Thursday, January 28, 2016

கண்டறியாத கதைகள் - 1 - திருகணி

என் தோழி நாட்டியக் கலாநிதி. கார்த்திகா அவர்களோடு ஓர் உரையாடலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஒரு நாள் தன் கணவர் விஞ்ஞான சஞ்சிகை ஒன்றை கொழும்பில் இருந்து வெளியிட்டு வந்தார் என்றும், அந் நாளில் எல்லாம் உலக விடயங்கள் பற்றிக் கதைக்க எந் நாளும் தம் வீட்டில் அறிஞர் பெருமக்கள் கூடி இருப்பர் என்றும், அவ்வாறு ஆரம்பித்த சம்பாசனையில் உதித்து வெளியிட தொடங்கியது தான் அந்த விஞ்ஞான சஞ்சிகை என்றும்; அதன் கடசிப்பக்கத்தில் தன் கணவர் “ கண்டறியாத கதை” என்று ஒரு பக்க வடிவில் சிறிய விஞ்ஞான தொழில் நுட்பம் ஒன்று எவ்வாறு இயங்குகிறது என்று ( ஒரு ரோச் லட் எப்படி ஒளியை உமிழ்கிறது என்பது மாதிரி) எழுதி வந்தார் என்று குறிப்பிட்டார்.

“கண்டறியாத கதை” என்பது ஒரு அழகான சொற்பதமாக எனக்குத் தோன்றியது. ஈழத்துப் பேச்சு வழக்கில் இச் சொற்பதத்தை ஒரு அபிப்பிராயத்தை மறுத்துப் பேச பயன் படுத்துவார்கள்.’கண்டறியாத கதையெல்லே கதைக்கிறியள்’ என்று சொன்னால் ‘நீங்கள் சொல்வதில் ஒரு அர்த்தமும் இல்லை’ என்று அர்த்தமாகும்.

அதனை இலங்கையைச் சார்ந்த இஸ்லாமியத் தமிழர்கள் தம் பேச்சு வழக்கில் இன்னும் அழகாக ‘இத்துப் போன கதையில்லியா கதைக்கிறீங்க நீங்க’ என்று சொல்லுவார்கள். பிரயோசனமில்லாத கதை என்பது அதன் பொருளாகும்.

ஆனால் இங்கு அது அதன் நேரடி அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. அதாவது நாங்கள் அறிந்த அடுத்த சந்ததி அறியாத கதைகள் என்று வைத்துக் ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்ளலாம்.

புலம்பெயர்ந்த பிறகும் தொழில்நுட்பம் டிஜிட்டலுக்கு மாறிய பின்பும் பண்பாட்டில் நிகழ்ந்த மாற்றங்கள் ’உலகப்பண்பாடு’ ஒன்றை கட்டமைத்துக் கொண்டுள்ளன.

பல விடயங்கள் வழக்கொழிந்து போயுள்ளன. இங்கு பிறந்த பிள்ளைகளுக்கு அது பற்றிய எந்த தகவலும் வாழ்வியலும் தெரியாமலே இருக்கிறது. தெரியாமல் போய் விடக்கூடாது என்பது என் ஆவல்.அது அவர்களது பக்க வேர்.அதனால், இன்றய சந்ததிக்கு அதனை அறியப்படுத்துவதும் ஆவணப்படுத்துவதும் இரு பரம்பரையிலும் காலூன்றி இருக்கும் நமது கடமையாக இருக்கின்றன.

சில வருடங்களுக்கு முன்னர் ஒருவித உத்வேகத்தோடு அவற்றைப் பட்டியலிடவும் பகிர்ந்து கொள்ளவும் தொடங்கி பாதியில் அது நின்றுபோய் விட்டது.

இன்று ஏற்கனவே சேகரித்து வைத்த அதன் சில விடயங்களை படிப்படியாக வெளியிடலாம் என்று தோன்றியது.

அதன் முதல் பதிவே இந்தத் திருகணை.
..................................................

சட்டி, பானை, குடம் போன்ற வளைவான அடிப்புறங்களைக் கொண்ட பாத்திரங்கள் அசையாமல் இருக்கும் பொருட்டும் விழாதிருக்கும் பொருட்டும்  வட்ட வடிவில் திரணையாக அல்லது உருளையாக இணக்கப்பட்ட வடிவத்தை திருகணி என்பர்.

இதன் முக்கிய பயன் சூட்டினைப் பொறுத்தலும் பாத்திரத்தை விழாது தாங்குதலும் ஆகும்.

பாரமான பொருட்களைத் தலையில் சுமந்து செல்வோரும் இதனை ஒத்த பொருளொன்றை தலைக்கு வைத்து அதன் மேல் சுமையை வைத்து சுமந்து செல்வது வழக்கு. அதனைச் சும்மாடு என அழைப்பது இந்திய மரபு.ஆயினும் அது துணியை ஒத்த பொருளினால் மென்மையானதாக இணக்கப் பட்டிருக்கும்.

திருகணை அல்லது திருகணி என பேச்சு வழக்கில் வழங்கி வரும் இச் சொல் பொருளை அணைத்து ஆதரவு கொடுத்தவாறிருப்பதால்  திருகணை அல்லது திருகணி எனப் பெயர் பெற்றிருக்கலாம். அடிப்புறம் வளவாக இருக்கின்ற பாத்திரத்தை எவ்வாறு சரித்து வைத்தாலும் அது அப்பாத்திரத்தைத் தாங்கி விழாது வைத்திருக்கும் தன்மை அதன் சிறப்பம்சமாகும்.






குறிப்பாக 20ம் நூற்றாண்டின் கீழைத் தேய நாடுகளின் சமையல் அறைகளில் இத்தகைய திருகணிகள் அவர்களின் நாளாந்த சமையல் வேலைகளில் சூடான பாத்திரங்களை இறக்கி வைப்பதற்கும் உறியில் பானைகளை வைப்பதற்கும் தோதாகப் பயன் பட்டன. 

இந்து சமய மரபில் நேத்திக் கடன் கழிக்கும் பொருட்டு கற்பூரச் சட்டி தலையில் ஏந்தி வருவோர் தீச் சூட்டினைத் தாங்கும் பொருட்டும் சட்டி தலையில் விழாதிருக்கும் பொருட்டும் திருகணை வடிவிலான மென்மையான துணியினால் இணக்கப்பட்ட திருகணைகளை பாவித்தலை காணலாம். இப்போதும் கிராமப் புறங்களில் இவற்றின் பாவனை அளவில் சிறிதாகவேனும் இருந்தவாறே இருக்கின்றது.



இதன் பயன் பாட்டினை கலைவடிவத்துக்கும் எடுத்துச் சென்றது இந்திய அழகியல்.கரகாட்டம் என அழைக்கப்படும் இந்திய மரபு வழி ஆட்டமான கரகாட்ட கூத்து மரபில் சுமார் ஒன்றிலிருந்து 3,5,7,...என பானைகளை ஒரு திருகணையின் மேலே  கூத்தினை ஆடிய படியே ஒன்றொன்றாகப் பானைகளை எடுத்து ஒன்றின் மேல் ஒன்றாக அவற்றை அதன் சமநிலைகெடாத வண்ணம் தலைமேல் வைத்து ஆடும் கரகாட்டம் நவீன யுக இளைஞர் யுவதிகளாலும் வியந்து பார்க்கப்படுகிறது. திருகணையின் பயன்பாட்டை  கலை வடிவத்துக்குள் கொண்டு வந்ததில் இவ் ஆட்டம் இந்திய எளிய அழகியல் மரபில் ஓர் பண்பாட்டுப் புன்னகை!

கடந்த வருடம் சிட்னிமாநகரில் பரமற்ரா நகரில் இடம் பெற்ற பராமசாலா என்ற 3 நாட்கள் நடைபெற்ற தீபாவளிக் கொண்டாட்டத்தை இந்திய சுற்றுலாத் துறையும் அவுஸ்திரேலிய அரசாங்கமும் உள்ளூர் வரத்தக நிறுவனங்களோடு இணைந்து நடாத்தி இருந்தது. அதற்காக வரவளைக்கப்பட்ட கிராமிய அரங்கியல் ஆட்டக் கலைஞர்களில் கரகாட்டக் கலைஞர்களும் அடங்கி இருந்தனர். அங்கு போகக் கிடைத்த சந்தர்ப்பம் ஒன்றில் முதன் முதலாக எனக்கும் கரகாட்டம் பார்க்கக் கிட்டியது. 25.10.15 அன்று பார்க்கக் கிடைத்த போது எடுத்த படம் கீழே வருவது.


( தலைக்கும் பானக்கும் இடையில் திருகணி / திருகணை பாவிக்கப்படிருப்பதைக் காண்க)


திருகணைகள் அவ் அவ் இடங்களில் கிடைக்கும் மூலப் பொருட்களை வைத்து  ஆக்கப் படுகின்றது. இலங்கையின் வட பகுதி பனை மரத்துக்குப் பெயர் போன பிரதேசமாக விளங்கியதால் அங்கு திருகணைகள் பனைப் பொருட்களைக் கொண்டு ஆக்கப் பட்டன. அடவியன் என அழைக்கப்படும் பனை நாரினால் வட்டமாய் அவை இணக்கப்பட்டு பனை ஈர்க்கும் மேலும் கொஞ்ச அடவியனும் சேர்த்துச் பின்னிச் சுற்றி இறுகக் கட்டி அவை அவிழாத வண்ணமாக முடிச்சிட்டு பாவித்தார்கள். 

