Sunday, September 7, 2025

ஆண்டவனின் தோட்டத்திலே..... - 2 -

 ஆண்டவனின் தோட்டத்திலே....- 1 -

சென்ற பதிவில் பழம்பொருட்கள் விற்கும் கடைக்கு ஒரு நடைப்பயிற்சியை மேற்கொண்டிருந்தேன் என்று சொன்னேன் இல்லையா...?

இப்போது இங்கு வசந்தகால ஆரம்பம். செப்ரெம்பர் முதலாம் திகதியிலிருந்து நவம்பர் முப்பதாம் திகதிவரை மிக நல்ல ரம்மியமான சூழல் நிலவும். அளவான சூட்டில் சூரியன்; மென்மையாக வீசும் குளிர் தென்றல், கண்ணுக்கு இதமான காட்சிகள்,  இலைகள், துளிர்கள், பூக்கள், மொட்டுக்கள் என அவை விரியும். காதுக்குக் கேட்கும் பறவைகளின் / குருவிகளின் / வண்டுகளின் ரீங்காரங்கள், தேனெடுக்கத் திரியும் தேனீக்கள், பூமியில் இருந்து முளைத்து உயர்ந்து நிற்கும் மரங்களில் குடியிருக்கும் இனங்களுக்கு இது இனப்பெருக்க காலம். அதனால் குஞ்சுகளின் கீச் கீச் ஒலிகளும் அவ்வப்போது கேட்கும்.

நடக்கவும் பார்க்கவும் நல்ல இதம். 

என் வீட்டு வீதியோரம் நடைப்பயிற்சியில் ஈடுபடும் பலரை நான் அன்றாடம் காண்கிறேன். தலைக்குக் Head phone ஐ மாட்டிக்கொண்டு ரோபோக்கள் போல யாரோடோ பேசிக்கொண்டு அல்லது போனைப் பார்த்துக் கொண்டு நடக்கிறார்கள்.......

கொஞ்சம் இந்த சாதனங்களில் இருந்து தள்ளி இருந்து தான் பாருங்களேன். சுற்றி இருக்கும் இந்தச் சுற்றாடலைத் தான் கொஞ்சம் ரசியுங்களேன் என்று சொல்லத் தோன்றும். நடக்கும் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதாவது இந்த நல்ல காற்றை; பூக்களை; சுற்றாடலைக்; சுற்றிவர நடக்கும் மனிதர்களை;  கொஞ்சம் பாத்தால் தான் என்ன? சற்றே சிரித்தால் தான் என்ன? ஏன் எல்லோரும் ஒருவித மாய உலகில் சஞ்சரித்தபடி திரிகிறார்கள் என்று தோன்றுகிறது...

 செல்லும் வழியெங்கும் பூக்களின் நிலப்பாவாடை...இந்தப் பூமி நமக்காக எத்தனை அழகோடு மலர்ந்திருக்கிறது!  ஐம்புலன்களுக்கும் எத்தனை பெரிய விருந்தைப் படைத்து வைத்து விட்டுக் காத்திருக்கிறது....

அவற்றை நாமாவது கொஞ்சம் பார்ப்போமா? 
































நான் நடந்து சென்ற பாதை ஓரங்களிலும், நான் கடந்து செல்லும் வீடுகளின் வீட்டு வளவுகளுக்குள்ளும் மலர்ந்து நிற்பவை இவை.

நான் இன்னும் நான் சொல்ல வந்த விடயத்துக்கு வந்து சேரவில்லைப் பாருங்கள்....இந்தப் பதிவோடு இதனை முடித்து விடலாம் என்று தான் பார்த்தேன். ஏனோ முடியவில்லை....

இன்றைக்கு இந்தப் பதிவிற்கு இது போதும் என்று தோன்றுகிறது. முடிவுப் பகுதிக்கும் சில பல படங்கள் வர இருப்பதால் இதனை இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். 

கடமையும் அழைக்கிறது. விரைந்து செல்ல வேண்டிய நிலையில் இருக்கிறேன். மிக விரைவாக இதன் தொடர்ச்சியை பதிவிடுகிறேன்.

வந்த நண்பர்களுக்கு நன்றி.

இன்று தந்தையர் தினமும் கூட.
 
தந்தையர்கள் எல்லோருக்கும்; மற்றும் தந்தைமையை உள்ளத்தில் கொண்டிருப்போருக்கும் எனது ஆத்மார்த்தமான தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்!

’எழுபிறப்பும் தீயவை தீண்டா, பழிபிறங்கா பண்புடை மக்கட் பெறின்’ என்கிறார் வள்ளுவர். - பிறருடய பழிக்கு ஆளாகாத நற்குனங்களை உடைய மக்களைப் பெற்றால் அவர்கள் செய்யும் நற் செயல்களால் ஏழுவகையான பிறப்புகள் நம்மைத் தொடர்ந்தாலும் தீய துன்பங்கள் எங்களை ஒருநாளும் அணுகாதாம்.

செல்லும் வழியெங்கெங்கும் பள்ளம் வரலாம்

உள்ளம் எதிர்பாராமல் வெள்ளம் வரலாம்

நேர்மை அது மாறாமல் தர்மம் அதை மீறாமல்

நாளும் நடை போடுங்கள் ஞானம் பெறலாம்

சத்தியத்தை நீங்கள் காத்திருந்தால் 

சத்தியம் உங்களைக் காத்துநிற்கும்

Saturday, September 6, 2025

ஆண்டவனின் தோட்டத்திலே..... - 1 -

 நேற்றைக்கு அதிகாலை மழையில் குளித்து முகிலில் முகம்துடைத்து வெளிவந்த சூரியன் பார்க்க மிக அழகாயிருந்தான். வசந்தகாலத்தின் ஆரம்பம் குருவிகளின் ஆரவார ஒலியில் வெளிப்பட்டது. துளிர்க்கும் துளிர்களில் வசந்தம் தென்பட்டது.

சரி பாதை ஓரமாக ஒரு நடைப் பயிற்சிக்குச் சென்றால் இந்த ஆரவார ஒலிகளோடும் பூத்திருக்கும் பூக்களின் புன்னகைகளோடும் கொஞ்சம் சல்லாபிக்கலாமே என்று விட்டு புறப்பட்ட போது நேற்றைய இரவு தற்போது செய்து கொண்டிருக்கும் Art journal ல் பற்றாக்குறையாக எப்போதும் இருக்கும் Focal point படங்கள் பற்றிய ஞாபகம் வந்தது. ஒருவாறாக நான் செய்துவரும் Art Journal ன் கடைசிப் பக்கம் இது; கடைசி படம் இது.

