக்குவமும் உன்னிப்பான பார்வையும் இருக்கும்.

வாங்குபவர்களும் ஏதோ யாரோ ஒருவரின் மகளை நான் பத்திரமாகப் பார்த்துக் கொள்வேன் என்ற நம்பிக்கையை இறக்கும் தறுவாயில் இருக்கும் தன் ஆத்ம நண்பனுக்கு எப்படியாவது சொல்லி வழியனுப்பி விட வேண்டும் என்ற கணக்காக அதனை வெகு அக்கறையோடு கேட்டுக் கொண்டிருப்பார்.

தொலைக் காட்சியில் வைன் எப்படிப் பருக வேண்டும் என்பதைப் பற்றி எல்லாம் வகுப்பு எடுப்பார்கள்.குவளையை எப்படிப் பிடிக்க வேண்டும்,வைனை அதற்குள் ஊற்றிய பின் அதனை 2,3 தரம் சுளாவுவது எப்படி? உதட்டில் குவளையை பொருத்தி ஒரு மிகச் சிறு மிடறினை எவ்வாறு உட்கொள்வது? பிறகு எப்படி மெல்லியதாகச் சத்தமற்று சப்புக் கொட்டி ருசியை அதன் தரத்தை,அதன் குணத்தை உணர்வது என்றெல்லாம் மிக அக்கறையாகச் சொல்லிக் கொடுப்பார்கள்.

அது முழுக்க முழுக்க எனக்கு வேறுபட்ட உலகம். பரீட்சயமில்லாத தனி உலகம்.ஆனாலும் டெசேட் வைன் என்று ஒரு சிவப்பு நிற வைனை வாங்கி வந்தேன். அதனை ருசி பார்த்த போது என் மிகச் சிறு வயதில் வயிற்று உபாதைகளுக்கு அம்மா தரும் கிறேப் வோட்டர் என்ற சுவையும் வாசமும் மிக்க மருந்தை அது நினைவூட்டியது தான் அதனை நான் வாங்குவதற்கான பிரதான காரணம்.(வயிற்று வலி உபாதைகள் இல்லாத போதும் வயிற்றை வலிக்கின்றது என்று சொல்லி அதனை வாங்கிக் குடித்தது இப்போதும் நல்ல ஞாபகம். அம்மருந்து இப்போதும் வருகிறதா என்று தெரியாது. ஆனால் அதன் வாசமும் சுவையும் மிக இனிமை.)ஆனாலும் இக் கணம் வரை - மூன்று வருடங்களுக்கும் மேலாக அது பெட்டிக்குள் உறங்கிக் கொண்டிருக்கின்றது.

ஒவ்வொரு வருடமும் வருட முடிவில் வீட்டை மீண்டுமொரு முறைக்கு ஒழுங்காக்கும் போது கைக்கு அது அகப்படும்.அவுஸ்திரேலியர்களைப் போலவே மிகப் பக்குவமாக அதை உருட்டி உருட்டிப் பார்ப்பேன். அதில் எந்த ஒரு விஷேஷமும் எனக்குத் தென் படுவதில்லை. அது என்னைப் பொறுத்தவரை வெறும் போத்தலாகவே இருக்கிறது.தூசினை நல்லதொரு துணியினால் துடைத்து விட்டு அவர்கள் வைத்துத் தந்த அதற்கென விஷேஷமாகத் தயாரிக்கப் பட்டிருந்த பளபளப்பான உயரமான கறுப்பும் தங்க நிற எழுத்துக்களும் கலந்த பையினுள் வைத்து அது தன் இருப்பிடத்தில் மீண்டும் அமர்ந்து கொள்ளும்.ஆனால் மீண்டும் ஒருமுறை ஹன்ரர் என்ற இடத்துக்குப் போன அந்த பசுமையான நினைவுகளை மட்டும் அந்த வைன் போத்தல் எனக்குத் தந்திருக்கும்.

இந்தத் திராட்சைக் கள்ளை திருமணமாகாத இளம் ’கன்னிப்’ பெண்களை திராட்சைப் பழங்கள் இருக்கின்ற பள்ளத்துக்குள் இறக்கிவிட்டு விட்டு அருகில் நின்று இனிமையான வயலின் இசையை மீட்டுவார்களாம். அந்த இசைக்குத் தகுந்த படி அக் கன்னிப் பெண்கள் நடனமாடிய படி திராட்சைப் பழங்களை உளக்கி ரசமாக்குவார்களாம். பிறகு அதனைப் பதப்படுத்தி குடுவைகளில் இட்டு மண்ணுக்குள் புதைத்து விடுவார்களாம். பின்னர் பல வருடங்களின் பின்னால் எடுத்து பருகுவார்களாம்.இதுவும் திராட்சை ரசம் பற்றிய ஒரு செய்தி!

இவை எல்லாம் ஒன்றோடொன்றாக நினைவுக்கு வந்ததற்குக் காரணம் அண்மையில் காணக்கிட்டிய இந்திய வாழைப்பழ வைன் பற்றிய செய்தி தான்.இதனை அறிந்த போது சங்க இலக்கியத்தில் உள்ள பாடல் ஒன்று சட்டென நினைவுக்கு வந்தது.இது ஒரு ’கள்குளம்’பற்றியது.முழுக்க முழுக்க இயற்கையே அதனை அமைத்துக் கொடுத்திருக்கிறது. அத்தனை வளங் கொழித்த ஒரு மலைப்புறத்து பாடல் இது. அந்த மலை நாட்டின் வளத்தைக் கூறும் ஒரு பாடல்.

பங்கஜ் பார்த்த அதே வாழைப்பழம்; அதே மலைப்புறம்;பொய்கையோரம் செழித்து வளர்ந்துள்ளன வாழை மரங்கள்.இங்கே அழகிய கன்னிப் பெண்கள் பழங்களை உழக்கவில்லை; இப்போதையைப் போல் இசை அங்கே ஒலிக்கவில்லை.தாட்டு வைத்துக் காத்திருக்கவில்லை.இன்ஸ்டன் கள்ளு!அதனை இயற்கை எவ்வாறு செய்து விடுகின்றது என்று பாருங்கள்.

தன் பழக் குலைகளில் இருந்து தானாக முற்றிப் பழுத்துக் கொட்டுகின்றன வாழைப்பழங்கள் பொய்கைக்குள். அது போலவே தீங்கனிச் சாறாக முற்றி பழுத்துக் கொட்டுண்ட பலாச்சுளைகளின் இனிய சாறும் பொய்கை நீருள் கலக்கின்றது. இந்தக் கலவையை இயற்கையாகவே சூரிய பகவான் சூடாக்குவதால் அவை நொதித்து ‘ஊழ்படு தேறல்’என்ற கள் ஆகிறது.இவ்வாறு இயற்கையாகவே கள் ஊறுகின்ற சுணை நீரில் தாகத்துக்கு வந்து தண்ணீர் குடிக்கிறது குரங்கு.இல்லை இல்லை. தண்ணீர் என்று நினைத்து கள்ளினை உண்டு விடுகின்றது. அதனால் போதை மிக்க மயக்கம் அதற்கு. அதன் நிமித்தமாக மிளகுக் கொடிகள் படர்ந்துயர்ந்திருக்கின்ற சந்தன மரத்தில் ஏற முடியாமல் கள்ளின் போதையில் அக்குரங்குகள் மலர்கள் கொட்டிக் கிடக்கும் மலர் தரையில் மயங்கிக் கிடக்கின்ற மலை நாடே! என்கிறார் கபிலர் என்ற இவ் அகநானூற்றுப் புலவர். இப்பாடல் அகநானூறில் 2வதாக அமைந்திருக்கின்றது.

அந்தப் பாடல் இது தான்.

“கோழிலை வாழைக் கோள்முதிர் பெருங்குலை
ஊளுறு தீங்கனி உண்ணுநர் தடுத்த
சாரற்பலவின் சுளையொடு ஊழ் படு
பாறை நெடுஞ் சுணை விளைந்த தேறல்
அறியாது உண்ட கடுவன் அயலது
கறிவளர் சாந்தம் ஏறல் செல்லாது
நறுவீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும்
குறியா இன்பம் எளிதின் நின் மலைப்
பல்வேறு விலங்கும் எய்தும் நாடே”.

வாழைப்பழமும் மலை நாடும் இந்தியாவும் முன்னரே இயற்கையாகக் கண்டு பிடித்த ’ஊழ்படு தேறலைத்’ தானோ இப்போது பல நூற்றாண்டுகள் கழித்து பங்கஜ் கண்டுபிடித்திருக்கின்றார்?