இவை சுமார் 50, 60 வருடங்களுக்கு முன்னர் குடிசைக் கைத்தொழிலாக மக்கள் தம் வீடுகளில் இவற்றைச் செய்து கிழைமைச் சந்தைகளிலும் கடைகளிலும்  விற்று வருமானத்தை பெற்று வந்தனர்.

இலங்கயின் தெற்கு கிழக்கு கரையோரங்களிலோ எனில் தென்னை மரங்கள் அதிகம் காணப்பட்டதால் மக்கள் தும்பினால் செய்து கயிறு திரித்து கயிறினால் அத் திரளையினை இறுகச் சுற்றிக் கட்டி அவற்றைத் தம் நாளாந்த பாவனைக்கு உபயோகித்து  வந்தார்கள்.

சமையல் அறையில் பயன்படுத்தப்படும் இத் திருகணை இந்தியப்பண்பாட்டில் வேறு பெயர் கொண்டு வழங்கப்படுவதும் குறிப்பிடத் தக்கது. இதனை quickiwiki.com கீழ்கண்டவாறு சொல்கிறது. அதனை அவர்கள் பரணை அல்லது பிரிமனை என அழைக்கிறார்கள்.

”பரணை அல்லது பிரிமணை என்பது பெரிய பாத்திரங்கள் நிலைகுலையாமலும், வைக்கப்படும் இடம் பாதிக்கப்படாமலும் இருக்கும் வண்ணம் அடியில் வைக்கப் பயன்படும். பொதுவாக வட்ட வடிவலான தாங்கி ஆகும். தமிழ்நாட்டில் இதைப் பொதுவாக வாழைநாரில் அல்லது மூங்கில் சீவலில் இருந்தும் செய்வார்கள்”. அவ்வாறு செய்யப்பட்ட திருகணை ஒன்றையும் அவர்கள் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். அந்தப்படம் நன்றியுடன் அவர்களிடமிருந்து இங்கும் பிரசுரமாகிறது.




களிமண்ணினால் செய்யப்பட்ட சட்டி பானைகளும் விறகு வைத்து தீமூட்டி சமையல் செய்யும் வழக்கமுமிருந்த  அக் காலங்களில் கிடைத்த இயற்கை மூலக் கூறுகளில் இருந்து செய்யப் பட்ட திருகணைகளும்  மக்கள் வாழ்வில் முக்கிய இடம் பெற்றிருந்தன. 

இன்றய உலகமயமாதல் தொழில் நுட்ப முன்னேற்றங்கள்  போன்ற மாற்றங்கள் சமையலறையிலும் தன் புரட்சியைக் கொண்டுவந்து சேர்த்த காரணத்தால் கரியை வெளித்தள்ளாத அடுப்புகளும் தட்டையான இலகுவான சூட்டை வெளிவிடாத பாத்திரங்களும் இன்ன பிற வசதிகளும் வந்து விட்ட காரணத்தால் குடிசைக் கைத்தொழிலாக முளைவிட்டிருந்த இத் திருகணிகளும் முறையான வரவேற்பின்மையால் மிக மந்த கதியிலேயே பாவனையில் இருக்கின்றன.

அந்த இடத்தை தற்போது சில்வர் தாங்கிகள், ரப்பர் விரிப்புகள், மூங்கிலால் மற்றும் ஈர்க்கிலால் செய்யப் பட்ட சிறு விரிப்புகள் என்பன பெற்றுக் கொண்டன. இவற்றின் இலகுப் பாவனை, நீண்ட உழைப்பு, மலிவான விலை, அழகு,வண்ணம், கவர்ச்சியான வடிவம், நாகரிகம்போன்ற காரணங்கள் மக்கள் இவற்றை நோக்கி ஈர்க்கப் பட பிரதான காரணியாக விளங்குகிறது.


படங்கள்: யசோதா: 30.10.2012

இடம்: இலங்கை மக்களின் நாளாந்த பாவனைப் பொருட்கள் விற்கும் கடை, 
Seven hills, N.S.W. 2146.

(தெரிந்தால் சொல்லுங்கள்: 
சில நாட்கள் நான் இங்கு வரவில்லை. இப்போது வந்து பார்த்தால் சுமார் 5 பேர் தம் விருப்பப் பக்கத்தில் இருந்து துண்டைக்காணோம் துணியைக் காணோம் என்று ஓடி விட்டார்கள். ஒண்ணுமே புரியல்ல உலகத்தில:)






Monday, December 14, 2015

உண்மையை எதிர் கொள்ளுதல்........



’உண்மையை எதிர் கொள்ளுதல்’

இப்படி ஒரு வாசகத்தை அதன் முழுமையான அர்த்தங்களுடன் எப்போதேனும் நாம் உள்வாங்கி இருக்கிறோமா என்று கேட்டால் பலருக்கும் - நான் உட்பட - பலவிதமான பதில்கள் அல்லது மழுப்பல்கள் இருக்கும்.

காரணம் உண்மை என்ற ஒன்று தரும் ஒரு விதமான கசப்பு அல்லது அது தரும் சுளீர் என்ற ஒரு கசையடி.

உண்மை எப்போதும் ஜீரணிக்க முடியாததாகவும்; பொய்கள் நாவுக்கு நல்ல இனியவையாகவும் இருப்பதால் பலருக்கும் உண்மையைப் பேச முடியாமல் இருக்கிறது. எதிர்கொள்ள இயலாமல் இருக்கிறது. பொய்களோடு நின்றுவிடப் பிடிக்கிறது. உண்மையை பேசுவோர் மீது ஆத்திரம் வருகிறது.

இது எல்லா வழிகளிலும் நம்மைப் பீடித்திருக்கிறது. ‘(புலம்பெயர் நாடுகளில்) தமிழ் மெல்ல இனி சாகும்’ என்று சொன்னால் நமக்கு கோபம் வருகிறது. மிகுந்த உணர்ச்சி வசப்பட்டு விடுகிறோம். எப்படி அது சாத்தியப்படும் என போர் கொடி தூக்கி பகீஸ்கரிப்புச் செய்து தனிப்பட ஒருவரைத் தாக்கி நம் ஆத்திரங்களுக்கு வடிகால் கண்டு கொள்ளுகிறோமே ஒழிய அதில் இருக்கும் சாத்திய அசாத்தியங்களை சீர்தூக்கிப் பார்க்கவோ அதிலிருக்கும் உண்மையை எடுத்துக் கொண்டு அதிலிருந்து ஆக்கபூர்வ வேலையை ஆரம்பிக்கவோ நாம் விரும்புவதுல்லை. தாயக பூமியில் இருந்து யாரேனும் வந்து ‘ஆஹா இங்குள்ல தமிழர் என்னமாய் வாழுகிறார்கள் இவர்களாலல்லவோ தமிழ் வாழ்கிறது “என்று சொன்னால் அடுத்த வருடம் அதே பேச்சாளர் இங்கு வருவது உறுதியாகி விடும். அதுவே அப் பேச்சாளருக்கும் புலம்பெயர் தமிழருக்கும் வேண்டி இருக்கும் பொய்யாக - இனிப்பான செய்தியாக இருக்கிறது.

உண்மையை சொன்னவர் எதிரியாகவும் ‘உறக்கத்துக்கு தாலாட்டுப் பாடுபவர்’  நல்லவராகவும் நமக்கு ஆகிப் போய் விடுகிறார்.

அண்மையில் இரண்டு மூன்று உண்மைகளை எதிர்கொள்ள நேர்ந்தது.

இரண்டும் இளவயது இறப்புகள்.

ஒன்று வேலைத் தலத்தில்.
இன்னொன்று சமூகத்தில்.

ஒருத்தி 4 இளம்பிள்ளைகளுக்குத் தாயான 37 வயது வெளிநாட்டுக் காறி.
இன்னொரு பெண் 34 வயது திருமணமான தமிழ் பெண்.

புன்னகையோடும் நேர்மறைச் சிந்தனைகளோடும் பிரமாண்டமான நம்பிக்கைகளோடும் வாழ்க்கையை எதிர்கொண்ண்ட இவர்களை மரணம் அள்ளிக் கொண்டு போய் விட்டது.

இந்த உண்மை என்ன தான் நமக்கு சொல்ல வருகிறது?

அண்மையில் ‘படலையில்’ ஒரு வசனம் என்னைக் கவர்ந்தது. “காதல் வசப்பட்டவனுக்கு புத்தி சொல்லப் போகாதீர்கள். - அவன் முடிவினை எடுத்து விட்டுத் தான் உங்கள் கருத்தைக் கேட்கத் தயாராக இருப்பான்” எல்லோருக்கும் அப்பட்டமாகத் தெரிகிற உண்மை அந்த காதல் வசப்பட்ட மனிதனுக்கு மட்டும் தெரியாமல் போய் விடும். அல்லது தெரிய விருப்பம் இல்லாமல் போய் விடும். அப்படிப்பட்ட இடங்களிலும் பொய் ரொம்ப அழகாகிப் போய் விடும். உண்மையைச் சொல்லப் பிரியப்படுவதில்லை யாரும்.அது அவரது உரிமை என்றொரு பட்டாடைக்குள் உண்மை ஒழிந்து கொள்ளுகிறது.

உண்மைக்கும் விதிக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதோ?

இப்போது எனக்கு இந்த உண்மையை ஜீரணித்துக் கொள்ள கஸ்டமாக இருக்கிறது.

உண்மையை எதிர் கொள்ளும் வீரியம் வாய்க்க நாம் என்ன செய்ய வேண்டும் என்று முடிந்தவர்கள் சொன்னால்.......

எதிர் கொள்ள கஸ்ரப்பட நேராதில்லையா......

Friday, November 20, 2015

பதியச் சொல்லி வந்தது......

8 boys were standing on a track for racing.

Ready !

Steady !