ஏற்கனவே TEMU வில் டிஜிட்டல் ஒளியில் தென்படும் வண்ணங்களில் கவரப்பட்டு சிலவற்றை வாங்கி அதன் அளவுகளினால் மிகுந்த ஏமாற்றம் அடைந்திருந்தேன். இந்த ஏமாற்றங்கள் குறித்த என் புலம்பலைக் கேட்டு என் வேலை நண்பர்கள் தம்மிடம் இருக்கும் சில பல படங்கள், ஸ்டிக்கர்களை எனக்கு அவ்வப்போது மனமுவந்து தந்துதவுவார்கள். அப்படிக் கிடைத்த ஒரு தேன் சிட்டு ஸ்டிக்கர் பார்க்க மிக அழகாயிருந்தது. எனது ஜேர்னலின் கடைசித் தாளை நிரப்ப, இந்தத் தேன் சிட்டும் அதற்கு ஒரு பூ படமும் இருந்தால் நன்றாக இருக்கும் என்பது எனது எண்ணம்.

சரி நடைக்கு நடையுமாயிற்று; வேலைக்கு வேலையுமாயிற்று என்று எண்ணி நடையை பழம்பொருள்கள் விற்கும் கடைவரை என்று மாற்றிக் கொண்டேன். அது சுமார் 15 - 20 நிமிடங்கள் நடை தூரம் தான். 

இந்தக் கடை பற்றி நான் கட்டாயமாகச் சொல்லியாக வேண்டும். அவுஸ்திரேலியாவில் இரண்டு விடயங்கள் என்னை எப்போதும் வியப்பில் ஆழ்த்துவன.

1. மக்களிடம் இருக்கும் நேரத்தைத் தானமாகக் கொடுக்கும் பண்பு. - Volunteering

2. இப்படியான பழம்பொருட்கள் விற்கும் கடைகள்.- Odd shops

அவுஸ்திரேலிய மக்கள் தம் தேசத்தை மிகுந்த அக்கறையோடு கவனித்துக் கொள்கிறார்கள். பாதையோரம் குப்பைகள் இருந்தால் அது யார் போட்டதாக இருந்தாலும் சரி; அதை எடுத்து குப்பைத் தொட்டிக்குள் கொண்டு சென்று போட்டு விடுகிறார்கள். வருடத்தில் ஒருநாள் எல்லோருமாகச் சேர்ந்து நாட்டை சுத்தம் செய்கிறார்கள். வேலையிலிருந்து ஓய்வு பெற்றவர்கள்; மற்றும் சில வேலைக்குப் போக வேண்டிய தேவை இல்லாத ஆரோக்கியமான மற்றவர்கள்; வலது குறைந்த மாற்றுத் திறனாளிகள் என இருப்பவர்கள் தம் நேரத்தையும் தம்மிடம் இருக்கும் அனுபவம் மற்றும் திறமையையும் தேவையான இடங்களுக்கு இலவசமாகத் தானம் செய்கிறார்கள்.

இந்த நேர தானமும் அனுபவம் மற்றும் திறமைகளின் தானமும் அவுஸ்திரேலிய பொருளாதாரத்திலேயே மிகுந்த தாக்கத்தை விளைவிக்கிறது. 2000 ஆம் ஆண்டு சிட்னியில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளின் போது கலந்து கொண்டிருந்த 1000 கணக்கான தொண்டர்களின் சேவை இன்னும் என்மனதில் ஆழப் பதிந்து போயிருக்கிறது. அப்போது நான் வேலையில் சேர்ந்த புதிது. நாட்டுக்கும் ஓரளவு புதியவள் தான். அந் நாட்களில் தாம் தொண்டர் சேவைக்கு விண்ணப்பம் அனுப்பியும் தம்மைச் சேர்த்துக் கொள்ளவில்லையே என்று வருந்திய என் வேலை நண்பர்களைக் கண்டு நான் வியந்திருக்கிறேன்.

அதுபோல மற்றயது இந்தப் பழம்பொருட்கள் விற்கும் கடைகள். கீதோபதேசத்தில் ஒரு வரி வரும்; ’..... இன்று உன்னுடயதாயிருப்பது நாளை வேறொருவருடயதாகிறது...நீ எதனைக் கொண்டுவந்தாய் அதனை நீ இழப்பதற்கு; எதனை நீ படைத்திருந்தாய் அது வீணாவதற்கு? எதை நீ எடுத்துக் கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப் பட்டது. எதை நீ கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது. எது இன்று உன்னுடயதாக இருக்கிறதோ அது நாளை வெறொருவருடயதாகிறது....’என்றவாறாக அது செல்லும்.

இந்தக் கடைகள் அதனை நிரூபிப்பனவாக இருக்கின்றன. தமக்குத் தேவை இல்லாத; ஆனால், உபயோகமான பொருட்களை மக்கள் இலவசமாகக் கொண்டு வந்து இந்தக் கடைகளில் ஒப்படைக்கிறார்கள். தொண்டர்களினால் பெரும்பாலான நேரங்களில் இயக்கப் படும் இந்தக் கடைகள் அவற்றின் தரம் மற்றும் பயன்பாட்டுத் திறனுக்கேற்ப ஒரு சிறு பெறுமதியினை அதற்குக் கொடுத்து அதனை விற்பனை செய்கிறார்கள். இரண்டு டொலர்கள் முதல் இருபது டொலர்கள் வரை பொருட்களின் விலை இருக்கும். பொருட்கலைப் பொறுத்து அது ஏறி இறங்கும். ( இந்த வருடத்தில் இருந்து பொருட்களின் விலை சற்று அதிகரித்திருக்கிறது. பொருட்களின் விலைவாசி மிகவும் அதிகரித்து விட்ட காரணத்தால் இந்தக் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் இப்போது அதிகரித்து வருகிறது...)

தரமான தளபாடங்கள், சமையலறை உபகரணங்கள், சப்பாத்துகள், கைப்பைகள், அலங்காரப் பொருட்கள், உடுபுடவைகள், குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்கள், புத்தகங்கள், கலைப்பொருட்கள், கைவினைப் பொருட்கள், எழுது பொருட்கள், மின்சார உபகரணங்கள், அல்பங்கள், சுவர் சித்திரங்கள், படங்கள், பிறேம்கள்,......என்று பலவாறான பொருட்களை இங்கு காட்சிப்படுத்தி இருப்பார்கள். இதனால் பெறப்படும் வருமானம் அனைத்தும் ஏழை மக்களின் வாழ்வுயரப் பயன்படுகிறது.

நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ இந்தக் கடைகள் பொக்கிஷ பெட்டகங்கள்! மிகப் பெறுமதியான பொருட்களை நீங்கள் மிகச் சொற்ப விலைகளில் இங்கு வாங்கிக் கொள்லலாம் என்பதனால் மாத்திரமல்ல: பொது சந்தையில் இனி கிடைக்கவே கிடைக்காது என்று இருக்கும் பழங்காலத்துக் காத்திரமான அபூர்வமான பொருட்கள் எல்லாம் இங்கு சொற்பவிலையில் கிடைக்கும். எப்போதும் எல்லாம் கிடைக்கும் என்று சொல்வதற்கில்லை. அடிக்கடி இங்கு ஒரு விசிட் போக வேண்டும். அவ்வப்போது எதிர்பாராத தருணங்களும் எதிர்பாரத அதிஷ்டங்களும் இங்கு கிடைக்கும்.

இதன் வழியாக பொருகள் வீணாக்கப்படுவது தடுக்கப்பட்டு,  மீள்சுளற்சிக்கு உட்படுகின்றன; தொண்டர்களினால் இயக்கப்படும் இக்கடைகளினால் மேலதிகமான செலவுகள் மிச்சப்படுத்தப் படுகிறது. தொண்டர்களின் நேரம் பயனுள்ள வகையில் உபயோகப்படுத்தப் படுகிறது. இதனால் பெறப்படும் வருமானம் உரியோரைச் சென்றடைகிறது. பொருள்களை நுகர்வோருக்கும் போதுமான மகிழ்ச்சியும் திருப்தியும் கிட்டுகிறது. இதனால் யாருக்கும் எந்த நட்டமும் ஏற்படுவதில்லை! ஓர் இலகுவான எளிமையான மீள் சுளர்ச்சி ஒன்று மெளனமாக; ஒரு நதியின் நீரோட்டம் போல மெல்லமாக புனிதமாக மெளனமாக நடந்து கடலைச் சென்று சேர்கிறது.

இவை எல்லாம் மக்களின் பொறுப்புணர்வில் இருந்து ஆரம்பிக்கிறது!

பாலர் பள்ளியில் இருந்து இந்தப் பொறுப்புணர்வு போதிக்கப் படுகிறது.

தன் சுற்றாடலில்; விளையாட்டுத் திடலில் இருக்கும் குப்பையைக் கண்டு கொள்ளும் ஒரு பாலகன் அதனை எடுத்து ஆசிரியரிடம் சென்று காட்டி அதனைக் குப்பைத்தொட்டிக்குள் கொண்டு சென்று போட்டு நல்லகுடிமகனுக்கான வெகுமதியைப் பெற்றுக் கொள்கிறான். அது ஒரு டிக்கட். அது ஒரு கூட்டு முயற்சிக்கான டிக்கட். இந்த டிக்கட்டுகளை ஆர்வத்தோடு போட்டி போட்டுக் கொண்டு சேகரித்து, வகுப்பறையில் இருக்கும் ஓரு கண்ணாடிப் பெட்டிக்குள் கொண்டு சென்று சேர்க்கிறார்கள். இவ்வாறு வகுப்பறை மாணவர்களால் சேர்க்கப் படும் டிக்கட்டுகள் குறிப்பிட்ட அளவை அடைந்ததும் மாணவர்களுக்கான ’ இலவச விளையாட்டு நேரம்’ (Free play) அல்லது மாணவர்களுக்கு விருப்பமான ஏதாவது ஒன்று 15 நிமிட நேரத்திற்கு செய்யக் கொடுக்கப்படுகிறது.

இந்தக் கூட்டு முயற்சியின் வழியாக முழுமாணவர்களும் எல்லோருக்குமாக சேர்ந்து உழைக்கிறார்கள்.

சரி நான் இந்தக் கடைக்கு வருகிறேன்,

இந்தக் கடை என் வீட்டிலிருந்து ஒரு நடைதூரத்தில் அமைந்திருப்பது எனக்குக் கிடைத்த ஓரு தெய்வாதீனம்!

என்னவோ சொல்ல வெளிக்கிட்டு எங்கெங்கோ சுற்றி இப்போது தான் நான் சொல்ல வந்த இடத்தை வந்தடைந்திருக்கிறேன்.

இதனை வாசிக்கும் மக்கள் என்னை இதன் பொருட்டு மன்னிப்பார்களாக!

 நீங்கள் எப்போதாவது நீங்கள் நினைக்கின்ற ஒன்று இலகுவாக உங்களை தானாக  வந்தடைவதை உணர்ந்திருக்கிறீர்களா? ‘எண்ணம் போல் வாழ்வு’ என்று சொல்லப்படும் கருதுகோள்களில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா?

எனக்கு இப்போது தான் இவற்றின் மீதான - பிரபஞ்ச சக்தியின் மீதான வியப்பும் ஆர்வமும், மகிழ்ச்சியும், பூரிப்பும் புரிந்துணர்வும் ஏற்பட ஆரம்பித்திருக்கிறது.

ஞானம் பிறக்கிறது!

அவன் அருளாலே அவன் தாளை அறிய முடிகிறது!

முன்னர் சொன்னது போல கேட்பது கிடைக்கிறது! நினைப்பது நடக்கிறது!!

ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்கிறது.....

( ஒரு பதிவாக இதனை எழுதலாம் என்று தான் புறப்படேன். முடியவில்லை. நீங்களும் களைத்துப் போயிருப்பீர்கள். நம்புங்கள்; இதன் தொடர்ச்சியை நான் இயன்றளவு விரைவில் பதிவு செய்கிறேன்.) 

தொடரும்...

Monday, July 14, 2025

Snugglepot & Cuddlepie - அவுஸ்திரேலியச் சிறுவர் இலக்கியப் பாத்திரங்கள்

 அவுஸ்திரேலிய செவ்வியல் சிறுவர் இலக்கிய வரலாற்றில் இன்றுவரை பேசப்பட்டுக் கொண்டிருக்கின்ற; மறுபிரசுரங்களைக் கண்டு கொண்டிருக்கின்ற; குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான கதா பாத்திரங்கள் என்றால் இவர்கள் இருவரையும் சொல்லலாம்.



இவர்கள் யார் என்று கேட்கிறீர்களா? இவர்கள் இரண்டு பேரும் Gum Nuts கள். Gum Tree என்று சொல்லப்படுகின்ற மரத்தின் விதைகள் இவர்கள், மிகப் பரந்தளவில் அவுஸ்திரேலியா முழுவதும் காணப்படுகின்ற மரம் இது. அதன் விதைகள் தான் இந்த ஸ்னகிள்பொட்டும்  கட்டிள்பையும்.