Monday, February 21, 2011

பழந் தமிழ்

’மாற்றங்கள் எப்போதும் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கும்.’அதற்கு மொழி ஒன்றும் விதி விலக்கல்ல.கால ஓட்டத்துக்கேற்றவாறு மொழியும் தன்னைப் பல வழிகளில் புத்துருக்கியும், சிலவற்றை விட்டொழித்தும், புதிய சிலவிடயங்களைப் பெற்றும் தன்னை நிலை நிறுத்தி வந்திருக்கிறது.சில சொற்கள் வழக்கொழிந்தும் புதிய சில சொற்கள் வந்து சேர்ந்தும் அது தன்னை வாழ் நிலையில் வைத்திருக்கிறது.

18ம் நூற்றாண்டில் புழக்கத்தில் இருந்த தமிழ் இது.அப்போதைக்கும் இப்போதைக்கும் தான் எத்தனை இடைவெளி! எத்தனை மாற்றம்!! என்று கொண்ட ஆச்சரியத்தின் விளைவு புனைவு கொண்ட இந்தப் பதிவு.

அப்போது பாவனையில் இருந்த சில சொற்களை வைத்து ஒரு சம்பவத்தைப் பின்னி இருக்கிறேன். சொற்களுக்கான பொருளைக் கண்டு பிடிக்க முடிகிறதா? முடிந்தால் சற்றே சொல்லிச் செல்லலாமே!

*********************************

ஞாட்புக்கு முற்பட்ட காலம் அது!

18ம் நூற்றாண்டு!!

சாளரத்தைத் திறந்து வெளியே பார்த்தாள் சந்தனா.அது ஓர் அதிகாலைப் பொழுது! மழை பெய்து ஈரலிப்பாக இருந்தது நிலம்.சில் என்ற குளிர்காற்று முகத்தில் வீசியது.தோட்டப் புறம் நிலவொளியில் மங்கலாய்த் தெரிந்தது.கிணற்றங்கரையை அண்டிய வெளியில் செம்மண் பூமியில் செழிப்பாய் வளர்ந்திருந்த துவர்க்காய் மரங்களும் கிஞ்சுகத்தில் படர்ந்திருந்த தாம்பூலவல்லிக் கொடிகளும் அதற்கருகாக அமைந்திருந்த காரவல்லிப் பந்தலும் கண்களுக்கு மங்கலாய்த் தெரிந்தன.தூரத்தே கொஞ்சம் புற்பதிகள் அசைவதையும் கண்கள் கண்டு கொண்டன.நேரம் அண்னளவாக 4.45 மணி இருக்கும் போலத் தோன்றியது.கீழ் திசையில் பிரகாசமாய் ஒரு நட்சத்திரம்.

புழைக்கடைக் கதவைத் திறந்து வெளியே வந்தாள் சந்தனா.வாய்க்காலும் வரம்புகளும் மரங்களுமான பெரிய வளவு அது.அங்கே வத்சலையும் வந்சமும் நின்றிருப்பது தெரிந்தது.முன்னொரு காலத்தில் பகடுகளும்,மேதிகளும், குரச்சைகளின் ஒலியுமாக இந்த இடம் களை கட்டி இருக்கும் என அறிந்திருந்தாள் சந்தனா.அவை எல்லாம் அழிந்து போய் இன்று அந்த இடத்தை வத்சலை நிரப்பி இருக்கிறது.

கிணற்றங்கரை நோக்கி விரைந்தாள் அவள்.அது சற்றே தொலைவு.கபோதம் ஒன்று விழித்துக் கொண்டு சிறகடித்தது.மண்டூகம் ஒன்று தூரமாய்க் கத்துவது காதில் வந்து விழுகிறது.அதற்கு,நேற்றய மழை தந்த குதூகலம் போலும்! மண்நிலம் மழையினால் கழுவுண்டு ஓலைகளையும் குப்பைகளையும் ஒரு புறமாய் ஒதுக்கி அவள் நடந்து போக வழி சமைத்திருந்தது. செம்பட்டுக் கம்பளம் போல நடைபாதை.தூரத்தே கச்சோதம் வெளிச்சத்தைச் சிந்தி சிந்தி மறைவதும் கண்ணுக்குத் தெரிகிறது.கடவுள் வழிகாட்டுகிறாரோ? அதிகாலைப் பொழுதுகள் அழகானவை; அலங்காரமானவை.மழையினால் கழுவுண்டு விடிகினற பொழுதுகள் இன்னும் அம்சமானவை.

உள்ளங்கால் ஈரம் உணர சில்லென வீசிய குளிர்காற்று முகத்தை வருடிச் சென்றது.சிமிக்கிகளைப் போல மந்தாரப் பூக்கள் பாதையின் இரு மருங்கும் தொங்கியிருக்க அவைகளுக்குள் சிற்சில சுரும்பும் கேசவமும் சிறகடிக்கும் ரீங்காரமும் காதில் விழுகிறது.கோகிலத்தின் குரலும் தூரமாய் கேட்கிறது.உடனே சந்தனாவுக்கு அவந்திகையின் நினைவு எழுந்தது.அண்மைக்கால சினேகிதமாய் அவளோடு ஒட்டி உறவாடும் உறவது.கசனத்தைக் கண்டு நேற்று அவள் தந்தை தன் பயணத்தை நிறுத்திச் சற்றே தாமதமாய் புறப்பட்டது அவளுக்கு ஏனோ சட்டென்று நினைவு வந்தது.ஏன் தந்தை இன்னும் சகுனங்களில் நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பது தான் இன்னும் அவளுக்குப் புரியாத புதிர்.

ஓர் இளவரசியைப் போல இவற்றை எல்லாம் கண்டும் கேட்டும் உணர்ந்தவாறும் நடந்து சென்று கிணற்றில் தண்ணீரை முகர்ந்து தன் மீது விரைவாக ஊற்றித் தன்னை உவளித்து உலர்த்திக் கொண்டு வீட்டுக்குள் வந்து சேர்ந்தாள் சந்தனா.இனி அவள் தாமதிக்கக் கூடாது.அவள் நவநீத நிறம்.வலப்புற சூழி கொண்ட குந்தளம்.கங்கதம் கொண்டு அதனைச் சீர் செய்து கொண்டாள்.அருகிலே இருந்த படிமக்கலத்தின் உதவியோடு அங்கராகம் இட்டுக் கொண்டாள்.மாலதியும் மெளவலும் நினைவுக்கு வர அவையும் அங்கு அரங்கேறின.

படிமக்கலத்தின் முன்னால் உள்ள முக்காலியில் உட்கார்ந்து கொண்டாள்.அந்த யெளவன மங்கைக்கு செவிப்பூ வெகு வசீகரம்.அங்குலியில் உகிர் அழகாகச் சீர் செய்யப் பட்டிருந்தது.அவை மொட்டுக்களை ஒத்திருந்தன.அவள் ஒட்டமும் அதரமும் மாதுளம் பூ.உள்ளே இருப்பனவோ மாதுளை முத்துக்கள்.அருகே அழகைக் கூட்டிய படி அங்கிதம் ஒன்று.அது சிறுவயது விளையாட்டால் கிடைத்த பரிசு.கிலுத்தைத்தில் இருந்து கூர்ப்பரம் வரை அணிகள் அழகு செய்தன.அவள் சியாமளவல்லி. தவளவண்ண சேலையில் சோபிதமாய் அவள் நின்ற நிலை ஒரு கவிதை.முகமோ மஞ்சரி.அவள் கோகில வாணி,ஞமிலினதும் வெருகலினதும் தோழி.அவள் எகினத்தின் சாயல்.

ஆனால் அவளுக்கு வைரிகளும் இருந்தார்கள்.துந்துளம் அவள் பரம வைரி.பிபீலிகையும் நளிவிடமும் அவள் வீட்டின் விருந்தாளிகள் என்பதில் அவளுக்கு பலத்த ஆட்சேபம் இன்றுவரை இருக்கிறது.கூடவே இப்போது நிலந்தியும் சேர்ந்து விட்டிருக்கிறது.இது பற்றி எத்தனையோ தரம் அவள் தந்தையிடம் முறைப்பாடு செய்தாயிற்று. எனினும் எந்த விடயமும் இன்று வரை நடந்த பாடாயில்லை.

அதே போல அவளுக்குச் சில ஆசைகளும் இருந்தன.அரச கதைகளைக் கருத்தூன்றிப் படிப்பதால் விளைகின்ற ஆசைகள் அவை.சாரங்கத்தையும் நேமியையும் சிதகத்தின் கூட்டையும் காணவேண்டும் என்பது அவள் நெடு நாளைய கனவு.தோழி ஒருத்தி கொண்டு வந்து கொடுத்திருந்த சசலத்தைப் பார்த்து அவளுக்கு வியப்போ வியப்பு!சசலம் கொண்டு அவள் செய்யும் நுட்பமான தையல் வேலைக்கு அவள் தோழியர் கூட்டம் அடிமைப்பட்டுக் கிடக்கும்.கோமளவல்லியான அவள் ஞெள்ளல் பொருந்தியவள்.பொற்பும் போதமும் நிறைந்தவள்.பிங்கல அனிகலன்களை அவள் அணிந்து கன்னல் மொழி பேசி வந்தால் காண்போர் மனம் கொள்ளை கொண்டு போகும்.