Bang !

With sound of Pistol all boys started running.

Hardly had they covered 10 to 15 steps,
1 boy slipped & fell.

He started crying due to pain.

When other 7 Boys heard him, all of them STOPPED running..

STOOD for a while,

turned BACK & RAN
towards him.

All the 7 Boys LIFTED the Boy,
pacified him,
joined hands together,
walked together &
reached WINNING Post.

Officials were shocked.

Many Eyes were
filled with tears.

It happened at Pune.

Race was conducted by
National Institute of
Mental Health...

All participants were
Mentally RETARDED.

What did they teach ?
Teamwork,
Humanity,
Sportsman spirit,
Love,
Care,
&
Equality..

We Surely can NEVER Do this,

because...

We have Brains....
We have Ego...
We have Attitude

தந்தவர்: நன்றி - பரா.சுந்தா



இதனை வாசித்த போது ஒரு கறுப்பு வெள்ளை வீடியோவாக பார்த்த ஒலிம்பிக் ஓட்டப் பந்தயம் நினைவுக்கு வந்தது. எப்போது நடந்தது எங்கு நடந்தது என்பது பற்றி அதிகம் நினைவில் இல்லை. ஆனால் அந்த சம்பவம் மட்டும் நினைவில் பசுமரத்தாணி போல பதிந்திருக்கிறது.  (அலைவரிசை 9 தொலைக்காட்சியில் நிகழ்ந்த 20/20 யாக இருக்கலாம்)

மரதன் ஓட்டப் போட்டி. ஆபிரிக்க இளைஞன் ஒருவன் முதலாவதாக ஓடிக்கொண்டிருக்கிறான். சற்று இடைவெளி விட்டு இரண்டாவதாக இன்னொரு வெள்ளை இன வீரன் ஓடிக்கொண்டிருக்கிறான். முடிவை நெருங்கும் களைத்துப் போனதொரு தருணம்.

இரண்டாவதாக ஓடிக்கொண்டிருந்த வீரன் கால் தடக்கி விழுந்து போனான். ஏது காரணமோ சற்றே திரும்பிப் பார்த்த முதலாவதாக ஓடிக்கொண்டிருந்த வீரன் சற்றும் தாமதிக்க வில்லை. திரும்பி ஓடி வந்து விழுந்த இளைஞனை தூக்கி நிறுத்தி விட்டு மீண்டும் முன்னோக்கி ஓட ஆரம்பித்தான்.உலகமே பார்த்து நிற்க அவனே முதலாவதாகவும் வந்தான்.

போட்டி விதி முறைகளின் படி வீரன் பின் புறமாக ஓட முடியாது. அதனால் அந்த ஆபிரிக்க வீரனால் முதலாவதாக வந்த போதும் தங்கப் பதக்கத்தைப் பெற முடியவில்லை. ஆனால் அவன் மனித மனங்களில் பெரு வீரனாய்.....


Thursday, November 12, 2015

அவள் சொன்ன நன்றி.....



இரண்டு வாரத்துக்கு முன்னாலான ஒரு வேலை நாள்.

ஞாயிற்றுக் கிழமை காலை.

நம் மத்திய தபாலகம் அமைந்திருக்கும் முன்புறக் கூடல்.

வழக்கமாய் இங்கு செல்லப்பிராணிகளாய் நாம் வளர்க்கும் பிராணிகளை (நாய், பூனை.. இன்ன பிற...) தெருவோரங்களில் விட்டேந்தியாக திரிவதைக் காண முடியாது. அப்படி ஏதேனும் அபூர்வமாகத் அவ்வப்போது தென்பட்டுக் கொண்டிருந்தால் பாத சாரிகளோ அன்றேல் வாகனதாரிகளோ அதனை பிடித்து அவர்களுக்கான பராமரிப்பு காப்பகங்களில் கொண்டு சென்று கொடுத்து விடுவார்கள்.

ஆனால் வழக்கத்துக்கு மாறாக ஒரு நடுத்தரவயது மதிக்கத் தக்க கறுப்பும் வெள்ளையும் நிறம் கொண்ட அகன்ற பச்சைக் கண்களைக் கொண்ட ஒரு பூனை அண்மைக்காலமாக என் வேலைத்தலத்தில் நிற்கிறது.  அது வாலை ஒடுக்கி உட்கார்ந்திருப்பதிலும்; படுத்திருப்பதிலும் ஒரு வித ஒழுக்கம் தெரியும். ’மேட்டுக்குடி பூனை போலும்’ என எனக்குள் எண்ணிக் கொள்வேன். சத்தம் போடுவதில்லை. யாரையும் தொந்தரவு பண்ணுவதில்லை. எப்போதும் தென்படுவதும் இல்லை. அதனால் யாருடயதோ வளர்ப்புப் பூனையோ என ஒரு சந்தேகம் எனக்கு அதனைக் காணும் போது எழும். ஏனென்றால் அவள் அத்தனை சுத்தம். கறுப்பும் வெள்ளையுமான அவளில் உடல் அத்தனை துல்லியமாய் தெரியும். வழக்கமாக வாசலில் இருக்கும் முன்புறக் கூடலில் போடப்பட்டிருக்கிற மர இருக்கைகளுக்கு அருகில் அவ்வப்போது தென்படும்.

அநேகமாக ஒரு குறிப்பிட்ட  தூரத்தில் வாலை ஒடுக்கி தன் காலோரம் வைத்துக்கொண்டு உட்கார்ந்த படிக்கு வேலைக்கு போவோரையும் வருவோரையும் பார்த்துக் கொண்டிருப்பாள்.

இது சிலவேளை கைவிடப்பட்ட பூனையாக இருக்குமோ என்றொரு சந்தேகமும் என் மனமூலையில் இருப்பதால் அதனைக்கண்டால் என்னிடம் இருக்கும் உணவில் அதுக்குக் கொஞ்சம் கொடுப்பேன். அது சிட்னிப் பூனை. ஸ்பைஸ் அதுக்கு ஒத்துக் கொள்ளாதோ என்னவோ.... என்னையும் பார்த்து சாப்பாட்டையும் முகர்ந்து பார்த்து விட்டு நான் மறையும் வரை அந்த இடத்திலேயே நிற்கும். சாப்பிடாது. நானும் சப்பிடுதா சாப்பிடுதா என திரும்பித்திரும்பிப் பார்த்துக் கொண்டு போய் விடுவேன். என்றாலும் சாப்பாட்டைப் போட்டு விட்டுப் போவதை நிறுத்துவதில்லை. அவள் சாப்பிடுவதில்லை என்றொரு ஐயம் எனக்கு இருந்தாலும் போட்டு விட்டுப் போவதற்குக் காரணம் ஒன்றும் கிடைக்காவிட்டால் அவளுக்கு சாப்பிட ஏதேனும் வேண்டும் என்ற ஒரு காரணம் தான். (தண்ணி குடிக்க என்ன செய்வாள் என்பது எனக்கு இப்போதும் இந்ருந்து கொண்டிருக்கும் சந்தேகம்)

சுமார் 3 மாத காலமாய் நான் அவளைக் காணவில்லை. அவ்வப்போது அந்த இடத்தைக் கடக்கும் போது அவள் என்ன ஆனாள் என்றொரு நினைவு எழுந்து மறையும். அவ்வளவு தான்.

அந்த ஞாயிற்றுக் கிழமை.

அந்தப் பென்னாம் பெரிய தபால் நிலையத்தின் மறுபக்க வாசல் வழியாக வேலைக்குப் போனேன்.

தற்செயலாய் அவளைக் கண்டேன்.

அசுத்தமாய் கண்சோர்ந்து தென்பட்டாள். வண்டி பெரியதாய் கீழ் புறமாக பருத்திருந்தது. புழுதி படிந்து காணப்பட்டாள். எப்போது எப்படி இந்தப் பக்கம் வந்து சேர்ந்தாள் என்று தெரியவில்லை. அந்தப் பென்னாம் பெரிய கட்டிடத்தில் இந்தப் பக்கம் வருவதற்கு வேறு பாதையும் பெரு நெடுஞ்சாலையும் தாண்டி ஆகவேண்டும். உள்பக்கமாய் அவள் வருவதற்கு எந்த வழியும் இல்லை. எல்லாரும் அடையாள அட்டைகளை வாசல் வழி காட்டி தானியங்கி கண்ணாடிக் கதவுகள் வழியாக உள்ளே வரவேண்டிய நிலையில் ஒரு ஈ, காக்காய் கூட உள்ளே அனுமதி இல்லை. 24 மணி நேர கமராக்கள் வேறு எப்போதும் இயங்கிக் கொண்டே இருக்கும் கடும் பாதுகாப்பு கண்காணிப்பு நிலைமையில் அவள் அந்தப்பக்கம் வந்திருந்தது எனக்கு மிகப் பெரிய ஆச்சரியம்.

ஒரு இனம்புரியா ஆறுதல் நிரம்பிய சந்தோஷமும் கூட. கூடவே இவள் எப்படி இப்படிச் சீர்குலைந்து போனாள் என்று ஒரு கவலையும்......

வழமை போல கொண்டு போன சாப்பாடில் கொஞ்சத்தை எடுத்து அவளுக்கும் எனக்கும் இடையில் வைத்து விட்டு அவள் வந்து சாப்பிடுவாளா எனக் காத்திருந்தேன்.