அவுஸ்திரேலிய வாழ்வியல் பின்னணியையும் வாழ்க்கை முறைகளையும்  இவை பேசுகின்றன. கற்பனை வளத்திற்கும் குழந்தைகளின் மனநிலைக்கும் ஏற்ற வகையில் கதைகள் பின்னப்பட்டு பாத்திரங்கள் வடிவமைக்கப் பட்டுள்ளனவாக உள்ளன. 

நேற்றய தினம் பழம்பொருட்கள் விற்கும் கடைக்குப் போயிருந்தேன். அங்குள்ள புத்தகங்களைக் கிண்டிக் கொண்டிருந்தபோது, இந்த இரண்டு பேரையும் கண்டு பிடித்தேன். அதற்கு முன்னராக இந்த வருட ஆரம்பத்தில் புத்தகக் கடை ஒன்றில் வண்ணங்கள் தீட்டும் புத்தகம் ஒன்றைத் தேடிக்கொண்டிருந்த போது  இதன் கற்பனை வளத்தின் மேல் கொண்டிருந்த ஆர்வத்தின் காரணமாக இவர்கள் இரண்டுபேரும் இருக்கின்ற அந்த வண்ணம் தீட்டும் புத்தகத்தையும் வாங்கி இருந்தேன்.

puzzle இல் விடுபட்டுப் போயிருந்த ஒரு துண்டு தற்செயலாகக் கிடைத்ததைப் போல ஒரு சந்தோஷம். $1.00 க்கும் $2.00 டொலருக்கும் தற்செயலாகக் கண்டெடுத்து வாங்கிய இந்தப் புத்தகங்கள் எனக்குப் பெரு மகிழ்ச்சியைத் தந்தன. 

சில நேரங்களில் சில சந்தோஷங்கள் இப்படியாக அமைந்து விடுகின்றன... ஒரு தேவதை காற்ரு வெளியில் உலா போகும் போது தன் கையில் இருக்கும் மந்திரக் கோலால் என் தலையில் அவ்வப்போது போகிற போக்கில் ஒரு தட்டு தட்டி விடுகிறாள் போலும்!

சரி நான் புத்தகத்திற்கு வருகிறேன்,

இந்தக் கம்னட்களுடய  சாகசப் பயணங்களும் அந்தப் பயணத்தின் போது அவர்கள் சந்திக்கின்ற அவுஸ்திரேலிய விலங்குகளும்  அவர்களுடனான இவர்களின் உரையாடல்களும் அதனூடாக அவை வெளிப்படுத்தும் அவுஸ்திரேலிய வாழ்வியல்களும் சுவாரிசம் மிக்கவை.

தும்பியில் சவாரி செய்யும் இவர்கள் வண்ணம் தீட்டும் புத்தகத்தில் இருந்த ஒரு கதையின் சம்பவதாரிகள். 


இந்தக் கதைகளின் சூத்திரதாரி May.Gibbs என்பார்.  நான் அவரைப் பற்றி விலாவாரியாக எடுத்துச் சொல்வதை விட நீங்களே கீழே உள்ள link இல் சென்று பாருங்களேன்!

https://maygibbs.org/character/snugglepot-and-cuddlepie/

Friday, July 4, 2025

Art journal

 அண்மைக் காலமாக Art Journal என அறியப்படும் ஒன்றின் மீது பேராவல் ஏற்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் எக்கச்சக்கமான பாடங்கள் கூட படிமுறைகளாக சொல்லித் தரப்படுகின்றன. அவற்Riன் பாலான ஈர்ப்பினால் இங்கு அதிகம் வர முடியவில்லை. இருந்தாலும் இது என் தாய் வீடு.

என் வைப்புச் சொப்பு எல்லாம் இங்கு தான்.

அதனால் இறுதியில் நான் இங்கு  எப்படியும் வந்து சேர்வேன். இப்போது செய்த சிலவற்றை உங்களோடும் பகிர்ந்து கொள்கிறேன்.

இங்கு இன்று இப்போது இதனை எழுதுகின்ற போது தான் இந்தத் தளத்தை விட்டு எவ்வளவு தூரம் நான் போய் விட்டேன் என்பது புரிகிறது. அது துயரம் தருவதாகவும் இருக்கிறது. 

இனி இங்கு அடிக்கடி வரவேண்டும்.

நீங்கள் எல்லோரும் நலம் தானே!



Free to be Me

Believe

Get up, Dress up, Show up, Never give up

Paper napkins, Stickers, Colors, Stamps இவைகளைக் கொண்டு உருவாக்கப்படுபவை இவை. உங்கள் கற்பனை வளத்திற்கும் உங்களிடம் இருக்கும் மூலப்பொருட்களை வைத்துக் கொண்டும் ஒரு கருப்பொருளை மனதில் இருத்தி இவைகள் உருவாக்கப் படுகின்றன.

உங்களுக்கு  இவைகள் எப்படி இருக்கின்றன?

Sunday, May 4, 2025

இலையுதிர்காலத்து வண்ணங்கள்

 இன்று தேர்தல். 

இப்பொழுது நேரம் 3.5.1025 சனிக்கிழமை இரவு 10.45.

தொழில்கட்சி மீண்டும் பெரும்பாண்மை வாக்குகளோடு ஆட்சிக்கு வந்திருக்கிறது. சற்று முன்னர் நடைபெற்ற தேர்தல் வெற்றிப் பேச்சையும் எதிர்கட்சியான லிபரல் கட்சித்தலைவர் பீற்ரர் டட்டன் தன் தொகுதி இருக்கையையும் இழந்து போய் தன் ஆதரவாளர்களுக்கு முன் பேசிய பேச்சையும் தேசிய தொலைக்காட்சி சற்ரு முன் ஒளிபரப்புச் செய்திருந்தது.

என்ன ஒரு கண்ணியமான மரியாதையான நாகரிகமான பேச்சாக அது இருந்தது!

படு தோல்வியைச் சந்தித்திருந்த பீற்றரை நினைவுகூர்ந்து அவரது 25 வருடங்களுக்கு மேலான உழைப்பை வியந்து பாராட்டிய அல்போவும் பெரும்பானை வாக்குகளால் மீண்டும் ஆட்சிக்கு வந்த அல்போவுக்குத் தொலைபேசியில் அழைத்துத் தன் பாராட்டுக்களைத் தனிப்பட்ட முரையில் தெரிவித்ததோடு தன் ஆதரவாலர்கலுக்கு முன்னாலும் தெரிவித்த அரசியல் பண்பாடும் வியந்து போற்றக் கூடிய வகையில் அமைந்திருந்தது.