அவள் புறப்பட்டு விட்டாள்.இனித் துச்சில் புறமாக ஓதம் வந்ததால் பங்கமுற்றிருந்த பகுதியைத் தாண்டி நடந்தால் சற்றே வெளிச்சம் தென்படும்.தால வரிசை செறிந்த மார்க்கம் புலப்படும்.அதனைக் கடந்தால் விடங்கம் அலங்கரித்த மறுகு வரும்.அதனூடு போனால் பாகசாலை தெரியும்.அவள் விரைந்து நடந்தாள். கபித்தமும் சிந்தகமும் அவ்விடத்தைச் சுற்றி வளர்ந்து இருந்தன.அவற்றினிடையே ஒன்றிரண்டு ஆசினியும் அலங்கரித்தன.அவை செழுமையைப் பறைசாற்றிய வண்னம் அந்த இடத்துக்கு ஒரு வித சோபிதத்தை அளித்துக் கொண்டிருந்தன.

பாகசாலையை நெருங்கியதும் உள்ளே சில ஆட்களும் குமுதமும் தெரிந்தன.ஏனென்றால் அது பாதிக் குந்தும் கூரையும் கொண்டமைந்த பாக சாலை.அதனால் அங்கு உலூகலம்,வட்டிகை,நவியம்,முசலம்,சூர்ப்பம், தாம்பு, குழிசி,என்பன கிடப்பதும் தெரிந்தன.ஞிகிழியில் இருந்து வந்த வெளிச்சத்தில் மும்மரமாய் வேலை செய்து கொண்டிருந்த தொண்டர்கள் தென்பட்டனர்.அவர்கள் மீது தென்பட்ட சுவேதம் தவள நிற பெளவம் போல மிளிர்ந்து தனிச் சோபையை அவர்களுக்கு அளித்துக் கொண்டிருந்தது.அது தொண்டுமை தந்த பரிசு அவர்களுக்கு.அது பக்தித் தொண்டுமை!


அதனருகே பதிவான சிறு குடில் பகுதி கீசகம் கொண்டு முழுமை பெற்றிருந்தது.அதற்கருகே நறுமருப்பும் உருளரிசிச் செடிகளும் இறும்பு போல அடர்ந்திருந்தன.அதற்குள் சசம் பதுங்கி இருப்பது வழக்கம் என்பது ஒரு சிலருக்கே தெரியும். சந்தனாவுக்கு அது தெரிந்திருக்க நியாயமில்லை.தெரிந்திருந்தால் அதுவும் வேண்டும் என்று கேட்டிருப்பாள்.

இவற்றை எல்லாம் பார்த்த படி ஞெள்ளல் கொண்ட பாவனபக்தியோடு மதுரமான சந்தனா சசியோடு விரைந்து நடந்தாள்.அவள் கம்பீர மகிஷி.சுதந்திர ராணி.இயற்கையோடு உறவாடும் உள்ளத்தினள்.பக்தி கொண்ட பாவை.அவள் மனமெல்லாம் நேமி நாதம் கேட்கும் ஆசை.

சயந்தன தரிசனத்துக்காகத் தான் இந்த அவசரமெல்லாம்.”

********************** *******

எங்கே, சொற்களுக்குப் பொருளைக் கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்.

சுரும்பு -
கேசவம் -
கோகிலம் -
அவந்திகை -
கசனம் -

உவளித்து -
படிமக்கலம் -
நவநீதம் -
சூழி -
குந்தளம் -
கங்கதம் -
அங்கராகம் -
மாலதி -
மெளவல் -

அங்குலி -
உகிர் -
ஒட்டம் -
அதரம் -
அங்கிதம் -
கிலுத்தம் -
கூர்ப்பரம் -

சியாமளம் -
மஞ்சரி -
கோகிலம் -
ஞிமிலி -
வெருகல் -
எகினம் -

துந்துளம் -
பிபீலிகை -
நளிவிடம் -
நிலந்தி -

சாரங்கம்
நேமி -
சிதகம் -
சசலம் -
கோமளம் -
ஞெள்ளல் -
பொற்பு -
போதம் -
பிங்கலம் -
கன்னல் -

துச்சில் -
ஓதம் -
பங்கம் -
தால வரிசை -
மார்க்கம் -
விடங்கம் -
மறுகு -
பாக சாலை -
கபித்தம் -
சிந்தகம் -
ஆசினி -

குமுதம் -
உலூகலம் - வட்டிகை -
நவியம் -
முசலம் -
சூர்ப்பம் -
தாம்பு -
குழிசி -

சுவேதம் -
தவளம் -
பெளவம் -

சீசகம் -
நறுமருப்பு -
உருளரிசி -
சசம் -

மதுரம் -
சசி -
நேமிநாதம் -
சயந்தனம் -

Sunday, February 13, 2011

புலவர் குறுங்கோழியூர்க் கிளார்



இவர் வேளான் மரபினர்.(விவசாயக் குடி வழி வந்தவர்).இவர் உறையூரைச் சேர்ந்தவர் என்பர்.இவர் மூன்று பாடல்களை புறநானூறு என்ற சங்க இலக்கியத்தில் பாடி இருக்கிறார்.அவை முறையே 17,20,22ம் பாடல்களாக அமைந்துள்ளன. அவருடய பாடல்கள் நீண்டவையாக அமைந்து கானப்படினும்; அதில் பொதிந்து நிற்கின்ற கருத்துக்கள்,சொல்ல வந்த பொருளைச் சொல்லும் பாங்கு,எடுத்துக் காட்டும் விடயங்கள் - அவரது புலமைக்கும் ஆற்றலுக்கும் மதி நுட்பத்துக்கும் சான்றாக அமைந்துள்ளன.

அவரது 17வது பாடல் ஒரு வரலாற்றுக் குறிப்பைத் தன்னுள்ளே தாங்கி நிற்கின்றது.அதனை வேறொரு சந்தர்ப்பத்தில் தனியாகக் காண்போம்.அது தனியாகப் படித்து இன்புறத் தக்க இயல்பு வாய்ந்தது.அவரது 22 வதாக அமைந்திருக்கின்ற பாடல்,’நாட்டில் வேளாண்மைத் தொழிலை செயலாற்றுக. அதுவே உனக்கு மேன்மையைத் தரும்’ என்று அரசர்க்கு சொல்வதைப் போன்ற பொருளைத் தந்து நிற்கிறது.இப்போது நாம் பார்க்க இருக்கின்ற பாடல் 20 வதாகும்.

இப் புலவரது பாடல் நாயகன் சேரமான் இரும்பொறை என்ற மன்னன்.இவன் செங்கோண்மையும் வள்ளல் தன்மையும் கொண்ட சிறந்த போர் வீரனாவான்.இவன் தலையலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியனோடு போர் செய்து தோற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியவன்.கபிலர் என்ற புலவனின் நண்பனாகவும் விளங்கிய இம்மன்னன் பாரி வள்ளல் காலத்தைச் சேர்ந்தவனாக இருக்க வேண்டும் என்று அறிஞர் கொள்வர்.

படித்துப் படித்து இன்புறவும் தக்கனவாக அமைந்திருக்கின்ற இவர் கையாளும் தமிழின் அழகும் பாடு பொருளும் அவற்றைச் சொல்லும் திறமும் அவற்றோடு இழையோடியிருக்கும் நேர்மை கலந்த அன்பின் ஊட்டமும் இப்புலவனின் அறிவழகுக்குச் சாட்சி.புறநானூற்றுப் புதையலில் இது ஒரு முத்து.

சரி, இனி இந்தப் பாடலையும் அதன் சொற் சுவையையும் பாருங்கள்!

“இரு முந்நீர் குட்டமும்,
வியன் ஞாலத்து அகலமும்,
வளி வழங்கு திசையும்,
வறிது நிலைஇய காயமும் என்றாங்கு,
அவை அளந்து அறியினும் அளத்தற்கு அரியை!

அறிவும் ஈரமும் பெருங் கண்ணோட்டமும்,
சோறு படுக்கும் தீயொடு
செஞ் ஞாயிற்றுத் தெறல் அல்லது,
பிறிது தெறல் அறியார் நின் நிழல் வாழ்வோரே!
திருவில் அல்லது கொலைவில் அறியார்;

நாஞ்சில் அல்லது படையும் அறியார்;
திறன் அறி வயவரொடு தெவ்வர் தேய அப்
பிறர் மண் உண்ணும் செம்மல்! நின் நாட்டு
வயவுறு மகளிர் வேட்டு உணின் அல்லது,
பகைவர் உண்ணா அருமண் ணினையே!