என்னைப் பார்த்துக் கொண்டிருந்த அவள் நேராக தன் சாப்பாட்டைக் கடந்து என்னிடம் வந்தாள். என் கால்களைச் சுற்றி வாலை நேரே உயரத் தூக்கியபடி; கால்களை உரஞ்சிய படி ஒரு சுற்றுச் சுற்றினாள். என் முகத்துக்கு நேரே வந்தபின் தன் தலையை நிமிர்த்தி வாஞ்சையோடு என்னை பார்த்தாள். அவள் முகத்தில் இருந்து முதுகோரமாகத் வால் வரை ஒரு வித மனநிறைவோடு தடவி விட்டேன்.

போய் சாப்பிடத் தொடங்கினாள்.

அது அவள் சொன்ன உன்னை அடையாளம் கண்டு கொண்டேன் என்பதும் உன்சாப்பாட்டுக்கு நன்றி என்பதாகவும் நான் மொழிபெயர்த்துக் கொண்டேன்.

கூடவே அன்பைப் பரிமாற மொழி தேவை இல்லை என்பதையும்.....

அடையாளம் கண்டு கொள்ளவும் தன் பாஷையில் நன்றி சொல்லவும் தெரிந்தவள். அழகிய நடுத்தர வயதைத் தாண்டிய அழகி அவள்.

இப்படிப்பட்ட ஒருத்தியை எப்படி தனியே வெளியே தள்ளி விட முடிந்தது ஒருவரால்.....?

எனக்கு விளங்கவில்லை. மனித குரூரங்கள்.....

அன்றய நாள் வேலை நேரம் முழுக்க அவளே என்னை ஆக்கிரமித்திருந்தாள்.

இந்த உலகத்தில் உள்ள சகல மதங்களையும் பண்பாடுகளையும் நம் வாழ்வில் இருந்து முற்றிலுமாக அகற்றி விட்டு உலகம் முழுதிலும் உள்ள குழந்தைகளின் 5 வயதில் இருந்து பள்ளிக் கூடங்களில் மனிதனாய் வாழ்தல் எப்படி என்று சமய பாட வேளைகளில் பாடம் சொல்லிக் கொடுத்தால் இந்த உலகம் எத்தனை ரம்யமாக இருக்கும்!



சாதி இருக்காது...
மதம் இருக்காது...
நிறபேதம் இருக்காது....
குரூரங்கள் இருக்காது.
.............................

அந்த இடம் முழுவதும் மனித நேயத்தால் பரஸ்பர அன்பால் ஒருவர் பால் ஒருவர் காட்டும் மதிப்பால் மரியாதையால் விளங்கிக் கொள்ளலால் இந்த உலகம் தெய்வீகம் உள்ளதாய் ஆகி விடாதா?......

ஓராபிரிக்க இளைஞனை இந்த எந்தத் தளையும் இல்லாத ஒரு மனிதனாய் கற்பனை பண்ணிப் பாருங்கள்....

அவனால் ஓரு அராபிய அழகியை சிநேகிக்க ஒரு தடையும் இருக்காது.

நம்மால் இயல்பாக அன்பு செலுத்துவது எத்தனை இயல்பாகி விடும்?

அது போல மிருகங்களை; பிராணிகளை; பறவைகளை; இயற்கையை ... எத்தனை நேசிப்போடு இவற்றை எம்மால் அணுகக் கூடியதாய் இருக்கும்?.....






முடிவுறாத முகாரி வெளியீட்டு விழா - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்


கடந்த 17 ம் திகதி (17.10.2015) சனிக்கிழமை செ.பாஸ்கரனின் “முடிவுறாத முகாரி” என்ற கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழாHomebush பாடசாலை மண்டபத்தில் நடை பெற்றது. இந்த விழாவிற்கு எமக்கெல்லாம் பழக்கப்பட்ட இளைஞன் கிருஷ்ணா சத்தியமூர்த்தி நிகழ்ச்சித் தொகுப்பாளராக வந்து வரவேற்றார். வழமையாக நிகழ்ச்சித் தொகுப்பாளராக வரும் கிருஷ்ணா அன்று தனது சித்தப்பா செ.பாஸ்கரனின் நூல் வெளியீட்டு விழாவிற்கு தொகுப்பாளராக கடமையாற்றினார்.

விஜயாள் விஜேய், அபிஷா பூபாலசிங்கம், மகிஷா பூபாலசிங்கம் ஆகிய மூன்று பெண் பிள்ளைகள் அழகாக தமிழ்மொழி வாழ்த்தும் அவுஸ்ரேலிய தேசிய கீதமும் இசைத்தார்கள்

திரு திருநந்தகுமார் தலைமையில் அரங்கம் ஆரம்பமானது மண்டபம் நிறைந்த கூட்டம். மேடைப் பேச்சாளரான திருநந்தகுமார் தனகிட்ட பணியை அழகாக திறமையாக கையாள்பவர். அன்றும் தனக்கும் திரு செ.பாஸ்கரனுக்கும் உள்ள உறவைக் கூறி பன்முகம் கொண்ட பாஸ்கரன் ஒரு கவிஞர் நாடக இயக்குனர் நடிகர் பத்திரிகையாளர் வானொலி தயாரிப்பாளர் அறிவிப்பாளர் என்று பாஸ்கரனைப் பற்றி கூறி விழாவை ஆரம்பித்தார்.
 அபிஷா பூபாலசிங்கம், மகிஷா பூபாலசிங்கம் விஜயாள் விஜேய்,
வாழ்த்துரை வழங்க வந்திருந்தவர் ஈழத்து பிரபல கவிஞரான அம்பி என அழை க்கப்படும் திரு அம்பிகைபாலன் அவர்கள். குரல் சற்று வெளிவர மறுத்தாலும் சக்கர நாற்காலியில் மிடுக்காக அமர்ந்திருந்தார் அம்பி அவர்கள். அவர் வழங்கிய ஆசிஉரையை கேட்டபோது பாஸ்கரனில் அவர் எவ்வளவு பாசமும் மதிப்பும் கொண்டுள்ளார் என அறியக்கூடியதாக இருந்தது.

ஆழியாள் என்ற பிரபலமான கவிஞர் மதுபாஷினி அவர்கள் கவிதை நூலினை அறிமுகம் செய்ய வந்திருந்தார். பெரிய கவிஞரான அவர் பிறிதொரு கவிஞரை எவ்வாறு நோக்குகிறார் என அவரது உரையைக் கேட்க ஆர்வமானேன். அவர் ஆழமாக அழகு சொற்களால் குறுக கருத்தைக் கூறும் கவிதை பற்றியும் பாஸ்கரனின் கவிதைகள் என்னென்ன சிறப்போடு அமைந்துள்ளது என்ற ஆழ்ந்த ஞானத்துடன் பல விடயங்களைக் கூறினார்.
திரு.கிருஷ்ணா சத்தியமூர்த்தி
ஆழியாளைப் பற்றி  திருநந்தகுமார் கூறும்போது ஆங்கில இலக்கியம் கற்றவர் பேசும்போது அவர்கள் பார்வை மற்றவரில் இருந்து தனிப்பட்டிருக்கும் எனவும் கூறினார்.


நூலை வெளியிட்டு வைக்க திருமதி மதுரா மகாதேவ் அவர்கள் வந்திருந்தார். இந்நூலை வெளியிட்டிருக்கும் தமிமுரசுஅவுஸ்ரேலியா வாராந்த பத்திரிகையின் ஆசிரியர்களில் ஒருவரான மதுரா மகாதேவ் முதல் பிரதியை வெளியிட்டு வைக்க அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் இயக்குனர்களில் ஒருவரான திரு ஈழலிங்கம் அவர்கள் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.
கவிஞர் ஆழியாள்
சிறப்புப் பிரதியை வழங்க இருவர் அழைக்கப்பட்டார்கள் ஒருவர் திரு மு.கோவிந்தராஜன் அவர்கள் இவரை பாஸ்கரன் தன் கூடப்பிறக்காத அண்ணன் நல்ல விமர்சகன் என்றுஅறிமுகப்படுத்தினார். பிரதியை அவர் பெற்றுக்கொண்ட போது அவர் கூறினார் பாஸ்கரனின் கவிதைகளை அப்பப்போ விமர்சித்து வந்த தன்னால் நட்பின் இறுக்கத்தால் இங்கு விமர்சகனாக முடியவில்லை என்றார். ஆனால் பாஸ்கரன் கவிதையில் தான் எதிர் பார்த்த மாதிரி யாரையும் ஓங்கி அறையவில்லை என குறைப்பட்டார். உதாரணத்திற்கு ஜெயகாந்தனையும் கவிஞர் ஆழியாளையும் குறிப்பிட்டார். 



பாஸ்கரன் ,கவிஞர் அம்பி, மதுரா 


அடுத்த சிறப்புப் பிரதியை பெற வந்தவர் திரு செ.சத்தியமூர்த்தி அவர்கள், இவரை பாஸ்கரன் தன் கூடப்பிறந்த அண்ணன் என்றுஅறிமுகப்படுத்தினார். தம்பியை தொட்டில் பிள்ளையாக பார்த்து இந்த வளர்ச்சியை பார்க்கின்றேன் என்று அவர் பேசும்போது உணர்ச்சி வசப்பட்டு விட்டார். இருந்தும் சுருக்கமாகவும் நகைச்சுவை ஆகவும் பேசி மகிழ்வித்தார்.