இன்று மதியத்துக்குப் பின்னரான ஓய்வுப் பொழுதொன்றில் வாக்களிக்க அருகில் இருந்த நிலையத்துக்குப் போயிருந்த போது எனக்கு முன்னால் ஒருவரும் என்னோடு ஒருவரும் தான் நின்றிருந்தோம். தேர்தல் என்பதற்கான அத்தாட்சியாக இரு கட்சியின் ஆதரவாளர்கள் 3, 4 பேர் வாசலில் விளம்பரப் பத்திரிகைகளை வைத்துக் கொண்டு நின்றதைத் தவிர வேறெந்த ஆரவாரங்களும் இருக்கவில்லை.

அழகிய ஜனநாயக நாகரிகம் மிக்க நாடு!

அது நிற்க,

இன்று இங்கு மீண்டும் வந்ததற்குக் காரணம் வாக்களித்துவிட்டுத் திரும்பி நடந்து வரும் போது கண்ட இலையுதிர்காலத்துக் காட்சிகளை உங்களோடும் பகிர்ந்து கொள்ளத் தான்.

இங்கு சிட்னியில் இப்போது இலையுதிர்காலம். ஏப்பிரல், மே, ஜூன் மாதங்கள் இலையுதிர்காலத்துக்குரியவை. பச்சையாக இருந்த இலைகள் எல்லாம் நிறம் மாறி மஞ்சளில் இருந்து சிவப்பு மற்றும் பிறவுனுக்கு இடையில் இருக்கும் அத்தனை நிறங்களிலும் காட்சியளிக்கும். பச்சை இலைகளும் ஆங்காங்கே இல்லாமல் இல்லை. குளிரோடும் மழையோடும் இந்த மூன்று மாதங்களும் மெல்ல மெல்ல குளிர்காலத்துக்கு தன்னை உருமாற்ற ஆரம்பிக்கும்.

நேரம் ஒரு மணி நேரம் பின் நகர்த்தப் பட்டு எமக்கு ஒருமணி நேரம் அதிகப்படியாகக் கிடைக்கும். காலை ஆறு மணிக்கும் இருள் விலகாதிருக்கும். மாலை விரைவில் இருண்டும் விடும். மாலை ஆறு மணிக்கு முன்னரே  இருள் முழுவதுமாகச் சூழ்ந்து விடும். 

அதுவே  மீண்டும் கோடைகாலத்தில் ஒரு மணி நேரம் முன் நகர்த்தப் பட்டு பகல் நேரத்தை அதிகரித்துத் தரச் செய்யும்.

அவுஸ்திரேலியாவுக்கு வந்த ஆரம்பத்தில் பார்த்த ஆச்சரியங்களுக்குள் எனக்கு இன்றும் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் தரும் ஒரு விடயம் இந்த நிறம் மாறும் பச்சை இலைகள் தான். சிறு வயதில் இலை பச்சை நிறம் என்று படித்ததை பொய்யாக்கும் வகையில் எத்தனை எத்தனை வண்ணங்கள்...சரி, நீட்டி முழங்கி என் பிரஸ்தாபங்களை இங்கே சொல்வதை விட வழியில் பொறுக்கிய சில இலைகளை இங்கே கடை பரப்புகிறேன். பிறகொரு நாளில் படம்பிடித்தால் அதனை வேறொரு பதிவாக பின்னர் தருகிறேன்.









நிலத்தில் கிடந்த இலைகள் இவை, பொறுக்கி வந்து செய்தவை கீழே வருகின்றன. இந்த நிறங்களைக் கமறா சரியாகப் பதிவு செய்ததா என்று தெரியவில்லை. நேரே பார்க்கும் போது இலையில் நிறமும் அதன் பளபளப்பும் மினுக்கமும் சத்து நிறைந்து கிடக்கும் அதன் மலர்வான செழுமையும் என்னை சிலிர்க்க வைக்கின்றன. அவற்றை எல்லாம் சேகரித்துப் பாதுகாத்துவிட முடியாதென்ற போதும் முடிந்த சிலவற்றையேனும் என் ஆசைக்காகப் பாதுகாக்க எடுத்த முயற்கிகள் கீழே வருவன.







சும்மா இவைகளை என் கொப்பி ஒன்றில் ஒட்டி வைத்திருக்கிறேன். அவ்வலவு தான். வேறு என்னதான் செய்ய முடியும் சொல்லுங்கள்? லெமெனேற் செய்யலாம் என்றால் என்னிடம் அந்த இயந்திரம் தற்போது கைவசமில்லை.

இவைகள் தான் இந்த நிறங்களில் காட்சியளிக்கின்றனவென்றால் என் வேலைத் தலத்தில் Bottle brush என்ற ஒரு காட்டுத் தாவரம் பூத்திருக்கிற விதத்தைப் பாருங்கள். அது கூட மஞ்சளும் ஒறேஞ்சும் கலந்த ஒரு நூதன நிறத்தில் பூத்திருக்கிறது. எங்கள் கட்டிடத்தின் நிறத்தின் சாயலை ஒத்ததாக அதனை நாட்டியவரின் தூர நோக்குப் பார்வையையும் அந்த நேரத்தில் நான் வியக்காமல் இல்லை. 
அழகாக இருக்கிறது என்று கடந்த வியாழக் கிழமை 2.5.25 அன்று சும்மா என் கை தொலைபேசியில் எடுத்த அந்தப் பூக்கள் இன்று உங்கள் பார்வைக்காகவும்....






இந்தக் காட்டுப் பூக்கள் பல நிறங்களில் பல திணுசுகளில் மலர்வன.  எங்கள் மலர்களின் காதலி கீதமஞ்சரி வந்தால் இது பற்றி நிறைய வியங்களைச் சொல்லுவார். எனக்கு இந்தப் பூ நிறையத் தேனைக் கொண்டிருக்கும் என்பதும் அதன் காரணமாக அதனைப் பருக பஞ்சவர்ணக் கிளிகள் அடிக்கடி வந்து பூக்களில் அமர்ந்து தேனுண்ணும் என்பது மட்டும் தான் நான் கண்டு அறிந்து கொண்டது.

அட, பூக்கள் மட்டும் தான் இந்த நிறங்கள் என்றால் கனிகளும் கூடவா?  ஒரேஞ், அதன் சின்ன குழந்தை போல இருக்கும் மண்டரின் என்று சொல்லப்படும் பழம் - இவைகள் இனி அடிக்கடி மலிவு விலைகளுக்கு சந்தையில் கிடைக்கும். அது நமக்குத் தெரிந்தது தான். அவைகள் காய்க்கிற பருவம் இப்போது. அதிலொன்றும் ஆச்சரியமில்லை.

ஆனால் பியேர்ஸ் பழங்களை சிவப்பும் ஒரேஞ்சும் கலந்த வண்ணத்தில் கண்டிருக்கிறீர்களா? அந்த ஆச்சரியத்தையும் கடந்தவார இறுதியில் என் வேலைத்தலத்துத் தோழி ஒருத்தி எனக்குக் காட்டி என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தினாள். அதனை உங்களுக்கும் காட்டுகிறேன். பாருங்கள்! சிவப்பு நிற பியேர்ஸ் பழம்!