அம்பு துஞ்சும் கடி அரணால்,
அறம் துஞ்சும் செங்கோ லையே
புதுப் புள் வரினும் பழம் புள் போகினும்
விதுப்புற அறியா ஏமக் காப்பினை!
அனையை ஆகல் மாறே
மன்னுயிர் எல்லாம் நின் அஞ் சும்மே!”

இந்தப் பாடலின் பொருள் என்னவென்றால், ‘சேர மன்னனே! பெரிய கடலாழமும்,அகன்று விரிந்த நிலப் பரப்பும், காற்று வீசும் திசைகளும்,குற்றமில்லாத ஆகாயமும் - என இவ்வாறானவற்றை அளந்து அறிய வேண்டுமானாலும் அறியலாம்.ஆனால் உன்னுடய ஆற்றலையும் புகழையும் அளந்து அறிவதற்கு இயலாது.அத்தகைய சிறப்புடையது உன்னுடய அறிவின் கூர்மையும் அன்பின் ஈட்டமும் யாவற்றையும் நுட்பமாக உணரும் கண்ணோட்டமுமாகும்.(கண்ணோட்டம் - ஒரு விடயத்தை விமர்சன நீதியாகப் பார்க்கும் ஆற்றல்).இதனை வள்ளுவர்,

‘கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் - அஃது இன்றெல்
புண் என்று உணரப் படும்’ என்பார்.

சேரனே!அரிசியைச் சோறாக்கும் நெருப்பும்,சூரியனுடய இயல்பான கோடை வெப்பமும் அல்லாது உன்னுடைய வெண்கொற்றக் குடையின் கீழ் வாழும் மக்கள் வேறு விதமான வெப்பத்தை அறிய மாட்டார்கள்.மற்றும் உன்னுடய நாட்டு மக்கள் வானத்தில் தோன்றும் செழுமையான வில்லை அறிவார்களே அன்றிப், பகைவர்கள் போர் தொடுக்கும் வில்லை அறிய மாட்டார்கள்.அவர்கள் நிலத்தில் உழுகின்ற கலப்பையை அறிவார்களேயன்றிப்,பகைமை கொண்டு போர் செய்யும் பகைவர்களது ஆயுதங்களை அறிய மாட்டார்கள்.

ஆற்றல் மிக்க வீரர்களைத் துணையாகக் கொண்டு, பகைவர் அழியுமாறு போர் செய்து, அவர்கள் நாட்டைக் கைக்கொள்ளும் மேன்மையுடையவனே! உன்னுடைய நாட்டில் உள்ள வீரத் தன்மை பொருந்திய கருவுற்ற மகளிர் விருப்பம் மிகுதியால் மண்ணைத் தம் கையால் எடுத்து சுவைக்கும் வகையில் கொள்வார்களே யன்றிப் பகைவர் ஒரு சிறிதேனும் உன் மண்ணைக் கொள்ள மாட்டார்கள்.

நீர் மிகுந்த அகழிகளை உடைய நீண்ட மதில்கள் சூழ்ந்த பாதுகாப்பும்,அறநெறி நிலவும் செங்கோண்மையும் உடைய மன்னனே! தீமை காட்டும் நிமித்தங்கள் புதிதாகத் தோன்றினாலும், முன்னமேயே காணப்பட்ட நல்ல நிமித்தங்கள்(அறிகுறிகள்) விலகுவதாகக் காணப்பட்டாலும் நிலை தளராத பாதுகாப்புடையது உன்னுடைய நாடு.அத்தகைய பாதுகாப்பைக் குடிகளுக்கு வழங்குபவன் நீ.ஆதலால் இத்தகைய சிறப்பு வாய்ந்த மன்னனுக்கு எந்தத் தீங்கும் வந்துவிடக் கூடாது என்று அன்புடைய உன் நாட்டு மக்கள் சற்றே கவலை கொள்ளவும் செய்கிறார்கள் என்கிறார்.

மேலும், இம்மன்னன் தோற்றுப் போகக் கூடிய விதமாக நிமித்தங்கள் (அறிகுறிகள்) தென்படுவதால் மக்கள் சற்றே கவலை கொள்வதாகக் குறிப்பிடுவது இப் புலவனின் மதி நுட்பத்தினதும் நேர்மைத் திறத்தினதும் மன்னன் மீது கொண்ட அன்பினதும் அழகே!அவை பரிசு பெறும் எண்னங்களைத் தாண்டிய, தன்னலம் அற்ற அன்பினதும்; மன்னன் மீது கொண்ட மதிப்பினதும் பாற்பட்டது.

இம்மன்னன் தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியனோடு போர் செய்து தோற்றுப் பின்னர் தனதாட்சியை மீண்டும் கைப்பற்றிக் கொண்டதாக வரலாறு சொல்லும்.அவ்வாறு நடந்து விடுமோ என்ற ஒரு சிறு கவலை இப்பாடலிலும் தொனித்து நிற்கக் காணலாம்.

பாடிப் பரிசு பெறுவதையும் தாண்டி உண்மை உரைத்த சிறப்பாலும் பாடல் பேசும் பொருளின் தரத்தாலும் மன்னனின் மகிமையை உரைத்த புலமைத் திறத்தாலும் இப்பாடல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

அவர் புலவர் பெருமான்; குறுங்கோழியூர்க் கிளார்.

Tuesday, February 8, 2011

கிளிப் பூ

கிளிப்பூ(parrot flower) என்றுஅழைக்கப் படும் இவ் அபூர்வ மலர் வட தாய்லாந்திலும் பர்மாவிலும் இந்தியாவின் குறிப்பிட்ட சில இடங்களிலும் காணப்படுகிறது.ஒக்ரோபர் நவம்பர் மாதங்களில் பூப்பதாம்.இதன் தாவரவியல் பெயர் Impatiens psittacina என்பதாகும்.

கிளியைப் போலவே இருக்கிறது இல்லையா?

இயற்கை எத்தனை அழகுகளைத் தான் தன்னுள்ளே கொண்டு விளங்குகிறது!கிறீஸ்துவுக்கு முற்பட்ட நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க மேதை பிளேட்டோ கூறினார்,’யார் நம்புவார்? கண்விழி போன்ற சிறிய ஓர் குமிழுக்குள்ளே பிரபஞ்சக் கோளங்களின் பிம்பங்களைக் காணும் பேராற்றல் அடங்கியிருக்கிறது என்று.’

இவ்வகிலம் முழுக்க இயற்கையின் பேராற்றலும் அழகுச் செல்வங்களும் மலிந்து கிடக்க, நாம் ஏன் இவற்றை அழித்து இயந்திரங்களை ஆக்கி நாமும் இயந்திரமாக ஓடுகிறோம்?













(படங்கள் நன்றி;கூகுள் இமேஜ்)

Tuesday, February 1, 2011

ஈழத்துக் கவிப் புலமை


ஈழத்துச் சின்னத்தம்பிப் புலவரை உங்களுக்குத் தெரிந்திருக்கும்.இவரது தந்தையார் ஒரு வித்துவான். ஒல்லாந்தரின் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்திருந்தவர்.பெயர் வில்வராய முதலியார்.அரசாங்கப் பதவி வகித்தவர். அவரது மகனார் நம்முடைய புலவர். அவருக்குப் படிப்பிலே நாட்டம் குறைவு. ஏழு வயதுப் பாலகனுக்கு விளையாட்டிலே தான் ஆர்வம் அதிகம்.

ஒரு நாள் இவர் தன் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார். வடதேசத்து முதலியார் ஒருவர் வில்வராயரைத் தேடிக் கொண்டு யாழ்ப்பாணம் வருகிறார். அவருக்கு இடம் தெரியவில்லை. அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களைக் காண்கிறார் அவர். அதில் ஒரு பையனை - அது தான் நம்முடைய சின்னத் தம்பியாரை அழைத்து முதலியாரின் வீடு எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்.பையன் மனதில் பாடலில் பதில் இயல்பாகப் பிறக்கிறது.பாடலில் பதில் சொல்கிறான் இவ்வாறு,

“பொன் பூச்சொரியும் பொலிந்த செழுந் தாதிறைக்கும்
நன்பூ தலத்தோர்க்கு நன்னிழலாம் - மின் பிரபை
வீசு புகழ் நல்லூரான் வில்லவரா யன்கனக
வாசலிடைக் கொன்றை மரம்”

அதாவது வில்வராயன் என்பவருடய வீட்டு முகப்பில் கொன்றை மரமானது அந்த வாசலைத் தங்க மயமாக்கிக் கொண்டு நிற்கிறது என்பது அப்பாடலின் பொருள்.