அடுத்து நயப்புரை அரங்கு என்று அறிவிக்கப்பட்டது இதில் வழமைக்கு மாறாக விமர்சனம் செய்யப்பட உள்ளது என்று குறிப்பிட்டார்கள். இப்படி ஒரு அரங்கு வேண்டுமா என்ன இது என்பது போல சபையோர் இருந்தனர். சமூகமளிக்க வந்தசிலர் அகல இலக்கிய ஆர்வலர்கள் இருந்தார்கள். தலைமை ஏற்று நடாத்தியவர் இலக்கியத்தில் துறை தேர்ந்த அறிஞர் திரு ம.தனபாலசிங்கம் அவர்கள். தனக்கே உரிய பாணியில் தொடக்கி பல வருடங்களுக்கு முன்பு செ.பாஸ்கரனின் வேண்டுகோளின் பேரில் கவிஞர் சு.வில்வரெத்தினத்தின் காற்று வழிக் கிராமம் என்ற கவிதை நூல் வெளியீட்டிற்கு தலைமை தாங்கினேன் இப்போது அவரின் வழி வந்தவரான பாஸ்கரனின் கவிதை நூல் விழாவிற்கு தலைமை தாங்குகிறேன் என்றார்.

திரு ஈழலிங்கம் 
நயப்புரை வழங்க முதலில் வந்தவர் பாமதி ஒரு கவிஞர், பெண்ணிலைவாதி என அறியப்பட்டவர். கவிதை என்ற கலையை பல ஆங்கில கவிஞர்களின் கவிதையுடன் ஒப்பு நோக்கி கவிதா உலகை வலம் வந்தார். என்போன்ற கவிதை உலகம் அறியாதவர்க்கு சில விடயங்களை எடுத்துக் கூறினார். நாம் அறியாத விடயத்தை பிறர் கூறக்கேட்டு அறிவது இலகுவான விடயம். அந்த வகையில் சில விசயங்களை அறிந்தேன். தமிழில் கவிதை புனைபவருக்கு ஆங்கில கவிதை பற்றிய அறிவு வேண்டியதே. ஆங்கில மொழி உலகை எமக்கு காட்ட உதவும் ஊடகம் அல்லவா

திருமதி மதுரா மகாதேவ் 
அடுத்து யசோ பத்மநாதன், பாஸ்கரன் இரு பெண்களின் தந்தை மனைவியும் ஒரு பெண் இந்த மூன்று பெண்களுடன் வாழும் கவிஞர் பெண்களை எவ்வாறு பார்க்கிறார் என அவரின் கவிதை தொகுதியில் இருந்து “நேற்று இன்று நாளை” என்ற ஒரு நீண்ட கவிதை தலை முறை தலை முறையாக பெண்ணுக்கு சமூகத்தால்  ஏற்படும் மாற்றத்தை விளக்கும் கவிதை. கவிதையை வாசிக்க தூண்டும் வகையில் நீண்ட கருத்தை கூறிச் சென்றார்.  


செ.பாஸ்கரன் , சாந்தி பாஸ்கரன்


அடுத்து வந்தவர் அரங்க கலைகள் சக இலக்கிய பவரின் தலைவர் நாடக நடிகர் நெறியாளர் திரு குணசிங்கம் இவர் ஒரு ஓவியர் என்றது அன்று பலருக்கு தெரியவந்தது. சில நூல்களுக்கு அட்டைப்படம் வரைத்திருக்கிறார். இவர் நயப்புரை கூறவந்த கவிதை “ எழுத்து “ . இந்தக் கவிதை பற்றி அறிமுகம் செய்த கவிஞர் ஆழியாளும் கவிஞர் பாமதியும் குறிப்பிட்ட படியால் தான் நூலின் உள்ளே போகாது வடிவமைப்பை பற்றி பேசுவதாக கூறி ஓவியம் பற்றி சிலகருத்தைக் கூறி, முடிவுறாத முகாரியில் முகாரி என்ற எழுத்துக்கள் ராகத்தைக் குறிப்பதால்Musical notes வடிவில் அமைந்ததால் பொளிப்பாக புரியும்படி இல்லை என கூறினார். அட்டைப்பட வர்ணத்தை அழகாக அருமையாக கையாண்டுள்ளார் ஓவியர். போரிலே சிந்திய ரத்தம் மேலே கரும் புகாரா அல்லது துப்பாக்கியுடன் புகை மண்டலத்தில் தோன்றும் Tank கா வென பார்க்க பார்க்க கற்பனையை தூண்டி பல கதை பேசும் அட்டைப்படம் “முடிவுறாத முகாரிக்கு” முற்று முழுதாக பொருந்துவதாக அமைந்துவிட்டது என்றார்.

செ.சத்தியமூர்த்தி , மு.கோவிந்தராஜன் ,செ.பாஸ்கரன்


செ.சத்தியமூர்த்தி 

அடுத்து வந்தவர் Dr.கலா ஜீவகுமார் பாஸ்கரனின் கவிதைகளை அப்பப்போ வாசித்தும் வானொலியில் கேட்டு ரசித்தும் பாஸ்கரனுக்கு தனது கருத்தை கூறி வருபவர். மேடையில் கருத்தை கூற தன்னை அழைத்ததும் தனக்கு வயிற்ரை கலக்கியது என்றவர் தனது கருத்தை மிக அழகாகவும் நயம்படவும் எடுத்துக் கூறினார். “மெல்லிழையாள் நினைவு பதிகிறது” என்ற கவிதையின் நயம் பற்றி பேசினார். வன்னி மண்ணையும் அதில் வாழ்ந்த காதல் ஜோடியையும் கண்முன்னால் நிறுத்தியிருக்கின்றார் கவிஞர். யதார்த்தமான மன உணர்வுகளை பதிந்தவர், அவர்களின் மனதில் உள்ள ஆசைகளையும் காதலையும் தியாகம் செய்து வாழவேண்டிய நிலை பற்றியும் பேசியிருக்கிறார் இது நாம் பார்த்த வாழ்க்கையை படம் பிடித்திருக்கிறது. அநேகமான கவிதைகள் காதலில் தொடங்கினாலும் மண்ணிலே முடிகின்றது. என்று ரசனையாக குறிப்பிட்டார்.
திரு திருநந்தகுமார் 

டுத்து ஊடகவியலாளரான கானா பிரபா வானொலியில் கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் நிகழ்ச்சியை நடாத்தி அனுபவப்பட்ட இளைஞன் இவர் தேர்ந்த சினிமா இசை ரசிகர் இளையராஜா இசைப்பிரியர் வானொலியில் இசை உலகு தொட்டு தொழில் நுட்பம் என பலதையும் கையாளும் திறமைசாலி இவர் “மனம் ஏங்குது” என்ற கவிதையை எடுத்து நயம் கூறும்போது அருமையான பாடல் இசையில் பாடுவதற்கு பொருந்தி வருகின்றது. இதில் பல கவிதைகள் இசை அமைத்து பாடக்கூடியவைகள் அவை இசை வடிவு பெறவேண்டும் என தனது கருத்தைக் மிக மிக சுருக்கமாக கூறி அமர்ந்து விட்டார். வேறுசிலர் அதிக நேரத்தை எடுத்து விட்டதால் தனது நேரத்தைக் குறைத்து நேரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை உணர்த்தினார். நன்றாக பேசிய பிரபா சிலநிமிடம் அதிகமாக பேசவில்லையே என்பது எனது குறை மட்டுமல்ல பலரின் விருப்பமும் அப்படியே இருந்தது.
மு.கோவிந்தராஜன் ,செ.பாஸ்கரன்

என் எண்ணத்திலே “முடிவுறாத முகாரி” கவிதைத் தொகுப்பில் பாஸ்கரனின் மென்மையான காதல் உணர்வுள்ள கவிதைகள் இன்பமான உணர்வுகளை இறுக அணைக்கும் மோகமூட்டும் கவிதைகள் பற்றி கானா பிரபா பேச நினைத்திருப்பார்  ஒரு சமயம் நேரம் பற்றாமையே காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் அன்று பேசியவர்களில் பெண்களே அதிகமானோர் அவ்வாறிருந்தும் காதல் கவிதை பற்றி பேசாததற்கு காரணம் என்னவோ ? நாணமா? அல்லது ஒரு பெண் ஆண் எழுதிய காதல் கவிதையை மேடையில் பேச மற்றவர் என்ன நினைப்பார்கள் என்ற அச்சமா?

அடுத்துப் பேசிய கொன்சிலா ஜெரோம் அழகாக பேசும் வல்லமை படைத்தவர் அவர் “நெருப்பின் கனல்” என்ற கவிதையை நயம்பட உரைத்தார். பெண்ணின் உள்ளக் குமுறலை ஒரு ஆண் கவிஞரால் இவ்வளவு உணர்வோடு படைக்க முடியுமென்றால் அது பாஸ்கரனாகத்தான் இருக்கும். பெண்களுக்கு சமூகத்தில் இழைக்கப்படும் அநீதிகள், அவர்களுக்கு ஏற்படும் வலிகள் அதிலும் துணை இல்லாத பெண்கள் என்றால் அவர்களுக்கு நடக்கும் துயரம் என்பதை எப்படி எப்படி எல்லாம் வடித்திருக்கிறார் இந்தக்கவிஞன் என்று பல உதாரணங்களோடு மிக அழகாக எடுத்துரைத்தார்.

திரு.ம.தனபாலசிங்கம் 
அவரை நிகழ்ச்சி முடிந்தபின் சந்தித்து பேசியபோது அழகாக பேசினீர்கள் என்றேன் அதற்கு அவர் தனது தந்தையார் கடற்கரையில் தன்னை நிறுத்தி கடல் அலைகளைப் பார்த்துக்கொண்டு பேசு என பயிற்சி அழளித்ததாக கூறினார். எப்பொழுது மேடை ஏறும் போதும் தனக்கு அந்த ஞாபகம் வரும் என்றார். தந்தையின் நம்பிக்கை வீண்போகவில்லை.