இலையுதிர் காலத்து வண்ணங்களை என்னவென்று சொல்வது? இயற்கை பெரிய பெரிய ஆச்சரியங்களை எல்லாம் தனக்குள் பொத்தி வைத்திருக்கிறது. அவற்றை கண்டு புளகாங்கிதம் அடைய எனக்குக் கொடுப்பனையும் வாய்த்திருக்கிறது. அதனை என்னவென்று சொல்வது.....

வேண்டத்தக்கதறிவோய் நீ
வேண்ட முழுதும் தருவோய் நீ
வேண்டும் அயன்மாற்கரியோய் நீ
வேண்டி என்னைப் பணி கொண்டாய்
யானும் அதுவே வேண்டினேன் அல்லால்
வேண்டும் பரிசு ஒன்றுண்டெனில்
அதுவும் உந்தன் விருப்பன்றே!


Tuesday, April 22, 2025

அம்மாவின் டையறியில் இருந்து....

 நேற்றய தினம் என் தாயாரின் முதல் வருட சிரார்த்த தினம்.( 21.4.25)

அதை ஒட்டி வீட்டில் சில ஒழுங்குபடுத்தல்கள், சுத்தப் படுத்தல்களைச் செய்ய வேண்டி இருந்தது. அதிலொன்று என் தாயார் பாவித்த தையல் இயந்திரமும் அதை ஒட்டிய பொருட்களும். அது சாமித் தட்டின் கீழ்புறத் தட்டில் அமைந்திருந்ததால் சாமித்தட்டைத் துப்பரவு செய்யும் போது இந்தத் தட்டையும் எடுத்துப் பார்த்து சரிசெய்யவேண்டி இருந்தது. 

இன்றைக்கொ அல்லது என்றைக்கோ ஒருநாள் அவைகளை சரிபார்க்கத் தானே வேண்டும்! 

எத்தனை நாளைக்கென்று அந்த’உணர்வை’ தொடாமலே வைத்திருப்பது....

அங்கே ஒரு கொப்பி கிடைத்தது. அதில் சிறு சிறு துணுக்குகள் எழுதப்பட்டிருந்தன. அவற்றினை இங்கு நான் பதிவு செய்து வைத்திருத்தல் பொருத்தம் என்று தோன்றுகிறது....

1. நிலாச் சோறு

குழந்தைக்கு நிலவைக் காட்டி

சோறூட்டுகிறாள் அம்மா

பசியோடு வாய் திறக்கிறது நிலவு.


2.மனம்

காகிதத்தில் 

சின்னக் கப்பல் தான் செய்து கொடுத்தேன்.

வீடு முழுவதையும் 

சமுத்திரமாக மாற்றி வைத்திருந்தது குழந்தை.


3.மயக்கம்

குழந்தைகள்

உதிர்த்த மதுரவார்த்தையில் மயங்கி

தானே உதிர்கின்றன

பவளமல்லிப் பூக்கள்.


4.சுற்றுக்கள்

குழந்தைகள்

கோயில் சுற்றும் போது

சாமி 

குழந்தைகளைச் சுற்றுகிறார்.


5.பாதுகாப்பு

அப்பா அம்மா சண்டையில்

பொம்மைகளை 

மறைத்து வைத்துக் கொள்கின்றன 

குழந்தைகள்.


1. கன்னியின் விநாயகர்

அதிகாலை நீராட்டு முடித்து

ஈரத்தலை சொட்டச் சொட்ட

அவள் அந்த விநாயகரை

வலம் வந்துகொண்டிருந்ததைப் 

பார்த்த மாத்திரத்தில்

எனக்கு அழுகை பொத்துக் கொண்டு வந்தது.

பாவி,

இன்னும் உன் உலகில் ஒரு கடவுள் மிச்சமிருக்கிறார்.

அது அந்த ஆனைமுகன் தானா?

அடி,

நிஜமாலும் தான் துதி சொல்லுகிறாயா?

தோப்புக் கரனமும் வேறா?

சொல்லடி,

அவன் வழிக்கடை நோக்கு அது தானா?

அல்லது

அதுவாகத்தான் அலைபாய்கிறாயா?

இந்தத் தெய்வம்

தன் துதிக் கையில் ஏந்தியிருக்கும் 

கனிந்த பழம் நீதானா?

- லியூகோ கென்ப்மார்க் - 


பசியோடிருப்பவனின் தாகம்

ஒருதுண்டு ரொட்டிக்காகவோ

ஓர் அப்பத்திற்காகவோ

ஒரு கோப்பை கஞ்சிக்காகவோ

வாளோடு அலையும் காலத்தில்

ஒருவன் பசியோடலைகிறான்.

2. ஒருவன் மாணவப் போராளி - ஒருதுளி நீரின்றி சனங்களுக்காகப் பசித்திருக்கையில் நல்லூர் தெரு பசித்திருந்தது.

3. எம் தாயகத்தைத் திலீபன் கேட்டான். இந்தியப் படைகளை வெளியேறச் சொன்னான். மாபெரும் பசியோடு தன்னை உருக்கிய ஒருவனைக் காணாதிருந்தது உலகம்.

4. பிறகும் எமது கிண்னங்களை யாரும் திறந்து பார்த்ததேயில்லை. பிறக்கும் எமது குரலை யாரும் கேட்பதேயில்லை.

5. ஒருவன் பசியோடு உருகி முடிகையில், ஒவ்வொருவரது கிண்ணங்களிலும் கனவு தான் நிரம்பியிருந்தது.

6. நினைவுகளில் 

கனவுப் பசியோடு அலைகிறான் திலீபன் 

இன்னும் விடுபடாத தாயகம்.

7.இன்னும் எம் குரல் கேட்கா உலகம்

நேற்றல்ல,

இன்றும் எம் தெருக்களில் 

8.எம் கனவுகளில்

அவன் பசியோடு

தன் உடலை எரித்துக் கொண்டு 

அமர்ந்திருக்கிறான்.


( எப்போது எங்கிருந்து இது பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை. 2007 அம் ஆண்டுக் காலத்திலிருந்து கொரோனா பேரிடர் காலத்திகு முன்பு வரை ஈழத்து வாரப் பத்திரிகைகளையும் இந்திய வாராந்த சஞ்சிகைகளையும் முன்பதிவு செய்து வாங்கி வாசிப்பது அவரது பழக்கமாக இருந்தது. அவ்வாறு வாங்கி வாசித்த பத்திரிகை ஏதோ ஒன்றிலிருந்து இந்தத் துணுக்குகளை அவர் சேகரித்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது...)