அப்படியாகக் கருவிலேயே திருவுடையவராக இவர் இருந்தார்.அவர் வளர்ந்து பெரியவராகிப் பாடிய பாடல்களில் பறாளை வினாயகர் பள்ளு மிகப் பிரசித்தம் வாய்ந்தது.அதில் மழை வருவதைப் பற்றிய ஒரு பாடல் இப்படி அமைந்திருக்கும்.

‘கருமயிலாடக் குயிலினம் வாடக்
கவியினம் ஓடக் கரடிபுல்வாய்
பொருபுலி யாளித் திரள் மரை சாரற்
புறமுழை பதறிக் கொடுகிடவே
அருங்குழை தவளக் குலவரை தகரத்
தடதிகி ரியின்முத் துதிர் தரவே
சொரிமல ரகிலப் பலமர முறியச்
சோவென மாரி பொழிந்ததுவே!’

அதாவது மயில்கள் ஆடுகின்றன, குயில்கள் வாடுகின்றன, குரங்குகள் ஓடுகின்றன, கரடி முதலிய விலங்குகள் கொடுகுகின்றன, குலமலைகள் தகருகின்றன,மரங்கள் முறிந்து நொருங்குகின்றன.சோ என்று மாரி பொழிகின்றது.

இவ்வாறு மழையினைக் கண்டு களித்தவாறு மலை நாட்டுக்குப் பயணமாகிறார் புலவர்.மலை நாட்டினை நம்முடய சின்னத் தம்பிப் புலவர் எப்படிப் பார்க்கிறார் என்று இனிப் பார்ப்போம்.அவருடய கண்களுக்கு அந்த மலை நாடு,

“மஞ்ச ளாவிய மாடங்கள் தோறும்
மயில்கள் போல் மடவார் கணஞ்சூழும்
அஞ்ச ரோருக பள்ளியின் மீமிசை
அன்ன வன்னக் குழாம் விளையாடும்
துஞ்சு மேதி சுறாக்களைச் சீறச்
சுறாக்களோடிப் பலாக்கனி கீறி
இஞ்சி வேலியின் மஞ்சளிற் போய் விழும்
ஈழ மண்டல நாடெங்கள் நாடே”

தெரிகிறது.மஞ்சு அளாவிய - முகில்கள் அளாவிக் கொண்டிருக்கின்ற மாடங்கள் தோறும் மயில்கள் போல பெண்கள் கூட்டம் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.அருகிலே தாமரைப் பொய்கை. அங்கே அந்தத் தாமரைப் பொய்கையிலே அன்னங்கள் விளையாடுகின்றன.அவற்றினருகிலேயே எருமைகளும் தண்ணீருக்குள் ஆழ்ந்து படுத்துக் கிடக்கின்றன.(மேதி - எருமை)அவ்வாறு ஆறுதலாகப் படுத்துக் கிடக்கின்ற எருமைகளைத் துள்ளி விளையாடும் சுறாக்கள் சீண்டுகின்றன.அதனால் எருமைகள் சினந்து சுறாக்களை தம் கொம்புகளினால் இடிக்கின்றன.அதனால் அதிர்ச்சியுற்ற சுறாக்கள் தம் இயல்பினால் துள்ளி மேலெழுகின்றன. அவ்வாறு துள்ளி மேலெழுந்து அருகிலே இருக்கின்ற வேலியில் போய் விழுகின்றன. அவ்வேலியோ இஞ்சியும் மஞ்சளும் கலந்து அமைந்த வேலி.செழிப்பான வயலோர வேலி.அருகிலே பலா மரங்களும் செழிப்புற்று நிற்கின்றன. அவற்றிலே ’பன்றி வயிற்றில் மோதுகின்ற குட்டிகளைப் போல பலாக்கனிகள்’ பழுத்துக் குலுங்குகின்றன.இவ்வாறு பாய்கின்ற சுறாமின்கள் பாய்கின்ற வேகத்தில் இப்படியாக முற்றிப் பழுத்திருக்கின்ற பலாக்கனிகளைக் கீறிப் பிளந்து கொண்டு மஞ்சளும் இஞ்சியும் விளைந்து கிடக்கின்ற வேலிகளில் போய் விழுகின்றன.

இவ்வாறு மலை நாட்டின் இயற்கை வளத்தினைப் பாடுகின்றார் நம்முடைய சின்னத் தம்பிப் புலவர்.

இது,

“வெளளத் தடங்காச் சினை வாளை
வேலிக் கமுகின் மீதேறி
துள்ளி முகிலைக் கிழித்து
மழைத் துளியோடிறங்கும் சோ நாட்”டுக்கும்

’பங்கப் பழனத் துழுமுழவர்
பலவின் கனியைப் பறித்ததென்று
சங்கிட்டெறியக் குரங்கிளநீர்
தனைக் கொண்டெறியும் தமிழ் நாட்டுக்கும்

வனப்பிலும் வளத்திலும் கவியின் சிறப்பிலும் வித்துவத் திறத்திலும் சற்றும் குறைந்ததல்ல வல்லவா?

அங்கே மழையைப் பொழிய விட்டு விட்டு செழிப்பான அந்த வளங்களையெல்லாம் கண்களால் கண்டு களித்த படி போவோம்.

இப்போது நூற்றாண்டுகள் கடந்து விட்டன.இப்போது ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்துக்குள் நுழைந்து விட்டோம்.

அங்கே,நம்முடைய தங்கத் தாத்தா - எமக்கெல்லாம் கத்தரித் தோட்டத்து வெருளியையும் பவளக் கொடியையும் ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை என்று குழந்தைப் பாடல்களையும் தந்த நவாலியூர் சோம சுந்தரப் புலவரிடம் போவோம்.

அட இதென்ன!இலங்கையைப் பார்த்த கம்பன் அங்கெங்கோ சற்றுத் தொலைவில் நம்மைப் பார்த்துக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது.அவரைச் சற்றே மரியாதை செய்து கொண்டு அப்பால் போவோம்.அவன் கவிகளுக்கெல்லாம் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தவனல்லவா?

”மாகாரின் மின்கொடி மடக்கினரடக்கி
மீகார மெங்கணு நறுந் துகள் விளக்கி
ஆகாய கங்கையினை அங்கையினால் அள்ளி
பாகாய செஞ் சொலவர் வீசு படு காரம்”

இது இலங்கை வளம் சொல்லும் கம்பராமாயணத்துக் காட்சி.

ஆஞ்சனேயருக்கூடாக இலங்கையைப் பார்க்கின்றான் கம்பன்.அங்கே,பாகினைப் போல இனிய வசனங்களைப் பேசுகின்ற பெண்கள் மா கார் - கருமேகங்களுக்கிடையே ஓடிக்கொண்டிருக்கின்ற மின் கொடிகளைப் பிடித்து மடக்கிக் கைகளுக்குள் அடக்கி (விளக்குமாறினைப் போல அவற்றினை ஆக்கி) காரம் - வீடு.மீகாரம் - மேல் வீடு.அந்த மேல் மாடத்தினை,அதன் உட்பரிகைகளில் விழுகின்ற மலர்களின் மகரந்தப் பொடிகளைக் கூட்டுகிறார்கள்.அவ்வாறு அவற்றைச் சுத்தமாக்கிய பின்னால் அருகில் இருக்கின்ற அருவியிலே ஓடுகின்ற நீரினைத் தம் உள்ளங்கைகளினால் மொண்டு கொண்டு வந்து தெளித்து புளுதியினை அடக்குகிறார்கள் என்கிறான் கம்பன்.

இதோ மகாவலி கங்கை. தங்கத் தாத்தா இங்கே நின்று கொண்டிருக்கிறார். அவரிடம் வாருங்கள் ஏது சங்கதி என்று கேட்போம்.அவர் ஈழ நாட்டு நீர் வளத்தில் சொக்கி நிற்கிறார். வாருங்கள் அவர் சொல் நீரில் முக்குளித்து நீராடுவோம்.இதோ இப்போது கங்கை, மண்ணோடு மட்டுமல்ல கவிஞர் வாயில் இருந்தும் புறப்படுகிறது.

“சீரான எந் நாடு மெப்பதியு மூரும்
சோர்வான தாவரமும் மாமரமும் காவும்
பேரான கனிமரமும்பெருமரமும் தாவில்
பெட்பாரும் பென்னைகளும் வாழையொடு மேவி
நேராக ஓரிடத்து நிலையாகக் காண
நிலமடந்தை வைத்ததென நின்று பயனுதவும்
பேராதனைப் புதிய நந்தவன மகவை
பேணி அமுதூட்டிமகா வலிகங்கை பெருகும்”

சோர்வான தாவரங்கள் (சில தூங்கு மூஞ்சி மரங்கள்)சிலவும் மாமரமும் கனி மரங்களும் பெரு மரங்களும் இருக்கின்ற,பெட்பாரும் பென்னைகளும் வாழைகளோடு ஓரிடத்தில் நேராகவும் சீராகவும் நிலைத்துக் கலந்திருக்கின்ற நிலையைக் காணுகின்ற மகாவலி கங்கை ‘இது நிலமடந்தை - பூமித்தாய் வைத்ததெல்லோ என்று நினைத்து பேராதனையின் புதிய நந்தவன மகவை பேணி கவனித்து தன் தண்ணீரினால் அமுதூட்டிய படியே தாய்மை தன்மை இதுவாகும் என்று சொல்லத் தக்க படியாக விரைகிறது.