இறுதியாக பிரபல எழுத்தாளர் ரஞ்சகுமார் நீண்ட பெரிய விமர்சனத்தை வழங்கினார். இரண்டாவது வரியில் அமர்ந்திருந்த எனக்கு எதுவும் கேட்கவில்லை. இடையிடையே கேட்கும் பின் கேட்காது.  ஒலிபெருக்கியை குறை கூறுவதா அல்லது அதை சரியாக பாவிக்காத ரஞ்சகுமாரை குறை கூறுவதா. முன்னால் இருந்தவர்களும் மேடையில் இருந்தவர்களும் பின்பு கூறியது ஒரு ஆழமான விமர்சனத்தை ரஞ்சகுமார் முவைத்தார் என்று . சபைக்கு கேட்காமல் போனது கவலைக்குரியதே.
நயப்புரை அரங்கு 

கவிஞர் பாஸ்கரன் ஏற்புரை வழங்கும்போது எல்லோருக்கும் நன்றி கூறியதுடன் குறிப்பாக முன்னுரை தந்த ஈழத்துக் கவிஞர் மு.பொ அவர்களுக்கும் கவிஞர் அம்பி அவர்களுக்கும் மிகப்பெரிய நன்றி என்றார். ரஞ்சகுமார் குறிப்பிட்ட “ புத்தக வெளியீட்டின் போது ஒரு பெரிய சபையில் விமர்சனம் செய்வது பொருந்தாது” என்ற கருத்தில் தான் மாறுபட்ட கருத்தை கொண்டுள்ளதாகவும் நூல்கள் வெளியிடும் போது அங்கேயே விமர்சிக்கப்பட வேண்டும் அதுதான் இலக்கியம் சிறக்க சரியான வழி என்றும். எழுத்தாளன் தான் காண்கின்ற அநீதிகளை விருப்பு வெறுப்பின்றி சொல்லவேண்டும் என்றும் மற்றவர்களுக்கு தலை ஆட்டி எழுதுகின்ற எழுத்தில் உண்மை இருக்காது அது யாருக்கும் உதவாததாகத்தான் இருக்கும் என்றும் குறிப்பிட்டார். 
“தமிழ்முரசுஅவுஸ்ரேலியாவின்” முதல் வெளியீடு இது என்றும் இன்னும் பல வெளியீடுகள் இதன் மூலம் இடம்பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

கவிஞர் பாமதி 

அருமையான ஒரு நூல் வெளியீடு பல கவிதைகள் இளமை தொட்டு பாஸ்கரனின் வாழ்வு ஓட்டத்திலே எழுதப்பட்டவை. விடுதலையோடு இணைந்த செயற்பாடு அதனால் ஏற்பட்ட அனுபவம் அத்தனையும் கவிதையாக உருப்பெற்றுள்ளது. பல மறக்கமுடியாத வடுக்கள் கவிஞனைப் பாதித்துள்ளது. வரும்கால சந்ததிக்கு எமது நாட்டிலே எம்மவருக்கு நடந்த கொடுமைகளை ஆவணப் படுத்தும் நூலாகவும் “முடிவுறாத முகாரி”அமைந்துள்ளது.

இந்தக் கவிதைகள் நூலுருப்பெறவேண்டும் என உழைத்தவர் பாஸ்கரனின் மனைவி சாந்தி “There is always a women behind the man” என்பது வாழ்க்கையின் வெற்றிக்கு வாழ்க்கைத் துணையின் முக்கியத்துவத்தைக் காட்டுகின்றது. வாழ்க்கைத் துணையே தோழியாக ரசிகையாக கிடைக்கப்பெற்ற பாக்கியசாலி செ.பாஸ்கரன் மேலும் பலவற்றையும் சாதித்து வெற்றி நடை போடுவார் என எதிர் பார்க்கலாம்.

Dr.கலா ஜீவன் 
கவிஞர் சக்தி ( யசோ பத்மநாதன் )


திரு குணசிங்கம் 

திரு.கானா பிரபா 

திருமதி தர்மா சந்திரதாஸ் 

திருமதி கொன்சிலா ஜெரோம் 

எழுத்தாளர் ரஞ்சகுமார்

கவிஞர் செ.பாஸ்கரன்









நன்றி: தமிழ் முரசு அவுஸ்திரேலியா.

Monday, October 19, 2015

இது தாங்க நான் பேசினது....


         ”நேற்று; இன்று; நாளை” oz தமிழ் வரலாற்று ஆவணம்


ஒரு கவிதைக் குழந்தை இங்கு பிறந்திருக்கிறது. அதனைக் கொண்டாடும் முகமாக நாங்கள் எல்லோரும் இங்கு கூடி இருக்கிறோம். உங்கள் எல்லோருக்கும் என் அன்பார்ந்த பணிவான வணக்கம்.

இப்படி ஒரு இடத்தில் நிற்பதற்குப் பொதுவாக 2 ,3 தகுதிகள் வேண்டும். 1. தலைக்குள்ளே ஏதேனும் இருக்க வேண்டும். 2. எதைச் சொல்ல நினைக்கிறோமோ அதை சிறப்பாகச் சொல்லுகின்ற மேடை ஆளுமை இருக்க வேண்டும். 3. உங்கள் நிமிடத் துளிகளுக்கு பயனுள்ளதாக ஒரு நியாயத்தை செய்யவேண்டும். மூன்றும்  இல்லாத நான் உங்கள் 3 நிமிடங்களைத் திருடிக் கொள்ளப் போகிறேன். அதற்கு முதலிலே என்னையும் என் பொருட்டு பாஸ்கரனையும் மன்னித்துக் கொள்ளுங்கள்.

சரி விஷயத்துக்கு வாறன்.

பெண்ணைப்பற்றி அவர் எழுதிய கவிதை ஒன்றுபற்றி இன்று பேசலாம் என்று இருக்கிறேன்.

அதுக்கு முதல் தமிழ் நாட்டில பெண்ண எப்பிடிப் பாத்திருக்கினம் இலங்கையில பெண்ணை எப்பிடிப் பார்த்திருக்கினம் எண்டு பாக்கிறது பாஸ்கரன்ர கவிதையை விளங்கிக் கொள்ளுறதுக்கு கட்டாயம் தேவை எண்டு நினைக்கிறன்.

தமிழ் நாட்டில பெண்ண பார்த்த மாதிரி இலங்கையில பெண்ணை பாக்கயில்ல.
14ம் நூற்றாண்டளவில காளமேகப் புலவர் பாடின ஒரு பாட்டொண்டு பற்றிச் சொல்ல வேணும்.

“இந்திரையை மார்பில் வைத்தான்;ஈசன் உமையை இடத்து
அந்திபகல் அமைத்தான்; அம்புயத்தோன் – கந்தம் மிகு
வெந்தாமரை மயிலை வேண்டி வைத்தான் நாவில்; உலகு
உண்டு உமிழ்ந்த தாமரைக் கண்ணோன்”

என்னெண்டா, உலகத்தையே சாப்பிட்டுட்டு கக்கின தாமரைக் கண்ணன் திருமால் இருக்கிறார் எல்லோ? அவர் தன் மனைவி திருமகளை நெஞ்சில / இதயத்தில இருத்திட்டார். சிவபெருமான் தன்ர உடம்பில பாதியையே தன்ர பொம்பிளைக்குக் குடுத்திட்டார். பிரம்மன் என்னடா எண்டா வெண்தாமரைக்கு மேல மயிலப்போல இருக்கிற கலைமகளுக்குத் தன்ர நாக்கில இடம் குடுத்திட்டாராம். அது தான் பாட்டின்ர பொருள்.

அவர் சொல்லாத ஒரு விஷயமும் இருக்கு. அது அடுத்த ஜெனரேசனை பற்றினது. மேல சொன்ன ஆக்கள் பெரிய ஆக்கள். படைத்தல் காத்தல் அழித்தல் வேலையைச் செய்யிறவை. அவை என்னெண்டா தங்கட உடம்பிலயே இடம் குடுத்திட்டினம். ஆனா பிறகு வந்த அவையின்ர அடுத்த சந்ததி; முருகன், பிள்ளையார், கண்ணன் இருக்கினமெல்லோ அவை அப்பிடி எல்லாம் குடுக்க ஏலாது எண்டுட்டினம். முருகன்  எனக்கு வலது பக்கம் ஒண்டு இடது பக்கம் ஒண்டு வேணும் எண்டிட்டார். கிருஷ்னர் நப்பின்னை, ராதை எல்லாம் ஸ்பெஷலா இருந்தாலும் நான் கூத்தடிக்க எனக்கு கன பேர் வேணும் எண்டிட்டார். பாவம் பிள்லையார் ஓடி ஆடித் திரிய முடியேல்ல. அவர் ஆத்தங்கரை ஓரமா இருந்து கொண்டு ஆஅராவது அம்மா மாதிரி (பார்வதி) ஒரு பொம்பிளயக் கொண்டு வாங்கோ நான் இப்பிடி ஒரு கதையா இருக்கிறன் எண்டிட்டார்.

இத நாங்கள் எங்கட அன்றாட வாழ்க்கையிலயும் பொருத்திப் பாக்கலாம்.

தமிழகத்தில அதுக்குப் பிறகு பாரதி வந்தார் பெரியார் வந்தார். இப்ப அண்மையில ஆனந்த விகடனில கூட நல்ல ஒரு கவிதை பெண்ணைப்பற்றி வந்திருந்தது.

இப்ப இணைய வெளியள்ளில பெண்விடுதலையைபற்றி நல்ல சூடான வாதப் பிரதி வாதங்கள் நடந்துகொண்டிருக்கு. நான் அங்கை எல்லாம் போகையில்ல. சரி பிழை எல்லாம் அவரவர் நியாயங்களுக்கு உட்பட்ட்து தானே!
......