இன்னுமொரு கையேட்டில் கீழ்வரும் வாழ்த்துக்கள் எழுதப்பட்டிருந்தது. வழக்கமாக அவர் தன் பிள்ளைகளான எங்கள் எல்லோருக்கும் கூடவே தன் பேரப்பிள்ளைகளுக்கும் தன் சகோதரர்கள் மற்றும் அப்பாவின் சகோதரர்கள் எல்லோருக்கும் தவறாமல் பிறந்தநாள் வாழ்த்து மடலும் கூடவே ஒரு பெறுமதியான பணப்பரிசும் கொடுக்க அவர் தவறுவதேயில்லை. 

இவற்றில் அதிகம் ஈடுபாடு காட்டாத அப்பாவிடமும் எப்படியும் சிறிதளவு பணமும் வாழ்த்துமடலில் கையெழுத்தும் வாங்கிவிடும் சமர்த்தியமும் அவருக்கு இருந்தது.

அதில் எப்போதும் அந்தப் பரிசுக்குரிய நபரைப் பற்றிய மனதைத் தொடும் வார்த்தைகளைத் தன் சொந்த மொழியில் எழுதியிருப்பார். கூடவே வேரு சில பொதுவான வாழ்த்து வார்த்தைகளும் அதனோடு கலந்திருக்கும்.

அவற்றில் சிலவற்றை இப்படியாக எழுதி வைத்திருக்கிறார்....


அன்பான மகள்

பல்கலையும் கற்று வளமோடும் மகிழ்வோடும் வாழ வாழ்த்துகிறேன்.

இன்றுபோல் என்றும் மகிழ்வோடும் வளமோடும் வாழ வாழ்த்துகிறேன்.

பல்கலையும் கற்று மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்துகிறேன்.

சிறப்பாகக் கல்வி கற்று வளமாக வாழ வாழ்த்துகிறேன்.

சகல செளபாக்கியமும் பெற்று நீழூழி காலம் வாழவேண்டுமென்று வாழ்த்துகிறேன்.

நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெற்று பெருவாழ்க்கை வாழ்கவென வாழ்த்துகிறோம்.

30.3.2001.

நான் அவரைச் சந்திக்கும் வரை அவரது ஆத்மா இறைநிழலில் இனிதே இளைப்பாற பிரபஞ்சத்தின் பேரருளை அநுதினமும் பிரார்த்திக்கிறேன்.

ஓம் ஷாந்தி!

Friday, March 28, 2025

ஐஸ் பழமும் நானும் - தீர்க்கமுடியாப் பெரும் கடனும்

 1976/ 77 காலப்பகுதி அது.

பாடசாலையில் நான் ஆறாம் வகுப்பு ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த காலப்பகுதி.

மூன்றுமைல் தூரத்தில் பள்ளி. பஸ்ஸில் பள்ளிக்குப் போய் வர வேண்டும். ஆனாலும் பஸ்ஸோ நேரத்திற்கு வராது. வந்தாலும் பள்ளிக்குப் போக எனக்கும் மனம் வராது. பிந்தி வரும் பஸ்சில் ஏறிவிட்டு பின்னர் இறங்கமாட்டேன் என்று அடம்பிடித்து கொண்டு நானிருக்க அப்பா என்னை அழைத்துக் கொண்டு பள்ளியில் (வீதியோரம் தான் பள்ளி அமைந்திருந்தது) விட்டு விட்டு காத்துக் கொண்டு நிற்கும் பஸ்ஸில் ஏறி வேலைக்குப் போவார். வருவார். 

பள்ளி விட்ட பின்னர் நேரத்திற்கு பஸ் வராது. சிவாண்ணையின் பால் வான் எப்பிடியும் வரும் அதில் ஏறலாம் என்றொரு நம்பிக்கை மட்டும் மிச்சம் இருக்கும். நான் மட்டுமில்லை பல பிள்ளைகள் பஸ்ஸுக்காகக் காத்திருப்பார்கள்.  உயர்வகுப்புப் படித்த அக்காவை தாமாகவே எங்களைக் காக்கும் பொறுப்பை எடுத்துக் கொள்வார்கள். 

பள்ளிப் பாடத்தில் வரும் வீட்டு வேலைகளைச் சில புத்திசாலிப் பிள்ளைகள் கூரை இல்லாமல் சுவர் மட்டும் இருந்த பஸ் நிலையத்து சுவர்களில் வைத்து எழுதிக்கொண்டு இருப்பார்கள். பெரிய வகுப்பு படித்துக் கொண்டிருந்த அக்காவை அருகில் இருந்த பிள்லையார் கோயில் திருத்த வேலைக்காகப் பறிக்கப்பட்டு வரிசையாக நிறுத்தப் பட்டிருந்த கருங்கற் பாளங்களின் மேலும் வேர்கள் மேற்கிழம்பி நமக்கு இருக்க இலகுவாக்கி நிழலும் தந்து கொண்டிருந்த ஒரு பேர் தெரிய மரத்தின் வேர்களின் மேலும் ஏதேதோ கதைகள் பேசிக்கொண்டு அமர்ந்திருப்பார்கள்.

என்னைப்போல ஒரு சில பேர் யாழ்ப்பாண வீதி வழியாகப் போகும் வாகனங்கள் அடித்து விட்டுப் போகும் சிதறு தேங்காயைப் பொறுக்கி சாப்பிடுவதிலும் எட்டுக் கோடு, ஓடிப்பிடித்து விளையாடுவதிலும் ஈடுபட்டுக் கொண்டிருப்போம்.

ஆனாலும் ஒரு பெரும் கொடுமை பாருங்கள். சைக்கிளில் வந்து ஐஸ்பழம் விற்கும் அந்த ஒற்றை வியாபாரி மட்டும் அங்கேயே நின்று கொண்டிருப்பார். அடிக்கடி தன் கறுப்பு நிற கோன் போன்ற ஒன்றால் பாம் பாம் என்று அடித்து தன் இருப்பை வேறு உறுதிப்படுத்திக் கொண்டும் இருப்பார்.

இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் எங்களின் பஸ் காசும் ஐஸ் பழம் ஒன்றின் காசும் ஒரே அளவு தான்.

எப்போதுமே!