அப்படி மகாவலி கங்கையைப் பார்த்ததும் அவருக்கு மாணிக்க கங்கையிலே மூழ்கி கதிரமலையானைத் தரிசிக்கும் ஆசை மேலோங்கி விட்டது. அவர் அப்படியே மாணிக்க கங்கையில் மூழ்குதற்குப் புறப்படுகிறார். இப்போது கண்களால் அருகி கொட்டுகிறது; அது பத்தித் தமிழருவி.பாடலைப் பாருங்கள்!

“அதிரவரு மாணிக்க கங்கை தனில் மூழ்கி
அன்போடு சிவாய என அரு நீறு பூசி
முதிரும் அன்பால் நெஞ்ச முருக,விழியருவி
முத்துதிர, மெய்ப்புளக, மூரவுரை குளறப்,
புதிய செந்தமிழ் மாலை புகழ் மாலை சூடிப்
பொருவில் கந்தா சுகந்த வென்று பாடி
கதிரமலை காணாத கண் என்ன கண்ணே
கற்பூர ஒளி காணாத கண் என்ன கண்ணே”

என்று பாடிப் பரவுகிறார்.இதனைப் பார்க்கின்ற போது எப்படியும் ஒரு சிலப்பதிகாரப் பாடல் ஒன்று நினைவுக்கு வந்து போகும். அது,

“பெரியவனை மாயவனை பேருலகமெல்லாம்
விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியும் கையும் கனிவாயும் செய்யக்
கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே
கண்ணிமைத்துக் காண்பார் தம் கண்ணென்ன கண்ணே”

என்பதை நினைக்கத் தோன்றும்.ஆனால் யாழ்ப்பாணத்தவருக்கு -அந்த யாழ்ப்பாண மண்ணுக்குரியவருக்கு இந்த மாணிக்க கங்கை பெருகுவதைப் பார்த்தால் நாவலர் உடனே ஞாபகத்துக்கு வருவார்.அவரது கண்டனப் பிரசாரங்கள் ஞாபகத்துக்கு வரும். அதனால் நவாலி என்ற யாழ்ப்பானத்துச் சிற்றூரைச் சேர்ந்த எங்கள் தங்கத் தாத்தா கதிரமலையின் அருவியைக் கண்டதும்,

“உண்ட செந்தமிழ் சைவ நூலமு
தோங்க நல்லை வந்தருளு நாவலன்
கண்டனப் பிரசங்கமாமென
கதிரமலையருவி காலுமே”

என்று ஞாபகமூட்டிப் பாடுகிறார்.அப்போது ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் அல்லவா. சமயப் பரம்பல் வெகு தீவிரமாக அமுல் படுத்தப் பட்டுக் கொண்டிருந்த பொழுது அது.ஆங்கிலம் ஆட்சி மொழியாகி தமிழ் இரண்டாம் பட்சமாகிக் கொண்டிருந்த வேளை. இவை இரண்டுக்கும் எதிராக தமிழையும் சைவத்தையும் மேலோங்கச் செய்யும் பொருட்டு நாவலர் எழுந்தார்.சைவத் தமிழ் பாடசாலைகள் பல ஆங்கில கிறீஸ்தவப் பாடசாலைகளுக்கெதிராக எழுந்தன. நாவுக்கு வல்லவராக நாவலர் திகழ்ந்தார்.

இங்கே மாணிக்க கங்கை கரை புரண்டோடுவதைப் பார்த்தவுடன் தங்கத் தாத்தா சோம சுந்தரராருக்கு நாவலரின் வாயிலிருந்து புறப்படும் அருவி ஞாபகத்துக்கு வந்து விட்டது.அதனால் கண்டனப் பிரசங்கமென இரைச்சலோடும் ஒரு வித ஆத்திரத்தோடும் மாணிக்க கங்கை பாய்வதாகத் தோன்றுகிறது அவருக்கு.

இந்தப் பொங்கிப் பிரவகித்து ஓடும் தண்ணீரைப் பார்த்ததும் புலவருக்கு இயற்கை அன்னை தனியாக வைத்திருக்கின்ற ஏழு வென்னீரூற்றுக்கள் நினைவுக்கு வந்து விட்டன. அவற்றைப் பற்றி இவ்வாறு பாடுகிறார்.

இதுவும் தங்கத் தாத்தா பாடி இருக்கின்ற பாடல் ஒன்று தான்.கந்தளாய் வென்னீரூற்றுப் பற்றியது.

“காதலனைப் பிரிந்தவளின் மனம் போல ஒன்று
கவி பாடிப் பரிசு பெறான் மனம் போல ஒன்று
தீது பழி கேட்டவன் தன் மனம் போல ஒன்று
செய்த பிழைக்கழுங்குமவன் மனம் போல ஒன்று
நீதி பெறா ஏழை துயர் மனம் போல ஒன்று
நிறை பழித்த கற்புடையாள் மனம் போல ஒன்று
காது மழுக்காறுடையான் மனம் போல ஒன்று
கனலேறு மெழுநீர்கள் உண்டு கன்னியாயில்”

ஏழு கிணறுகளுக்கும் ஏழு விதமான கொதி நிலை உண்டல்லவா? அவை எல்லாம் மேற்கண்டவாறு கொதித்துப் போயுள்ளன.இதில் நீராடி நல்லைக் கந்தனின் பாதம் பணிவோம்.

”ஏறு மயிலேறி விளையாடு முகம் ஒன்றே
ஈசனுடன் ஞான மொழி பேசு முகம் ஒன்றே
கூறுமடியார்கள் வினை தீர்த்த முகம் ஒன்றே
குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே
மாறு படு சூரரை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம்புனர வந்த முகம் ஒன்றே
ஆறுமுகமான பொருள் நீ அருள வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!”

Tuesday, January 25, 2011

பிரமாண்டங்களுக்கூடாக ஒரு வரலாற்று நிகழ்வு


இலங்கையின் வரலாற்று நூல் மகாவம்சம்.அது புராணங்களை ஒத்த கதைகள் பல நிரம்பியது. ஆனாலும், அது அரசியல் வரலாற்றை; பெளத்த சங்கங்களின் உருவாக்கங்களை; மன்னர்கள் பெளத்த சங்கங்களுக்கு அளித்த தானங்களைப் பற்றியும் கூறுகின்றது. பெளத்த துறவி ஒருவரால் எழுதப் பட்டதால் அது பெளத்தம் சார்ந்த விடயங்களுக்கும் அவற்றுக்கு ஆதரவளித்த அரசர்களைப் பற்றிப் போற்றிக் கூறுவதும் தவிர்க்க முடியாதது.அவற்றை எல்லாம் தவிர்த்துப் பார்த்தாலும் சிங்கள இனத்தவர் பெருமை கொள்ளும் விதமாக ஒரு வரலாற்றுப் பாரம்பரியத்தை அது அவர்களுக்கு வழங்குகிறது.

அதில் எல்லாளன் துட்டகைமுணு போர் வரலாற்றுப் பிரசித்தி பெற்றது.எல்லாளன் தமிழன். வயதான அரசன்.துட்டகைமுனு சிங்ள தேசத்தவன்; இளமைத் துடிப்புள்ள இளைஞன்.துட்டகமுணுவின் மனம் முழுக்க இருந்த ஆசை இலங்கையை ஒரு குடைக்கீழ் ஆளவேண்டும் என்பதே. ஒரு தடவை அவன் கால்களைக் குறுக்கிக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்த போது துட்டகைமுனுவின் தாய் விக்கிரமாதேவி தன் மகனை நோக்கி, ’ஏன் இவ்வாறு உடலைக் குறுக்கிக் கொண்டு படுத்திருக்கிறாய் மகனே! நன்றாகக் கால்களை நீட்டிக் கொண்டு படுக்கலாமே’ என்று கேட்டாள். அதற்கு வீரனான துட்டகைமுனு, ‘ஒரு புறம் தமிழர்களும் மறு புறம் கடலும் இருக்கும் போது நான் எவ்வாறு தாயே காலை நீட்டிப் படுத்துறங்க முடியும் என்று கேட்டான்.

அத்தனை பிரமாண்டம் அவன்!அவன் உள்ளத்தின் நீள அகலம் அது.

அது போல பொன்னியின் செல்வனில் ஓரிடம் வருகிறது.அது பெருங்கிள்ளி வளவன் என்ற மன்னனைப் பற்றியது. அவனிடம் யானை ஒன்றிருந்தது. அது நடந்து வருகின்றது. எப்படித் தெரியுமா?