இப்பிடி ஒரு வரலாறு பெண்சார்ந்து இலங்கை வரலாற்றில இருக்கா எண்டு தேடிப் பாத்தன். உண்மையில அப்பிடி எங்களிட்ட கனக்க இல்லை. அல்லாட்டிக்கு எனக்கு தெரியேல்ல.

இந்த போஸ்ட்காட் எண்டு ஒரு காட் முந்தி ஒருகாலத்தில இருந்தது உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். ( தந்தி மாதிரி அது ஒரு விஷேஷமான சாமான். இது 2ஐயும் பற்றியே கனக்க கதைக்கலாம். அது எங்கட வாழ்க்கையோட எப்பிடி இணைஞ்சிருந்தது, தபால்காரர் எப்பிடி குடும்ப அங்கத்தவரா இருந்தார்.. ஈபிடி எல்லாம்) அப்படிப் போஸ்ட்காட்டுகளில கவிஞர்மார் கவிதைகளால கடிதம் எழுதி அனுப்பி இருக்கினம். கொழும்பில மகாகவி இருந்தார். மட்டக்களப்பில நீலாவாணன் இருந்தார். யாழ்ப்பாணத்தில முருகையன் இருந்தார். இவைக்குள்ள நல்ல நட்பிருந்தது. இவை கதைக்கிறது கவிதைகளாலயும் போஸ்ட்காட்டாலயும் தான்.

அப்பிடி 1958ம் ஆண்டு நீலாவாணனுக்கு மகாகவி ஒரு போஸ்ட்காட் அனுப்பி இருக்கிறார்.

“காடும் நகரும் கடந்து கடுகதியில் ஓடுவதும்;
பொங்கும் உவகையிலே பாடுவதும் - எல்லாம் இனிதே!
எனினும் அருகொருத்தி இல்லாக் குறையொன்றெமக்கு”

எண்டு யாழ்ப்பாணத்தில மனைவியை விட்டிட்டு கொழும்பில இருந்து எழுதின துண்டொண்டு கிட்டடியில கிடைச்சுது. இத விட அம்மாமாரைப் பற்றி; அவையின்ர சமையலப் பற்றி பாடி இருக்கினம் கனக்க.

‘தட்டைக் கரண்டி பிடிக்கிறாள்
சரியாய் பெரிய நிலவப் போல
வட்ட்த் தோசை சுடுகிறாள்
வடிவாய் தின்பீர் என்கிறாள்” எண்டும்

”அன்னை பழஞ்சோற்றுண்டி
கிழங்கொடு பிசைந்து
வழங்கலை நினைத்தால்
வாயூறாதோ? எண்டும் பாடி இருக்கினம் கனக்க.

“சொந்தத்தில கார், கொழும்பிற் காணி
சோக்கான வீடு,வயல்,கேணி
இவ்வளவும் கொண்டு வரின்
இக்கணமே வாணியின் பாற்
சிந்தை இழப்பான் தண்டபாணி” எண்டு ஒரு குறும்பா கூட வந்திருக்கு.

ஆனால் ஒரு பெண்ணை தனக்கு சமனா மதிச்சு அவளின்ர உணர்வுகளை; நியாய அநியாயங்கள; சரி பிழையள; நன்மை தீமையல; ஒரு நியாயமான வழிகாட்டல தந்த மாதிரி குறிப்பிடத் தக்க பாட்டுகள் எதுவும் வந்த்தா எனக்கு நினைவில்லை.

அல்லது எனக்குத் தெரியேல்ல.

ஆனால்,ஈழத்துப்பொப்பிளயள் எழுதி இருக்கினம்.போர்க் காலத்தில ஒரு வாழ்க்கை முறையை வாழ்ந்து காட்டிச்சினம் அது வேற.

போர் காலத்தைக் கடந்து வெளியில வந்தா அதாவது வெளிநாடெண்டு வந்தா ”குடும்ப வாழ்க்கைக்குள் ஒரு பெண்ணுக்கான சுதந்திரம்” நாங்கள் நாங்களே எங்களைச் சுய விமர்சனம் செய்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம்.

விதை மாதிரி ஒரு நடந்த சம்பவம் ஒன்றை மட்டும் சொல்லுறன்.கல்லூரிக்கு போற மாணவி. தான் தமிழ் பையன கல்யானம் கட்டமாட்டன் எண்டு சொல்லிப் போட்டா. ஏனெண்டு கேட்டா  பிள்ல சொல்லுது,’ இஞ்ச இருக்கிற ஒரு டெசபிளிட்டி ஆளே தனக்கான எல்லா வேலையையும் தானே செய்யிறார். ஏன் ஒரு தமிழ் பையனால தனக்கான ஒரு நேரத் தேத்தண்னியக் கூட போடத் தெரியுதில்ல?

நியாயமான கேள்வி தானே? அதோட,புலம்பெயர்ந்த நாட்டில தமிழ் பெண்கள் கொஞ்சம் எழுதி இருக்கினம். ஆழியாழ் இங்கு இருக்கிறா.’ வட்ட வீடொண்று வேண்டும்; வானத்து வளைவுடன் “எண்டு சொன்ன கவிதைக்குச் சொந்தக் காரி. பாமதி இருக்கிறா.”விழுந்து கிடந்தது காணும் எழும்பு” எண்டு பெண்ணை எழுப்பி விடுற கவிதையள் அவவின்ர.

இந்த ஒரு பின்னணியில தான் நான் பாஸ்கரன்ர கவிதையளப் பார்க்க விரும்பிறன்.

2டே பிள்ளைகள். இரண்டும் பெண்பிள்ளைகள். காதலித்து மணமுடித்த மனைவி. இந்தக் கவிதைக் குழந்தைக்கும் அவர் மனைவியே காரணதாரி என்று அவரது முகவுரை சொல்கிறது. எனவே பெண்களால் சூழப்பட்டவர் மாத்திரமில்லை; பெண்களால் அவர் திறமைகள் இன்று எங்கள் முன் நிறுத்தப்பட்டிருக்கிறது  என்றும் சொல்ல்லாம்.

அதனால் அவர் பெண்ணைப்பற்றி என்ன நினைக்கிறார்; எப்படி அவர்களை அவர் பார்க்கிறார் என்ற பார்வை எனக்கு முக்கியமாகப் பட்டது.


சற்றே பெரிய கவிதை. 3 பரம்பரை சார்ந்த்து. இதனுடய கருப்பொருள் ஒரு பெரிய விஷயம். புலம்பெயர்ந்த நாட்டில் பெண்சார்பாக குடும்பங்களுக்குள் நிகழும் மாற்றங்களை சிந்தனைப்புரட்சியை சமூக பார்வைகளைச் சொல்லுகிற விதத்தில்; அதனோடு கவிஞன் தோழமையோடும் ஆதரவோடும்  பயணிக்கும் வகையில்  இந்தக் கவிதையை ஒரு ‘ஒஸ் ரமிழ் வரலாற்று ஆவணம்” என்று சொல்வேன்.

( இது தான் கவிதை!

 இந்த அழகுக் கவிதைக்கு நான் பொருள் விரித்து எந்த ஒரு விளக்கமும் நயமும் சொல்லத் தேவையே இல்லை.எளிய சொல்லும் சந்தமும் கருத்தும் காதினையும் கருத்தினையும் காந்தம் போல கவர்ந்திடவல்லவை.

இந்தத் தொகுதியின் ஒரு துளி தான் நான் உங்களோடு பகிர்ந்து கொண்டது.. இப்புத்தகத்தின் முழுக் கவிதைகளையும் படித்து முடித்தபின் ‘இவரொரு மனிதாபிமானமுள்ள நல்ல மனிதன்” என்றொரு படிமம் உங்களுக்குள் அடையாளம் பெறும்.அது தான் இந்தப் புத்தகத்தின் வெற்றியும் கூட.

கவிதைப்பிரியன், தமிழ்முரசு அவுஸ்திரேலியா என்ற வலைத்தளத்துக்குச் சொந்தக்காரன், வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளன், தேர்ந்த நாடகக் கலைஞன், எல்லாவற்றுக்கும் மேலாக மனிதாபிமானம் உள்ள மனிதன்.

விழா நாயகனுக்கும் அவர் தன் குடும்பத்தாருக்கும் என் அன்பினையும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறி, என்னையும் ஒரு பொருட்டாக மதித்து அழைத்தமைக்கு நன்றியையும் கூறி அத்துடன் உங்கள் பெறுமதி மிக்க 3 நிமிட்த் துளிகளைத் தந்து என்னைத் தாங்கிக் கொண்டமைக்கு உங்களுக்கும் நன்றியைக் கூறி விடைபெறுகின்றேன். - இது நான் சொல்லாது விட்ட பகுதி )

இதுக்கே 3 நிமிஷத்துக்கு மேல போயிட்டுது. பிறகு கவிதைய வாசிக்க வெளிக்கிட்டு.... அது ஏற்கனவே ஒரு பட்டிமன்றக் கவிதை. அதுக்கே 3 நிமிஷத்துக்கு மேல வேணும்....

இந்தக் களபரத்துக்குள்ள இந்தக் கவிதை ஏன் முக்கியம் பெறுகிறது என்ற முக்கியமான பகுதியையும் தவற விட்டு.....( ஒரு ஆணின் பார்வையில்; புலம்பெயர் நாட்டில் 3 பரம்பரைகளுக்குள் ஏற்பட்ட பெண் சம்பந்தப்பட்டு; ஏற்பட்ட மாற்றங்கள எளிமையான தமிழில் சொல்லிய திறத்திலும் அதன் வரலாற்றுப் பெறுமதியிலும் இக்கவிதையைத் தாண்டி எவரும் போக முடியாது. ஒஸ்தமிழ் அவுஸ்திரேலியாவில் தமிழர்களுக்கிடையே பண்பாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள பற்றி அறிய வேணும் எண்டால் இக் கவிதைக்குள் பல முக்கியமான கருப்பொருள்கள் இருக்கின்றன )   வந்தமர்ந்தேன்.