ஒரு சிறு பிள்ளை எத்தனை மணி நேரம் தான் ஆசையை அடக்கிக் கொண்டு இருப்பது!  வேளைக்கு பஸ் வந்தால் பறவாயில்லை. வீடு போய் சேர்ந்து விடுவேன். பஸ் வேளைக்கு வராது. வந்தாலும் யாழ் நோக்கிப் போகும் பயணிகளை ஏற்றிப் போகும் களைப்பில் எங்களை ஏற்றி இறக்கி மினைக்கெட அவர்கள் பெரும்பாலும் தயாராக இருப்பதில்லை. அவை திருகோண மலையில் இருந்தும் மட்டக்களப்பில் இருந்தும் மன்னாரிலிருந்தும் யாழ் நோக்கிப் போபவை. அவர்களையும் குற்றம் சொல்ல முடியாது. 

நம்ம பிழைப்பு வவுனியாவில் இருந்து முல்லைத்தீவு நோக்கிப் போகும் பஸ்சினை எதிர் நோக்கியது. அது சிலவேளை இடர்பாடோடும் சன இடிபாடோடும் வந்தால் இந்தச் சின்னஞ் சிறுசுகள் சுமார் 15 - 20 வரை இருப்பவர்களை ஏற்ற அதற்கும் பாவம் இடமிருக்காது.

3.15 க்குப் பள்ளி விட்டு 5.30 , 6.00 மணி வரையும் பஸ் வரவில்லை அல்லது எங்களை ஏற்றவில்லை என்றால் பலரும் நடராசாவில் நடையைக் கட்ட ஆரம்பிப்பார்கள். யசோதா விளையாடியே களைத்து விடுவதால் இனியும் 3 மைல் தூரம் ஏற்ற இறக்கங்களோடு நடக்க அதற்கு மனசு வராது. எப்படியும் எங்களை விட தூரம் போகும் அக்காவை பஸ்சுக்காகக் காத்திருப்பார்கள் என்று விட்டு நானுமவர்களோடு காத்திருப்பேன்.

ஆனாலும் ஒன்று செய்வேன்.

கொஞ்ச நேரம் பொறுமையோடு கைக் காசை பார்ப்பதும் பின் அதனைச் சீருடைப் பொக்கற்றுக்குள்  போடுவதுமாக இருப்பேன். இனி ஐஸ்பழக் கார வியாபாரியும் போய் விடப் போகிறார் எனத் தெரியும் பட்சத்தில் ஒரு தயக்கமும் இல்லாமல் பஸ் காசினை கொடுத்து ஐஸ்பழம் வாங்கி நல்ல சந்தோஷமாக - உலகத்தில் இன்று தான் நான் வாழப்போகும் கடைசி நாள் என்பது மாதிரி ரசித்து ரசித்து சாப்பிடுவேன்.

பின்னர் சிறிது நேரத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட 7.00 - 7.30 மணியளவில் மருதோடைக்குப் போகும் பஸ் வந்து நிற்கும். எனக்கு வீட்டுக்குப் போகக் காசு இருக்காது. அந்த உண்மை அப்போது தான் என் மண்டைக்குள் வெளிச்சமிடும். என்ன செய்வது என்றும் தெரியாது. அப்போது உயர்தர வகுப்புப் படித்த அக்காவை எங்களோடு பஸ்ஸுக்காகக் காத்திருப்பார்கள்.

அவர்களில் இரண்டு பேரை எனக்கு இன்னமும் நினைவிருக்கிறது. ஒரு அக்காவின் பெயர் யோகா அக்கா. மற்றய அக்காவுக்குப் பேர் சறோ அக்கா.

பஸ் வந்து நின்றதும் நடத்துனர் இறங்கி ரிக்கற் போட ஆரம்பிப்பார். நான் மெல்ல சறோ அக்காவிடம் அல்லது யோகா அக்காவிடம் என்னிடம் பஸ்சுக்குக் காசில்லை என்பதைத் தெரிவிப்பேன்.

அவர்களுக்கு என்னைத் தெரிந்திருந்ததோ என்னவோ,’உம்மோட பெரிய கரைச்சல் யசோ’ என்று சொல்லி விட்டு எனக்கும் சேர்த்து டிக்கெட் எடுப்பார்கள். வீட்டுக்கு நான் வந்து இது பற்றி மூச்சுக் கூட விட மாட்டேன்.

இப்படி எத்தனை நாட்கள், மாதங்கள், வருடங்களை நான் கடந்திருக்கிறேன்....ஒரு நாள் கூட அந்த அக்காவை எனக்கு பஸ்ஸுக்கு டிக்கற் எடுத்துத் தர மறந்ததுமில்லை; மறுத்ததுமில்லை.  பின்னர் ஒருவாறு என் தந்தையாருக்கு  தெரிந்ததோ என்னவோ சீசன் ரிக்கற் வாங்கித் தரத் தொடங்கி விட்டார். சீசன் ரிக்கற் என்பது ஒரு மாதத்துக்கான பணத்தை முன் கூட்டியே டிப்போவில் கட்டினால் அவர்கள் ஓர் அட்டையை வழங்குவார்கள். அதனை நடத்துனரிடம் காட்டினால் அவர் அந்தத் திகதிக்குரிய பகுதியை மட்டும்  அடையாளப்படுத்தி விட்டுத் தருவார். 

பணப்புழக்கத்திற்கு அதன் பிறகு எனக்கு வாய்ப்பிருக்கவில்லை. கூடவே ஐஸ்பழத்திற்கும்!

என் வீட்டுக்கும் சொல்லாமல், பள்ளி ஆசிரியர்களுக்கும் சொல்லாமல், என்னை மட்டும் உரிமையோடு கடிந்து கொண்டும்; கண்காணித்துக் கொண்டும், அவ்வப்போது நான் செய்யும் குழப்படிகளைச் சகித்துக் கொண்டும் எங்களை பாடசாலை விட்ட பிறகும் கண்காணித்து பொறுப்போடு எனக்கு அவ்வப்போது பஸ்ஸுக்கு டிக்கற்றும் எடுத்துத் தந்த அக்காவை .......

அவை இப்ப எங்கை என்ன செய்து கொண்டிருப்பினம்?

சில நேரங்களில் யோசித்துப் பார்ப்பேன்....எதிர்பார்ப்புகள் எதுவுமில்லாத அன்பென்பது இது தானோ?

அழிக்க முடியாக் கடன் கணக்கில் சேர்ந்து விட்ட இந்தக் கடன்களை இனி நான் எப்பிறப்பில் தீர்க்கப் போகிறேன்?

சறோ அக்கா, யோகா அக்கா! 

நீங்கள் செய்தவைகளை நான் என் ஆத்மாவில் சேமித்து வைத்திருக்கிறேன். ஜென்மங்கள் கடந்தேனும் இந்தக் கடனைத் தீர்க்க இறையருளை பிரார்த்திக்கிறேன், மனமுருகி வேண்டுகிறேன்.

வேறென்ன நான் செய்ய முடியும்.... 

சொல்லுங்கள்.....