“கச்சி ஒருகால் மிதியா ஒரு காலால்
தத்துநீர்த்தண் தஞ்சை தான் மிதியா - பிற்றையும்
ஈழம் ஒருகால் மிதியா வருமே நம்
கோழியர் கோக்கிள்ளிக் களிறு”

அதாவது,யானை வருகிறது. அது சோழ நாட்டு யானை.அது வரும் போது ஒருகால் காஞ்சி மாநகரில் இருக்கிறது.மற்றய காலைத் தஞ்சை மாநகரில் ஊன்றுகிறது.மூன்றாவது கால் ஈழ நாட்டில் ஊன்றப் படுகிறது நாலாம் கால் உறையூரில் ஊன்றப்பட்டவாறு மெல்ல அசைந்து வருகிறது.சோழ நாட்டின் ஆதிக்கப் பரம்பலை யானையில் ஏற்றி வைத்துப் பாடிய பாடல் அது.

அத்தனை பிரமாண்டம் அந்த யானை!சோழ தேசப் பரப்பும்.

இனியொரு புராணக் கதையின் பால் நகருவோம். அது உங்கள் எல்லோருக்கும் தெரிந்த மேருமலையை மத்தாகவும் வாசுகியை பாம்பாகவும் கொண்டு தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த வரலாறு.இந்தக் கற்பனை எத்தனை பிரமாண்டம் என்று பாருங்கள்.உலகின் 70% கடல். உலகின் மிகப் பெரியமலை இமையமலை. கயிறைப் போன்ற நீளமும் பெருப்பமும் உடையது மலைப்பாம்பு.தேவர்களும் அசுரர்களும் இவ்வுலகுக்கே அப்பாற்பட்டவர்கள்.இவற்றை உள்ளடக்கி விரிந்த இக் கற்பனை எத்தனை பிரமாண்டம் பார்த்தீர்களா? உலகத்தில் எல்லாவற்றையும் விட எல்லோரையும் விட உயர்ந்தது உயர்ந்தவர் சைவம்;முழுமுதற்கடவுளான திருநீலகண்டர் என்று சொல்ல இதை விட ஒரு பிரமாண்டமான கற்பனையைச் செய்ய முடியுமா?

ஆனால், செய்திருக்கிறார்கள். சங்க காலத்துப் புலவர்களுக்கு அது முற்றிலுமாகக் கைவந்திருக்கிரது.அவர்களுக்கு அது இயலுமாக இருந்திருக்கிறது.அரசனுடய திறத்தை அவர்கள் அவ்வாறு எல்லாம் பாடியிருக்கிறார்கள்.

புறநானூறில் இரண்டாவது பாடல் அத்தகைய சிறப்பு வாய்ந்தது. அப்பாடலை முரஞ்சியூர் முடிநாகராயர் என்ற புலவர் பாடி இருக்கிறார்.

“மண் தின்ற நிலனும்
நிலம் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்
தீ முரணிய நீரும், என்றாங்கு

ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்
போற்றார் பொறுத்தலும்,சூழ்ச்சியது அகலமும்
வரலும் தெறலும் அளியும் உடையோய்!
நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின்
வெந்தலைப் புணரிக் குடகடல் குளிக்கும்
.....”

என்றவாறு தொடங்குகின்றது அந்தப் பாடல்.அதாவது,மண் நிறைந்து காணப்படுகின்ற இந்த நிலமும், அதற்கு மேலாகக் கானப்படுகின்ற வானும், அதனோடு சேர்ந்திருக்கின்ற காற்றும், காற்றினுடய இயல்பினால் பெருகும் நெருப்பும், அவ்வாறான நெருப்புக்கு முரண்பட்டு விளங்குகின்ற நீருமான, இவ் ஐம்பெரும் பூதங்களான இயற்கையைப் போல விளங்குகின்ற தலைவனே!நீ உன்னைப் போற்றாதவர்களைப் பற்றி நீ சிறிதும் எண்ணினாய் இல்லை;அவர்களிடத்து நீ மிகப் பெரும் பொறுமை காட்டுகிறாய்;நன்கு ஆராய்ந்து அறிவதில் சிறந்த ஞானமும் பகைவரை அடக்குவதில் உன்னுடய பேராற்றலையும் காட்டுகிறவன் நீ!அதே நேரம் உன்னுடய குடிமக்களிடம் பெரும் அன்பும் கொண்டிருக்கிறாய்.உன்னுடய ஆட்சி உரிமை காணப்படுகின்ற கிழக்குக் கடலில் இருந்து தோன்றும் சூரியன் மீண்டும் உன் ஆட்சி உரிமைக்குரிய மேற்குக் கடலிலே சென்று நீராடும்.....என்றவாறு தொடரும் அப்பாடல்.

இது எத்தகைய பிரமாண்டம்!தெய்வ சமானம் அந்த விசாலம்!

மீண்டும் இப்போது அந்த முதலாவது பிரமாண்டத்துக்குப் போவோம்.துட்டகைமுனு தன்னால் கால் நீட்டிப் படுக்க முடியவில்லை என்பதற்கு இரண்டு காரணங்களைச் சொன்னான் அல்லவா? பின்னொரு முறை அவனுக்குக் கால் நீட்டிப் படுக்க ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது. அவன் எல்லாளனோடு மேற்கொண்ட போரில் எல்லாளனை வென்று நாட்டை ஒரு குடைக்கீழ் ஆளுகின்ற சந்தர்ப்பம் அவனுக்குக் கிட்டியது.ஆனாலும் அவன் தான் தமிழரையும் ஆளவேண்டி இருக்கும் என்பதை நன்றாக அறிந்திருந்தான். அதனால் அநுராதபுரத்தில் எல்லாளன் உயிர் துறந்த இடத்தில் போரிட்டு உயிர் துறந்த எல்லாள மன்னனுக்கு அவ்விடத்தில் நினைவு ஸ்தூபி ஒன்றை எழுப்பி அதனைத் தாண்டிப் போகும் எல்லோரும் அந்த இடத்தை வனங்கிச் செல்ல வேண்டும் என்று ஆணையிட்டான் என்று மகாவம்சம் கூறுகிறது.

அவ்வாறு அவன் தமிழர்களை வெற்றி கொண்டான்.

வரலாறு மீண்டும் திரும்பியிருக்கிறது இப்போது.

அண்மையில் அமெரிக்காவில் இலங்கை நாட்டின் அதிபர் திரு.மகிந்த ராஜபக்‌ஷவுக்கு நாடு தமிழர்களிடம் இருந்து வெற்றி கொளளப் பட்டதன் பின்னால் ஒரு வரவேற்புபசாரம் நடைபெற்றது. அங்கு அமெரிக்கத் தலைவரான பராக் ஒபாமாவுக்கு தென் ஆசியப் பிராந்தியத்துக்கான அரசியல் ஆலோசகராக விளங்குகிறார் ஒரு யாழ்ப்பாணத் தமிழன்.அவர் அந்த வரவேற்புரையில் ஒரு உரையினை ஆற்றுகிறார்.சற்றே பொறுமையோடு கேட்டுப் பாருங்கள்.

15 நிமிடங்கள் சற்றே அதிகமெனினும் முழுவதையும் தயவு கூர்ந்து பொறுமையோடு கேட்டு விட்டுச் செல்லுங்கள். ஏனென்றால் அவை எங்கள் இதயத்தின் குரல்,கைவிடப் பட்ட தமிழ் மனங்களின் அபிலாஷைகள்.

Monday, January 17, 2011

சூரியனின் குதிரைகள்



வானரங்கள் கனி கொடுத்து மந்தி யொடு கொஞ்சும்
மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழி எறிந்து வானவரை அழைப்பர்
ககன சித்தர் வந்து வந்து காயசித்தி விளைப்பர்
தேனருவித் திரை யெழும்பி வானின் வழி ஒழுகும்
செங் கதிரோன் பரிக் காலும் தேர்க் காலும் வழுகும்
கூனல் இளம் பிறை முடித்த வேணி அலங் காரர்
குற்றாலத் திரிகூட மலை எங்கள் மலையே.