கவிதையை தனியாய் அடுத்த பதிவில் போடுகிறேன்.

சட்டகத்துக்குள் நிற்காத சுயங்கள்!.................

கற்றுக் கொண்ட பாடங்கள்;

1. நேரத்தி்ற்குள் நிற்கவேண்டும். முடியவில்லை என்றால் மறுக்க வேண்டும். அது அந்த மனிதருக்கு நான் செய்யும் மிகப் பெரிய உபகாரமாக இருக்கும்.

2. விழாவின் நோக்கம் என்ன என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.

3. என்னால் பேப்பரைப் பார்க்காமல் சுயமாகப் பேச முடியும் என்ற நம்பிக்கையைத் தந்தது இந்த மேடை.

4. என்னை ரசிக்கவும் கேட்கவும் கிரகித்து சகித்துக் கொள்ளவும் ஆட்கள் இருந்தார்கள். (நெஞ்சை நிறத்த ஒரு விஷயம் இது.இதைப் பதியாமல் எல்லால் அகல இயலாது. கோவிந்தராஜன் என்ற ஐயா, இவரை அன்று தான் முதன் முதலில் கண்டேன். பஸ்கரனின் ஆத்மார்த்த மதிப்பிற்குரிய ஒருவர். முதல் பிரதி வாங்க அழைக்கப் பாட்டவர். பாஸ்கரனே அவரைப் பற்றி சிறப்பாக மேலையில் சிலாகித்து பெருமை கொண்டவர். நான் மேடையை விட்டு இரங்கிய கையோடு என்னை நெருங்கி, பெண்னைப் பற்றிய தன் அபிப்பிராயத்தை என்னோடு பகிர்ந்து கொண்டார். )

எப்படி ஒரு பெண் தன் கணவனால் பார்க்கப் படவேண்டும் என்பது பற்றியும் ஒரு ஆண் தன் குடும்பத் தலைவியால் எப்படிப்  பார்க்கப்பட வேண்டும் என்பது பற்றி சொன்னார்.”ஆண் தன் மகளை எப்படி நேசிக்கிறாரோ அது மாதிரி தன் மனைவியை நேசிக்க வேண்டும். பெண் எப்படி தன் மகனை நேசிக்கிறாரோ அது மாதிரி தன் கணவனை நேசிக்க வேண்டும்”

5.பிரபலமான ஒருவர். பெயர் சொல்ல விரும்பவில்லை. எனக்கு அவரை முன் பின் தெரியாது.தன்னை அறிமுகப்படுத்திய போது வியந்து போனேன். தன் அடையாள அட்டையையும் தந்து,  “இன்றய நிகழ்வில் உங்களுடய பேச்சுத் தான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது” என்றார். மிக இரக்கமுடயவராக இருந்திருக்க வேண்டும். அவர் சொன்னது  சரியோ பிழையோ நக்கலோ தெரியவில்லை. ஆனால் அந்த நேரம் எனக்கு அது ஆறுதலூட்டும் மருந்துச் சொல்லாக இருந்தது என்பதை கண்டிப்பாக நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

இது தாங்க நடந்தது.........

Saturday, October 17, 2015

நான் சொதப்பின கதை....



17.10.15 மாலை 5.00 மணிக்கு பாஸ்கரனின் கவிதை நூல் வெளியீட்டு விழா. கவிதைத் தொகுப்பின் பெயர் “முடிவுறாத முகாரி”

இப்போது ஒரு மணி நேரத்துக்கு முன்பாகத் தான் நிகழ்ச்சி முடிந்தது. வந்த கையோடு இங்கு உட்கார்ந்திருக்கிறேன்.

மனசுக்கு ஒரு விடிகால் வேண்டித்தான் இருக்கு! கொட்ட இது நல்ல தோதான இடம்! நன்றி மக்காள்!
......................

பாஸ்கரன்;

என் நல்ல நண்பன். நேர்மையான மனிதன். உண்மைக்கு எப்போதும் பக்கமாய் நிற்பவர். தனக்குச் சரியெனப்படுவதை துணிந்து சொல்ல தயங்காத உள்ளத்துக் காரன்.

‘தமிழ்முரசு அவுஸ்திரேலியா’ என்ற இணையத்தளத்தின் ஸ்தாபகன்; ஊடகவியலாளர்; நிகழ்ச்சித் தயாரிப்பாளர், நாடக நெறியாழ்கையிலும் நடிப்பிலும் நாடகப்பிரதி ஆக்கத்திலும் தன் திறமையின் பெரும்பங்கு நேரத்தை கொடுத்து ஒஸ்தமிழ் நாடகத்துறைக்கு ஆரம்பகாலத்தில் இருந்து தன் ஆழமான பங்களிப்பைப் பதித்திருப்பவர்.

எல்லாவற்றுக்கும் மேலாக நல்ல மனிதன். அன்பு, பண்பு, எளிமை, ஓர்மம் எல்லாம் கொண்டிருப்பவர்.

அவரது கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று.

இந்த மனிதன் தன் கவிதை ஒன்று பற்றி 3 நிமிடத் துளிகளுக்குள் நயப்புரை வழங்குமாறு கேட்டால் மறுக்க முடியுமா?

அங்கு தான் எனக்கு நாக்கில் சனி பகவான் குடியமர்ந்து விட்டார். அது தெரியாமல் ஓ.. அதுக்கென்ன, செய்கிறேனே என்று ஒரு மாதத்திற்கு முன்னரேயே சொல்லி விட்டேன்.

இன்று புரட்டாசிச் சனி கடசி நாள் என்றதையாவது யோசிச்சிருக்க வேணும் நான். ஆங்கிலேயரின் தின சோதிடக் குறிப்பில் இன்று புதிய கருமங்கள் ஆற்றுவதைத் தவிர்த்தல் நலம் என்ற கூற்றையாவது கொஞ்சம் கொன்சிடர் பண்ணி இருக்கலாம்.

நானும் புத்தகத்தை நன்றாகப் படித்து இந்தக் கவிதையை எடுக்கலாம் அந்தக்கவிதையை எடுக்கலாம் என்றெல்லாம் வலு சிரத்தையாகக் குறிப்பெடுத்துக் கொண்டு 2, 3, தரம் இது வேண்டாம் அது அது வேண்டாம் இது என்றெல்லாம் மாற்றி நேற்றைக்கு முதல் நாள் வேலையில் இருந்த மனிதருக்கு தொலைபேசியில் தொல்லை பண்ணி பெண் சம்பந்தப்பட்ட கவிதையை வேறு யாரும் நயப்புக்காக எடுத்திருக்கிறார்களா என்று கேட்டு இல்லை என்று உறுதிப்படுத்திக் கொண்ட பின் அந்தக் கவிதையைப் பற்றிய நயப்புரையைச் செய்வதாகத் தீர்மானித்துக் கொண்டேன்.

இப்போதே பாருங்களேன் சொல்ல வேண்டிய விஷயத்துக்கு வராமல் சுத்தி சுத்திக் கொண்டே நிற்கிறேனே!

இதைத் தான் அங்கேயும் செய்தேன்.தலைமை தாங்கியவர் 2 தரம் வந்து விஷயத்துக்கு வாங்கோ விஷயத்துக்கு வாங்கோ என்று 2 தரம் வந்து விட்டார் என்றால் பாருங்களேன்.

என்ன ஒரு வெக்கக் கேடு என்பதற்கும் அப்பால் அந்த நல்ல மனிதனின் நிகழ்ச்சியை இப்படி நாசம் பண்ணி இருக்கக் கூடாது என்ற சுய பச்சாதாபம் தான் என்னைக் குடைந்து கொண்டே இருக்கிறது.

வரும் போது குடும்பத்தார்  தந்த நேர்மையான விமர்சனம் ஒன்று.

எல்லோரும் மெளனமாக வந்தது தான். ’கொடுமையான மெளனம்’ என்பதன் பரிபூரண அர்த்தத்தை விளங்கிக் கொண்ட கணம் / தருணம் அது!

கொஞ்ச நேரத்தால அம்மா மட்டும் மெல்ல முணுமுணுத்தா. உனக்கு நேரம் வேணுமெண்டா முதலில கேட்டெல்லோ இருக்க வேணும்? கவிதையப் பற்றிக் கதைக்கச் சொன்னா கவிதையை பற்றி 3 நிமிசம் கதைக்கிறது தானே!

என்ன பண்ணுறது நம்மால முடியாமல் போச்சே!

என் இனிய தோழி கீதா சொல்லும் விமர்சனமும் இது தான்.
”ஒரு விஷயம் என்றால் ஒரு விஷயத்துக்குள் நிற்கமுடியாமல் நிற்கிறீர்கள்.”

நான் என்ன செய்யட்டும்?

சொரி பாஸ்கரன். I'm truly sorry!!


( பாருங்களேன் இந்த ஒரு விஷயத்தச் சொல்லுறதே ஒரு பதிவின்ர நீளம் வந்திட்டுது.  இனி நான் எங்க விஷயத்துக்குப் போறது? கதச்ச விஷயம் அடுத்த பதிவில தொடரும். கட்டாயம் எனக்கு உங்கட விமர்சனம் வேண்டும். இதுக்கில்ல; அதுக்கு. :)

நன்றி மக்காள். விடிய வேலை. வேலையால வந்து அதப்பற்றிச் சொல்லுறன்.