இது குற்றாலக் குறவஞ்சியிலே வருகின்ற ஒரு பாடல்.இதன் பொருள் என்னவென்றால்,பழ மரங்களிலே வானரக் கூட்டம். அவை பழங்களை உண்டு களிக்கிறன. அவை தாம் மட்டும் உண்ணவில்லை. தன் இனத்தாருக்கும் கொடுத்து கொஞ்சி மகிழ்கின்றன.(மந்தி - பெண்குரங்கு;கடுவன் - ஆண்குரங்கு).அவை தம் இயல்புக்கேற்ப சிலவற்றைக் கொட்டியும் சிந்தியும் உண்கின்றன.அதாவது கொட்டிச் சிந்தியும் கொடுத்துண்டும் மகிழ்கின்றன.அவ்வாறு கொட்டுண்ணுகிற பழங்களுக்காக வானுலகில் வாழுபவர்கள் மிகவும் ஆசைப் படுகிறார்கள்.இதனை இயல்பாகவே கண்ணுறுகிறார்கள் காடுகளில் வசிக்கின்ற கானவர்கள்(வேடர்கள்). அதன் காரணமாக தேவர்களைத் தம் கண்களாலேயே பழங்களை உண்ண அழைக்கிறார்கள்.

அதே நேரம், இந்த நாட்டினுடய வளத்தைப் பார்த்தவாறு வானில் வழியாகச் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் சித்தர்கள் இந் நாட்டின் இத்தகைய வளத்தில் கிறங்கி; இங்கிறங்கித்; தம் சித்துக்களைச் செய்கிறார்கள்.அருகில் இரைச்சலோடு வானில் இருந்து பொங்கிப் பிரவகிப்பது போல மலையில் இருந்து பொங்கி வழிகிறதே தேனருவி; அதிலிருந்து மேலெழும் தண்ணீர் துளிகள் தெறித்து சூரியன் வரும் பாதை ஈரமாகி விட்டது.அதனால் ஏழு குதிரைகளைப் பூட்டிக் கொண்டு காலை தோறும் நேரம் தவறாமல் வருகின்ற சூரியனின் குதிரைகளுக்கு ஓட முடியவில்லை. அவற்றின் கால்களும் சூரியபகவானின் தேர் சில்லுகளும் வழுக்குகின்றன.என்றவாறு தொடரும் திரிகூட ராசப்பரின் மலை வளம் கூறும் பாடல்.(ஏழு வர்ணங்களுக்கும் ஏழு குதிரைகளைக் கற்பனை பண்ணிய தமிழ் கூட அழகு தான்).

திரிகூடராசப்பர் எழுதிய திருக்குற்றாலக் குறவஞ்சி என்ற இந் நூல் சோழர் காலத்துக்கு பிற்பட்ட நாயக்கர் காலத்தில் எழுந்தது.

ஆனால்,சூரியனுக்கு எப்போது தமிழ் ஏழு வர்ணங்களைக் கண்டறிந்து அதற்கு ஏழு குதிரைகளை உவமையாகக் கொடுத்தது என்பது பற்றியோ; அவர் சக்கரங்கள் பொருத்திய தேரில் அக்குதிரைகள் இழுக்க தினந்தோறும் பயணிப்பது பற்றிய கற்பனை எப்போது உருவானது என்பது பற்றியோ; இவை பற்றிய சான்றுகள் பற்றி முதன் முதலில் எங்கு குறிப்புகள் காணப்பட்டன என்பது பற்றியோ எனக்கதிகம் தெரியாது.(அறிந்தவர்கள் சொன்னால் பயனுடயதாக இருக்கும்)

ஆனால் இந்த அழகு மிகு கற்பனைக்கு நிகரான இன்னொரு அழகான கற்பனை சோழர் காலத்து பாடல் ஒன்றில் காணப்படுகிறது. பொன்னியின் செல்வனைத் தந்த கல்கி தன் முதலாம் பாகத்தில் சுந்தரசோழர் இயற்றியதாக ஒரு பாடலைக் குறிப்பிட்டிருக்கிறார். அந்தப் பாடல் இது தான்.

“இந்திரன் ஏறக் கரி அளித்தார்;
பரி ஏழளித்தார்
செந்திரு மேனித் தினகற்கு;
சிவனார் மணத்துப்
பைந்துகிலேறப் பல்லக்களித்தார்;
பழையாறை நகர்ச்
சுந்தர சோழரை யாவரொப்பார்கள் இத்
தென்னிலத்தே”

அதன் பொருளைக் கல்கியின் தமிழிலேயே அப்படியே தருகிறேன்.

”ஒரு சமயம் தேவேந்திரனுக்கும் விருத்திராசுரனுக்கும் போர் நடந்தது. அதில் இந்திரனுடய ஐராவதம்(யானை) இறந்து போய் விட்டது.அதற்கு இணையான வேறொரு யானை எங்கே கிடைக்கும் என்று இந்திரன் பார்த்துக் கொண்டிருந்தான்.கடைசியில் பழையாறை நகரில் வாழ்ந்த சுந்தர சோழ சக்கரவர்த்தியிடம் வந்து ‘ஐராவதத்துக்கு நிகரான யானை ஒன்று வேண்டும்’ என யாசித்தான்.’ஐராவத்தத்துக்கு நிகரான யானை என்னிடம் இல்லை.அதை விட சிறந்த யானைகள் தான் இருக்கின்றன’என்று கூறி,இந்திரனைத் தன் யானைக் கொட்டாரத்துக்கு அழைத்துச் சென்றார்.அங்கே குன்றங்களைப் போல் நின்ற ஆயிரக் கணக்கான யானைகளைத் தேவேந்திரன் பார்த்து விட்டு,’எதைக் கேட்பது?’ என்று தெரியாமல் திகைத்து நின்றான்.அவனுடய திகைப்பைக் கண்ட சுந்தர சோழர் தாமே ஒரு யானையைப் பொறுக்கி இந்திரனுக்கு அளித்தார்.’அந்த யானையை எப்படி அடக்கி ஆளப் போகிறோம்? நம் வஜ்ராயுதத்தினால் கூட முடியாதே!’ என்ற பீதி இந்திரனுக்கு உண்டாகி விட்டதைக் கவனித்து வஜ்ராயுதத்தை விட வலிமை வாய்ந்த ஓர் அங்குசத்தையும் அளித்தார்...

பின்னர் ஒரு காலத்தில், செங்கதிர் பரப்பி உலகுக்கெல்லாம் ஒளி தரும் சூரிய பகவானுக்கும் ராகு என்னும் அரக்கனுக்கும் பெரும் போர் மூண்டது.ராகு தினகரனை விழுங்கப் பார்த்தான்.முடியவில்லை!தினகரனுடய ஒளி அவ்விதம் ராகுவைத் தகித்து விட்டது.ஆனால் சூரியனுடய தேரில் பூட்டிய குதிரைகள் ஏழும் ராகுவினுடய காலகோடி விஷத்தினால் தாக்கப் பட்டு இறந்தன.சூரியன் தன் பிரயாணத்தை எப்படித் தொடங்குவது என்று திகைத்து நிற்கையில்,அவனுடய திக்கற்ற நிலையைக் கண்ட சுந்தர சோழர் ஏழு புதிய குதிரைகளுடன் சூரிய பகவானை அணுகி, ‘ரதத்தில் இந்தக் குதிரைகளைப் பூட்டிக் கொண்டு சென்று உலகத்தை உய்விக்க வேண்டும்’என்று கேட்டுக் கொண்டார்.தன் குலத்தில் வந்த ஒரு சோழச் சக்கரவர்த்தி இவ்விதம் சமயத்தில் செய்த உதவியைச் சூரியனும் மிக மெச்சினான்.

‘பின்னர் சிவபெருமானிற்கும் பார்வதி தேவிக்கும் கைலையங்கிரியில் திருமணம் நடந்தது.பெண் வீட்டார் கல்யாண சீர்வரிசையுடன் வந்திருந்தார்கள்.ஆனால் பல்லக்குக் கொண்டுவரத் தவறி விட்டார்கள்.ஊர்வலம் நடத்துவதற்கு எருது மாட்டைத் தவிர வேறு வாகனம் இல்லையே என்று கவலையுடன் பேசிக் கொண்டார்கள்.இதை அறிந்த சுந்தர சோழ சக்கரவர்த்தி உடனே பழையாறை அரண்மனையில் இருந்து தமது முத்துப் பல்லக்கைக் கொண்டுவரச் சொன்னார்.பயபக்தியுடன் சிவபெருமான் திருமணத்துக்குத் தம் காணிக்கையாக அப் பல்லக்கை அளித்தார்.அப்படிப் பட்ட சுந்தரசோழ சக்கரவர்த்திக்கு உவமை சொல்லக் கூடியவர்கள் இந்த விரிந்து பரந்த அலைகடல் சூழ்ந்த பெரிய உலகத்தில் வேறு யார் இருக்கிறார்கள்...”(பொன்னியின் செல்வன்; பாகம் ஒன்று; வானதி பதிப்பகம்; 12ம் பதிப்பு; 2004;பக் 205 - 206)


சோழர் காலத்தில் இந்தச் சுந்தர சோழன் கொடுத்த குதிரைகளுக்குத் தானோ நாயக்கர் காலத்துக் குற்றாலக் குறவஞ்சியில் குற்றால மலையில் ஏறக் கால்கள் வழுக்குகின்றன?